Advertisement

சுகம் – 13

இன்னுமே கூட சௌபர்ணிகாவிற்கு தான் கேட்டது எல்லாம் உண்மை தானா என்றே நம்ப முடியவில்லை.. நம்ப முடியவில்லை என்பதை விட இதையெல்லாம் சிறிதும் அவள் எதிர்ப்பார்க்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இமைகளை தட்டக்கூட மறந்து அமர்ந்திருந்தாள்..

‘என்ன சொல்றான் இவன்.. இவன் என்னை லவ் பண்ணானா ??” இந்த ஒற்றை கேள்வியே அவளை திக்குமுக்காட செய்தது…

“என்ன சௌ….பர்….ணி…..கா இப்படி என் முகத்தையே பார்த்துட்டு இருக்கலாம்னு ஆசையா..?? எனக்கு ஒண்ணுமில்லைம்மா, நானும் கூட விடிய விடிய இப்படி இருப்பேன்.. ஆனா பேச வேண்டியது நிறைய இருக்கே…” என்றபடி அவளருகில் வந்து அமர்ந்தவனை இன்னும் வியந்து தான் பார்த்தாள் சோபி..

“ஸ்ஸ்!! இப்படி பார்த்தா நான் என்ன செய்ய???” என்று இன்னமும் காதலாய் பார்த்தவனை, அவளால் நேருக்கு நேரு பார்க்க முடியவில்லை..

‘ஹய்யோ!! கடவுளே.. இவன் என்னென்னவோ சொல்றானே..’ என்று தலையை உலுக்கிக்கொண்டாள்..

என்னதான் தலையை உலுக்கிக்கொன்டாலும், இல்லை ஆடாது அசையாது அமர்ந்திருந்தாலும் அடுத்து ஏதாவது பேச வேண்டுமே. அவளுக்குமே உண்மை தெரியவேண்டுமே.. அதிலும் அவனுக்கு அனைத்துமே தெரியும் என்று தெரிந்த பிறகோ அவளுக்கு மேலும் ஒரு நடுக்கம் ஏற்பட்டது.

“நீங்க.. நீங்க என்ன சொல்றிங்க ??” என்றாள் அந்த நடுக்கத்தோடே..

“ப்பா பேசிட்டியா.. எங்க இன்னிக்கு முழுசும் மௌன விரதமோன்னு நினைச்சேன்.. ஓகே சொல்றேன் கேட்டுக்கோ ஆனா ஒரே ஒரு தரம் தான் சொல்வேன்.. நான் உன்னை லவ் பண்ணேன், பண்றேன், இனியும் பண்ணுவேன்.. என்ன புரியலையா.. வினைத்தொகை தெரியாதா???”

‘அடேய் இலக்கணம் நடுத்துற நேரமா???!!!‘ என்றெண்ணி முறைத்து பார்த்தாள்..

“சரி சரி கடுப்பேத்தல… உன்னை முதல்ல நான் சென்டர்ல தான் பாத்தேன்.. பார்த்ததுமே பிடிச்சதுன்னு எல்லாம் நான் பொய் சொல்ல மாட்டேன்.. பட் எதோ உன்னை கவனிக்க வச்சது.. இருந்தாலும் அது காதலா இல்லையான்னு எல்லாம் நான் யோசிக்கலை. அப்போ இருந்த நிலைமை அப்படி..” என்றவனின் குரல் சற்றே இறங்க,

அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியாது “ஓ !!!!” என்றுமட்டும் சொன்னாள்.

“ஆனா நான் நிச்சயமா உன்னை அன்னிக்கு ஷ்ரவன் கூட எதிர் பார்க்கலை. அன்னிக்கு அம்மா வேற எதோ சொல்லி என்னை டென்சன் பண்ணிட்டாங்களா அதான் அப்படி கத்திட்டேன்…” என்றவன், அவள் என்ன சொல்வாளோ என்று அவளைக் காண,

அவளோ ‘என்ன இது கதை கதையா சொல்றான்..’ என்பதுபோல் பார்த்துகொண்டு இருந்தாள்.. இன்னமும் அவளால் நம்பிடவே முடியவில்லை..

இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தவளின் கரங்களைப் பற்றியவன்  “நான் தான் சொல்லல.. பட் உனக்கும் தான் என்னை தெரியுமே அப்புறம் ஏன் எதுவும் சொல்லல???” என்று வினவ, அவனது தொடுகையில் உணர்வுக்கு வந்தவள், 

“ஏன் சொல்லணும்?” என்று இறுகிய குரலில் சொன்னவள்

“முதல் நாள் பார்த்ததுமே அப்படி பேசினவர்கிட்ட நான் ஏன் சொல்லணும்…” என்றாள்..

“இல்ல அது…” என்று அவன் சொல்லும்போதே, அவளுக்கு என்ன தோன்றியதோ  போதும் என்பதுபோல் கரங்களை உயர்த்தியவள்  “இவ்வளோ சொல்றீங்க.. ஏன் நீங்களும் தான் அப்போ எதுவும் காட்டிக்கல.” என்றாள்.

