Advertisement

   நேசம் – 8 

“ ஸ்ஸ்ஸப்பா !!! இவ கொடுமை தாங்க முடியல “ என்று வெளியில் கூறமுடியாமல் மனதில் தவித்து கொண்டிருந்தான் ரகுநந்தன்.

“ தெரியாம சதிஸ்கிட்ட அப்படி சொல்லிட்டேன்.. ஆனா அதை கேட்டு இவ படுத்துற பாடு இருக்கே… கடவுளே.. அம்மா ஏன் மா இப்போ உங்களுக்கு நிம்மதியா இருக்குமே??” என்று வானுலகம் சென்ற தன் அன்னையை பார்த்து கேள்வி வேறு கேட்டுக்கொண்டான்..

ரகுநந்தன் என்று சதிஸிடம் மிதிலாவை பற்றி நான் யாரோ அவள் யாரோ என்று கூறினானோ அன்றிலிருந்து ஆரம்பித்தது அவனுக்கு போறாத காலம்.. இத்தனை நாள் மிதிலா தனக்கு பிடித்த பாட்டியின் பேரன், நல்லவனாகவும் இருக்கிறான், இவனும் இக்குடும்பத்தில் ஒருவனே என்று நினைத்துதான் அமைதியாய் இருந்தாள்..

ஆனால் அவனே இப்படி கூறவும், அவளின் பொறுமை எல்லாம் காற்றில் கரையும் கற்பூரமானது..

”என்ன தைரியம் இவனுக்கு… எவ்வளோ நெஞ்சழுத்தம் இருந்தா இப்படி சொல்வான்.. நான் யாரோ அவன் யாரோவாம்.. சொல்லிட்டேல.. ரகுநந்தா.. இருக்கு இனிமேல் உனக்கு… இந்த மிதிலா யாருன்னு காட்டுறேன்.. “ என்று மனதில் கறுவிக்கொண்டாள்…

மிதிலாவிற்கு ஏன் இந்த கோவம் என்று அவளுக்கே புரியவில்லை. அவளை பொருத்தவரைக்கும் அவனும் அவளுக்கு யாரும் இல்லை. ஜெகதாவின்  பேரன் அவ்வளோ தான்.. ஆனால் ஏனோ ரகுநந்தன் அப்படி கூறியது அவளால் ஏற்றுகொள்ள முடியவில்லை…   

அவள் கருவியதன் பலன் தான் இன்று ரகுநந்தன் இப்படி புலம்பி தள்ளுவது.. எண்ணி நான்கே நாட்களில் முழி பிதுங்க வைத்துவிட்டாள் மிதிலா…

சிறு வயதில் ஆடிய ஊஞ்சல் என்று ஆசையாய் அமர போனான், அவனை முந்திக்கொண்டு மிதிலா ஏறி ஊஞ்சலில் படுத்தே விட்டாள்.. முதலில் இதை பெரிதாய் நினைக்காத ரகு நகர்ந்து சென்றுவிட்டான்.. அதற்கு அடுத்த நாளும் இப்படியே நடக்கவும் ஊஞ்சலின் அருகில் சென்று பார்த்தான்..

மிதிலா கண் மூடி உறங்குவது போல பாசாங்கு செய்து படுத்து இருந்தாள்.. “ ராக்கோழி.. என்கிட்டேயே உன் நடிப்பை காட்டுறியா ??” என்று எண்ணியவன் வேகமாய் ஊஞ்சலை ஒரு உலுக்கு உலுக்கினான்..

கீழே விழவில்லை என்றாலும் மிதிலா நொடியில் பயந்துவிட்டாள்.. நெஞ்சம் பட படவென்று அடித்துகொண்டது…  கோவமும் பயமும் பதற்றமும் கலந்து அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றுவிட்டாள்..

“ இவ என்ன எது பண்ணாலும் பேசாம போறா??” என்று நினைத்தான் ரகுநந்தன். அவன் மனமோ “ அப்போ நீ அவ பேசுறதுக்காக தான் இதெல்லாம் செய்யறியா??” என்று வினா எழுப்பியது..

“ ச்சி.. ச்சி.. இவ பேசமா இருக்கிறதே நல்லது..” என்று எண்ணிக்கொண்டு அவனும் சென்றுவிட்டான்..

ஆனால் இந்த ஊஞ்சல் விஷயம் கோகிலா மூலமாக ஜெகதாவின் காதுகளுக்கு சென்றது.. சில நொடிகள் யோசித்தவர் ஆளை விட்டு ஊஞ்சலை கழட்டிவிட்டார்..

இதை அறிந்த மிதிலா வேகமாய் ஜெகதாவின் அறையை நோக்கி சென்றாள்..

“ பாட்டி… பாட்டி யாரு ஊஞ்சலை கழட்டினது??” என்றால் மூச்சிரைக்க..

