Advertisement

நேசம் – 6

 

இந்த ஒரு வார காலமாகவே  மிதிலாவிற்கு ஜெகதாவின் முகம் எதோ குழப்பத்தில் இருப்பதை போல தோன்றியது.. சரியாக உண்ணுவதும் இல்லை, வெளியே எங்கேயும் வருவதும் இல்லை.. மிதிலா தான் ஆலைக்கு கூட தனியே சென்று வருகிறாள்.. எப்பொழுதும் எதுவோ ஒரு சிந்தனையும், ஒரு குழப்பமுமாக இருப்பது போலவே இருந்தார் ஜெகதாம்பாள்..

அன்று இவர்கள் வெளியே சென்று வீட்டிற்கு திரும்பும் பொழுதே ஜெகதாவின் முகம் சரியில்லை என்பதை மிதிலா கண்டுபிடித்து விட்டாள்..

“ என்னாச்சு பாட்டிக்கு??? நம்ம வெளிய போகும் போது நல்லா தானே இருந்தாங்க..” என்று யோசித்தபடி ரகுநந்தனின் முகம் பார்த்தாள்.. ஆனால் அவனுக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை போல. சாதாரணமாக ஜெகதவிடம் பேசிக்கொண்டு இருந்தான்.

அவனுக்கு என்ன தெரியும், இப்பொழுது வந்தவன் தானே. ஆனால் மிதிலா அப்படியல்லவே எத்தனை ஆண்டுகளாய் ஜெகதாவை பார்கிறாள்.. ரகுநந்தன் பேசி முடிக்கும் வர காத்திருந்துவிட்டு “ என்ன பாட்டி ஏன் ஒருமாதிரி டல்லா இருக்கீங்க ???” என்று கேட்கவும் ஜெகதா ஒரு நொடி திடுக்கிட்டு

“ ஹா!! அதெல்லாம் ஒண்ணுமில்ல மிதிம்மா.. கொஞ்சம் தலை வலி அவ்வளோ தான். அதுவும் இல்லாம நீங்க வேற வெளிய போனிங்களா சண்டை சச்சரவு இல்லாம வந்து சேரணும்னு நினைச்சுட்டே இருந்தேன் “ என்று சமாளித்து சிரித்தார்..

“ ஹா!!! இது நல்லா இருக்கா, நீங்க சொன்னிங்கன்னு தானே உங்க பேரனை கூட்டிட்டு போயிட்டு வந்து இதோ பத்திரமா உங்க முன்னாடி உட்கார வச்சிருக்கேன்.” என்று படபடத்தாள்..

“ அதுக்கில்ல மிதிம்மா எனக்கு உன்னை பத்தியும் தெரியும், அவனை பத்தியும் இந்த கொஞ்ச நாளில கொஞ்சம் புரிஞ்சுகிட்டேன்.. அதான் சொன்னேன் “என்று நக்கலாய் அவளை பார்த்து சிரிக்கவும்

“ இது எல்லாம் சரியே இல்ல பாட்டி.. நான் நான் சண்டை காரியா ??? நீங்களே சொல்லுங்க, நான் உங்க கிட்ட சண்டை போட்டேனா ???!! சொல்லுங்க ஏதா வம்பு பண்ணேனா ??” என்று பாட்டியிடம் ஆரம்பித்து அவனிடம் கேள்வியில் முடித்தாள் மிதிலா.

ஜெகதாவும், மிதிலாவும் பேசிக்கொண்டு இருப்பதை ஒரு பார்வையாளனாக பார்த்து கொண்டிருந்தான் ரகுநந்தன். மிதிலா தன்னை நோக்கியே கேள்வியை வீசவும்

“ ஹா!!! வாட் ???” என்று திகைத்து விழித்தான்..

“ சொல்லுங்க பாட்டிகிட்ட நான் உங்ககிட்ட எதுவும் சண்டை போடலைன்னு..” என்று இடுப்பில் கை வைத்து முறைத்தாள். அவளை பார்க்கும் பொழுதே சண்டைக்கு வருவதை போல இருந்தது..

“ என்ன பொண்ணு டா இவ ??” என்று மனதில் நினைத்துகொண்டு இல்லை என்பதை போல ஜெகதாவின் முன் தலையை இப்புறமும் அப்புறமும் ஆட்டினான்.

