Advertisement

நிலவை தேடும் பால்வெளி இவன்!..

25

அடுத்த நான்கு நாட்களும் அமைதியாக சென்றது. 

விசுவின் வீடு, இன்று அதிகாலையிலேயே பரபரப்பாக இருந்தது. எல்லோரும் கோவிலுக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர். 

விசுவின் பங்காளி வீடு.. பத்மநாபன் வாசுகி, வேதா என வீட்டு மனிதர்கள் மட்டுமே இருந்தனர். பவானி சங்கமேஸ்வரர் கோவில், அதிகாலை நேரம்.. பவானியும் விசுவும்.. பட்டுடுத்தி வந்தனர்.

இன்னமும் விடிந்தும் விடியாத நிலை.. மணி சரியாக ஐந்து. கோவிலின் கல்தரை முழுவதும் பணியில் நனைந்து.. யானை சிவப்பில் இருந்தது அந்த காரிருரில்.. அதுவும் ஒரு அழகுதானே.. பவானியின் மென் பாதங்களும், விசுவின் வன் பாதங்களும்.. ஒரே சீரான வேகத்தில் அந்த மண்டபம் தாண்டி கோவில் கருவறையை வந்து அடைந்தது.

பவானிக்கு மனதெல்லாம் வேண்டுதல்.. ‘மீண்டும் ஒருமுறை.. ஏதேனும் அபசகுனும் நடக்காமல் இருக்க வேண்டும் இறைவா’ என வேண்டுதலோடு.. பக்கவாட்டில் வரும் தன் கணவனை நிமிர்ந்து பார்த்தாள்.. பெண்.

அவளின் கண்ணாளனுக்கு, அப்படி ஒன்றும் தோன்றவில்லை போல.. மனையாளை பார்க்காமல், தன்  மைத்துனனோடு பேசிக் கொண்டே சென்றான். அவனின் முகத்தில், பரபரப்பு இல்லை.. மனதில், கனம் இல்லை.. மெல்லிய புன்னகையின் சாயல் தெரிந்தது.

ம்… அன்று திருமணத்தின் போது கூட அவன் இவ்வளவு இலகுவாகவும், சந்தோஷமாகவும் இருந்தானா தெரியாது. ஆனால், இப்போது எல்லாவற்றையும் கடந்தவனாக முகத்தில் எதோ தேஜஸ் கொண்டிருந்தவனை.. அதை உணர்ந்தும் உணராதவளாக.. பார்த்துக் கொண்டே வந்தாள் பவானி.

இப்போது, நடை பாதையில் கீழே விழுந்திருந்த.. அர்ச்சனை பூக்களை கவனிக்கவில்லை போல பெண்.. இப்போது விசு, தன் மனையாள் பூக்களை மிதிக்காத வண்ணம்.. தன் கை கொண்டு அவளை தன் பக்கம் இழுத்து.. அவளின் கவனத்தை கலைக்கவும்தான்.. அவனின் மனையாளுக்கு.. தன்னவன் மீதிருந்து கண்களை எடுக்க தோன்றியது.

விசு “பார்த்து வா.. பார்பி” என்றான் சின்ன அதட்டல் குரலில்.

அவ்வளவுதான் அந்த பேச்சும் குரலும்.. பெண்ணுக்கு அசரீரி வாக்காக தோன்றியது போல.. அனிச்சையாய் ‘ம்..’ என்பதாக தலை அசைத்து  கணவனை பார்த்துக் கொண்டே, அவனின் கையை விளக்காமல்.. பிடித்துக் கொண்டே நடந்தாள்.

அந்த பார்வையும்.. கை கோர்த்துக் கொண்ட நிலையையும் கணவன் உணர்ந்தான் இப்போது, ஏதும் சொல்லாமல்.. தன் போனை தன் மைத்துனனிடம் கொடுத்து விட்டு.. தன்னவளோடு முன்னே நடந்தான். ஒரு மோன நிலை இருவருக்குள்ளும்.

விசுவிற்கு, பெரிதாக இதற்கெல்லாம் அலட்டுவது இல்லை.. எண்ணம் சரியாக இருந்தால் சரி, மற்றபடி இந்த சடங்கு சம்பர்தாயம் எல்லாம்.. மனிதனை ஒழுங்குபடுத்தவே என எண்ணம்தான் அவனுக்கு. அதனால், பெரியவர்களின் திருப்திக்காக இப்போது மறுதாலி வைபவத்திற்கு ஏதும் சொல்லவில்லை அவன். இப்போது மனையாளின் பரவசம்.. அவனையும் ஆட்கொண்டது.

