Advertisement

சுகம் – 10

கூண்டில் அகப்பட்ட புலியாய் அடங்காத கோபத்தோடும், நிலைமை கை மீறிவிட்ட கடுப்போடும் தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்துக்கொண்டு இருந்தான் சர்வேஷ். கை முஷ்டிகள் இறுகியிருக்க, கண்களோ மிளகாய் பழத்தை விட சிவந்து போயிருந்தது. தன் வாழ்வில் முதல் முறையாய் தான் நினைக்காத ஒன்று நடந்ததை எண்ணி சர்வேஷால் அதை ஏற்றுகொள்ள முடியவில்லை..

கண்களை மூடியவனுக்கோ அவனும் சௌபர்ணிகாவும் மாலையும் கழுத்துமாய் நின்றதே நினைவு வந்தது.. மனதில் தோன்றிய காட்சியை சகிக்க இயலாதவனாய் சுவரை ஓங்கி குத்தினான்.. தன்னை சுற்றி நடப்பதை எதுவும் தடுக்க முடியாமல் போன தன்னையே எண்ணி அவனுக்கு அத்தனை கோவம்.

மகனது மூடிய அறை கதவையே பார்த்த மோகனா தன் கணவரிடம் “என்னங்க அப்போ உள்ள போனவன் இன்னும் வெளிய வரலை.. பயமா இருக்குங்க.. நல்லதுன்னு நம்ம நினைச்சது அவனுக்கு பிடிக்காம போய் ஒரேடியா அந்த பொண்ணை வெறுத்துட்டா..” என்று கைகளை பிசைந்தார்…

“ம்ம்ச் இங்க பாரு மோகனா, இப்போ நாம் இப்படி யோசிக்கிறதுல அர்த்தமே இல்லை. ஆனா நடந்த எதுக்குமே யாரும் பொறுப்பு இல்லை.. ஆனா இதுதான் நடக்கனும்னு இருந்தா யாரு மாத்த முடியும் சொல்லு.. கொஞ்ச விட்டு தான் பிடிக்கணும். அவன் வந்த உடனே நீயும் ஸ்ரீயும் எதுவும் பேச வேண்டாம்” என்று கூறும் பொழுதே சர்வேஷ் வெளியே வந்தான்..

வீட்டில் அனைவரும் தனக்காய் தான் காத்திருப்பது தெரிந்தும் அவன் கண்டுகொள்ளாமல் வெளியே கிளம்ப, அவனை அழைக்க போன மோகனாவை தடுத்து நிறுத்தினார் விஸ்வநாதன்.

வாசல் வரைக்கும் போனவன் என்ன நினைத்தானோ மீண்டும் வந்து சாய்விருக்கையில் பொத்தென்று அமர்ந்தான் பைக் சாவியை தூக்கி டீப்பாய் மீது எரிந்தபடி.. ஸ்ரீ இதை எல்லாம் வேடிக்கை பார்த்துகொண்டு இருந்தாள்.. என்னவோ அவள் ஆசைப்பட்டது நடந்துவிட்ட சந்தோசம் இருந்தாலும் இப்போது இவன் செய்வதை எல்லாம் பார்த்தால் உள்ளே கொஞ்சம் பயமாகவும் இருந்தது அவளுக்கு..

“சர்வா…” என்று விஸ்வநாதன் அழைக்க,  கண்கள் மட்டும் திறந்து பார்த்தான்..

“இப்போ ஏன் இப்படி இருக்க சர்வா?? நடந்தது எல்லாம் நீயே பார்த்த தான.. அப்புறம் எங்க மேல கோவிச்சு என்ன ஆகும்..??” என்று கேட்டவருக்கு அவன் என்ன பதில் சொல்ல வாய் திறந்தானோ ஆனால் தன்னை கொஞ்சம் அடக்கி. “ஏன்னு தெரியாதாப்பா உங்களுக்கு ????” என்று மட்டும் வெற்று குரலில் கேட்க அவருக்கே ஒருமாதிரி தான் ஆனது..

“இல்ல சர்வா அது வந்து..”

“ப்ளீஸ்ப்பா என்கிட்ட காரணம் சொல்லாதீங்க.. ஒரு வார்த்தை… ஒரு வார்த்தை கூட என்கிட்ட உங்களுக்கு கேட்க தோணலையாப்பா???” என்று கேட்டவனின் முகம் ஆயிரம் உணர்வுகளை பிரதிபலிக்க,

“நீ அப்போ பேசுற நிலையில இல்லை சர்வா.. அதுவும் இல்லாம இது பொண்ணு விஷயம்டா.. நம்மை சுத்தி அத்தனை பேர் இருந்தாங்க.. அதுவும் இல்லாம இதுல தப்பில்லைன்னு எங்களுக்கு தோனுச்சு..” என்றார் அவரும்..

