Advertisement

நேசம் – 4

விரல் நகத்தை கடித்தபடி குட்டி போட்ட பூனை போல குறுக்கும் நெடுக்குமாக சாற்றப்பட்ட ஜெகதாவின் அரை கதவையே பார்த்தபடி நடந்து கொண்டு இருந்தாள் மிதிலா..

அவள் மனமோ படக் படக் என்று அடித்து கொண்டது.. அறையை பார்ப்பதும், தனக்குள் தானே முனுமுனுப்பதுமாக இருந்த மிதிலாவை பார்த்தபடி காய் நறுக்கிக்கொண்டு இருந்தார் கோகிலா.. அவரின் பார்வையை உணர்ந்த மிதிலா

“ என்னக்கா ??” என்று கேட்டாள்..

“ அது ஒண்ணுமில்ல மிதிலா ஜெகதா அம்மாவோட பேரன் வந்தாச்சு.. நீ தான் தினமும் சாமி கும்பிடுவ, பாட்டியோட சொந்தம் எல்லாம் மறுபடியும் வந்து சேரணும்னு.. இன்னைக்கு அது நடந்து இருக்கு.. ஆனா உன் முகத்தில ஒரு சின்ன சிரிப்பு கூட இல்லையே அதான்…”

“ ஓ !! அதுவா கா “ என்று இழுத்தவள் சுற்றும் சுற்றும் ஒரு பார்வை பார்த்து மெல்ல நடந்த விசயங்களை கூறினாள்..

அனைத்தையும் அமைதியாய் கேட்ட கோகிலா “ அட என்ன மிதிலா இப்படி பண்ணிட்ட.. இதை எல்லாம் அந்த தம்பி மட்டும் பாட்டி கிட்ட சொல்லுச்சு அவ்வளோ தான்.. அதுவும் இல்லாம சொந்த பேரன் வேற.. இத்தனை வருஷம் அப்புறம் வந்து இருக்கான்…. ஹ்ம்ம் இனிமே நீ தான் பார்த்து இருக்கனும்“ எனவும்

“அக்கா நீங்க வேற சும்மா இருங்க நானே பயந்து போயிருக்கேன்.. ஆனா நான் வேணும்னே எதுவும் பண்ணலையே..”

“ அது உனக்கு தெரியும், எனக்கு புரியும்.. ஆனா புதுசா வந்திருக்க இந்த தம்பி எப்படின்னு நமக்கு தான் தெரியுமா ?? இல்ல உன் பாட்டிக்கு தான் புரியுமா?? இத்தனை வருஷம் கழிச்சு பேரன் வந்த சந்தோசத்தில இருக்காங்க, நீ அந்த தம்பி வர விஷத்தை மறைச்சது மட்டும் தெரிஞ்சது அவ்வளோ தான்” என்று தன் பங்கிற்கு சேர்த்து அவள் வயிற்றில் புளியை கரைத்தார் கோகிலா.

அவருக்கு மிதிலா காலை ஐந்து மணிக்கு கோவிலுக்கு தன்னை அனுப்பிவிட்ட கடுப்பு..               

அங்கே அறைக்குள் ஜெகதாவிற்கோ இத்தனை ஆண்டுகள் கழித்து தன் பேரன் தன்னை காண வந்திருப்பது அவரால் நம்ப முடியாத ஒரு விஷயமாய் இருந்தது..

எத்தனை நாள், எத்தனை வருஷம் ஏங்கி தவித்திருப்பார்.. தன் மகனை தான் காலனிடம் பறிகொடுத்தோம், பேரனின் சாயலில் மகனை காணலாம் என்று எண்ணி சிறு நிம்மதி பெருமூச்சு விட்டவரை பார்த்து விதி ஏளனம் செய்து அந்த சிறு நிம்மதியையும் பறித்து கொண்டது..

ஆனால் இன்று கனவில் கூட எதிர் பார்க்காத பொழுது தன் கண் முன்னே வந்து நிற்கும் ரகுநந்தனை பார்த்ததும் பேச்சு வரவில்லை ஜெகதாவிற்கு.. கண்களில் இருந்து நீர் மட்டுமே வழிந்தது..