“ நான் தான்…” ஜெகதாவின் குரலில் எதோ ஒன்று வித்தியாசமாய் இருப்பது போல இருந்தது…

“ ஏன் பாட்டி…???” என்று கேட்டுக்கொண்டு இருக்கும் பொழுதே ரகுநந்தன் வந்தான் “ பாட்டி ஊஞ்சல் எங்க ???” என்ற கேள்வியோடு…

இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவரை ஒருவர் முறைத்துகொண்டது.. ஜெகதாவும் இதை கவனிக்கவே செய்தார்.

“ ரெண்டு பேரும் நல்லா கேட்டுகோங்க… நான் தான் ஊஞ்சலை கழட்டி வைக்க சொன்னேன்..” என்றார் அழுத்தமாக..

“ஆனா ஏன் பாட்டி ???” இருவரிடமும் ஒரே கேள்வி..

“ ஏன் பா நீ அதை உலுக்கியே பிச்சிடுவ போல, இவ அதில் தூங்கி தூங்கியே தேய்ச்சிடுவா போல.. அதான் ஏன் வம்புன்னு கழட்டி வைக்க சொல்லிட்டேன்.. அதுவும் இல்லமா நீங்க இன்னும் சின்ன பசங்களா என்ன ???” என்று கேள்வி கேட்கவும் பதில் ஏதும் சொல்ல முடியாமல் தலையை தொங்க போட்டு வெளியே வந்தனர்..

மிதிலா ரகுநந்தனை பார்த்து “ இப்போ உங்களுக்கு சந்தோசமா ???” என்றாள் கோவமாக..

“ ஏன் நான் என்ன பண்ணேன்??” என்றான் அவனும் அதே கோவத்துடன்..

“ ஏன் நீங்க என்ன பண்ணிங்கன்னு உங்களுக்கு தெரியலையோ!!!”

“ அது சரி உனக்கு நீ பண்ணது தெரியலையா!!!” என்று அவனும் பதில் கேள்வி கேட்கவும், மிதிலா தன் மீதும் தவறு இருக்கிறது என்று உறைக்க பதில் எதுவும் கூறாமல் அமைதியாய்  தரையை ஓங்கி மிதித்தபடி சென்றுவிட்டாள்..

“ போறதை பாரு.. இவளுக்கு மிதிலான்னு சரியா தான் பேரு வைச்சிருக்காங்க.  ஏறி ஏறி தூங்கினல.. நல்லா வேணும்“ என்று முனுமுனுத்து கொண்டு அகன்றான்.. இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த ஜெகதா அர்த்தமாய் சிரித்துகொண்டார்.

ஆனால் அன்றிலிருந்து மிதிலாவின் வழி வேறாய் மாறியது.. “ பாட்டிக்கு தெரிஞ்சாதானே இப்படி எதுவும் செய்வாங்க “ என்று யோசித்தவள் தன் வழியை மாற்றிகொண்டாள்..

வீட்டில் சாம்பிராணி போடுகிறேன் என்று பெயர் பண்ணிக்கொண்டு ரகுநந்தன் தூங்கி எழும் நேரம் வேண்டும் என்றே அவன் அறையில் புகை மூட்டத்தை உருவாக்கினாள்.

அவன் வெளியே கிளம்புகிறான் என்றால் ஆளுக்கு முன்னே இவள் கிளம்பி காரை எடுத்துகொண்டாள்.. வேண்டும் என்றே அவனுக்கு பிடிக்காத சமையலை எல்லாம் கோகிலாவிடம் கூறி செய்ய வைத்து, அவனை பட்டினி போட வைத்தாள்..

மனதிற்குள் “ என்னையவா யாரோன்னு சொன்ன.. இப்போ புரியும் உனக்கு நான் யாருன்னு “ என்று கறுவிக்கொண்டாள்..

இப்படி நாளுக்கு நாள் ஒவ்வொரு நிகழ்ச்சியாக அரங்கேற ரகுநந்தன் திணறித்தான் போனான்.. அப்பொழுதுதான் திடீரென அவனுக்கு ஒரு விஷயம் நியாபகம் வந்தது… “ மை டியர் ராக்கோழி…. வசமா மாட்டிகிட்ட”

“ என்ன  மிதிம்மா இன்னும் நந்துவை சாப்பிட காணோம்?? ” என்று அவனது அறைப்பக்கம் ஒரு பார்வையை பதித்தபடி உண்ண அமர்ந்திருந்தார் ஜெகதா..

“ தெரியலை பாட்டி…” என்று மிகவும் நல்ல பெண் போல பதில் சொன்னாள்  மிதிலா… அவளை பார்த்து ஒரு புன்சிரிப்புடன் வந்தமர்ந்தான் ரகுநந்தன்..

“ ஏன் எலி தானா சிரிக்கிது” என்று எண்ணிகொண்டவள் அமைதியாய் உண்டாள்..