“என்னப்பா இப்படி சொல்றீங்க??? நடந்தது ஒரு சாதாரண விசயம்ப்பா.. அதை சௌபர்ணிகாகிட்ட சொல்லியிருந்தா அழகா புரிஞ்சிருப்பா.. அவளையும் கேட்காம என்னையும் கேட்காம… உங்களுக்கு தப்பில்லைன்னு தோனுச்சு சரி தான்.. ஆனா எனக்குச ரின்னு தோணலையேப்பா ??”

சர்வேஷ் கேட்கும் அனைத்துமே சரிதானே.. சம்பந்தப்பட்ட இருவரிடமும் கேட்டிருக்க வேண்டும் தானே.. ஆனால் இவனை யோசிக்க விடக்கூடாது என்றுதான் பெற்றவர்கள் இப்படி செய்தனர்.. மகன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தன் மனைவியை பார்த்தார் விஸ்வநாதன்..

“ஏன் சர்வா, உனக்கு சோபியை பிடிக்கலையா?? ”

“ம்மா. இது பிடிக்கலை பிடிக்குதுன்னு சொல்ற விசயமே இல்லை.. நான்.. நான் இன்னும் மேரேஜ்க்கான எந்த பிளானுமே பண்ணலை.. அதுக்குள்ள எல்லாம் பேசி…”  என்று அதற்குமேல் வார்த்தைகள் வராமல் திணறினான்..

“டேய் சும்மா அதையும் இதையும் சொல்லாத.. இவ்வளோ பேசுற கழுத்துல மாலை விழுந்தப்ப, ஒண்ணு யாரும் பார்க்கிற முன்னாடி அதை கழட்டி இருக்கணும். இல்லை அங்க எல்லாரும் பேசும்போது வந்து இதோ இப்படி பாயின்ட்டா பேசியிருக்கனும்.. அதை விட்டு சோபி மேல இருந்த பார்வையை கூட விளக்காம நின்னுட்டு வந்திட்டு இப்போ குதிக்கிற.. நீ அப்படி நின்னா நாங்க என்ன நினைக்க முடியும் சரி பையனுக்கு இதில விருப்பம் போலன்னு தானே நினைப்போம்” என்று ஒரே போடு போட்டார் மோகனா..

மனைவி அடித்து பேசியதில் விஸ்வநாதனுக்கே ஆச்சரியம் தான்.. ஸ்ரீக்கோ இதை போல் அம்மா முன்பே பேசியிருந்தால் அண்ணனுக்கு என்றோ திருமணம் முடிந்திருக்கும் என்று தோன்றியது.. மோகனா ஒரு வேகத்தில் பேசிவிட்டாரே தவிர மகன் அடுத்து என்ன சொல்வானோ என்று சிறு நடுக்கம் தோன்றவே செய்தது..

அன்னையின் பேச்சில் முதலில் திகைத்தவன், பின் “என்னம்மா?? கடைசியில் எல்லாமே என்னாலதான்னு சொல்ற போல இருக்கே…” என்றான் பாவமாய்..

மகனது முகத்தை பார்க்க அந்த அன்னைக்கு பாவமாய் தான் இருந்தது, இருந்தாலும் இப்படியே போனால் இவன் வழிக்கு வரமாட்டான் என்று எண்ணி   

“சரி நடந்ததை எல்லாம் விடு, நான் வெளிப்படையாவே சொல்றேன் எங்களுக்கு சௌபர்ணிகாவ மருமகளா கொண்டுவர பிடிச்சிருக்கு. உனக்கு பொண்டாட்டியா யார் வேணா வரலாம் ஆனா இந்த வீட்டுக்கு மருமகளா நாங்க பார்க்கிற பொண்ணு தான் வர முடியும்.. இல்லை அதுக்கும் மேல எனக்கு இது பிடிக்கல அப்படி இப்படினா சொல்லு, என்ன செய்யணுமோ செய்றோம்”

“என்.. என்னம்மா செய்ய போறீங்க???” என்ற சர்வேஷிற்கு மனதின் மூலையில் இன்னும் சிறிது நம்பிக்கை இருந்தது போல…

“என்ன பண்ண முடியும், அன்னிக்கு கூடியிருந்த அதே சொந்த பந்தம் முன்னாடி, எங்க பையனுக்கு இதுல விருப்பம் இல்லை.. நாங்க தான் இப்படி பண்ணிட்டோம்.. மன்னிச்சிடுங்கன்னு சோபி அப்பா அம்மா கால்ல விழ வேண்டியது தான்.. வேற என்ன செய்ய நானும் ஒரு பெண்ணை பெத்து வச்சிருக்கேனே.. அவளுக்கு நாளைக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டாமா..” என்று சரியாய் சென்ட்டிமென்டில் அடித்தார் மோகனா…

“அம்மா !!!!!!!” என்று கத்தியே விட்டான் சர்வேஷ்..

