Advertisement

நேசம் – 3 

“பாட்டி இன்னைக்கு முதல் நாள் உங்க கூட நான் மில்லுக்கு வரேன். சோ, முதல்ல கோவிலுக்கு போயிட்டு அப்புறம் போகலாமா ??” என்று தன் முகம் நோக்கி ஆவலாய் கேட்கும் மிதிலாவிற்கு சம்மதமாய் தலை ஆட்டினார் ஜெகதா.

“ பாட்டினா பாட்டி தான்.. “ என்று கூறியவள் “ கோகிலாக்கா நீங்களும் வாங்க போகலாம்” என்று அழைக்கவும் கோகிலா ஜெகதாம்பாளின் முகம் நோக்கினார்..

“ என்ன கோகிலா கோவிலுக்கு தானே கூப்பிடுறா, அதுக்கு ஏன் என் முகம் பார்க்கிற.. கிளம்பு போகலாம்.. அதுவும் இல்லாம இன்னைக்கு இருந்து மிதிலா தொழில் பழக போறா, போய் அர்ச்சனை பண்ணிட்டு வரலாம்.” என்று கூறவும் கோகிலாவும் தயாராகி வருவதாய் கூறி சென்றார்..

“ சரி மிதிலா நீ தேவையானதை எல்லாம் எடுத்து வை. நான் போய் ரெடி ஆகி வரேன் “ என்று கூறி ஜெகதாவும் செல்ல, மிதிலா கோவிலுக்கு கொண்டு செல்லவென்று அனைத்தையும் எடுத்துவைத்து காத்திருந்தாள்.

அவளுக்கு ஏனோ காலை விழித்ததில் இருந்தே மனம் ஒரே குழப்பமாய் இருந்தது. இன்னது என்று கண்டுபிடிக்க முடியாத ஒரு சஞ்சலம். அதனால் தான் அவள் கோவிலுக்கு கிளம்பியதே..

இதை ஜெகதாவிடம் கூறினால் அவர் மனம் வருத்தமடையும் என்று கூறாமல் இருந்துவிட்டாள்.. ஆனாலும் அதே யோசனையாய் இருந்தவளை தயாராகி வந்த ஜெகதா பார்த்து “ என்ன மிதிலா குழப்பமா இருக்கிற மாதிரி இருக்கு ??” என்று கேட்கவும் முதலில் என்ன கூறுவது என்று தெரியவில்லை.. பின் சமாளித்து

“ ஹா !! அதெல்லாம் ஒன்னும் இல்ல பாட்டி பெருசா சொல்லிட்டேன் உங்க கூட ஆபிஸ், மில்லுக்கு எல்லாம் வரேன்னு ஆனா எல்லாம் சரியாய் பழகனுமே, அதான் கொஞ்சம் டென்சன் “ என்று கூறியவளை ஒரு நொடி கூர்ந்து பார்த்து

“ அதென்ன நீ முன்ன பின்ன பார்க்காத இடமா ?? இல்ல பழகாத மனுசங்களா ?? போக போக எல்லாம் சரியா போயிடும் மிதிலா.. நீ எதுக்கும் பயப்பட தேவை இல்லை.. “ என்று கூறி முன்னே நடந்தார்.

கோகிலாவும் வரவும்  மிதிலாவும் கோகிலாவும் சென்று காரில் ஏறினர்.

அங்கே சந்நிதானத்தில், இறைவன் முன் கை கூப்பி கண் மூடி நின்று இருந்த மிதிலா மனதில் “ கடவுளே என் பாட்டி ரொம்ப வருசத்துக்கு நல்லா இருக்கனும். அவங்க மனசு கஷ்டபடுற மாதிரி எதுவும் நடந்திட கூடாது. அவங்க மனசில என்ன வேதனை இருக்கோ அது எல்லாம் சரி ஆகிடனும். பாட்டி மனசிற்கு நிம்மதியும், அமைதியையும் குடுங்க.. அவங்களை விட்டு பிரிஞ்சு போன சொந்தங்கள் எல்லாம் அவங்களை தேடி வரணும்..” என்று இறைவனிடம் மனு போட்டு கொண்டு இருக்க

ஜெகதாம்பாளோ “ கடவுளே என் பேத்திக்கு ஒரு நல்ல வாழ்கையை அமைச்சு குடுங்க. அவ கடைசி வரைக்கும் இதே சந்தோசத்தோட இருக்கனும்.. அவ மனசிற்கு பிடிச்ச மாதிரி ஒரு வாழ்க்கை அமையனும். இந்த பொண்ணுக்காகவாது நான் இன்னும் கொஞ்ச நாளைக்கு நல்லா இருக்கனும். அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சிட்டா அப்புறம் எனக்கு எது நடந்தாலும் கவலை இல்ல சாமி..” என்று மனமுறுக வேண்டினார்..

