Advertisement

“ந..நந்து… நீ என்ன சொல்லற… நமக்குள்ள பிரேக் அப்பா… உனக்கு வேற ஒருத்தனோட கல்யாணமா… என்ன கதை விடற… இதெல்லாம் நான் நம்ப மாட்டேன்… நீ வேற ஏதோ ஒரு காரணத்தை மனசுல வச்சுக்கிட்டு தான் என்கிட்டே இப்படிப் பேசற… உண்மையை சொல்லு…” அவன் அவள் தோளைப் பிடித்து உலுக்க கையைத் தட்டிவிட்டாள்.
“ஆமா… நான் சொன்னதெல்லாம் உண்மைதான்… உனக்கு காரணம் தான் வேணும்னா, சொல்லறேன் கேட்டுக்க… ரெண்டு நாளைக்கு முன்னாடி உன் அப்பா எனக்கு போன் பண்ணினார்… அவர் சம்மதத்தோட இந்த கல்யாணம் நிச்சயம் நடக்காது, நீ ஒரு நல்ல குடும்பத்துல பிறந்த  பொண்ணா இருந்தா என் மகனை விட்டு விலகிடு… எனக்கு உங்க கல்யாணத்துல விருப்பமில்லைன்னு சொன்னார்… நான் எத்தனையோ கெஞ்சிப் பார்த்தேன்… அவர் ஒத்துக்கல… என்னை மீறி கல்யாணம் பண்ணிகிட்டா அவன் எனக்கு மகனே இல்லை… அவனை இந்த குடும்பத்தை விட்டே தள்ளி வச்சிருவேன்னு சொல்லிட்டார்… எனக்குத் தெரியும்… உனக்கு உன் குடும்பத்தை எவ்ளோ பிடிக்கும்னு… என் ஒருத்திக்காக அவங்களை எல்லாம் நீ இழக்கக் கூடாது… உன் வீட்டுல சம்மதிக்காம என் குடும்பத்துலயும் இந்த கல்யாணத்தை ஒத்துக்க மாட்டாங்க… அப்பாக்கு முடியாத இந்த சூழ்நிலைல இதெல்லாம் சொல்லி வேற எந்த பிரச்சனையும் ஆயிடுமோன்னு எனக்கு பயமாருக்கு… நாம பிரியறது தான் எல்லாத்துக்கும் நல்ல தீர்வுன்னு எனக்குத் தோணுது… நான் உன் அப்பாகிட்ட என்னால உங்க குடும்பம் பிரியாதுன்னு வாக்கு கொடுத்திட்டேன்… நீயும் இதுக்கு கட்டுப்பட்டு தான் ஆகணும்…” என்றவளை அதிர்ச்சியுடன் அவன் நோக்கிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் அவளது அலைபேசி சிணுங்கியது.
அதை எடுத்துப் பார்த்தவள் கண்கள் சுருங்க, ஒரு தீவிரம் முகத்தில் வந்து ஒட்டிக் கொண்டது. அவனைத் தயக்கத்துடன் பார்த்தவள், “போன் பேசிட்டு வந்திடறேன்…” என்று எழுந்து கொள்ள அவனுக்குத் தெரியக் கூடாதா என்பது போல் புதிதாய் அவளைப் பார்த்தான்.
அவள் சொன்ன வார்த்தைகளை ரீவைன்ட் பண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தவன் மனம் வேதனையில் தவித்தது.
“கடைசியில் நீங்கதான் என் காதலுக்கு வில்லனாப்பா…” என நினைத்தவன் மனம் தந்தையிடம் கோபப்பட்டது.
“இல்லை… என் காதலை தோற்க விடமாட்டேன்… நந்தினி இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்லை… ரெண்டு குடும்பத்துலயும் எப்படியாச்சும் பேசி சம்மதம் வாங்குவேன்…” என யோசித்துக் கொண்டவன் எழுந்து நந்தினியைத் தேட அவளைக் காணவில்லை. திகைப்புடன் தேடிக் கொண்டே பார்க் முகப்புக்கு வந்தான் ஆதித்யன்.
