Advertisement

நேசம் – 25

“ பாட்டி நீங்க இருக்கிங்களே!!! நீங்களும் டென்சன் ஆகி.. எங்க எல்லாரையும் டென்சன் பண்ணிட்டிங்க.. அங்க பாருங்க, உங்க நந்துவ எப்படி முழிக்கிறாங்க பாருங்க..” என்று தன் கணவனை சுட்டிக்காட்டினாள் மிதிலா…

ஜெகதாவை வீட்டிற்கு அழைத்து வந்தாகி விட்டது.. மிதிலாவிற்கும் ரகுநந்தனுக்கும் இடையில் எந்த மாற்றமும் இல்லை தான். ஆனால் இருவரும் அதை வெளியில் காட்டிகொள்ளவில்லை..

“ ம்ச் என்ன நந்தன், தனியா நின்னுட்டு இருக்கீங்க, வாங்க வந்து பாட்டிக்கிட்ட இருங்க.. நான் போய் ஜூஸ் எடுத்துட்டு வரேன் “ என்று நகர போனவளை கை பிடித்து தடுத்தார் ஜெகதா..

“ என்ன பாட்டி…???“

“ ஒரு நிமிஷம் இங்க உட்கார்.. நந்து நீயும் வா…” என்று அழைக்கவும், தயக்கமாய் வந்து அமர்ந்தான்..

அவர் என்ன பேச ஆரம்பித்தாரோ, ஆனால் அதற்கு முன்னே மிதிலா முந்திக்கொண்டாள்..

“ பாட்டி, ப்ளீஸ் நான் பேசிக்கிறேன்.. நீங்க அந்த போட்டோஸ் பாத்திங்கல்ல, அது .. அது எல்லாமே நந்தனோட கடந்த காலம். அவர் இங்க வரும் போது அந்த ரிலேஷன்ஷிப் இல்லை… இதெல்லாம் எனக்கு கல்யாணத்துக்கு முன்னமே தெரியும் பாட்டி.. சோ நீங்க இதை பத்தி கவலை பட வேண்டியதே இல்லை..” என்றாள் ஆதரவாய்.

எங்கே இந்த விசயத்தில் பேரனுடன் போராட வேண்டி வருமோ, தன் மகனோடு போராடி தோற்று வாழ்வில் தனியாய் நின்றது போல இப்பொழுதும் நடந்துவிடுமோ என்று அஞ்சிய ஜெகதாவிற்கு மிதிலா கூறியது சற்றே நிம்மதி தந்தது..

“ ஆமா பாட்டி மிது சொல்றது உண்மை தான்.. நான்  அது.. அதெல்லாம் முடிஞ்சு போனது பாட்டி, ப்ளீஸ் நீங்க இதை நினைச்சு ரொம்ப டென்சன் ஆகவேண்டாம் பாட்டி.. கல்யாணத்துக்கு முன்னமே நான் மிதுகிட்ட எல்லாம் சொல்லிட்டேன்.. அது அந்த போட்டோஸ் எல்லாம் என் பழைய திங்க்ஸ் கூட இருந்தது.. தேவை இல்லாத குப்பைனு தான் சுருட்டி கீழே போட்டு இருந்தேன் “ என்று தவறு செய்த சிறுவன் போல தயங்கி, பயந்து பேசும் தன் பேரனை பாவமாய் பார்த்தார்..

இந்த நிலை இவனுக்கு தேவையா என்று இருந்தது.. தன் முன் என்றாலும் தன் பேரன் தலை குனிந்து நிற்பது அவருக்கு பிடிக்கவில்லை.. ஆனால் நடந்ததை இனி கிளறி ஒன்றும் ஆக போவது இல்லை. போனது எல்லாம் போகட்டும் இனியாவது நல்லது நடக்க வேண்டும் என்று எண்ணியவர்

“ ம்ம் அப்புறம் ஏன் உங்களுக்குள்ள பிரச்சனை?? என்ன நடந்தது…?? என்கிட்டே சொல்லலாம்னா சொல்லுங்க…” என்றார் பெரிய மனுசியாய்..

“ அய்யோ !! பாட்டி என்ன இது இப்படி சொல்றிங்க.. சொல்லிக்கிற மாதிரி பிரச்சனை எல்லாம் ஒன்னும் இல்லை.. பொதுவா எல்லா புருஷன் பொண்டாட்டிக்குள்ள வரது தான்.. என்ன நான் கொஞ்சம் ரொம்ப கோவ பட்டுட்டேன் அவ்வளோ தான்..” என்று வேகமாய் ஜெகதாவிற்கு பதில் கூறிய மிதிலா ரகுநந்தனை பார்த்து சொல்லாதே என்பது போல தலையாட்டினாள்..

