Advertisement

         நேசம் – 5

“ இவ என்ன லூசா, கொஞ்சம் கூட படிச்சு பார்க்காம, டாகுமன்ட்ஸ்ல  என்ன இருக்குன்னு தெரியாம சைன் பண்ணிட்டே போறா… அடுத்து நம்ம படிச்சு பார்த்து சைன் பண்ணா, நம்மை தான எல்லாம் தப்பா நினைப்பாங்க” என்று குழம்பிக் கொண்டு இருந்தான் ரகுநந்தன்…

இவனது எண்ணத்தை உணர்ந்தது போல ஜெகதாம்பாள் “ மிதிலா, படிச்சு பார்த்து சைன் பண்ணு மா.. “ என்றார் மெல்ல சிரித்தபடி..

“ பாட்டி, இதுல என்ன இருக்குன்னு எனக்கு தெரியாது தான், ஆனா கண்டிப்பா நீங்க எனக்கு நல்லதை தவிர வேற எதுவும் செய்ய மாட்டிங்கன்னு எனக்கு தெரியும் பாட்டி. அதான் இதை படிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை “ என்று கூறி சிரித்தவளை பார்த்து ஜெகதாவும் சிரித்தார்..

அடுத்து கையெழுத்து போடுவது ரகுநந்தனின் முறை.. அவனுக்கோ மனதினில் யோசனை.. “ இப்படி படிச்சு பார்த்து சைன் பண்ணனுமா இல்லையா ?? நான் படிச்சு பார்த்தா, பாட்டி மேல நம்பிக்கை இல்லாத மாதிரி ஆகிடும் இல்லையா?? அட கடவுளே என்ன இது, இந்த மெண்டல் பண்ண வேலைக்கு நான் இப்படி யோசிக்க வேண்டியதா இருக்கு.. “ என்று யோசனையில் இருந்தான்

“ நந்தப்பா.. என்ன யோசனை, “ என்று ஜெகதா உலுக்கவும்

“ ஹா!! பாட்டி” என்று கூறியபடி அவனும் படிக்காமலே கையெழுத்து போட்டான்..

ஆனால் இருவருக்கும் புரியவில்லை, இன்று தாங்க போட்ட இந்த கையெழுத்து பின்னால் இவர்களின் தலையெழுத்தையே மாற்றும் என்று..

ஜெகதா கையெழுத்து போடும் வரை பொருத்து இருந்த வக்கீல் விநாயகம், தானும் சாட்சி கையெழுத்து போட்டுவிட்டு “ அம்மா எல்லாம் முடிஞ்சது, நீங்க வீட்டுக்கு கிளம்புங்க, மத்த பார்மாலிடீஸ் எல்லாம் நான் முடிச்சிட்டு டாக்குமெண்ட்ஸ் எல்லாம் வீட்டுகே கொண்டு வரேன்…” என்று கூறவும் மூவரும் கிளம்பி வீடு வந்தனர்..

ரகுநந்தன் அமைதியாய் வந்தான்.. மிதிலா தான் அவனுக்கும் சேர்த்து பேசிக்கொண்டு வந்தாள், இல்லை இல்லை  அவனை பேசவிடாமல் தானே பேசிக்கொண்டு வந்தாள்..

வீடு போய் சேரவும் பாட்டியோடு பேசலாம் என்று இருந்தவனுக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது..

வீட்டினுள் நுழையவுமே ஆரம்பித்து விட்டாள் “பாட்டி இப்போ உங்களுக்கு சந்தோசம் தானே.. இனிமே உங்களுக்கு எந்த கவலையும் இருக்க கூடாது.. நீங்க நினைச்சது எல்லாம் நடந்து முடிஞ்சுடுச்சு.. ஹப்பா!! இனிமேல் நீங்க நிம்மதியா இருக்கலாம் இல்லையா பாட்டி…”

“ ஆமா மிதி பாப்பா… எனக்கு சந்தோசம் தான்.. என் ரெண்டு செல்லங்களும் என் மேல நம்பிக்கை வைத்து படிச்சு பார்க்காம கூட காட்டின இடத்தில கையெழுத்து போட்டு வந்திருக்கிங்க.. அவ்வளோ நம்பிகையா என்மேல ??” என்று இருவருக்கும் பொதுவாய் ஒரு கேள்வியை வைத்தார்..