இதை எல்லாம் வேடிக்கை பார்த்த இறைவனோ உங்கள் இருவரின் வேண்டுதலில் யாராவது ஒருவரின் வேண்டுதலை மட்டுமே ஏற்றுகொள்வேன் என்று தனக்கு தானே கூறி வழக்கம் போல ஒரு புன்னகையை புரிந்தார்.

இப்படி அனைவரும் தங்கள் வேண்டுதலை இறைவன் காலடியில் போட்டுவிட்டு பிரகாரம் சுற்றி வந்து சிறிது நேரம் அமர்ந்த பின் வீட்டிற்கு கிளம்பினர். காலை உணவு உண்டுவிட்டு பாட்டியும் பேத்தியும் அலுவலகம் கிளம்பி சென்றனர்..

மில்லில் வேலை சரியாக இருந்தது.. மிதிலாவால் தன் பாட்டியை நினைத்து பெருமை படாமல் இருக்க முடியவில்லை. இத்தனை வயதிலும் கஎத்தனை திடம்  என்று எண்ணினாள்.. தன் மனதை ஒருமுக படுத்தி அவர் கூறுவதை எல்லாம் நன்றாய் மனதில் பதிய வைத்துகொண்டாள்.

காலையில் இருந்த மன சஞ்சலம் எல்லாம் இப்பொழுது இருந்த இடம் தெரியவில்லை.. இப்படியாக அன்றைய நாள் நன்றாய் கழிய மகிழ்ச்சியோடு இருவரும் மாலை வீடு வந்து சேர்ந்தனர்..

கோகிலாவின் காதில் இருந்து ரத்தம் வழியும் அளவிற்கும் மிதிலா பேசிக்கொண்டு இருந்தாள். அதை எல்லாம் ஒரு புன்னகையோடு கேட்டு கொண்டு இருந்தார் ஜெகதாம்பாள்..

“ ஸ்ஸ்ஸ்!!! மிதிலா கண்ணு உனக்கு ஏன் என் மேல இவ்வளோ பாசம்??? போதும் டா நாளைக்கும் கொஞ்சம் மிச்சம் வை.. “ என்று அழாத குறையாக கூறவும் மிதிலாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை..

மனதிற்குள் “ ஹப்பா !! நான் தான் குழம்பிட்டேன் போல.. இன்னைக்கு எதுவும் தப்பா எல்லாம் நடக்கல.. கடவுளே இதே மாதிரி தினமும் நிம்மதியா போகணும்” என்று வேண்டி முடிக்கவில்லை தொலைபேசி சிணுங்கியது..

“ நான் போய் எடுக்கிறேன்”  என்று துள்ளலோடு போய் எடுத்தவள் “ ஹலோ “ என்பதை தவிர வேறு எதுவும் பேசவில்லை..

அந்த பக்கம் என்ன கூறப்பட்டதோ, மிதிலாவின் முகம்  மாறிவிட்டது.. ஒரு பக்கம் ஆச்சரியம், இன்னொரு பக்கம் அதிர்ச்சி, இன்னொரு பக்கம் இதெல்லாம் உண்மை தானா ?? என்ற கேள்வி இப்படி எல்லாம் உணர்வுகளும் கலந்துகட்டி கொண்டு அவள் முகத்தில் நர்த்தனம் ஆடின..

அமைதியாக திரும்பி வந்தவளை ஜெகதாவும், கோகிலாவும் கேள்வியாய் நோக்கினர்..