இதை கண்டுவிட்ட ஜெகதா மெல்ல புன்னகைத்தபடி “ டேய் நந்து.. உன் பொண்டாட்டி சொல்ல வேண்டாம்னு சொல்றா.. நீ வேற மறந்து கிறந்து சொல்லிடாத அப்புறம் இன்னும் உன் பாடு ரொம்ப திண்டாட்டம் ஆகிடும்.. ஹ்ம்ம் இத்தனை நாள் என் பேத்தியா இருந்தா.. என்கிட்டே எதையும் மறைக்க தெரியாது.. ஆனா என்னிக்கு கல்யாணம் ஆச்சோ, அன்னிக்கு இருந்து ஆளே மாறிட்டா “ என்று லேசாய் தன் பேத்தியையும் இடித்து பேசினார்…

இதை எல்லாம் அமைதியாக கோகிலாவும், சதிஸும் பார்த்துகொண்டு தான் இருந்தனர்.. சதிஸிற்கு ரகுநந்தனை பார்க்கும் பொழுது கஷ்டமாய் இருந்தாலும், அவனுக்கு அமைந்த வாழ்வை எண்ணி மகிழ்வாயும் இருந்தது..

“ கடவுளே எல்லாம் சரியா நடக்கணும்.. இனி எல்லாமே மிதிலா கைல தான் இருக்கு.. இந்த கிறுக்கனும் உண்மையை சொல்லி தொலைக்க மாற்றான்… எதுனாலும் சொன்னாதானே தெரியும்… “ என்று எண்ணினான்..

சிறிது நேர யோசனைக்கு பின் ரகுநந்தன் மெல்ல தான் மிதிலாவிடம்  நடந்துகொண்ட விதத்தையும், அதனால் தனக்கும் மிதிலாவிற்கும் ஏற்பட்ட விரிசலையும் கூறினான்.. தான் கூறவேண்டாம் என்று சொல்லியும் இப்படி உளறி வைக்கிறானே என்று மிதிலா முறைத்தாள்.

ஆனால் அந்த நேரத்திலும் கூட அவன் லிசி என்ன தவறு செய்தாள் என்று கூறவில்லை..

அதை ஜெகதாவும் உணர்ந்தே இருந்தார்.. ரகுநந்தன் பேசியதை எல்லாம் பொறுமையாய் கேட்டவர்

“ம்ம் நந்து, அந்த என்ன நடந்ததோ அதை எல்லாம் நான் கேட்க விரும்பலை.. நீயே சொல்லிட்ட அதெல்லாம் முடிஞ்சு போன விசயம்னு.. ஆனா அதை இந்த வாழ்க்கை குள்ள கொண்டு வந்த பார்த்தியா அது தான் தப்பு டா.. நீ படிச்சவன்.. எவ்வளோ அழகா ஒவ்வொரு விசயத்தையும் ஹேண்டில் பண்ற.. நீ இப்படி யோசிக்காம நடந்திருக்கலாமா ?? ” என்று கேட்டவருக்கு அவனிடம் அமைதியை தவிர வேறு பதில் இல்லை..

இந்த அமைதியை கலைக்கும் பொருட்டு கோகிலா “ அம்மா, பேசினா திரும்ப திரும்ப இதையே தான் பேசிட்டு இருப்போம். நடந்தது நடந்துடுச்சு.. எந்த புருஷன் பொண்டாட்டிக்குள்ள தான் சண்டை இல்லை.. சொல்ல போனா இதைவிட மோசமான விசயமெல்லாம் நடக்குது.. அதுனால இனிமே நடக்க வேண்டியதை பாருங்க.. மிதி போ நீயும் தம்பியும் போய் தூங்குங்க. சதிஸ் நீயும் போய் தூங்கு..  அம்மா வாங்க ரெஸ்ட் எடுங்க.. ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்ததுமே பஞ்சாயத்தை ஆரம்பிக்க வேண்டாம் எல்லாம் நாளைக்கு பொழுது விடியட்டும் பேசிக்கலாம்“  அனைவரையும் அனுப்பி வைத்தார்..

என்னதான் பாட்டியின் உடல் நலனுக்காக மிதிலா ரகுநந்தனோடு நல்ல படியாய் பேசினாலும் மனதிற்குள்ளே கனன்றுகொண்டே இருந்தது.. சரியான நேரம் பார்த்து காத்திருந்தாள்.. இப்பொழுது கோகிலாவே அனைவரையும் அனுப்பி வைக்கவும் மிதிலாவிற்கு அவனோடு பேச நல்ல சந்தர்ப்பம் வாய்த்தது..

ரகுநந்தனுக்குமே கூட மனதில் இந்த எண்ணம் தான்.. இன்றோடு இந்த பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைத்துவிட எண்ணினான்.. இனியும் அவனால் மிதிலாவை விட்டு தள்ளி இருக்க முடியாது.. ஆனால் நடந்தவையை எப்படி சொல்வது.. சொன்னால் மிதிலா எப்படி புரிந்துகொள்வாள் இதெல்லாம் போட்டு அவனை குழப்பி எடுத்தன..