ஒரு விஷயம் நடக்க வேண்டும் என்று வருட கணக்காய் பிரார்த்தனை செய்தாலும், எதிர் பாராத சந்தர்பத்தில் அது நடந்துவிட்டால் அதிர்ச்சி தானே தரும்.. அதே அதிர்ச்சி தான் ஜெகதா மற்றும் மிதிலாவிற்கு.

ரகுநந்தனோ முற்றிலும் வேறாய் உணர்ந்தான்.. வேறு யாரோ ஒருவர் வீட்டில் வந்து அமர்ந்து இருப்பது போல இருந்தது.. என்னதான் தன் பிறப்பிடம், தன் பாட்டி என்றாலும், அவரை பற்றி இவனுக்கு தெரியாது, இவனை பற்றி அவருக்கு தெரியாது.. தெரியாது என்ன, இப்படி ஒரு உறவு இருப்பதே கடைசி நேரத்தில் தன் அன்னை எழுதி வைத்ததால் தானே அவனுக்கு தெரியவந்தது..

பாட்டி என்று உறவு கொண்டாடவும் முடியவில்லை, வேறு யாரோ என்று விலகி நிற்கவும் முடியவில்லை.. ஏனெனில் இவ்வுலகில் தனக்கென்று இருக்கும் ஒரே ஒரு உறவு ஜெகதா மட்டும் தான்.. ஒரு சில நொடிகளில் அவன் மனம் திரும்பி டெக்சாஸ்கே சென்றுவிடலாமா என்று எண்ணியது..

ஆனால் அங்கே யார் இருக்கிறார்கள் ?? இந்த கேள்வி அவனை போட்டு வாட்டி எடுத்தது.. ரகுநந்தனின் மன நிலமையை ஜெகதா உணர்ந்தாரோ என்னவோ “நந்து“ என்று மெல்ல அழைத்தார்..

தன் சிந்தனையில் இருந்து கலைந்தவன் “ ஹா !!.. என்.. என்ன பாட்டி..” என்றான்.. அவனுக்குமே என்ன பேசுவது ?? எதை பேசுவது?? எப்படி பேசுவது என்று புரியவில்லை..

“ எனக்கு என்ன பேசுறதுன்னு தெரியல நந்து… நீ இங்க வந்ததுக்கு நான் சந்தோஷ படவா ?? இல்லை உன் அம்மா அதான் என் மருமக லீலா கடைசி வரைக்கும் இங்க வர முடியாமையே போச்சே அதை நினைச்சு நான் வருத்தபடவா தெரியலை.. ஒரே ஒரு தடவயாது அவளை பார்த்து மனசு விட்டு பேசணும்னு இருந்தேன்.. இப்படி அதுக்கு வாய்ப்பே இல்லாம போயிடுச்சே பா. எத்தனையோ விஷயங்கள் உன் அம்மாகிட்ட பேசணும் எனக்கு, ஆனா அதெல்லாம் இனி யார் கிட்ட பேச முடியும். ஆண்டவன் என்னை இவ்வளோ சோதிக்க கூடாது நந்து“

 “ம்ம்ம் எனக்கும் என்ன சொல்றதுன்னு தெரியல பாட்டி.. திடிர்னு இப்படி எல்லாம் நடக்கும்னு நானும் நினைக்கலை.. ஆனா பாட்டி என்.. எனக்கு அம்மா லெட்டர் படிச்ச பிறகு தான் உங்களை பத்தி தெரியும்… எனக்கு பழசு எல்லாம் சுத்தமா நியாபகமே இல்லை.. ஒருவேளை அம்மா உங்களை பத்தி அங்க ஏதாவது பேசி இருந்தா கண்டிப்பா நாங்க முன்னாடியே வந்திருப்போம் பாட்டி ” என்றான் ஒரு விதமான குற்ற உணர்வில்..

