Advertisement

நேசம் – 24

“ Mr. ரகுநந்தன், இன்னொரு தரம் உங்க பாட்டிக்கு இப்படி ஆகாம பார்த்துக்கோங்க.. இப்போ சரி, சரியான நேரத்தில் கூட்டிட்டு வந்துட்டிங்க.. ஆனா இன்னொரு தடவை இப்படி ஒரு மயக்கமோ, இல்லை நெஞ்சு வலியோ வந்தா அப்புறம் நாங்க பொறுப்பில்லை.. கூடியமட்டும் அவங்களை சந்தோசமா பார்த்துக்கோங்க.. “ என்று கூறிவிட்டு செல்லும் டாக்டரிடம் சரியென்று சொல்வதை தவிர வேறு பதில் இல்லை அவனுக்கு..

இப்பொழுது நினைத்தாலும் ஜெகதா விழுந்து  கிடந்த கோலம் அவனை பதற வைத்தது..

ரகுநந்தன் குளிக்க சென்றது தெரியாமல் அவனோடு பேசிவிட்டு அப்படியே அவனுக்கு காலை உணவும் கொடுத்துவிட்டு வரலாம் என்று ஜெகதா அவனது அறைக்கு சென்ற போது, அவன் தூக்கி எறிந்த புகைப்படங்களே அவரது கண்ணில் பட்டன..

“ என்ன இப்படி குப்பையா இருக்கு.. இந்த மிதி பொண்ணு என்ன தான் கவனிக்கிறாலோ“ என்று முனுமுனுத்து, சுருட்டி எறியப்பட்டு இருந்த போட்டோவை எடுத்து பார்த்தவருக்கு  அதிர்ச்சி..

லிசியும், ரகுநந்தனும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி எடுக்கபட்டிருந்த புகைப்படம்.. அதை காணவும்  “கடவுளே !!! இதெல்லாம் என்ன கண்றாவி ?? ஒருவேளை இதனால தான் மிதிக்கும் நந்துக்கும் சண்டையா ?? அய்யோ !! இவ யாரு புதுசா, கடவுளே என் பேத்தி பேரன் ரெண்டு பேரும் நல்லா இருக்கணுமே. மிதிம்மா…”  என்று மிதிலாவை எண்ணும் பொழுதே அப்படியே உடலில் நடுக்கம் பரவி மயக்கம் வந்தது..

குளியலறை உள்ளே ஷவரில் நின்றிருந்த ரகுநந்தனுக்கு, வெளியே நடந்தவை எதுவும் தெரியாததால், தன்னுடைய மன பாரம் குறையுமட்டும் நீரின் கீழ் நின்றிருந்தான்.. ஏதோ சத்தம் கேட்கவும் உள்ளே இருந்தபடி “ யாரது ???!!!” என்று கேள்வி எழுப்பினான்..

எந்த பதிலும் இல்லாமல் போகவே வேகமாய் உடையை மாற்றிக்கொண்டு வெளியில் வந்து பார்த்தவனுக்கு அதிர்ச்சி… கையில் அந்த புகைப்படத்தை இறுக பற்றியபடி தன் நெஞ்சில் ஒரு கையை வைத்து கீழே விழுந்து கிடந்தார் ஜெகதா..

“ அய்யோ !! பாட்டி… வாட் ஹேப்பன்..??? பாட்டி… பாட்டி  எழும்புங்க.. என்ன இது ??“ என்று அவசரமாய் ஜெகதாவின் கன்னத்தை தட்டினான்.. எந்த பதிலும் இல்லை.. அப்பொழுது தான் அவரது கையில் இருந்ததை கவனித்தான்…

“ஓ !!! ஷிட்…. இது… டேமிட்… பாட்டி ப்ளீஸ் கண்ணை திறந்து பாருங்க பாட்டி“ என்று தன்னை தானே திட்டி கொண்டு வேகமாய் ஜெகதாவை கையில் ஏந்தியபடி கோகிலாவிடமும் விவரம் கூறி வேகமாய் மருத்துவமனை நோக்கி கிளம்பினான்..

கோகிலாவோ என்ன நடந்தது என்று தெரியாமல் முதலில் திகைத்தவர், பின் ரகுநந்தனின் வேகத்திற்கு நடந்து காரில் ஏறிக்கொண்டு ஜெகதாவையும் தன் மீது சாய்து கொண்டார்..

“ என்ன தம்பி?? என்னாச்சு நல்லாதானே அம்மா மேல வந்தாங்க…??”

என்ன பதில் கூறுவான் ரகுநந்தன், நானும் என் காதலியும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பார்த்து தான் மயக்கம் அடைந்தார் என்று அவனால் சொல்ல முடியுமா என்ன??