எங்கே விட்டால் மிதிலா முந்திக்கொள்வாள் என்று எண்ணி ரகுநந்தன் வேகமாய் பேச தொடங்கினான்..

“ என்ன பாட்டி இப்படி சொல்றிங்க.. உங்க மேல நம்பிக்கை இல்லாமையா சைன் பண்ணுவோம்… எங்களுக்கு நீங்க எது சொன்னாலும், செய்தாலும் சரிதான் பாட்டி…” என்று மிதிலாவிற்கும் சேர்த்து பதில் கூறினான் அவளை ஒரு பார்த்து..

மிதிலா மனதில் “ முந்திரி கொட்டை, சான்ஸ் கிடைச்சா போதுமே..” என்று கடிந்து கொண்டு ஜெகதாவை நோக்கி ஒப்புதலாய் புன்னகை புரிந்தாள்.. 

“அப்படி இல்ல நந்து, நான் உங்க பாட்டி தான், உங்க மேல எனக்கு பாசம் உரிமை எல்லாம் இருக்குதான், ஆனா அதுவே உங்க ரெண்டு பேருக்கும் ஒரு கஷ்டம் கொடுத்திட கூடாது இல்லையா, அதான் வக்கீலை வீட்டுக்கே வர சொல்லி இருக்கேன்.. பாத்திரம் படிச்சு காட்ட சொல்லிருக்கேன்..” என்று கூறி முடிப்பதற்குள் வக்கீலும் வந்துவிட்டார்..

“ என்ன விநாயகம் பார்மாலிடீஸ் எல்லாம் முடிஞ்சதா ???” ஜெகதா..

“ அமாங்கம்மா எல்லாம் நல்ல படியா முடிந்தது… அப்புறம் பத்திரம் படிக்கலாமா??” என்றார் ஜெகதாவை பார்த்து.

“ படிக்கலாம் படிக்கலாம், அதுக்கு முன்ன எல்லாம் ஒரு கப் காபி குடிக்கலாம். காலையில இருந்து இன்னும் யாரும் எதுவும் சாப்பிட கூட இல்லையே..” என்று கூறியவர் மிதிலாவை நோக்கவும், மிதிலா சமையல் அறைக்கு சென்று கோகிலாவிடம் காபி வாங்கி வந்தாள்..

அவள் காபி கொண்டு வரும் போது ரகுநந்தனுக்கு முதல் நாள் நடந்த அனைத்தும் நினைவு வந்தது..

மிதிலாவிற்கும் அதுவே தான் போல.. இருவரின் முகத்திலும் ஒரு சிறு புன்னகை கீற்று தோன்றி மறைந்தது.. ஆனால் எங்கே பிறர் கண்டுவிடுவரோ என்று வந்த வேகத்தில் மறைந்தும் போனது…

எத்தனை சீக்கிரத்தில் அப்புன்னகை மறைந்ததோ அத்தனை தெளிவாய் ஜெகதாவின் கண்களிலும் அது விழுந்தது.. ஜெகதாவின் மனதில் ஒரு யோசனை முடிச்சும் விழுந்தது..

வக்கீல் விநாயகமோ தான் வந்த வேலையை முடிப்பதிலேயே குறியாய் இருந்தார்.. “ அம்மா படிக்கவா ???” என்று இரண்டு முறை கேட்டு விட்டார்..

“ ஏன் விநாயகம் அவசர வேலை எதுவும் இருக்கா என்ன?? சரி சரி படிங்க” என்று ஜெகதா உத்தரவு கொடுக்கவும் தன் கையில் இருந்த பத்திரங்களை படிக்க ஆரம்பித்தார் விநாயகம்..