நொடி பொழுதில் மிதிலா முடிவெடுத்தாள் “ இப்போ இதை நம்ம யார்கிட்டயும் சொல்ல கூடாது.. நிஜமாவே இது உண்மையா இருந்தா அப்புறம் சொல்லலாம்.. இப்ப சொல்லி பாட்டி மனசை தேவை இல்லாம டென்சன் பண்ண கூடாது “ என்று எண்ணியவள் முகத்தில் புன்னகையை வரவழைத்து கொண்டு

“ அது எவனோ ஒரு கடன்காரன் பாட்டி… புரியாத பாசையில இந்நேரம் பேசி கழுத்தறுக்கிறான்.. ச்சே.. “ என்று சலிப்புடன் கூறினாள்..

“ ஓ!! சரி மிதிலா நான் போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கிறேன்..” என்று ஜெகதா செல்லவும் மீண்டும் கோகிலாவோடு தன் பேச்சை ஆரம்பித்தால் மிதிலா.

ஆனால் முன்பிருந்த துள்ளல் இல்லை. மனதில் எதோ ஒரு யோசனை ஓடிகொண்டே இருந்தது..

“ என்ன மிதிலா எதோ யோசனையா இருக்க ??” என்று கோகிலா கேட்கவும்

“ ஹா அதெல்லாம் ஒண்ணுமில்ல கா.. நான் என்ன யோசிக்க போறேன்.. இன்னைக்கு மில்லுல..” என்று ஆரம்பிக்கவும் கோகிலா கை எடுத்து கும்பிட்டார்

“ போதும் மிதிலா… என்னைய விடு நான் போய் ராத்திரிக்கு சமைக்கணும்.. நீ தினமும் தான் பாட்டி கூட போகபோற.. தினம் தினம் சொல்ல எதா இருக்கும். இன்னைக்கு ஒரு நாள்ல எல்லாம் தீர்த்துடாத” என்று கூறி அவளிடம் இருந்து தப்பித்து சமையலை அறையில் தஞ்சம் புகுந்தார்..

“ அந்த பயம் இருக்கட்டும் “ என்று சொல்லிக்கொண்டே மிதிலா தன் அரை நோக்கி சென்றாள்.

மனம் ஏனோ அமைதி பெற மறுத்தது. “ என்ன இது நிஜமா தான் சொல்றாங்களா?? ஆனா யாரு பேசுனதுன்னே தெரியல.. நம்ம பதில் சொல்றதுக்குள்ள வச்சுட்டாங்க.. சரியான திமிர் போல.. இப்படியா பேசுறது.. நல்ல வேலை பாட்டி பேசலை.. இல்ல நிச்சயம் டென்சன் தான் ஆகியிருப்பாங்க…” என்று தன் போக்கில் அர்ச்சனை செய்து கொண்டு இருந்தவள்

“ ஒருவேலை இது பொய்யா இருந்தா என்ன பண்றது?? இத்தனை வருஷம் இல்லாம இப்ப மட்டும் என்ன திடீர்னு..?? இதை பாட்டி கிட்ட சொல்லாம விட்டது தப்போ?? ஒருவேல நிஜமவே இது உண்மையான விசயமா இருந்தா பாட்டி நம்மை தப்பா நினைக்க மாட்டங்களா ?? இல்ல இல்ல பாட்டி ஏன் என்னைய தப்பா நினைக்க போறாங்க..“ என்று யோசித்துக்கொண்டு இருந்தவளுக்கு தூக்கம் கண்ணை கட்டவும் உறங்கிவிட்டாள்.

இரவு உணவிற்கு கோகிலா வந்து எழுப்பவுமே மிதிலா கண் விழித்தாள். “ ச்சே என்ன இப்படி நேரங்கெட்ட நேரத்துல நம்ம தூங்கிட்டு…” என்று தன்னை தானே திட்டிக்கொண்டு கீழே சென்றாள்..

அவளது முகத்தை பார்த்தா ஜெகதா “ என்ன மிதிலா ஒரே நாள்ல இவ்வளோ சோர்வு ஆயிட்ட.. உனக்கு முடியலன்னா இனிமே வீட்டுல இரு பாப்பா..” என்றார் கரிசனமாய்..

“ அட அதல்லாம் இல்ல பாட்டி.. நான் படுத்து அப்படியே யோசனை பண்ணிகிட்டே இருந்தேனா… எப்ப எப்படி தூங்குனேன்னு எனக்கே தெரியல..” என்றால் சிறுபிள்ளை போல..

