Advertisement

             உன் நினைவிலே ஒரு சுகம்……

சுகம் – 1

நிழலுமில்லை நிஜமுமில்லை..

நினைவு மட்டுமே என்னிடம்..

ஒருமுறை உனை கண்டால் போதும்

பேதை நெஞ்சம் சுகம்பெறும்….

பொழுது சாய்ந்து பலமணி நேரம் கடந்திருக்க, இரவுக்கும் மாலை நேரத்திற்குமான வேளையில் பொழுது நகர்ந்துகொண்டிருந்தது.. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், வெவேறு ஊர்களுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லவென்று பேருந்துகள் எல்லாம் தயாராய் நிற்க, அதில் பயணிக்கவென்று காத்திருந்த பயணிகள் கூட்டம் அதிகமாய் இருந்தது..

அந்த கூட்டத்தை கடந்து, வேக வேகமாய் நடையை எட்டிப்போட்டு,  கூட்டத்தில் தன் பைகளை தவறவிடாமல் இறுக பிடித்தபடி, அவளுக்கான பேருந்தை கண்டறிந்து, ஒருவழியாய்  மதுரை செல்லும் பேருந்தில் ஏறி, தனக்கான பர்த்தில் அமர்ந்த பின்னரே சௌபர்ணிகாவிற்கு நிம்மதியாய் இருந்தது..

அவள் பக்கத்து ஜன்னலை திறந்தவள், சாய்ந்து அமர்ந்து,  “ஷ்!! புக் பண்ணிட்டு வந்தா கூட என்ன கூட்டம்.. நல்லவேளை அம்மா சொன்னதுமே டிக்கெட் புக் பண்ணது..”  என்று தனக்குள் கூறிக்கொண்டே வெளியில் எட்டி பார்த்தாள்..

கண்ணுக்கு எட்டியவரை பேருந்துகளும், பேருந்துகள் எழுப்பும் சத்தங்களும்,  அதனையொட்டி நிற்கும் ஆட்களும், சிறு சிறு வியாபார தள்ளுவண்டிகளும், கடைகளில் எரியும் சோடியம் விளக்குகளும், அங்கே இங்கே என்று நடக்கும் மனிதர்களும் என்று காட்சி விரிந்துகொண்டே போனது.. பார்க்கும் அத்தனை ஆட்களும் பரபரப்பாய் இருந்தனர்..

ஊருக்கு செல்லும் போதெல்லாம் இதை தான் பார்க்கிறாள்.. அவ்வளவு ஏன் சென்னையில் தங்கி இருக்கும் விடுதிக்கும், வேலை பார்க்கும் அலுவலகத்திற்கும் தினமும்  சென்றுவரும் போதெல்லாம் இதே காட்சி தான்.  அப்போதெல்லாம் சௌபர்ணிகாவிற்கு தோன்றும் அப்படி என்ன தான் அனைவருக்கும் வேலை இருக்கும், நேரம் காலம் கூட இல்லாமல் எப்போதும் ஓடிக்கொண்டே என்று….

அதுவும் இப்பொழுது எல்லாம் சூரியன் உதிப்பதும் மறைவதும் எதோ சூரியனின் வேலை மட்டும் என்பது போல ஆகிவிட்டது.. கதிரவன் உதிப்பதாலும் மறைவதாலும் மக்களின் வேலைகள் குறைவதுமில்லை, மறைவதுமில்லை.   

ஏன் இத்தனை அவசரம்?? ஏன் இத்தனை ஓட்டம்?? எதை பிடிக்க?? இல்லை யாரை முந்த?? ஆகமொத்தம் வாழ்வே ஒரு பந்தய ஓட்டம் போல் ஆகிவிட்டது அல்லவா.. இந்த கேள்விகள் எப்பொழுதும் அவள் மனதில் தோன்றும். அவளை பொருத்தவரைக்கும் நமக்கான வாழ்வை நமக்காக வாழவேண்டும். போலியாய் எதிலும் சிக்கி அவஸ்தை படக்கூடாது.. இப்போதும் அதுமாதிரியான எண்ணங்களே..

