Advertisement

மகன் பேசவேயில்லை என சொல்லவில்லை.. இரண்டு வார்த்தைதான் என்றாலும்.. எதற்கு அவளிடம் பேசினான்..’ என கோவம் இருந்தாலும்.. மகன் சொன்னதே போதும் என யோசிக்க தொடங்கிவிட்டார்.

‘வாசுகி சொன்னது என்ன.. இப்போது மகன் சொல்லுவது என்ன..’ என நன்றாக புரிந்து போனது அன்னைக்கு. இந்த வார்த்தையை மகன் சொல்லிவிட்டு போகவும் ‘அவன் அதை ஒரு பொறுப்பாக எடுத்துக் கொண்டிருக்கிறான்’ என எண்ணம் வந்தது அன்னைக்கு. ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டார் ‘இப்படி ஒரு நிலையில் என்னை வைத்தாயே இறைவா..’ என எண்ணிக் கொண்டார். மனதில் எதோ ஒரு சந்தோஷம் வந்தது.. ‘இனி உன் பொறுப்பு’ என மகன் சொன்னதில்.

அமைதியாக மகனுக்கு காலை உணவை தயார் செய்தார். மனதில் பல பல எண்ண ஓட்டங்கள். இப்படியும்.. அப்படியும்.. வாசுகி சொன்னதையும்.. மகன் சொன்னதையும்.. கணக்கு போட்டுக் கொண்டே வேலையை பார்த்தார்.

விசு வந்தான். ஏதும் பேசாமல் உண்டு, கிளம்பிவிட்டான்.. தொழில் பார்க்கும் போது அம்மா எதையாவது பேசி.. மீண்டும் சண்டை வந்துவிட போகிறது.. என எண்ணி வாய் கொடுக்காமல் கிளம்பிவிட்டான் மகன்.. என கொள்ளுவதா!.. இல்லை, வேதாதான்.. மகன் இந்த வார்த்தையை சொல்லும் வரை காத்திருந்தார்!.. என கொள்ளுவதா தெரியவில்லை. 

வேதாவும் ஏதும் பேசவில்லை. அடுத்த இரண்டு நாட்களும் சென்றது.

பத்மநாபனுக்கு, ஏதும் புரியவில்லை. வேதா, எந்த பதிலும் சொல்லாமல் இருப்பது சங்கடமாக இருந்தது. பொறுமையாக இருந்தார் இந்த வாரம் முழுவதும். ‘மிகவும் அவசரப்படுவதாக அவர்களுக்கு தோன்ற கூடாதே’ என எண்ணம்.. மேலும் ‘வேதா மனம் மாறி வரட்டும்’ எனவும் எண்ணம் பத்மநாபனுக்கு. 

வாசுகிக்கும் அதே கவலை. வேதாவின் மேல் பயமும் வந்தது.. மன்னிப்பை கேட்டு விடலாமா என எண்ணமும் எழுந்தது.. இப்படியே இந்த நாளும் சென்றது.

விசுவிற்கும், தன் அன்னையை பற்றி ஒன்றும் புரியவில்லை.. தான் அன்று பேசியதுடன் சரி அதன்பின் ஏதும் கேட்கவில்லை அன்னை. எனவே, சம்மதமா இல்லையா என தெரியவில்லை அவனிற்கு. ‘நல்லவேளை அங்கிள் அழைக்கவில்லை தன்னை..‘ என எண்ணிக் கொண்டான்.

!@!@!@!@!@!@!@!@!@!@!

மறுநாள் வாசுகிக்கு, மனது சமநிலையில் இல்லை.. ‘மகனிடம் கேட்டிருப்பார்.. வேதா. விசு சொல்லி இருப்பார்.. எனவே வேதா கோவத்தில் இருப்பார்.. அதனால் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லையோ..’ என பயம் மனதை தாக்கியது.

பத்து மணிக்கே வேதாவின் எண்ணிற்கு அழைத்தார் வாசுகி. பெண்ணின் வாழ்க்கை ஆகிற்றே.. எனவே மனது அடித்துக் கொண்டது. “அண்ணி, நல்லா இருக்கீங்களா..” என பேச்சை ஆரம்பித்தார்.