“ ஹா !! ஹா அப்படி என்ன மிதிலா யோசனை.. சொல்லு.. இவ்வளோ யோசனை பண்ணி எந்த கோட்டையை பிடிச்ச ??” என்று கிண்டலாய் கேட்கவும்

“ம்ம் போங்க பாட்டி “ என்று அவர் தோள்களில் சாய்ந்து கொண்டாள்..

மனதிற்குள் “ பாட்டியோட இந்த சிரிப்பு, சந்தோசம் எல்லாம் எப்பயும் இப்படியே இருக்கனும் “ என்று நினைத்துக்கொண்டாள்..

இரவு வந்து படுத்தவளுக்கு கண்கள் மூட மறுத்தது.. மீண்டும் மீண்டும் அந்த தொலைபேசி அழைப்பையே அவள் மனம் நினைத்தது..

“ நோ !!!! மிதிலா நீ ஏன் இப்படி உன்னையே குழப்பிக்கிற?? பேசாம படுத்து தூங்கு “ என்று எண்ணியவள் படுத்து உறங்கியும் விட்டாள்..

அடுத்து வந்த இரண்டு நாட்களும் எந்த வித சலனமும் இல்லாமல் சென்றது.. வீட்டில் ஒவ்வொரு முறை தொலைபேசி அடிக்கும் போதும் அவளது இதயமும் பலமுறை அடித்துக்கொண்டது. அன்று வந்த தொலைபேசி அழைப்பு அதன் பிறகு வரவில்லை என்று சிறிது உணர தொடங்கவுமே அவள் மனம் சமன் பட்டது..

“ ச்சே எத்தனை பேர் இப்படி கிளம்பி இருக்காங்களோ என்னைய டென்சன் படுத்த “என்று நினைத்து கொண்டே தன் வேலையில் கவனம் செலுத்தினாள். அதன் பிறகு அவ்விசயத்தை மறந்தே போனாள்..

இரண்டு நாள் கழித்து ஜெகதாம்பாள் “ மிதிலா வெள்ளி கிழமை பத்திர பதிவு இருக்கு, அதனால நாளைக்கு கோவில்ல சிறப்பு பூஜைக்கு சொல்லி இருக்கேன்.. காலையில போயிட்டு  வந்திடலாம் “ என்று கூறவும்

“நாளைக்குமா??….” என்று மனதில் எண்ணியவள் வெளியே “சரி பாட்டி எத்தனை மணிக்கு ??” என்று வினவினாள்..

“ காலையில அஞ்சு மணிக்கு மிதிலா “ என்று கூறவும் கோகிலாவிற்கு சிரிப்பு தாங்கவில்லை.. இதை கேட்ட மிதிலாவிற்கு முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே..

“ என்ன நட்ட நடு ராத்திரி அஞ்சு மணிக்கா!!!! “ என்று வாய் பிளந்தாள்.. அவளை பொருத்தவரைக்கும் காலை மணி ஐந்து என்பது நட்ட நடு இரவு தான்..

“ என்ன காலையில அஞ்சு மணி உனக்கு நட்ட நடு ராத்திரியா மிதிலா…” என்று கேட்டவருக்கு அவள் முகத்தை பார்த்து சிரிப்பு வந்தது..

“ ஹ்ம்ம் ஆமா பாட்டி எனக்கு அது ராத்திரி தான்.. ஆமா அந்த நேரத்தில சாமி தூங்காதா?? அந்நேரம் ஏன் சாமிய தொல்லை பண்ணனும்.. ??” என்று தன் வழக்கமான வால் தனத்தை காட்டினால்..

“ ஆத்தி!! இவ ஆரம்பிச்சுட்டா போலவே… சரி மிதிலா எப்படியும் பேசி ஒரு எட்டு மணி போல தான் கிளம்ப வைப்பா.. ஹப்பாடி  !!!“ என்று எண்ணிய கோகிலா

“ சரிங்கம்மா  எத்தனை மணிக்கு கிளம்பனும்னு பேசிட்டு சொல்லுங்க “ என்று நகர்ந்து விட்டார்..