இவர்களின் நிலை இப்படி என்றால் அங்கே ஜெகதாவோ கோகிலாவிடம் “ என்ன கோகிலா இப்படி எல்லாம் நடக்கணுமா என்ன ?? “ என்று வருந்தினார்..

“ அம்மா அவங்க ரெண்டு பேருமே வளர்ந்த பிள்ளைங்க.. அதுவும் இல்லாம இதுக்கு முன்ன வரைக்கும் ரெண்டு பேரும் ஒன்னா தானே மா இருந்தாங்க.. நேத்து விசாலம்மா வந்து பழசை எல்லாம் எடுத்து சொன்னாங்கம்மா” என்றார் கோகிலா..

“ என்ன விசாலம் வந்தாளா ??!!!” அதிர்ந்து கேட்டார் ஜெகதா…

“ ஆமாங்கம்மா… நானும் சதிஸும் வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் விசாலம்மா வந்திருக்காங்க போல மா… நீங்க தூக்கத்திலேயே புலம்பி இருப்பிங்க போல.. அதை கேட்டு அவங்க மனசு சங்கடப்பட்டு தம்பி கிட்டயும் மிதிலா கிட்டயும் எல்லாம் சொல்லி இருக்காங்க.. உங்க பெத்தவங்க மாதிரி இல்லாம நீங்களாவது புரிஞ்சு நடந்துக்கோங்க, இனிமேயாவது உங்க பாட்டி நிம்மதியா இருக்கட்டும்னு சொல்லிட்டு போனாங்களாம்.. மிதி சொன்னா “ என்று கோகிலா கூறியதை நம்ப இயலாமல் பார்த்தார் ஜெகதா..

“ உண்மைதாங்கம்மா… மிதிலா கூட சொன்னா விசாலம்மா ரொம்ப மாறிட்டாங்கன்னு “

“ ஹ்ம்ம் !!! அதிசயம் தான்.. இதெல்லாம் உண்மையாவே இருந்துட்டா நல்லது..  நந்து கூட அன்னிக்கு சொன்னான் அவங்க கிட்ட நல்ல மாற்றம் தெரியுதுன்னு.. அவளுக்கும் ஆரம்பத்தில் இருந்து நிம்மதி இல்லை.. இனியாவது உணர்ந்தா சரிதான் பணம் காசு முக்கியம் இல்லை பாசம் பந்தம் தான் முக்கியம்னு.. “

“அதென்னவோ உண்மைதாங்கம்மா…”

“ ஆனா எனக்கு நம்ம பசங்களை நினைச்சா தான் கவலையா இருக்கு கோகி.. இந்த மிதிலா பொண்ணு என்ன செய்ய போறாளோ.. அவனும் ரொம்ப வேதனையா தான் இருக்கான்.. ரெண்டும் பிடிவாதம் செய்யாம பேசி நல்லாகிட்டா நல்லது..“

“ அம்மா முதல்ல அவங்க ரெண்டு பேரும் பேசிக்கிடட்டும்.. அப்புறமும் ஒன்னும் சரியாகலைன்னா நம்ம ஏதாவது செய்யலாம்.. சதிஸ் தம்பியும் மிதிகிட்ட எடுத்து சொல்லியிருக்கும் போல.. கொஞ்சம் இதை பொறுமையா தான் மா செய்யணும்,, மிதியும் ரொம்ப கவலையா தானே இருந்தா.. அந்த பிள்ள எப்படி இருந்தா கல்யாணம் பண்ணி.. தம்பி சொல்றதுக்கு எல்லாம் சரின்னு சொல்றதை தவிர வேற எதுவும் சொன்னது இல்லையே..”

“ ஹ்ம்ம் நம்ம இப்போ விட்டா பேசிகிட்டே போகலாம்.. ஆனா அவங்க ரெண்டு பேரும் மனசு விட்டு பேசணுமே.. அதான் கொஞ்சம் கவலையா இருக்கு கோகி..”

“ ஹ்ம்ம் உங்களுக்கு கவலை பட சொல்லியா கொடுக்கணும்.. கொஞ்சம் தூங்குங்க மா.. எல்லாம் சரியா போகும்… அவங்க முதல்ல பேசட்டும்..” என்று கூறிவிட்டு அவரும் படுத்துக்கொண்டார்..

ரகுநந்தன் மிதிலாவை பார்ப்பதும், பின் பார்வையை திருப்புவதுமாய் இருந்தான்.. கணவனின் பார்வை தன் மீது படிந்து மீள்வதை கவனித்துக்கொண்டு தான் இருந்தாள் மிதிலா.. இருந்தாலும் அவனே பேச்சை ஆரம்பிக்கட்டும் என்று அமைதியாய் தன் வேலையை பார்த்தாள்..

“ இதற்குமேல் பொறுமை இல்லை,  மகளே உன்னை இப்படியே விட்டா நீ வழிக்கு வரமாட்ட “ என்று எண்ணிய ரகுநந்தன் எழுந்து நின்றான்..