“சரி சரி.. கோவப்படாத..  என்ன அப்படி பார்க்கிற?? இதை நான் சொல்றேன்னா?? ஹா ஹா என்ன செய்ய..” என்று கொஞ்சம் இலகுவாய் சிரித்தவன்  

“என் வாழ்க்கை சூழ்நிலை என்னை ரொம்ப மாத்திடுச்சு.. அதுவும் இல்லாம உன் மனசு முன்ன இருந்த மாதிரியே தான் இருக்கான்னும் எனக்கு தெரியாது.. அதெல்லாம் விட நிச்சயம் உன்னைப் பார்த்ததும் எனக்கு ஷாக்தான்.. ஆனா எனக்கு சடன்னா எப்படி ரியாக்ட் பண்றதுன்னு தெரியாமதான் அப்படி ஹார்ஷா நடந்துக்கிட்டேன்…” என,

“ஒரு நிமிஷம்??? நீங்க பாட்டுக்கு நானும் அப்போ இருந்து லவ் பண்ணேன்னு சொல்லிட்டு இருக்கீங்க?? நான் உங்கட்ட அப்படி சொன்னேனா??” என்றாள் அவனையே முறைத்து..

ஏனோ சௌபர்ணிகாவிற்கு சர்வேஷ் பேச பேச கடுப்பாய் வந்தது…  அனைத்தையும் மனதிற்குள் வைத்தே அழுத்தமாய் இருந்திருக்கிறான் என்று. தான் எத்தனை அவஸ்தையில் இருந்தோம்.. ஆனால் இவனோ அனைத்தும் தெரிந்தே இத்தனை நாள் அமைதியாய் இருந்திருக்கிறான் எனவும் அவளுக்கு அப்படியொரு கோபம் வந்தது நிஜம்தான்.. ஆனாலும் முதல் நாளே எதையும் சொல்ல கூடாது என்று பொறுமையை இழுத்து பிடித்தாள்.

“இதென்ன கேள்வி?? பொண்ணுங்களுக்கு மட்டும் தான் எந்த பையன் நம்மல பார்க்கிறான்னு தெரியுமா?? பசங்களுக்கும் அதெல்லாம் தெரியும்மா.. நீ என்னை தான் பார்த்த.. என்னை மட்டும் தான் பார்த்த..” என்றான் மிகவும் கெத்தாய்..

ஹ்ம்ம் இவனை மட்டுமே பார்த்ததினால் எத்தனை வருடங்கள் தன் தூக்கத்தை தொலைத்தாள் சௌபர்ணிகா… எத்தனை நாட்கள் அழுதிருப்பாள், எத்தனை ஏக்கம்?? எத்தனை தேடல்?? இப்படியாக அவள் தனக்குள்ளே புதைத்து வைத்துள்ள உணர்வுகள் எல்லாம் இப்பொழுது கைத்தட்டி சிரிப்பது போல இருந்தது அவளுக்கு.. அவளையும் அறியாமல் சர்வேஷ் மீது கோவம் கூடி கொண்டே போனது..

சரி முன்பு தான் வெளியே காட்டாமல் இருந்தான், இத்தனை வருடங்கள் கழித்து நேரில் பார்க்கும்பொழுது கூடவா எதுவும் சொல்ல தோன்றவில்லை?? என்ன மனிதன் இவன்?? இவனை நினைத்து நான் எந்த நம்பிக்கையில் காத்திருந்தேன்?? எதை இவனிடம் எதிர்பார்த்திருந்தேன்?? என்று நினைக்க அவள் கண்ணீரில் கரைத்த இரவுகள் எல்லாம் அவளை கேலி செய்தது…

“என்ன சௌபர்ணிகா அமைதியா இருக்க??”

“ஹா!! எதுவும் இல்லை.. நீ.. நீங்க சொல்லுங்க”

“ஹ்ம்ம்!! அதான் அன்னிக்கு அங்க விசேச வீட்டுல நீ ஒரு நிமிஷம் என்னை பார்த்து கண் கலங்கி நின்ன.. அப்போதான் இன்னும் உன் மனசில நான் தான் இருக்கேன்னு புரிஞ்சுக்கிட்டேன். ஆனாலும் எனக்கு.. எனக்கு… வந்து உன்கிட்ட உடனே சொல்ல ஏதோ தயக்கமா இருந்தது..” என்று பார்த்தவனை,

“ஏன் ???நான் உங்கக்கிட்ட வேலை செய்றதுனாலயா?” என்று கேட்டவளின்  குரலில் தெரிந்த வித்தியசம் சர்வேஷ் மனதில் எட்டவில்லை..