அவர் போவதையே ஒரு புன்னகையோடு பார்த்த மிதிலா “ பாட்டி ப்ளீஸ் என் செல்ல பாட்டில.. நீங்களும் கோகிலாக்காவும் போய்ட்டு வாங்க பாட்டி நான் வரலை..” என்று கூறி கோகிலாவை எப்படி என்பது போல பார்த்தாள்..

“ ரொம்ப நல்ல மனசு உனக்கு “ என்பது போல பார்த்து வைத்தார் கோகிலா.. இருவரின் பார்வை பரிமாற்றலை கண்ட ஜெகதா முதலில் என்ன நினைத்தாரோ

“ சாமி காரியம் பூஜைக்கு வரோம்னு சொல்லிட்டு போகாம இருக்க கூடாது.. அதுனால நானும் கோகிலாவும் போய்ட்டு வரோம் நாங்க வரதுக்குள்ள நீ சமையல் எல்லாம் முடிச்சிடு மிதிலா “ என்று கூறவும் இம்முறை கோகிலா மிதிலாவை “எப்படி மாட்டினியா ???” என்பது போல பார்த்தார்..

வேறு வழியில்லாமல் மிதிலாவும் சரி என்பது போல மண்டையை உருட்டினாள்.. மிதிலாவிற்கு என்ன வேலை என்றாலும் செய்வாள் ஆனால் அவள் தூக்கம் மட்டும் அவளுக்கு மிகவும் முக்கியம்.. அதை மட்டும் எப்பொழுதும் விட்டுகொடுக்க மாட்டாள்..

அன்றும் அப்படிதான் ஜெகதாவும், கோகிலாவும் கோவிலுக்கு சென்ற பிறகும் நன்றாய் உறங்கி கொண்டு இருந்தவளை வீட்டின் அழைப்பு மணி எழுப்பியது..

“ ஓ !!! கடவுளே அதுக்குள்ள கோவிலுக்கு போயிட்டு வந்துட்டாங்களா!!! “ என்று நினைத்து கடிகாரத்தை பார்த்தாள்..  “ என்ன இவங்க அரை மணி நேரம் கூட ஆகலை, அதுக்குள்ள திரும்பி வந்துட்டாங்க “ என்று யோசிக்கும் போதே மீண்டும் மணி ஓசை..

“ ஹா !!! வரேன் வரேன் “ என்று கூறிக்கொண்டே எழுந்தவளை அவளை அலைபேசி அழைத்தது, பார்த்தால் பாட்டியின் எண்…

“ ஹலோ என்ன பாட்டி இருங்க வரேன் , “ என்று கூறியவள்

“ ஹா !! என்ன சரி சரி பாட்டி நான் பார்த்துக்கிறேன்.. சரி மறக்காம பாலை காச்சுறேன்” என்று கூறி வைத்தாள்..

“ வந்து இருக்கிறது பாட்டியும் இல்லை.. ஒருவேலை வீட்டில யாரும் இல்லைன்னு நினைச்சு திருடன் யாரவது வந்து இருப்பானோ !!!” என்று யோசிக்கும் போதும் மீண்டும் அழைப்பு மணி அழுத்தப்பட்டது..

அந்த நேர நிசப்தத்தில் வீட்டின் அழைப்பு மணியே அவளுக்கு அமானுஷ்யமாய் கேட்டது.. மனதில் இன்னதென்று கூற முடியாத பயம் ஒட்டிக்கொள்ள, தூக்கம் இருந்த இடம் தெரியாமல் போனது.

“ பேசாம நாமளும் கோவிலுக்கே போயிருக்கலாமோ !!!” என்று நினைத்தாள்..

தொடர்ந்து அழைப்பு மணி அழுத்தப்பட” ச்சே… வரேன் !!!” என்று தைரியத்தை வரவழைத்து கொண்டு வாசல் கதவை நோக்கி சென்றாள்..

மெல்ல மெல்ல நடந்து போனவள் வீட்டை ஒருமுறை திரும்பி பார்த்தாள். யாரும் இல்லாதா அந்த இடமே ஒருவித பயத்தை கொடுத்தது மிதிலாவிற்கு.. மிடறு விழுங்கி கொண்டு மெல்ல சென்று கதவின் மேல் கை வைத்தாள்..

மீண்டும் அழைப்பு மணி..

