Advertisement

சுகம் – 11

சௌபர்ணிகா, சர்வேஷ் இருவருக்குமே வேலையில் கவனம்செலுத்த முடியவில்லை என்று இருவருமே அறிந்திருந்தனர்.. கேட்கவும், பேசவும் ஆயிரம் இருக்க, இப்பொழுது வேலை தானா முக்கியம்?? என்று மனம் கேட்ட கேள்விக்கு அவர்களின் மௌனமே பதிலானது..

இருவரும் ஒருவரை ஒருவர் பார்ப்பதும், பின் தலையை திருப்பிக்கொள்வதுமாய் இருக்க நேரம் தான் சென்றதே ஒழிய உருப்படியாய் ஒன்றும் நடக்கவில்லை..

சர்வேஷின் முகமோ ஆழ்ந்த யோசனையில் இருந்தது. சௌபர்ணிகாவிற்கு என்ன யோசிப்பது என்றுகூட தெரியவில்லை. அமைதியாய் இருந்தாள். மனதினுள்ளே பலநூறு சிந்தனைகள்.. ஆனால் அவற்றை தாண்டி வேறு எதுவும் அவளால் சிந்திக்க இயலவில்லை.. அதிலும் முக்கியமாய் தன் மனதில் இருப்பதை எல்லாம் சர்வேஷிடம் சொல்வதா வேண்டாமா??என்ற கேள்வி தான் மிக மிக பெரிதாய் தெரிந்தது..

சொன்னால் புரிந்துகொள்வானோ இல்லை புரியாமல் அவளை பேசிக் கொல்வானோ என்று பெரும் பயம்.. எழுவதும்.. அமர்வதும்.. என்ன செய்வது என்று தெரியாமல் இருக்க,  அவளது இந்த அலைப்புருதலை கண்டவன் என்ன நினைத்தானோ,             

“சௌபர்ணிகா…!! ” என்றழைத்தான்..

 சர்வேஷ் திடுதிப்பென்று அழைத்ததில் அடித்துப் பிடித்து பார்த்தவள் “சர்” என்றாள் திகைத்துப் பார்த்து.

அவளது திகைப்பில் அவன் பேச வந்தது மறந்து,   “இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்…?? எனக்கு வேலை சரியாய் நடக்கணும் அது தான் முக்கியம். அதை விட்டு இப்படி அமைதியா தேமேன்னு இருந்தா எனக்கு சுத்தமா பிடிக்காது..” என்று சொல்ல,

“ம்ம் சரி..” என்றவள் அடுத்தும் மௌனமாய் இருக்க,

“என்ன சரின்னு மொட்டையா சொல்ற ??” என்றான் பேச்சை வளர்க்கும் பொருட்டு..

‘பின்ன உனக்கு ஜடை பின்னி பூவா வைக்க முடியும்’ என்று மனதில் எண்ணியவள் “இப்போ நான் என்ன சர் செய்ய ??” என்றாள் அப்பாவியாய்..

“ஹ்ம்ம் வீட்டில என்ன சொன்னாங்க ??” என்றவன் அவளது முகத்தையே பார்க்க,

 “எதுவும் சொல்லல..” என்று முகத்தை திருப்பி..

“ஓ!!! உன்கிட்ட எதுவுமே கேட்கலையா ??” என்று அதையே வேறுவிதமாய் கேட்க, இல்லையென்பது போல தலையை ஆட்டினாள்..

“அப்போ !!! உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் அப்படிதான… ” என்று,  அவளையே ஆராய்ச்சி பார்வை பார்த்து கேட்ட சர்வேஷின் முகம் ஏனோ சௌபர்ணிகாவிற்கு சிறிதும் பிடிக்கவில்லை..

‘அப்படியே துரை மட்டும் வீட்டில முடியவே முடியாதுன்னு சண்டை போட்ட மாதிரி தான்.. கேள்வியும் அவனும் …’ என்றெண்ணியவள் அமைதியாய் இருக்க,

“நான் கேட்டதுக்கு பதில் எங்க ??? ”    

‘அதை தான டா நானும் தேடுறேன்….’

“சௌபர்ணிகா… நான் கேட்டிட்டே இருக்கேன் நீ அமைதியா இருந்தா என்ன அர்த்தம்..”

“என்னை எதுவும் கேட்கலை நானும் எதுவும் சொல்லல.. அதுவும் இல்லாம எப்போவுமே எனக்கு அப்பா பேச்சை மீறி எதுவும் பண்ண பிடிக்காது.. அப்படி செய்யவும் மாட்டேன்…” என்றவளுக்கு எங்கிருந்து தான் தைரியம் வந்ததோ.. ஒரு மூச்சாய்  கூறி முடித்துவிட்டாள்..

“ஓ!!!” இதை தவிர அவனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அவனது முகத்திலும் ஒன்றும் தெரியவில்லை.. அவன் ஏதாவது சொல்வான் அவளும் அமைதியாய் தான் காத்திருந்தாள்.

“இங்க பார் சௌபர்ணிகா, உன்னை மாதிரி என்னால லைப்ப இவ்வளோ ஈசியா எடுத்துக்க முடியாது.. நான் அப்படி பட்டவனும் இல்லை. என்னை பொருத்தவரைக்கும் என் வாழ்கையில நடக்கிறது எல்லாம் நான் நினைக்கிறதா தான் இருக்கணும். அப்படிதான் இதுவரைக்கும் நடந்தது.. நேத்து  வரைக்கும். ”

அவன் குரலில் என்ன இருந்ததோ, நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள் சோபி..