“சோபி மா டிக்கெட்..” என்ற குரல் அவளது எண்ணங்களை தடை செய்தது..

நிமிர்ந்து பார்த்தாள் அந்த பேருந்தில் எப்பொழுதும் இருக்கும் மூர்த்தி தான்.. இவளின் அப்பாவின் நண்பருக்கு தெரிந்தவர்.. ஆகையால் சௌபர்ணிகா சென்னையில் வேலைக்கு சேர்ந்ததில் இருந்து இந்த பேருந்தில் தான் ஊருக்கு செல்வது, வருவது எல்லாம்.. சோபி… சௌபர்ணிகாவை அவளது வீட்டில், நண்பர்கள், தெரிந்தவர்கள் எல்லாம் இப்படிதான் அழைப்பர்.            

அமைதியாய் மெல்ல சிரித்தபடி அவளின் டிக்கட் பதிவிற்கான குறுஞ்செய்தியை  அவரிடம் காட்ட, அதனை ஒருப்பார்வை பார்த்தவர், “தண்ணி பாட்டில் எல்லாம் வாங்கிட்டியா சோபி??” என்று கரிசனையாய் விசாரித்தார்..

“வரும் போதே வாங்கிட்டேன்ணா..” என்று கூறி தன் பேச்சை முடித்துகொண்டாள்.. அவரும் நகர்ந்து சென்றுவிட்டார்..

புனிதா – பரந்தாமன் அவர்களின் முதல் மகவு சௌபர்ணிகா இளையவன் கார்த்திக்.. பரந்தாமனுக்கு தனியார் நிறுவனத்தில் வேலை. புனிதா இல்லத்தரசி. அழகான அன்பான அளவான குடும்பம்.. எப்பொழுதுமே சௌபர்ணிகா இப்படிதான் தெரிந்தவர்கள் என்றாலும் கூட தேவைக்கு அதிகமாய் ஒருவார்த்தை பேசமாட்டாள்.

அதற்காக அமைதியான சுபாவம் எல்லாம் இல்லை.. சில பல நேரங்களில் அவளுக்கு அவளே தோழி.. அவளிடமே அவள் நிறைய பேசிக்கொள்வாள். பர்த்தில் இருக்கும் திரையை இழுத்து மூடிவிட்டு, தலையை சாய்த்தவள், அவளின் அம்மாவிற்கு அழைத்தாள்..

“ஹலோ மா.. ஹா!! பஸ் ஏறிட்டேன்..”

“வரும்போதே சாப்பிட்டுத் தான் ம்மா வந்தேன்….”

….

“ம்ம் சரிம்மா.. அங்க வந்ததும் நானே ஆட்டோல வந்திடுறேன்.. அப்பாவை அனுப்பவேணாம்.. அவர் வந்து தென் ஆபிஸ் கிளம்பணும் லேட் ஆகிடும்..” 

….

“ஐயோ அம்மா… கார்த்திக்கா.. அவன் மட்டும் வேணாம்.. வீட்டுக்கு வந்து கால் வைக்கிறதுக்குள்ள ஏன்டா வந்தேன்னு நினைக்க வச்சிடுவான்…”

“ம்ம் சரிம்மா.. இறங்கிட்டு கூப்பிடுறேன்..”  என்று வைத்தவள் ஜன்னலில் மீண்டும் பார்வையை பதித்தாள்..

பார்த்தவள் ஒரு நொடி திடுக்கிட்டு கண்களை கூர்மையாக்கி பார்த்தாள்.. அவனா?? அதே போல் சின்ன சின்னதாய் கட்டம் போட்ட சட்டை… அவன் அணிவது போலவே கைகளை மடக்கி..  கண்களை கசக்கி பார்த்தாள்.. தூரத்தில் போவது யாரது??