வெளியே இருக்கிறாளா என யோசித்துக் கொண்டே தேடியவன் விழிகள் எதிர்ப்புறம் இருந்த ஹோட்டலுக்குள் நுழைந்த மனிதரைக் கண்டதும் திகைத்தன.
அது அவனது தந்தை சுந்தரேசன்.
அவரை அங்கே எதிர்பார்க்காதவன் மூளை சட்டென்று ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு என்று கணக்குப் போட, “நந்தினியோட நான் பேசிட்டு இருக்கறதைப் பார்த்து இவர் தான் அவளுக்கு போன் பண்ணினதா… எனக்குத் தெரியாம இங்க வந்து இத்தனை வேலை பண்ணிட்டு இருக்கிங்களா…” யோசித்தவன் முகத்தில் கோபம் தெரிந்தது.
“நான் அவ்வளவு சொல்லியும் என் காதலைப் பிரிக்க கங்கணம் கட்டி இறங்கிட்டிங்களா…” என யோசித்துக் கொண்டே ஆவேசத்துடன் வேகமாய் சாலையைக் கடந்தவன் அந்த ஹோட்டலை நோக்கிச் செல்ல பின்னில் நந்தினியின் குரல் கேட்டது.
“ஆதி… நான் இங்க இருக்கேன்…” அவளது அன்னையிடம் பேசிவிட்டு வந்தவள் ஆதி எங்கோ வேகமாய் ஓடுவதைக் கண்டு அவளும் தொடர்ந்தாள். அன்னை அவளது கல்யாண சம்மதத்திற்காய் அழைத்திருக்க அவன் முன்னில் பேசத் தயங்கியவள் எழுந்து சற்றுத் தள்ளி இருந்த மரத்தின் பின்னில் நின்று கொண்டிருக்க கவனிக்காமல் வெளியே தேட சென்ற ஆதியின் கண்ணில் சுந்தரம் பட்டிருந்தார்.
“ஆதி எங்கே இத்தனை வேகமாய் செல்கிறான்… எதுவும் பிரச்சனையா… ஒருவேளை, என்னிடம் கோபப்பட்டு செல்கிறானோ…” என யோசித்தவள், “ஆதி…” என கத்திக் கொண்டே அவசரத்தில் இருமருங்கும் நோக்காமல் சாலையைக் கடக்க வேகமாய் வந்த கார் பிரேக் பிடிக்காமல் அவள் காலில் இடிக்க அலறலுடன் கீழே விழுந்தாள்.
சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்த ஆதி, “நந்து…” என கத்திக் கொண்டே திரும்ப ஓடி வர அதற்குள் அங்கே கூட்டம் கூடத் தொடங்கியது. நந்தினி அடிபட்டதில் மயங்கியிருக்க காலில் இருந்து வேகமாய் வெளியேறிக் கொண்டிருந்த ரத்தம் பூமியை நனைக்கத் தொடங்கியது.
“ஐயோ நந்து… இப்படி ஆயிருச்சே…” அவளை மடியில் போட்டுக்கொண்டு காலை கையில் பிடித்துக் கொண்டு அழுது புலம்பியவனைத் தேற்ற யாருமில்லை. சில நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வர அவளைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினர்.
“ஐயோ… கடவுளே…” அலறிக் கொண்டு எழுந்து அமர்ந்த சகுந்தலாவின் சத்தத்தில் சுந்தரமும் விழித்துக் கொண்டார்.
உடலெல்லாம் வியர்த்துக் கொட்ட பெரிய மூச்சுகளை எடுத்துக் கொண்டு அமர்ந்திருந்த மனைவியின் தோளில் கையை வைத்தவர், “என்ன சகு… ஏதாச்சும் கெட்ட கனவா…” என்று கேட்க எதுவும் பேசாமல் இருந்தார்.