பகவான் சன்னதியின் முன்.. மந்திர சப்தம் மட்டும் கேட்க.. மீண்டும் தன் மனையாளுக்கு பொன்தாலி இட்டான் விசு. பவானி வேண்டுதலோடு மட்டுமே இருந்தாள்.. நிமிர்ந்து கணவனை பார்க்கவில்லை இப்போதும்.. விசுவிற்கு, கொஞ்சம் அது வருத்தமாக தோன்ற.. உடனே “பவானி,” என்றான்.

பவானி அனிச்சையாய் “ம்..” என்ற எழுத்தோடு, தன்னவனை நீர் திரையிட நிமிர்ந்து பார்த்தாள்.. கணவனுக்கு அந்த நொடி இனிமையாக இருந்தது.. வேறு பெரிதான யோசனையோ.. தாக்கமோ இல்லாமல் சந்தோஷமாக அவளை பார்த்துக் கொண்டே மாங்கள்யம் அணிவித்தான் கணவன்.

பவானிக்கு இப்போதுதான் அத்தனை நிம்மதி. முகமே அவளுக்கு கலையாக இருந்தது. என்ன இருந்தாலும் கழுத்தில் தாலி இல்லாமல் அவளுக்கு ஒன்றும் சரியாக இல்லை.. மனது என்னமோ செய்துக் கொண்டிருந்தது. இப்போது முறையாக, தன்னவனிடமிருந்து பொன்தாலி அணிந்துக் கொண்டவளின் முகத்தில் ஒரு நிறைவு தன்போல வந்து அமர்ந்துக் கொண்டது. 

சுவாமியை வணங்கிவிட்டு.. எல்லோரும் கருவறையிலிருந்து வெளியே வந்தனர்.. வேதாவின் சொல்படி, மணமக்கள் இருவர் மட்டும் ப்ரகாரத்தை வலம் வர தொடங்கினர்.

கணவனான விசுவிற்கு.. தன்னவளின் திடம் பொறாமையை கொடுத்தது.. ‘தாலி வாங்கின உடனே நம்ம மறந்துட்டாளோ..’ என தோன்ற,  விசு “என்ன, கை பிடிக்காமல் முன்னாடி போற” என்றான்.. அவள் கைகூப்பி பிரதக்ஷணம் செய்வதை பார்த்து.

பவானி, கணவனை திரும்பி பார்த்தாள்.. உதடுகள் “நமசிவாய” என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டிருந்ததால்.. ஒன்றும் சொல்லாமல் கூப்பிய வண்ணம் முன்னே நடந்தாள்.

விசுவும் ஏதும் கண்டுக் கொள்ளாமல் பின்னால் சென்றான். 

இருவரும் நமஸ்கரித்து.. இரண்டு படிகள் ஏறி.. மண்டபத்தில் அமர்ந்துக் கொண்டனர்.

சொந்தங்கள் அப்போதுதான் கிளம்பியது வீட்டிற்கு.. வேதா “பத்து நிமிஷம் பொறுத்து வாங்க. நாங்க ஆர்த்தி ரெடி செய்து வைக்கிறோம்” என்றபடி மகனிடமும் மருமகளிடமும் விடை பெற்று சென்றார்.

பொழுது நன்றாக விடிந்திருந்தது.. இப்போதுதான் அங்கொன்றும் இங்கொன்றுமாக மக்கள் கோவிலுக்கு வர தொடங்கினர்.

விசு, அமைதியாக எதிரில் இருந்த ஓவியத்தை ரசித்தபடி அமர்ந்திருந்தான்.

பவானி வேண்டியமட்டும் சுவாமியிடம் கோரிக்கை வைத்துவிட்டு.. அப்போதுதான் அருகிலிருந்த தன் ஆசாமியை கவனித்தாள். ‘என்னமோ சொன்னாரே இவர், எதோ கேட்டாரே..’ என யோசிக்க ஏதும் நினைவு வரவில்லை அவளுக்கு.

பவானி, கணவனிடம் “என்ன வேடிக்கை.. என்னை பார்க்காமல்” என்றாள்.. இப்போது, கணவனை தன்னை நோக்கி திருப்பும் குரலில்.