பின் எதோ தோன்ற தன் அன்னை தனக்கு எழுதி வைத்து இருந்த கடிதத்தை ஜெகதாவிடம் கொடுத்தான்.. கைகள் நடுங்க அதை பெற்றவர் கண்களும் மனமும் கலங்க படித்து முடித்தார்.. என்னதான் திடமான பெண் என்றாலும் அவருக்கும் மனம் இருக்கிறது தானே..

சிறிது நேரம் எதுவும் பேசாமல் கண்கள் மூடி அமைதியாய் அமர்ந்து இருந்தார்.. அவர் மனதிற்குள் பழசெல்லாம் நினைவு வந்து போயின.. ஆனால் எங்கே தான் கலங்கினால் ரகுநந்தனும் கலங்குவானோ என்று எண்ணி ஒரு நீண்ட பெருமூச்சை விட்டு    

“ புரியுது நந்து… இதுல யார் மேல தப்பு சொல்ல முடியும். ஆனா இது இப்படி தான் நடக்கணும்னு இருக்கும் போது நம்ம யார் என்ன பண்ணாலும் எதுவும் செய்ய முடியாதே.. “  

இப்படி சிறிது நேரம் பாட்டியும் பேரனும் பேசிவிட்டு அறையை விட்டு  வெளியே வந்தனர்.. ஏன் சொல்லாமல் வந்தாய் என்று ஜெகதாவும் கேட்கவில்லை, ரகுநந்தனும் அதை பற்றி பேசவில்லை..

மிதிலா இருவரையும் பார்த்தபடி இருந்தாள்.. மனதில் “ போட்டு குடுத்து இருப்பானோ??” என்ற கேள்வி ஓடிகொண்டே இருந்தது.. அவளது கலக்கமான முகத்தை கண்ட ஜெகதா

“ என்ன மிதி குட்டி இப்போ உனக்கு சந்தோசமா??? நீ தானே தினமும் சாமிக்கிட்ட வேண்டுவ, இப்போ அது நடந்திடுச்சு.. பாரு நந்து நம்ம கூடவே கடைசி வரைக்கும் இருக்க போறான்.. இனிமே நானும் நிம்மதியா இருப்பேன்..” என்று அவளிடம் பேசிக்கொண்டே

“ நந்து, இவ தான் என் பேத்தி… மிதிலா.. இத்தனை வருசமா எனக்கு இருந்த ஒரே சொந்தம் பந்தம் உறவு எல்லாம் மிதிலா தான். அவளுக்கும் நான் மட்டும் தான்.. “ என்று மிதிலாவை முறையாக அறிமுகம் செய்து வைத்தார்..

பெயருக்கு ஒரு சம்பிரதாயமான புன்னகை புரிந்தான் ரகுநந்தன்.. அதேபோல தான் மிதிலாவும்..

“நந்து இவங்க கோகிலா… இந்த வீட்டுல ஆள் இன் ஆள்… காலையில குடிக்கிற காப்பில இருந்து நைட்டு குடிக்கற பால் வரைக்கும் எல்லாம் பார்த்து செய்றதுல கோகிலாவை மிஞ்ச ஆளே இருக்காது.. “ எனவும் கோகிலாவை பார்த்து நன்றாகவே சிரித்தான் ரகுநந்தன்..

ஆனால் மிதிலாவோ “ ஒருவேளை இவன் பாட்டிகிட்ட சொல்லலையோ.. இந்த கோகிலா அக்கா வேற என்னைய டென்சன் பண்ணிட்டாங்க” என்று தனக்கு தானே பேசிக்கொண்டு தன் அறைக்கு சென்று விட்டாள்…

இதற்கு மேல் அங்கே நிற்க அவளால் முடியவில்லை.. ஏனோ மனம் குழம்பி தவித்தது.. இத்தனை நாள் பாட்டி தனக்கு மட்டும் தான் சொந்தம் என்று நினைத்து கொண்டு இருந்தாள்.. ஆனால் இன்று ???

மிதிலா நினைத்து இருந்தது எல்லாம் இது தான், எப்படியும் பாட்டி கொடுக்க போகும் பரம்பரை சொத்திற்காக தான் அவரது சொந்தம் திரும்பி வரும் என்று. ஆனால் இன்று நிரந்தரமாக இங்கயே தங்கிக்கொள்ள அவன் வந்து நிற்கவும் மிதிலாவிற்கு மனம் சற்றே முறைண்டியது..