அவர் படித்ததை கேட்ட மிதிலாவும், ரகுநந்தனும் மனதில் குழம்பினர்.. இருவரின் குழப்பத்திற்கு காரணம் எல்லாம் இது தான்.. ஜெகதாம்பாள் கணவர் வழி வந்த பரம்பரை சொத்துக்கள் அனைத்தும் ரகுநந்தன் பெயருக்கும், ஜெகதாம்பாள் பிறந்த வீட்டில் இருந்து சீராக கொண்டு வந்த சொத்தும் , இதன் மூலம் அவர் தனிப்பட்டு சம்பாரித்த சில சொத்துகளும் மிதிலாவின் பெயருக்கும் மாற்றப்பட்டு உள்ளன. அது போக சில சொத்துகள் ஜெகதாவின் பெயரில் இன்னும் இருக்கிறது. அவரின் காலத்திற்கு பிறகு அந்த சொத்துகள் அனைத்தும் ஜெகதா டிரஸ்டிற்கு சென்று சேரும்.

அது போக மிதிலா, ரகுநந்தன் இருவரின் பெயரில் இருக்கும் சொத்துக்கள் மீது இருவருக்கும் உரிமை இருந்தாலும் முழு ஆளுமையை அதன் மீது செலுத்த இயலாது. அதற்கு மற்றவரின் ஒப்புதலும் வேண்டும். அதாவது மிதிலாவோ, ரகுநந்தனோ தங்கள் பெயரில் இருக்கும் சொத்துகளை விற்கவோ, இல்லை வேறு யாருக்கும் கொடுக்கவோ, இல்லை அதன் பெயரில் வேறு கடன் வாங்கவோ என்று எது செய்தாலும் அதற்கு மிதிலாவின் ஒப்புதலோ இல்லை ரகுநந்தனின் ஒப்புதலோ வேண்டும்.

அது மட்டுமில்லாமல் ரகுநந்தனின் சொத்துகளில் மிதிலாவும் ஒரு பங்குதாரர், மிதிலாவின் சொத்துகளில் ரகுநந்தனும் ஒரு பங்குதாரர். இதை வக்கீல் படித்து முடிக்கவும் அங்கே ரகுநந்தன் மிதிலா முகத்தில் குழப்ப ரேகைகள்..

தன் வேலை முடியவும் வக்கீல் விடை பெற்று சென்று விட்டார்.. ஜெகதாவின் முகத்தையே பார்த்தபடி இளைய தலைமுறை அமர்ந்து இருந்தது..

எதை எப்படி ஆரம்பிப்பது?? என்ன சொல்லி ஆரம்பிப்பது?? என்று இருவருக்குமே தயக்கம்.. அதை ஜெகதா அறியாமல் இருப்பாரா என்ன??

“ என்ன ரெண்டு பேரும் இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம் ?? ” என்றார் மெல்ல புன்னகைத்தபடி.. மிதிலாவிற்கு தன் பாட்டியை பற்றி தெரியும். ஆனால் ரகுநந்தனோ என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதி காத்தான்.

மிதிலா தான் “ பாட்டி.. அது.. வந்து.. “ என்று மென்று விழுங்கினாள்..

“ என்ன மிதிலா??”

“ இல்ல பாட்டி லாயர்… “ என்று இழுக்கவும்..

“ ஹ்ம்ம் நான் தான் மிதிலா இப்படி எழுத சொன்னேன், எனக்கு தெரியும் உங்களுக்கு குழப்பமா இருக்கும் தான்.. ஆனா இதை நான் முழுக்க முழுக்க உங்க நல்லதுக்காக தான் பண்ணேன். பொறுங்க நான் பேசி முடிக்கிறேன்..”

“ உங்க ரெண்டு பேருக்கும் அமைய போற வாழ்கை எப்படி இருக்கும்னு எனக்கு தெரியாது, வரப்போறவங்க எப்படி என்ன குணம்னு எனக்கு தெரியாது. எனக்கு பிறகும்  உங்க ரெண்டு பேருக்கும் ஒரு உறவு இருக்கணும்னா அதுக்கு இந்த சொத்தும் கொஞ்சம் பொதுவா இருக்கணும். அப்போதான் அடிகடி பார்க்க செய்ய இருந்தா கடைசி வரைக்கும் எல்லாம் ஒற்றுமையா இருக்கலாம்.. அதுவும் இல்லாம உங்களுக்கு ஒரு பிரச்சனை வந்தா நீங்களே ஒருத்தர்க்கு ஒருத்தர் உதவி செய்யவும் முடியும்” என்று ஜெகதா பேசி முடிக்கவும்

ரகு “ ஆனா பாட்டி இதுக்கு சொத்து தான் காரணமா இருக்கணுமா என்ன ?? உறவுங்கிறது மனசில இருந்து தானே வரணும்??” என்று வினவினான்..