சிறிது நேரம் அங்கே பேச்சே இல்லை.. சர்வேஷிற்கு தன்னை எல்லாரும் சுற்றி வளைப்பது போல இருந்தது… இறுக்கமாய் இருந்தவனை பார்க்க பெற்ற அன்னைக்கு வருத்தமாய் தான் இருந்தது.. அதனால் மெல்ல

 “இங்க பாரு சர்வா, எங்களுக்குமே நடந்தது அதிர்ச்சி தான்.. ஆனா இது பொண்ணு விஷயம். இந்நேரம் இந்த விஷயம் கண்ணு காத்து மூக்கு வைச்சு எவ்வளோ தூரம் போயிருக்கும் தெரியுமா.. எல்லார் வாயிக்கும் இன்னிக்கு டாப்பிக் இது தான். இதுனால நாளைக்கு சோபி வாழ்க்கைக்கும் பின்னால எந்த பிரச்சனையும் இருக்க கூடாதுல. அதான் நிச்சய தாம்பூலம் மாத்தினோம்.. இப்போ யார் மேலயும் யாரும் தப்பு சொல்ல முடியாது.” என,  குழப்பமாய் பார்த்தான் சர்வேஷ்..

“நிஜமாதாண்டா சொல்றேன். நமக்கு வேணும்னா நடந்தது நல்ல சகுனமா இருக்கலாம். ஆனா நிச்சயமா இது அடுத்தவங்களுக்கு வேடிக்கை தான்.. அதுவும் நம்ம சொந்த பந்தம் கேட்கவே வேணாம்.. எப்படினாலும் நீ ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணித்தான் ஆகணும் அது ஏன் சோபியா இருக்க கூடாது.. எங்க எல்லாருக்கும் தெரிஞ்ச பொண்ணு. நம்ம ஸ்ரீ மேல கூட உயிரையே வச்சிருக்கா..” என்று அன்னை போட்ட தாளத்திற்கு ஏற்ப தன் தங்கையை வேறு பார்த்து வைத்தான் சர்வேஷ்..

“ஆமாண்ணா, சோபிக்கா.. இல்லை இல்லை சோபி அண்ணி நம்ம வீட்டுக்கு வந்தா நல்லா இருக்குண்ணா.. ஜாலியா இருக்கும். எங்க எல்லாருக்குமே பிடிச்சிருக்குண்ணா” என்று ஸ்ரீ சொல்லவும் சர்வேஷிற்கு ஒரு நிமிடம் தான் என்ன நினைக்கிறோம் என்பதே தெரியவில்லை..

வேகமாய் தலையை உலுக்கியவன் ‘யப்பா இந்த லேடீஸ் சென்டிமென்ட்ல சிக்கினோம் அவ்வளோ தான். அம்மா இப்பவே என் வாயாலேயே சரின்னு சொல்ல வைச்சிடுவாங்க..’ என்று எண்ணினான்..

“என்ன சர்வா, அம்மா ஸ்ரீ எல்லாம் இவ்வளோ சொல்றாங்களே. இன்னும் இப்படியே இருந்தா என்ன அர்த்தம்??” என்று விஸ்வநாதனும் கேட்க, 

“அப்பா, இவங்க எல்லாம் அவங்க கூட்டணிக்கு ஆள் சேர்க்குறாங்கப்பா.. உங்களுக்கே தெரியாதுப்பா.. அய்யோ, அவ சும்மாவே என்னை பேசியே கொல்லுவாப்பா.. இதுல இங்க வந்துட்டா கேட்கவே வேண்டாம்” என்று புலம்பவே தொடங்கிவிட்டான்..

“சர்வா அதெல்லாம் இல்லடா.. சோபி நல்ல பொண்ணு.. வேலை நேரத்துல  நீ ஏதாவது சொல்லிருப்ப அதான் அவளும் பதிலுக்கு ஏதாவது சொல்லிருப்பா.. இதெல்லாம் பெரிய விசயமா..” என்று மோகனா சொல்ல,

“ம்மா.. உனக்கு தெரியாதும்மா.. அவ எப்படி எப்படி பேசுவா தெரியுமா..” என்றவனுக்கு அவளது மைன்ட் வாய்ஸ்களும், அதை அவள் சில பல நேரங்களில் சொன்னதும் நினைவில் வர, “அச்சோ நோ..” என்று தன் தலையில் தட்டிக்கொள்ள,

“அண்ணா என்னண்ணா நீ இப்படி பண்ற???” என்றாள் ஸ்ரீயும்..

