Advertisement

சுகம் – 12

அரைத்த பசுமஞ்சள் நிறத்தில் பச்சை பார்ட்டரிட்ட பட்டுப்புடவையுடன், கழுத்தில் அடர் சிவப்பு நிற ரோஜா மாலை அணிந்து மிதமான ஒப்பனையில், தலை நிறைய மல்லிகை சூடி, அம்மன் சந்நிதானத்தின் முன் இருக்கரம் குவித்து, கண்கள் மூடி பிரார்த்தித்து நிற்பவளை காணும் பொழுது சர்வேஷ் மனதில் ஒரு இனம் புரியாத உணர்வு ஏற்படத்தான் செய்தது..

என்னவோ இப்படியே அவளருகே இன்று அவளை கண்டுகொள்ள வேண்டும் போல் தோன்றியது.. எப்பொழுதும் ஏதாவது பேசி கொண்டும், சிரித்து கொண்டும், இல்லை நயா பைசாவிற்கு உப்பு பெறாத பேச்சை முணுமுணுத்துக்கொண்டும், அவனிடம் திட்டு வாங்கிக்கொண்டும், நத்திங் என்று மட்டுமே பதில் கூற தெரிந்த சௌபர்ணிகா இன்னும் இரண்டொரு நிமிடங்களில் அவனது கரங்களால்  தாலி வாங்கிக்கொண்டு அவனின் சரி பாதியாய்  இனி வாழ்க்கை முழுவதும் தொடர போவது சர்வேஷிற்கு இன்னும் ஆச்சரியமே.

இப்படி எல்லாம் நடக்கும் என்று யாராவது கூறி இருந்தால் கூட நம்பி இருக்க மாட்டான். ஆனால் கனவிலும் எதிர்பாராத சம்பவங்கள் நடக்கும்பொழுது தானே வாழ்க்கை சுவாரசியமாய் இருக்கிறது..

என்னதான் வேண்டுதலோ சௌபர்ணிகாவிற்கு, வந்ததில் இருந்து இப்படித்தான் நின்றிருந்தாள். இவனும் அவளை கண்ட வண்ணம் தான் நின்று இருந்தான். இப்போது திரும்புவாள் அப்போது திரும்புவாள் என்று எண்ணியது தான் மிச்சம்..

“சாமி முன்னாடிதான் இவ அமைதியா இருப்பா போல. ஹ்ம்ம் சர்வா இன்னிக்கு ஒரு நாள் பார்த்துக்கோ.. சௌபர்ணிகா அமைதியா நிற்க்கிறதை. இனிமே வாழ்கையில இப்படி ஒரு பொன்னான வாய்ப்பு கிடைக்குமோ என்னவோ..” என்று நினைக்கும் பொழுதே அவனுக்கு சிரிப்பு வந்தது.

“அட கடவுளே இன்னும் தாலியே கட்டல அதுக்குள்ள மாமா தனியா சிரிக்கிறாரே.. எல்லாம் கூட்டு சேர்ந்தது அப்படி…” என்று முணுமுணுத்த கார்த்திக் அதை ஸ்ரீயிடம் கூறாமலும் இல்லை. அவளும் தன் அண்ணனை கண்டு நகைத்துவிட்டு

“ஹேய் கார்த்திக். நான் மாப்பிள்ளையோட தங்கச்சி. உங்க அக்காக்கு நாத்தனார். இனிமே நீ மரியாதையா தான் பேசனும்..” என்று நண்பனிடம் கெத்து காட்டினாள்.

ஆனால் கார்த்திக்கோ ‘அட அல்பமே..’ என்பது போல ஒரு பார்வை பார்த்து “நான் உன் நாத்தனாருக்கே மரியாதை கொடுக்கமாட்டேன். சும்மா அடங்கு..” என்று கேலி பேசினான்.

பரந்தாமனின் பார்வை தன் பக்கம் திரும்புவதை பார்க்கவும் மிகவும் பக்தி பழமாய் மாறி அவனும் தன் அக்காவின் வழியை பின்பற்ற, ஸ்ரீயும் அமைதியாய் நல்ல பெண் போல நின்றுகொண்டாள்.

விஸ்வநாதன் குடும்பத்தில் எந்த திருமணம் என்றாலும் மீனாட்சி அம்மன் கோவிலில் தான் நடக்கும். நெருங்கிய உறவுகள், நட்பை மட்டும் அழைத்து திருமணம் முடித்து பின் மாலை நேரத்தில் தடபுடலாய் வரவேற்பு நடக்கும். அதே போலதான் சர்வேஷ் சௌபர்ணிகா திருமணமும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அய்யர், மலர் தூவி அர்ச்சனை முடித்து தீபாராதனை எல்லாம் காட்டி மந்திரங்களை ஜபித்து குறிக்கப்பட்ட முகூர்த்த வேளையில் அன்னை மீனாட்சியின் பாதங்களில் வைத்திருந்த பொன் தாலியை தாம்பூல தட்டில் வைத்து வந்து நீட்டவும் அனைவரின் கைகளில் அட்சதை அரிசி நிரம்பவும் சரியாய் இருந்தது.