“ ஹா ஹா சரிதான் நந்து… ஆனா உனக்கு வரும் மனைவியோ, இல்ல மிதிலாவிற்கு வரும் கணவனோ எப்படி என்னனு யாருக்கும் தெரியாது. சோ இந்த சொத்து எல்லாம் முழுக்க முழுக்க உங்களுக்கு மட்டும் சொந்தமா இருந்தா இதனால உங்களுக்கு பின்னால பிரச்சனைகள் வரலாம், இல்லை உங்களுக்கு ஆபத்து வரலாம். ஆனா இதில இன்னொருதற்கும் கேள்வி கேட்கும் உரிமை இருக்குன்னு தெரிஞ்சா யாரா இருந்தாலும் கொஞ்சம் அடக்கி வாசிக்க முடியும் தானே. அதுவும் இல்லாமல் உங்களுக்குமே மனதில் ஒரு கவனம் இருக்கும் அதான்..”

மிதிலாவிற்கு இப்பொழுதும் தன் பாட்டியை பற்றி பெருமை படமால் இருக்க முடியவில்லை.. எப்பொழுதும் பிறரின் நலம் பேணும் ஜெகதா, இன்று தன் பேர பிள்ளைகளின் நன்மைக்காக இதை செய்து இருக்கிறார்.. அதை மிதிலாவும் உணர்ந்து கொண்டாள்.. ஆனால் இந்த ரகுநந்தன் உடன் கடைசி வரைக்கும் உறவு பாராட்ட வேண்டுமா?? என்ற கேள்வி எழும்பவும் மனதில் சற்றே கடுப்பு கூடியது..

ஆனாலும் தன் பாசமான பாட்டிக்காக இதை பொறுத்துக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டாள். ஆனால் ரகுநந்தனிற்கு இன்னும் இது புறியவில்லை. “ ஒருவேலை பாட்டிக்கு இன்னும் நம்ம மேல நம்பிக்கை வரலையோ ??” என்று எண்ணினான்.

ஆனால் ஜெகதாவின் முகத்தை பார்த்தவனுக்கு அந்த எண்ணமும் மறைந்து போனது. “ ச்சே ச்சே இல்ல ரெண்டு பேரோட பாதுகாப்புக்கு தான் இப்படி செய்திருக்காங்க.. என் மேல நம்பிக்கை இல்லாமலா வந்த மூன்று நாளில சொத்தை எழுதி வைப்பாங்க..” என்று நினைத்தவனுக்கு தான் வந்து மூன்று நாட்கள் ஆனது என்ற எண்ணமே அவனுக்கு அதிர்ச்சியை கொடுத்தது..

ஏனெனில் இந்த மூன்று நாட்களில் ஒருமுறை கூட அவனுக்கு டெக்சாஸ் நியாபகம் வரவில்லை.. இங்கே வந்த முதல் நாள் எல்லா பாட்டியோடு பேசினான், பின் உறங்கினான்.. பிறகும் இருவருக்கும் பேசவே நிறைய விஷயங்கள் இருந்தன..

“ ஹப்ப்பா மூணு நாள் ஆச்சா ?? ஐயோ!! ஓ மை காட்.. சதிஸ் கிட்ட நம்ம பேசவே இல்லையே… போச்சு நல்லா திட்ட போறான்.. “ என்று நினைத்தவன் சட்டென்று ஜெகதாவிடம்

“ பாட்டி எனக்கு கொஞ்சம் திங்க்ஸ் வாங்கணும்.. நான் கொஞ்சம் வெளிய ஷாபிங் போகணும்…” என்றான்..