“ மிதிலா பாரு என் பேரன் தலையை உருட்டுறது பார்த்தாலே தெரியலையா நீ மிரட்டி இருக்கன்னு “ என்று வேண்டும் என்றே அவளை சீண்டினார்..

“ இந்த பாட்டிக்கு இன்னைக்கு என்ன ஆச்சு, ஏன் இப்படி பேசுறாங்க ??” என்று யோசித்தபடி “ பாட்டி நான் ஒன்னும் உங்க பேரனை மிரட்டலை.. உங்க சப்போர்டிற்கு ஆள் வரவும் என்னைய கிண்டல் பண்றீங்க தானே.. ஹ்ம்ம் “ என்று கழுதை நொடித்துகொண்டு சென்றுவிட்டாள்..

“ ஹப்பா இவளை சமாளிக்க என்ன என்ன பேச வேண்டியிருக்கு.. பாவம் என் பேரன் இப்படி முழிக்கிறான் ஒன்னும் புரியாமல்..” என்று எண்ணிக்கொண்டு

“ என்ன நந்து வாங்க வேண்டியது எல்லாம் வாங்கியாச்சா??” என்று வினவினார்..

“ யெஸ் பாட்டி.. முக்கியமா சிம் வாங்க தான் போனேன்.. அங்க என் பிரண்ட்ஸ் கூட பேசணுமே.. வந்து இத்தனை நாள் ஆச்சு எல்லாம் சரி கடுபில் இருப்பானுங்க.. “

“ ஹ்ம்ம் ஆமா நந்து உனக்கே திடீர்னு இங்க வந்தது ஒரு மாதிரி இருக்கும்.. அப்புறம் நந்து…” என்று இழுக்கவும்

“ என்ன பாட்டி என்ன தயக்கம் என்கிட்டே?? எதுவா இருந்தாலும் சொல்லுங்க..” என்றன் ரகுநந்தன்..

“ இல்ல டா மிதிலா நல்ல பொண்ணு… ஆனா மனசில பட்டதை பேசிடுவா.. அதுக்காக எல்லார்கிட்டயும் அப்படி இல்லை.. இத்தனை நாள் என்கிட்டே கோகிலாகிட்ட தான் வாய் அடிப்பா. இப்போ உன்கூடவும் சரிக்கு சரி பேசுறதை பார்த்தா மனசுக்கு நிம்மதயா இருக்கு.. ஏன் சொல்றேன்னா அவளுக்கு என் மேல கொஞ்சம் பொசசீவ் ஜாஸ்தி. இத்தனை வருசமா நானும் அவளுமாவே இருந்துட்டோம். நீ திடீர்னு வரவும் இதை எப்படி எடுத்துப்பாளோ, மனசில எதுவும் சங்கட படுவாளோன்னு எல்லாம் நான் கொஞ்சம் பயந்தேன் நந்து. ஆனா அவ சாதரணமா இருக்கவும் தான் எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. அதுனால அவ துடுக்கு தனமா ஏதாவது பேசினாலும் நீ பெருசா நினைக்காத நந்துப்பா ”

“ இதை எல்லாம் ஏன் சொல்றேன்னு தானே கேட்கிற ?? என் காலத்திற்கு அப்புறமும் அவளுக்கு நீ துணையா ஒரு பாதுகாப்பா இருக்கனும் நந்து அதான் சொல்றேன். ஏன்னா பாவம் அவ, அவளுக்கு என்னைய தவிர யாரும் இல்லை. நானும் இல்லைனா கண்டிப்பா அவ மனசளவில ரொம்ப கஷ்டபடுவா அதான்..” என்று கூறும் பொழுதே அவர் குரல் தழுதழுத்தது..

“ ஸ்ஸ் பாட்டி என்ன இது… முதல்ல கண்ணை துடைங்க.. நான் எதுவுமே நினைக்கலை. இங்க வரும் போது என் மனசில இங்க எப்படி இருக்கும்னு எதுவும் யோசிக்கமா தான் வந்தேன்.. அதுனால இங்க என்ன இருக்கோ, அது எப்படி இருக்கோ அதை அப்படியே ஏத்துகிட்டேன் அவ்வளோதான்.. மிதிலா பத்தி நீங்க கவலையே படவேண்டாம்.. உங்க பேரனா உங்களோட கடமையையும் சேர்த்து நான் செய்வேன். கடைசி வரைக்கும் அவளுக்கு துணையா, பாதுகாப்பா நான் இருப்பேன்.. சரியா “ என்று அவர் கைகளை பிடித்துகொண்டு கூறினான்..