 “இப்போ இவன் திடீர்னு நமக்கு ஏன் மரியாதை கொடுக்கிறான் ??!!” என்று யோசனையாய் அவனை நோக்கினாள்..

“ நீ துணி மடிக்கிற மாதிரி நடிச்சது எல்லாம் போதும்.. வா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..” என்று அவளது கைகளை பற்றினான்..

“ இவனுக்கு எவ்வளோ தைரியம்.. கையை பிடிக்கிறான்.. ஹாஸ்பிட்டலையும் இப்படி தான் நடந்தான் “ என்று என நினைத்தபடி அவனை முறைத்தாள்..

“ என்ன பார்க்கிற.. எனக்கு பொறுமை ரொம்ப கம்மின்னு உனக்கே தெரியும்.. அப்படி தெரிஞ்சும் நீ தான் இழுத்து அடிக்கிற போதும் மிது.. இதுக்கு மேல என்னால முடியாது “ என்றான் லேசாய் சலிப்புடன்..

“பண்றதை எல்லாம் பண்ணிட்டு இப்போ எதுவுமே நடக்காத மாதிரி பேசுறிங்க.. முதல்ல என் கையை விடுங்க.. என்ன தைரியம் உங்களுக்கு “ என்று எகிறினாள்..

“என்ன தைரியமா ?? நீ என் மனைவி தானே.. அந்த எண்ணம் உனக்கு இருக்கா என்ன..?? ஏன் உன் கையை பிடிக்க கூடாதா…” என்று பதிலுக்கு எகிறினான்..

“ ஆமா பிடிக்க கூடாது…” என்றாள் வெடுக்கென்று…

“ சரி கையை பிடிக்கால இப்படி கட்டி பிடிக்கலாம்ல” என்று கேட்டபடி வேகமாய் அணைத்தான் ரகுநந்தன்..

இப்படி ஒரு இறுகிய அணைப்பை அவள் சிறிதும் எதிர் பார்கவில்லை.. அத்தனை ஏன் அவன் அணைப்பான் என்று அவள் எண்ணவில்லை..

“ம்ம்ச் என்ன நந்தன் இது ?? பேசிட்டு இருக்கும் போதே இப்படி பண்றீங்க.. திஸ் இஸ் நாட் பேர்… யூ டோன்ட் ஹேவ் எனி சென்ஸ்??” என்று முறைத்தபடி திமிறினாள்..

“ என்ன?!! இப்படி இங்கிலீஷ்ல தாட்டு பூட்டுன்னு கத்தி பேசிட்டா நீ செய்றது எல்லாம் சரின்னு ஆகிடுமா என்ன ?? ஏன் மிது பாரின்ல இருந்து வந்த நானே தமிழ்ல நல்லா பேசிட்டு இருக்கேன்.. உனக்கு எதுக்கு இந்த சீன்???” என்று அவளை வேண்டுமென்றே சீண்டினான்..

“ என்ன ?? நான்… நான் சீன் போடுறேனா?? பண்ணது எல்லாம் நீங்க.. உங்கனால பட்டது மட்டும் தான் நான்… நான்.. நான் சீன் போடுறேனா ?? நீங்க சொன்ன எல்லாத்துக்கும் சரின்னு சொன்னதை தவிர வேற என்ன பண்ணிருக்கேன்.. ஏன் அப்போ எல்லாம் சொல்ல வேண்டியது தானே சீன் போட்டேன்னு… நீங்க பண்ண அத்தனைக்கும் பொறுமையா இருந்ததுக்கு இதுவும் வேண்டும் இன்னும் வேண்டும் “ என்று பொரிந்து தள்ளியவளை வாயடைத்து பார்த்தான்..

“ யப்பா !!! ஒருவார்த்தை சொன்னதுக்கே இப்படி பக்கம் பக்கமா பேசுறா… ஆண்டவா.. என்னை காப்பாத்து “ என்று நேரம் காலம் தெரியாமல் அவன் மனம் எண்ணியது..

எங்கே காப்பாற்றுவது, அதான் தாலி கட்டி அவளை சரி பாதியாக ஏற்றுக்கொண்ட பின் நான் எங்கே நடுவில் வருவது என்று கடவுள் அவனுக்கு அனுப்பிய செய்தி அவனுக்கு கேட்கவில்லை போல..

“ என்ன மிது.. நான் சும்மா ஒரு வார்த்தைக்கு சொன்னேன் அதை எல்லாம்…” என்று அவன் சொல்லி முடிக்க வில்லை..