“ சாப்பிடு சாப்பிடு… என்னைய என்ன பாடு படுத்தின..” எண்ணிக்கொண்டு “ பாட்டி, உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா ???” என்றான் ஒருவிதமாக..

“ என்ன நந்து எதுவா இருந்தாலும் கேளு கண்ணா!!!”

“ ம்ம் அது வந்து பாட்டி.. நான் ஊருக்கு வந்த அன்னிக்கு” என்று இழுத்தவன் மிதிலாவை நோக்கினான்..

“ இவன் ஏன் என்னைய பார்க்கிறான்??? கேட்கவந்ததை கேட்க வேண்டியது தானே…” என்று குழம்பியவள் அவனது குறும்பு பார்வையை கண்டு சுதாரித்தாள்…

“ ஆகா!! இவன் என்னவோ பிளான் பண்ணிருக்கான் போல..” யோசித்தவள் சடுதியில் முடிவெடுத்தாள்…

“ பாட்டி உங்ககிட்ட நானும் ஒன்னு சொல்லணும் “ என்று மிதிலா ரகுநந்தனை பார்த்து தன் புருவம் உயர்த்தினாள். 

“ அட என்ன ரெண்டு பெருக்கும் இத்தனை நேரம் இல்லாம இப்போ திடீர்னு என்கிட்டே??!!!” என்று ஜெகதா அலுத்துகொண்டார்..

ரகுநந்தனுக்கோ பகீரென்றது. ” ஒருவேளை சதிஸ் கிட்ட நம்ம பேசினதை சொல்லிடுவாளோ..” என்று எண்ணி வேகமாய் பேச்சை மாற்றினான்..

“ பாட்டி நான் நம்ம பண்ணை விசயமா முக்கியமா பேசணும்” என்று சொல்லவுமே “ அப்படி வா வழிக்கு “ என்று நினைத்துகொண்ட மிதிலா

“ பாட்டி நான் கூட நம்ம மில் பத்தி தான் பேசணும்…” என்றாள்..

ரகுநந்தனும், மிதிலாவும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டனர்.. ஜெகதா புரிந்துகொண்டார்.. ஒருவரை பற்றி இன்னொருவருக்கு கூற எதுவோ விஷயம் இருக்கிறது.. அதை வைத்துகொண்டு இரண்டும் ஆடுகிறார்கள் என்று..

“ அதுக்கு இப்போ என்ன அவசரம், முதல்ல சாப்பிடுங்க ரெண்டு பேரும், இன்னும் சின்ன பசங்க மாதிரி நடந்துகிட்டு.. “ என்று அரட்டல் போட்டார்..

ரகுநந்தனை மிதிலா ஒரு பார்வை பார்த்தாள்.. ” நீ எப்படி நடந்துக்கிட்டாலும், பாட்டி கிட்ட என்னைய மாட்டி விட நினைச்சாலும் அதெல்லாம் என்கிட்டே நடக்காது வெள்ளைக்காரா “ என்ற அர்த்தம் இருந்தது..

ரகுநந்தனும் சளைத்தவன் அல்லவே.. பதிலுக்கு நேராகவே அவளது விழிகளை பார்த்தான்.. “ நீ எப்படி பேசி சமாளிச்சாலும் என்னை ஒன்னும் செய்ய முடியாது ராக்கோழி  “ என்பது போல இருந்தது…

ஆரம்பத்தில் முறைப்பதற்காக இருவரும் பார்த்துக்கொண்டார். ஆனால் பார்வைகளை விலக்க முடியவில்லை.. கோவமும் கோவமும் கோர்த்துக்கொண்டது போல.

கோகிலா வந்து ஏதோ பாத்திரத்தை வைக்கும் சத்தத்தில் தான் இருவரின் பார்வையும் விலகியது.. மிதிலாவிற்கு மனதில் இத்தனை நேரம் இருந்த திடம் ஏனோ கரைந்தது போல இருந்தது..

ரகுநந்தனோ சொல்லி விளக்க முடியாத உணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்டான். எத்தனை தரம் லிசியை நேருக்கு நேர் சந்தித்து பேசியிருப்பான் சுற்றியிருப்பான். அதுவும் வெளிநாட்டு கலாச்சாரத்தில் இதற்கு மேலும் எத்தனையோ இருக்குமே..

ஆனால் அப்பொழுது எல்லாம் தோன்றாத ஒரு உணர்வு ரகுநந்தனுக்கு இப்பொழுது இந்த சில நொடிகளில் தோன்றி மறைந்தது.. மிதிலாவின் விழிகளை பார்த்து முறைக்க தொடங்கியவனால் சிறிது நேரத்திற்கு மேல் தன் கோவம் காணாமல் போனது கூட தெரியவில்லை.. ஆனாலும் வேறு எதுவோ ஒரு உணர்வு உள்ளே தோன்றுவதை அவனால் தடுக்கவும் முடியவில்லை..