“ அப்போ பாட்டி என் கூட இருக்க மாட்டாங்களா ??? என்னைய கல்யாணம் பண்ணி கொடுத்து கடைசி வரைக்கும் என்கூடவே இருப்பேன்னு சொன்னாங்களே.. இவன்.. இந்த  வெள்ளைக்காரன் விடணுமே ??? ஒருவேளை பாட்டி அவனுக்கு தான் சொந்தம்னு உரிமை கொண்டாடினா என்ன பண்றது??” என்று தனக்கு தானே பல சிந்தனைகள் செய்து கொண்டு குளித்து கிளம்பி கீழே வந்தாள்..

வந்து பார்த்தால், இவள் தன் அறைக்கு செல்லும்பொழுது எப்படி ரகுவும் ஜெகதாவும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனரோ அதே போல தான் இன்னும் இருந்தனர்.. அவர்களுக்குள் பேச இத்தனை வருஷ கதை இருந்ததே.. மிதிலா சென்று கிளம்பி வருவதற்குள் அவளை பற்றி அனைத்தையும் ஜெகதா கூறி இருந்தார் ரகுநந்தனிடம்..

ரகுநந்தன் தன் அன்னையை இழந்து வந்து இருக்கிறான் என்பது மிதிலாவிற்கு தெரியாது.. ஆனால் மிதிலாவை பற்றி வந்த முதல் நாளே அனைத்தும் அறிந்துகொண்டான் ரகுநந்தன்..

மிதிலா நினைப்பதை போல “எங்கே தன் பாட்டியை தன்னிடம் இருந்து பிரித்துவிடுவானோ” என்ற எண்ணம் எல்லாம் அவனுக்கு இல்லை. அவனை பொறுத்த வரை தன் அன்னை கூறியதால் இங்கு வந்தான்.. அவன் மனதிற்கும் சற்றே மாறுபட்ட சூழ்நிலை தேவை பட்டதால் இங்கே இருக்க நினைக்கிறான்.. அதுவும் இல்லாமல் இத்தனை காலம் தனக்காக காத்திருந்த தன் பாட்டியுடன் இனிமேல் நேரம் கழிக்க போகிறான் அவ்வளவே…

அதை விட்டு ஜெகதாவிற்கும், மிதிலாவிற்கும் இடையில் அவன் வர நினைக்கவில்லை.. அவனை பொறுத்த வரைக்கும் தான் எப்படி பாட்டிக்கு பேரனோ அதை போல மிதிலாவும் ஒரு பேத்தி என்று எண்ணினான். ஆனால் இது எல்லாம் தெரியாத மிதிலாவோ மனதில் ஒவ்வொரு நொடியும் பயம் கொண்டாள்.. போதாத குறைக்கு பேரனும் பாட்டியும் இன்னும் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கவும் மனம் குமுறியது. அதை வெளிகாட்டாமல்

“ என்ன பாட்டி இன்னும் நீங்க மில்லுக்கு கிளம்பலையா ??? இன்னைக்கு லேபர் மீட்டிங் இருக்கே… “ என்று ஜெகதாவிடம் கேட்டாள், அங்கு ஒருவன் அமர்ந்து இருப்பதே அவள் கண்களில் விழ வில்லையா இல்லை, கண்களை அவன் பக்கம் திருப்பவே இல்லையா என்று தெரியவில்லை..

ஆனால் ரகுநந்தனோ அவளையே தான் பார்த்துகொண்டு இருந்தான்.. மிதிலாவிற்கு நீளமான கூந்தல் எல்லாம் இல்லை. முதுகு வரை வெட்டி விட்டு இருப்பாள்.. ஆனால் நல்ல அடர்த்தியான கருமையான கேசம்.. இருபக்கமும் எடுத்து பின்னால் சிறு கிளிப் போட்டு, மடிப்பு கலையாமல் காட்டன் புடவை காட்டி, ஒரு அலட்சிய பார்வையுடன் மேல் இருந்து கீழே இறங்கி வந்தவளை பார்த்து ஏனோ கண்களை திருப்ப முடியவில்லை அவனால்..