இல்லை இல்லை அவனில்லை. இது வேறு யாரோ.. அவனது நடையில் ஒரு நிமிர்வு இருக்கும்.. முகத்தில் சாந்தம் இருந்தாலும் அதையும் தாண்டி ஒரு கம்பீரமும் ஒரு ஆளுமையும் இருக்கும். தன்னை அறியாமல் நினைவுகள் அவனிடம் செல்வதை தடுக்க முடியாமல் திணறினாள் சௌபர்ணிகா..

இத்தனை ஆண்டுகளில் எத்தனை முயன்றும் அவனது நினைவுகள் மட்டும் இவள் மனதில் படையெடுத்த வண்ணம் தான் இருந்தன. இதற்கும் அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசியது இல்லை..

பொடி பொடியாய் கட்டம் போட்ட முழுக்கை சட்டை அப்படி இல்லை என்றால் மெல்லிய கோடுகள் போட்ட சட்டை.. முழுக்கை சட்டை தான் ஆனால் அதை கை முட்டி வரை மடக்கி விட்டிருப்பான்.. அதுகூட அவனுக்கு ஒரு தனி அழகைத் தரும்.

சௌபர்ணிகா கல்லூரி படிக்கும்பொழுது மாலைவேளைகளில் சிம்மக்கல்லில் இருக்கும் ஒரு கம்பியூட்டர் செண்ட்டருக்குப் படிக்கச் செல்வாள்..  அங்கேதான் அவனும் பகுதி நேர வேலை பார்த்தான்.. அப்பொழுது அவனுக்கு என்ன ஒரு இருபத்தி மூன்று வயது இருக்கும்.. ME படிப்பதாய் அங்கே யாரோ கூறினார்கள்.. 

சரியான ‘ஹெட் வெய்ட்..’ என்று மற்ற பெண்கள் கூறுவதை கேட்டு விளையாட்டாய் அவனை கவனிக்கத் தொடங்கினாள்.. நாட்கள் ஆக ஆக அவனது நடை உடை பாவனை எல்லாம் அவளிடம் பெருமதிப்பை தந்தன.

மாணவர்களிடம் நன்றாய் பேசுவான். தோளில் கை போட்டு பேசும் அளவு சிரிக்க சிரிக்க பேசுவான்.  ஆனால் தப்பித் தவறி கூட மாணவிகளிடம் பார்வை பதியாது..  அவனது பெயர், படிப்புத் தவிர அவளுக்கு வேறு ஒன்றும் தெரியாது..

சந்தேகம் கேட்டால் நன்றாய் சொல்லித்தருவான். இதுதான் சாக்கென்று அவனிடம் பேச விழைந்தால் பட்டு கத்தரித்தார் போல் கத்தரித்துவிடுவான்.. இவளுக்கு ஏனோ அவன் வகுப்பெடுக்கையில் படிக்க வேண்டும் என்று ஆசை.. ஆனால் இவர்கள் குழுவுக்கு வேறு ஒரு பயிற்றுனர்..

ஒருநாள் அப்படித்தான் இவர்கள் குழு பயிற்றுனர் வர நேரம் ஆனது. சற்றுத்  தள்ளி ஒரு கம்பியூட்டரின் முன் நான்கைந்து மாணவர்களை வைத்து  அவன் வகுப்பு எடுத்துக்கொண்டு இருந்தான்.. இங்கோ சௌபர்ணிகாவின் தோழிகள் எல்லாம் சிரித்து பேசி கும்மாளம் போட்டுகொண்டு இருந்தனர்.. இரண்டு முறை அமைதியாய் திரும்பி பார்த்தான்.

இவர்கள் அடங்குவது போலத் தெரியவில்லை என்றதும், எழுந்து வேகமாய் வந்தவன் “அடுத்தவங்களுக்கு டிஸ்டர்ப் இல்லாம பேசிச் சிரிங்க..” என்று கூறிவிட்டு சென்றுவிட்டான்..