“ஐ க்னோ.. நேத்து நடந்தது உனக்குமே அதிர்ச்சியா தான் இருக்கும்.. ஆனா இப்போ நம்ம எடுக்கிற முடிவு தான் இனிமே கடைசிவரைக்கும். என்னோட வாழ்ற வாழ்க்கை அவ்வளோ ஈஸியா இருக்காது. ஏன்னா உன் மனசில ஆயிரம் கற்பனை இருக்கும். சோ நல்லா யோசிச்சு சொல்லு. வீட்டை நினைச்சு பயந்துக்காத. நான் பேசிக்கிறேன்.” என்று கூறிவிட்டு அவளது பதிலுக்காய் அவள் முகம் பார்த்தான்..

‘புடலங்கா.. நேத்தே இவன் ஒன்னும் கிழிக்கல.. இதுல இனிமே பேச போறானாம்.. ஹ்ம்ம் முடியாதுங்கிற பதிலை விவரமா என் வாயில் இருந்து வர வைக்க என்னமா பேசுறான்…’ என்று யோசித்தவள் ஆழ்ந்த மூச்செடுத்து

“இங்க பாருங்க உங்களுக்குவேணா நடந்த எல்லாம் சாதாரணமா தெரியலாம். ஆனா எனக்கு அப்படி இல்லை.. யார் வாழ்க்கைல தான் பிரச்சனை இல்லை.. என்ன நம்ம வாழ்க்கை கொஞ்சம் வித்தியாசமா ஆரம்பிச்சதா நினைச்சுக்கலாம் அவ்வளோதான். ஆனா அதுக்காக எல்லாம் நான் பெரியவங்க மனசை நோகடிக்க விரும்பலை. உங்களுக்கு வேண்டாம்னா தாராளமா வீட்டுல பேசுங்க. நான் தப்பா எல்லாம் நினைக்க மாட்டேன்.”   என்றாள் திடமாய்..

‘என்னடா இது, இவளும் இப்படி பேசுறா.. ஹ்ம்ம் சர்வா உனக்கு வேற வழி இல்லை போலவே..’ என்று யோசித்தவனுக்கு என்ன தோன்றியதோ

“ஹ்ம்ம் அப்புறம் இன்னொன்னு கல்யாணம் ஆனதும், வீட்டில மகாராணி மாதிரி இருக்காம தினமும் எப்பவும் போல வேலைக்கு வரணும்…” என்ன என்றான் கெத்தாக.

அவன் சொன்னதை கேட்டவள்,  அவளும் அதே போல் முகத்தை வைத்து  “கல்யாணம் ஆனதும் பொண்டாட்டிக்கு எல்லாம் என்ன சம்பளம் குடுக்கிறதுன்னு குடுக்காம இருந்திட கூடாது…” என்று கூறவும் அவ்வளவு நேரம் இருந்த இலகு நிலைமாறி இருவருக்குமே இதழில் புன்னகை தோன்றியது..

அதே நேரம் சரியாய் ஷ்ரவன் அங்கே வர, சிரித்துக்கொண்டு இருந்தவர்  இருவரின் முகத்திலும் திகைத்த பாவனை..

“ஹேய் என்ன ரெண்டு பேரும் அப்படி ஒரு லுக் விடுறிங்க?? சரி சரி முதல்ல என்னோட வாழ்த்துக்கள்…” என்று இருவரையும் பொதுவாய் பார்த்து சிரித்தான்..

சௌபர்ணிகாவிற்கு இருப்பதா வேண்டாமா என்று தெரியவில்லை. முன்பெல்லாம் ஷ்ரவன் வந்தால் ஒரு சிரிப்போடு நகன்று விடுவாள் இன்று எப்படி என்று தெரியாமல் சர்வேஷ் முகம் பார்த்தாள்.. அவனும் அதை புரிந்தவன் போல

“தேர்ட் ப்ளோர்ல ஒன்ஸ் ரவுண்ட்ஸ் போயிட்டு வாயேன்.. அங்க ரஷ்ஷா இருக்கு..” எனவும் மீண்டும் ஒரு புன்னகையை ஷ்ரவனை நோக்கி சிந்திவிட்டு சென்றுவிட்டாள்..

“டேய் மச்சி சொல்லவே இல்லை பார்த்தியா. இப்போதான் அம்மா சொன்னாங்க.. ச்சே அந்த கண்கொள்ளா காட்சியை நான் பார்க்க முடியலையே.. ஆனாலும் எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குடா. சோபி உனக்கு நல்ல ஜோடி.. ” என்றான் ஒரு நண்பனாய்..

“ம்ம் நினைச்சேன் எல்லாம் அம்மா வேலையா தான் இருக்கும்னு. இதுக்காக நீ வேலைக்கு போகாம இங்க வந்தியாக்கும். ஏன்டா வேற பொழப்பே இல்லையா???” என்று சலிப்பதுபோல் கேட்டாலும் அவன் முகத்தில் இன்னமும் அந்த புன்னகை அப்படியே இருந்தது.. 

