Advertisement

பவானிக்கு கொஞ்சம் டென்ஷன் ஏறிக் கொண்டது.. வீட்டில் பெற்றோர், அவளின் கண்ணில் படுவதே இல்லை.. திருமண வேலைகள்..  திருமண வேலைகள்..  என ஓடிக் கொண்டே இருக்கின்றனர். 

எனவே, அதன் தாக்கம் இவளிடமும் இருந்தது. இப்போது புடவை எடுக்க உன் மாமியார் கூப்பிட்டிருக்காங்க என அன்னை சொல்லவும் டென்ஷன்தான் பெண்ணுக்கு. ‘நான் வரணும்மா நான் கண்டிப்பா வரணுமா.. நீங்க பார்த்து எடுத்திடுங்க’ என பல பதில் சொன்னாள் பெண்.

எப்போதும் போல அவளின் எல்லா பேச்சுகளும் காதில் வாங்கப்படாமல்.. பெரியவர்கள் நினைத்ததைதான் கனகச்சிதமாக செய்தனர். மறுத்தே போய்விட்டது அவளுக்கு.. கல்லூரியில் ‘தான்’ இன்னும் சேரவில்லை.. எப்போதும் வீடு.. போன்.. என ஒரே இடத்தில் சுற்றி சுற்றி பைத்தியம்தான் பிடிக்கவில்லை பவானிக்கு, மற்றபடி எல்லாம் மறுத்துவிட்டது. 

திருமணம் எனும் போது பெண்ணுக்கு இயல்பாய் வரும் புன்னகை.. வெட்கம்.. ஆனந்தம்.. இப்படி ஏதும் அவளுக்கு இல்லை. ‘எப்போதடா இவர்களிடமிருந்து தப்பித்து ஒரு கல்லூரியில் சேர்வோம்.. கொஞ்சம் தெளிவாக எனக்காக யோசிப்போம்’ என எண்ணம் வந்ததேயன்றி.. இந்த நிகழ்வுகளில் நாட்டமில்லை பவானிக்கு.

காலையில் ஆறு மணிக்கே.. நல்ல நேரம் என குறித்திருந்தனர். எப்போதும் காஞ்சிபுரத்தில்தான் திருமணத்திற்கு புடவை நெய்ய கொடுப்பார் வேதாவின் குடும்பத்தில். இந்த முறை எல்லாம் அவசரம். எனவே, நேரம் இன்மை காரணமாக எல்லாம் உள்ளூரிலேயே பார்த்துக் கொண்டனர்.

ஊரில் பெரிய கடையில் அதிகாலையிலேயே  தாங்கள் வருவதாக சொல்லி ஏற்பாடுகள் செய்துக் கொண்டு கிளம்பினர். வீராவின் பங்காளி வீட்டில் தம்பதியாய் இருவர்.. வேதாவின் அக்கா மாமா, வேதா என ஐந்து நபர்கள் சென்றனர்.

இங்கே பத்மநாபன் வாசுகி, வாசுகியின் அண்ணன் அண்ணி.. பவானி என ஐவர் சென்றனர். காலை ஆறுமணிக்கு கிளம்பினர். எல்லோரும் தயாராகி வர.. பவானி ஒரு சல்வாரில் வந்து நின்றாள். பார்த்த அன்னைக்கு கோவம் வந்தது “முதல் முதலில் இப்போதுதான் உன் புகுந்த வீட்டு ஆட்களை பார்க்க போற.. ஒரு புடவை கட்ட மாட்ட.. வா” என கைபிடித்து அழைக்க, நகரவில்லை பெண்.

பவானி “ம்ம்மா… இது போதும் வா.. சும்மா எல்லாத்துக்கும் கம்பல் பண்ணாத.. எப்படி இருந்தாலும் அங்க சரீ எல்லாம் ட்ரையல் பார்ப்பாங்க.. வா ம்மா” என்றாள் அமைதியான குரலில். வாசுகிக்கு மனதே கேட்டவில்லை ‘இல்ல டி..’ என தொடங்கி மீண்டும் பேசினார். பெண்ணும் பதிலுக்கு பேசினாள்.