தலையை குலுக்கிக்கொண்டு அமைதியை எழுந்து சென்றுவிட்டான்.. அவன் போவதையே பார்த்த மிதிலா “ போறான் பாரு.. என்ன பார்வை?? அதுவும் பாட்டி முன்னாடி… “ என்று கருவியவள்

“ ஆனா ஏன் அப்படி பார்த்தான் ??” என்று யோசிக்கவும் அவளது மனமோ “ அவன் மட்டுமா பார்த்தான் நீயும் தான் பார்த்த “ என்று இடிக்கவும் அவளும் தலையை உலுக்கிக்கொண்டாள்.

இரவு என்ன கண்கள் மூடி படுத்தும் ரகுநந்தனிற்கு உறக்கம் வரவில்லை.. கண்களை மூடினால் மிதிலாவின் விழிகளே காட்சி கொடுத்தது.. அவனை அறியாது அவனது மனம் லிசியையும் மிதிலாவையும் ஒப்பிட்டு பார்த்தது..

“ லிசி யாரையும் திரும்பி பார்க்க வைக்கிற அழகு தான்.. ஆனா அவகிட்ட இல்லாதா எதுவோ ஒன்னு மிது கிட்ட இருக்கு..” என்று ரகுவின் மனம் ஆராய்ச்சியில் இறங்கவும், அவனது மூளையோ மனதின் மண்டையில் பட்டென்று அடித்தது அடக்கியது..

பின் அவனே நினைத்துக்கொண்டான் ”ச்சி ச்சி அந்த லிசி எங்க, மிதிலா எங்க.. லிசி எல்லாம் மிதிலா கிட்ட கூட வரமுடியாது “ என்று எண்ணிக்கொண்டு, இப்படியே குருட்டு யோசனையில் உழன்றுக்கொண்டு ஒருவழியாய் உறங்கியும் போனான்..

அங்கே மிதிலாவின் அறையிலோ ஜெகதா அமர்ந்திருந்தார்.. மிதிலாவோ கைகளை பிசைந்தபடி அமர்ந்திருந்தாள்..

“ என்ன மிதிலா பதிலையே காணோம்?? எப்பையும் எண்ணெயில் போட்ட கடுகு மாதிரி படபடப்ப.. இப்போ என்ன சத்தமே வரலை.. “

“ இல்ல பாட்டி அது வந்து…” என்று மிதிலா இழுத்தாள்..

“ சரி உனக்கு சொல்ல விருப்பம் இல்லைனா விடு எதுவும் சொல்ல வேண்டாம். நான் நந்து கிட்ட கேட்டுக்கிறேன்..” என்று எழ போனார்.

“ ஐயோ பாட்டி,” என்று அவர் கைகளை படித்து அமரவைத்தவள், ரகுநந்தன் இந்தியா வருவதாய் போன் செய்தது முதற்கொண்டு, அன்று சதிஸிடம் பேசியது வரைக்கும் ஒன்றுவிடாமல் ஒப்பித்து முடித்துவிட்டாள்..

இதை எல்லாம் அமைதியாய் கேட்ட ஜெகதாவிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை..

“ம்ம்ச் என்ன பாட்டி சிரிக்கிறிங்க.. நீங்களே சொல்லுங்க உங்க பேரன் சொன்னது மட்டும் சரியா..” என்று சலுகை கொண்டாடினாள்..

“ தப்பு தான் மிதிம்மா ஆனா அவன் தான் சும்மா சொன்னதா சொன்னானு நீயே தானே சொன்ன இப்போ, அப்புறம் என்ன ரெண்டு பேரும் இப்படி முகம் திருப்பிக்கிட்டு.. இங்க பாரு மிதிலா அவன் நிலைமை தெரிஞ்சும் நீ இப்படி நடந்துக்கிறது சரியா சொல்லு.. அவன் கவலையை எல்லாம் வெளிய காட்டாம இருக்கான்..”

“வேற ஒருத்தனா இருந்தா இத்தனை வருஷம் கழிச்சு இங்க வந்து இப்படி இருக்க மாட்டான் மிதிம்மா.. லீலா சொன்ன ஒருவார்தைகாக தான் வந்திருக்கான். அவன் அம்மா மேல அத்தனை அன்பு. இப்படி பெத்த அம்மாவ பறிகொடுத்து வந்தவன் கிட்ட நம்ம எப்படி நடந்துக்கணும் நீயே சொல்லு..” என்று தன்மையாய் எடுத்து கூறினார்..

மிதிலாவிற்கு என்ன புரிந்ததோ அமைதியாய் ஜெகதா சொல்வதற்கு எல்லாம் சரி என்று கூறினாள்.

“ ஹ்ம்ம் நீ தான் பார்த்து நடந்துக்கணும் மிதிம்மா “ என்று அவளது கன்னத்தை தடவி விட்டு தன்னறை நோக்கி சென்றார் ஜெகதா..

“ஊப்!!!!!!!” என்று பெரு மூச்சு விட்டவளுக்கும் உறக்கம் வரவில்லை..