மெதுவாய் தான் கூறினான் ஆனால் அத்தனை அழுத்தம் இருந்தது.. அதன் பிறகு அங்கே அத்துனை அமைதி.. ஊசி விழுந்தால் கேட்குமளவு.

அங்கு படிக்கும் மாணவர்கள் எல்லாம் அவனை அண்ணா என்று தான் அழைப்பர்.. அவ்வளவு நெருக்கம். அவனுமே கூட அப்படித்தான் சகஜமாய் இருப்பான்.. ஆனால் பெண்கள் பக்கம் எட்டிக்கூட பார்க்கமாட்டான்.. பாவற்காய் கசப்பை விட எட்டிக்காய் கசப்பு போல பெண்கள் மேல் அவனுக்கு..

அதெல்லாம் இப்போது நினைவில் வர,  “அப்போ எல்லாம் அவன் நம்மை பார்த்த மாதிரி இருந்துச்சே.. ஆனா இப்போ நினைச்சா பத்தோட பதினொன்னு ம்ம்ஹும் அப்படி கூட என்னை பார்த்தது இல்லைன்னு தோணுது… சரியான அழுத்தம்..” என்று எண்ணி இப்பொழுதும் சோபி தலையில் குட்டிக்கொண்டாள்..

எத்தனை அலுப்பாய் இருந்தாலும் அவனது நினைவுகளில் மூழ்கிவிட்டால்  அவளுக்கு மனதில் ஒரு நிம்மதி பரவுவதை உணரத்தான் செய்தாள்… சில நேரங்களில் விருப்பப்பட்டே அவனது நினைவுகளில் மூழ்கினாள்..

என்னமாதிரி எண்ணம் இது?? சலனமா?? இல்லை அதற்கும் மேல் காதல் என்று ஏதாவது??? அவளால் தன் மனம் கேட்கும் கேள்விக்கு பதில் கூற முடியாது.. யோசித்து யோசித்து சில நேரம் பலனில்லாமல் போக, இந்த யோசனையை மட்டும் விட்டுவிட்டாள்.. 

“அப்போவே பார்ட் டைம் வேலை பார்த்தான்.. அப்படி என்ன கஷ்டம்?? ஆனா அவனை பார்த்தா அப்படி ஒன்னும் கஷ்டபடுற குடும்பம் போலவும் இல்லை.. சிம்பிளா ட்ரெஸ் பண்ணுவான்.. ஆனா அதுலகூட அவன் ஸ்மார்ட்தான்..” எத்தனை முறை தன் மனதில் சோபி இதை கூறியிருப்பாள்..

ஆனால் ஒவ்வொரு முறை கூறும் பொழுதும் புதிதாய் கூறுவது போல ஒரு சிரிப்பு, படபடப்பு..                                  

“அவனுக்கு சொந்தமா பிஸ்னஸ் செய்ய ஆசைன்னு அங்க படிக்கிற பசங்க பேசிட்டு இருந்ததா லலிதா சொன்னாளே.. ஹ்ம்ம்.. இப்போ எங்கிருப்பான் ?? ஒருவேளை மதுரைல?? இல்லை இல்லை நிச்சயமா இல்லை.. எத்தனை டைம்ஸ் அவனை நான் தேடியிருப்பேன்.. ஒருதரம் கூட பார்க்க முடியலை..” என்று பெருமூச்சு விட்டாள்..

‘ஓ !! பார்த்தா மட்டும் என்ன செய்வ சோபி… போய் அவன்கிட்ட பேசுவியா?? அவனுக்கு உன்னை அடையாளம் தெரியுமா?? அப்படியே தெரிஞ்சாலும் அவன்கிட்ட நீ என்ன பேசபோற??’ என்று அவளது மனமே அவளுக்கு கேள்வி எழுப்பியது..