இதற்கான காரணம் என்னவென்று அவனக்கு தெரியவில்லை.. ஆனால் அடிமனமோ “ அம்மாகூட இப்படிதானே எதா விசேஷம்னா காட்டன் சேரி கட்டுவாங்க ” என்று நினைத்தது..

ஒரு நொடியில் தன்னை தானே உலுக்கிகொண்டான் “ என் அம்மா எங்க… இவ இந்த மிதிலா எங்க.. அம்மாக்கு சத்தமா பேச கூட வராது.. ஆனா இவளோ சரியான ராங்கி ராக்கோழி…. எப்ப பாரு வாய் திறந்து தான் இருக்கும் போல..” என்று எண்ணிகொண்டான்..

நீ என்னை பற்றி என்ன நினைத்தாலும் அதெல்லாம் என்னை ஒன்றும் செய்யாது என்பது போல அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு “ பாட்டி நேரம் ஆச்சு !!!” என்று ஜெகதாவை அங்கு இருந்து கிளப்பிவிட முயன்றாள் மிதிலா..

“ மிதி குட்டி.. இன்னைக்கு ஒருநாள் பாட்டி வீட்டுல இருக்கேன் டா.. நீ போயிட்டு வா.. அங்க நம்ம மேனேஜர் உனக்கு எல்லாம் உதவியும் செய்வார்.. நானும் போனில சொல்லிடுறேன்.. இன்னைக்கு தானே தம்பி வந்திருக்கான், நந்துவை மட்டும் விட்டு நான் அங்க வரது சரியில்ல “ என்று கூறி கொண்டு இருக்கும் பொழுதே

“ நந்துவாம் நந்து.. சரியான ஆந்தை பொந்து “ என்று எண்ணினாள் மிதிலா..

ரகுநந்தனோ ”இவ குட்டி யா…?? அரிசி போட்டு வைக்கிற புட்டி மாதிரி இருக்கா“ என்று தன் பங்கிற்கு எண்ணினான்..

இருவரின் முகமும் ஒன்று போல உணர்வுகளை வெளிபடுத்த இருவருமே கண்டு கொண்டனர் சரி நம்மை பற்றி எதோ இடக்கான நினைப்பு போல என்று..

ஆனால் மிதிலா “ இப்படி சொன்னா எப்படி பாட்டி நானே மில்லுக்கு வர ஆரம்பிச்சு ஒரு வாரம் தான் ஆகுது.. அதுக்குள்ள நான் எப்படி மீட்டிங் ஹான்டில் பண்ண முடியும்.. “ என்று முராரி பாட ஆரம்பித்தாள்..

“ அட என்ன பாப்பா நீ…. பாட்டி சொன்னா கேட்கமாட்டியா?? இன்னைக்கு எப்படி நான் வர முடியும்.. நானும் நந்துவும் பேச இன்னும் எவ்வளவோ இருக்கே.. நீ போய்ட்டு வா டா.. உன்னால எல்லாம் ஹான்டில் பண்ண முடியும். என் மிதிலா மேல எனக்கு நம்பிக்கை இருக்கு “

“ ஹ்ம்ம் போங்க பாட்டி,… எனக்கு தெரிஞ்சு இத்தனை வருஷம் ஒரு நாள் கூட நீங்க மில் போகாம இருந்ததே இல்லை.. இங்க வந்து ஒரு சுத்து சுத்தி பாக்கலைனா தூக்கமே வரலை மிதிலான்னு  எத்தனை தடவை சொல்லி இருக்கீங்க” என்று இன்னும் ஒரு அம்பை எய்து பார்த்தாள்..

ஆனால் ஜெகதாவோ இவளை வளர்த்தவர் ஆயிற்றே “ மிதிலா நான் சொன்னா கேட்கமாட்டியா ???” என்று அழுத்தமாய் வினவவும்

“ சரி போறேன் போங்க… “ என்று தலையை தொங்க போட்டு கொண்டு முனுமுனுத்தாள்..     