“சர்வா தாலி எடுத்து கட்டு..” என்று மோகனா கூறிய பிறகு தான் சர்வேஷிற்கு தான் இன்னும் இப்படியே நிற்பது புரிந்து தன்னையே உலுக்கிக்கொண்டு அதே மெல்லிய சிரிப்புடன் சௌபர்ணிகாவின் கழுத்தில் அந்த மங்கள நானை சூட்டினான் மூன்று முடிச்சிட்டு..

அத்தனை நேரம் கண்களை மூடியிருந்தவள் பட்டென்று விழிகள் மலர்ந்து பார்த்தாள். இருவரின் முகமும் ஒருவர் நோக்கி ஒருவர் இருக்க,  தாலி கட்டுகையில் அவன் முகத்தில் இருந்த ஒரு மென்னகை அப்படியே சௌபர்ணிகாவின் மனதில் நின்றுவிட்டது..

மெல்லிய புன்னகை… அவனுக்கு இன்னும் ஒரு அழகை கூட்டியது. அதுவே அவனுக்கு ஒரு தனி கம்பீரம் கொடுத்தது. இன்னும் கொஞ்சம் இமைகளை மட்டும் நிமிர்த்தி அவன் முகம் காண அவனோ இவள் முகத்தை மட்டுமே கண்டபடி முடிச்சுகளை போட்டுகொண்டு இருந்தான்.. இனி அவனையும் அவளையும் இணைக்க போகும் முடிச்சுகள்…

“அண்ணா ரெண்டு போட்டுட்ட, மூணாவது நான் தான் போடணும்…” என்றபடி ஸ்ரீநிதி தன் நாத்தனார் உரிமையை நிலைநாட்ட, அனைவரும் அட்சதை தூவ அழகாய் அங்கே அவர்களின் திருமணம் அரங்கேறியது.

பரந்தாமன், புனிதா இருவருக்கும் அத்தனை மகிழ்ச்சி, ஆனந்தம், பெருமிதம் எல்லாம். தங்கள் பெண் தாங்கள் கூறிய வார்த்தைக்கு மறுவார்த்தை கூறாமல் தங்கள் கௌரவம் காத்து அமைதியாய் திருமணம் செய்துகொண்டது அத்தனை நிம்மதியை கொடுத்தது. புனிதாவின் கண்கள் பணிக்கத்தான் செய்தது.

கார்த்திக்கோ “ம்மா ஆரம்பிக்காதா.. சோபி பார்த்தா அவளும் அழுவா….” எனவும் கண்களை துடைத்துகொண்டார்..

மோகனாவிற்கோ இப்பொழுது தான் பெரும் நிம்மதியாய் இருந்தது.. எங்கே தங்கள் மகன் ஏதாவது பிரச்சனை செய்துவிடுவானோ என்ற பயம் கடைசி நேரம் வரைக்கும் இருந்துகொண்டே தான் இருந்தது.. ஆனால் இப்படி ஒன்றுமே சொல்லாது அனைத்துக்கும் சரி சரி என்று வந்து நிற்பவனை காண ஒரு ஆச்சர்யம் இருந்தாலும், அவர்களது வாழ்வும் அனைத்துமே சரியாய் அமைந்து நல்முறையில் இருந்திடவேண்டும் என்று அன்னையின் மனம் நினைக்காமல் இல்லை..

எத்தனை முறை கரம்கூப்பி வேண்டினாலும் போதாது என்பதுபோல் மோகனா திரும்ப திரும்ப அம்மனிடம் தன் நன்றிகளை சொல்லிக்கொண்டு இருந்தார்.. அதனை கண்ட ஸ்ரீநிதி, 

“யம்மா!! நினைச்ச மாதிரியே அண்ணன் கல்யாணத்தை முடிச்சிட்ட.. ஹ்ம்ம் மாமியார் ஆகிட்ட வாழ்த்துக்கள்…” என்று அன்னையை கிண்டல் செய்ய,    

“போடி… வாயை பாரு.. எப்போ பார் ஏதாவது சொல்லிகிட்டே.. வா வா நிறைய வேலை இருக்கு..” என்று அவளை இழுத்துக்கொண்டு செல்ல முயல,

“அம்மா… நான் அண்ணிக்கூட இருக்கேன்.. நீங்க போய் வந்தவங்களை கவனிங்க..” என்று நழுவி கொண்டாள் ஸ்ரீ..

“மச்சி வாழ்த்துக்கள்டா. நீயும் சம்சார சாகரத்தில குதிச்சுட்ட… வாழ்த்துக்கள் மா சோபி…” என்று  சந்தோசமாய் கை குலுக்கினான் ஷ்ரவன்.

அடுத்து பரந்தாமன், புனிதா, விஸ்வநாதன், மோகனா நால்வரும் ஒன்றாய் நிற்க மணமக்கள் அவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர். சர்வேஷிற்கோ இவள் அமைதியாய் இருப்பது என்னவோ போல் இருந்தது.

வேண்டுமென்றே “இப்போ நீ என்ன நினைக்கிறன்னு எனக்கு தெரியும்…” என்றான் மெல்ல.

அவளும் என்னவென்பது போல பார்த்து வைத்தாள்..

