Advertisement

அத்தியாயம் – 21
நாட்கள் நகர்ந்திருக்க அன்று வெள்ளிக் கிழமை.
தினமும் ஆதித்யன் நந்தினியை அலுவலகத்தில் கண்டாலும், இரண்டு நாளாய் அவளிடம் ஒரு விலகல் தெரிந்தது. அதை கவனித்த ஆதி மாலையில் அவளுடன் பேசுவதற்காய் அலுவலகம் முடிந்து காத்திருந்தான். HR டிபார்ட்மென்டில் பணிபுரியும் பாஸ்கர் இவனைக் கண்டதும் நின்றான்.
“ஹலோ பாஸ்… கிளம்பலயா, ஓ… நந்தினிக்கு வெயிட்டிங்கா இருக்கும்…” அவனே கேட்டு பதிலும் சொல்லிக் கொண்டவன் புன்னகையுடன் ஆதித்யனை நோக்கி வந்தான்.
“ம்ம்… ஆமா, இன்னும் அவளைக் காணோம்…”
“ம்ம்… அப்புறம் கேக்கணும்னு நினைச்சேன்… ரெண்டு பேரும் மேரேஜ் அப்புறம் கொச்சின் பிராஞ்ச்ல வொர்க் பண்ணற ஐடியா எதுவும் இருக்கா… நந்தினி விசாரிச்சிட்டு இருந்தா…”
அவன் சொன்ன செய்தி ஆதிக்குப் புதிதாய் இருக்க நெற்றியை சுருக்கியவன் அவனிடம் தனக்குத் தெரியாத போல் காட்டிக் கொள்ள விரும்பாமல், “ஹா, ஆமா… அப்படியும் ஒரு ஐடியா இருக்கு…. இன்னும் கன்பர்ம் பண்ணல…” என்றான் சமாளிப்பாக.
“ஓ… ஓகே… ஆல் தி பெஸ்ட்… நான் கிளம்பறேன்…” என்றவன் தனது பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்ப ஆதித்யாவின் மனதில் யோசனையாய் இருந்தது.
தோழி வினிதாவிடம் பேசிக் கொண்டே வந்த நந்தினி, ஆதி பைக்குடன் காத்திருப்பதைக் கண்டதும் திகைத்தாள்.
“நந்து, பைக்ல ஏறு…”
“நான் வினி வண்டிலயே போயிக்கறனே…” என்றவளை முறைத்தான் அவன். வினிதாவும் அவளுடன் அதே அலுவலகத்தில் பணிபுரியும் ஹாஸ்டல் தோழி.
“உன்கிட்ட கொஞ்சம் பேசணும்… உக்காரு…” அவனது குரல் அதிகாரமாய் ஒலிக்க சற்றுத் தள்ளி காத்திருந்த வினிதாவிடம் தலையாட்டிவிட்டு வண்டியில் ஏறினாள்.
“இதென்ன, புதுசா ஒரு அடாவடித்தனம் ஆதி… வினி என்ன நினைச்சிருப்பா…” என்றாள் நந்தினி.
“பாவம் லவ்வர்ஸ், எங்கயோ டூயட் பாடப் போறாங்கன்னு தான் நினைப்பா… வேற என்ன…”
“ஹூம், அது ஒண்ணுதான் குறைச்சல்…” முனங்கினாள்.
“என்ன சொன்ன…” என்றான் சரியாகப் புரியாமல்.