“ஹேய் சர்வா.. என்ன இப்படி சொல்லிட்ட.. நண்பனுக்கு ஒரு நல்லது நடக்கும் போது ஒரு பிரண்டா நான் வந்து சந்தோஷ படாம வேற யாருடா படுவா..??  ரொம்ப பண்ணாதடா வரும் போது பார்த்தேனே ரெண்டு பேரும் பேசி சிரிச்சத..”

“டேய் ஷ்ரவா, சிரிச்சது ஒரு குத்தமாடா.. நேத்து.. நேத்து கழுத்துல மாலை விழுந்ததும் ரெண்டு பேருமே கொஞ்சம் ஸ்டன் ஆகிட்டோம் அந்த கேப்பை யூஸ் பண்ணி கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்து நிறுத்திட்டாங்க.. சௌபர்ணிகா புரிஞ்சுப்பான்னு பார்த்தா அவளும் ஏதேதோ பேசுறா…” என்றவன் அவன் டேபிள் மீதிருந்த பேனாவை இப்படியும் அப்படியுமாய் நகர்த்தி வைக்க,

எதோ எதிலுமே பிடிப்பில்லாமல் பேசும் தன் நண்பனை வியப்பாய் பார்த்தான் ஷ்ரவன். என்றுமே சர்வேஷ் அப்படி பேசியது இல்லை. வாழ்வில் எத்தனையோ ஏற்ற இறக்கங்களை சந்தித்த போதும் சர்வேஷ் உற்சாகமாகவே இருப்பான்.. ஆனால் இன்று??

“சர்வா, உனக்கு பிடிக்கலைன்னா நீ நேராவே வீட்டில பேசிடுடா. சும்மா அது இதுன்னு சொல்லாத. அப்புறம் தேவையில்லாம பின்னால பிரச்சனை பண்ணாத.. கல்யாணம் பண்ணிட்டு வேண்டா வெறுப்பா இருக்கிறதுக்கு இப்போவே தெளிவா ஒரு முடிவு எடு.”

“ஹ்ம்ம் அதுக்கு தான் நான் சௌபர்ணிகாவை கூட்டிட்டு வந்ததே. பார்த்தா என் மொத்த குடும்பமும் எனக்கு முன்ன அவங்க வீட்டுக்கு கிளம்பி நிக்கிது.. எங்கம்மா ஏதேதோ சொல்றாங்க.. தங்கச்சி வாழ்க்கை அது இதுன்னு. இவட்ட பேசினா இவ அதுக்குமேல பேசுறா. கடைசியில் விதி எனக்கு எங்க வந்து போட்டு இருக்கு பாரேன்…” என்று ஒரு மென்னகையோடு புலம்பும் தன் நண்பனை புரியாத பார்வை பார்த்தான் ஷ்ரவன்..

“டேய் இப்போ நீ கல்யாணத்துக்கு சரின்னு சொல்றியா இல்லை வேண்டாம்னு சொல்றியா. எதுவும் இல்லாம குழப்பி வைக்காத.. கடுப்பா இருக்கு.. ”

“அதான் நேத்தே எல்லாம் பேசி முடிவு பண்ணிட்டாங்க தான. எல்லாம் சரி தான். என்ன இதெல்லாம் கொஞ்சம் கூட எதிர் பார்க்காத மாதிரி நடக்குது.. நான் இன்னும் மேரேஜ்க்கு என்னை பிரிபேர் பண்ணலை..”

“வேண்டும்னா கோச்சிங் கிளாஸ் போறியாடா??? ” என்று ஷ்ரவன் நக்கலாய் கேட்கவும் அதற்கு மேல நண்பர்கள் ஒருவரை ஒருவர் கேலியும் கிண்டலுமாய் வாரிக்கொண்டு பேச தொண்டங்கினர்..

அங்கே சோபியோ அவன் சொன்னதுபோல் மூன்றாம் தளத்திற்கு ரவுண்ட்ஸ் சென்றுவந்தவள் இன்னமும் இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருப்பது கண்டு,   ‘பிரண்ட் வரவும் என்னை வேலை குடுத்து அனுப்பிவிட்டான்.. இவன் மட்டுமா பிரண்ட் கிட்ட பேசுவான் நானும் பேசுவேன்’ என்றெண்ணும் பொழுதே, சர்வேஷ் அழைத்தவன் “ஆடிட்டர் கொடுத்த பைல் கொஞ்சம் நேரத்துல எடுத்து வை..” என்று சொல்ல,

“ம்ம் சரி…” என்றவள் “கொஞ்ச நேரத்துலதான.. அப்புறம் எடுத்து வைப்போம்..” என்றெண்ணி   தன் அலைபேசியை எடுத்தவள்

“ஐயோ!! இந்நேரம் அங்க பொழுது விடிஞ்சு இருக்குமா??” என்ற யோசனையை கிடப்பில் போட்டு தன் தோழி லலிதாவை அழைத்தாள்..

“ஹேய் லல்லி… எப்படி டி இருக்க???? ”

…..

“ஹா!! போ டி உனக்கு எல்லாம் கால் பண்ணேன் பாரு என்னை சொல்லணும். இங்க மதிய நேரம். அங்க இப்பதான் விடிஞ்சத்துக்கு நான் பொறுப்பாக முடியாது…”               

….

“உனக்கு என்னமா  படிக்கும் போதே கல்யாணம். படிப்பு முடியவும் லண்டன்னு செட்டில் ஆகிட்ட.. சரி வயித்துல இருக்க குட்டியும், வெளிய இருக்க குட்டியும் எப்படி இருக்காங்க??”