“நாலு பேரும் ஒரே வரிசையில் நின்னது நல்லதா போச்சு, ஒரேதரம் விழுந்து எழுந்தோம்னு நினைச்ச தான…” என்று என்னவோ சரியாய் புதையலை கண்டுபிடித்த முகபாவத்தில் கேட்டான்..

அவன் கேட்டதையும், அப்படி கேட்கையில் அவன் முகத்தில் தெரிந்த பாவனைகளையும் பார்த்து, ‘என்ன சிறுத்தை வாலண்டியரா சிக்னல் காட்டுது..’ என்று எண்ணியவள், வந்த சிரிப்பை அடக்கி மெதுவாய் தலை குனிய, 

“என்ன சரிதான??” என்று மேலும் அவள் வாயை பிடுங்கினான்.

அவள் பதில் சொல்வதற்குள் விஸ்வநாதன் வந்து “சந்நிதியயை சுத்தி வாங்க…” என்றிட, மணக்கோலத்தில் இருவரும் கோவிலை சுற்றி வந்தனர்.

கார்த்திக்கோ புகைப்படமாய் எடுத்து தள்ளினான். ஸ்ரீநிதியோ அவனுக்கு உதவுகிறேன் என்ற பெயரில் தன் அண்ணனையும் அண்ணியும்  இப்படி நில், அப்படி பார் என்று ஒரு வழி செய்துவிட்டாள். ஆனால் அதிசயம் என்னவென்றால் சர்வா இதற்கெல்லாம் சலிக்காமல் ஒத்துழைத்ததுதான்..

அது சௌபர்ணிகாவிற்கே ஆச்சர்யம் தான்.. எங்கேடா சந்தோசமாய் இருப்பவர்களை எதுவும் சுல்லென்று பேசிடுவானோ என்று அவ்வப்போது அவனின் முகம் பார்க்க,

“என்னை என்ன பாக்குற.. நேரா பார்.. கார்த்திக் போட்டோ எடுக்கிறான்…” என்று சொல்லி அவளையும் சர்வேஷ் திருப்பி நிறுத்த,

‘ஹா..’ என்று வாய் பிளக்காத குறைதான் அவள்..  

“அண்ணி என்ன மாயம் பண்ணீங்க… எங்க அண்ணன் இப்படி மாறிட்டான்.. திறமை தான் அண்ணி…” என்று ஸ்ரீநிதி கிண்டல் செய்ய, பதில் கூறாமல் சிரித்தே சமாளித்தாள் சௌபர்ணிகா..

மேலும் சிறிது நேரம் இருந்துவிட்டு, அனைவரும் சர்வேஷ் வீட்டிற்கு சென்றனர். முதல் முறையாய் செல்கிறாள் சௌபர்ணிகா. மோகனாவும் ஸ்ரீயும் இன்னும் சிலரும் சேர்ந்து ஆரத்தி எடுக்க சர்வேஷ் கைகளை பிடித்து வலது காலை எடுத்து வைத்து உள்ளே சென்று விளக்கேற்றினாள்.

வீட்டினர் கூறும் அனைத்து சங்கியங்களுக்கும் மறுத்து பேசாது, முகம் சுளிக்காது சிரித்த முகமாகவே இருவரும் கேட்டு நடப்பது அனைவர்க்கும் நிம்மதியை கொடுத்தது.

மோகனா வந்து புனிதாவிடம் “இப்போதான் புனிதா எனக்கு நிம்மதியா இருக்கு. கடைசி நேரம் வரைக்கும் எனக்கு மனசு அடிச்சுக்கிட்டே இருந்தது.. ஹப்பா!! சோபி என் வீட்டு மருமகளா வந்ததுல ரொம்ப சந்தோசம் எனக்கு….” என்றிட,

“எனக்கும் தான் அண்ணி. ஒரே பொண்ணு. அவளை இங்கயே கட்டி குடுத்தது எங்களுக்கும் நிம்மதியா இருக்கு. அவ கொஞ்சம் விளையாட்டு தனமா பேசுவா அண்ணி நீங்க தான் அவளை பார்த்துக்கணும். எடுத்து சொன்னா புரிஞ்சுப்பா…” என்றார் அவரும்..

“என்ன புனிதா இது, எனக்கும் ஒரு பொண்ணு இருக்கு.. நீ கவலையே படவேண்டாம் நான் பார்த்துப்பேன்…” என்று இவர்கள் பேசியபடி வந்த உறவினர்களை ஒரு பக்கம் கவனிக்க என்று இருந்தனர்.

அங்கே ஆண்கள் கூட்டமோ மாலை வரவேற்புக்கு செய்யவேண்டிய கடைசி நேர வேலைகளை பார்க்கவும், அலையவும் சரியாய் இருந்தது.. பரந்தாமன் விஸ்வநாதனுக்கு மனதினுள் அப்படியொரு நிறைவு.. தங்கள் பிள்ளைகள் தங்களின் வார்த்தையை மதித்து நடந்தனர் என்று.. அது அவர்களின் உற்சாக நடையிலும் ஒரு புன்னகை புரியும் முகத்திலுமே தெரிந்தது..                       