“அதானே நான் என்ன பேசமுடியும்.. அப்போவே அப்படி இருந்தான்.. இப்போ நிச்சயம் ஒரு நல்ல பொசிஷன்ல தான் இருப்பான்.. கேட்கவே வேணாம்.. சாருக்கு அப்போவே ஏத்தம் நிறைய எறிருக்கும்.. இப்போ அவன் உயரத்துக்கும் மேல ஏறிப்போய் எங்கயாவது உட்கார்ந்திருப்பான்.. ஹ்ம்ம் நான் தான் லூசாட்டாம் இப்படி இருக்கேன்.. இதெல்லாம் எனக்கு தேவையா?? சோபி இனிமே இதைப்பத்தி நினைக்கவே கூடாது” என்று வழக்கம் போல முடிவெடுத்தவள் இறுக கண்களை மூடிக்கொண்டாள்..

                  @@@@@@@@@@@@@@@@@@@@@

 “ஹாய்!!! ஷ்ரவன்… ஐம் பைன்.. வாட் அபௌட் யு மென்??”

….

“ஓகே ஓகே.. ஐம் கம்மிங்…” என்று கூறியவன் வேகமாய் லிப்டின் பொத்தானை தரைத்தளத்திற்கு அழுத்தினான் சர்வேஷ் விஸ்வநாதன்.

சர்வேஷ் விஸ்வநாதன், விஸ்வநாதன் – மோகனா தம்பதியரின் அருந்தவ புதல்வன். இருபத்தி எட்டை தொட்டவன்.. அவனுக்கு ஒரு தங்கையும் உண்டு ஸ்ரீநிதி.. கல்லூரி மங்கை.. விஸ்வநாதன் அரசு அலுவலர்.. மகனின் வற்புறுத்தலால் வேலையை விட்டுவிட்டார்.. சர்வேஷை பொறுத்த வரையில் வாழ்க்கையில் திட்டமிடல் மிக மிக அவசியம்..

எத்தனை வசதியாய் இருந்தாலும், ஆடம்பரம் கூடாது என்று நினைப்பவன்.. அனைவரிடமும் நன்றாய் தான் பேசுவான் பழகுவான், நண்பர்களுக்கு ஒன்று என்றால் ஓடுவான் எல்லாம் செய்வான் ஆனாலும் அவனிடம் வயதுக்கு மீறிய ஒரு இறுக்கம் இருப்பது போல அவனிடம் நெருங்கி பழகுபவர்களுக்கு தோன்றும்..

என்னதான் அளவான, அன்பான  குடும்பம், என்று அமைதியான வாழ்க்கை வாழ்ந்தாலுமே, இன்னும் இன்னும் என்று வாழ்கையில் தேடலை கொண்டவன்.. அவனை பொறுத்த மட்டில் முன்னேறி செல்வதற்கு  எல்லைகள் இல்லை. ஆனால் எதையும் நேர் வழியில் செய்ய வேண்டும்.. காலம் தாழ்த்தினாலும் சரி, நடப்பது அவன் நினைத்ததாய் இருத்தல் வேண்டும்..

சர்வேஷை பார்த்தால் அத்தனை பெரிய ஷாப்பிங் மாலுக்கு சொந்தக்காரன் என்று யாறும் கூறமாட்டார்கள்.. இத்தனை சின்ன வயதில் இவ்வளோ பெரிய வெற்றியா அதுவும் எந்தவித பின்புலமும் இல்லாமல்… நிச்சயம் இதில் அவனுக்கு யோகம் தான் என்று சிலர் கூறுவார்..

இல்லை இல்லை இது அவனது திட்டமிடலாலும், கடின உழைப்பாலும் வந்தது என்று அவனை அறிந்தவர் கூறுவார்..

லிப்ட் தரைத்தளத்திற்கு வரவும் தன் முழுக்கை சட்டையில் பொத்தானை சரி செய்தபடி வந்தவனை எதிரே வந்த இருவர் வணக்கம் வைத்து நகர்ந்தனர்.. அவன் உதட்டில் இருக்கும் புன்னகை கண்களில் தெரிகிறதா என்று பார்ப்பதற்குள்,

“ஹேய்!! ஷ்ரவன்.. என்ன மென் திடீர்னு வந்திருக்க?? எனிதிங் ஸ்பெஷல்??” என்று புருவம் உயர்த்தினான்..