“ எது சும்மா ???!!! ஹா!!! எது சும்மா… நீங்க பண்ணது எல்லாம் சும்மான்னு ஆகிடுமா என்ன ??? எல்லாத்தையும் பிளான் பன்னிதானே பண்ணிங்க.. ஒவ்வொரு விசயத்தையும், நான் தலை சீவுறது முதற்கொண்டு எல்லாமே திட்டம் போட்டு தானே பண்ணிங்க.. அப்போ ஒவ்வொரு நிமிசமும் நீங்க மனசுக்குள்ளயே அந்த லிசி கூட என்னை கம்பேர் பண்ணி பார்த்திருக்கிங்க அப்படிதானே…” 

“ இல்லை மிது.. நான் நிஜம்மா அப்படி நினைக்கல… எந்த ஒரு சின்ன விசயத்திற்கு கூட நான் உன்னையும் அவளையும் கம்பேர் பண்ணதே இல்லை மிது.. இதை நீ நம்பி தான் அகனும் “ என்று முகத்தை பாவமாய் வைத்துக்கொண்டு சொன்னவனை இமைகள் தட்டாமல் பார்த்தாள்..

“ நிஜம் மிது.. ப்ராமிஸ்.. நான் ஒத்துகிறேன்.. மத்தது எல்லாம் நீ இப்படி தான் இருக்கனும், இப்படி தான் செய்யனும்னு நான் ஒன்னொன்னும் யோசிச்சு யோசிச்சு தான் பண்ணேன்.. ஆனா என் மனசில் நிச்சயமா அவ இல்ல மிது.. நீ தான் நீ மட்டும் “ என்று அவளது கைளை எடுத்து தன் நெஞ்சில் வைத்துக்கொண்டான்..

கெஞ்சினால் மிஞ்சலாம், மிஞ்சினால் கெஞ்சலாம்.. ஆனால் இப்படி பேசுபவனிடம் மிதிலா என்ன பேசுவாள்.. அவளுக்குமே இன்றோடு இதை முடிக்கவேண்டும் என்று தான்.. ஆனால் என்ன செய்ய ?? சொல்ல வரும் வார்த்தைகள் சில நேரம் மாறிவிட்டால் மனதில் இருப்பதும் மறந்து வார்த்தை போர் நீள்கிறது..

காதலில் இறங்கிட இரு மனமும் நினைக்கத்தான் செய்தது.. ஆனால் நினைத்ததை செய்ய அத்தனை இயல்பாய் முடியவில்லை… என்ன பேச, எதை பேச அதை எப்படி பேச என்று இருவருக்குமே யோசிப்புகள் வந்து பேச்சை நிறுத்தின..

சில நொடி அமைதியே அங்கே இருவருக்கும் மூச்சு முட்ட வைத்தது… இத்தனை நேரம் பதிலுக்கு பதில் வார்த்தையாடியவர்கள், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி நின்று இருந்தனர்.. நான்கு கண்களும் கொண்ட உறவை, நான்கு கரங்களும் கொண்டாடிட தான் துடித்தது..

இந்த அமைதியும், மோன நிலையும் பிடித்து தான் இருந்தது.. ஆனால் இதையும் தாண்டி வேறொரு உலகிற்கு செல்ல ஆவல் கொண்டது ஆசை கொண்ட மனம்..

நந்தன் தான் முதலில் இந்த மௌன போரை கலைத்தது, “ என்ன மிது.. எதுவுமே சொல்லாம இருக்க.. ப்ளீஸ் டியர் ஏதாவது பேசேன்…” கெஞ்சல் பாதி, குழைவு மீதியுமாய் வந்தது அவன் குரல்…

“ நா… நான் என்ன சொல்ல நந்தன்.. நீங்க தான் சொல்லணும்…” அந்த நேரத்திலும் மிதிலாவின் குரலில் நேசத்தை மீறிய ஒரு திடம் தெரிந்தது.. அந்த திடம் ரகுநந்தனின் மனதில் மறைந்திருக்கும் ரகசியத்தை அறிந்திட வந்த திடம்.. அதை பற்றி அவன் வெளிப்படையாய் கூறினால் மட்டுமே மிதிலாவால் அவனோடு இயல்பாய் வாழ முடியும்..

“ நான் என்ன மிது சொல்லணும்.. அதான் எல்லாமே சொல்லிட்டேனே” என்றான் ரகுநந்தன்..

“ம்ம்ச்.. போதும் நந்தன்.. இனியும் நமக்குள்ள மறைக்கவோ இல்லை மறுத்து பேசவோ எதுவும் இல்லை.. நம்ம அந்த லிமிட்டை எல்லாம்  தாண்டியாச்சு.. இப்போ நான் கேட்கிறதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க.. உங்களுக்கு நான், அதாவது என்னோடான இந்த வாழ்கை முக்கியமா இல்லை உங்க மனசில் இருக்கிற அந்த பழைய நினைவுகளும், அதனால ஏற்பட்ட காயங்களும் முக்கியமா ??   

இப்படி நேரடி தாக்குதல் நடத்துவாள் மிதிலா என்று அவன் சற்றும் எதிர் பார்க்கவில்லை.. நிச்சயமாய் மிதிலா தான் முக்கியம்.. அவளோடான இந்த வாழ்கை தான் அவனுக்கு முக்கியம்.. வேறு எதுவும் இல்லை.. ஆனால் என்று அவன் யோசிக்கும் பொழுதே

“ என்ன யோசனை.. அப்போ உங்களுக்கு நான் முக்கியம் இல்லை அப்படிதானே நந்தன்…” என்று புருவத்தை ஏற்றி இறக்கி முகம் பார்த்து கேட்டவளிடம் பதில் சொல்ல முடியாமல் நின்றான்.. இத்தனை நாட்கள் கழித்து அவளது நந்தன் என்ற அழைப்பு பதில் சொல்ல விடாமல் தடுத்தது..