“ அதுக்கென்ன நந்து.. தாராளமா போயிட்டு வா.. ஆனா உனக்கு இன்னும் இந்த ஊரு பழக்கம் இல்லையே..” என்று கூறும் பொழுதே கோகிலா வந்தார் அம்மா என்று அழைத்தபடி..

“என்ன கோகிலா?? என்ன விஷயம் ??” ஜெகதா…

“ அது வந்து மா… நீங்க எல்லாம் ரெஜிஸ்டர் ஆபிஸ்க்கு போகவும் போன் வந்தது…” என்று தயக்கமாய் இழுத்தார்..

“ அதை சொல்ல என்ன இவ்வளோ தயக்கம்..?? சொல்லு  கோகிலா யார் பண்ணது ??”

“ அது வந்து.. அம்மா.. அதான் அந்த விசாலம்மா வீட்டில இருந்து பண்ணாங்க.. அவங்க இன்னைக்கு இங்க வரேன்னு சொல்ல சொன்னாங்கம்மா”

“என்ன விசாலம்மா ??!!!” என்று கேட்ட ஜெகதாவின் முகம் ஒரு நொடி கலக்கம் கொண்டது.. மனதிற்குள் “ இப்போ ஏன் அவ இங்க வரணும் ?? நான் நிம்மதியா இருக்கிறது பிடிக்காதே” என்று எண்ணியவர் வேகமாய் தன் உணர்வுகளை மறைத்துக்கொண்டு                 

“  மிதிலா நந்துவை நீ கூட்டிட்டு போ மா.. அவனுக்கு என்ன வாங்கணுமோ வாங்கிட்டு அப்படியே உனக்கும் என்ன வேணுமோ நீயும் வாங்கிட்டு வா…” என்று சொல்லிவிட்டு இருவரிடமும் கற்றை நோட்டுகளை கொடுத்தார்..

மிதிலாவோ பணத்தை வாங்காமல் “ பாட்டி நான்.. நான் எப்படி..” என்று தயங்கினாள்..

ஆனால் ரகுநந்தனுக்கு அந்த தயக்கம் எல்லாம் இல்லை.. அவன் பெண்களுடன் பழகாதவனா என்ன?? ஆனால் இருந்திருந்து இவளுடன் போவதா என்ற எண்ணம் மட்டும் இருந்தது.. வெளியே எதையும் காட்டாமல் ஜெகதா என்ன சொல்ல போகிறார் என்று பார்த்துகொண்டு இருந்தான்.

“ என்ன மிதிமா இப்போ எல்லாம் நான் என்ன சொன்னாலும் அடம் பண்ணற ?? அவனுக்கு இன்னும் இந்த ஊர் பழக்கமில்லைன்னு தானே உன்னை கூட்டி போக சொன்னேன்.. போ டா போய்ட்டு வாங்க.. “ என்று கூறி இதற்கு மேல் சொல்ல எதுவும் இல்லை என்று தன் அறைக்கு சென்று விட்டார்..

மிதிலா பல்லை கடித்து கொண்டு “ பாட்டி என்கிட்டே பணம் இருக்கு “ என்று கூறும் பொழுதே ரகுநந்தனும் அதையே கூறினான்.

“ பரவாயில்லை எடுத்துகிட்டு போங்க “ என்று ஜெகதா கூறவும் வேறு வழியில்லாமல் பணத்தை எடுத்துக்கொண்டு இருவரும் கிளம்பினர்.

 “ என்ன இது ராக்கோழி அமைதியா கிளம்புறா!!” என்று எண்ணி முடிக்கவில்லை மிதிலா வேகமாய் காரை திறந்து ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து விட்டாள்.. ரகுநந்தன் திகைத்து பார்த்தான்..

அவன் பார்ப்பதை உணர்ந்த மிதிலா “ என்ன ?? இன்னும் உங்களுக்கு இந்த ஊரே பழகலை.. அதுக்குள்ள ட்ராபிக் ரூல்ஸ் மட்டும் தெரியுமா ?? ஏறுங்க.. நான் நல்லா கார் ஓட்டுவேன்” என்று கூறியவளை முறைத்தபடி ஏறி அமர்ந்தான்..