“சரி, தண்ணியக் குடிச்சிட்டுப் படு…” சொல்லிவிட்டு அவர் படுத்துக் கொள்ள சகுந்தலா அப்படியே அமர்ந்திருந்தார்.
உறங்கி இருந்தால் தானே கனவு வருவதற்கு… பழைய நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருந்தவர் அன்றைய தாக்கத்தில் கத்திவிட்டார்.
நந்தினியின் ஒரு கால் நரம்புகள் சிதைந்து விட்டதால் காலை அகற்ற வேண்டும் என்று டாக்டர் சொல்லிவிட தன் மகன் அழுது துடித்ததை அருகிருந்து கண்டவரால் அந்த நினைவை எளிதில் கடக்க முடியவில்லை.
அதற்குப் பின் ஏதேதோ நடந்து விட்டது.
நந்தினியின் தாய் தந்தையர் விபரமறிந்து கலக்கத்துடன் அவளைக் காண வந்தனர். வானதிக்கு நர்ஸிங் எக்ஸாம் நடந்து கொண்டிருந்ததால் அவளை வரவேண்டாம் என்று ஊரிலேயே விட்டு வந்தனர்.
நந்தினி மயக்கத்தில் இருக்க அவளைப் பரிசோதித்த டாக்டர் காலை உடனடியாய் நீக்கியாக வேண்டுமென்று சொல்ல அவள் பெற்றோரைவிட அதிகம் கலங்கிப் போன ஆதி கதறினான். வேறு வழியில்லை என்று டாக்டர் சொன்னதால் காலை நீக்க சம்மதித்தனர். நிறைய செலவாகும் என்று தோன்றவே கையிலிருந்த சேமிப்பு முழுவதையும் கொண்டு வந்த ஆதி, அதை நந்தினியின் தந்தையிடம் கொடுக்க, அவர் வாங்கிக் கொள்ள தயங்கினார்.
“அங்கிள்… இப்ப நமக்கு நந்தினி தான் முக்கியம்… எவ்வளவு செலவானாலும் பரவால்லை… அவளுக்கு எதுவும் ஆகிட கூடாது… நீங்க கூட இருந்து பார்த்துக்கங்க… எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு… இன்னைக்கு அதை முடிச்சிட்டு நாளைக்கு திரும்ப வந்திடறேன்…” என்றவன் அடுத்த பிளைட்டில் சென்னை கிளம்பினான்.
அன்று சனிக்கிழமை என்பதால் குந்தவையும் அருளும் வீட்டில் இருக்க, காலையில் பெங்களூரில் இருந்து வீடு திரும்பி இருந்த சுந்தரம் அலுவலகம் செல்லாமல் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.
“அம்மா…” கோபத்துடன் அழைத்துக் கொண்டே உள்ளே வந்த ஆதியின் குரலைக் கேட்டு சகுந்தலாவும் குந்தவையும் எட்டிப் பார்க்க ஹாலில் அமர்ந்து டீவி பார்த்துக் கொண்டிருந்த சுந்தரம் திடுக்கிட்டுத் திரும்பினார். அண்ணனின் குரலைக் கேட்டு அருளும் கீழே வந்தான்.
“ஆதி, வாடா, என்ன திடீர்னு வந்திருக்க…” மலர்ந்த முகத்துடன் வரவேற்ற சகுந்தலா மகனின் முகத்தில் இருந்த கோபத்தின் காரணம் புரியாமல் திகைத்தார்.
“என்ன இந்த நேரத்துல வந்திருக்க, பிளைட்ல வந்தியா…” தந்தை கேட்கவும் அவனது முகம் மேலும் சிவந்தது.
“அம்மா, அந்தாளைப் பேச வேண்டாம்னு சொல்லுங்க… கொலவெறில வந்திருக்கேன்…” அவனது வார்த்தையைக் கேட்டு அனைவரும் அதிர்ந்து நிற்க சுந்தரம் ஒன்றும் புரியாமல் வாயடைத்து நின்றார்.