இதை ஜெகதாவின் சமாதானத்திற்காக கூறினானா ?? இல்லை தன் மனதை சமன் செய்துகொள்ள இப்படி கூறினானா தெரியவில்லை.. ஆனால் இவனின் இந்த பதிலை கேட்ட ஜெகதாவின் மனம் நிம்மதி அடைந்தது..

ஜெகதாம்பாளிடம் பேசிவிட்டு தன் அறைக்கு வந்த ரகுநந்தன் முதல் வேலையாக சதிஸ் எண்ணை அழுத்தினான்.. கோவமாக பேசின தன் நண்பனை கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்து ஒருவழியாக பெசவைதான் ரகுநந்தன்.இப்படியாக நந்தனின் பொழுதுகள் நல்லவிதமாக கழிய, மிதிலா தான் ஜெகதாவை பற்றிய யோசனையில் ஆழ்ந்தாள்..

இந்த ஒரு வாரகாலமாகவே அவளுக்கு எந்த விடையும் கிடைக்க வில்லை அவளுக்கு.. “ பாட்டி நார்மலா இருக்க மாதிரி தான் தெரியுது.. ஒருவேளை எனக்கு மட்டும் தான் இப்படி தோணுதோ.. பின்ன சரியா கூட வெளிய வராம இருக்காங்க..” என்று யோசித்தவள் பின் வேலையில் மூழ்கிவிட்டாள்..

இப்படியாக ஒருவாரமாகவே ஜெகதவை பற்றிய சிந்தனைக்கு மிதிலாவிற்கு பதில் கிடைக்கவில்லை.. ஆலைக்கு சென்று வந்தவள் தன்னறையில் இருந்தாள். 

சிறிது நேரத்தில் ஜெகதா அழைப்பதாக கோகிலா வந்து கூறவும் எழுந்து சென்றாள். அங்கே ரகுநந்தனும் அமர்ந்திருந்தான்..

“ என்ன பாட்டி ??“ என்று வினவியபடி ஜெகதாவிடம் அமர்ந்தாள்.

“ அது ஒண்ணுமில்ல மிதிலா, நம்ம டெய்ரி பார்ம் பத்தி பேசத்தான் உன்னையும் நந்துவையும் வர சொன்னேன்..”

“ அதுக்கென்ன பாட்டி, டெய்ரி பார்ம் நல்லா தானே போயிட்டு இருக்கு.. நல்ல லாபம் தானே இந்த வருஷம்.. இல்லை வேற எதுவும் பிரச்சனையா??” என்று மிதிலா தொடர்ந்து பேசவும்

ரகுநந்தன் “ ஸ்!!!! குக்கர் கூட அப்பப்பா தான் சத்தம் விடும், இவ ஓயாமல் எப்படி தான் பேசுறாளோ?? பாட்டியை பேசவிட்டா தானே ” என்று அலுத்துக்கொண்டான்..

“ பிரச்னை எல்லாம் ஒண்ணுமில்ல மிதிலா.. நீ தினமும் மில்லுக்கு போற சரி.. உனக்கு அங்கேயே நேரம் சரியா இருக்கு.. நந்தனும் வந்ததில் இருந்து வீட்டில தான் இருக்கான்.. சொத்து மட்டும் கொடுத்துட்டா போதுமா பாப்பா, அதை நம்மலே நிர்வாகம் பண்ணா தானே நல்லது. அதான் நம்ம டெய்ரி பார்மை ரகுநந்தன் பொருப்பில விடலாம்னு இருக்கேன்…” என்று கூறி முடிக்கவில்லை

ரகுநந்தன் “ பாட்டி.. நான்… நான் எப்படி பாட்டி… இது.. இதெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது பாட்டி.. “

“ பரவாயில்ல நந்து, எல்லாமே முதல் தடவை புதுசா தான் இருக்கும். அப்புறம் போக போக நம்ம பழகிக்கலாம்.. மிதிலா கூட முதல்ல தனியா மில்லுக்கு போக பயந்தா..இப்போ பாரு.. உனக்கும் ஒரு தொழில் வேணும் தானே நந்து.. “

“ இல்லை பாட்டி அதுவந்து…”