“ச்சே ச்சே அப்படி எல்லாம் இல்லை.. இருந்தாலும் என்னவோ கொஞ்சம் தயக்கம். ஆனா எனக்கே ஆச்சர்யம் நம்ம ரெண்ட்பேர் குடும்பமும் சொந்தமானது.. சரியான நேரம் பார்த்து நானே ரெண்டு குடும்பத்துலயும் பேசலாம்னு இருந்தேன்,  ஆனா பாரு ஆண்டவன் அந்த வேலையை எனக்கு வைக்கலை.. எல்லாமே எவ்வளோ ஈஸியா முடிஞ்சதுல.??? இப்பவும் கூட என்னால நம்பவே முடியல நமக்கு கல்யாணம் ஆனதை…” என்று கூறியபடி ஹாயாக கட்டிலில் சாய்ந்து அமர்ந்தான்..

நிஜமாகவே அவனுக்கு நிம்மதியாய் இருந்தது மனதில்.. என்னவோ ஒன்று அவனைப் போட்டு இத்தனை நாள் படுத்திய ஒரு விஷயம் இன்று அதெல்லாம் இல்லை என்பது போல் நடந்தேற அவனுக்கு மிக மிக நிம்மதிதான்.. ஆனால் என்ன ஒவ்வொன்றையும் அவனே பேசி, செய்யவேண்டும் என்று காத்திருந்தான்

அதுமட்டும் முடியாமல் போனது, அதுவுமில்லாது திருமணம் பற்றி அவனுக்கு இருந்த எதிர்பார்ப்புகள் எல்லாம் இந்த இருபதே நாள் திருமணத்தில் அத்தனை பூர்த்தியாகவில்லை.. இதெல்லாம் அவனுக்கு மனதில் சின்ன சின்ன ஏமாற்றமே.. அதன்பொருட்டே அவனுக்கு அப்படியான கோபங்களும்..  

ஆனால் சௌபர்ணிகாவோ இத்தனை கேடும் பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாய் இருந்தாள்..

“என்ன சௌபர்ணிகா நான் இவ்வளோ சொல்லிட்டு இருக்கேன் நீ பதில் சொல்லாம அமைதியா இருந்தா என்ன அர்த்தம்??” அவளது கைகளை மீண்டும் இறுக பற்றியபடி வினவினான்..

முதல் முறையாய் அவளது கரங்களை பிடிக்கின்றான் அதுவும் கணவன் என்ற உரிமையோடு. வேறு ஒரு சூழ்நிலையாய் இருந்தால் சௌபர்ணிகாவின் கன்னங்களில் செம்மை படிந்திருக்கும். வெட்கம் முளைத்து அவளது தலையை தாழ வைத்திருக்கும்.. ஆனால் அவள் இப்பொழுது அமைதி அமைதி அமைதி மட்டுமே,…….

“சௌபர்ணிகா !!!!!”

“ம்ம்”

“நான்தான் சொல்றதை எல்லாம் சொல்லிட்டேன். இனிமே உன் டர்ன்.. நீ தான் சொல்லணும்..”

“என்ன சொல்ல ???”

“என்ன சொல்லவா?? எவ்வளோ இருக்கு சொல்ல.. சொல்லு நீ எப்போ இருந்து என்னை லவ் பண்ண?? அதெல்லாம் சொல்லு..” என்றான் ஒருவித பரபரப்பில்..

“ம்ம்.. அதுக்கு முன்ன நான் ஒரு கேள்வி கேட்கணும்….”

“இன்னுமா சரி கேளு… ”

“முன்னதான் என்னை விரும்புறதை யார்க்கிட்டவும் சொல்லல.. அன்னிக்கு கோவில்ல மாலை விழுந்த பிறகு கூட ஏன் சொல்லல.. சரி வீட்லதான் சொல்ல தயக்கம்.. அட்லீஸ்ட் என்கிட்டயாவது சொல்லி இருக்கலாமே… பாவம் அத்தை கடைசி நிமிஷம் வரைக்கும் எத்தனை டென்சனா இருந்தாங்க தெரியுமா???”

ஏனோ இதை கேட்கும் பொழுது அவள் மனது அத்தனை வலியை உணர்ந்தது.. மோகனாவுக்கு மட்டுமா டென்சன் இருந்தது இவளுக்கும் தானே.. தன் மனதில் இருப்பதை சொல்வதா வேண்டாமா.. சொன்னால் என்ன செய்வான் எதுவும் சொல்வானோ என்று எத்தனை போராட்டங்கள்.. அவள் முகமும் அதை அப்படியே பிரதிபலித்தது..

என் காதல் இவனுக்கு இத்தனை எளிதாய் போனதா?? எந்த ஒரு சூழலிலும் ஏன் இவனால் வெளிபடுத்த முடியவில்லை?? எது தடுத்தது? ஒரு வேலை தன்னை காதலிப்பதை இவன் தகுதி குறைவாய் நினைத்தானோ ???

இப்படி பல கேள்விகள் அவளை போட்டு பாடாய் படுத்தின. அவள் மனதில் இருப்பதை சொல்லாது அமைதியாய் இருந்ததற்குகூட சில காரணங்கள் இருந்தது ஆனால் இவன் சர்வேஷ் ஏன் அமைதியாய் இருந்தான்???