“அதானே பார்த்தேன்.. அண்ணா மட்டும் இல்லைனா நீ எல்லாம்.. சரி சரி விடு விடு.. உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் டி…”

“அது… அது வந்து.. எனக்கு கல்யாணம் முடிவாகிடுச்சு..”

..

“ஹேய் ஹேய்.. ஹோல்ட் ஆன்… ரொம்ப கத்தாத.. நேத்து தான் முடிவாச்சு..” என்று ஆரம்பித்து நடந்த அனைத்தையும் கூறினாள் சோபி..

“எனக்கே இன்னும் ஷாக் தான்டி.. ஆனா என்ன பண்றது?? அப்பா இதுல முடிவா இருக்கார். அவங்க குடும்பமும் நல்லா பழகுறாங்க.. அதான்…”

….

“சரி சரி.. நான் பார்த்துக்கிறேன். ஆனா எதிர்பார்க்காம நடக்குறதுகூட கொஞ்சம் த்ரில்லா தான்டி இருக்கு.. ஹ்ம்ம் வாழ்கையில எப்படி எல்லாம் சுவாரசியமா இருக்கு பாரேன்..”

“ஹ்ம்ம் சரி டி.. குடும்ப இஸ்திரி நீ சொன்னா நான் கேட்காம இருப்பேனா.. நீ ஃப்ரீ ஆனபிறகு கூப்பிடு என்ன டா டா…” என்று கூறி வைத்தவளுக்கு மனம் சற்றே லேசானது போல இருந்தது..

எத்தனை பெரிய பிரச்சனை என்றாலும் யாரிடமாவது பகிர்ந்துகொண்டால் நிம்மதி தான்.. இதேபோல் நிம்மதி ஷர்வேஷோடு வாழ்கையை பகிர்ந்துகொண்டால் கிடைக்குமா என்ற கேள்வி சௌபர்ணிகா மனதில் தோன்றி மறைந்தது..

‘ஹ்ம்ம் என்னவோ ஒரு தைரியத்துல சரின்னு சொல்லிட்டேன்.. ஆனா இவனை சமாளிக்கவே எனக்கு யாராவது கோச்சிங் கொடுக்கணும் போலவே.. ஒருநாளுக்கே எனக்கு அவ்வளோ டென்சன் ஆகுது.. இனி ஒவ்வொரு நாளும் எப்படியிருக்குமோ…’ என்று வாய்விட்டே முனங்கிக் கொண்டே திரும்பியவள் அங்கே சுவரில் சாய்ந்து கைகளை மடக்கி நின்று அவளையே பார்த்தபடி இருந்த சர்வேஷை கண்டு திடுக்கிட்டாள்..

“என்ன.. என்ன சர்.. எதுவும் வேணுமா ???”

“வேலை நேரத்தில் அதை தவிர மத்த எல்லாத்தையும் பாரு..  நான் கேட்டது என்னாச்சு ?? இத்தனை நேரம் போன்ல அரட்டை வேற.. ஹ்ம்ம் கொஞ்சம் கூட நேரத்தை யூஸ் புல்லா செலவழிக்கிறது இல்லை.” என்று ஆரம்பித்தான் அவளுக்கு பாடம் நடத்த..

‘ஹய்யோ…!!! ஆரம்பிச்சுட்டானே.. இவன் மட்டும் இவன் ஷ்ரவன் அண்ணா கூட அரட்டை அடிக்கலாம். நான் பேச கூடாதா??  பாக்குறான் பார்.’

“என்ன அங்க முனுமுனுப்பு ??”

“நத்திங் சர்..”

“இப்படி நத்திங் சொல்லியே வாழ்கையை ஓட்டிரு.. சரி கிளம்பு அம்மா போன் பண்ணாங்க. என்னையும் உன்னையும் உங்க வீட்டுக்கு வர சொன்னாங்க…”

“யப்பாடி தப்பிசோம்..” என்று சந்தோசம் கொண்டு வேகமாய் கணினியை அனைத்துவிட்டு தன் ஹேன்ட் பேக்கை மாட்டி கிளம்பினாள்.

அப்பொழுது தான் அவளுக்கு நியாபகம் வந்தது ஷ்ரவன் வந்தது.. பார்வையால் அவனை தேடினாள்.. கேட்டால் அதற்கும் திட்டுவான் என்ற பயம் தான்.  ஆனால் அவனோ சரியாய் அவளது பார்வையை வைத்தே கண்டுகொண்டு,   

“அவன் அப்போவே கிளம்பிட்டான்.” என,

“ஓ.. சரி சரி…” என்று கிளம்பும் சந்தோஷத்தில் இன்முகமாகவே கிளம்ப,

“வீட்டுக்கு போறதுன்னா மட்டும் என்ன சந்தோசம்…” என்று திட்டிக்கொண்டே அழைத்து சென்றான்.. 

அவனது கடுகடுப்பு கண்டு “ கடவுளே நான் பிரிட்ஜ்குள்ள வாழ்க்கை முழுக்க உட்கார நினைக்கலை ஆனா இப்போ ஓவன் குள்ள ஏன் என்னைய தங்க வைக்கிறீங்க..” என்று சௌபர்ணிகா புலம்பியது கடவுளுக்கு கேட்டதோ தெரியவில்லை..