“ ஒரு நிமிஷம் இரு மிதிலா ஒரு பைல் தரேன் அதை மேனேஜெர்கிட்ட குடு” என்று சொல்லிவிட்டு  பைலை எடுக்க தன் அறைக்கு சென்றார்..

ரகுநந்தன் மிதிலாவின் முகத்தில் தோன்றிய மாற்றங்களை எல்லாம் கவனித்து கொண்டு தான் இருந்தான்.. அவன் மனதில் அவளை சீண்டி பார்க்க தோன்றியது.. பின்னே இருக்காதா வந்த உடனே அவனை என்ன பாடு படுத்தினால் நிம்மதியாய் காப்பி கூட குடிக்க விடவில்லை..

மெல்ல எழுந்து மிதிலாவிடம் வந்து “ என்ன பயமா ???” என்று வினவினான்..

இவன் இப்படி வந்து கேள்வி கேட்பான் என்று அவள் என்ன கண்டாளா ?? அதிர்ந்து விழித்து “ என்.. என்ன பயம் ???” என்று கேள்வி கேட்டாள்..

“அதான் பாட்டி கிட்ட நான் எல்லாம் சொல்லிடுவேன்னு.. பயம் தானே” என்றான் கேலியாய்..

மிதிலாவிற்கு ஏற்கனவே மனதில் எரிச்சல், இவன் வேறு முதல் நாளே இப்படி பேசவும், எல்லாம் சேர்ந்து “ ஹ்ம்ம் பயமா எனக்கா ??? நீங்க பாட்டி கிட்ட என்ன வேணா சொல்லுங்க.. அவங்களை எப்படி சமாளிக்கணும்னு எனக்கு தெரியும்” என்றால் மிடுக்காய்..

“ அதான் பாத்தேனே.. நீ சமாளிச்சதை… சரி போறேன் போங்க “ என்று அவள் கூறியதை போலவே சொல்லிகாட்டினான்..

மிதிலா அவனை எரித்துவிடுவது போல பார்த்தாள்.. எதோ கூற ஆரம்பிக்கும் பொழுது ஜெகதா வந்துவிட சட்டென்று தன் முகத்தை மாற்றி கொண்டு

“ சரி பாட்டி நான் போயிட்டு வரேன். நீங்க மறக்காம மாத்திரை எல்லாம் சாப்பிடுங்க.. கோகிலாக்கா நான் போயிட்டு வரேன் “ என்று கூறிக்கொண்டே சென்றுவிட்டாள்..

ஆலைக்கு சென்ற பின்னும் மிதிலாவின் மனம் சமன் படவில்லை.. சிறிது நேரம் தன் எண்ணங்களில் மூழ்கி இருந்தவள் பின் வேலையில் ஆழ்ந்துவிட்டாள்.. அதன் பின் வேறு சிந்தனைகள் எழ வில்லை அவளுக்கு.

மதியம் வரை நன்றாய் தான் சென்று கொண்டு இருந்தது.. மதியம் உண்டுவிட்டு மீட்டிங்கிற்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் பார்த்துவிட்டு அமர்ந்து இருந்தவளுக்கு வக்கீலிடம் இருந்து அழைப்பு வந்தது..

“ சொல்லுங்க அங்கிள் “

….

“ இல்ல பாட்டி வரல… எதுவும் முக்கியமான விசயமா ??”

“ ஓ !! சரி அங்கிள்.. நான் சொல்லிடுறேன்.. நீங்க சாயங்காலமா வீட்டுக்கு வாங்களேன்.”

….

“ சரி அங்கிள்… சரி… வைக்கிறேன் “ என்று கூறிவிட்டு வைத்தவளுக்கு மனம் மீண்டும் குழம்பியது..

“ இப்போ இந்த ரிஜிஸ்டெரெஸன் தேவையா ??? பாட்டி ஏன் தேவை இல்லாம இப்படி ஒரு பிரச்சனையை இழுத்தாங்க.. இப்போ பார்த்து அவங்க பேரன் வேற வந்து இருகான்… பாட்டிகிட்ட முடிவா சொல்லிடனும் எனக்கு எதுவும் வேணாம் பாட்டி நீங்க மட்டும் போதும்னு” என்று முடிவு எடுத்தவளுக்கு அதை செயல் படுத்துவது அத்தனை எளிதாய் இல்லை..