விசு கண்டுக் கொள்ளவேயில்லை.. அமைதியாக அப்படியே எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான்.

மனையாளுக்கு, கணவனின் ப்பாவம் எச்சரிக்கை மணியடிக்க, பவானி “என்ன கோவமா.. என்ன கேட்டீங்க” என்றாள் கொஞ்சம் தழைந்த குரலில்.

கணவன் ஏதும் பேசவில்லை. மனைவிக்கு மண்டை காய்ந்தது சற்று நேரம்.

பவானி “சரி, போலாமா” என்றாள்.

விசு, ஒன்றும் சொல்லாமல் எழுந்துக் கொண்டான்.. இருவரும் கிளம்பினர். பவானிக்கு இப்போதுதான், அவன் “கை பிடிக்கல” என்று கேட்டது நினைவு வர.. தானாக.. கணவனோடு தன் கையை பிணைத்துக் கொண்டாள்.

பவானி “சாரி.. நீங்க கேட்டதுக்கு, பதில் சொல்ல முடியலை.. ஸ்லோகம் சொல்லிட்டு இருந்தேன்..” என சொல்லி, தன்வனின் கையேடு தன் கையை இதமாக கோர்த்துக் கொண்டாள்.

விசு, ஒன்றும் சொல்லாமல் வந்தான்.. வெளியே வந்துவிட்டனர் இருவரும். 

இதுவரையும் ஏதும் பேசவேயில்லை.. விசு. பவானிக்கு மனது என்னமோ செய்துக் கொண்டிருந்தது. இருந்தும், எதையும் காட்டிக் கொள்ளாமல்.. “சீக்கிரம் காலேஜ் கிளம்பனும்.. தூக்கமா வருது..” என ஏதேதோ பேசிக் கொண்டே வந்தாள், பெண்.

விசு, தன்னவளின் கையை விடுத்து காரெடுத்தான். 

பயணம் அமைதியாகவே இருந்தது.

பவானிக்கு ‘என்னமோ’ என ஒரு சின்ன பயம் வந்துவிட்டது.

வீட்டில் இறங்கினர் இருவரும்.. முறையான வரவேற்பு நடந்தது. சற்று நேரம் மணமக்கள் இருவரும் கீழே அமர்ந்திருந்தனர்.

விசு “ம்மா, எனக்கு வொர்கௌட் பண்ணனும்..” என சொல்லி மேலே சென்றான். மணி ஏழு ஆகவில்லை.

வேதா, ஒன்றும் மறுத்து சொல்லவில்லை.. தன் மருமகளை பார்த்து “ காலேஜ் இருக்கா” என்றார்.

பவானி “ம்.. இருக்கு அத்தை.. இதோ கிளம்பனும்” என்றாள்.

வேதா, கேட்டுக் கொண்டு,  தன் சம்பந்தி மற்றும் பங்காளி வீட்டு மகனோடு பேசத் தொடங்கினார்.. ‘சாப்பிட்டுதான் போகணும்’ என.

பவானி உணவு மேசைக்கு சென்றாள். சற்று நேரம் அமர்ந்துக் கொண்டாள்.. இன்னமும் உணவு நேரம் வரவில்லை.. இப்போது கணவனை பற்றி யோசனைத்தான் வந்தது. 

பவானியின் அன்னை வந்தார் இப்போது மகளிடம்.. “புடவை உனக்கு அழகா இருக்கு டா.. இன்னிக்கும் காலேஜ் போறியா” என்றார், கேள்வியாக மகளிடம்.

பவானி, தன் சிந்தனையிலிருந்து கலைந்தாள் “ம்.. போகணும்மா.. இன்னிக்கு முக்கியமான கிளாஸ் இருக்கு” என்றாள்.

வாசுகியும் “சரி, நீ கிளம்பு.. நான் இங்கே பார்க்கிறேன்” என சொல்லி மகளை மேலே அனுப்பி வைத்தார்.

பவானி மேலே வந்து சேர்ந்தாள்.

கணவன் வொர்கௌட் அறையில் இருப்பான் என தெரியும், எனவே, அங்கே சென்றாள்.. அவனை பார்க்கலாம் என.