அங்கே சௌபர்ணிகாவின் வீடு மேலும் சில உறவினர்களால் நிரம்பி இருந்தது..  சர்வேஷ், சௌபர்ணிகாவின் சொந்தங்கள் இருபக்த்திலுமே வீட்டிற்கு ஒருவர் இருவர் என சிலர் வந்திருந்தனர்.. அனைவர்க்கும் பொதுவான ஒரு புன்னகையை சிந்தியபடி இருவரும் உள்ளே நுழைய சௌபர்ணிகா வேகமாய் தன் அன்னையிடம் சென்று விட்டாள்..

“வாங்க மாப்பிள்ளை.. வாழ்த்துக்கள்” என்று யாரோ சர்வேஷிற்கு கை குலுக்க, யாரென்றே தெரியாமல் அவனும் சிரித்து வைத்தான்..

இதை கண்ட கார்த்திக் “மாமா, இவர் எங்க பெரியப்பாவோட மருமகன்.” என்று அறிமுகம் செய்யவும் அவனது மாமா என்ற அழைப்பில் சர்வேஷ் சற்றே திகிலடைந்தான் தான்..

“என்ன மாமா அப்படி பாக்குறிங்க?? இனிமே எல்லாமே இப்படிதான் உங்களுக்குமே போக போக பழகிடும்..” என்றவனை நொந்து போய் பார்த்தான் சர்வேஷ்..

இவனுக்கு இப்படியென்றால் சௌபர்ணிகாவோ ஸ்ரீநிதியிடம் சிக்கிக்கொண்டு தவித்தாள். அனைவரின் முன்னும் அவளால் இயல்பாகவும் பேச முடியவில்லை.. என்னவோ அவளது வீட்டிலே அவளே அந்நியமாய் இருப்பதுபோல் ஒரு உணர்வு.. ஒரு தவிப்பு..

ஸ்ரீநிதியோ “அண்ணி… இங்க பாருங்க அண்ணி.. ” என்று ஆரம்பித்து வார்த்தைக்கு ஒரு அண்ணி போட்டு அவளை பாடாய் படுத்தி விட்டாள்..

சர்வேஷ் மெல்ல தன் தந்தையின் காதை கடித்தான் “அப்பா, என்னப்பா இங்க இத்தனை பேர் இருக்காங்க.. எப்போ வந்தாங்க?? ஏன் வந்திருக்காங்க?? இப்போ எங்களை ஏன் வர சொன்னீங்க ??” என்று கேள்விகளை அடுக்கினான்..

“சர்வாஇதென்ன கேள்வி?? கல்யாணம்னு இருந்தா இது மாதிரி நிறைய இருக்கும். அடிக்கடி சொந்த பந்தம் எல்லாம் சந்திக்க வேண்டி வரும்.. இன்னிக்கு பூ வச்சிட்டு, அடுத்து நிச்சயத்துக்கு, கல்யாணத்துக்கு நாள் குறிக்கலாம்னு இருக்கோம்டா அதான் எல்லாம் வந்திருக்காங்க..” என்று அசால்டாய் கூறியவரை அதிர்ந்து பார்த்தான் சர்வேஷ்..

“அப்பா கல்யாணம் எனக்குதானப்பா.. என்கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்கலை. எதோ பக்கத்துக்கு வீட்டு கல்யாணம் போல கூப்பிட்டு வச்சு சொல்றீங்க ??”

“என்ன சர்வா அப்பாகிட்ட என்ன பேச்சுடா. வா அங்க சோபியோட அத்தை மாமா எல்லாம் உன்னை பார்க்கணும் சொல்றாங்க.. வா வந்து அவங்ககிட்டயும் கொஞ்சம் பேசு.. நாலு பேருட்ட பேசி பழகினா தானடா நல்லாருக்கும்..” என்று மோகனா அழைக்கவும் வேறு வழி இல்லாமல் எழுந்து சென்றான்..

சிறிது நேரத்தில் சௌபர்ணிகா பட்டு சேலையில் சில நகைகள் அணிந்து சற்றே மிதமான ஒரு அலங்காரத்தில் வந்து அமரவும், மோகனாவும் விஸ்வநாதனும்  அவளுக்கு முதலில் ஆசிர்வதித்து சந்தன குங்குமம் வைத்துவிட, பின் மோகனாவும் மற்றும் அவர்கள் வீட்டு உறவில் இருக்கும் பெண்கள் சிலரும் வந்து அவளுக்கு முதலில்  பூ வைக்க, ஸ்ரீநிதி கோந்து போட்டு ஒட்டியதுபோல் அங்கேயே நின்றிருந்தாள்..

அடுத்து சர்வேஷை அழைத்து மோதிரம் போட சொல்ல, இருவருக்குமே திடுக்கிட்டு ஒருவரை ஒருவர் பார்க்க, சுமார் ஒருமணி நேரத்திற்கு முன்பு கூட இதெல்லாம் நடக்கும் என்று இருவரும் நினைக்கவில்லை..  

“அண்ணா மோதிரம் போட்டுவிடுண்ணா…” என்று ஸ்ரீநிதி சௌபர்ணிகாவின் கரங்களை எடுத்து அவன் முன்னே நீட்ட,

“ம்ம் நல்லநேரம் முடியுற முன்ன போடு சர்வா..” என்று மோகனாவும் அவனை இடிக்க, அவர் கொடுத்த மோதிரத்தை வாங்கியவன், பின் மெதுவாய் சௌபர்ணிகாவின் கரம் பற்ற, அவளுக்கு ஒருநொடி சில்லென்று ஆனது தான்..