டெக்சாஸில் அவன் கார் ஓட்டிய கட்சிகள் எல்லாம் வந்து போயின.. முதல் முதலில் தன் சம்பளத்தில் அவன் வாங்கிய கார் லீலாவின் தேர்வு.. ஆனால் அதில் லிஸிக்கு பிடித்தம் இல்லை..

முதல் முறை இருவரையும் ஒன்றாய் அழைத்துக்கொண்டு செல்ல எண்ணி அழைத்ததற்கு லிஸி முகம் திருப்பி சென்றுவிட்டாள். ஆனாலும் ரகு தன் தாயோடு மகிழ்ச்சியாகவே வெளியே சென்று வந்தான்.

“ ரகு, பாத்து மெல்ல ஓட்டு டா.. இப்படியா ரேஸ் கார் மாதிரி ஓட்டுவ ??” என்று எப்பொழுதும் லீலா கூறிக்கொண்டே இருப்பார்.. இதை எல்லாம் எண்ணி பேருமூச்சு விட்டவனுக்கு அப்பொழுததான் கார் கட்டை வண்டியை விட மெதுவாய் போவது தெரிந்தது..

ஜென்னல் பக்கம் வெளியே பார்த்தான், மரங்கள் எல்லாம் மெதுவாய் நடந்து போவது போல இருந்தது.. திரும்பி மிதிலாவை பார்த்தான் அவளோ இதுவே அதிகம் என்பது போல இருந்தாள்..

“ ஹலோ !! என்ன இது ??” என்றான் காட்டமாய்

“ எது ??” அவன் புறம் பார்வையை திருப்பாமலே கேட்டாள்..

“ இவ்வளோ மெதுவா போனா என்ன அர்த்தம்.. இதுல ரூல்ஸ் தெரியுமான்னு வேற கேட்டிட்டா.. சரியான டக்…” என்று சொல்லவும்

“ ஹலோ ஹலோ யாரு டக்.. நானா ?? நான் டக் மாதிரி மெதுவா போறேனா !!!” என்று எகிறினாள்..

“ ஆரம்பிச்சிட்டா ராக்கோழி…” என்று எண்ணியவன் “பின்ன உனக்கு அப்படியே வேகமா பறக்கிறது மாதிரி இருக்கோ ??” என்றான் பல்லை கடித்து

“ இப்போ என்ன உங்களுக்கு வேகமா போகனும் அதானே!! சரி போறேன் ஆனா அதுக்கு அப்புறம் நடக்கிறதுக்கு நான் பொறுப்பு இல்லை “ என்று கூறி ஆக்சிலேடரை ஒரு அழுத்து அழுத்தி ஸ்டியரிங்கை திருப்பினாள். வண்டி பறந்தது.

ஆனால் ரகுநந்தனால் இருக்கையில் நிலையாய் அமர முடியவில்லை. சீட் பெல்ட் அணிந்து இருந்தாலும் இப்புறமும் அப்புறமும் ஆடினான்.. தலையில் இடி பட்டுகொண்டது தான் மிச்சம்.. வலி பொறுக்காமல்

“ ஹேய்! ஹேய் !!.. ஸ்டாப் தி கார்… மிதிலா.. டூ வாட் ஐ சே… ஸ்டாப் தி கார் மிதிலா “ என்று கத்தினான்..

“ துறைக்கு இமோசன்ல தான் இங்கிலீஷ் வரும் போல“ என்று எண்ணிக்கொண்டு ஒரு ஓரமாய் காரை நிறுத்தினாள்.

மூச்சு வாங்க, தலையில் கை வைத்து தேய்த்தபடி முகத்தில் வலியும் எரிச்சலுடன் அவளை பார்த்து முறைதான்.. “ ஆர் யு மேட் ?? இப்படிதான் டிரைவ் பண்ணுவியா ?? இடியட்…”

“ ஹா இது நல்ல கதையா இருக்கே. நிதானமா வண்டி ஓட்டினவளை வேகமா ஓட்டுன்னு படுத்தி எடுத்துட்டு இப்போ என்ன கத்தல்??”

