Advertisement

நிலவை தேடும் பால்வெளி இவன்!..

12

வாசுகிக்கு, மனது கேட்கவில்லை.. வேதாவிடம் அப்படி சொல்லிவிட்டு வந்தது. ஆனால், வேதாவிற்கு, தங்களை பிடிக்காது என்பதுதான் தெரிந்த விஷயம் ஆகிற்றே.. எனவே, வேதா இந்த சம்மந்தத்தை எதிர்பார் என தெரியும் வாசுகிக்கு. எனவே, வேறுவழியில்லாமல், இந்த நிகழ்வை செய்தார்.. அவர்கள் இருவரும் சகஜமாக பேசுகிறார்கள் என தெரிந்தால்.. தன் மகனிடம் மறுத்து ஏதும் பேசாமல் இருப்பார் எனத்தான் இப்படி சொல்லி வந்தார். இது தவறென.. தெரியும் வாசுகிக்கு. ஆனால், அந்த நேரத்தில் வேதாவின் முகத்தில் தெரிந்த வெறுப்பை படித்தவர்.. சட்டென தங்களின் சுயநலத்திற்காகத்தான் சொல்லி வந்தார். 

என்ன செய்வது.. பெண்ணின் கழுத்தில் ஒருவன் செயின் அணிவித்துவிட்டான்.. அது எப்படி.. எந்த சூழ்நிலையில் வேண்டுமானாலும் நடந்திருக்கலாம், சாட்சியாக.. நாங்கள் நால்வரும் இருந்தோமே.. அதை எப்படி மாற்ற முடியும். அது தந்த தெம்பில்தானே என் கணவர் மீண்டு வந்தார்.. அதை எப்படி மாற்ற முடியும், மேலும் உறவுகள் வரும் போது.. அவளின் கழுத்தில் இருந்ததை பார்த்து சென்றிருக்கின்றனரே. என் அண்ணன் எத்தனை கேள்வி கேட்டான்.. ‘என்ன இவ்வளோ பெரிய செயின்..” என்றான். ‘உன்கிட்ட இப்படி ஒன்னு இருக்கா..’ என என் அண்ணி எத்தனை கேட்டார். அவரின் அக்காவும் ‘எதுக்கு கழுத்தில் இவ்வளோ பெரிய செயின் சின்ன பிள்ளைக்கு..’ என நாலுமுறை கேட்டார்களே. எல்லோரிடமும் தட்டு தடுமாறி பதில் சொல்லி.. விசுவிடம் எப்படி கேட்பது.. சொல்லுவது.. என தயங்கி, ‘இல்லை, சும்மா.. அங்கிளை சமாதானம் செய்ய போட்டேன்..’ என சொல்லி விடுவாரோ என பயந்து நின்று..  எத்தனை அவஸ்த்தை. இப்போது கூடி வரும் நேரத்தில் மீண்டும் முதலிலிருந்து தொடங்க எப்படி எங்களால் முடியும்’ என வாசுகி தனக்கு தானே சமாதானம் செய்துக் கொண்டார்.

!@!@!@!@!@!@!@!@!@!@!

வேதாவிற்கு, அவ்வளவு சீக்கிரம் அந்த குடும்பத்தை ஒத்துக் கொள்ள மனது வரவில்லை. ‘இன்று சொல்லிவிட வேண்டும்.. நீயே கல்யாணம் செய்துக்க.. என்னை ஏதும் கேட்க கூடாதுன்னு சொல்லிடனும்.. அப்படி என்ன பிடிவாதம் அவனுக்கு. முன்னமே சொல்லி இருக்கிறேன்.. இந்த காதல்.. கல்யாணாம் இதெல்லாம் கூடாது என சொல்லிதானே அவனை வெளிநாடு அனுப்பினேன்.. அங்கிருந்து சரியாக வந்தவன், இங்கே இப்படி போய் நிற்கிறான், அதுவும் அவர்கள் குடும்பத்தில்..’ என மனது இரவு முழுவதும் ஆறவேயில்லை அன்னைக்கு.

இன்று அமைதியாக நடமாடினார். அன்னையின் மனது வாசுகி சொன்ன வார்த்தையிலும், மகன் சொன்ன ‘என் எண்ணமும் முக்கியம்’ என்ற வார்த்தையிலும் சுழலுகிறது.. ஆனால், நிலைபெற்று நிற்க முடியவில்லை அவரால்.

அதிகாலையில் எழும் பழக்கமாக சீக்கிரமே எழுந்துக் கொண்டார் வேதா. முன்புறம் கார்டனில் நடைபயிற்சி, யோகா என செய்வார் எப்போதும், இன்று.. வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு, காபியோடு நின்றார். மனது சலனத்தில் இருந்தது.. ‘இப்படி பையன் மதிக்காமல் நடக்கிறானே, அவங்க அப்பா இருந்திருந்தால்.. இப்படி இருப்பானா.. இப்படி, அவர்கள் வீட்டு பெண் வருவதற்கு முன்பே சண்டையில் ஆரம்பிக்கிறது பேச்சு.. அத்தோடு அவர்கள் வீட்டு சம்மந்தம் வேறு’ என பொருமிக் கொண்டிருந்தார். என்னமோ தீரவேயில்லை கோவம்.