இதற்குமுன் சர்வேஷ் அவளின் கரங்களைப் பற்றியதே இல்லை என்று சொல்லிட முடியாது.. ஆனால் இன்று.. என்னவோ தெரியவில்லை அவனை அவளால் நேருக்கு நேராய் சந்திக்க முடியாமல் போக, லேசாய் தலையை தாழ்த்திக்கொண்டாள்..

அவனோ மிக மிக நிதானமாக அவள் விரலில் மோதிரம் அணிவிக்க, அடுத்த நொடி சரட்டென்று அவளது கரங்களை அவனில் இருந்து விடுவித்துக்கொள்ள, சர்வேஷ் ஒருமுறை கூர்மையாய் அவள் முகத்தினைப் பார்த்தவன் பின் அவனுமே திரும்பிக்கொண்டான்..   

அதன்பின் அங்கே நிச்சய பத்திரிக்கை வாசிக்கப்பட்டது. சௌபர்ணிகாவும் சர்வேஷும் அருகருகே அமர்ந்திருக்க, அவனுக்கு எல்லாம் தன்னிடம் கேட்காமல் நடக்கிறது என்ற எண்ணம் இருந்தாலும் நடப்பது அனைத்தையும் முழுமனதாய் கவனித்துக்கொண்டு தான் இருந்தான்.. ஏனோதானோ என்றில்லாமல்..

சௌபர்ணிகாவோ தலை சுற்றி கீழே விழாத குறைதான். எல்லாமே எதோ ஜெட் வேகத்தில் நடப்பது போல இருந்தது. தன்னிடம் ஒருவார்தை யாரும் கேட்கவில்லை என்பதனை விட, அனைத்தும் நடக்கும் வேகம் தான் அவளுக்கு ஆச்சர்யமாய் இருந்தது..  

“என்ன நடக்குது இங்க?? வர சொன்னாங்க வந்தோம்.,. எல்லாம் இருந்தாங்க. அம்மா வந்தாங்க சேலை கட்ட சொன்னாங்க.. இப்படி வந்து உட்கார வைச்சிட்டாங்க…..” என்று புலம்பியது அருகே மற்றொரு இருக்கையில் அமர வைக்கப்பட்டு இருந்த சர்வேஷின் காதில் தெளிவாகவே விழுந்தது..

“அடுத்த வாரம் நிச்சயதார்த்தம் அடுத்த இருபது நாள்ல கல்யாணம் சரிதானே சர்வா…” என்று கேட்ட மோகனாவை  முறைக்ககூட முடியாமல் பார்த்தான்.

“என்ன சோபிம்மா உனக்கு சரிதானடா…” என்று வருங்கால மாமியார் கேட்கவும் மௌனமாய் தலையசைத்தாள் அவள்..

அதன் பின் என்ன அடுத்ததடுத்த வேலைகள் எல்லாம் துரிதமாய் நடக்க, வந்திருந்த விருந்தினர்கள் எல்லாம் உண்டு முடித்து ஒருவழியாய் அனைவரும் கிளம்பி செல்லவும், சர்வேஷ் குடும்பமும் தங்கள் இல்லம் வந்து சேர்ந்தது.. 

வீட்டிற்கு வந்தது தான் தாமதம்  “அம்மா.. யாரை கேட்டு இன்னும் இருபது நாள்ல கல்யாணம் வச்சீங்க?? ஏதோ தகவல் சொல்ற மாதிரி சொல்றீங்க??” என்று கத்த ஆரம்பித்தான் சர்வேஷ்…

மோகனாவோ “டேய் ஏன்டா இப்போ கத்துற?? யாரை கேட்டு முடிவு செய்யணும்?? நல்ல நாள் தோதா வந்துச்சு முடிவு பண்ணோம், ஏன் இது தான் பொண்ணுன்னு முடிவு பண்ண பிறகு கல்யாணம் இன்னிக்கு பண்ணாலும் தப்பில்லை. யாருக்கு தெரியும் நாளைக்கே உன் மனசு மாறினாலும் மாறும்….” என்றார் சட்டமாய்..

“அம்மா !! உன்கட்ட பேசி…” என்று சலித்தவன்  “அப்பா நீங்களாவது சொல்லுங்கப்பா இருபது நாள்ல எப்படிப்பா?? மண்டபம் பார்க்கணும், பத்திரிக்கை அடிக்கணும்.. டிரஸ் எடுக்கணும் எத்தனையோ இருக்கே..” என்று சாக்கு தேடினான்..

அதே கேள்வியை தான் அங்கே சோபி புனிதாவிடம் கேட்டுக்கொண்டு இருந்தாள்..

“அம்மா இவ்வளோ அவசரமா ஏன்ம்மா?? எல்லாமே ரெடி பண்ணனுமே…”

“அட சோபி கண்ணு நீ ஏன் இவ்வளோ வருத்தப்படுற?? தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.. சோ நீ எதுக்கும் பயபடாம இரு.. நான் இந்த இருபது நாளும் லீவ் போட்டு உன் கல்யாணத்துக்கு எப்படி வேலை செய்றேன்னு மட்டும் பாரேன்…” என்று கார்த்திக் கூறும் பொழுதே அங்கே பரந்தாமன் வரவும் அமைதியாய் தப்பி சென்றான்..