சௌபர்ணிகா ஸ்ரீயின் அறையில் தாங்கிக்கொள்ள, சர்வேஷ் வழக்கம் போல் மாடியில் தனது அறையில் இருந்தான். அவனது அறை ஒற்றை படுக்கை அறை தான். அதிலிருக்கும் பொருட்களும் மிக மிக கம்மி.. அதாவது அவனுக்கு என்ன தேவையோ அதுமட்டுமே அங்கே இருக்கும்..

என்னவோ இப்போது உள்ளே நுழைந்தவன் சுற்றி முற்றி பார்த்தான்.

“இதில எப்படி அவளும் வந்து தங்குவா???” என்று யோசிக்கும்பொழுதே விஸ்வநாதனும் மோகனாவும் வந்தனர்.

“சர்வா உனக்கும் சோபிக்கும் அந்த பெரிய ரூம் ரெடி பண்ணிருக்குடா.. இனிமே அங்க தங்கிக்கோங்க..” என்று மோகனா சொல்லும்போதே,

“என்னமா சொல்றீங்க?? என் திங்க்ஸ் எல்லாம் இங்கதான இருக்கு. இப்போ சொன்னா எப்படிம்மா. முன்னாடியே சொன்னதான் எல்லாம் செய்ய முடியும்.. இப்போ வந்து சொன்னா எப்படி?? அப்பா நீங்களே சொல்லுங்க..” என்று பாதி பேச்சை மட்டும் கேட்டு இவன் படபடக்க,

“சர்வா, உன்னை இப்போ பெட்டிக்கட்ட சொல்லல.. உன் ட்ரெஸ் எல்லாம் அன்னிக்கே அம்மா மாத்தி வச்சிட்டா. வேற உனக்கு தேவையான திங்க்ஸ் மட்டும் எடுத்துக்கோ. அப்புறம் இதை நீ ஆபிஸ் ரூம்மா யூஸ் பண்ணிக்கோ.. அவ்வளோதான்..” என்று விஸ்வநாதன் சொல்ல,  

“ஏன் இந்த ரூம்க்கு என்னவாம்??? ” என்றான் வீம்பாய்.. 

“புரியாம பேசாதடா. நீ அடுக்கி இருக்க புக்ஸும், வாங்கி வச்சிருக்க மெடலும் கப்பும் பார்க்கவா அந்த பொண்ணு இங்க வந்திருக்கு.. ஒழுங்கா சொல்றதை கேட்டு நட. இனிமே அது தான் உங்க ரூம். இது நீ மத்த வேலைக்கு யூஸ் பண்ணு இல்லை என்னவோ பண்ணு. எதையாவது சொல்லி சொல்லி எங்களை டென்சன் பண்ணதுபோல சோபியையும் அப்படி பண்ணிடாத.. என்னங்க வாங்க.. வேலை இருக்கு….” என்று பெற்றோர் இருவரும் நகரவும்  இவனுக்கு ஏக கடுப்பாய் வந்தது..

“எல்லாம் இவங்க இஷ்டபடியே செய்யணும் வைக்கணும். என் நேரம்.. இருந்திருந்து இப்படியா நடக்கணும் அதுவும் எனக்கு..   யாரை கேட்டு என் ட்ரெஸ் எல்லாம் அடுக்கினாங்க.. எல்லாம் அவளால தான்.. இருக்கட்டும் இருக்கட்டும்.” என்று அனைத்துக்கும் சோபியை காரணம் காட்டி தனக்கு வேண்டிய மற்ற பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு அந்த அறைக்கு சென்றால் அங்கே சௌபர்ணிகாவும் ஸ்ரீநிதியும் அவளது பொருட்களை அடுக்கிக் கொண்டு இருந்தனர்.

சர்வேஷிற்கு உதவியாய் கார்த்திக் வரவும் அங்கே அந்த அறையே கலைகட்டியது..

“அண்ணா வாண்ணா.. நீ இப்ப வந்ததும் நல்லது தான். பாரு நானும் அம்மாவும் அன்னிக்கே உன் ட்ரெஸ் எல்லாம் அடுக்கியாச்சு. இதோ அண்ணியும் இப்போ அடுக்கி வச்சிட்டாங்க.. மீத இருக்க இடத்தில நீ என்ன வைக்கனுமோ வைச்சிக்கோ..” என்று ஸ்ரீ கூறியதை கேட்டு கப்போர்டை பார்த்தவன் அதிர்ந்து நின்றான்.  

ஏதோ போனால் போகிறது என்று அவனுக்கு இடம் விட்டு வைத்தது போல இருந்தது அதில். இன்றே எதையும் சொல்ல கூடாது என்று தன் கோவத்தை அடக்கியவன் “ஏன் ஸ்ரீ இன்னிக்கே எல்லாம் அடுக்கனுமா என்ன??” என்று மெல்ல தன் தங்கைக்கு தூண்டில் போட்டான்.