வேதா “ம்.. சொல்லுங்க” என சொல்லி ஏதும் பேசாமல் இருந்துக் கொண்டார்.

வாசுகி “அண்ணி, விசு மாப்பிள்ளை..” என்க.

வேதா “யாரு புரியலை..” என்றார், ஏதும் அறியாக் குரலில்.

வாசுகிக்கு, முடிவே ஆகிற்று வேதா இளகவில்லை என. அடுத்து எப்படி பேசுவது என தெரியாமல் “அ..து.., விசு தம்பி, பவானி கிட்ட பேசினார் அண்ணி.. அவங்களுக்கு சம்மதம் எனும் போது நாம் ஏன் தள்ளி போடணும்.. நீங்க என்ன சொல்றீங்க அண்ணி” என்றார் பொறுமையானக் குரலில்.

வேதாவிற்கு, அவர்கள் சொல்ல வருவது புரிகிறது.. ஆனால், நேற்று, தான் இருந்த கோவத்தில்.. தன்னிடம் சொல்லாமல் மகன் பேசியதை.. வாசுகி சொல்லவும்.. குத்தி காட்டுவது போல தோன்றிவிட்டது அப்போது. இப்போது சரிசமமாக எல்லார் மேலும் கோவம் வேதாவிற்கு.. ‘தனக்கு தெரியாமல் மகன் எதற்கு பேசவேண்டும்.. அது பெரிய தப்பு.. அதை வாசுகியும் ஏன் சொல்ல வேண்டும்.. பத்ம்நாபன்னுக்கு இந்த சம்மந்தம் ஒத்துவராது என புரியாதா’ என எல்லோர் மேலும் கோவம்.

எனவே, ஒரு நெருக்கடியில் தன்னை நிருத்தி விட்டனர் என கோவம். வேதா “என்ன செய்யணும் சொல்லுங்க.. நான் அப்படியே செய்துடறேன்.. என் பையன்கிட்ட பேசிட்டீங்களா..” என்றார்.. கோவமாக கிண்டலாக.. பல உணர்வுகளில் இந்த வார்த்தைகளை சொன்னார் வேதா.

வாசுகிக்கு, வேதாவை தெரியும் என்பதால் “அண்ணி..” என்றார் அதிர்ந்து. பின் பொறுமையான குரலில் “அண்ணி, என்ன அண்ணி இப்படி பேசுறீங்க.. நீங்க முக்கியம்ன்னு தானே வந்து உங்ககிட்ட பேசினோம்.. விசு தம்பிகிட்ட எதுவும் நாங்கள் பேசவில்லை.. கேட்கவில்லை.. சங்கடமாக நினைக்கிறாரா.. என தெரிந்துக் கொண்டோம் அவ்வளவுதான். மற்றபடி உங்ககிட்டதான் பேச்சு வார்த்தை எங்களுக்கு.. நீங்க முடிவெடுத்து சொல்லுங்க அண்ணி.“ என்றார் தெளிவாக.

வேதாவிற்கு, எப்போதும்  அவரை முக்கியமாக கொண்டாட வேண்டும்.. அதை சரியாக செய்தார் வாசுகி. இப்போது வேதா கொஞ்சம் இளகினார்.

வேதா “நான் என் பையனுக்காக யோசிக்கிறேன்.. பார்த்துவிட்டு சொல்றேன்” என்றார்.

வாசுகி “சரி அண்ணி” என்றார்.. இருவரும் போனை வைத்தனர். இரு பெண்களும் சுமூகமாக பேசிக் கொண்டனர்.

வேதாவிற்கு, வாசுகி சொன்னதும் யோசிக்க வைத்தது.. எல்லாவற்றையும் யோசித்துக் கொண்டே நான்கு நாட்கள் கடத்தினார்.

தினமும் விசு, அன்னையை பார்ப்பான் ஏதாவது சொல்லுவாரா என.. ஆனால், வேதா அமைதியாகவே சென்றுவிடுவார்.. விசுவிற்கு மேலும் மேலும் கோவமே அதிகமானது  ‘என் வார்த்தைக்கு மதிப்பில்லையா’ என.

மேலும் இரண்டு நாட்கள் சென்றது.