“ யா.. யாரு  !!!” என்று பயந்து போன குரலில் மெல்ல கேட்ட படி முழு கதவையும் திறக்காமல் சிறிதளவு மட்டுமே திறந்து பார்த்தாள்.. பார்த்தவளுக்கு ஆள் யாரும் தெரியவில்லை…

“ அய்யோ!!! ஒருவேளை பேயா இருக்குமோ ??? வயசு பொண்ணு தனியா இருக்கேன்னு காலிங் பெல் எல்லாம் அடிக்குதே…. “ என்று எண்ணியவள் வேகமாக கதவை மூடினாள்..

கதவின் மீது சாய்ந்து நின்று ஆழ மூச்சு விட்டவள் மனதிற்க்குள் உலகில் உள்ள அனைத்து கடவுளையும் துணைக்கு அழைத்தாள்.. மீண்டும் அழைப்பு மணி சத்தம் கேட்டது..

அவ்வளவு தான் மிதிலாவிற்கு நாவு வரண்டு விட்டது.. “ கடவுளே “ என்று கண்களை இறுக மூடி கொண்டாள்.. விடாமல் அழைப்பு மணி அழுத்தவும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மெல்ல கதவை திறந்து எட்டி பார்த்தாள்..

கலைந்த தலையோடு, லேசாய் கண்கள் சிவந்து அவள் முகத்தையே உற்று பார்த்து நின்றிருந்தவனை இதற்கு முன் அவள் கண்டது இல்லை. “ ஹப்பா !! பேய் இல்லை… என் தூக்கம் போச்சு ” என்று மனதில் நினைத்தவள் முகத்தில் கடுமையை பூசி கொண்டு

“ யார் வேணும் ??” என்றால் மிடுக்காய்..

அவனுக்கு அவளது முக பாவம், கதவு திறந்து மெல்ல எட்டி பார்த்தது எல்லாம் சிரிப்பை கொடுத்தது.. ஆனால் அந்த சிரிப்பு வந்த வேகத்தில் மறைந்தும் போனது.  

“ இவன் என்ன சிரிக்கிறான்.. நம்மை பார்த்தா லூசு மாதிரி இருக்கா என்ன ??” என்று எண்ணியவள் இன்னும் கடினாமாக

“ ஹலோ!! Mr.. யார் நீங்க ?? உங்களுக்கு யார் வேண்டும் ??” என்று கேட்டாள். கேட்டாள் என்பதை விட அதட்டினாள் என்றே கூறவேண்டும்..

“ ஐம் ரகுநந்தன் ப்ரம் டெக்சாஸ் “ என்று அவன்  கூறவுமே…

“  அட கடவுளே!!!!!!!! அப்போ அதல்லாம் நிஜம் தானா??? ஆகா பாட்டிகிட்ட சொல்லாம விட்டு திட்டு வாங்க போறேன்..” என்று தலையில் கை வைத்து நின்றவளை வித்தியாசமாய் நோக்கினான் ரகுநந்தன்..

அவளால் இன்னும் கூட நம்ப முடியவில்லை..” ர.. ரா.. ரகு.. நா… நன்.. நந்தன்…” என்று அவனை நோக்கி தன் விரல் நீட்டினான்..

“ எஸ்.. ஐம் ரகுநந்தன்” என்று கூறியவன் “ பாவம் திக்குவாய் போல “ என்று அதையும் சேர்த்தே கூறினான். அவனுக்கு அவனை இன்னும் வாசலில் நிற்க வைத்து இருக்கும் கோபம்..

அதை கேட்டு கோவம் வந்தாலும் கதவை நன்றாய் திறந்து அவனுக்கு வழி விட்டாள்.. அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே சென்றவன் தான் கொண்டு வந்த பெட்டிகளை வைத்துவிட்டு வீட்டை சுற்றி ஒரு பார்வை பார்த்தான்..

“பாட்டியை பாக்க வந்தானா ?? இல்லை வீட்டை சுத்தி பார்க்க வந்தானா ?? “ என்று நினைத்தவள். பேசாமல் நின்றாள்..