“ வந்து போயி எல்லாம் இல்லை. நம்ம மூணு பேரும் நாளைக்கு அங்க போறோம் அவ்வளோதான்… அப்புறம் இன்னொரு விஷயம், எனக்கு வயசாயிடுச்சு கண்ணா, மிதிலாவோ வயசு பொண்ணு எல்லா இடத்துக்கும் அவளை அனுப்ப முடியாது. நீ தானே இதை எல்லாம் பார்க்கணும்.. முதலாளி இருந்து பார்க்கிற மாதிரி வருமா என்ன.. நீங்க ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு பொறுப்பை எடுத்துகிட்ட மிச்சம் இருக்க தோட்டம் தொறவு கணக்கு வழக்கு எல்லாம் நான் கோகிலாவை வைத்து பார்த்துப்பேன்” என்று ரகுநந்தன் சம்மதிக்கும் விதமாக கூறவும்

வேறு வழியே இல்லாமல் ரகுநந்தன் சரி என்று கூறினான்.. அவனுக்கு ஏனோ இங்கு வந்து மாட்டிகொண்டது போல இருந்தது.. டெக்சாஸில் குளிரூட்டப்பட்ட அறையில் எத்தனை சுகமாய் வேலை பார்த்தவன், இப்பொழுது ஒரு பால் பண்ணைக்கு பொறுப்பை ஏற்க போகிறான்..

“ சதிஸ் மட்டும் இதை எல்லாம் கேட்டான் அவ்வளோ தான் என்னை கிண்டல் பண்ணியே கொன்னுடுவான் “ என்று நொந்துகொண்டான்..

மிதிலா பதில் எதுவும் கூறாமல் அமைதியாய் இருக்கவும் “ என்ன மிதிம்மா அமைதியா இருக்க…” என்று ஜெகதா வினவினார்,

“ ஒருவேளை இவளுக்கு இந்த ஏற்பாடு பிடிக்கவில்லையோ” என்று எண்ணியபடி ரகுநந்தனும் அவள் முகம் நோக்கினான்..

“அதில்ல பாட்டி உங்க முடிவு எப்பவுமே தப்பா இருக்காது.. இதில அவருக்கு சம்மதம்னு சொன்னா பின்ன நான் சொல்ல என்ன இருக்கு.. நல்ல விசயம் தான் பாட்டி.. ஆனா கண்டிப்பா நாளைக்கு நானும் வரணுமா என்ன ???” என்று தயக்கமாய் கேட்டவளை இருவருமே விநோதமாக பார்த்தனர்..

ஏனெனில் ரகுநந்தன் வந்து பார்த்த இத்தனை நாட்களில் மிதிலாவிடம் தயக்கம் என்பது சிறிதுகூட இல்லை என்று புரிந்துகொண்டான். ஜெகதாவை கேட்கவும் வேண்டுமா என்ன??

“ ஏன் மிதிம்மா.. ஏன் நாளைக்கு அங்க வந்துட்டு அப்படியே நீ மில்லுக்கு போ டா.. நந்து சைன் பண்ணும் போது நீயும் அதில பண்ணனுமே… “

“ அதுக்கில்ல பாட்டி நாளைக்கு மில்லுல புது ஆர்டர்கான லோட் எல்லாம் அனுப்பனும் அதான்…” என்று தயங்கவும்

“ பாட்டி விடுங்க அவங்களுக்கு விருப்பம் இல்லைனா இந்த அரேஞ்ச்மென்ட் வேண்டாம்..” என்று பட்டென்று பேசிவிட்டான் ரகுநந்தன்.. அவனுக்கு ஒருவேளை மிதிலாவிற்கு இதில் விருப்பம் இல்லை என்ற எண்ணம்..

“ஐயோ !! அதெல்லாம் இல்லை நந்தன்… நான் விருப்பம் இல்லைன்னு சொல்லவே இல்லையே.. ப்ளீஸ் டோன்ட் மிஸ்டேக்கன் மீ…” என்று பதறி பதில் அளித்தாள் மிதிலா..

ஆனால் ரகுநந்தனின் மனமோ அவள் நந்தன் என்று அழைத்ததிலேயே நின்று விட்டது.. நண்பர்களுக்கு ராக்கி, அன்னைக்கு ரகு, இப்பொழுது பாட்டிக்கு நந்து அத்தனை ஏன் அவன் திருமணம் செய்துகொள்ள நினைத்த லிசி கூட ராக்கி என்று தான் அழைப்பாள்.