“ ஒருவேளை நிஜமாவே வருத்தத்தை எல்லாம் வெளிய காட்டாம இருக்கானோ.. நம்ம தான் மோசமா நடந்துகிட்டோமோ… “ என்று யோசனையில் ஆழ்ந்துவிட்டாள்..

இவர்களின் சிந்தனைக்காக கதிரவன் விழிக்காமல் இருப்பானா?? யாருக்கும் காத்திராமல் உதயமானான்..

“ இப்போதானே தூங்கினோம், அதுக்குள்ள பொழுது விடிஞ்சிடுச்சா..” என்று முனங்கியவாறே மிதிலா, ரகுநந்தன் இருவருமே தத்தம் அலுவலுக்கு தயாராய் கீழே வந்தனர்..

இருவரின் முகத்திலும் நேற்று இருந்த கோவம் இன்று ஏனோ இல்லை.. ஒருவரை பார்க்கும் போது மற்றவருக்கு லேசாய் புன்னகை கூட தோன்றி மறைந்தது..

சிரித்த முகமாகவே இருவரும் கீழே வந்தால் ஜெகதா பதற்றமாய் அமர்ந்திருப்பதும், கோகிலா கையை பிசைந்து கொண்டு நிற்பதும், அவர்களுக்கு எதிரில் இன்னும் ஒரு பெண்மணி அமர்ந்திருப்பதும் தெரிந்தது..

மிதிலா தெரிந்துகொண்டாள்.. வந்திருப்பது விசாலம். இத்தனை வருடத்தில் தன் பாட்டி ஜெகதாவின் வருத்தங்களுக்கு காரணமானவரை தெரியாதா என்ன..

ஜெகதாவின் முகத்தில் தெரிந்த பதற்றமும், மிதிலாவின் முகத்தில் தெரிந்த மாறுதல்களும் ரகுநந்தனை குழப்பமடைய செய்தது. ஒரு நொடியில் சூழ்நிலையை புரிந்துகொண்ட மிதிலா வேகமாய் ரகுநந்தனை மாடி படியின் வளைவில் இழுத்து நிறுத்தினாள்.. “ நந்தன், இப்போ இங்க என்ன நடந்தாலும், உங்ககிட்ட அவங்க என்ன சொன்னாலும் பாட்டியை மட்டும் நீங்க தப்பா நினைச்சிட கூடாது. ப்ளீஸ்… “

அவள் கூறியது எதுவுமே அவன் காதுகளில் விழவில்லை. அவனை உரசிக்கொண்டு முக்கால்வாசி அவன் மீது சாய்ந்தபடி நின்ற மிதிலாவின் வாசமே ரகுநந்தனை தன் வசம் இழக்க செய்தது.. அவன் பேசாமல் இருப்பதை பார்த்து “ நந்தன் “ என்று உலுக்கினாள்..

“ ஹா !! என்ன மிது ?? என்ன சொன்ன ??” என்று திகைத்து விழித்தான்..

“ அது சரி “ என்று அவனை ஒரு முறை முறைத்து மீண்டும் தான் கூறியதை கூறினாள்.  

   “ என்ன மிது என்ன சொல்ற?? நான் ஏன் பாட்டியை தப்பா நினைக்க போறேன்..” என்றான் அவளது முகத்தை தன் பார்வையில் அளந்தபடி..

அவனது பார்வை அவளை என்ன செய்ததோ, அப்பொழுதுதான் அவளுக்கு தான் நிற்கும் அழகு உரைத்தது போல சட்டென்று விலகி நின்று “ அது.. உங்களுக்கு இப்போ சொன்னா புரியாது நந்தன்.. ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன் பாட்டி மேல எந்த தப்பும் இல்லை. சரியா..” என்று தலையை ஆட்டவும், அவள் தலையாட்டலுக்கு ஏற்ற தாளத்தில் அவனது தலையும் ஆடியது..

“தேங்க்ஸ்… தேங்க்ஸ் எ லாட் நந்தன் “ என்று அவனது கைகளை பிடித்து குலுக்கிவிட்டு அகன்றுவிட்டாள்.. ரகுநந்தனோ ஒன்றும் புரியாமல் விழித்தான்..

“ என்னடா இது, இழுத்து வச்சு பேசினா.. எதுவோ சொன்னா, சரியான்னு கேட்டா, இப்போ தேங்க்ஸ்ன்னு சொல்லிட்டு அவபாட்டுக்கு போறா “ என்று தன் போக்கில் எண்ணியபடி அவனும் கீழே சென்றான்..

மிதிலாவை ஒரு இளக்கார பார்வையுடன் பார்த்த விசாலம் ரகுநந்தன் வரவும் தன் பார்வையை மாற்றிகொண்டார்… முகமெல்லாம் கருணை வழிவது போலவும், அன்பாய் உருகுவது போலவும் அவனை பார்த்தார்..