“ அக்கா ப்ளீஸ் கா.. என்கிட்டே இப்போ எதுவும் கேட்காதிங்க.. முதல்ல டாக்டரை பார்த்துட்டு  அப்புறம் பேசலாம் “ என்றவன் அதற்குமேல் யாரிடமும் பேசவில்லை..

மருத்துவர் கூறி சென்றதோ ரகுநந்தன் மனதை இன்னும் பாதித்தது.. “ எல்லாமே என்னால தானே.. முதல்ல மிது, இப்போ பாட்டி.. கடவுளே ஏன் இப்படி என்னைகஷ்டப்படுத்துற?? என் அம்மாவை என்கிட்டே இருந்து பிரிச்ச.. அடுத்து என் மிது என்மேல அவ்வளோ வெறுப்பா இருக்கா.. இப்போ என் மேல உயிரா இருந்த என் பாட்டி… “ என்று தன்னையே நொந்தபடி அமர்ந்திருந்தான்..

கோகிலா “ தம்பி அம்மாவை ரூம்க்கு மாத்த போறாங்களாம், உங்களை கூப்பிடுறாங்க..” என்று வந்து அழைக்கவுமே அவனுக்கு நினைவு கலைந்தது..

அப்பொழுது தான் நீயாபகம் வந்தவனாக “ அக்கா மிதுக்கு சொல்லணுமே.. நான் போன் பண்ணா எடுக்கமாட்டா.. அதுனால நீங்க பண்ணி சொல்லிடுங்க.. “ என்றான் குற்ற உணர்வு கலந்த குரலில்..

“ இந்த தம்பி ஏன் இப்படி பேசுது..??” என்று யோசித்தவர் “ மிதி பொண்ணு என்ன எதுன்னு கேட்டா நான் என்ன தம்பி சொல்லட்டும்.. கேள்வி மேல கேள்வியா கேட்பாளே..” என்றார்..

“ ஹ்ம்ம்…. “ என்று யோசித்தவன், பிறகு இவருக்கு தெரிவதால் ஒன்றும் ஆக போவது இல்லை என்ற முடிவிற்கு வந்து, சுருக்கமாய் விஷயத்தை கூறிவிட்டு வேகமாய் நகர்ந்துவிட்டான்.. அதற்குமேல் அங்கே நிற்க அவனால் முடியவில்லை..

கோகிலாவிற்கு இவன் என்ன கூறுகின்றான் என்றே முதலில் விளங்கவில்லை.. அவன் சொன்னது எல்லாம் மனதில் பதிய சில நேரம் பிடித்தது.. மனதில் பதிந்தது உறைத்தபின்னே “ அட ராமா!!!! என்ன இது ?? இப்படி ஒரு பிரச்சனையா?? இந்த மிதி பொண்ணு இதுனால தான் சண்டையா இருக்காளா ?? இந்த தம்பியை பார்த்தாலும் பாவமா தான் இருக்கு.. கடவுளே என்ன நடந்தாலும் சரி இந்த குடும்பம் பிரிய கூடாது..” என்று வேண்டிக்கொண்டு மிதிலாவிற்கு அழைத்தார்..

அவர் சொன்னது போல தான் கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைந்து விட்டாள்..

“ இந்தா மிதிலா… உன் வீட்டுகாரரு உனக்கு சொல்ல சொன்னாரு.. நான் ஜெகதம்மா கிட்ட இருக்கனும்.. நீ கேட்கிற எல்லாத்துக்கும் உன் புருஷன் கிட்ட பதில் இருக்கு, வந்து அவர்கிட்டே கேளு.. என்னை ஆளை விடு “ என்று பதிலுக்கு அவரும் சிடு சிடுத்து விட்டு வைத்தார்..

ஜெகதாவை தனி அறைக்கு மாற்றியிருந்தனர்.. அரை மயக்கத்தில் இருந்தார்.. கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டு இருந்தது… அந்த அரை மயக்கத்திலும் “ டேய்… நந்து… நீ.. நீயும் உங்க அப்பா மாதிரி செய்துடாத டா… மிதி… மிதிலா.. நல்ல பொண்ணு டா.. நந்து… நந்து…” என்று பிதற்றிக்கொண்டு இருந்தார்..

ரகுநந்தனுக்கும் , கோகிலாவிற்கும் இதை பார்க்கவே மிகவும் கஷ்டமாய் இருந்தது.. இதையே இதையே திரும்ப திரும்ப ஜெகதா கூறவும் தன் தந்தையை பற்றி எதோ கூறுகிறார் என்று ரகுநந்தன் சற்று நிமிர்ந்து பார்த்தான்..

