Advertisement

நிலவை தேடும் பால்வெளி இவன்!..

22

விசுவிற்கு,  அந்த கேள்வியே அவமானமாக இருந்தது. அன்று அதே போலொரு சந்தர்ப்பம், இன்றும்.. என்னை திருமணம் செய்த பின்பும் அப்படியொரு சந்தர்ப்பம்.. அவனால் நேரடியான இந்த கேள்வியை தாங்க முடியவில்லை. பதில் சொல்ல பிடிக்கவில்லை.. அமைதியாக நகர்ந்து அமர்ந்துக் கொண்டான்.

ஆனால், பவானிக்கு குழப்பம் தீரவில்லை, ஆனால், கணவனின் அமைதி என்னமோ செய்தது.. அப்படியே அமர்ந்துக் கொண்டாள்.. ஏதும் பேசவில்லை கணவனிடம்.

நிமிடங்கள் சென்றது.. இரவு உணவு உண்பதற்காக அழைப்பு வந்தது இப்போது. விசு எதோ யோசனையோடு முதலில் நடந்தான்.. பின்தான், மனையாள் வரவில்லையே என உணர்ந்த விசு “வா.. பவானி, சாப்பிட்டு பேசலாம்” என்றான், குரலில் எந்த கோவமோ, இணக்கமான பாவமோ இல்லை, சாதாரணக் குரலில் அழைத்தான்.

பவானி, நிமிர்ந்து கணவனை பார்த்தாள்.. அவனின், முழு ப்ரவுன் நிற விழிதிரை.. அதில், ஆங்காங்கே லேசான மஸ்டர்ட் நிற கோடுகளாக அவனின் விழி கலங்கி, குழப்பத்தில் இருப்பதாக தோன்றியது பெண்ணிற்கு.. அதை பார்த்தவள்..  ஏதும் பேசாமல் எழுந்துக் கொண்டாள் பவானி.

இருவரும் இறங்கி கீழே வந்தனர்.

வேதா “எப்படி டா இருக்க, நல்லா தூங்கினியா” என்றார், மருமகளிடம் வாஞ்சையாய்.

வாசுகி, இருவரின் முகத்தையும் பார்த்துவிட்டு, எழுந்து டைனிங் டேபிள் சென்றார். வேலையாட்கள் எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு சென்றிருந்தனர். தன் பெண்ணும் மாப்பிள்ளையும் அமர.. பரிமாற தொடங்கினார் வாசுகி.

விசு “வா ம்மா.. சாப்பிடலாம், அத்தை நீங்களும் உட்காருங்க” என்றான்.

வேதா “நீங்க சாப்பிடுங்க, பத்து அண்ணனை வர சொல்லியிருக்கேன்.. நாங்க அப்புறம் சாப்பிடுறோம்” என்றார்.

விசு “ஏன் ம்மா, சொல்லி இருக்கலாமில்ல, நானும் வெயிட் செய்திருப்பேன்” என்றான்.

வாசுகி “இல்ல மாப்பிள்ளை, நீங்க சாப்பிட்டு போய் ரெஸ்ட் எடுங்க.. எத்தனை அலைச்சல் உங்களுக்கு, செந்தில் சொன்னார், பவானியை காணாமல் நீங்க பட்ட கஷ்ட்டத்தை.. அப்படியே ப்ளைட்டிலிருந்து இறங்கி.. கோவை வந்து.. சாப்பாடு தூக்கம் இல்லாமல்.. டீ கூட குடிக்கலையாம் நீங்க.. இன்னமும் உங்க முகமே தெளிவாக இல்லை.. நீங்க நல்லா தூங்கி ரெஸ்ட் எடுங்க, அப்புறம் அவர்கிட்ட பேசிக்கலாம்” என்றார் மாமியாராக மாப்பிளையின் மேல் அக்கறை கொண்டு சொல்லிக் கொண்டிருந்தார்.

விசுவின் மனதோ ‘எங்க, இவகிட்ட பேசி புரியவைத்தால்தான் எனக்கு தூக்கமே வரும்..’ என எண்ணிக் கொண்டிருந்தது, இருந்தும் “அப்படி எல்லாம் இல்ல அத்தை.. எல்லோரும்தான் கஷ்ட்டப்பட்டோம், விடுங்க, அதைபத்தி இனி பேசவே வேண்டாம்..” என்றான்.

வேதாவும் “சரிப்பா யாரும் பேசலை.. நீ சாப்பிடு” என்றார் அன்னை.

உண்டு முடித்து பவானி “அத்தை, என் தாலி எங்க அத்தை” என்றாள்.. இன்னமும் சந்தேகம் தீராத குரலில்.