ஆனால் மிதிலாவோ பதற்றத்தில் அழைத்தாலும் அவள் மனதில் இருந்து நந்தன் என்று அழைத்தது போல இருந்தது..

“ நந்தன்… ஹ்ம்ம் லவ்லி” என்று மனதிற்குள் சொல்லிகொண்டான். அவனை அறியாமல் அவன் இதழ்கள் புன்னகையை பூசிக்கொண்டன.

“ என்ன இவன் திடீர்னு சிரிக்கிறான்.. அப்பப்ப இவனுக்கு என்ன தான் ஆகுமோ!” என்று எண்ணியபடி

“ பாட்டி நான் இது பிடிக்காம எல்லாம் வரலை சொல்லல “ என்று மீண்டும் தொடங்கினாள்..

ஜெகதாவோ “ இங்க பாரு மிதிலா எத்தனை தடம் நான் சொல்ல நீயும் வந்து சைன் பண்ணனும்.. அதான்.. சைன் மட்டும் பண்ணிட்டு மில்லுக்கு போடா. வேணும்னா முகேஷை வந்து விட சொல்றேன்.. நான் இவன் கூட கொஞ்ச நேரம் இருந்துட்டு வீட்டுக்கு வந்திடறேன் சரியா “ என்றார்

முகேஷ் என்ற பெயரை கேட்டதும் மிதிலாவின் முகத்தில் அப்பட்டமாக ஒரு அதிர்வு தெரிந்ததை ரகுநந்தன் கவனித்துவிட்டான்..

“ இவ ஏன் இப்போ இப்படி ஒரு ரியாக்சன் கொடுக்கிறா?? யார் அந்த முகேஷ்?? அவன் பேரை கேட்டு இவ ஏன் சாக் ஆகுறா ??” என்று யோசித்தவன் மனம் ஒரு நொடியில் ஏதேதோ கற்பனையை வளர்த்து, பின்                 

“ ச்சி ச்சி அதெல்லாம் இருக்காது.. மிது முகம் ஒன்னும் சந்தோஷத்தில் ஷாக் ஆகலை.. அதில் ஒரு வெறுப்பு இருந்ததே…” என்று எண்ணியவனின் மனம் இடித்தது

“என்ன மிது வா ???” என்று

“ மிது… மிதுன்னா நான் சொன்னேன்.. ஹ்ம்ம் இருக்கிறதே மூணு எழுத்து நீ அதையும் சுருக்கி ரெண்டு பண்ணிட்ட“ என்று தானாய் சிரித்துகொண்டான்..

ஜெகதாவும், மிதிலாவும் முக்கியமாய் பேசிக்கொண்டு இருக்க, இவனோ அதற்கும் தனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்பது போல மிதிலாவிற்கு பேர் வைத்தது பற்றி நினைத்து சிரித்துகொண்டு இருந்தான்.

இதை கவனித்த பெண்கள் இருவரும் அவனை வித்தியாசமாய் பார்த்தனர்.. அதன் பின்னரே நடப்பிற்கு வந்த ரகுநந்தன்

 “ ஹா என்ன பாட்டி பேசி முடுச்சுட்டிங்களா?? சரி அப்போ நாளைக்கு நம்ம மூணு பேரும் கிளம்பிடலாம் என்ன சரிதானே பாட்டி “ என்று கூறிவிட்டு மிதிலாவையும் ஒரு பார்வை பார்த்து விட்டு அதே புன்னகையோடு கிளம்பிவிட்டான்..

“ அட!! இவனுக்கு நிஜமாவே நட்டு கழண்டு போச்சா?? நான் இங்க வரலைன்னு சொல்லிட்டு இருக்கேன்.. மூணு பேரும் போகலாம்னு சொல்லிட்டு போயிக்கிட்டே இருக்கான்… இதுக்கு மேல நம்ம போகாமல் இருந்தா அது நல்லாவும் இருக்காது, பாட்டி மனசும் சங்கட்டப்படும்.. “ என்று எண்ணியவள்

“ சரி பாட்டி நானும் நாளைக்கு வரேன்.. சைன் பண்ணிட்டு நான் அப்படியே மில்லுக்கு போயிடுறேன். இப்போ சந்தோசமா!!“ என்று கேட்டாள்..

“இதை தான் நான் அப்போ இருந்து சொல்றேன். அவன் சொல்லிட்டு போகவும் மட்டும் சரின்னு சொல்லற..” என்று வேண்டுமென்றே சீண்டினார்..