அவள் இப்படி ஒரு கேள்வி கேட்பாள் என்று சர்வேஷ் சற்றும் நினைக்கவில்லை.. தன் மனதில் இருப்பதை சொல்லவும் மகிழ்வாள் என்றே எதிர்பார்த்தான்..

தன் காதலும், திருமண வாழ்வும் எந்த ஒரு பிரச்சனையும், வில்லங்கமும் இல்லாமல் நிறைவேறியது என்றே அவன் இருமாந்திருந்தான். அப்படியே சௌபர்ணிகாவும் நினைப்பாள், இது அவளுக்கு எத்தனை மகிழ்வு தரும் விஷயமாய் இருக்கும் என்றே அவன் இன்று இந்த இரவில் அவளிடம் அனைத்தையும் சொல்லிடவேண்டும் என்று நினைத்திருக்க, அவளோ இப்படிக் கேட்கவும் அவனுக்கு என்னவோ போலானது..

“என்ன சௌபர்ணிகா இதென்ன பெரிய விஷயமா?? எல்லாமே தானா நடக்கும் போது நான் வேற இதெல்லாம் வீட்ல சொல்லி அவங்களை எதுவும் குழப்ப வேண்டாம்னு நினைச்சேன்..” என்றிட, 

“அப்போ என்ன லவ் பண்றதை வெளிய சொல்லக்கூட உங்களுக்கு பிடிக்கல அப்படிதான.. ஒருநாள், ஒருசமயம் ஒருதரம் என்கிட்ட கூட சொல்லனும்னு உங்களுக்கு தோணவேயில்லையா?? எத்தனை நாள் நீங்களும் நானும் தனியா இருந்திருப்போம்.. ஒரு தடவைக்கூட என்கிட்ட நீங்க மனசு விட்டு பேசணும்னு நினைக்கவேயில்லையா ??” என்று கேட்கையில் கண்ணீர வழிந்தது அவளது கண்களில்..

“ஹேய் சுபி…. என்ன இது…??? இப்போ ஏன் அழற???” என்றவன் வேகமாய் அவளருகே வர,  முதல் முறையாய் அவளை பெயர் சுருக்கி அழைத்திருக்கிறான்.. ஆனால் அதெல்லாம் கூட அவளுக்கு உரைக்கவில்லை…

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க??? அன்னிக்கு கூட சொன்னிங்களே கல்யாணத்தில் உனக்கு இஷ்டமில்லைன்னா நான் பேசி நிருத்திடுறேன்னு ஏன் அப்படி சொன்னீங்க?? எதை மனசுல வைச்சு அப்படி சொன்னீங்க??” என்று சட்டையை பிடித்து உலுக்காத குறையாய் அத்தனை அழுத்தம் திருத்தமாய் வந்தது அவள் குரல்..

“அது… அது… சுபி…”

“சொல்லுங்க…. ஏன் இவ்வளோ அழுத்தம்.. இவ்வளோ அமைதி?? அப்படி எது உங்களை தடுத்தது??? நான்… நான் இத்தனை வருசமா ஒருநாள் கூட நிம்மதியா தூங்கினது இல்லை தெரியுமா??? நீங்க ஃபாரின் போனது தெரியாம, இங்க ஊருக்கு வரும் போதெல்லாம் அங்க செனட்டர் பக்கம் எத்தன தடவை லூசு மாதிரி அலைஞ்சிருப்பேன் தெரியுமா?? உங்க சாயல்ல யாரை பாத்தாலும் அது நீங்களான்னு உத்து உத்து பார்த்து, என்னை கடந்து யாரு போனாலும் நீங்களா இருக்க கூடாதான்னு பார்த்து பார்த்து. பைக்ல என்னை யாராவது க்ராஸ் பண்ணா கூட அது நீங்களோன்னு திரும்பி திரும்பிப் பார்த்து… நான்.. நான்  எப்படி ஏங்கி போனேன் தெரியுமா ????” என்றவள் இத்தனை நாள் மனதில் அடக்கி வைத்ததெல்லாம் சேர்த்து வெளி வரவும் குலுங்கி அழ, 

“சுபி ப்ளீஸ் அழாத… இது.. இதெல்லாம் நான் எதிர்பார்கலை…” என்றான் அவளுக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியாமல்..

“எப்படி எதிர்பார்த்து இருப்பீங்க??? உங்களுக்கு உங்க வாழ்க்கை முக்கியம். அதுவும் நீங்க நினைச்ச மாதிரியே எல்லாம் நடக்கணும்.. உங்க இஷ்டத்துக்கு இருப்பீங்க, போவீங்க.. ஆனா நான் வீட்டில ஒவ்வொரு டைமும் கல்யாணம் வேணாம் வேணாம் சொல்லும் போது எல்லாம் எங்க வீட்டில கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாம எத்தனை நாள்… எத்தனை நாள் தவிச்சு போயிருக்கேன் தெரியுமா??