பவானி அந்த அறையின் கதவை திருந்துக் கொண்டு உள்ளே வந்தாள்.. அங்கே, தன் தம்பி ஹரியும், கணவனும் பேசிக் கொண்டிருந்தனர்.. உடற்பயிற்சி செய்தபடி. வேர்க்க விறுவிறுக்க புஷ் அப்ஸ் எடுத்தபடி திறந்திருந்த கதவை பார்த்தான், கணவன்.

பவானிக்கு, கேட்க வந்தது.. பேச வந்தது.. எல்லாம் மறந்து போனது, தன் தம்பியை அங்கே பார்க்கவும். எனவே மனையாள் “சும்மா பார்க்க வந்தேன்” என்றவள்.. அந்த அறையின் கதவை சற்றி விட்டு, வெளியே வந்தாள்.

பதட்டத்தில் இருந்த தன் மனையாளின் முகத்தை பார்க்க, விசுவிற்கு லேசாக சிரிப்புதான் வந்தது. ‘பயந்துட்டா..’ என. அதே மனநிலையில் உடற்பயிற்சி முடித்து.. ஹரியை கீழே அனுப்பிவிட்டு, தன்னறைக்கு வந்தான் விசு.

பவானி, கல்லூரி செல்வதற்காக உடைமாற்றி.. தயராக இருந்தாள்.

விசு, ஏதும் கேட்க்காமல் குளிக்க சென்றான். பின் இருவரும் கீழே வந்தனர்.

உறவுகளோடு அமர்ந்து உண்டனர். எல்லோரும் கிளம்ப, விசுவும், பவானியை அழைத்துக் கொண்டு கல்லூரி கிளம்பினான்.

தனிமையில் கணவனிடம், பவானி “என்ன கோவம்” என்றாள்.

விசு “என்ன.. ஒண்ணுமில்லை” என்றான்.

பவானி “தெரியும், நான் கைபிடிக்கலைன்னு கேட்டீங்க” என்றாள்.

விசு “அவ்வளோ பெரிய கோவமெல்லாம் இல்லை.. இது சின்னதுதான்” என்றான் எங்கோ பார்த்துக் கொண்டு..

மனையாள், அவனின் முழங்கையை எட்டி பிடித்துக் கொண்டாள். கணவன் ஏதும் பேசவில்லை.. மனையாள் “விசு.. இன்னிக்கு ரொம்ப ஹாப்பியான  நாள்.. ப்ளீஸ்.. பேசு” என்றாள் கெஞ்சலாக.

கணவன் அமைதியாகவே இருந்தான். பெண்ணவளுக்கு பயம் வந்தது “நீங்க.. இத மனசில் வைச்சிகிட்டு..ஏ..ஏதும் கேட்க கூடாது, செய்ய கூடாது” என்றாள்.

விசு “ஹா… ஹா… குட் பார்பி.. மனசில் வைச்சிகிட்டு செய்வேன்.. பேசுவேன்” என்றான், அதிகாரமாக.

மனையாள் பயந்து விழிக்க.. கல்லூரி வந்திருந்தது, காரும் நின்றுவிட்டது. கணவன் ஏதும் சொல்லாமல் இருந்தான்.

மனையாளுக்கு இறங்க வேண்டிய நிலை.. ஆனாலும் கணவனின் பேச்சில் பயம் போகவில்லை. இருந்தும், பவானி “என்னங்க, பை..” என்றாள்.. தயங்கிய குரலில்.. கணவனின் கையை விட்டு விட்டு, இறங்கி நின்று.

விசு இப்போதும் அவளை பார்க்கவில்லை.

பவானி “என்னங்க” என்றாள் கொஞ்சம் சத்தமாக.

விசு, இப்போதுதான் மனையாளை பார்த்தான்.. சின்னதாக சிரித்தான்.. உதடுகள் பிரியவில்லை.. கண்கள் மட்டும் தன்னவளை அதிகாரமாக பார்த்தது.. ‘என்ன’ என்பதாக.

பவானி “ரொம்ப அதிகமா பண்றீங்க..” என்றாள் கோவமாக.

விசு “ம்.. உன்கிட்ட அப்படிதான் வருது.. போ, போய் படிக்கிற வழியை பாரு.. கிளம்பு” என்றான், அதே அதட்டலான குரலில்.

மனையாளின் கண்களுக்கு இப்போது காதலனாகவே தெரிந்தான் கணவன்.. ‘எத்தனை டென்ஷன் பண்றார்..’ என உதடுகள் முணுமுணுத்தது.. கூடவே  மனம் நிறைந்து இருந்தது.