ஆனாலும் அவனை பெற்றவர் அல்லவா வரும் போதே “கல்யாணத்துக்கு ரெண்டு நாள் லீவ் போட்டா போதும் கார்த்திக்…” என்று கூறிக்கொண்டே தான் வந்தார்..

புனிதாவோ மகள் முகத்தை பார்த்து கணவருக்கு ஜாடை காட்டவும் பரந்தாமனின் பார்வை தன் மகள் பக்கம் திரும்பியது.

“என்ன சோபி ஏன் டல்லா இருக்க?? உன்னை கேட்காம எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டோம்னா??”

“இல்லைப்பா அதெல்லாம் இல்லை..”

“நீ எதுவும் கவலை படாம இரு சோபி. எல்லாம் சரியா தான் நடக்கும். மண்டபம் எல்லாம் பேசியாச்சு, பத்திரிக்கை இப்போ எல்லாம் கம்ப்யூட்டர் பிரிண்ட் தான. அப்புறம் ட்ரெஸ், நல்ல நாள் பார்த்து முகுர்த்த சேலை எடுக்கணும்னு மாப்பிள்ளை வீட்டில சொன்னாங்க. சோ, அதுவும் பிரச்சனை இல்லை. நீ ரெண்டு நாள் கழிச்சு அம்மாக்கூட போய் புது நகை எல்லாம் வாங்கிக்கோ.. உனக்கு பிடிச்சதா வாங்கு..” என,

“ஹ்ம்ம் சரிப்பா..” என்றவளுக்கு அதற்கு மேல் அவளால் என்ன கூற முடியும்.

அனைத்துமே முடிவாகிவிட்டது.. இதற்கு மேல் தான் ஏதாவது கூறினாலும் எதுவும் நடக்க போவது இல்லை என்று தெரிய மௌனமாய் எழுந்து அவளின் அறைக்கு வந்தவள், உடையை மாற்றி குளித்துவிட்டு வந்து படுக்க, அவளது விரலில் புதிதாய் ஏறியிருந்த அந்த ஒற்றை கல் பதித்த மோதிரம் அவளை பார்த்து ஹாய் என்றது..

வெகு நேரம் அதனையே பார்த்தபடி படுத்திருந்தாள்.. அந்த ஒற்றை கல்லின் ஜோலி ஜொலிப்பு அவளது கண்களிலும் தெரிந்ததோ என்னவோ.. ஆனால் அவளாக ஒரு விஷத்தை எண்ணி புன்னகைத்துக்கொள்ள, அந்த சிரிப்போடு சேர்த்து அவள் முகம் பிரகாசமுற்றது..

சர்வேஷிற்கும் அப்படியே அவ்விரவு உறங்கா இரவாகி போனது.. என்ன முயன்றும் தன் எண்ணங்களை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. எத்தனை நேரம் அறையில் நடந்தானோ படுக்கையில் விழுந்த பின்னும் உறக்கம் இல்லை..

அவனது வாழ்வில் அவனுக்கான திட்டமிடல்கள் எத்தனையோ அதுபோலவே அவனுக்கான கனவுகளும் நிறைய இருந்தன.. அதிலும் திருமணம் என்று வருகையில் அவனது கனவுகள் நிறையவே இருந்தது.. என்ன அதற்கான நேரம் அமையவேண்டும் என்று பார்த்துகொண்டு இருந்தான் அவ்வளவே..

ஆனால் இன்றோ எதுவமே அவன் நினைத்தது போல் நடக்கவில்லை.. நேரம் காலம் எல்லாம் அதன் விருப்பப்படி அமைந்துபோனது தான் அவனது இந்த உறக்கமின்மைக்கு காரணம்..

“பொண்ணு தான் என்னை கேட்காம முடிவு பண்ணாங்க.. சரி. ஆனா என் கல்யாணத்துக்கு விட்டா எனக்கே பத்திரிக்கை வைச்சு கூப்பிடுவாங்க போல.. அப்படி என்ன தலைப்போற அவசரம். நான்.. நான் மனசு மாறிடுவேணாம்.. எல்லாம் இந்த அம்மாவோட ஏற்பாடா தான் இருக்கும். அவங்களுக்கு ஒத்து இந்த ஸ்ரீநிதி.. அப்பாவாது கொஞ்சம் என்னை புரிஞ்சா என்ன?? இதுல இந்த அவ,  வாயவே திறக்கிறது இல்லை.. என்கிட்ட மட்டும் எப்படி பேசுறா…” என்று வெகுண்டவனின் நினைவில் சௌபர்ணிகா வந்து தங்கவும் அவன் உறங்கவும் சரியாய் இருந்தது..

அங்கே சௌபர்ணிகாவோ தன் பழைய நினைவுகளில் மூழ்கி இருந்தாள்.. திருமணம், ஒரு ஆணுக்கு எப்படியோ ஆனால் பெண்ணுக்கு அவளது வாழ்வையே மாற்றி அமைக்கும் ஒன்று. அதிலும் இந்தியா போன்று கலாச்சாரத்திலும் அதன் பரம்பர்யத்திலும், சம்பிரதாய பழக்க வழக்கங்களில் ஊறிப்போன நாடுகளில் ஒரு பெண்ணின் வாழ்வே அவளது திருமணத்தை வைத்துத்தான் இருக்கிறது.