இப்பொழுதெல்லாம் தன் அண்ணன் தன்னிடம் சற்றே இலகுவாய் பேசுவதை நினைத்து மகிழ்திருந்த ஸ்ரீயோ ”இல்லண்ணா.. நானும் அண்ணியும் சும்மா தான் இருந்தோம். அவங்க ட்ரெஸ் முடிச்சிட்டா அப்புறம் இடம் பார்த்து நீ உன்னது எல்லாம் அடுக்கிடுவன்னு அண்ணி சொன்னாங்களா அதான்…” என்று பதில் கூறவும் சௌபர்ணிகா ‘ஞே..’ என்று விழித்தாள்..

“ஐயோ!! அவன் போட்டு வாங்குறது தெரியாம இந்த ஸ்ரீயும் உளறி வைக்கிறாளே…” என்று முனுமுனுத்தபடி ஸ்ரீயின் கைகளை சுரண்டினாள்.. அதை கண்டுகொண்ட சர்வேஷோ “எல்லாம் உன் வேலைதானா…” என்று எண்ணிக்கொண்டு,

“சரி ஸ்ரீ அடுக்கின வரைக்கும் போதும். நாளைக்கு நானும் அண்ணியும் சேர்ந்து அடிக்கிக்கிறோம்..” என்றான் சற்றே அழுத்தம் கொடுத்து..

“அண்ணா.. சூப்பர் ஐடியா..” என்றவள் “ஹேய் கார்த்திக் என்ன அமைதியா நிக்கிற.. வா வா வந்து நீயும் கூட்டணில துண்டு போட்டு இடம் பிடி… ” என்று தன் நண்பனை அழைக்க,

சௌபர்ணிகாவோ “என்ன கூட்டணியா இருந்தாலும் சோபி நீமட்டும் சிக்கிடாத..”  என்று என்னிய்வளை 

“என்ன அண்ணி அமைதியா இருக்கீங்க. பாருங்க அண்ணனே நம்மலை தேடி வந்து பேசுறான். எப்பவும் பேசுற நீங்க ஏன் இவ்வளோ அமைதியா இருக்கீங்க??” என்று ஸ்ரீநிதி உசுப்பேற்ற,

“அது ஒண்ணுமில்ல ஸ்ரீ. இன்னிக்குதான நம்ம வீட்டுக்கு வந்திருக்கா அதான். போக போக தெளிய வைச்சிடுவோம்.” என்றான் சர்வேஷ்..

கார்த்திக்கோ சௌபர்ணிகாவை விட்டுக்கொடுக்காது “ஹ்ம்ம் மாமா தெளிய வைக்க போறீங்களா இல்லை தெரிச்சு ஓட போறீங்களான்னு இனிமேல்தானே தெரியும்” என்றான்.

“என்ன கார்த்திக் வர வர நீயும் உன் அக்கா போலவே முனுமுனுக்க ஆரம்பிச்சுட்ட எல்லாம் அவ ட்ரைனிங்கா..” என்று சர்வேஷ் சௌபர்ணிகாவை பார்த்தபடி கேட்க,

‘பொருத்தது போதும் சோபி பொங்கி எழு.. ஆரம்பமே ஆழமா கால் வை.. அப்போதான் ஸ்டெடியா நிக்க முடியும் ..’ என்று தனக்கு தானே கூறிக்கொண்டு,

“சரி ஸ்ரீ நம்ம இங்க ரொம்ப நேரம் இருக்கிறது நல்லது இல்லை. வீட்டுல எல்லாரும் இருக்காங்க, பெரியவங்க ஏதாவது சொல்வாங்க. நம்ம உன் ரூம்க்கு போலாம். கார்த்திக் நீ மாமாக்கூட இருந்து அவரை கவனி….”  என்றுவிட்டு யார் பதிலுக்கும் காத்திராமல் ஸ்ரீயை இழுக்காத குறையாய் இழுத்தபடி சென்றாள்..

சர்வேஷிற்கு சிரிப்பு தாங்கவில்லை.. போகும் போது லேசாய் திரும்பி பார்த்துவிட்டு தான் போனாள்.. “உன்னிடம் நான் மாட்டுவேனா என்பது போல” பதிலுக்கு சர்வேஷும் “போ போ எங்கே போக போகிறாய்… ” என்பது போல பார்த்து வைத்தான்.

 

 

ராஜாமுத்தையா மகால் உறவினர்காளாலும், நண்பர்காளாலும் நிரம்பி வழிந்தது.. இருபதே நாளில் இத்தனை ஏற்பாடுகளும் செய்யபட்டது என்றால் யாரும் நம்பவே மாட்டார்கள். அத்தனை சிறப்பாய் ஒவ்வொரு விசயமும் பார்த்து பார்த்து நேர்த்தியாய் செய்திருந்தனர் மணமக்கள் வீட்டார். இருக்காதா பின்னே இரு வீட்டிலும் முதல் நடக்கும் திருமணம், கேட்கவா வேண்டும்..

மேடையில் சௌபர்ணிகாவிற்கு துணையாய் ஸ்ரீநிதி  நிற்க, கார்த்திக் சர்வேஷ் அருகில் நின்றிருந்தான். போதாத குறைக்கு இவர்களின் வகுப்பு பட்டாளம் வேறு.. கலகலப்பு, கும்மாளத்திற்கு கேட்கவா வேண்டும்.. ஆனால் பாவம்  போட்டோகிராபர் தான் தினறிவிட்டார்..