புது பொன்தாலி மினுமினுக்க, அதற்கு இணையாக முகமும் மின்ன.. கணவனிடம் பழிப்பு கட்டிவிட்டு உள்ளே வந்தாள் பவானி. விசுவும் தன் ப்ரௌன் நிற விழியால், அவளை ரசித்தபடி பார்த்துவிட்டு வண்டி எடுத்தான்.

மாதங்கள் வேகமாக சென்றது. 

பவானிக்கு இந்த வாரத்தில் எக்ஸாம் முடிகிறது. பவானி MBA முடிக்க இருக்கிறாள். அதற்காக தீவிரமாக படிக்கிறாள்.. எப்படின்னா? தன் கணவனை வெளிநாடு அனுப்பிவிட்டு படிக்கிறாள். அஹ.. விசு அவ்வளவு படுத்துகிறான் அவளை.

இப்போது அவள் மில்லிற்கு வந்தே ஆகவேண்டும் என சொல்லி இருக்கிறான் கணவன். தனது அறையின் அருகில் அவளிற்கும் ஒரு அறை. தான் இல்லை என்றாலும், அவளிற்கும் தனது தொழில் சமாச்சாரங்கள் தெரியும்படி செய்துக் கொண்டிருக்கிறான்.

பவானியும், கணவனின் எந்த கோரிக்கைக்கும் மறுப்பு சொல்லவில்லை. தனக்கென ஒரு உலகம் செய்யாமல்.. அவனுடைய உலகத்தில் தன்னை நுழைத்துக் கொண்டாள். எல்லாவற்றையும் இதமாக ஏற்றுக் கொண்டாள். சிறு பெண்ணாக ஏமாந்து.. ஸ்தம்பித்து.. பிடிவாதம் பிடித்து நின்றவள் இல்லை இப்போது. 

ம்.. இப்போதும் பிரச்சனைகள்தான்.. அதைவிட நிறைய பிரச்சனைகள்தான். ஆனால், ஸ்தம்பிக்கவில்லை அவள்.. அப்படி விடவில்லை அவள் கணவன்.. அந்த பிரச்சனைகளை எப்படி நின்று எதிர்கொள்வது என கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறான். கை பிடிக்காமல்.. உடனின்று அறிவுரை சொல்லாமல்.. ‘உடனிருப்பேன்.. நீ பார்..’ என இப்போதும் தைரியமாக வெளிநாட்டில் அமர்ந்துக் கொண்டு இருக்கிறான்.

ம்.. நாளை, இவர்கள் நடத்தும் வழக்கில் வாய்தா நாள். இப்போது இவள்தான் செல்ல வேண்டும் என கணவன் சொல்லி இருக்கிறான். அதில் கொஞ்சம் பயம்தான் பவானிக்கு. ஆனால், கணவன் சொல்லுவதை தட்டுவதில்லை பெண். எனவே, அதற்காக தன் மனதை தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறாள் பெண்.

இப்போது வேதா, மருமகளை உண்பதற்காக அழைத்தார் இண்டர்காமில். பவானி கீழிறங்கி வந்தாள். மதியம் மணி இரண்டு.

இருவரும் நாளைய நிகழ்வுகள் குறித்து பேசிக் கொண்டே உண்டனர்.

மறுநாள் பவானிக்கு ஆர்பாட்டமாகவே ஆரம்பமானது. ஏதும் இவள் கோர்ட்டில் பெரிதாக பேச வேண்டாம்.. எனதான் சொல்லி இருந்தனர். ஆனாலும் ஒரு நடுக்கம் அவளுள்.

பத்மநாபன் சரியான நேரத்திற்கு வந்தார் பெண்ணை அழைத்து செல்ல. செந்தில் அப்படியே கோர்ட்டிற்கு வந்துவிடுவார்.

பவானி உண்டு தன் தந்தையோடு கிளம்பினாள். சரியான நேரத்திற்கு இவர்களின் நேரம் வந்தது. இவளிடமும் கேள்விகள் கேட்கப்பட்டது. பயம் இருந்தாலும்.. வக்கீல் உடனிருக்க.. தெளிவாகவே பதில் கூறினாள் பெண்.

மீண்டும் ஒரு வாய்தா தேதியோடு இன்றைய கோர்ட் நேரம் முடிந்தது.

Advertisement