நீங்க இங்கதான் இருக்கீங்களா??? கல்யாணம் ஆச்சா இல்லையா… இது எதுவுமே தெரியாம பைத்தியம் மாதிரி அலைஞ்சேன். ஆனா நீங்க எல்லாத்தையும் மனசுக்குள்ளயே வச்சுக்கிட்டு எதையுமே வெளிக்காட்டாம இருந்திருக்கீங்க.. என்ன செஞ்சீங்க?? நீங்க உங்க காதலுக்காக என்ன செஞ்சீங்க?? எதுவுமே இல்லை. ஒரு இம்மியளவு கூட நீங்க மெனக்கெடல…” என்று பொரிந்து தள்ளிவிட்டாள்.

அவள் மனதில் இத்தனை நாள் இருந்த ஏக்கம், எதிர்பார்ப்பு எல்லாம் ஒன்று சேர்ந்து இப்பொழுது ஆங்காரம் ஆத்திரமாய் வெளிவந்தது..    அவனோ பதில் கூற முடியாமல் விக்கித்து போய் பார்த்திருந்தான்..

அவன் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று சுளுவாய் தள்ளிபோட்ட விசயங்கள் அனைத்தும் சௌபர்ணிகாவின் உணர்வுகளோடு கலந்தவை என்று அவனுக்கு புரியாமல் போனது விதி செய்த மாயமோ என்னவோ.. ஆனால் அவையனைத்தும் இன்று சர்வேஷின் தலையில் விடிந்தது..

“பதில் சொல்லுங்க… ஏன் அமைதியா இருக்கீங்க?? பேச முடியலையோ… அதாவது உங்களை பொருத்தவரைக்கும் இந்த காதல் எல்லாம் பெருசு இல்லை. வந்ததை வரவில் வை… வராததை செலவில் வைன்னு சொல்ற மாதிரி என் கூட கல்யாணம் நடந்தா சந்தோசமா இருந்திருப்பீங்க, இல்லை வேறு யாரு கூட கல்யாணம் நடந்திருந்தாலும் அப்போவும் விதி சதின்னு சொல்லிட்டு   ஒரு வாழ்க்கை வாழ்ந்திருப்பீங்க.. உண்மை தானே… ??”

“ப்ளீஸ் சுபி… இப்படி எல்லாம் பேசாத.. நான் அப்படி எல்லாம் நினைக்கவே இல்லை… எனக்கு இப்போதைக்கு இதெல்லாம் வேண்டாம்னு தோணிச்சு அதான் சொல்லல. பட் கல்யாண விசயம்னு வரும் போது நான் கண்டிப்பா வீட்டில் பேசிருப்பேன்..”

“நீங்க??? இதை நான் நம்பனும்.. ஹ்ம்ம் உங்களுக்கு உங்க இமேஜ் முக்கியம்.. அப்படியே சார தாங்கி தடுக்கி தயவு செஞ்சு கல்யாணம் பண்ணு ராசான்னு கெஞ்சி கூத்தாடி தானே இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சாங்க.. அப்போ எல்லாம் எங்க போச்சு உங்க காதல்??”

“அது சுபி… எப்படியும் உன்னைத்தான் கல்யாணம் பண்ண போறோம்னு தான் நான் எதுவும் சொல்லாம விட்டேன்…”

“அதான் பிரச்சனையே…. எப்படியும் இவளை தானே கட்டிக்க போறோம்னு அவ்வளோ ஈசியா இவதானேன்னு நினைச்சுட்டிங்க.. இப்ப எல்லாம் ஸ்கூல் போற பசங்க கூட லவ்வுன்னு சுத்துறானுங்க, அதெல்லாம் நான் சரின்னு சொல்லலை..  பிடிச்ச பொண்ணுக்காக என்னென்னவோ பண்ணறாங்க.. ஆனா நீங்க மனசுக்கு பிடிச்ச பொண்ணையே, யாராவது கட்டாயபடுத்தி சம்மதிக்க வச்சு கல்யாணம் நடத்தி வச்சா அதையும் கூட வேண்டா வெறுப்பா பண்ற மாதிரி தான் பண்ணுவீங்க.. ஏன் நீங்க என்னை பிடிச்சிருக்குன்னு ஒருவார்த்தை சொன்னா உங்களை யாராவது மட்டமா நினைப்பாங்களா?? இல்லை என்னை லவ் பண்றதையே மட்டமா நினைச்சீங்களா ??”

சௌபர்ணிகாவை பொருத்தமட்டில் சர்வேஷ் தன் காதலை வெளியே சொல்ல ஏன் தயக்கம் கொள்ளவேண்டும்?? அப்படி தன்னை விரும்புவதை வெளியில் சொல்ல கூட முடியாத அளவிற்கு தான் அத்தனை கீழானவளா?? தன்னிடமே கூட திருமணம் முடிந்து தானே சொன்னான்.. இல்லையென்றால் என்ன செய்திருப்பான்??? தனக்காகவும் தன் காதலுக்காகவும் அவன் எந்த ஒரு முயற்சியுமே எடுக்கவில்லை என்பதே அவளுக்கு மிகுந்த மனவலியை கொடுத்தது..