மாலை வீட்டிற்கு சென்றவள் நேராய் தன் பாட்டியின் அறையில் தான் நுழைந்தாள்.. அங்கே ரகுநந்தனும் இருந்தான்.. நிறைய அல்பங்கள் மெத்தை மேல் பரப்பப்பட்டு கிடந்தது..

சரி கடந்த கால நிகழ்வுகளை எல்லாம் அலசுகிறார்கள் போல என்று நினைத்து கொண்டாள்.. தெரியாமல் கூட ரகுநந்தன் பக்கம் பார்வையை திருப்ப கூடாது என்று எண்ணி கொண்டாள்.

“ என்ன மிதி குட்டி எப்படி போச்சு.. மீட்டிங் எல்லாம் நல்ல படியா முடிஞ்சதா ??” என்று வாஞ்சையாய் கேட்ட ஜெகதாவின் அருகில் அமர்ந்து, அவரது கைகளை எடுத்து தன் கைகளில் வைத்து

“எல்லாம் நல்லதா போச்சு பாட்டி.. நீங்க அங்க என் கூட இல்ல அதான் கொஞ்சம் ஒரு மாதிரி இருந்தது.. எங்க என் பேச்சை கேட்பாங்களோன்னு ஒரு நெருடல் இருந்தது.. ஆனா எல்லாம் நல்ல படியா முடிஞ்சது பாட்டி… “

“ சரி மிதிமா.. போ.. போயி பிரஷ் ஆகிட்டு வா… கோகிலா சூடா பஜ்ஜி போட்டு இருக்கா.. “

“ இருக்கட்டும் பாட்டி.. அப்புறம்”  என்று இழுத்தவள் ரகுநந்தனை பார்த்தாள்..

அதை கண்டவன் “ பாட்டி நான் வெளிய இருக்கேன்… நீங்க பேசிட்டு கூப்பிடுங்க” என்று கூறி எழுந்தான்..

மிதிலா அவசரமாக “ இல்ல பாட்டி பரவாயில்ல”  என்று கூறவும்

“ நந்து உட்கார்.. நீ என் பேரன்.. மிதிலா என் பேத்தி.. ரெண்டு பேருக்குமே என்கிட்டே சம உரிமை இருக்கு.. உனக்கு இந்த வீட்டில நடக்கிற எல்லா விசயங்களும் இனி தெரிஞ்சு இருக்கனும் “ என்று ஜெகதா கூறவும் தான் அமர்ந்தான்..

“ பெரிய துரை எல்லாத்துக்கும் இவனை தாங்கனும் போல “ என்று மனதில் கருவியவள்,

“ பாட்டி லாயர் அங்கிள் போன் பண்ணாரு..” என்று இழுத்தாள்….

“ ஓ !! நான் மில்லுக்கு வந்திருப்பேன்னு நினைச்சு அங்க பண்ணிட்டாரா ?? சரி மிதிலா என்ன சொன்னார்.. “

“ அதான் பாட்டி வர வெள்ளிகிழமை ரெஜிஸ்டர் ஆபிஸ் போறது பத்தி சொன்னாரு. நான் நீங்க சாயங்காலமா வீட்டுக்கு வந்து பாட்டிகிட்ட பேசுங்க அங்கிள்னு சொல்லிட்டேன்.. இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திடுவார்”

“நல்லது மிதிமா.. நானே அவரை வர சொல்லணும் தான் இருந்தேன்.. இப்போ நந்துவும் இங்க இருக்கிறதுனால வேலை கொஞ்சம் ஈசியா முடியும்..”

அத்தனை நேரம் அமைதியாய் இருந்த ரகுநந்தன், அவன் பெயர் அடிபடவும்

“ என்ன பாட்டி என்ன வேலை ??” என்று வினவினான்..