அப்படிப்பட்ட ஒரு திருமணம், எதிர்ப்பாரா நேரத்தில், அதுவும் சர்வேஷ் போன்ற ஒருவனோடு முடிவானது என்பது அதிர்ச்சி, ஆச்சரியம், ஆனந்தம் எல்லாம்தான். இருந்தாலும் அவளது காதல் நெஞ்சம் அவ்வபோது கேட்ட கேள்விகளால் திக்கு முக்காடி தான் போனாள் சோபி..

“அதெப்படி மனசுல காதலை வச்சுக்கிட்டு, அதை சொல்லாம திடீர்னு கல்யாணம் பண்ணி இவன் கூட சந்தோசமா வாழ்வ?? ஏதாவது ஒரு நேரத்துல  அவனுக்கு தெரிஞ்சா நீ என்ன செய்வ??” என்று  இப்படி எல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்க தன் மனம் கேட்ட கேள்விக்கு தன்னால் பதில் கூற முடியா நிலையை எண்ணி வெட்கினாள்.

ஆனாலும் நித்திரா தேவி விடுவேனா என்று வந்து அவளை தழுவிக்கொள்ள மறுக்கவில்லை. மறுநாள் விடியலில் இருந்து அடுத்து வந்த இருபது நாட்களும் எப்படி தான் போனதோ என்று கேட்டால் சர்வேஷ் சௌபர்ணிகா இருவரும் தெரியவில்லை என்றே கூறுவர்..

துணிமணிகள் வாங்க, நகைகள் வாங்க, மற்ற கல்யாண பொருட்கள் வாங்க, வாங்கியதை மாற்ற, தையல் காரனை ஒரு வழி படுத்த, கோவிலில் இருக்கும் மிச்ச சொச்சம் நேர்த்திகளை முடிக்க என்று பெண்கள் ஒரு புறம் பிசியாக இருக்க, ஆண்களோ மண்டபம் பார்க்க, பத்திரிக்கை அடிக்க, பந்தல், சமையல், இதற்கு இடையில் பெண்கள் ஏவும் வேலைகளையும் செய்துகொண்டு தங்கள் பொழுதை போக்கினர்.

எந்த வேகத்தில் திருமண தேதி குறிக்கபட்டதோ, அதைவிட வேகத்தில் நிச்சயம் தடபுடலாய் நடந்து முடிந்து இதோ விடிந்தால் மதுரையை தன் ஒற்றை பார்வையால் அரசாலும் அன்னை மீனாட்சி அம்மன் கோவிலில் திருமணம். திருமணம் முடிந்து அன்றைய மாலை பொழுதில் வரவேற்பு நிகழ்ச்சி.

கையில் வைத்திருந்த மருதாணி சிவப்பை ரசித்தபடி தன் வீட்டு மொட்டை மாடியில் நின்று இருந்தாள் சௌபர்ணிகா.. நாளை இந்நேரம் இப்படி நிற்க முடியுமா என்ற கேள்வி வந்து, கண்களை நிரப்பியது அவளுக்கு..

பெண்களுக்கு என்னதான் புகுந்த வீடு உள்ளூரிலோ, இல்லை வெளியூரிலோ இருந்தாலும் பிறந்த வீடென்பது தனி தான்.. அங்கே எத்தனை பிரச்சனை, துக்கம் இருந்தாலும் திருமணம் என்று ஆனா பிறகு அணைத்து பெண்களுக்கும்  பிறந்த வீடு என்பது சொர்கமே…

“ஹேய் சோபி கண்ணு என்ன சோலோ சாங் பாடிட்டு இருக்க?? என்ன மாமாவை நினைச்சு ட்ரீம்ஸா..” என்றபடி வந்தான் கார்த்திக்..

அவனையே அன்பாய் பார்த்தவள் லேசாய் புன்னகை புரிந்தாள்.. என்னவோ இத்தனை நாள் அவனிடம் வம்பிழுத்தது சண்டை போட்டது எல்லாம் மறந்து இப்போது இவன் என் தம்பி என்ற உணர்வு மட்டுமே அவள் மனதில் இருக்க, அமைதியாய் நின்றவளைப் பார்த்து, 

“அட இங்க பாரு இப்படி எல்லாம் பாசமா பார்த்து தொலைக்காத.. பத்து நாள் ஊசிப்போன வடையை பார்த்த மாதிரி இருக்கு. எப்பவும் போலவே இரு.. இல்லாட்டி கொஞ்ச நேரத்துல வீட்டில் எல்லாரும் வாட்டர் பால்ஸ் ஓப்பன் பண்ணிடுவாங்க…” என்று என்னதான் சகஜமாய் பேச தொடங்கினாலும் கார்த்திக்கின் குரலில் தட்டிய பிசிறு அவளுக்குத் தெரியாமல் இல்லை..

வீட்டில் சொந்த பந்தங்கள் குழுமி இருக்க, சிறிது நேரம் தனியே கழிக்க விரும்பி மேலே வந்தவளை துரத்தி வந்தான் தமையன்.. என்ன பேசினார்களோ தெரியாது. ஆனால் பேசினார்கள் புனிதா வந்து அழைக்கும் வரை..

விடிந்தால் திருமணம் என்ற எண்ணமே அவளுக்கு புது உணர்வை கொடுத்தது..                                       

             

 

 

 

   

 

Advertisement