“ப்ச்… ஒண்ணும் இல்ல, இப்ப நாம எங்கே போறோம்… ப்ளீஸ், என்னை ஹாஸ்டல்ல இறக்கி விடு…”
“ஓஹோ, என் கூட இருக்க அவ்ளோ போரிங்கா இருக்கா… இந்த மாற்றத்தைப் பத்தி தான் உன்கிட்ட பேசணும்…”
“என்ன மாற்றம்… நான் எப்பவும் போல தான் இருக்கேன்…”
“ஓ… அப்ப எனக்குதான் தோணுதா…” கேட்டுக் கொண்டே அருகில் இருந்த சின்ன பார்க் ஒன்றுக்குள் வண்டியை விட, “இப்ப எதுக்கு பார்க்குக்கு கூட்டிட்டு வந்த, எனக்கு டயர்டா இருக்கு… ஹாஸ்டல்ல விடு…” அவள் சொல்ல, “ப்ச்… பேசாம வாடி…” சொல்லிவிட்டு அவள் கையைப் பற்றி அவன் அழைத்துச் செல்ல வாயை மூடிக் கொண்டவள் மனதில் கலவரத்துடன் தொடர்ந்தாள்.
அங்கங்கே குழந்தைகள் விளையாட, அவர்களின் பெற்றோர் அதட்டிக் கொண்டிருக்க, பெரியவர்கள் நடை பழக பார்க் அதிக கூட்டமில்லாமல் இருந்தது.
சற்று ஒதுக்கமான இடம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஆதித்யன் அமர கலக்கமான முகத்தை வெளியே காட்டாமல் இருக்கும் பிரயத்தனத்துடன் எதிரில் அமர்ந்தாள் நந்தினி.
“ஏதாச்சும் சாப்பிடறியா…” அவன் கேட்க, “வேண்டாம்…” என்று தலையசைத்தாள்.
“எனக்குப் பசிக்குது… ஸ்வீட் கார்ன் வாங்கிட்டு வந்திடறேன்…” சொன்னவன் எழுந்து செல்ல நீளமாய் மூச்சு விட்டவள் அவனிடம் என்ன சொல்வதென்று யோசித்தாள். அதற்குள் அவளுக்குப் பிடித்த ஸ்வீட் கார்னை இரண்டு கப்பில் வாங்கிக் கொண்டு அவளை நோக்கி வந்தான் ஆதித்யன்.
ஒன்றை அவளிடம் நீட்ட, “நான்தான் வேண்டாம்னு சொன்னேனே…” என்று அவள் வாங்க மறுக்க, “உனக்கு பிடிச்சது தானே… சாப்பிடு…” என்றவனிடம் மறுக்க முடியாமல் வாங்கிக் கொண்டாள். சூடான ஸ்வீட் கார்னை அவள் எப்போதும் ரசித்து விரும்பி சாப்பிடுவாள்.
குட்டி பிளாஸ்டிக் ஸ்பூனில் எடுத்து சாப்பிட்டுக் கொண்டே ஆதித்யன் அவளைப் பார்க்க அவளோ யோசனையுடனே பேருக்கு எடுத்து கொறித்துக் கொண்டிருந்தாள்.
அவனது குரல் அவள் யோசனையைத் தடை செய்தது.
“நந்து, உனக்கு என்னாச்சு… ரெண்டு நாளா என்னை அவாய்ட் பண்ணற போலத் தோணுது… எனி பிராப்ளம்…”
“ப்ச்… அதெல்லாம் ஒண்ணும் இல்ல, உனக்காத் தோணுது…”
“ஓ… எனக்காவே தோணுதா… ஆமா, நீ எதுக்கு கொச்சின் பிராஞ்ச் பத்தி விசாரிச்சிருக்க… அங்கே டிரான்ஸ்பர் வாங்கிட்டு ஓடிடலாம்னு எதுவும் எண்ணமா…” அவன் கேட்டதும் திகைத்தவள் சமாளித்தாள்.
“அது ஒண்ணும் இல்ல… கொச்சின் பிராஞ்சுக்கு மாறினா அடிக்கடி வீட்டுக்குப் போயிட்டு வந்துக்கலாம்… அப்பாவுக்கு வேற அடிக்கடி உடம்புக்கு முடியாமப் போகுது… அதான் சும்மா விசாரிச்சுப் பார்த்தேன்…” அவன் முகத்தை ஏறிடாமல் குனிந்து கொண்டே சொன்னவளை கண்ணெடுக்காமல் பார்த்தான் ஆதி.