“என்ன இது பாட்டி என்னவோ சொல்றாங்க.. இத்தனை வருஷம் இல்லாம அப்பாவை பத்தி ஏதோ ?? அம்மா கூட எதுவும் சொன்னது இல்லையே… என்ன இது ??” என்று சிந்திக்க ஆரம்பித்தவனை ஜெகதாவின் புலம்பலே மீண்டும் மனதை வாட்டியது..    

“ ச்சே பாட்டி இப்படி படுத்து இருக்கும் போது நம்ம இப்படி வேற எதையும் யோசிக்க கூடாது..” என்று எண்ணியவன் அவரது மற்றொரு கையை பிடித்து

“ பாட்டி, ப்ளீஸ்.. அமைதியா இருங்க.. உங்களுக்கு ஒன்னும் இல்லை.. என்னை நம்புங்க பாட்டி.. நான் மிதிலா மேல உயிரையே வச்சிருக்கேன்.. எனக்கு உங்களை விட்டா வேற யாரும் இல்லை.. ப்ளீஸ் பாட்டி அமைதியா தூங்குங்க..” என்று மெல்ல அவரது நெற்றியை வருடி கூறிக்கொண்டு இருக்கும் பொழுதே புயலென மிதிலா உள்ளே நுழைந்தாள்..

அவளது கண்கள் கலங்கியிருந்தது, ஆனாலும் ரகுநந்தன் மேல் வீசும் கோவப் பார்வையை மட்டும் அவள் மாற்றிக்கொள்ளவில்லை..

“நந்து… நந்து கண்ணா… அவளை விட்டுடாத டா.. அவ சின்ன பொண்ணு டா… நீ.. நீ இங்கேயே தான் இருக்கணும் நந்து.. சொன்னா கேளு டா… “ என்று ஜெகதாவின் புலம்பல் இன்னும் அதிகரித்தது…       

அவனை முறைத்தபடியே கட்டிலின் இன்னொரு பக்கம் அமர்ந்த மிதிலாவிற்கு  ஜெகதாவின் புலம்பலை கேட்டு இன்னும் அழுகை வந்தது..

“ பாட்டி.. நான் மிதி.. நான் பேசுறது கேட்குதா ?? ப்ளீஸ் பாட்டி அமைதியா தூங்குங்க.. நான்.. இங்க தான் இருக்கேன்.. எங்கயும் போக மாட்டேன் பாட்டி.. ப்ளீஸ்.. உங்.. உங்க பேரனும் இங்க தான் இருக்காங்க பாட்டி.. அவர் எங்கயும் போகவும் மாட்டாங்க.. ப்ளீஸ் நீங்க நிம்மதியா தூங்குங்க பாட்டி..” என்று கணவனும் மனைவியும் மாறி மாறி ஜெகதாவிடம் பேசி அவரை உறங்க செய்தனர்..

ஜெகதாவின் சீரான மூச்சும், அழ்ந்த உறக்கமுமே மற்றவர்களை சற்று நிம்மதி அடைய வைத்தது.. மருத்துவர் வந்து பார்த்துவிட்டு இனி எந்த பிரச்சனையும் இல்லை என்றுவிட்டு போனார்..

சதிஸிற்கு ரகுநந்தனை பார்க்கும் பொழுது தலையில் அடிதுகொள்ளலாம் போல் இருந்தது ” ஹ்ம்ம் கொஞ்ச நேரத்துக்கு முன்ன தான் மிதிலா கிட்ட பேசி அந்த பொண்ண யோசிக்க வைச்சேன்.. இங்க வந்து பார்த்தா இவன் இப்படி காரியத்தையே சொதப்பி வச்சிருக்கான்.. இனி பாட்டி முழிச்சா இவன் பாட்டியையும் சமாளிக்கணும், பொண்டாடியையும் சமாளிக்கணும்.. “ என்று தன் நண்பனை திட்டிக்கொண்டான்..

ரகுநந்தனோ அவனை பாவமாய் பார்த்தான்.. “ செய்றதை எல்லாம் செய்துட்டு இப்ப பார்க்கிறதை பாரு…” என்று வேறு புறம் திரும்பியவனை மிதிலாவின் முறைப்பு தாங்கி நின்றது..

“அய்யோ !! இந்த பொண்ணு எதுக்கு முறைக்குது.. நம்ம இங்க வந்த நேரமே சரியில்லையோ.. “ என்று யோசித்தவன் வேகமாய் கோகிலாவின் பக்கம் திரும்பி

“ அக்கா, நீங்க வாங்க, நாம் வீட்டுக்கு போய் வேண்டியதை எல்லாம் எடுத்துட்டு அப்படியே  இவங்க எல்லாம் சாப்பிட எடுத்துட்டு வரலாம்.. அதான் மிதிலாவும், ராக்கியும் இருக்காங்க தானே.. வாங்க நம்ம போகலாம்..” என்று தப்பிக்க ஆள் சேர்த்தான்..