சர்வேஷோ கல்யாணமே நிச்சயம் ஆகிவிட்டது இனியென்ன வீட்டில் காதலை கூறி, புதிதாய் ஒரு பிரச்சனையை உண்டுபண்ணுவானே என்று இருந்துவிட்டான்.. அவனை பொறுத்தமட்டில் கூறக்கூடாது என்றெல்லாம் இல்லை, திருமணம் முடிந்த பிறகு அவளிடம் மட்டும் சொல்லிக்கொள்வோம் என்றிருக்க அவன் நினைத்தது போல் அல்லாமல் இவள் இப்படி பேசவும்,   விதி செய்த சதி இப்பொழுது சௌபர்ணிகாவின் ரூபத்தில் ஆட்டமாய் ஆடிக்கொண்டு இருக்கிறது..

“சுபி………… ”

“நான் கேட்ட கேள்விக்கு பதில்…..??? ”

“இங்க பாரு சுபி, இப்போ ஏன் இதை எல்லாம் நீ இவ்வளோ பெருசா எடுத்துக்கிற?? நம்ம கல்யாணமும் காதலும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாம நல்லபடியா முடிஞ்சது… அதை நினைச்சு நீ சந்தோசம்தான் படனும். அதை விட்டு இப்படி கண்டதையும் போட்டு குழப்பிக்காத சுபி… ” என்று அவன் தன்மையாய் விளக்க முயல்,

“என்னது கண்டதா??? எது கண்டது???  உங்க மனசுலயும், என் மனசுலயும் சொல்லாமையே விட்ட காதல் கண்டதா?? அதுனால நம்ம இழந்த சின்ன சின்ன சந்தோசங்கள் கண்டதா??” என்று கேட்க,

“ம்ம்ச்… இப்படி பேசினதையே பேசிட்டே இருந்தா இதுக்கு ஒரு முடிவே இருக்காது சுபி..” என்று அவனது குரலுமே சலிப்பாய் இருப்பது போல தோன்றியது..

அவனை ஒரு வெற்று பார்வை பார்த்தவள் பதில் எதுவும் கூறாமல் அமைதியாய் சென்று கட்டிலின் ஒருபக்க ஓரத்தில் படுத்துக்கொண்டாள்.. எதுவும் செய்ய முடியாத நிலையில் சர்வேஷ் இருந்தான்..

என்ன சொல்லி, இல்லை என்ன செய்து இவளை சமாதானம் செய்வது?? சிறு குழந்தையா ஒரு பொம்மை கொடுத்து சரி செய்ய.. உயிரும் உணர்வும் உள்ள பெண் ஆயிற்றே. அதுவும் இத்தனை ஆண்டுகள் எதோ ஒரு குருட்டு நம்பிக்கையில், அந்த நம்பிக்கை தந்த தைரியத்தில் தன் காதலை மனதில் வைத்திருந்து தவித்திருக்கிறாள். ஆனால் அந்த தவிப்பெல்லாம் அவசியமே இல்லையெனும் போது, தான் சிந்திய ஒவ்வொரு துளி கண்ணீரும் வீண் என்று தெரியும் பொழுது அவள் மனது என்ன நிலையில் இருக்கும்..

“ம்ம்ச் இப்படி அமைதியா படுத்துட்டா எப்படி சுபி…???”

“வேற என்ன செய்யணும்..?” என்று திரும்பாமலே கேள்வி கேட்டாள்..

“நீ தான் சொல்லணும்.. இப்போ இந்த சண்டை போட்டு இருக்கிறது நீ தான்…”

“ஓ!!! இப்போக்கூட நான் சமாதானம் ஆகிட்டா மேற்கொண்டு நீங்க முன்னேருவீங்க அப்படிதான???” என்று ஆங்காரமாய் கேட்க, 

“சௌபர்ணிகா….!!!!!!!!!!!!!! ” என்று கோபத்தில் கத்தியேவிட்டான்..

“யெஸ் சௌபர்ணிகாவே தான்… உங்களை பைத்தியக்கார தனமா விரும்புன அதே  சௌபர்ணிகா தான்.. எனக்கு தான் உங்க மனசுல என்ன இருக்குன்னு தெரியாம அமைதியா இருந்தேன்.. ஆனா உங்களுக்கு என்னாச்சு?? உங்களுக்கு தான் எல்லாம் தெரியுமே?? நான் விரும்பின சர்வா நீங்க இல்லை.. என் நினைவுல இருக்கிற சர்வேஷுக்கும் உங்களுக்கும் நிறைய வித்தியாசம்..