காலையில், பத்மநாபனை அழைத்தார் வேதா. பொதுவாக இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு.. “பொண்ணு நட்சத்திரம் சொல்லுங்க.. நல்ல நாள் பார்க்கணும்” என்றார் இதமானக் குரலில்.

வேதா, அழைத்து இப்படி சொல்லவும் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டார்.. புரிந்துக் கொள்வதற்கு.. பத்மநாபன். பின் தன் பெண்ணின் நட்சத்திரம் சொன்னார். 

வேதா “நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்திடுங்க ண்ணா, இப்போதே” என்றார், நல்லவிதமாக. அவசர அவசரமாக இருவரும் கிளம்பி வீராவின் வீட்டை அடைந்தனர்.

வேதாவும் ஜோதிடரும் அமர்ந்திருந்தனர் ஹாலில். ஆக, நால்வரும் மேற்கொண்டு பேச வேண்டியதை பேசி முடித்தனர். வேதா பெரிதாக லிஸ்ட் சொன்னார்.. தான் எதிர்பார்த்ததை சொன்னார்.. இது இப்படிதான் வேண்டும் என்றார்.. நாங்கள் இப்படிதான் செய்வோம் என்றார். எதற்கும் பத்மநாபனும் வாசுகியும் மறுத்து பேசவில்லை. 

ஒருமாதத்தில் தேதி குறித்தனர்.. முகூர்த்தம் இவர்களுக்கு சரியாக அமையாததால்.. நிச்சயம் வைக்க முடியவில்லை. நேரே திருமண தேதி குறித்துக் கொண்டனர்.

வேலைகள் பரபரப்பாக நடந்தது.. தன் பெண்ணுக்கு, புடவை நகை என வாங்கவே வாசுகிக்கு நேரம் சரியாக இருந்தது. அதைவிட பத்திரிக்கை, அழைப்பு.. என சேர்ந்துக் கொள்ள அலைந்துக் கொண்டே இருந்தனர் பத்மநாபனும் வாசுகியும். என்ன சந்தோஷமாக அலைந்தனர்.. வேலைகளை செய்தனர். திருமணம் பெண் வீட்டின் பொறுப்பு என முன்னமே சொல்லிவிட்டார் வேதா. எனவே மண்டபம் சாப்பாடு என எல்லாம் இவர்கள் பொறுப்பாகியது.

வாசுகிக்கு, ஒரு குறை.. பெண்ணை முகூர்த்த புடவை எடுக்க கூப்பிடுவார்களா.. மாட்டார்களா.. என எண்ணம். அதற்காக காத்துக் கொண்டே இருந்தார் எனலாம்.

வேதாவும், வாசுகி எதிர்பார்த்தபடி அழைத்தார் பத்மநாபனுக்கு ‘நாளை பெண்ணை கூட்டி வாங்க புடவை எடுக்க’ என கூப்பிட்டார். 

‘அப்பாடா..’ சந்தோஷம் வாசுகிக்கு. ஏனெனில் திருமணநாள் குறித்த பிறகு.. வேதாவோ விசுவோ பெண்ணை வந்து பார்க்கவில்லை.. காரணம் நாட்கள் ஏதும் நன்றாக அமையவில்லை.. அதுவும் தெரியும் வாசுகிக்கு. வேதா இந்த நாள் நட்சத்திரம் என எல்லாம் பார்ப்பார்.. ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்வதே அவருக்கு கொஞ்சம் உறுத்தல்தான். ஆனால், எல்லாம் முடிவானபின் எதற்கு ஜாதகம் என எல்லோரும் சொல்ல.. அரைமனதாகதான் சம்மதித்தார். எனவே எல்லாம் நேரப்படி நடக்க வேண்டும் வேதாவிற்கு.

ஆனாலும் ஒரு எதிர்பார்ப்பு.. வேதா, தன் பெண்ணை எப்படி எடுப்பார்.. இவள் எப்படி நடந்துக் கொள்வாள் பழகாமல்.. என உள்ளே ஓடிக் கொண்டே இருந்தது பெண்ணை பெற்ற அன்னைக்கு. இப்போதுதான் கொஞ்சம் நிம்மதியானது.

Advertisement