வந்தவனோ ஒருமுறை அவனை மேலும் கீழும் பார்த்து “டேய் மச்சி.. ஆளே அடையாளம் தெரியலடா.. லிப்ட்ல இருந்து நீ வந்தியா நான்கூட வேற யாரோன்னு நினைச்சேன்.. கிட்ட வந்து நீ என் நேம் சொல்லவும் தான் உன்னை தெரியுது இந்த ஒன் இயர்ல நிறைய மாறிட்ட டா..” என்றான்..

“மாற்றம் ஒன்றே மாறாததுடா…” என்றபடி மிடுக்காய் மொழிந்து நடந்தவனை  வியப்பாய் பார்த்தான் ஷ்ரவன்.

அவனது அறைக்கு அழைத்து செல்லும் போதே அங்கே வேலைக்கு இருந்தவரிடம் கண் காட்டி விட்டு செல்ல, இருவரும் உள்ளே சென்று அமரவும் அடுத்த நொடி ஷ்ராவனுக்கு குடிக்க ஜில்லென்று ஆரஞ்சு பழச்சாறு வந்தது. ஜூசையும் சர்வேஷையும் ஷ்ரவன் மாறி மாறி பார்க்க,

“என்னடா பாக்குற குடி.. பிரஸ் ஜூஸ்தான் உடம்புக்கு நல்லது..” என்றான் சர்வேஷ்..

“ஹ்ம்ம் நீ இன்னும் மாறவே இல்லைடா.. படிக்கும் போது எப்படி இருந்தியோ அப்படியே தான் இருக்க…” என்று நிஜமாகவே உணர்ந்து கூறினான் ஷ்ரவன்..

சர்வேஷுக்கு மற்றது எப்படியோ ஆரோக்கிய விசயத்தில் கவனமாய் இருப்பான்.. அதையே தான் நண்பர்களுக்கும் கூறுவான்.. வாய்க்கு ருசி என்று கண்டதை வாங்கி உண்டு பின் உடலுக்கு கேடு இழுத்து அதற்கு மருந்து மாத்திரை வைத்தியம் என்று ஏன் அலைவது என்ற எண்ணம்..

இதெல்லாம் “பார்கத்தானே போறோம், கையில நாலு காசு வரவும் இவன் எப்படி ஆகப்போறான்னு..” என்று கூறியவர்களும் உண்டு..

ஆனால் எது எப்படி இருந்தாலும் நான் இப்படிதான் இருப்பேன் என்று இன்றுவரை தான் கொண்ட எண்ணங்களில் மாறாமல் இருக்கிறான் சர்வேஷ். அதுதான் அவனது முன்னேற்றத்திற்கும் காரணமோ என்னவோ.. 

“அட என்னடா ஷ்ரவன், இப்படி மாத்தி மாத்தி பேசுற?? வெளியதான் சொன்ன மாறிட்டடான்னு.. இப்போ மாறவே இல்லைன்னு சொல்ற??” என்று நண்பனை சீண்டினான்..

“அதான் எனக்கும் புரியலை.. ஒருநேரம் நீ அப்படியே முன்னமாதிரி இருக்க மாதிரி இருக்கு.. சில நேரம் நீ சர்வேஷ் தானான்னு நினைக்கிற அளவுக்கு இருக்கு.. ஏன் டா இப்படி?? ஒன்னு அந்நியனா இரு இல்லை ரெமோவா இரு ஏன் இப்படி அதுவும் இல்லாம இதுவும் இல்லாம எதுவோ மாதிரி இருக்க..” என்று குழப்பமாய் முகத்தை வைத்துக்கொண்டு கூறும் ஷ்ரவனைப் பார்த்து சர்வேஷ் அடக்கமாட்டாமல் சிரிக்க,

“என்னடா நான் பேசிட்டு இருக்கேன் நீ சிரிக்கிற??” என்றான் மற்றவன்..