பின் என்ன நினைத்தாளோ வேகமாய் சென்று பாலை காய்ச்சி சூடாய் காப்பி போட்டு கொண்டு வந்தாள்.. அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது.. ஆனாலும் நேற்று மாலை உண்டது.. வயிறு லேசாய் சத்தம் போட ஆரம்பித்து இருந்தது அவனுக்கு.. அந்த நேரத்தில் காபியை பார்க்கவும், அதன் மணமும் அவனை சேர்ந்து இழுத்தது. 

“  தேங்க்ஸ் “ என்று வாங்கி அதை குடிக்க முதல் வாய் வைத்தான்..

மிதிலாவிற்கு அப்பொழுதுதான் நியாபகம் வந்தது மூன்று மாதங்கள் முன்பு வீட்டில் தனியாய் இருந்த பெண்ணிடம் ஒருவன் தூரத்து உறவு என்று கூறி உள்ளே வந்து அவளுக்கு மயக்க மருந்து கொடுத்து வீட்டில் இருந்த எல்லா பொருளையும் திருடி சென்ற செய்தி.. அவ்வளோதான் அவன் முதல் வாய் காப்பியை பருக வாய் வைத்தான் இவள் அதே கையை பிடித்து இழுத்துக்கொண்டே

“ வா வா !! முதல்ல வெளியா வா.. என்ன ஆள் இல்லாதா வீடுன்னு தெரிஞ்சு உன் திருட்டு தனத்தை காட்ட வந்து இருக்கியா?? அதெல்லாம் இங்க என்கிட்டே இந்த மிதிலா கிட்ட நடக்காது..” என்று தர தரவென  இழுத்து வந்து வெளியே நிறுத்தினாள்..

“ ஹப்பா !! எருமை கனம் இருப்பான் போல!!!” என்று எண்ணியவளை முறைத்து பார்த்தான் ரகுநந்தன்..

“ என்ன முறைப்பு ?? உன்னைய எல்லாம் உள்ள கூப்பிட்டு உட்கார வச்சு காப்பி குடுத்ததே பெரிய விஷயம்… திருட வந்ததுக்கு இந்த காப்பி தான் கிடைச்சதுன்னு குடிச்சிட்டு கிளம்பு.. இல்ல நடக்கிறதே வேற “ என்று மிரட்டும் தொனியில் மிதிலா பேசவும் அவனுக்கு கோவமும் சிரிப்பும் கலந்தே வந்தது.

மிதிலாவிற்கோ கோவம் தலைக்கு ஏறியது.. ரகுநந்தனோ சிரித்தபடி தன் பர்சில் இருந்த புகைப்படத்தை காட்டினான். சிறுவயதில் அவன் தன் தாய் தந்தையோடு இதே வீட்டில் உஞ்சலில் அமர்ந்து எடுத்துக்கொண்ட படம்.. இப்பொழுது அந்த ஊஞ்சலை மிதிலா மட்டுமே உரிமை கொண்டாடுவது இன்னொரு கதை..

இதே புகைப்படத்தை அவள் ஜெகதாவின் அறையில் தினமும் பார்க்கிறாள் தானே.. அதை கண்டதும் தன் மடத்தனம் புரிந்து இளித்துக்கொண்டே மீண்டும் வழி விட்டாள் அவனுக்கு..

“ஹ்ம்ம் அது !!” என்று ஒரு பார்வை பார்த்தபடி உள்ளே வந்து அமர்ந்து முழு மூச்சாய் காப்பியை உறுஞ்சி குடித்தான்.. எங்கே சற்று தாமதித்தாலும் அவள் பிடுங்கிவிடுவாளோ என்ற எண்ணத்தில்..

அப்பொழுது தான் மிதிலா அவனை நன்றாய் உற்று பார்த்தாள்.. “வெளிநாட்டுல இருந்து வெள்ளைக்காரன் மாதிரி வராம நம்ம ஆளுங்க மாதிரி தான் வந்து இருக்கான். பரவாயில்ல நல்லா தான் இருக்கான்.. கொஞ்சம் பாட்டி ஜாடை தெரியுதோ??? “  என்று அவனையே உற்று நோக்கியவளை கண்ட ரகு தன் தொண்டையை செருமினான்.