“நான் என்ன பண்ணேன்.. நான்தான் ஒண்ணுமே பண்ணலையே…” என்று சர்வேஷ் கேட்க,

“சர்வா நீ முழுமனசா சரின்னு சொன்னாதான் எல்லாமே நல்லாருக்கும்..” என்று மோகனா சொல்ல,

“இப்போவே எல்லாம் இப்படி என்னை டார்கட் பண்றீங்க.. இதுல அவளும் வந்திட்டா அவ்வளோதான்..” என்று முனங்கியவன் ஒன்றும் சொல்லாது முகத்தை தூக்கி அமர்ந்திருக்க,   

 விஸ்வநாதனுக்கு ஓரளவு மகன் இதை ஏற்றுகொண்டான் என்று அவனது வார்த்தைகளை வைத்தே புரிந்துகொண்டார்.. தன் மனைவி மகளை பார்த்து கண் அசைத்தவர் எழுந்து சென்றுவிட்டார்.. இப்படியாக மோகனா ஸ்ரீயும் கூட அவனுக்கு தனிமை கொடுத்து செல்ல, வாழ்கையில் முதல் முறையாக சர்வேஷ் செய்வது அறியாமல் அமர்ந்திருந்தான்..

 சோபி எங்க புனிதா ???”

“அவ அப்போ இருந்து அவ ரூம்ல தான் இருக்காங்க.. சாப்பிட கூட வெளிய வரல.. அமைதியாவே இருக்காங்க..” என்றார் புனிதா வருத்தமாய்..

“ம்ம்.. நான் கொஞ்சம் யோசிச்சு முடிவு பண்ணனும்னு இருந்தேன்.. நீயும் இவனும் பேசினதுல தான் சம்மதம் சொன்னேன்.. இப்போ சோபிய நினைக்கிறப்போ எனக்கு நம்ம அவசர பட்டோமோன்னு இருக்கு..” என்றார் பரந்தாமனும் வருத்தமாய்..

“என்னங்க அத்தனை பேர் முன்னாடியும் மாலையும் கழுத்துமா நிக்கும் போது நம்ம என்னங்க செய்ய முடியும். அதுவும் இல்லாம அவங்களே விரும்பி கேட்டது மாதிரி தான் இருந்தது.. நல்ல மனுசங்களும் கூட..”

“ஆமாப்பா.. அவங்க வீட்டுல இன்ட்ரெஸ்ட் இருக்க மாதிரி தான் தெரியுது..” என்று கார்த்திக்கும் சொல்ல,

“ஓ!!! அப்படியா பெரியமனுசா.. அவ்வளோ விவரம் வந்திடுச்சா உனக்கு?? இதை எல்லாம் எங்கட்ட விட்டிட்டு நாளைக்கு ஒழுங்கா காலேஜ் கிளம்புற வழிய பாரு.. முடுஞ்சா சோபிக்கிட்ட பேசி பாரு. உள்ளதையும் குழப்பிடாத” என்று பரந்தாமன் மகனை கடிய,

“ம்ம் சரிப்பா” என்று மிக நல்லவன் போல தலையை ஆட்டிவிட்டு தன் தமக்கையை தேடி போனான் கார்த்திக்..

சௌபர்ணிகாவோ ஒரு தலையணையை எடுத்து மடியில் வைத்தபடி மெத்தையில் சாய்ந்து அமர்ந்திருந்தாள்.. அவளது முகத்திலிருந்து எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை கார்த்திக்கால்..

“சோபி…… ” என்றழைக்க பார்வையை மட்டும் அவன்புரம் திருப்பினாள்..

“என்ன இப்படி இருக்க?? உன் முகமே சரியில்லையே சோபி??” என்று விசாரித்தவன் அவளருகே அமர, அதற்கும் அவளிடம் பதில் இல்லை..

“நடந்த இத்தனைக்கும் நீ குப்புற விழுந்து அழுதிட்டு இருக்கணும், இல்லை கோவத்தில எதையா தூக்கி போட்டு உடைச்சிருக்கனும். ஆனா அதுவும் இல்லாம இதுவும் இல்லாம நீ இப்படி இருக்கிறது, எதோ சரியா இல்லையே…” என்று ஆராய்ச்சி பார்வை பார்த்தான்..

அதற்கு ஒரு முறைப்பு மட்டுமே பதிலாய் கிடைத்தது சௌபர்ணிகாவிடம் இருந்து..

“ஹேய் பேசித் தொலை.. சும்மா இப்படி ரியாக்சன் காட்டுறது எல்லாம் என்கிட்டே வேணாம். அப்பா தான் உங்கிட்ட பேச சொன்னார்…” என்றதும்  இத்தனை நேரம் வாய் திறக்காமல் இருந்தவள் வாய் திறந்தாள்.

“ம்ம்ச் இப்போ என்ன செய்ய சொல்ற கார்த்திக்..”