அந்த வித்தியாசம் தான் இப்போ உங்கட்ட இருந்து என்னை விலக்கி நிறுத்தியிருக்கு.. என்னிக்கு நீங்க உங்களுக்குள்ள இருக்க எல்லா தயக்கத்தையும் தாண்டி, நம்ம காதல் உண்மையாவே பெரிய விசயம் தான், நமக்கு கிடைச்ச பொக்கிஷம்னு நீங்க நினைக்கறீங்களோ அன்னிக்கு தான் என் மனசும் மாறும்…” என்றாள் உறுதியாய்..

“சோ, இது தான் உன் முடிவா??? ”

“யெஸ்…………….. ”

அவ்வளவு தான் அதற்குமேல் அந்த அறையில் நிசப்பதம் மட்டுமே.. எப்படியெல்லாம் கடந்திருக்க வேண்டிய நேரம் இப்பொழுது கண்ணீரும், கோவமும், ஏமாற்றமுமாய் கடந்து போனது யார் குற்றம்…???

விளக்கை அனைத்துவிட்டு வந்து படுத்த சர்வேஷிற்கு முதலில் என்ன செய்வது என்றே ஒன்றும் விளங்கவில்லை. கண்களை இறுக மூடியவனுக்கு இன்னும் கூட புரியவில்லை தான் செய்த தவறுகள் என்னவென்று..

இருவருக்குமே உறக்கம் தொலைந்து போனது.. எங்கே ஏதாவது பேசினால் இன்னும் பேச்சு அதிகரித்து பிரச்சனை தான் கூடுமோ என்ற நினைப்பே இருவரையும் மௌனத்தில் ஆழ்த்தியது.

சௌபர்ணிகாவிற்கு பழைய நினைவுகள் எல்லாம் நினைவில் வந்து முட்டி மோதிக்கொண்டு இருந்தன.. கட்டுகடங்காமல் கண்ணீர் வழிந்தது.. ஆனால் விடிந்த பின் அழுது வீங்கிய முகத்துடனா வெளியே செல்ல முடியும். ஆழ்ந்த மூச்சுக்களை வெளிவிட்டவள் எழுந்து அமர்ந்தாள்..

ஒருவேளை தன்னிடம் தான் பேச போகிறாளோ என்றெண்ணிய சர்வேஷும் வேகமாய் எழுந்து அமர்ந்து அவள் முகம் பார்த்தான். நைட் லேம்ப்பின் மெல்லிய வெளிச்சத்தில் அவளது முகம் மங்கலாய் தெரிந்தது.. அவனுக்கே பாவமாய் தானிருந்தது.. இந்த பேச்சை இன்று ஆரம்பித்து இருக்க கூடாதோ என்றே தோன்றியது அவனுக்கு.

ஆனால் அடுத்த நொடியே அவன் மனசாட்சி இடித்தது இன்று சொன்னதால் இதோடு விட்டாள், சொல்லாமலே விட்டிருந்தால் என்ன செய்து இருப்பாள் என்றே தெரியாது எனவும் அவனுக்கு சரி என்றே பட்டது.. ஆவலாய் அவள் முகம் நோக்கி அமர்ந்தவனை அலட்சியமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு எழுந்து சென்று முகம் கழுவி வந்து மீண்டும் படுத்துக்கொண்டாள்..

‘இதுக்குத்தானா.. ஹ்ம்ம் முதல் நாளே படுத்துறாளே.. இப்படி எல்லாம் எதுலயும் சிக்க கூடாதுன்னு ஸ்ட்ரைட்டா கல்யாணம் பண்ணா, ஹ்ம்ம் இப்போ அதுவே வினையா வந்து முடிஞ்சதே…’ என்று எண்ணியபடியே மீண்டும் படுத்தான்..

சௌபர்ணிகாவோ அங்கே மனதிற்குள் எரிமலையாய் வெடித்தபடி இருந்தாள்.. ‘படுத்திருக்கான் பாரு.. இத்தனை நாள் தான் சும்மாவே இருந்தான்.. இப்போ கூட சமாதானம் பண்ணத்தோணலை. இவன் தலைல இருக்க கிரீடம் இறங்கிடுமா என்ன?? இப்படி சும்மா இருக்கிறவனை எல்லாம் சுண்டல் விக்க விடனும்…’ என்று முணுமுணுக்க,

“என்ன சுபி…” என்றான் அவனும்..

“நத்திங்க்.. ” என்று தன்னையும் அறியாமல் கூறிவிட்டாள்..

“ஹ்ம்ம் நீ வாய்குள்ளவே பேசு ஆனா நான் சத்தமா தான் பேசுவேன்…” என்றதும், வேகமாய் திரும்பி அவன் பக்கம் படுத்தவள்

“அப்படியா எங்க சத்தமா எல்லாருக்கும் கேட்கிற மாதிரி நான் சௌபர்ணிகாவை ரொம்ப வருசமா லவ் பண்ணேன்னு.. இப்பவும் பண்றேன் இனியும் பண்ணுவேன்னு சொல்லுங்க பாப்போம்..” என்றாள்..