“ என்ன நந்தன் சொல்லுங்க… நான் முக்கியம் இல்லையா ???!!! அப்போ என் மேல இருந்த உங்க காதல் ??? “

“ ப்ளீஸ் மிது… இதுக்கு மேல எதுவும் கேட்காத… என்னால தாங்க முடியலை மிது.. ஏன் எனக்கு மட்டும் இப்படி மிது ?? நான் யாரை எல்லாம் எனக்கு நெருக்கம் சொந்தம்னு நினைக்கிறேனோ அவங்க யாருமே என்னை சரியா புரிஞ்சுக்கவே இல்லை மிது.. நீயும் ஏன் இப்படி பண்ற ??” என்று வேதனையுடன் கேட்டவனை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள் மிதிலா..

இதற்கு முன்னால் அவனது முகத்தில் இப்படி ஒரு வருத்தத்தையும், வேதனையையும் கண்டது இல்லை அவள்…

“ என்.. என்ன நந்தன்.. என்னாச்சு ??!!!” என்று அவனது தோள்களை பற்றியவளின் கரங்களை பிடித்து விலக்கினான்…

“ ஒன்னும் வேணாம் விடு.. உனக்கு எல்லாம் சொல்லணும்.. அப்போதானே உனக்கு என் மேல நம்பிக்கை வரும்.. அப்போ இத்தனை நாள் உனக்கு என்மேல நம்பிக்கையே இல்லை.. சரி கேட்டுக்கோ” என்றவனின் கண்கள் லேசாய் கலங்கி இருந்தது..

அதை கண்டதும் மிதிலா “ வேண்டாம் நந்தன்.. ப்ளீஸ்.. இது உங்களை இவ்வளோ ஹர்ட் பண்ணும்னா வேண்டாம் நந்தன். நான்.. நான் உங்களை முழுசா நம்புறேன் பா.. வேண்டாம் எதுவும் சொல்ல வேண்டாம் “ என்று அவனது தோள்களை பற்றி அமர வைத்து அவனை சமாதானம் செய்தாள்..

ஆனால் இப்பொழுது சொல்லிவிடும் வேகம் அவனுள் எழுந்தது.. கண்களையும் முகத்தையும் அழுந்த துடைத்தவன்

“ இல்லை மிது,.. இன்னிக்கே இதுக்கு ஒரு முடிவு வந்திடனும்.. நம்ம இதை பத்தி பேசுறது என்ன இதை பத்தி நினைக்கிறதே இது தான் கடைசி நாள்… ப்ளீஸ் மிது நீ.. நீ தான் எனக்கு இப்போ எல்லாமே.. இதை நீ புரிஞ்சுக்கணும்..” என்று கூறியவன் கண்களை சில நிமிடங்கள் இறுக மூடி அமர்ந்திருந்தான்…

“ ஐயோ!!! தேவை இல்லாமல் பேசி இவனது வேதனையை கிளப்பி விட்டோமோ” என்று இருந்தது..

“ நந்தன்… ப்ளீஸ்.. வேண்டாம் பா.. எதுவும் சொல்லவேண்டாம் “ என்று கூறியபடி அவனது  கண் இமைகளையும், புருவத்தையும் நீவி விட்டாள்.. நீவிய அவளது விரல்களை தன் கரங்களுக்குள் பொதித்துகொண்டான். அவளது அருகாமை அவனுக்கு மனதில் புதிய தெம்பை கொடுத்தது போல..

“ மிது… எனக்கும் லிசிக்கும் பிரேக் அப் ஆனது உனக்கு தெரியும் தானே.. அவளுக்கு ஸ்டார்டிங்ல இருந்தே மேரேஜ்ல விருப்பம் இல்லை.. எதையும் ரொம்ப வெளிப்டையா பேசிடுவா.. எனக்கு அது தான் அவகிட்ட பிடிச்சதுன்னு நானா முட்டாள் மாதிரி நினைச்சிட்டு இருந்தேன்.. இவ்வளோ வெளிப்படையா பேசுற பொண்ணு நிச்சயம் நல்லவாளா தான் இருப்பான்னு..

லவ் மாட்டும் போதும், கல்யாணம் எல்லாம் வேண்டாம்.. எதுக்கு தேவை இல்லாத கமிட்மெண்ட்ஸ், பிடிக்கிற வரைக்கும் இப்படியே இந்த ரிலேஷன்ஷிப்ல இருப்போம் பிடிக்காட்டி அவங்கவங்க லைன்ல போயிட்டே இருப்போம் அப்படின்னு சொல்லுவா. அவளுக்கு இந்த பேமிலி, செண்டிமெண்ட்ஸ் இதெல்லாம் பிடிக்கவே பிடிக்காது.. ஆனா நான் இதை பத்தி கொஞ்சமும் நினைக்கல.. என் லவ் நிச்சயம் அவளை மாத்திடும்னு நினைச்சேன்.” என்று கூறியவனின் கண் முன்னே பழைய விஷயங்கள் அனைத்தும் காட்சிகளாய் விரிந்தன..