“ஏதும் செய்ய வேண்டாம். ஆனா இவ்வளோ நடந்திருக்கு நீ ஒரு வார்த்தை கூட பேசாம இருந்தா எல்லாம் என்ன நினைக்கிறது.. ஏதாவது பேசு சோபி..”

“ம்ம் இனி என்ன பேச?? அதான் தட்டு மாத்தியாச்சே.. இனி பேச என்ன இருக்கு…” என்றாள் பார்வையை எங்கோ பதித்து..

“ஏன் சோபி, உனக்கு நிஜமாவே இது, இந்த கல்யாணம் பிடிக்கலையா???”

இதை கேட்கும் பொழுது கார்த்திக்கிற்கு வார்த்தை வரவில்லை.. எங்கே அனைவரும் அவசரப்பட்டு முடிவு எடுத்து சௌபர்ணிகாவின் மனதை குழப்பிவிட்டனரோ என்று தோன்றியது. நாம் ஒன்று நினைக்க, சம்பந்தப்பட்ட இருவர் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் அவசரமாய் அனைத்தும் நடந்துவிட்டதோ என்று இருக்கவும் அவனுக்கே கொஞ்சம் சங்கடமாய் தான் போனது..

“ம்ம்ச்.. எனக்கு ஒரு குழப்பமா இருக்கு கார்த்திக்”

“என்ன குழப்பம்????”

“அது…. அது வந்து.. நாளைக்கு இருந்து நான் வேலைக்கு போகனுமா வேணாமான்னு…” என்று அவள் சொல்லி முடிக்கவில்லை. அவள் மீது தலையணை தாக்குதல் நடந்தினான் கார்த்திக்..

“பிசாசே.. பிசாசே… போகுது பார் உனக்கு புத்தி.. என்னவோ ஏதோன்னு வந்து உன்கிட்ட பேசினா, இவளுக்கு வேலைக்கு போகனுமா வேணாமான்னு குழப்பமா ??” என்று சொல்லிக்கொண்டே அவளை மொத்த,

“ஹேய் அடிக்காதடா.. எருமை… ஹேய் கார்த்திக்… அம்மா!!!” என்று அவளும் கத்த,

பிள்ளைகளின் சத்தத்தில் பெற்றவர்கள் அடித்து பிடித்து வந்து பார்த்தனர்.. சோபி தலை எல்லாம் களைந்து மூச்சு வாங்க அமர்ந்திருந்தாள். கார்த்திக்கோ பாவமாய் முகத்தை வைத்து கைகளை தடவியபடி நின்று இருந்தான்.

“உன்னை நான் பேச சொல்லித்தான அனுப்பினேன்.. நீ என்ன பண்ணிருக்க கார்த்திக்” என்று பரந்தாமன் கார்த்திக்கை கடிந்தபடி உள்ளே வர,

“ப்பா.. கைய கடிச்சுட்டாப்பா” என்று சிறுவன் போல கைகளை காட்டினான் கார்த்திக்.

சிவப்பாய் வட்டமாய் பற்களின் தடம் வேறு பதிந்து இருந்தது அவனின் கரங்களில்.. சௌபர்ணிகாவோ இன்னமும் அப்படியே இருக்க, இதற்கு என்ன சொல்வது என்பதுபோல் பரந்தாமன் மனைவியைப் பார்க்க, 

“ஏய் என்ன டி இது?? ஏன் டி கடிச்ச ??” என்று புனிதா மகளை பார்த்து கேட்கவும்

“ம்மா அவன் தான் ம்மா என்னை முதல் அடிச்சான்…” என்று புகார் கடிதம் வாசித்தாள்..

இதை எல்லாம் பார்த்து பரந்தாமனுக்கு டென்சன் ஏறியது தான் மிச்சம்.. நடந்துகொண்டிருக்கும் பிரச்னை என்ன, இவர்கள் அடிக்கும் கூத்து என்ன என்று எண்ணியவர் கார்த்திக்கை முறைத்தார்.

“அப்பா ப்ளீஸ்.. நான் பேசினேன் பா.. அதுக்கு இவ நாளைக்கு வேலைக்கு போகனுமா போக கூடாதுன்னு குழப்பமா இருக்குன்னு சொல்றா..” என்று பரிதாபமாய் முகத்தை வைத்து கார்த்திக் கூறியதை கேட்டு பரந்தாமனுக்கே சிரிப்பு வந்துவிட்டது.

ஆனாலும் சிரிப்பை மறைத்துக்கொண்டு “என்ன சோபி அப்படி சொன்னியா??” என்று வினவினார்.. அவளும் ஆமாம் என்பது தலையை உருட்ட

“அப்போ உனக்கு இந்த கல்யாணத்தில சம்மதமா ??” என்று அடுத்த கேள்விக்கு போனார்..