“ஹ்ம்ம் அது ஒண்ணுமில்ல ஷ்ரவன். என்னோட ஆசை.. ஏன் லட்சியம்னு கூட சொல்லலாம்.. அது இப்போ நிறைவேறியிருக்கு.. கஷ்டப்பட்டு நிறைவேத்திக்கிட்டேன்.. ஆனா பார்க்கிறவங்க ஒண்ணு லக்குன்னு சொல்வாங்க.. இல்லை இதெப்படி சாத்தியம்னு நினைப்பாங்க.. தொழில்ல கால் வச்சாச்சு சோ நமக்கு இனிமே எதிர்கள் கூட வரலாம். அதுனால எப்பவுமே இவன் இப்படித்தான்னு யாரும் என்னை ஜட்ஜ் பண்றது எனக்குப் பிடிக்காது..” என்று கூறி கைகளை விரிக்க,

“ஹ்ம்ம் நீ என்னவோ சொல்ற நானும் கேட்கிறேன்..”  என்று கூறிவிட்டு ஜூசை குடித்துமுடித்தவன்,  “அப்புறம்டா சொல்லு.. வீட்டுல அப்பா அம்மா தங்கச்சி எல்லாம் எப்படி இருக்காங்க??” என்றான் ஷ்ரவன்..

“எல்லாரும் நலம் தான்டா.. என்ன இப்போ என்னை தான் போட்டு படுத்த ஆரம்பிச்சுட்டாங்க…” என்றான் சலிப்பாய் சர்வேஷ்..

“ஏன் ??” என்பது போல பார்த்தவன் பின் சிரித்துக்கொண்டே “டேய் அவங்க சொல்றதும் சரிதான.. நீ என்ன செய்யனும்னு நினைச்சியோ அது இப்போ நடந்திடுச்சு. அப்புறம் அடுத்த லெவலுக்கு போகவேண்டாமா?? கல்யாணம் பண்ணிக்கோடா சர்வா..” என்றுசொல்ல,

“எனக்கென்னவோ அந்த எண்ணமே இல்லை ஷ்ரவா.. முதல்ல தங்கச்சிக்கு முடியட்டும்.. அப்புறம் பார்க்கலாம்.. “ என்று கூறி பேச்சை முடித்தான் சர்வேஷ்..

“நீ திருந்த மாட்ட.. ஸ்ரீக்கு இப்போ என்னடா வயசு..?? இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்… நீ முதல்ல கல்யாணம் பண்ணுடா..”

“இப்போ புரியுதுடா நீ ஏன் திடீர்னு வந்திருக்கன்னு.. எல்லாம் எங்க அம்மா வேலை தான.. அவங்க தான் வீட்டுக்கு ஒரு பொண்ணை கொண்டு வந்திட்டு தான் நம்ம பொண்ணை இன்னொரு வீட்டுக்கு அனுப்பனும்னு இல்லாத லாஜிக் எல்லாம் பேசிட்டு இருக்காங்க…” என்று சலித்தான்..

ஷ்ரவன் சிறுவயது முதலே சர்வேஷிற்கு நெருங்கிய நண்பன்.. முதலில் இருவரின் வீடும் ஒரே தெருவில் தான் இருந்தது.. அதலால் இருவரின் நட்பு குடும்பத்திற்கும் நட்பானது.. பிறகு வாழ்கை தரம் உயர, மாற என்று ஆகவும் அவரவர் தங்கள் வசதிக்கு ஏற்ப வேறு வேறு பக்கம் சென்றனர்.. ஆனாலும் இன்றும் இவர்களின் நட்பு வேறு பக்கம் செல்லவில்லை..