மிதிலா ஆதுரமாய் ஜெகதாவின் கைகளை பிடித்து அமர்ந்திருந்தாள்.. ரகுநந்தனும் ஜெகதாவிற்கு அடுத்து அமர்ந்து கொண்டான்.. விசாலாத்திற்கு இக்காட்சியை காண காண வயிர் எரிந்தது.. ஆனாலும் மனதினுள் தான் வந்த காரியம் முடியவேண்டும் என்று அமைதியாய் இருந்தார்..

ஜெகதா “ நந்தப்பா.. இவங்க விசாலம், நமக்கு சொந்தம்.. உனக்கு ஒருவகையில பாட்டி முறை..” என்று  மிடறு விழுங்கியவாறு அறிமுகம் செய்துவைத்தார்..

ரகுநந்தனும் “ ஹாய் பாட்டி “ என்று சிரித்து வைத்தான்..

“ உன்னைய பார்க்கத்தான் இத்தனை வருசமா காத்துக்கிட்டு இருக்கேன் ரகுநந்தா… இங்க வா சாமி..” என்று அவனது கைகளை பற்றி தன் அருகில் இழுத்து அமர வைத்துகொண்டார்.. ஜெகதாவிற்கோ பக்கென்றது.. மிதிலாவின் முகமோ ரகுநந்தனையே இறைஞ்சுவது போல பார்த்தது..

ஆனால் இதை எல்லாம் சிறிதும் பொருட்படுத்தாத விசாலம் “ என்ன கண்ணு பார்க்கிற.. நான் உன் சொந்தமடா.. உன் அம்மாக்கு அத்தை.. புரியலையா.. உன் அம்மாவோட அப்பாவின் அக்கா.. சின்ன வயசில இருந்து லீலா என் மடியில தான் வளர்ந்தா..” என்று பழைய நினைவுகளை நினைத்து வருத்தப்படுவது போல கண்களில் கண்ணீர் வேறு வந்தது..

தன் தாயை பற்றி பேசவுமே ரகுநந்தனுக்கு மனதில் ஏதோ ஒரு உணர்வு.. வந்து இத்தனை நாட்களில் ஜெகத சில முறை மட்டுமே லீலாவை பற்றி பேசியிருப்பார். தான் ஏதாவது பேசி ரகுநந்தனின் மனம் நோகுமோ என்றே அவ்வாறு நடந்துகொண்டார்..

ஆனால் இன்று விசாலம் தான் தான் லீலாவை வளர்த்தேன் என்று கூறவுமே ரகுநந்தனின் மனதில் தன் தாயின் முகம் வந்து போனது..

“ ஓ !! அப்படியா பாட்டி.. ஆனா அம்மா.. அம்மா உங்களை பத்தி சொன்னது இல்லையே.. சாரி.. ஜெகதா பாட்டியை பத்தியே எனக்கு கடைசியில் தான் தெரியும்.” என்றான்..

“ ஹ்ம்ம்.. என் செல்லம் லீலா பிறக்கும் போதே அவ அம்மா இறந்திட்டா, நான் தான் மார்லையும் மடிலையும் போட்டு வளர்த்தேன்.. ஆனா இப்படி கடைசியா அவ முகத்தை கூட பார்க்க முடியாம போச்சே…” என்று அவனது கைகளை தன் கைகளில் போதித்து கொண்டு அழவும் ரகுநந்தனின் கண்களிலும் கண்ணீர்..

ஜெகதா “ விசாலம்.. என்ன இது.. அவன் இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா சரி ஆகிட்டு வரான்.. ஏன் இப்படி பேசுற..” என்று சற்றே குரலை உயர்த்தினார்..

ஆனால் விசாலமோ இன்னும் அழுகையை கூட்டி “ ஏன் மா, மகராசி ஜெகதா, அவ இங்க இருக்கும் போது தான் அவளை கண்டாலே உனக்கு ஆகாது.. கொடுத்து வைச்சவ போய் சேர்ந்திட்டா, இப்போ கூட அவளை பத்தி பேச கூடாதுன்னா எப்படி???” என்று என்று கேட்கவும் ரகுநந்தனின் முகமும் ஒரு மாதிரி ஜெகதாவை நோக்கியது..

என்ன நடக்க கூடாது என்று எண்ணினாரோ அது கண் முன்னே நடப்பதை கொஞ்சம் கூட ஜெகதாவால் பொறுத்துகொள்ள முடியவில்லை.. மனதினுள் எங்கே ரகுநந்தனையும் தன்னிடம் இருந்து இந்த விசாலம் பிரித்துவிடுவாரோ என்று பயந்தார்.. அந்த பயமே அவரை கோவம் கொள்ள வைத்தது..