அவன் மனது அவள் பொய் சொல்கிறாள் என்று சொல்ல கப்பில் மிச்சமிருந்ததை சாப்பிட்டுக் கொண்டே கேட்டான்.
“நந்து, உனக்கு நிஜமாலுமே என்னாச்சு… நீ என்னை அவாய்ட் பண்ணிட்டு ஓடுறதை என்னால தாங்க முடியலை… என்கிட்டே எல்லா விஷயத்தையும் டிஸ்கஸ் பண்ணுற நீ எனக்குத் தெரியாம இப்படி பண்ணறது ரொம்ப வலிக்குது…” அவன் சொல்லவும் சட்டென்று நிமிர்ந்தவள் கண்கள் அவன் கண்களைத் தீண்டவும் முணுக்கென்று கண்ணீர் துளிர்த்தது.
அதைக் கண்டதும் பதறிப் போனவன், “ஹேய்… நந்து… என்னடி இது… எதுக்கு இப்ப அழறே…” என்றான் புரியாமல்.
“ஏண்டா, ஏன் என்னை இவ்ளோ லவ் பண்ணித் தொலைச்ச… நான் விலகிப் போனா விட்டுட்டுப் போகாம ஏன், எதுக்குன்னு எதுக்கு டார்ச்சர் கொடுக்கற… உன்னைப் பக்கத்துல பார்த்தா, பேசினா எங்க மனசுல உள்ளதை சொல்லிடுவமோன்னு நினைச்சு தான், விலகிப் போனேன்… கொச்சின்க்கு டிரான்ஸ்பர் கிடைச்சா இந்த ஊரை விட்டே ஓடிடலாம்னு தான் டிரை பண்ணேன்… எதுக்கும் விடாம என்னைப் புடிச்சு வச்சு கேள்வி கேக்கறியே…” கண்ணீர் நிற்காமல் வழிந்தது.
“ஏய் நந்து, என்னடி சொல்லற… நீ விளையாடல தானே… என்னை விட்டு ஓடிப் போகணும்னு நினைச்சியா… எ..எதுக்கு, நா..நான் என்ன பண்ணேன்…” என்றான் அதிர்ச்சியுடன்.
“இதோ, இப்படி எனக்காகத் துடிக்கறியே… அதான் நீ பண்ணற முதல் தப்பு… என்னை லவ் பண்ணது அதைவிடப் பெரிய மகா தப்பு…” என்றவளின் கண்ணில் கண்ணீர் மட்டும் ஓயவில்லை.
அவள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவன் இதயத்தை அறுக்க ஏதோ சின்ன காரணத்தை சொல்லப் போகிறாள் என நினைத்துக் கொண்டிருந்தவன் அவளது அழுகையும் பேச்சும் விஷயம் பெரியது என்பதை உணர்த்த இடி விழுந்தது போல அதிர்ந்து நோக்கினான்.
“நீ வசதியான குடும்பத்தை சேர்ந்தவன் ஆதி… நீ எது செய்தாலும் அது உன்னைத்தான் பாதிக்கும்… ஆனா என் குடும்பம் ஏழ்மையானது… என் வருமானத்தை எதிர்பார்த்து இருக்கற குடும்பத்தை நான் எது செய்தாலும் பாதிக்கும்… என் அப்பா வேற ஹார்ட் பேஷன்ட்… வீட்டை எதிர்த்து கல்யாணம் எல்லாம் நமக்கு சரியா வராது… அதனால…” சொல்லிவிட்டு நிறுத்தியவள் அவனை நிமிர்ந்து நோக்க அந்தக் கண்களில் தெரிந்த வலியில் துடித்துப் போனாள்.
முகம் இறுகி கண்கள் சிவந்து அவளையே வெறித்தவன், “சொல்லு… அதனால…” என்றான் அழுத்தத்துடன்.