“ஆ..ஆதி, என்னடா பேசற… அப்பா டா… உனக்கு என்னாச்சு…”
“பைத்தியம் பிடிக்கல… அவ்ளோதான்…” என்றவனின் கண்கள் சிவந்து கண்ணீர் நிறைய யாருக்கும் புரியவில்லை.
அவனைக் கண்டு கலங்கிப் போன சகுந்தலா, “டேய்… ஏன் ஒருமாதிரி பேசற… என்னடா பிரச்சனை…” என்றார்.
“நான் இன்னும் உயிரோட இருக்கனே… அதான் பிரச்சனை… நான் சொன்னனே மா… என்னால நந்தினியை மறக்க முடியாது… அவளைத் தவிர வேற யாரையும் கல்யாணம்  பண்ண மாட்டேன்னு சொன்னனே… நீங்கதான் அப்பாகிட்டப் பேசி எப்படியாச்சும் சம்மதம் வாங்கித்தரேன்… கொஞ்சம் வெயிட் பண்ணுன்னு சொன்னிங்க… நானும் பண்ணினனே… ஆனா, அது இந்த கேவலமான வேலையைப் பண்ணதான்னு எனக்குத் தெரியாமப் போயிருச்சு…”
“ஆதி… நீ என்ன சொல்லறேன்னு எதுவுமே புரியல… தெளிவா விஷயத்தை சொல்லேண்டா…” என்றார் தவிப்புடன்.
“இவரு நேத்து பெங்களுரு வந்திருந்தாரா…”
“ஆமாம், ஏதோ பிசினஸ் மீட்டிங் விஷயமா போயிட்டு வந்தார். உடனே கிளம்ப வேண்டி இருந்ததால உன்னைக் கூடப் பார்க்க நேரமில்லைன்னு சொன்னார்…”
“ம்ம்… ஆமா, என்னைப் பார்க்க நேரமில்லைதான்… ஆனா பார்க்க வேண்டியவங்களைப் பார்த்து எங்க காதலைக் குழி தோண்டிப் புதைக்க என்ன பண்ணணுமோ அதைப் பண்ணிட்டு தான் வந்திருக்கார்…” ஆதி சொல்லவும் சகுந்தலா குழம்ப சுந்தரம் அதிர்ந்து நோக்கினார்.
“நான் என்னடா பண்ணேன்…” சுந்தரம் கேட்க அவர் முகத்தைக் கூட நோக்காதவன், “அம்மா, அவரைப் பேச வேண்டாம்னு சொல்லுங்க…” என்றான் கோபத்துடன்.
“அண்ணா, கொஞ்சம் பொறுமையா பேசுங்க… எதுக்கு இவ்ளோ கோபம்…” என்றான் அருள்.
“பொறுமையா இருந்ததுக்கு பரிசா தான் என் நந்தினியை ஆக்சிடன்ட் பண்ணி ஹாஸ்பிடல்ல படுக்க வச்சிட்டாரே… இனியும் என்னால பொறுமையா இருக்க முடியாது…” அவன் ஆத்திரமும், அழுகையுமாய் சொல்ல அனைவரும் அதிர்ந்து நோக்கினர்.
சுந்தரம் எதுவும் புரியாமல் மகனையே பார்த்துக் கொண்டிருக்க அவரிடம் வந்தவன், “சொல்லுங்க, என் நந்தினியைக் கார்ல அடிச்சுத் தூக்க நீங்கதானே பிளான்  பண்ணினீங்க… கை, கால் தான் பிளானா… இல்ல ஆளையே தூக்க சொல்லி இருந்திங்களா…” என்றான்.
அவன் சொன்னதைக் கேட்டதும் சகுந்தலா, “ஐயோ, என்னடா சொல்லற…” என்று அலற சுந்தரம் அதிர்ச்சியும் கோபமுமாய் மகனைப் பார்த்து ருத்ரமூர்த்தியாய் நின்றார்.
சந்தர்பங்களும்
சூழ்நிலையும்
எதிராகும்போது
நமை சார்ந்தவர்களும்
நமக்கு எதிரியாகலாம்…

Advertisement