விசுவிற்கு கோவம் வந்தது எனவே “அதை நான்தான் வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்.. நீ அதைபத்தி பேசாதேன்னு சொன்னேன்.. ஏன் கேட்கவே மாட்டேங்கிற..” என்றான் எரிச்சலானக் குரலில்.

பவானி “அத்தை எங்கிட்ட எதுவுமே சொல்ல மாட்டேங்கிறாங்க அத்தை, எனக்கு என்ன ஆச்சுன்னு தெரியனுமில்ல.. அத்த, நான் அப்போவே கேட்டேன்.. பதிலே சொல்லலை.. எனக்கு பயமா இருக்குல்ல அத்தை” என்றாள்.. கணவனை குற்றம்சாட்டி, தன் அத்தையிடம் நியாயம் கேட்டாள் பெண்.

வேதா “சரி, நான் சொல்றேன்.. உனக்கு ஒன்னும் ஆகலை..” என்றவர் தன் கணவனின் இறப்புக்கு காரணமாக இருந்தவர்கள்தான் இப்படி செய்தார்கள்.. என தொடங்கி, அன்று உன்னை கடத்த முயற்சித்தவர்ளும் இவர்கள்தான்.. அன்று முடியாததை நேரம் பார்த்து.. விசு ஊரில் இல்லா, நேரம் பார்த்து கடத்திவிட்டனர். உனக்கு மயக்க மருந்து கொடுத்து வைத்திருந்தனர், மற்றபடி உனக்கு ஒன்றுமில்லை.. எல்லா பரிசோதனையும் செய்துவிட்டனர் மருத்துவர்கள்.. அப்புறம் உன் நகைகளை எல்லாம் அவர்கள்தான் வைத்திருந்தனர்.. அதை விசுவும் உன் அப்பாவும் வேண்டாம் என்றுவிட்டனர்.. அது ஸ்டேஷனில் இருக்கு.. அதனால் அவன் ஏதும் சொல்லாமல் இருந்திருப்பான்.. மற்றபடி பயம் வேண்டாம் டா.. நீ தைரியமா இரு..” என்றார் ஒரே மூச்சாக எல்லாம் சொல்லி.

விசு, உண்டு முடித்து.. அவளை முறைத்துவிட்டு மேலே சென்றுவிட்டான்.

பவானிக்கு, கணவன் தன்னிடம் ஏதும் மறைக்கவில்லை என தோன்றியது, அவன் தன்னை முறைத்தபடி செல்லுவதும் இப்போது புரிந்தது ‘என்னை நம்பவில்லையே..’ என்ற கோவம் புரிந்தது. ஆனால், என்ன செய்வது என தெரியாமல் அங்கேயே அமர்ந்துக் கொண்டாள்.

சற்று நேரத்தில், அவளின் தந்தை வந்தார். பவானிக்கு தன்னை அறியாமல் கண்ணீர் வர.. அவரை வந்து கட்டிக் கொண்டாள். பத்மநாபன் “பவானிம்மா, என்ன சின்ன பிள்ளையாட்டாம்” என சொல்லி திடமாக இருக்க முயன்றாலும், முடியாமல் அவரும் தளர்ந்து அமர்ந்துக் கொண்டார், பெண்ணோடு.

அன்னைகள் இருவரும் பார்த்திருந்தனர், இந்த காட்சியை. கடந்து வந்ததை பற்றி பேச வேண்டாம் என்றாலும்.. அந்த பெண்ணின் மனதில் பதிந்த காயம்.. ஆறாமல் இருக்கிறது என புரிந்தது எல்லோருக்கும். யாரும் ஏதும் சற்று நேரம் பேசவில்லை.

பவானியாக நிமிர்ந்தாள்.. கணவன் கோவமாக, என்னை நம்பவில்லையா என பார்த்து சென்றது நினைவில் வர.. ‘இன்னும் அப்பாவிடம்  அழுதால் கோவம் வரும்’ என எண்ணி, கண்களை துடைத்துக் கொண்டு, பவானி “சாப்பிடுங்க ப்பா…” என்றாள்.

பத்மநாபன் “ஆகட்டும்மா.. மாப்பிள்ளை எங்கே” என்றார்.

விசுவை அழைத்தனர். அதை தொடர்ந்து எல்லோரும் பேசிக் கொண்டிருந்தனர். பவானி தன் அத்தையின் அருகிலேயே அமர்ந்துக் கொண்டாள்.

சற்று நேரத்தில் மூவரும் உண்டனர். வாசுகியும் பத்மநாபனும் வீடு கிளம்பினர். வாசுகி, ஆயிரம் பத்திரம் சொல்லி சென்றார் பெண்ணிடம்.

வேதா, உறங்க சென்றார்.