“ போதும் விசாலம் நிறுத்து.. இத்தனை வருஷம் தான் என் குலவிளக்கை என்கிட்டே இருந்து பிரிச்சு வைச்ச.. ஆனா இன்னும் உன் குரோதம் அடங்கலையா?? இதுக்கு மேல நீ ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது.. கிளம்பு” என்று வாசலை நோக்கி கை நீட்டவும் விசாலத்திற்குமே முகம் கூம்பி விட்டது.. இத்தனை ஆண்டுகளில் ஜெகதா இவ்வளவு ஆக்ரோசமாக பேசியது இல்லை..

மிதிலாவுமே நடுங்கித்தான் போனாள். அவளறிந்த ஜெகதா யாரையும் இப்படி தரக்குறைவாய் நடந்தியது இல்லை.. இவர்களுக்கே இப்படி என்றால் ரகுநந்தனை பற்றி கேட்கவும் வேண்டுமா??

“ என்ன ஜெகதா, வாய் நீளுது.. கூட ஆள் இருக்கும் தைரியமா. ஆனா ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுகோ, ரகுநந்தா நீயும் தான். என் வீட்டுக்கு மகாலட்சுமியா வரவேண்டிய லீலாவ நீ உன் வீட்டுக்கு மருமகளா கூட்டிட்டு வந்த.. ஆனாலும் அவ இங்க இருந்தப்போ நிம்மதியா இருந்தாளா என்ன ?? இல்லையே.. அதுக்கெல்லாம் நீ பதில் சொல்லனும். ரகுநந்தா உனக்கும்  ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ, இவ அதான் உன் பாட்டி ஜெகதா சத்தியமா நல்லவ இல்லை நம்பிடாத..” என்று போகிற போக்கில் ஒரு வெடியை பற்றவைத்துவிட்டு போனார்..

ரகுநந்தனோ விதிர்த்து அமர்ந்திருந்தான்.. ஜெகதாவின் நிலைமையோ சொல்ல முடியாமல் இருந்தது.. விசாலம் போகவும் வேகமாய் தன் பேரனின் கையைபிடித்து

“ நந்தப்பா.. நந்து இவ சொல்றது எல்லாம் உண்மை இல்லடா.. நம்பிடாத கண்ணா.. நான் சொல்றதை கேளு நந்து.. இவ உன்னையும் என்னையும் பிரிக்க தான் இத்தனையும் பேசுறா கண்ணா.. பாட்டி சொல்றதை  கேளு…….. ” என்று புலம்பியவாறே மயங்கி சரிந்தார்..

“ பாட்டி……………..” மிதிலா அலறியே விட்டாள்.. ரகுநந்தனுமே அதிர்ந்து விட்டான். ஆனாலும் சில நொடிகளில் சூழ்நிலையை கையில் எடுத்துக்கொண்டு மின்னெலென செயல்ப்பட்டான்…

மருத்துவமனை. டாக்டர் “பயப்படும் படி ஒன்னும் இல்லை.. ரொம்ப டென்சன் ஆகி இருக்காங்க.. இந்த வயசுக்கு அது நல்லது இல்லையே. அதான் மயக்கம் வந்திருக்கு.. ட்ரிப்ஸ் போட்டு இருக்கேன்.. கொஞ்ச நேரத்தில முழிப்பு வரவும் கூட்டிட்டு போங்க. ஆனா எந்த காரணத்திற்காகவும் இதுமாதிரி இனிமே நடந்துக்காம பார்த்துகோங்க..” என்று கூறவும் மிதிலாவும் ரகுநந்தனும் விடைபெற்று கொண்டு ஜெகதவை வைத்திருந்த அறையை நோக்கி சென்றனர்..

மிதிலாவிற்கு ஆத்திரம் அடங்கவில்லை.. தான் எத்தனை சொல்லியும் இந்த ரகுநந்தன் பாட்டிக்கு ஆதரவாய் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.. அதனால் இத்தனை களேபரமும் என்ற எண்ணம் அவளை கோவம் கொள்ள வைத்தது..

“ பாட்டி…  ஏன் உங்களுக்கு மட்டும் இப்படி நடக்கணும்.. ப்ளீஸ் உங்களுக்கு ஒண்ணுமில்லை.. நான் இருக்கேன் உங்களுக்கு..” என்று எண்ணியவள் விலுக்கென்று திரும்பி

“ நந்தன் நீங்க மறுபடியும் டெக்சாஸ் கிளம்புங்க “ என்றாள் அழுத்தமாய்..

“ வாட் !!!!” மருத்துவமனை என்றும் பாராது அலறியேவிட்டான்..

“ ஸ்ஸ்!!! மெல்ல.. நிஜமா தான் சொல்றேன்.. நீங்க ஊருக்கே போயிடுங்க.. பாட்டிக்கு கொஞ்ச நாள் கஷ்டமா இருக்கும் அப்புறம் எல்லாம் சரி ஆகிடும்.. வேண்டும்னா வருசத்துக்கு ஒரு தடவையோ இல்ல ரெண்டு தடவையோ பார்த்துட்டு போங்க..” என்று சொல்லும் போதே அவள் குரல் உடைந்தது..