“ ஹே லுக்.. இது தான் நீ கார் ஓட்டுற அழகா… இப்படி ஓட்டினா பரலோகம் தான் போய் சேரனும்.. மைன்ட் இட்…” கடுகடுத்தான்..

இதற்கு மேல் மிதிலா பொறுமையாய் இருப்பாளா என்ன “ இதை நீங்க மைன்ட் இட் பண்ணுங்க என்ன.. இந்த ரோட்ல மெதுவா போனா தான் நல்லது அதான் அப்படி ஓட்டினேன்.. இப்போ புரியுதா வேகமா ஓட்டினா இந்த ரோடுக்கு வண்டியோட சேர்த்து உங்களுக்கும் பட்டி, டிங்கரிங் எல்லாம் பார்க்க வேண்டியிருக்கும்..”

அப்பொழுதுதான் கவனித்தான் இவர்கள் வந்த பாதை குண்டும் குழியுமாக இருந்தது. ஆனாலும் எரிச்சல் குறையவில்லை.. “ வாட் பட்டி?? வாட் டிங்கரிங் ??” என்றான் புரியாமல்

“ அது சரி இதுவே இவனுக்கு புரியாதா ?? மாட்டினடா மவனே இன்னைக்கு.. திரும்பி வீட்டிற்கு போறதுக்குள்ள உன்னைய ஒரு வழி பண்ணல நான் மிதிலா இல்லை.. இங்கிலீஷ்ல படிச்ச எ பி சி டி கூட உனக்கு மறந்து போயிடனும்…” என்று கறுவிக்கொண்டாள்..

“ ஹே யு… ஆர் யு டம்ப்??”

“ மவனே பேசு பேசு… உனக்கு எவ்வளோ பேச முடியுமோ பேசு.. “ என்று முனுமுனுத்தாள்..

“ வை ஆர் யு மர்மரிங்?? ஸ்பீக் சௌன்ட்லி…”

“ ஹா….. அப்படியா உங்களுக்கு காது கேட்காதுன்னு எனக்கு தெரியாது.. இனிமே உங்ககிட்ட பேசும்போது சத்தமா பேசுறேன் என்ன ??” என்று ஏழு ஊருக்கு கேட்கும் படி பேசினவளை கதை அடைத்து  வியந்து பார்த்தான்..

“ என்ன இவன் கோவமா பார்பான்னு பார்த்தா ஆச்சரிய குறியை காட்டுறான்..” என நினைத்துகொண்டு மெதுவாய் வண்டியை ஓட்ட தொடங்கினாள்.

ரகுநந்தனுக்கு இவை எல்லாம் முற்றிலும் புதிது தானே.. இப்படி எல்லாம் அவன் யாரோடும் பேசியதும் இல்லை.. வார்த்தைக்கு வார்த்தை மல்லு கட்டியதும் இல்லை. லிஸியோடு அவ்வப்போது வாக்கு வாதம் வரும் ஆனால் அவள் எங்கே இவன் பேசுவதற்கு வைப்பு கொடுத்தாள்.?

ஆனால் இன்று இந்த மிதிலாவோடு சரிக்கு சரியாய் பேசிக்கொண்டு திட்டிக்கொண்டு ஒரே காரில் பயனித்துகொண்டு இருக்கிறான். இதை எல்லாம் நினைத்து பார்க்க அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது.. வாழ்கை அவனுக்கு இன்னும் நிறைய சுவாரசியங்களை வைத்திருகிறது போல என்று எண்ணிகொண்டான்..

ரகுநந்தனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்றதும் திரும்பி அவன் முகம் பார்த்தாள் மிதிலா..

அங்கே இன்னும் ஆச்சரிய குறி தான்..

“ அட இவன் இவ்வ்வ்ளோ… நேரமா ஆச்சரிய பட இங்க என்ன இருக்கு ??” என்று நினைத்துகொண்டே “ எங்க போகணும் ??” என்று வினவினாள்..

அவனுக்கு அது காதில் விழவில்லை.. மறுபடியும் “ எங்க போகணும்” என்று கேட்டாள். அதற்கும் பதில் இல்லை..