“ அது ஒண்ணுமில்ல நந்து, நம்ம பரம்பரை சொத்து எல்லாம் உன் பேருக்கு மாத்திட நினைச்சேன், அதே மாதிரி எனக்கு எங்க அப்பா வீட்டுல சீதனமா கொடுத்த சொத்து, அதில நான் மேற்கொண்டு சம்பாரிச்சது இதை எல்லாம் மிதிலா பேருக்கு எழுத முடிவு பண்ணி இருந்தேன். அதுக்கு தான் வெள்ளிகிழமை பத்திர பதிவு இருக்கு.”

“ ஓ !! ஆனா பாட்டி இதுக்கு எல்லாம் இப்போவே என்ன அவசரம்.. நான்.. நான் இங்க வந்து முழுசா ஒருநாள் கூட அகவே இல்லையே..”

“ இல்ல நந்து கண்ணா, இது நீ வரதுக்கு முன்னமே எடுத்த முடிவு.. இதில  மிதிலாக்கும் உடன்பாடு இல்லைதான் ஆனா, நான் தான் எனக்கு எதுவும் நடக்கிறத்துக்கு.. “ என்று கூறிக்கொண்டு இருக்கும் போதே

ரகுநந்தன், மிதிலா இருவரும் ஒரு சேர “ பாட்டி….” என்று அதிர்ந்து அழைத்தனர். பின் இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் தொட்டு மீண்டது..

மிதிலா வேகமாய் ஜெகதாவின் கைகளை பிடித்துகொண்டு“ இங்க பாருங்க பாட்டி தயவு செய்து இனிமே இப்படி பேசாதிங்க.. எனக்கு விவரம் தெரிஞ்சு நான் அம்மா அப்பா முகம் பார்த்தது இல்லை.. நீங்கதான் எனக்கு எல்லாமே இனிமேலும் அப்படிதான்.. எனக்குன்னு இருக்கிறது நீங்க ஒருத்தர் தான் பாட்டி.. ப்ளீஸ் நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்பேன் பாட்டி.. ஆனா இந்த வார்த்தையை மட்டும் நீங்க சொல்ல  கூடாது “ என்று கண்ணீர் வடித்தாள்..

அவள் பேசட்டும் என்று பொறுமை காத்தானோ என்னவோ, மிதிலா பேசி முடிக்கவும் ரகுநந்தனும் ஜெகதாவின் இன்னொரு கையை பற்றி

“ பாட்டி, நான் இப்போ தான் ஒரு இழப்பை சந்திச்சிட்டு இங்க வந்து இருக்கேன். இனிமே என் வாழ்க்கைல எனக்குனு இருக்கிற ஒரே உறவு நீங்க மட்டும் தான். சோ, ப்ளீஸ் இது மாதிரி இனிமேல் நினைச்சு கூட பார்க்காதிங்க.. அம்மா இறந்து, உங்களை தேடி வந்து இருக்கேன். நீங்க ரொம்ப நாளைக்கு என் கூட இருக்கனும் பாட்டி.. உங்களுக்கு என்ன சரின்னு படுதோ அதையே பண்ணுங்க.. நான் எதுவும் சொல்லமாட்டேன்..” என்று கூறினான்..

தன் பேரனும் பேத்தியும், தன் மீது கொண்டு இருக்கும் அன்பை எண்ணி மகிழ்ந்தார் ஜெகதா..

ஆனால் மிதிலாவின் மனமோ வேறு எண்ண தொடங்கியது..

“ இவன்.. என்ன சொல்றான்.. இவனோட அம்மா இறந்துட்டாங்களா.. ஐயோ !! அப்போ இவனும் என்னைய மாதிரி தானா ??”

“ ச்ச்சே இது தெரியாம நான் என்னென்னவோ நினைச்சேனே.. அதுனால தான்  இங்க வந்து இருக்கான் போல.. ஹ்ம்ம் சரி இவனும் பாட்டி கூட இருந்துட்டு போகட்டும்“ என்று மிக பெருந்தன்மையாக முடிவு எடுத்தாள்.  

                                                                    

                                                                                                                  நேசம் –  வளரும்                                

        

                           

                                  

    

                                   

                             

Advertisement