இருவரும் மேலேறி வந்தனர். பவானிக்கு, கணவனின் முகத்தையே பார்க்க முடியவில்லை.. அங்கே எல்லோரின் எதிரிலும், தாலி எங்கே என கேட்டது கொஞ்சம் அதிகபடியாகதான் இருந்தது, தனக்கே. அமைதியாக உடைமாற்ற சென்றுவிட்டாள், பெண்.

விசு, அமைதியாக தனதிடத்தில் படுத்துக் கொண்டான். மனது என்னமோ செய்தது.. சந்தோஷமாக இருக்கும் நேரத்தில் உணரும் நேசம் என்பது ஆர்பாட்டமானது.. இதுபோல, சங்கடமான நேரத்தில் உணரும் நேசம் என்பது அமைதியானது போல. விசு அமைதியானான்.

விசுவினால் பேச முடியவில்லையா?.. இல்லை, பேச தெரியவில்லையா?.. தெரியவில்லை, என்னுடைய நேசத்தை கூட அவளால் புரிந்துக் கொள்ள முடியவில்லை என யோசனை இவனிற்கு. மனையாளை பார்த்ததும் இறுக்கி அணைத்து “கண் முழிச்சிட்டியா” என கேட்டிருந்தால்.. புரிந்திருக்கும் அவனின் நேசம், அவளிற்கு. அந்த நேரத்தில் அவள் விழித்தால் போதும்.. என தடுமாறி நின்று.. தள்ளி நின்று.. ஒன்றும் புரியாமல் நின்று.. பார்த்திருந்தவனுக்கு நேசத்தை சொல்ல தெரியவில்லை போல. இப்போது அதே தடுமாற்றத்தோடு உறங்க முயன்றான். உறக்கம் தழுவவில்லை அவனை.

பவானி, உடைமாற்றி வர, கணவனின் கண் மூடிய நிலைதான் கண்ணில் பட்டது. அவளும் விளக்கணைத்து தன்பக்கம் வந்து படுத்துக் கொண்டாள். கணவனின் அசைவற்ற நிலை உறுத்தியது அவளை. எப்போதும் இப்படிதான் இவர்கள் திருமணமாகி இந்த மூன்று மாதங்களில் இதுதான் பழக்கம் இவர்களுக்கு. ம்.. ஒரே இடத்தில் இருந்தாலும் தேடியதில்லை இருவரும்.. அவனின் வெளிநாட்டு பயணம்தான் கொஞ்சம் தேட வைத்தது இருவரையும்.

ஆனால், முன்பெல்லாம் பெரிதாக தெரியவில்லை பவானிக்கு, அதுவும் கீழே தான் கேட்டது, பெரிய தவறு என புரியும் வரை கணவனின் நிலை பற்றி யோசனை இல்லை மனையாளுக்கு. தன் அன்னை.. ‘டீ கூட குடிக்காமல்’ என சொன்னது எல்லாம் இப்போதுதான் புரிந்தது.. அதனாலோ என்னமோ உறக்கம் வரவில்லை, திரும்பி.. திரும்பிப் படுத்துக் கொண்டிருந்தாள்.

ஒருகட்டத்தில் உறக்கம் வராமல் போக, என்ன செய்வதென தெரியாமல் எழுந்து கணவனின் அருகில் வந்து நின்றாள், வெளிச்சம் அதிகமில்லை.. கட்டிலின் இந்த கோடிக்கும்.. அந்த கோடிக்கும்.. இடையில் பாலமாக அவனின் கால்களும் தலையும் அசையாமல், அவன் உறங்குகிறான் என நம்ப வைத்துக் கொண்டிருந்தான் அவளை. 

பெண்ணவளுக்கு தயக்கம்தான், ஆனாலும்  அவனின் காதுகளின் அருகில் சென்று “சாரி விசு.. நான், உங்ககிட்ட அப்படி கேட்டிருக்க கூடாது.. சாரி” என்றாள். அடுத்து என்ன சொல்ல வேண்டும் என யோசித்தபடி.. நிமிர்ந்தாள்.

விசு “ம்… இன்னும் நிறைய கேட்ட… நீங்களா என்கூட இருந்தீங்க’ன்னு கேட்ட.. அதுக்கும் இப்போவே மன்னிப்பு கேட்டிடு..” என்றவன் இப்போது எழுந்து அமர்ந்தான்.

பவானி “முழிச்சிட்டுதான் இருக்கீங்களா” என்றாள், அகப்பட்டுக் கொண்ட கோவமானக் குரலில் கேட்டாள் பெண்.

விசு, ‘ஏன் உனக்கு தெரியாதா..’ என பார்வையால் அவளையே பார்த்திருந்தான்.

பவானி, அவனை பார்க்கத் தயங்கியவளாக அறையின் கதவை நோக்கி நடந்தாள்.

Advertisement