ஆனால் அவனுக்கோ கோவம் அலை அலையாக வந்தது.. “ என்ன உளறல் இது மிதிலா ???” என்று வார்த்தைகளை கடித்து துப்பினான்..

“ ஆமா உளறல் தான்.. உங்களுக்கு அப்படிதான் தெரியும்.. ஏன்னா உங்களுக்கு பாட்டியை பத்தி என்ன தெரியும்?? புதுசா வந்து யாரோ எதோ சொன்னாங்கன்னா அப்படியே அதை கதை கேட்கிறது மாதிரி கேட்கிறதா ??“ என்று பொறிந்தாள்..

“ போதும் நிறுத்தறியா??? இதுக்கு மேல ஒருவார்த்தை பேச கூடாது இடியட்.. என்ன விட்டா பேசிகிட்டே போற.. இப்போ நீதானே சொன்ன வந்தவங்க புதுசுன்னு. யாரு என்னன்னே தெரியாதவங்க கிட்ட என்னைய சண்டை போடா சொல்றியா?? அப்புறம் நீ சொன்னையே கதை கேட்டேன்னு.. அது ஒன்னும் கதை இல்லை எனக்கு.. எங்க அம்மாவை பத்தி பேசும் போது நான் எப்படி கேட்காம இருக்க முடியும்.. பேசுறா பேச்சு… என்னைய ஊருக்கு போக சொல்ல உனக்கு என்ன உரிமை இருக்கு “

“ நான் பாட்டியோட பேத்தி…” என்றாள் நிமிர்வாக..

“ ஓ !! அப்போ நான் மட்டும் பாட்டிக்கு கொல்லு தாத்தாவா.. இங்க பார் இத்தனை நாள் நானும் எதுவும் பேசகூடாதுன்னு அமைதியா இருந்தேன்.. உனக்கு இங்க என்ன உரிமை இருக்கோ அதேது எனக்கும் இருக்கும்.. சொல்லபோனா அதிகமாவே இருக்கு.. பார்த்து நடந்துக்கோ
என்று கத்திவிட்டு எழுந்து சென்றுவிட்டான்..      

மிதிலாவிற்கோ அப்பொழுது தான் உரைத்தது.. தன் அன்னை கூறிய ஒரே ஒரு காரணத்திற்காக தான் இங்கே இவன் வந்ததே.. வேறு எந்த விசயங்களும் இவனுக்கு தெரியாதே.. 

“ஐயோ !! கடவுளே.. தப்பு பண்ணிட்டேன்.. புரியாம பேசிட்டேனே… ஒருவேளை கோவத்தில பாட்டி முழிச்சதும் ஊருக்கு போயிடுவானோ..” என்று எண்ணும் பொழுதே “ ஐயோ இவன் போக கூடாதே “ என்ற எண்ணம் தோன்றியது..

ஆனால் இதை எல்லாம் எதுவுமே அறியாமல் ஜெகதா கண்களை மூடி படுத்து இருந்தார்.. கையில் ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டு இருந்தது… அவரை பார்த்து தன் மனதை சமன் படுத்தி கொண்டு அவரின் அருகில் அமர்ந்து

“ பாட்டி.. சாரி பாட்டி.. நான் நந்தன் கிட்ட அப்படி பேசி இருக்க கூடாது தான். தப்பு தான் பாட்டி. எனக்கு இதுவரை அப்பா அம்மா யாருன்னு கூட தெரியாது பாட்டி. அதுனால இப்போ வரைக்கும் எனக்கு எதுவும் தோணலை. ஆனா நந்தன் அப்படியில்லையே.. பாவம் அவரே அவங்க அம்மாவை இழந்துட்டு வந்திருக்காங்க. உங்களுக்கு இப்படி ஆகவும் நான் ஏதோ வேகத்துல அவர்கிட்ட அப்படி பேசிட்டேன் பாட்டி.. நீங்க மட்டுமா என் சொந்தம் இல்லையே நந்தனும் தானே பாட்டி.  நிச்சயமா உங்க பேரனை உங்கள விட்டு பிரிய விடமாட்டேன் பாட்டி. இது சத்தியம்.. ” என்று அவள் பாட்டிற்கு தன் போக்கில் பேசிக்கொண்டு இருந்தாள்..

கோவமாய் வெளியே சென்ற ரகுநந்தன் சற்றே மனம் அடங்கவும் மீண்டும் அறைக்கு திரும்பினான்.. அறையின் கதவை திறக்க கைவைக்கும் பொழுது தான் உள்ளே மிதிலா பேசியது எல்லாம் கேட்டது..

“ நீங்க மட்டுமா என் சொந்தம் நந்தனும் தானே பாட்டி “ என்று அவள் கூறியது மீண்டும் மீண்டும் அவனது செவிப்பறையில் ஒலித்தது..                                                                                                                                  

                              

                                        

                                                     

Advertisement