அவரை குறும்பாக பார்த்து “ பாட்டி இது கொஞ்சம் கூட நல்லா இல்லை.. அவர் உங்க பேரன். அவருக்கு ஒரு விஷயம் முதல் முதல்ல நடக்கும்போது நம்ம எல்லாம் கூட இருக்கனும் தான்.. நான் வரேன்னு சொல்லறதுக்கு முன்னமே அவரே சொல்லிட்டு போயிட்டார்.. ஆனா அதை நீங்க பெரிய விஷயம் பண்ணாம இருந்தா சரிதான்..” என்று சிரித்தாள்..

“ ஹா ஹா நான் என்ன மிதிம்மா பெருசு பண்ண போறேன்.. என் பேரனும் பேத்தியும் கடைசி வரைக்கும் ஒற்றுமையா சந்தோசமா இருந்தா போதும்டா எனக்கு.. ” என்று கூறியவரின் முகத்தில் வேறு எதுவோ ஒரு உணர்வு வந்து போனது போல இருந்தது..

இப்படி சிறிது நேரம் பேசிவிட்டு மிதிலா தன் அறைக்கு வந்துவிட்டாள். ஆனால் அவள் மனம் எல்லாம் அந்த முகேஷை சந்திப்பதை எண்ணியது..

“ச்சி இருந்திருந்து அவன் முகத்தில முழிக்கனுமா?? ஆனா அவனால என்ன செய்ய முடியும் பாட்டி, நந்தன் எல்லாம் இருக்கும் போது.. “ என்று எண்ணி கொண்டவளின் உள்ளம்

“ என்ன நந்தனா !!!!!” என்று அலறியது…

“ ச்சு எதோ ஒரு ப்ளோல வந்திடுச்சு.. தட்ஸ் ஆல்..” என்று மனதை ஒரு குட்டு குட்டி அடக்கிவைத்தாள்..

அங்கு தன்னறைக்கு வந்த ரகுநந்தனோ “முகேஷ்  பெயரை கேட்டதும் மிதிலா முகம் ஏன் மாறினது.. அவன் யாரு?? அவனுக்கு இவளுக்கு என்ன இருக்கும் ?? அப்படி ஒரு வெறுப்பை காட்டுச்சே… ஹ்ம்ம் சரி எதுவா இருந்தாலும் நாளைக்கு அங்க போனா தெரிஞ்சிடும்” என்று நினைத்து படுத்தவனும் தன் அன்னையின் நினைவு வந்தது..

தன்னிடம் இருந்த லீலாவின் புகைப்படத்தை எடுத்து கைகளில் வைத்துகொண்டு “ என்னம்மா இப்படி அமைதியா எல்லாம் பார்த்துட்டு இருக்கீங்க?? இப்ப உங்களுக்கு சந்தோசமா?? உங்க விருப்பபடி அங்க எல்லாம் விட்டிட்டு இங்க வந்தேன்.. பாட்டி என்னடான்னா பெரிய பெரிய பொறுப்பை எல்லாம் என்கிட்டே குடுக்க பாக்குறாங்க..”

“ இதல்லாம் சரிவருமா மா?? எத்தனை நாளைக்கு என்னால இதை எல்லாம் தாக்கு பிடிக்க முடியும்?? ஹ்ம்ம் என்னவோ நீங்க சொல்லிட்டிங்கன்னு இங்க நான் வந்துட்டேன்.. இனி வாழ்கையில எனக்கு காத்துட்டு இருக்குன்னு எனக்கு தெரியலை. ஆனா அம்மா என் மனசில ஆயிரம் கேள்விகள் இருக்கு உங்ககிட்டையும் பாட்டிகிட்டையும் கேட்க..”

“ பாட்டி ரொம்ப நல்ல டைப்பா இருக்காங்க, நீங்களும் ரொம்ப சாப்ட் தான். ஆனா ஏன் மா இங்க இருந்து கிளம்பி அவ்வளோ தூரம் போனிங்க?? உங்களுக்கு பாட்டிக்கும் என்ன பிரச்சனை?? இதை எல்லாம் என்கிட்டே நீங்க சொல்லியிருக்கலாமே மா.. நம்ம எல்லாம் ஒன்னா ஒரே குடும்பமா சந்தோசமா இருந்திருக்கலாமே மா..” என்று பேசிக்கொண்டிருந்தவன் கையில் புகைப்படத்தை வைத்து அப்படியே உறங்கியும் விட்டான்.