ஒரு சில நொடிகள் அமைதியாய் இருந்தவள் “நான் என்னிக்குமே உங்க முடிவை மீறினது இல்லைப்பா.. நீங்க பார்த்து எது சொன்னாலும், செஞ்சாலும்  சரிப்பா…” என்று கூறவும் அந்த தந்தையின் முகத்தில் இருந்த பெருமிதத்தை பார்க்கவேண்டுமே..

தன் மனைவியையும் மகனையும் பெருமையாய் பார்த்தவர் சோபியின் தலையை தடவி “உன் மனசுக்கே நீ நல்லா இருப்படா.. கொஞ்ச நேரம் கழிச்சு நான் அவங்க வீட்டில் பேசுறேன்.. நாளைக்கு போகனுமா வேண்டாமான்னு அவங்க என்ன சொல்றாங்களோ அப்படி பண்ணிக்கலாம்…” எனவும் அதற்கும் தலையை மட்டுமே ஆட்டினாள் சௌபர்ணிகா..

“சரி கொஞ்ச நேரம் அவ படுத்து தூங்கட்டும்..” என்று புனிதா கூறவும் அனைவரும் அறையை விட்டு வெளியே வந்தனர்.. கார்த்திக்கிற்கு தான் இன்னும் சோபி மனதில் என்ன இருக்கிறது என்று கண்டுகொள்ள முடியவில்லை.. அவளையே பார்த்தபடி வெளியே சென்றான்..

“முதல்ல ஸ்ரீ கிட்ட பேசணும்.. அங்க என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கணும்” என்று அவளுக்கு அழைத்து இருவரும் நடந்ததை பேச தொடங்கினர்..

இறுக கண்களை மூடி அமர்ந்த சௌபர்ணிகாவிற்கு கண்களில் இருந்து வழியும் நீரை கட்டுப்படுத்த முடியவில்லை.. தான் என்ன உணர்கிறோம் என்று அவளுக்கே தெரியவில்லை.. இத்தனை நாள் அவள் மனதில் நினைத்திருந்த எண்ணங்களும், இரு நடந்த நிஜங்களும் மாறி மாறி போட்டி போட்டுகொண்டு அவளை வாட்டியது.. சர்வேஷின் இறுகிய முகம் வேறு வந்து அவளை பாடாய் படுத்தி எடுத்தது..

“அவன் நினைச்சிருந்தா அங்க எல்லார் முன்னாடியும் பேசி இருக்கலாம். ஆனா பேசலை ஏன்??? ஐயோ தனியா மாட்டுனா என்னை திட்டுவானோ.. திட்டுனா திட்டட்டும்.. நானும் பதிலுக்கு திட்டுவேன்..” என்றெல்லாம் பலவாராய் எண்ணியவளின் மனக்கண் முன் புன்னகையோடு தோன்றியது ஒருவனின் முகம்.. அடுத்த நொடி கை கால் எல்லாம் விதிர்த்து விட்டது சௌபர்ணிகாவிற்கு..

‘ஐயோ!!! இதை எப்படி நான் மறந்தேன்.. போச்சு.. எல்லாம் போச்சு.. கடவுளே.. நீ ஏன் இப்படி என்னை சோதிக்கிற. இதை நான் எப்படி சர்வேஷ் கிட்ட சொல்ல முடியும்.. திமிர் பிடிச்சவன்.. நான் சொல்றதை புரிஞ்சுக்கவே மாட்டானே. கண்டிப்பா என் காதல் யாருக்கும்.. யாருக்குமே தெரிய கூடாது… அதுவும் முக்கியமா சர்வேஷுக்கு தெரியவே கூடாது..’

“இது தான் என் வாழ்கையில் நடக்கணும்னா, நடக்கட்டும்..” என்று நினைக்கும் பொழுதே அவளது மனசாட்சி கேள்வி கேட்டது  

“அடுத்தவங்களுக்கு உன் காதல் தெரியாது சரி.. ஆனா உனக்கு தெரியமே.. காதலை மனசில் வைச்சுக்கிட்டு நீ எப்படி சர்வேஷ் கிட்ட அதை மறைச்சு வாழ முடியும்.??” என்று கேள்வி எழுப்பியது..

இத்தனை நடந்துவிட்டது, திருமண பேச்சும் பேசியாகிவிட்டது.. அதுவும் அத்தனை சொந்த பந்தங்களின் முன்னால்.. அப்பொழுதெல்லாம் விட்டு, இப்பொழுது போய் காதல் கத்திரிக்காய் என்று சொன்னால், இத்தனை நாள் நீ என்ன செய்தாய் என்று கேட்கமாட்டானா??? மனசாட்சிக்கு தக்க பதில் அளித்ததாய் நினைத்தாள் சோபி..