அவனோ பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாய் இருந்தான்..

“என்ன முடியாதுல்ல.. அதான் உங்க கௌரவம் இடம் கொடுக்காதே.. சர்வேஷ் விஸ்வநாதன்.. தி கிரேட்… நீங்க ஒரு பொண்ணை லவ் பண்ணீங்கன்னு சொன்னா அது எவ்வளோ பெரிய கேவலம்.. அடடடா..” ஏளனமாய் எக்காளமாய் வெளிவந்தது அவளது குரல்..

“போதும் சுபி…. ” என்று அவனுக்குமே அவள் பேச பேச வலித்தது..

அவன் போதும் என்றதும் அமைதியாய் வாயையும் கண்களையும் மூடி படுத்துகொண்டாள்..

‘ஹ்ம்ம் இவ பேசினாலும் தாங்க முடியலை, அமைதியா இருந்தாலும் தாங்க முடியலை டா சாமி..’ என்று அவன் தனக்குள்ளே பேச,

“என்ன முனுமுனுப்பு…” என்றாள் அவள்..

“ஹா!!!! நத்திங்…” என்று அவளை போலவே சொல்லி காட்டினான். அதற்கும் ஒருமுறை முறைத்துவிட்டு கண்களை இறுக மூடிக்கொண்டாள்..

“ஹ்ம்ம் சௌபர்ணிகான்னு வச்சதுக்கு காளியம்மான்னு வச்சிருக்கலாம்..”

“அப்படி வச்சா மட்டும் உங்க லவ்வ சொல்லியிருப்பீங்களா ???”

“எப்படி போனாலும் அடிக்கிறாளே…” என்று எண்ணியவன் இதற்குமேல் பேசினால் இருவருக்குமே வேதனை தான் என்று எண்ணி  “தூங்கு சுபி.. டயர்ட்டா இருக்க..” என,

“இப்படியொரு டைம்ல இப்படியொரு டயலாக் சொன்ன முத்த ஆம்பிள நீங்களா தான் இருப்பீங்க..” என்று நக்கலாய் கூறினாள்..

அவனோ விலுக்கென்று எழுந்தவன், “இங்க பாரு நானே பொறுமையா இருக்கேன். சும்மா இருக்கிறவனை சீண்டுற மாதிரி பேசாத.. இப்போ உனக்கு என்ன தான் டி நான் செய்யணும்” என்று எகிற,

அவனையே ஆழ ஒரு நொடி பார்த்தவள் “ஹ்ம்ம் என்னை கேட்டா எனக்கென்ன தெரியும்.. தூக்கம் வருது, நீங்களும் தூங்குங்க…” என்று கண்களை மூடினாள். அதற்குமேல் அங்கே பேச்சில்லை..

விடியற்காலை எழும்பொழுது முதலில் சௌபர்ணிகாவிற்கு முதல் நாள் நடந்த எதுவும் சட்டென்று நினைவில் வரவில்லை. பின் யோசித்து அமர்ந்திருக்க,  அருகில் ஒருவன் இருந்தானே என்ற நினைப்பு வர அவனை தேடினாள்.

குளியலறையில் தண்ணீர் விழும் சத்தம் கேட்டு “பொறுப்பு… அதுக்குள்ள எழுந்தாச்சா.. இவனெல்லாம் இப்பவே குளிக்கலைன்னு யார் அழுதா…” என்று சுப்ரபாதம் பாடும் பொழுதே கதவு தட்டபடவும் வேகமாய் சென்று திறந்தாள்..

மோகனா தான், அவருக்கு பின்னே எட்டி பார்த்தபடி ஸ்ரீ.. “ஸ்ரீ உன்னை யாரு என் பின்னாடியே வர சொன்னா.. போ..” என்று மோகனா கூறவும் சௌபர்ணிகாவும் சிரித்தாள்..

“சோபி கொஞ்சம் சீக்கிரம் கீழ வாங்க. ரொம்ப அவசரம் இல்லை ஆனா கொஞ்சம் சீக்கிரமா.. சொந்தகாரங்க எல்லாம் இருக்காங்க அதான். இவன் குளிக்க போனா ஒருமணி நேரம் செய்வான். அதான் சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்..” என்றவரின் பார்வையோ சௌபர்ணிகாவையும் தாண்டி அறையை அலசி முகத்தில் ஒரு நிம்மதி தோன்றியது..

அதை புரிந்துகொண்ட சௌபர்ணிகாவோ “நல்ல வேலை ரெண்டு பேரும் பெட்டுல படுத்தது..” என்று எண்ணிக்கொண்டாள்..

சோபியிடம் பேச நின்ற ஸ்ரீயையும் பிடிவாதமாய் இழுத்து சென்றார் மோகனா.        அவர்களையே யோசனையாய் பார்த்தபடி நின்றாள் சோபி..   

   

       

 

Advertisement