சௌபர்ணிகா அசந்தே விட்டாள் “இந்த சிடுமூஞ்சி சர்வேஷா இப்படியெல்லாம் சிரித்தபடி போஸ் குடுப்பது…” என்று…

இதில் இப்படி பார் அப்படி பார் என்று யாரும் கேட்காத வண்ணம் அவளிடம் கூறியது ஆச்சரியத்தின் உச்சம்.

“அன்னிக்கு என்னவோ சொன்னானே.. என் கூட வாழ்ற வாழ்க்கை அவ்வளோ ஈஸியா இருக்காதுன்னு. ஆனா இன்னிக்கு இப்படி நடந்துக்குறான்…” என்று யோசனையாய் அவனை நோக்க

“ஸ்!! என்ன அப்படி ஒரு லுக். எல்லாம் நம்மை தான் பார்க்கிறாங்க. அங்க பார்..” என்று சிரிப்புடன் ஜாடை செய்யவும் அவனது பாவனையில் மயங்காத குறைதான் சௌபர்ணிகா..

ஒரு வழியாய் வரவேற்பு சிறப்பாய் நடந்து முடிய, மணமக்கள் இருவரும் சர்வேஷ் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.. ஏனோ சௌபர்ணிகாவிற்கு படபடப்பாய் இருந்தது.. காலையில் இங்கு வரும் போதுக்கூட அப்படி இல்லை. ஆனால் நேரம் கடக்க கடக்க மனம் தடதடத்தது..

ஆனால் சர்வேஷோ இயல்பாய் சிரித்து பேசிக்கொண்டு இருந்தான். பரந்தாமன் கிளம்புமாறு புனிதாவிடம் சொல்ல அதை கண்ட சௌபர்ணிகாவிற்கோ இன்னும் பயம் சூழ்ந்தது. சர்வேஷ் வீட்டில் அனைவரும் தெரிந்தவர்கள் தான் ஆனாலும் இத்தனை நேரம் இருந்த தெளிவு இப்பொழுது பெயருக்கு கூட இல்லை. கலக்கமாய் அன்னை முகம் நோக்கினாள்.

“சோபிம்மா, இனிமே இதுதான் உன் வீடு தான்.. பார்த்து நடந்துக்கோ. எங்களுக்கு நல்ல பேர் வாங்கி குடுப்பன்னு தெரியும்..  சந்தோசமா இருடா…” என்று உச்சி முகர்ந்த தாயை பதில் கூறாமல் கண்கள் கலங்கி பார்த்தாள்.

பரந்தாமன் மகளிடம் எதுவும் பேசவில்லை. அவரது தலையசைப்பே ஆயிரம் சொல்லியது.. எப்பொழுதும் வாயடித்துகொண்டு இருக்கும் கார்த்திக் கூட இப்பொழுது அமைதியாய் இருந்தான். ஒருவழியாய் புனிதா மகளுக்கு சமாதானமும், அறிவுரையும் கூறி கிளம்ப போதும் போதும் என்றாது.

அவர்கள் கிளம்பிய சற்று நேரத்தில் எல்லாம் மோகனா வந்து ஆறுதலாய் சில வார்த்தைகளும், அத்தையாய் பல அறிவுரைகளையும் கூறி உடை மாற்றி சாந்திமுகூர்த்தத்திற்கு தயாராகும் படி கூறினார்.

ஸ்ரீ தான் அவளை சரிசெய்யும் பொருட்டு “அண்ணி சிங்கத்தை அதோட குகையிலேயே சந்திக்க போறீங்க. ஹ்ம்ம் ஒன் டூ ஒன் தான்.. ” என்று கேலி பேசினாள்..

சௌபர்ணிகாவிற்கு தான் என்ன உணர்கிறோம் என்றே கூற முடியவில்லை.. சர்வேஷை எண்ணி கலங்க எதுவும் இல்லையென்றாலும் மனதில் தோன்றும் நடுக்கத்தை மறுக்கவும் முடியவில்லை..

வயதில் மூத்த பெண்கள் சிலர் வந்து நல்ல நேரம் பார்த்து அவளுக்கு ஆசி வழங்கி சர்வேஷின் அறைக்குள் அனுப்பி வைத்தனர். கதவை திறந்து உள்ளே வந்தவளை முதலில் ஒரு ஆராய்ச்சி பார்வை தான் பார்த்தான் சர்வேஷ்..

சிம்பிளாய் ஒரு இளம் சிவப்பு நிற க்ரஷ்ட் புடவையில் தாலியோடு உடன் மெல்லிய ஒரு ஒற்றை சங்கிலி மட்டும் அணிந்து சிறு ஜிமிக்கி குலுங்க வந்தவளை பார்த்த பொழுது அவனுக்கு மனம் சற்றே நிம்மதி அடைந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

எங்கே சினிமாவில் காட்டுவது போன்று பட்டு சேலையில் இருக்கும் அத்தனை நகைகளையும் அணிந்து யப்பா நினைத்து பார்க்கவே அவனுக்கு எரிச்சலாய் வந்தது. சௌபர்ணிகாவோ இன்னும் அப்படியே  நின்று இருந்தாள்..