அதில் கலைந்தவள் ” பாட்டி.. கோவிலுக்கு போயிருக்காங்க…” என்று மென்று விழுங்கினாள்  

அவனுக்கு கோவம் வந்துவிட்டது. இத்தனை வருடம் கழித்து தன் பேரன் வரபோகிறான் என்று தெரிந்தும் அவனை வரவேற்க இராமல் கோவிலுக்கு சென்றால் என்ன அர்த்தம் என்று எண்ணினான்.. அந்த கோபத்தை அவளிடமே காண்பித்தான்.

“நான் வரேன்னு தெரிஞ்சுமா ??”

“ஆமா இவன் பெரிய மகாராஜா !!” என்று எண்ணியவள் “ தெரியாது !!!” என்று பதில் கூறினாள்..

இவள் எதற்கு தெரியாது என்று பதில் கூறுகிறாள் என்று அவனுக்கு புரியவில்லை..

“ என்ன தெரியாது ??” என்று வினவினான்.. அவன் உட்கார்ந்து கொண்டு கேள்வி கேட்பதும், இவள் நின்று கொண்டு பதில் சொல்வதும் மிதிலாவிற்கு கடுப்பை கிளப்பியது..

“ம்ம்ச் பாட்டிக்கு தெரியாது…”

“ ஏன்??”

“ நான் சொல்லல “

“ஏன் ??”

அவ்வளோ தான் இழுத்து பிடித்து இருந்த கொஞ்சம் பொறுமையும் காற்றில் கரையும் கற்பூரமானது..

“ என்ன ஏன் ஏன் ??? இப்படி திடீர்னு வந்து கேள்வி கேட்க மட்டும் எப்படி  முடியுது.. இத்தனை நாள் எங்க போச்சு பாட்டி பாசம் எல்லாம்.. இத்தனை வருஷம் கழிச்சு ஒரே ஒரு போன் கால்… யார் பேசுறாங்க என்ன கேட்கிறாங்கனு கூட தெரியாம பேசிட்டு வச்சுட்டிங்க.. இதை எல்லாம் உண்மையா பொய்யான்னு எப்படி நம்புறது ? அதான் பாட்டிகிட்ட சொல்லல” என்று கடுகடுத்தாள்..

ரகுநந்தனிற்கு இதெல்லாம் புதிது. அவனிடம் யாரும் இப்படி முகம் திருப்பியோ இல்லை இத்தனை கடுப்பாகவோ பேசியது இல்லை. ஏற்கனவே அவன் மனதில் இருக்கும் கவலை ஒருபுறம். திடிரென இந்தியா கிளம்பி வந்த குழப்பம் மறுபுறம் எல்லாம் சேர்ந்து அவனை இன்னும் கோவம் கொள்ள வைத்தது..

மறுபடியும் ஆரம்பித்தான் “ ஏன் சொல்லல??”

“ ம்ம்ச் உங்களுக்கு ஒருதடவ சொன்னா புரியாதா?? வந்த போன் நிஜமா பொய்யானே தெரியாம பாட்டிகிட்ட சொல்லி அவங்க மனசில ஆசையை வளர்த்து அது இல்லாம போச்சுன்னா பாவம் என் பாட்டி.. ஏற்கனவே ரொம்ப கலங்கி போயிருக்காங்க. அதான் ஒருவேளை நீங்க வந்தா, வந்த பிறகு சொல்லிக்கலாம்னு இருந்தேன்.. பாட்டிக்கும் சர்ப்ரைஸ் குடுத்த மாதிரி இருக்கும் “

அவள் குரலில் என்ன இருந்தது என்று தெரியவில்லை ரகுநந்தனிற்கு.. அதிகாரமா ?? பாட்டியின் மீது இருந்த அக்கறையா ?? இல்லை தான் வந்தது பிடிக்கவில்லையா ?? என்று பல கேள்விகள் அவன் மனதில் எழும்பின..

பின் அவனே நினைத்தது கொண்டான் “ என்னவா இருந்தா எனக்கு என்ன ?? என் அம்மா சொன்னாங்க நான் வந்தேன்.. அவ்வளோ தான்.. இவ யாரா இருந்தா என்ன ?? அதுவும் இல்லாம இது என் பாட்டி வீடு.. இவள் என்ன அரட்டுறது.. “ என்று எண்ணியபடி அவளை முறைத்தான்.

                                  

         

 

          

 

          

                          

 

       

 

 

                      

                                                                     

        

Advertisement