“ஹ்ம்ம் என்னவோ.. இனிமேல் அது உன்பாடு, சர்வேஷ் பாடு.” என்றுவிட்டு மறைந்தது மனசாட்சி..

இப்படியாக தன் யோசனையில் மூழ்கி இருந்தவளை அவளது அலைபேசி தொல்லைபேசியாய் மாறி தொல்லை கொடுத்தது.. வந்த பெயரை பார்த்ததும் திடுக்கிட்டு தான் போனாள்..

எடுக்கலாமா வேண்டாமா என்ற யோசனையில் மனம் இருக்க, விரலோ பச்சை பட்டனை அழுத்தவும்

“இங்கபாரு நாளைக்கு காலை ரெடியா இருக்க.. நான் வந்து கூட்டிட்டு போறேன்”  என்ருவிட்டு அவ்வளோதான் என்பதுபோல் வைத்துவிட்டான் சர்வேஷ்.. இவளது பதிலை எல்லாம் அவன் எதிர் பார்க்கவில்லை..

‘என்ன சொல்றான் ?? எங்க கூட்டிட்டு போக போறான் ?? ஐயோ நான் வீட்டில் வேற சொல்லணுமே.. இவன் பாட்டுக்கு நேரா வந்து ஜங்குன்னு நின்னா…’ என்று யோசித்தவளுக்கு என்ன முயன்றும் மேற்கொண்டு என்ன செய்வது என்று விளங்கவில்லை..

கைகளை பிசைந்தபடி தன்னை நோக்கி வரும் சௌபர்ணிகாவை கேள்வியாய் பார்த்தான் கார்த்திக்..

“அப்பா அம்மா எல்லாம் எங்கடா ??” என்று பவ்வியமாய் கேட்டவளை சற்று கூர்ந்துப் பார்த்தவன்,

“அவங்க எல்லாம் தூங்குறாங்க.. ஏன் சோபி ஏதாவது பிரச்சனையா ???” என்றான்..

“இல்ல கார்த்திக்… சர் போன் பண்ணாரு… ” என்று இழுக்க,

“யாரு ???” என்றான் இவனும் புரியாதது போல்..

“டேய் அதான்.. அவர்.. சர்வேஷ் டா… போன் பண்ணாரு..” என்று பல்லைக் கடிக்க,

“ஓ !! இப்போ இருந்தே ஆரம்பிச்சுட்டீங்களா?? நடந்துங்க நடந்துங்க… ஹ்ம்ம் எல்லாம் நேரம்..” என்று வேண்டுமென்றே கார்த்திக் சீண்ட,

“ஹேய் கார்த்திக் கிண்டல் பண்ணாதடா.. நாளைக்கு ரெடியா இரு வந்து கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு வைச்சிட்டார்டா.. எனக்கு என்ன பண்றதுனே தெரியலை..”  என்று உதட்டை பிதுக்கினாள்..

“அட அந்த அளவுக்கு போயிடுச்சா.. சோபி உண்மையை சொல்லு. அல்ரெடி அந்த பூசாரிக்கு அமௌன்ட் ஏதாவது கொடுத்து கரக்ட் பண்ணி தான் மாலை விழுந்ததா ?? உண்மையை சொல்லு சோபி நீங்க போற வேகத்தை பார்த்தா எனக்கு சந்தேகமா இருக்கு..” என்று நம்பியார் போல் கைகளை தேய்த்து வினவியவனை முதுகில் நான்கு அடி போட்டாள்..

“எருமை.. நானே உன்கிட்ட கேட்கலாம்னு வந்தா நீ ஏன்டா இப்படி பேசுற… ம்ம்ச் இப்போ நாளைக்கு அவர் வந்து நின்னா நான் என்ன செய்யட்டும்..”

“வந்து நின்னா கிளம்பி போ… ”      

“டேய் அப்பா அம்மாகிட்ட சொல்லணுமே ”

“சொல்லிட்டு போ..”

“அதான்டா பயமா இருக்கு.. சர் வேற திட்டுவாரே..”

“ஹேய் ஹேய் நிறுத்து.. என்ன சாரு மோருன்னு சொல்லிட்டு இருக்க.. அதான் கல்யாணம் பிக்ஸ் ஆகிடுச்சுல…” என்று கார்த்திக் எகிற,

“ஹா !!! அப்போ பீருன்னு கூப்பிடவா.. போதையா இருக்கும்.. ஆளை பார் ஐடியா குடுடா…” என்று  நச்சரித்தாள் சௌபர்ணிகா..

சிறிது நேரம் யோசித்த கார்த்திக்கோ “இப்போ எதுவும் சொல்லாத சோபி.. காலையில அவர் வந்து பேசிகட்டும்.. நீ எப்பவும் போல இரு போதும்…” என்றான். அவன் சொல்வதும் சரியாய் பட அமைதியாய் உறங்கச்சென்றாள் சௌபர்ணிகா..