பின், பொறுமையாக குளித்து, பூஜையறையில் தன் கணவனின் படத்தின் முன்பு அமர்ந்துக் கொண்டார்.. அப்போதும் மனது அமைதியாகவில்லை. அவனை காலையிலேயே எதிர்பார்த்தார் தன்னோடு பேச வருவான் மகன் என எதிர்பார்த்தார் அன்னை.

விசு, தன் அன்னையை ஏமாற்றாமல் வந்து சேர்ந்தான் கீழே, தன் உடற்பயிற்சி முடித்துக் கொண்டு.. சின்ன டவலில் தன் மேனியை துடைத்துக் கொண்டே கீழே இறங்கி வந்தான் மகன். ஆஜானுபாகுவாய்.. தன் கணவனை நினைவுப் படுத்தும் விதமாக மெதுவாக படிகளில் இறங்கி வந்தான்.. பார்த்திருந்த அன்னைக்கு மனது நிறைந்து போனது.. கோவத்தை எல்லாம் தள்ளி வைத்து.. அவனிற்கு சத்துமாவு கஞ்சி தயார் செய்துக் கொண்டு வந்தார். 

மகனிடம் கொடுத்தார்.. “பத்து நிமிடம் ஆகட்டும்மா” என்றான் இயல்பானக் குரலில்.. இருவரும் சண்டை போட்டுக் கொண்டனர் நேற்று.. என்றால், நம்ப முடியவில்லை. இப்போது, மீண்டும் சண்டை போடுவார்கள் என சொன்னாலும் யார் நம்புவார்கள் தெரியாது.

வேதா, டீபாய் மேல் வைத்தார் குவளையை.

விசு “என்ன ம்மா.. யோசிச்சியா..” என்றான்.

வேதா, பதிலே சொல்லவில்லை. விசு “ம்மா, சொல்லுங்க” என்றான், மரியாதை பன்மை அவ்வபோதுதான் வரும் அவனிற்கு.

வேதா “நீ அந்த பொண்ணு கிட்ட பேசுனியா..” என்றார்.

விசு “ம்.. பேசினேன்..” என்றான்.

வேதாவிற்கு , மனது வாடித்தான் போனது. தன் மகன் அந்த பெண்ணிடம் பேசி இருப்பான் என அவருக்கு தோன்றவில்லை.. எதோ அவர்கள் குடும்பம் கொடுத்த அழுத்தத்தில் ஏதேனும், பொதுவில் சொல்லி இருப்பான்.. அதைதான் வாசுகி சொல்லுகிறார் என எண்ணிக் கொண்டிருந்தார் அன்னை.

ஆனால் விசு ‘ஆம்’ என சொன்னதில் மீண்டும் துவண்டு போனார்.. கொஞ்சம் கொஞ்சமாக ஏதாவது சொல்லி மகனுக்கு.. சுட்டிகட்டலாம், யோசிக்க வைக்கலாம் என நினைக்கிறார் அன்னை. ஆனால் முடியவில்லை.. மீண்டும் எதோ ஒன்று அவரின் கைவிட்டு போனது போல் ஆனது.

வேதா “இவ்வளோ தூரம் பழக்கம் வந்திருக்கு, அன்று நீ சும்மாதான் செய்தேன்னு நினைச்சு நான் அப்படியே விட்டதுதான் தப்பாக போச்சு, பாரு… என்கிட்டே சொல்லனும்.. கேட்கணும்ன்னு தோணலை, எல்லாம் நீயே செய்துகிட்ட.. அப்படியே உன் கல்யாணத்தையும் நீயே நடத்திகோ.. நான் எதுக்கு உனக்கு” என்றவர் எழுந்து கிட்சென் சென்றார்.

விசுவிற்கு கோவமே வந்தது.. “என் வாக்கு உனக்கு முக்கியமில்லையா ம்மா” என்றான் சத்தமாக.

வேதா “அப்போ அம்மா வேண்டாமா” என்றார் அங்கிருந்தே அதே சத்தமாக.

விசு, தளர்ந்து போனான் இப்போது. அமைதியான குரலில் “ம்மா, நீ நினைப்பது போல எல்லாம் பேசலை, இன்னும் சரியா கூட அவங்க பேர் தெரியாது. நேற்றுதான் பேசினேன்.. அவங்களுக்கும் பிடிக்கணுமேன்னு கேட்டேன்.. அவங்க படிக்க அலோ பண்ணுவீங்களா கேட்டாங்க, நான் ஓகே சொன்னேன். ஜஸ்ட் ரெண்டே வார்த்தைதான் பேசினேன். வேற எதுவுமே பேசலை.. நா..நான்.. எ..எனக்கு.. அந்த பொண்ணை பற்றி ஏதும் தெரியாது.. நான் எப்படி ம்மா.. இவ்வளோ பெரிய செயலை செய்துட்டு.. அந்த பெண்ணை கண்டுக்காமல் விட முடியும்.. எனக்கு மனசு கேட்க்கலை ம்மா.. இவளை தவிர வேறு பெண்ணை என்னால் கட்ட முடியாது.. இனி உன் பொறுப்பு..” என்றவன் எழுந்து சென்றுவிட்டான் கோவமாக., எவ்வளவு பேச வைக்கிறார்.. ஏதும் புரியாதா அம்மாக்கு, இல்லை, ஒன்றுமே தெரியாதது போல இருக்கிறாரா..’ என கோவமோ கோவம் அவனுக்கு. மகன் கோவமாக.. எரிச்சலாக மேலே சென்றான்.

 

Advertisement