“இன்னும் எவ்வளோ நேரம் அப்படியே நிற்கிறதா உத்தேசம்.. மேடம் காலையில நீங்க வந்த அதே ரூம் தான். சும்மா தைரியமா வாங்க…” என்று அவன் கூறியது அவளுக்கு நக்கலாய் கூறியதை போலவே இருந்தது..

‘என்ன ஒரு நக்கல்.. இப்படி நக்கல் பண்றவனை எல்லாம் ஹ்ம்ம் என்ன பண்ணலாம்.. சோபி என்ன இது உன் மூளை வேலை செய்ய மாட்டேங்குதே..’ என்று யோசித்து அவள் நிற்க,

“அடடா இப்படி நக்கலா பேசுறவனை என்ன செய்யலாம்னு யோசனை எல்லாம் அப்புறம் செய்யலாம்.. முதல்ல வந்து….” எஎன்று அவன் கூறி முடிக்கவில்லை

“நான்…. நான் காலுக்கு எல்லாம் விழ மாட்டேன்…” என்று  பட்டென்று பதில் கூறி முடித்தாள்..

அவனோ முதலில் அதிர்ந்து பிறகு சிரித்தான்.. “ஹா!! ஹா!! கவலையே படாத உன்னை காலுக்கு விழ எல்லாம் சொல்லவே மாட்டேன். நீ பாட்டுக்கு வாரிவிட்டா நான் என்ன செய்ய..  ரொம்ப நேரமா பால் செம்பு குய்யோ முறையோன்னு கத்துதே அதான் அதான் உன் பிடியில் இருந்து கொஞ்சம் அதை காப்பாத்த ட்ரை பண்ணேன்…” என்று அவன் கூறிய விதத்தில் அவனையும் அவள் கையில் இருக்கும் பால் செம்பையும் பார்த்தவள்,  லேசாய் சிரிக்க,

சர்வேஷோ “ஹ்ம்ம் பர்ஸ்ட் நைட்டுல இந்த பால் பழம் ஸ்வீட் எல்லாம் எவன் வைக்கனும்னு கண்டு பிடிச்சானோ.. கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாம.. அவனவனுக்கு இருக்க டென்சன்ல இதெல்லாம் சாப்பிடவா தோணும்..” என்று இயல்பாய் கேட்க,

இதே சந்தேகம் அவளுக்கு பல முறை சினிமா பார்க்கும் பொழுதெல்லாம் வந்திருக்கிறது. மனதினுள் இருப்பதை அவன் அப்படியே சொல்லவும் விழிகள் விரித்து பார்த்தாள்..

“என்ன நீ பார்க்கிறதை வச்சு பார்த்தா உனக்கே அந்த டவுட் எல்லாம் இருக்கும் போல..” என்று சர்வேஷ் சொல்ல,

‘அய்யோ இவன் என்ன நம்ம நினைக்கிறதை எல்லாம் சொல்றான்…’ என்று முழிக்க,

“இப்ப கூட மைன்ட் வாய்ஸா சௌபர்ணிகா… ” என்று இத்தனை நேரம் இருந்த இலகு மாறி சற்றே அழுத்தமாய் அவனது குரல் ஒலிக்கவும் படக்கென்று நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்..

“குட் இப்படிதான் நேருக்கு நேரா பார்க்கணும்.. அதை விட்டு தலை குனிஞ்சு உனக்கு மட்டுமே கேட்கிற மாதிரி முனுமுனுத்தா எனக்கென்ன தெரியும்..” என்றவன் அவளருகே வர,

‘விடிய விடிய இப்படியே பேசிட்டே தான் இருக்க போறியா’ என்பது போல பார்த்தாள் அவனை..

“சரி சரி நீ பார்க்கிறது புரியுது.. நான் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டுக்கிறேன்.. சரியா…” எனவும்

“கல்யாணம் முடிஞ்சு அர்த்தமே இல்லாம என்னை உனக்கு பிடிச்சுருக்கான்னு சாந்தி முகூர்த்தத்தில கேட்பானுங்களே கிறுக்குத்தனமா அது போல இவனும் கேட்பானோ.” என்றவளின் கேள்வி அவளது கண்களில் தெரிந்ததுவோ என்னவோ,

“நீ நினைக்கிறது மாதிரி எல்லாம் இல்லை இது வேற…” என்றவனின் குரலே மாறியிருந்தது..

இத்தனை மென்மையாய் இவனுக்கு பேச தெரியுமா என்று அவனை பெற்ற அன்னையிடம் கேட்டால் கூட அவருக்கு தெரியுமோ தெரியாதோ.. நிஜமாகவே சர்வேஷின் குரலும் பார்வையும் முகமும் அத்தனை மென்மையை கலந்து வைத்திருந்தது.. அவனது அந்த மாற்றத்தில் சற்றே ஆச்சர்யமானவள்

“என்.. என்ன ???” என்றாள் வாய் திறந்து..