கோகுலம் என்ற பெயர் தாங்கிய பெரிய கட்டிடம் இவர்கள் மூவரையும் அழகாய் வரவேற்றது.. மிதிலா மற்றும் ஜெகதாவிற்கு ஏற்கனவே பழக்கமான இடம் தான். ஆனால் ரகுநந்தனின் பார்வை தான் சுற்றி சுற்றி வந்தது..

அவன் மனதில் தோன்றிய ஆச்சரியம் முகத்திலும் தெரிந்தது.. பால் பண்ணை என்று கூறியதும் அவன் வேறு மாதிரி கற்பனை செய்துவைத்து இருந்தான்.. ஆனால் இங்கோ சுமார் ஐந்நூறு கரவை பசுக்களுக்கு பெல் இருக்கும். மிக மிக நேர்த்தியாய் அழகாய் வடிவமைக்க பட்டு இருந்தது. சிறிதும் இயற்கை சூழல் மாறாமல் பார்த்து பார்த்து அமைத்திருந்தார்கள் இப்பண்னையை..

கரவைகளுக்கு தாங்கள் எல்லாம் ஒரு கட்டிடத்தில் இருக்கும் உணர்வே இல்லாமல் புல் வெளியில் மேய்ந்து கொண்டு இருந்தன.. மாடுகள் குளிக்க, பராமரிக்க, மருத்துவம் என்று அனைத்திற்கும் தனி தனி பகுதிகள் இருந்தன..

பால் கறக்க, சுத்திகரிக்க, தயிர், வெண்ணை, நெய் என்று எல்லா பால் பொருட்களுக்கும் தனி தனி பகுதிகள், தனி தனி வேலை ஆட்கள்.. எப்படியும் குறைந்தது முன்னூறு பேராவது இருப்பார்கள்..

“ வாவ் பாட்டி!! இவ்வளோ பெருசா இருக்கும்னு ஐ.. சாரி நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கலை.. பட் எல்லாமே இவ்வளோ அழகா மெய்ன்டைன்  செய்றது சிம்ப்ளி சூப்பர்… ஆனா பாட்டி நான் இவ்வளோ பெரிய பொறுப்பை நான் எப்படி  “ என்று தயங்கினான்.

பாட்டி எதோ கூற வருமுன்னே மிதிலா “ ஸ்ஸ்!! மெல்ல.. நீங்க இப்படி ஒரு ரியாக்சன் கொடுத்தா இங்க லேபர்ஸ் எல்லாம் முதலாளிக்கு எதுவும் தெரியாது போல புது ஆளுன்னு நினைச்சு ஏமாற்ற வாய்ப்பிருக்கு.. சோ இதெல்லாம் வீட்டுக்கு வந்து தனியா பாட்டிகிட்ட பேசுங்க.. எல்லாம் உங்களை தான் பார்கிறாங்க “ என்று கூறவும்

அவளை வியந்து பார்த்து, பின் தன் தலையை கோதி கொண்டு தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்றான்.. “ இது போதுமா !!” என்று பார்வையோடு. இருவரையும் ஜெகதா பெருமையாக பார்த்துகொண்டார்.          

“வாங்க வாங்க வாங்க.. அம்மா நல்லா இருக்கிங்களா…?? வாங்க சார் “ என்று தன் முப்பத்தி இரண்டு பற்களையும் காட்டி வரவேற்ற முகேஷின் பார்வை மிதிலாவையே பார்த்துகொண்டு இருந்தது.. மிதிலாவோ வேறு எங்கோ பார்த்தபடி நின்றிருந்தாள்.

அதை ரகுநந்தனும் கவனித்தான்.. “ ஓ !! விஷயம் இப்படி போகுதா!! அப்போ இவன் தான் முகேஷா ??” என்று நினைத்துகொண்டான்

“ என்ன முகேஷா நாங்க ரெண்டு பேரு மட்டும் தான் கண்ணனுக்கு தெரியுறோமா என்ன ??” என்று வினவினார் ஜெகதா..

“அட என்னம்மா இப்படி சொல்லிட்டிங்க மிதிலாவை பார்க்காம இருக்க முடியுமா என்ன ?? ஆனா அவங்களுக்கு தான் இந்த பார்மாலிட்டி எல்லாம் பிடிக்காதே..” என்றான் மிக நல்லவன் போல. என்னவோ மிதிலாவை பற்றி மிக தெரிந்தவன் போல..