வாசுகியின் அண்ணியும் “என்ன வனி இது..” என்றார்.

இப்போது பத்மநாபன் “விடு, வசு.. இதுவே நல்லா இருக்கு.. டைம் ஆச்சு, அவளின் மூட் ஸ்பாயில் பண்ணாத வா..” என்றார் முன்னே சென்றுக் கொண்டே சொன்னார்.

பவானி “தேங்க்ஸ் ப்பா..” என்றபடி ஓடினாள் அவரின் பின்னால். நீண்ட நாட்கள் ஆகிற்று, தன் தந்தை தன்னோடு பேசி.. எனவே பின்னாலே சென்றாள், பெண். வாசுகியும் ஏதும் பேசாமல் கிளம்பினார்.

பவானியின் இறுகி இருந்த முகம் தன் தந்தையின் பேச்சில் இளகி இயல்பு நிலைக்கு வந்திருந்தது, பவானி “எந்த கடைப்பா” என பேச்சுக் கொடுக்க.. தந்தையும் பதில் சொன்னார். ஆக, பவானிக்கு ஒரு இதமான மனநிலையில் வந்து நின்றாள்.

கடை இவர்களுக்காக திருந்திருந்தது சின்ன பாதையில். கடையில்தான் பெண்ணை முதல்முதலில் பார்த்தனர்.. வேதாவின் சொந்தம் எல்லோரும்.. வீராவின் பங்காளிக்கு, பத்மநாபனை தெரியும் என்றாலும்.. பெண்ணை தெரியாதே.. வேதாவே இப்போதுதான் நன்றாக பார்த்தார் பவானியை.. தன்  மருமகள் என்ற கோணத்தில் பார்த்தார் பவானியை.

பார்த்தவுடன் நிறைந்து போனது வேதாவிற்கு. எந்த குறையும் சொல்ல முடியாதபடி பாந்தமாக நின்றாள் பவானி. மாநிறத்திலிருந்து சற்று கூடுதலான நிறம்தான் பவானி.. இப்போது இன்னும் நிறமாக இருந்தாள்.. உருண்டையாக அல்லாமல்.. நீண்ட முக அமைப்பு அவளுக்கு.. அதில் அலைபாயாமல் அமைதியாக இருந்தது கண்கள்தான் கருத்தில் பதிந்தது வேதாவிற்கு. மகனின் கண் ஒருவகை என்றால்.. இவளது கண்கள் கருகரு விழிகள்.. ஈர்க்கிறது என்னமோ.. என எண்ணிக் கொண்டார், மாமியார்.

பத்மநாபன் எல்லோரையும் அறிமுகம் செய்யவும்.. பவானி கையெடுத்து “வணக்கம்..” என்றாள் பொதுவாக.. வேதாவிற்கு மீண்டும் கண்கள் ஒளிர்ந்தது.. நீண்ட நீண்ட விரல்.. அழகாக பராமரிக்கப்பட்ட நகம், அதில்.. எதோ இரண்டு வண்ணத்தில் பாலீஷ் மின்னியது.. கழுத்தில் விசு அணிவித்திருந்த செயின்.. தங்களின் குடும்ப சங்கிலி. பத்மநாபன் சொல்லியது போல இது எங்களின் முடிவல்லவோ என எண்ணாமல் இருக்க முடியவில்லை வேதாவினால். எல்லா குறைகளையும் பவானியின் பாந்தமான தோற்றமும்.. பதுவிசான பேச்சும் நேர் செய்தது.

வேதாவிற்கு ‘இப்போதுதான் மகனை அழைத்து வரவில்லையே..’ என எண்ணிக் கொண்டார் தாய்.. என்னமோ சட்டென இருவரையும் சேர்த்து பார்க்க வேண்டும் என தோன்றிவிட்டது.. யோசிக்கவெல்லாம் இல்ல.. சற்று பின்னால் சென்று மகனை போனில் அழைத்தார் வேதா. மகன் இபோதுதான் உடற்பயிற்சி முடித்து அமர்ந்திருந்தான்.