“ ராக்கி… வை ஆர் யூ சோ சாட்….. கம்மான் மேன்… சியர் அப்..” என்று அவனை அணைத்தாள் லிசி..

ரகுநந்தனுக்கும் அந்த ஆறுதலான அணைப்பு அப்பொழுது தேவையாய் தான் இருந்தது.. தன் அன்னையை பறிகொடுத்துவிட்டு இன்று தனியாய் நிற்கிறான் அவ்வீட்டில்.. நண்பர்களை பார்த்து நாளாயிற்று.. அவர்களும் இவனை தேடி தினமும் வருகின்றனர் தான்.. ஆனால் என்னவோ மனதில் இருந்த வெறுமை யாராலும் நிறப்ப முடியாமல் இருந்தது..

இன்று லிசி அவனை தேடி வந்தது அவனுக்கு பெரும் நிம்மதியாய் இருந்தது. அவளின் பொறுமையான பேச்சும், இந்த ஆறுதலான அணைப்பும் அவனுக்கு ஆயுள் முழுவதும் வேண்டும் போலதான் இருந்தது. அவளோடு சிறிது நேரம் பேசியபின் மனம் சற்றே நிம்மதியாய் இருப்பதாய் உணர்ந்தான்..

அவளும் அணைத்து, முத்தமிட்டு, மகிழ்வூட்டி என்று அவளுக்கு தெரிந்த வகையில் எல்லாம் சமாதானம் செய்தாள்.. நேரம் நகர நகர சற்றே சிரித்து பேசும் நிலைக்கு வந்திருந்தான்.. இதே கதை தான் தினமும் தொடர்ந்தது..

சதிஸ் கூட “ பரவாயில்ல டா ராக்கி.. நான் கூட லிசியை வேற மாதிரி நினைச்சேன்.. பட் உன்னை இந்த அளவிற்கு மாத்திட்டா..” என்று கூறியதை கேட்டு லிசியின் கர்வம் இன்னும் கூடியது..

அதே கர்வம் ரகுநந்தனை அவள் விருப்பப்படி எல்லாம் ஆட்டி வைக்க நினைத்தது.. அவனது வீட்டிற்கு அடிக்கடி செல்ல ஆரம்பித்தாள்.. அடிக்கடி என்ன நேரம் காலம் இல்லாமல் அங்கேயே தான் கிடந்தாள்..

“ ஹப்பா !! இப்போதான் ப்ரீ யா இருக்கு ராக்கி… முன்னெல்லாம் ஆன்ட்டி இருந்தா இப்படி ப்ரீ யா இருக்க முடியுமா “ என்று அவனை கட்டிக்கொண்டு கேட்டவளை புன்னகையோடு பார்த்தான்..

“ அம்மா முன்னாடி இப்படி இருக்க முடியுமா லிசி டியர்……….???”

“ அதான்…. இப்போ ஆன்ட்டி இல்லாம இருக்கிறது கூட நல்லது தான்.. இப்போதான் முழுக்க முழுக்க யு ஆர் மைன்.. இல்லாட்டி எப்போ பாரு கிட் மாதிரி மம்மி மம்மின்னு தா…”

ரகுநந்தனுக்கு லிசி கூறியது என்னவோ பிடிக்கவில்லை… அம்மா இருந்தால் மட்டும் நான் சந்தோசமாய் இருப்பதை தடுக்கவா போகிறார்கள் என்று எண்ணினான்..

ஆனால் லிசியோ நீ என்ன நினைத்தாள் எனக்கென்ன என்று எண்ணியவளாய் சிரிக்க சிரிக்க பேசிக்கொண்டு இருந்தாள்..  ரகுநந்தனுக்கோ இவளிடம் இப்பொழுது திருமணம் பற்றி பேசினால் சரியாய் இருக்கும் என்று தோன்றியது..

அவளை தன் மடியில் சாய்த்துக்கொண்டு “ ஹ்ம்ம் இதெல்லாம் உனக்கு இப்போ தெரியாது.. பியுச்சர்ல நம்ம பேபி உன்னை வந்து கொஞ்சும் பாரு அப்போதான் தான் தெரியும் “ என்று கூறியவனை வித்தியாசமாய் பார்த்தாள் லிசி.. அவளது பார்வையின் மாற்றத்தை உணர்ந்து

“என்ன டியர் அப்படி பார்க்கிற.. என்ன ட்ரீம்ஸா??!!” என்று சிரித்தப்படி தலையில் முட்டினான்..