ஆனால் மிதிலாவின் பார்வையோ ஒரு பொருட்டாய் கூட அவன் பக்கம் திரும்பவில்லை.. “ பாட்டி நல்ல நேரம் முடியறக்குள்ள சைன் பண்ணனுமே.. போகலாமா..” என்று கேட்டுவிட்டு வேகமாய் முன்னே நடந்தாள்..

ரகுநந்தனோ “ ஏன் இவ எப்பயுமே வித்தியாசமா நடந்துக்கிறா ?? “ என்று எண்ணிக்கொண்டு தன் பாட்டியோடும் முகேஷோடும் பேசிக்கொண்டே பின்னே நடந்தான்..

அடுத்த சில நொடிகளில் இருவரும் கையெழுத்து போட்டு முடிக்கவும் “ சரி பாட்டி நான் வந்த வேலை முடிஞ்சது” என்று ஜெகதாவிடம் கூறிவிட்டு

“ ஓகே நந்தன்.. ஆல் தி பெஸ்ட்.. மத்தவங்க சொல்றதை எல்லாம் கேட்டு எதுவும் டிசைட் செய்ய வேண்டாம். கொஞ்ச நாளில உங்களுக்கு இந்த ரொடீன் புரியும். சோ நீங்களே எதுவா இருந்தாலும் பாட்டியையும் கலந்துக்கிட்டு முடிவு எடுங்க “ என்று கை குலுக்கினாள்..

“ தேங்க்ஸ் மிது “ என்றான் தன்னையும் மறந்து.. அவனின் மிது என்ற அழைப்பு மிதிலாவிற்கு சிறிது வியப்பை தந்தது..

ஜெகதாவோ மனதில் “ நந்தன், மிது… ஹ்ம்ம் நடக்கட்டும் “ என்று சிரித்துகொண்டார்.   

இவர்களின் இந்த செயலை இரு விழிகள் மிக குரோதமாக பார்த்துகொண்டு இருந்தது.

வேறு யாருமில்லை முகேஷ்தான் “ச்சே இப்படி நடுவில வந்து கவிழ்த்துட்டானே.. சொந்தம் யாருமில்லை, இந்த மிதிலா பொண்ணை மடக்கி கல்யாணம் பண்ணி சொத்தையும் சேர்த்து அனுபவிக்கலாம்னு பார்த்தா இவன் எங்க இருந்து குதிச்சான் “ என்று எண்ணிக்கொண்டே

“மிதிலா நீங்க கவலையே படவேண்டாம்.. நான் எதுக்கு இருக்கேன்.. எல்லாம் சாருக்கு பக்காவா சொல்லி கொடுப்பேன்.. சார் மிதிலாக்கு இந்த பண்ணை ரொம்ப பிடிக்கும். இதை அப்படி டிவலோப் பண்ணைனும் அது இதுன்னு சொல்லிட்டே இருப்பாங்க.. அவங்களுக்கு நிறைய கனவு இருக்கு.. ” என்று தன்னிடம்  மிதிலா நன்றாய் பேசுவாள் என்பதை காட்டிகொள்ள முயன்றான் முகேஷ்.

“அதுகென்ன முகேஷ்… தாராளமா செய்யலாம்.. மிதிலாவோட கனவுகள் எல்லாம் கண்டிப்பா நான் நிறைவேற்றுவேன்… “ என்றான் ரகுநந்தன் அழுத்தமான குரலில் ..

அவன் வந்த இத்தனை நாட்களில் இப்படி பேசி கேட்டிராதா மிதிலா திகைத்து பார்த்தாள். பின் என்ன நினைத்தாளோ “ ஓகே பாட்டி நான் கிளம்புறேன்.. குட் லக் நந்தன்.. ஈவினிங் மீட் பண்ணலாம்..” என்று சென்றுவிட்டாள்..   

அவள் போவதையே ரகுநந்தனும் புன்னகையோடு பார்த்துகொண்டான். சிறிது நேரம் இருந்துவிட்டு ஜெகதாவும் கிளம்பி சென்று விட்டார்..

தனிமை கிடைக்கவும் வேகமாய் முகேஷ் தன் அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்து பேசினான். சிறிது நேரத்தில் அவன் முகம் பழைய தெளிவை சூடிக்கொண்டது..

                                    

                                          

Advertisement