வேதா ‘சீக்கிரம் குளிச்சிட்டு.. இங்க வா.. பத்து நிமிஷத்தில் இருக்கனும்’ என்றார், அவனிடம்.

இங்கே எல்லோரையும் அறிமுகம் செய்தனர், விசுவின் சித்தி முறையில் உள்ள.. சுமங்கலி என்பவர். பவானி எல்லோருடனும் நின்றுக் கொண்டாள்.. அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னாள். 

புடவை பார்க்க தொடங்கினர்.. பவானி நடுவில் நிற்க.. எல்லோரும் சுற்றி நின்றனர்.. வாசுகி சற்று தள்ளி நின்றுக் கொண்டார். வேதாவே “வாசுகி உன் பெண்ணுக்கு எந்த நிறம் பிடிக்கும்” என கேட்டார் எல்லோரின் எதிரிலும்.

வாசுகிக்கு அதிர்ச்சி “நீங்க உங்க விருப்படி பாருங்க அண்ணி..” என்றார். இப்படியே பேசிக் கொண்டே எல்லோரும் புடவையை பார்த்துக் கொண்டிருந்தனர்.

விசு வந்து சேர்ந்தான் அங்கு. பத்மநாபன்.. வாசுகியின் அண்ணன்வீராவின் பங்காளி என எல்லோரும் வாசலில் நின்றிருந்தவர்கள் ‘”வா ப்பா” என சொல்லி உள்ளே அழைத்து சென்றனர். 

விசு, எல்லோருடனும் நின்று பேசிக் கொண்டிருந்தான் சற்று தூரமாக. இவன் வந்ததை, வேதா பார்க்கவில்லை.. இவனும், அன்னையின் அருகே செல்லவில்லை.

அன்னை, சற்று நேரம் சென்றுதான் கவனித்தனர் விசுவை. வேதா “விசு எப்போ வந்த” என்றவர். “இங்க வா..” என்றார்.

விசு, அன்னையின் அருகில் வர அப்போதான் வந்திருப்பது பவானி என அவனுக்கு தெரிந்தது. வேதாவின் அருகில் மகன் வரவும் வேதா “பவானி இங்க வாம்மா” என சொல்லி அவளை விசுவின் அருகே நிற்க வைத்தார்.. விசுவிற்கும் பவானிக்கும் ஒன்றும் புரியவில்லை.. உரசிக் கொள்ளும் தூரத்தில் இருவரும் நிற்க.. படபடத்தது இருவருக்கும் மனது. ஒரு நொடிதான் இருவரும் நின்றனர்.

பெரியவர்கள் எல்லோரும் ஆவலாக பார்த்தனர் ஜோடியை.

பவானியால் நிமிர முடியவில்லை.. பவானி “ப்பா…” என்றாள் ஒரு நொடியில். அவளுக்கு தெரிகிறது இப்போது அழைக்க கூடாது என.. ஆனாலும் வந்துவிட்டது அந்த அழைப்பு.

பத்மநாபன் “புடவை எடுத்தாச்சா” என பொதுவாக கேட்டபடி பெண்ணின் அருகில் வந்தார்.

வேதா “பொருத்தம் நல்லா இருக்கு. எதையுமே பார்க்காமல் இப்படி கல்யாணம் நடக்குதேன்னு எண்ணம் எனக்கு.. இப்போது அப்படி தோணலை.. ஏன் க்கா.. இரண்டு பேருக்கும் பொருத்தம் நல்லா இருக்குல்ல..” என சின்ன குரலில் தன் அக்காவிடம் சொல்லி ரசித்துக் கொண்டிருந்தார் வேதா. கோடாக கண்ணில் நீர் நின்றது அன்னைக்கு.. அன்னையின் பரிணாமங்கள் மட்டும் கணக்கில் அடங்காதது போல..