அவனோ ஆடாது அசையாது.. அவளின் முன்னே வந்து நின்று “ஹ்ம்ம் உன் காதல் கதையை கொஞ்சம் சொல்லு…” என்றானே பார்க்கலாம் அவ்வளோ தான் சௌபர்ணிகாவின் மனதில் பொக்ரான் வெடித்தது.

“என்னது ????!!!!!!!!!! ”

“ஈசி.. ஈசி சௌபர்ணிகா உட்கார். ஏன் இவ்வளோ டென்சன். நான் தப்பா எல்லாம் கேட்கலை. இனிமே நமக்குள்ள சீக்ரெட்ஸ் எதுவும் இல்லை..” என்றவன் அவளது கரங்களை பற்றி வந்து அமரச் செய்ய, அவளோ தயங்கி தயங்கி அவன் முகம் பார்த்து, 

“இல்லை அது.. அது வந்து….” என்று வார்த்தைகளை தேடினாள்.  

“அதான் வந்தாச்சே .. இன்னும் என்ன.. எனக்கும் தெரியும்.. அதை நீ சொல்லி கேட்கனும்னு நினைக்கிறேன். நீ கூட நினைக்கலாம் தெரிஞ்சும் ஏன் என்கிட்டே எதுவும் கேட்கலைன்னு.. அப்போ எனக்கு உரிமை இல்லை. இப்போ புருசன்கிற உரிமை இருக்கே..” என்றான் கூலாய்..

வசமாய் மாட்டிக்கொண்டோம் என்றே தோன்றியது சௌபர்ணிகாவிற்கு.. அனைத்தையும் தெரிந்தே கேட்பவனிடம் என்ன சொல்ல.. ஆனால் இவனுக்கு எப்படித் தெரியும்?? இதற்குமேல் இவனிடம் மறைக்கவும் முடியாது.. இத்தனை வருட விஷயத்தை எப்படி கூறுவது.. சொன்னாலும் நம்புவானோ என்னவோ அவளுள்ளம் துடிதுடிக்க, அவளின் இதயத் துடிப்பு அவளுக்கே கேட்பதுபோல் இருந்தது..

“ஹ்ம்ம் கமான் சொல்லு சௌபர்ணிகா.. நீ உன் லவ்வ பத்தி சொன்னாத்தான் நான் என் லவ்வ பத்தி சொல்ல முடியும்…” என்று எதோ கத்திரிக்காய் விலை இருபது ரூபாய் என்பது போல கூறியவனை மேலும் அதிர்ந்து போய் பார்த்தாள்.

“என்னது லவ்வா……!!!!!!!!!?????????? இவனுக்கா…” என்று அவளது மனம் அடித்து கொண்டது.

நிமிஷத்தில் எத்தனையோ கற்பனை குதிரைகள் ஓடின…. தலையே பாரமாய் இருப்பது போல உணர்ந்தாள் சௌபர்ணிகா.. என்னவோ மிக மிக மிகப் பெரிதாய் ஒரு ஏமாற்றம் அவளுள்ளே பரவுவதை அவளால் உணர முடிந்தது. அப்படியே எழுந்து வெளியே ஓடிவிடாலாமா என்றுகூட தோன்ற, வேறொரு பெண்ணை விரும்பியவன் ஏன் தன்னை இப்படி திருமணம் செய்யவேண்டும் என்று எண்ண, அவளது முகத்தையே பார்த்திருந்தவனுக்கா அவளது எண்ணங்களை அறிய முடியாது..??

மெல்ல நகைத்தபடி அவளிடம் நெருங்கி வந்து அவளது படபடக்கும் இமைகளையும் தாண்டி அவளது நீள் விழிகளை மட்டுமே பார்த்து “நான் ஒரு பொண்ண லவ் பண்ணேன்.. ரொம்ப வருசத்துக்கு முன்னாடி இருந்து…..” என்றான்..

‘பொண்ணை தான் டா லவ் பண்ண முடியும்’

“அவளுக்கு சுத்தமா ப்ரோக்ராம் போடவே வராது……. ”

‘ப்ரோக்ராமா???!!!!!! இவன் சொல்லி குடுத்து கரெக்ட் பண்ணானோ…’

 

“அவளும் என்னை லவ் பண்ணா… பண்றா.. ஆனா சொல்லவே மாட்டேங்கிறா.. ஒருவேளை அவ புருஷன் கேட்டா சொல்வாளோ என்னவோ…” என்றவன் அவளை குறும்பாய் பார்க்க,

‘புருசனா… அப்போ கள்ளக்காதலா… அய்யோ…….’ என்றெண்ணி தன் வாயில் கையை வைத்துப் பார்க்க,

“ஹ்ம்ம் அந்த பொண்ணு பேருக்கூட சௌபர்ணிகா தான்.. சிம்மக்கல்ல நான் வேலை பார்த்த சென்டர்ல படிச்சா…. உனக்கும் அவளை தெரியும்னு நினைக்கிறேன்…” என்றவன் இன்னமும் அவளை ஆழ்ந்துப் பார்க்க,

“என்ன???!!!!!!!!!!!!! சௌபர்ணிகா வா.. அப்போ அது நானா ???!!!!!!!!!” என்று அலறியது யாராய் இருக்கும் அவளின் மனமே தான்..                        

                         

 

Advertisement