ஷ்ரவன் வீட்டில் அனைவருமே வங்கியில் வேலை பார்ப்பவர்கள்.. ஆதலால் இவனும் படித்து முடிக்கும்போது வங்கி வேலை தயாராய் இருந்தது. கல்யாணம் என்று வரும்போது அவனது மாமன் மகள் தயாராய் இருந்தாள்.. எந்த பிக்களும் இல்லை, பிடுங்கலும் இல்லை வாழ்வில். வாழ்கையை அதன் போக்கில் விட்டு நிமம்தியாய் இருப்பவன். ஆகா சர்வேஷிற்கும் அதே உபதேசம் செய்தான்.          

“ஏன்டா நீ அவங்க சொல்றதை புரிஞ்சுக்க மாட்டேங்கிற.. இது சரியான ஏஜ் தானடா.. பாரு நான் எல்லாம் கல்யாணம் பண்ணி செட்டில் ஆகலையா?? நான் சந்தோசமா இல்லையா???”

“அதானே பார்த்தேன்.. உன்னை பத்தி பேசாதடா.. கடுப்பாகுது.. படிச்சு முடிச்சதும் உனக்கு பிடிக்குதா இல்லையானே கேட்காம ஒரு பேங்க் வேலை.. சரி அதைக்கூட விடு.. கல்யாணம்… அதையாவது உன்கிட்ட கேட்கணும் தானே அதுவும் இல்லை.. நீயும் எல்லாத்துக்கும் சரின்னு சொல்லி மண்டையை ஆட்டிட்ட. டேய் மச்சி லைப்னா ஒரு தேடல் இருக்கனும்டா..  தேடுறதுல ஒரு ஆவல் இருக்கனும்…” என்றவனைப் பார்த்தவன்,

“ஆவல் தான.. இப்படி ஆவல் கீவல்னு வீட்டுல சொன்னா அதை அசால்ட்டா அவல் சாப்பிடுற மாதிரி வாயில போட்டு மென்னுட்டு தான் அடுத்த வேலையே பார்ப்பாங்க.. ஏன்டா எனக்கு என்ன குறை?? நான் நல்லாத்தான் இருக்கேன்.. அப்புறம் கல்யாணம், நிர்மலா எனக்கு பிடிச்சு தான் அவளை கட்டிகிட்டேன் மச்சி..” என்று பிடிவாதமாய் சொல்ல,     

“நீ என்னவேனா சொல்லு ஷ்ரவா… எனக்கு என் வாழ்க்கை நான் பிளான் பண்ண மாதிரி தான் நடக்கணும்.. நடக்கும்.. சோ அதுவரைக்கும் நோ கல்யாணம்..” என்று பேச்சை முடித்துவிட்டான் சர்வேஷ்..

“என்னவோ போ.. என்கிட்டே பேசுற மாதிரி அம்மாக்கிட்ட பேசாத. வருத்தப்படுவாங்க… ஆமா, எதோ வேலைக்கு ஆள் பார்க்கணும் சொன்னியாம்?? எப்படிடா எந்த மாதிரி வேணும் ???”

“எஸ்டா நானே உன்கிட்ட சொல்லனும்னு இருந்தேன்.. ஓவரால் சூப்ரவைசிங்க்டா.. மேனேஜெர் லெவல்ல வேண்டும்.. உனக்கு தெரிஞ்சவங்க யாரும் இருந்தா சொல்லு. நான் எல்லா நேரமும் இங்கயே இருக்க முடியாதுல அதான்..”  என்றான்.. மேலும் தன் நண்பனோடு பேச்சு வளர்ந்தது.

வாழ்க்கையை அதன்போக்கில் வாழ வேண்டும் என்று சௌபர்ணிகாவும், தேடலே வாழ்விற்கு சுவை கொடுக்கும் என்று சர்வேஷும் அவரவர் எண்ணங்களில் பயணிக்க, வாழ்க்கை இவர்களுக்காக வைத்திருக்கும் செய்தி என்னவோ.. யாரறிவார்.. 

 

Advertisement