இப்போது பத்மநாபன் அருகில் வந்ததும் விசு போனை பார்த்தவாறு சற்று நகர்ந்துக் கொண்டான்.. எல்லோரும் அப்படியே சற்று நகர்ந்தனர். பவானி “ஐஸ் கிரீம் வேணுப்பா” என சொல்லி.. தன்  தந்தையின் கைபிடித்துக் கொண்டாள். அவளின் கை சில்லிட்டு லேசாக நடுங்கியது..

பத்து “இருடா.. கடையே இல்ல.. கொஞ்ச நேரம் ஆகட்டும்..” என சொல்லிக் கொண்டிருந்தார்.

இப்போது எல்லோரும் புடவையில் கவனமாக.. விசு, பவானியை அவ்வபோது பார்த்துக் கொண்டிருந்தான்.. கையில் போனோடு. 

பெண் தன் தந்தையின் கையை விடவேயில்லை.. இப்போது இரண்டு புடவையை அவளுக்கு வைத்து பார்க்கலாம் என அழைத்தார் வேதா.

இப்போது அவள் தனியே நின்றாள்.. விசுவின் பார்வை இப்போது இவளையே தொடந்தது. அதை உணர்ந்தவளுக்கு.. என்னமோ போல இருந்தது.. நிமிரவே முடியவில்லை.. அந்த புடவையை கவனிக்கவே முடியவில்லை. 

விசு, ஏனோ அவளையே விடாமல் பார்த்தான்.. அவனிற்கு பவானியை ஆராயத் தோன்றியது.. ‘விருப்பமா.. இதை எப்படி ஏற்றுக் கொள்கிறாள்..’ என அவனுக்கு தெரிய வேண்டி இருந்தது போல.. எனவே அவளையே பார்த்தான். 

பவானிக்கு, அந்த பார்வையின் அர்த்தம் புரியவில்லை.. உறுத்துகிறது அவளை.. தடுமாறினாள்.. கண்ணில் நீர் சேர்ந்துக் கொண்டது. அவளுக்கு புடவையை மடிபெடுத்து வைத்துக் கொண்டிருந்த பெண்களும் எதோ கேட்க.. அவளுக்கு புரியவில்லை.. மனது என்னமோ செய்தது.. ஏனோ அவனின் பார்வையில் தடுமாறியது.

ஆனால் விசுவினால், தன் பார்வையை மாற்ற முடியவில்லை அவனால்.. அவள், தடுமாறுவதும்.. கண்ணில் நீர் கோர்த்திருப்பதும்.. புரிந்தாலும்.. ‘என்னவள்’ என தன் அன்னை அவளை அறிமுகம் செய்யவும்.. சேர்ந்து நிற்க வைக்கவும்.. அவனால் பார்வையை மாற்ற முடியவில்லை.. ஏற்கனவே தட்டுதடுமாறி அவனுள் வந்து நின்றவள்.. இப்போது சம்மணமிட்டு அமர்ந்துக் கொண்டாள், அவன் மன ஆசனத்தில்.

“எதுவுமே.. எதுவுமே.. எதுவுமே..

எதுவுமே நடக்கலாம்..

இறங்கின்றி இளமனம் பறக்கலாம்..

இதுவரை.. விடுகதை..

இனிவரும் கதை ஒரு தொடர்கதை..

வேண்டும் வசந்தம் வாசல் வரலாம்..”

பவானி, அந்த பெண்கள் கேட்டதற்கு “ம்.. போதும்..” என சொல்லி, லேசாக திரும்பி  தன் கண்களை துடைத்துக் கொண்டு.. ‘இவனை கண்டுக்க கூடாது’ என எண்ணிக் கொண்டே.. எல்லோரையும் பார்த்து “நல்லா இருக்கா” என்றாள்.. குரல் வரவில்லை.

விசுவிற்கு என்ன புரிந்ததோ எழுந்துக் கொண்டான் “டைம் ஆச்சு .. நான் கிளம்பரேன் ம்மா.. பை அங்கிள்” என சொல்லி எல்லோரிடமும் ஒரு தலையசைப்புடன் விடைபெற்றான்.

பவானிக்கு ‘அப்பா டா..’ என புடவையை தேர்ந்தெடுத்தாள்.

 

Advertisement