மறுநாள் காலை அனைவருக்குமே ஒருவித எதிர்பார்போடு தான் விடிந்தது.. காலை எழும்போதே சௌபர்ணிகாவின் மனதில் பயம் வந்து ஒட்டிக்கொண்டது.. ஆனாலும் வெளியே காட்டாமல் நடமாடியவள் வாசலை பார்க்க தவறவில்லை.. குளித்து முடித்து அறையில் கிளம்பிக்கொண்டு இருந்தவள் வெளியே பேச்சு குரல் கேட்கவும் எட்டி பார்த்தாள்.. சர்வேஷின் குடும்பமே வந்திருந்தது..

“இவன் மட்டும் தானே வர்றேன்னு சொன்னான்.. குடும்பமே வந்திருக்கு” என்று நினைக்கும் பொழுதே ‘சோபியண்ணி..’ என்று வந்து கட்டிக்கொண்டாள் ஸ்ரீ..

மோகனா விஸ்வநாதன் இருவரும் வாஞ்சையாய் புன்னகைக்க சர்வேஷோ அவளை அவளை அளவெடுப்பது போல பார்த்தபடி இருந்தான்.. “இது தான் நீ கிளம்பி இருக்கும் லட்சணமா ??” என்று அவனது பார்வையே கூறியது..

“அது அவளுக்கு நாங்க சொல்லல நீங்க எல்லாம் வர்றீங்கன்னு..  அதான் திகைச்சு போய் நிக்கிறா.” என்று புனிதா கூறவும்,

சர்வேஷ் “இல்லை.. நேத்து நைட் நான் போன் பண்ணி சொன்னேன்..” என்று சரியாய் மாட்டிவிட்டான்..

‘அடப்பாவி.. கடங்காரா.. என்னை போட்டு குடுக்கவா நீ இவ்வளோ சீக்கிரம் வந்திருக்க.. போட்டு குடுக்குற உன்னை எல்லாம் போண்டா சுட வைக்கணும்’

“சோபி என்ன அங்கேயே நிக்கிற.. வந்து உட்கார்ம்மா…”

தந்தை அழைத்ததால் மறுபேச்சு பேசாமல் வந்து மோகனா அருகில் அமர்ந்தாள்..அடுத்த நொடி ஸ்ரீநிதியும் அவளருகே வந்து அமர்ந்துகொள்ள, இருவரையும் பொதுவாய் பார்த்து சிரித்தவள் தலையை குனிந்துகொண்டாள்.. எங்கிருந்துதான் இந்த அடக்கம் ஒடுக்கம் எல்லாம் வந்ததோ தெரியவில்லை.

அவளை ஒருபார்வை பார்த்தவன் பின்  ஆரம்பித்தான் “அங்கிள் ஆன்ட்டி, நீங்க தப்பா நினைக்க மாட்டிங்கன்னு தெரியும். அதுனால சௌபர்ணிகாவ தீபாவளி வரைக்கும் அங்க அனுப்புங்க.. வேலை நிறைய இருக்கு. இப்போ போய் புதுசா யாரையும் போட முடியாது. சௌபர்ணிகா இருந்தா எனக்கும் கொஞ்சம் நம்பிகையா இருக்கும் ”  என்று சர்வேஷ் சொல்ல, 

சௌபர்ணிகாவோ ‘ஹா ஹா !! நீ என்ன சோப்பு போட்டாலும் கண்டிப்பா என் அப்பா இதுக்கு ஒத்துக்க மாட்டார்…’ என்று நினைக்கும் வேளையில் பரந்தாமன் ,

“அதுகென்ன.. தாராளமா வரட்டும்.. நேத்துக்கூட வேலைக்கு போகனுமா வேண்டாமான்னு குழம்பிட்டு இருந்தா..” என்று தன் சம்மதத்தை கூற இவளுக்கு ஐயோ என்று ஆனது.. சர்வேஷோ வெற்றி பார்வை பார்த்தான்..   

மேற்கொண்டு பெரியவர்கள் பேச, கார்த்திக் ஸ்ரீ இருவரும் அரட்டையில் இருக்க இவளுக்கு தான் என்ன செய்வதென்று தெரியவில்லை.. “என்ன பார்க்கிற.. போ பேக் எடுத்துட்டு வா கிளம்பலாம்..” என்று சர்வேஷ் அதட்டலாய் பார்க்கவும் வேறு வழியில்லாமல் அனைவரிடமும் கூறிவிட்டு கிளம்பி சென்றாள்..

காரில் தான் அழைத்து சென்றான்.. நேற்றும் இப்படிதான் விருந்துக்கு அழைத்து சென்றான். அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகள் எல்லாம் நினைவு வரவும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்..  

           

 

                  

                             

                    

 

Advertisement