“அ..அதனால, நாம இப்படியே பிரிஞ்சுடலாமான்னு…”
அவள் வார்த்தையை முடிக்க முடிக்காமல் கண்களில் பொங்கிய கண்ணீரை அடக்கிக் கொண்டு அவனைப் பார்க்க  அவளையே பார்த்திருந்தவன் சட்டென்று சிரித்தான்.
“ஆமா… நீ எந்த போதி மரத்தடில யோசிச்சப்ப உனக்கு இப்படித் தோணுச்சு…” கிண்டலாய் கேட்டவன், “எது எதுல தான் விளையாடறதுன்னு உனக்கு விவஸ்தை இல்லாமப் போயிருச்சு… ஒரு பேச்சுக்குக் கூட நாம பிரிஞ்சுடலாம்னு சொல்லாத நந்து…” என்றான் உருகும் குரலில்.
அவன் சொன்னதைக் கேட்டு உடைந்து போனவள், “நா..நான் விளையாடல ஆதி… உண்மையா தான் சொல்லறேன்… நமக்கு செட் ஆகாது… நாம பிரிஞ்சுடலாம்… நான் வாக்குக் கொடுத்திருக்கேன்…” சொல்லிவிட்டு அழத் தொடங்க அவன் புத்திக்கு அப்போதுதான் உரைக்கத் தொடங்கியது.
“எ..என்னது, வாக்குக் கொடுத்தியா… யாருக்கு…”
“ப்ளீஸ், இதுக்கு மேல என்னை எதுவும் கேக்காத… நாம பிரியணும்னு தான் விதி… இனி நமக்குள்ள எதுவும் இல்லை… புரிஞ்சுக்க, நாம பிரிஞ்சுடலாம்…” அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு தொடர்ந்தாள்.
“என்னால முடியலை… உன்னை விட்டுப் பிரியணும்னு நினைக்கும்போதே செத்துடலாம் போலத் தோணுது… எனக்கே இப்படின்னா என்னை உயிரா நினைக்குற உன் நிலமை என்னாகும்… என்னால எப்படி உன்கிட்ட சொல்ல முடியும்… இந்தத் தவிப்புல தான் உன் கிட்ட முகம் கொடுத்துப் பேசாம ரெண்டு நாளா தவிர்க்க டிரை பண்ணேன்… உன் வீட்டுல நம்ம கல்யாணத்துக்கு சம்மதம் கிடைக்கல, இப்ப புதுசா இன்னொரு பிரச்சனை முளைச்சிருக்கு…” என்றவள் நிறுத்திவிட்டு அவனை நோக்க அவன் எதுவும் பேசாமல் அதே அதிர்வுடன் இருந்தான்.
“எனக்கு வீட்ல கல்யாணம் பேசத் தொடங்கிட்டாங்க… அப்பாக்கு உடம்பு இருக்கற நிலமைல சீக்கிரம் என் கல்யாணத்தை நடத்தனும்னு ஆசை… என் குடும்ப சூழலைப் புரிஞ்சுக்கற பையனா இருக்கணும்னு என் மாமா பையனுக்கே பேசிட்டு இருக்காங்க… என்னால இப்ப இருக்கற சூழ்நிலைல அந்தக் கல்யாணத்தைத் தடுக்கவோ, நம்ம காதலை சொல்லவோ முடியலை… ஆல்ரெடி அப்பாக்கு ஹார்ட் பிராப்ளம்… நான் இதை சொல்லி எதுவும் ஆகிட்டா என்னால தாங்க முடியாது… வேண்டாம் ஆதி… எனக்கு நம்ம காதலை விட என் அப்பா உயிர்தான் முக்கியம்… நாம பிரேக் அப் பண்ணிக்கலாம்…” கண்ணீருடன் சொன்னவளை நம்ப முடியாமல் அதிர்ச்சியுடன் நோக்கினான் ஆதி.

Advertisement