ஆனால் அவளோ சீரியசான முக பாவனையில் இருந்தாள் “ ஐம் நாட் இன் ட்ரீம் ராக்கி.. ஐ திங் யு ஆர் இன் ட்ரீம்”

“ எஸ் பேபி ஐம் இன் ட்ரீம்.. நம்ம பேமிலி… நம்ம கிட்ஸ்…. இப்படி நிறைய ட்ரீம்ஸ்…”

“ வாட்!!! பேமிலி… கிட்ஸா …. வாட் ஆர் யு செயிங் ராக்கி… ஆர் யு ஜோக்கிங்…  “ என்று முகத்தை சுருக்கி கேட்டவளை இப்பொழுது அவன் வித்தியாசமாய் பார்த்தான்..

“ இதில் ஜோக் பண்ண என்ன இருக்கு லிசி “

“நான் எப்போதாவது சொல்லிருக்கேனா நம்ம மேரேஜ் பண்ணிக்கலாம்ன்னு.. நீ என்னடான்னா பேபீஸ் பத்தியெல்லாம் பேசிட்டு இருக்க… ???” அவளது குரலில் அப்பட்டமாய் ஒரு சலிப்பு தெரிந்தது..

“ ஏன் லிசி??? எனக்கு உன்னை பிடிச்சிருக்கு, உனக்கு என்னை பிடிச்சிருக்கு சோ இதுக்கு மேல என்ன வேண்டும் ??? ”

“ நோ ராக்கி, பிடிச்சிருந்தா உடனே வி கெட் மேரிட்டா??? நோ வே… அதுவும் நான் ??? பேமிலி, கிட்ஸ் அப்படின்னு ஒரு சர்கில் குள்ள ஓ !!! காட் முடியவே முடியாது…” என்று மறுத்து பேசியவளை வெறித்து பார்த்தான்..

பிறகு என்ன நினைத்தானோ “ ஓகே ஓகே… கூல் பேபி.. ஐ திங் யு ஆர் நாட் இன் குட் மூட்.. நம்ம வேற ஒரு நாள் இதை பத்தி பேசலாம்..” என்று அவள் அவளது கைகளை பற்றியவனை விலக்கி நிறுத்தினாள் லிசி..                                     

“ நோ ராக்கி.. நொவ் இட்செல்ப் வி ஹேவ் டு டிசைட் திஸ்.. லுக் ராக்கி.. என்னால இந்த மேரேஜ்… ரெஸ்பான்ஸ்…  எக்செட்ரா… இதெல்லாம் முடியாது.. ஐ வான்ட் டு பீ ப்ரீ… எனக்கு இப்போ உன்னை பிடிச்சிருக்கு சோ உன்கூட இருக்கேன்.. பட் உன்கூடவே இருப்பேன்னு சொல்ல முடியாது..  வேற யாரயும் கூட பிடிக்கலாம், அப்போ நம்ம, அய்யோ !! என்னடா பண்றதுன்னு பீல் பண்ணிட்டு இருக்க கூடாது..” என்று அவள் பாட்டிற்கு பக்கம் பக்கமாய் பேசிக்கொண்டு போனாள்..

ரகுநந்தனுக்கு அவள் பேசுவதை எல்லாம் கேட்க கேட்க தலை வெடித்து விடும் போல இருந்தது… ஒரு நிலையில் பொறுக்க முடியாமல் “ ஜஸ்ட் ஸ்டாப் இட் லிசி.. உன்னால எப்படி இப்படி பேச முடியுது.. இது ஒன்னும் ஜஸ்ட் லைக் தேட்ன்னு சொல்லிட்டு போற ரிலேஷன்ஷிப் இல்லை அன்டர்ஸ்டேன்ட்… “

“எஸ்.. அதான் நமக்குள்ள எந்த கமிட்மென்ட்ஸ் வேண்டாம்னு சொல்றேன் ராக்கி…”

“ நோ!!! ஐ கான்ட் அக்செப்ட் திஸ்.. நான் இங்க வளர்ந்தவனா இருக்கலாம்.. பட் மை மாம் டீச் மீ ஹொவ் டு லிவ்… “

“மாம்!! மாம்!! வென் வில் யு ஸ்டாப் திஸ் இடியாட்டிக் டாக்ஸ்…” என்று வெறிபிடித்தவள் போல் கத்தியவளை அதிர்ந்து பார்த்தான் ரகுநந்தன்…

“லிசி…..” காற்றில் கரையும் குரலாய் வெளி வந்தது அவனிடம்…

“ இட்ஸ் ஓவர் ராக்கி.. வி ஹேவ் டூ ஸ்டாப் இட் நொவ்.. அண்ட் பீ கிளியர், நத்திங் இஸ் பிட்வீன் யூ அண்ட் மீ… மைன்ட் இட்…” என்று கூறி சென்றவளை தடுக்க கூட தோன்றாமல் சிலையென சமைந்து நின்றிருந்தான்…        

            

              

                     

                                

 

 

 

 

Advertisement