மெல்ல அவனை நெருங்கி “ எங்க போகணும் ??????” என்று ஒரு கத்து கத்தினாள்.. திகைத்து இவள் புறம் திரும்பி விழித்தான் அவன், திட்டுவானோ என்று பயந்து விழித்தாள் இவள்..

இருவரின் பார்வையும் ஒரு சில நொடிகள் உறவாடிக்கொண்டன அவர்களின் அனுமதி இல்லாமல்..

ஆனால் மிதிலா சட்டென்று சுதாரித்து பழைய நிலைக்கு வந்துவிட்டாள். ரகு நந்தன் தான் குழம்பிவிட்டான்..” இவ நம்ம கிட்ட வந்து கத்தினாளே?? இல்லையோ!! நம்ம கற்பனையோ?? கிட்ட பார்த்தோமே…. அதுவும் கற்பனையோ!!” என்று தலையை உழுக்கி கொண்டான்..

ஆனால் ஒன்றுமே நடக்காதது போல “கனவு கண்டு முடிச்சாச்சா?? இப்போவாது சொல்லுங்க எங்க போகணும்!! ஸ்ஸ்ஸப்பா  அப்போ இருந்து கேட்கிறேன் “ என்று சலித்து கொண்டாள் வேறு..

“ ஓ !! அப்போ எல்லாம் கற்பனை தானோ!!” என்று எண்ணிக்கொண்டு. ” ஹ்ம்ம் புது சிம் வாங்கணும்… அப்புறம் கொஞ்சம் திங்க்ஸ் வாங்கணும்..”

“ ம்ம் சரி பஜார்ல இறக்கி விடுறேன் என்ன வாங்கணுமோ வாங்கிட்டு வாங்க. நான் எனக்கு தேவையான திங்க்ஸ் வாங்கிட்டு காருக்கு வந்திடுறேன்..”

ஆனால் அதன் பிறகே அவனுக்கு மனதில் தயக்கம் ஏற்பட்டது. இங்கே எந்த கடையில் என்ன எப்படி என்று எதுவும் அவனுக்கு தெரியாது. மிதிலாவை உடன் அழைப்பது தவிர வேறு வழியும் அவனுக்கு இல்லை. இப்படி இவன் அவளை அழைக்கலாமா வேண்டாமா என்று எண்ணிக்கொண்டு இருக்கும் பொழுதே மிதிலா காரை கடைத்தெருவின் ஒரு பகுதியில் நிறுத்தி இறங்கியும் விட்டாள்.

மிதிலா ரகுநந்தனை வெளியே அழைக்கவும் தான் “ ஹா!! சாரி.. சம் திங்கிங்.. தென்…” என்று இழுத்தான்..

மிதிலா “ இப்படியே நேரா போனா பெரிய மொபைல் ஷாப் இருக்கும், அங்க சிம் வாங்கிகோங்க”  என்று கூரியவளுக்கு அப்பொழுது தான் நியாபகம் வந்தது வேகமாய் அவனிடம் “ ஐ டி ப்ரூப் ஏதா இருக்கா??” என்றாள்.

அவனோ அதை விட வேகமாய் இல்லை என்று தலையை ஆட்டினான். அதை கண்ட மிதிலாவிற்கு கோவம் வருவதற்கு பதில் சிரிப்பு தான் வந்தது..

“பாவம் இவன் மட்டும் என்ன செய்வான் ?? திடீர்னு இங்க வரவேண்டிய சூழ்நிலை.. ஹ்ம்ம் “ என்று பெருமூச்சு விட்டு

“ நோ பிராப்ளம்.. என் ஐ டி ப்ரூப் தரேன் என் நேம்ல சிம் வாங்கலாம். உங்களுக்கு ஓகே தானே ??”

அவனுக்கு வேறு வழியில்லையே.. அதற்கும் சரி என்று வேகமாய் தலையை உருட்டினான். இருவருக்குமே இந்த வீதி உலா ஒரு மகிழ்ச்சியுடன் அமைந்தது.            

 

 

                                                      

 

Advertisement