கோகிலாவோ என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் மிதிலாவின் முகம் பார்த்தார்.. மிதிலாவிற்கு ரகுநந்தனோடு தனியே பேச வேண்டி இருந்தது, அதலால் அவளும் அவர்களை போக சொல்லவும் சதிஸ் தப்பித்தோம் பிழைத்தோம் என்று கோகிலாவை அழைத்துக்கொண்டு கிளம்பினான்..

“ இவகிட்ட என்னை தனியா விட்டு போறிங்களே “ என்பது போல பார்த்த ரகுநந்தனின் பார்வையை யாரும் கண்டுகொள்ளவில்லை..

“ சோ !! அந்த போட்டோவை இன்னும் வச்சிருக்கிங்க அப்படிதானே???” என்று மிதிலாவின் குற்றம் சாட்டும் குரல் ஒலிக்கவுமே ரகுநந்தன் அவள் பக்கம் பார்த்தான்..

“ பதில் சொல்லுங்க..”

“ அது.. அது வந்து மிது…”

“ என்ன வந்து போயின்னு.. உங்கனால தான் இப்போ என் பாட்டி இப்படி படுத்து கிடக்காங்க… எல்லாமே உங்கனால தான்.. முதல்ல என் வாழ்கைய கேடுத்திங்க, இப்போ என் பாட்டியை இப்படி ஹாஸ்பிட்டல்ல வந்து படுக்க வச்சிட்டிங்க…” என்று ஆங்காரமாய் கத்தினாள்..

முதலில் பொறுமையாய் தான் பேசினான் ரகுநந்தன், ஆனால் மிதிலா, என் பாட்டி என் பாட்டி என்று சொல்லவும் அவனுக்கும் கோவம் வந்து விட்டது

“ ஜஸ்ட் ஸ்டாப் இட் மிதிலா…. “ என்று கோவமாய் கத்தியவனை அதிர்ந்து பார்த்தாள் மிதிலா..

இவர்களின் சத்தம் வெளியே இருந்த நர்ஸ் வரை எட்டி விட்டது போல.. வேகமாய் உள்ளே வந்தவர் “ என்ன இது பேசென்ட் இப்படி படுத்து இருக்கும் போது இப்படியா சண்டை போடுறது.. ரெண்டு பேரும் படிச்சவங்கதானே… கொஞ்ச நேரம் முன்ன அவங்களை தூங்க செய்ய எவ்வளோ கஷ்டப்பட்டிங்க இப்போ இப்படி கத்துறிங்க.. போங்க பேச வேண்டியதை எல்லாம் வெளிய போய் பேசிட்டு வாங்க…” என்று இருவரையும் திட்டிவிட்டு அதே அறையின் ஒரு மூளையில் இருந்த இருக்கையில் அமர்ந்துக்கொண்டார்..

இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்தபடி நின்றிருந்தனர்.. விட்டால் பார்வையிலேயே இருவரும் மாற்றி மாற்றி அடித்துக்கொள்வர் போல.. இதை எல்லாம் கண்டிருந்த அந்த நர்ஸ்

“ ஹலோ உங்க ரெண்டு பேரையும் நான் வெளிய போக சொன்னேன்.. போங்க பேசிட்டு வாங்க.. இந்தம்மா முழிக்கும் போதாவது ரெண்டு பேரும் தெளிவா பேசுங்க, அப்போதான் அவங்க முழுசா குனமாவாங்க..” என்று கூறியபிறகு தான் எதற்கு வெளியே போகும் படி கூறுகிறார் என்றே புரிந்தது இருவருக்கும்..

மிதிலா நினைத்துக்கொண்டாள் “ பாட்டி முழிக்கும் போது நிச்சயம் நான் நந்தன் கிட்ட நல்ல படியா நடந்துக்க வேண்டியது இருக்கும்.. ஆனா என்னால பொய்யா நடிக்க முடியாது.. சோ, அதுக்கு முன்ன இவன்கிட்ட பேசிடனும் “ என்று எண்ணியபடியே அவனையும் ஒரு பார்வை பார்த்து வெளியே சென்றாள்..

“ பார்த்துகோங்க “ என்று கூறிவிட்டு ரகுநந்தனும்  வெளியில் வந்தான்..

“ எப்படி கத்துறா, ராக்கோழின்னு பேரு வச்சதுக்கு பதிலா ரெட்டை ராங்கின்னு வச்சிருக்கணும்.. திமிர் பிடிச்சவ.. அவ பாட்டியாம் பாட்டி… அப்போ நான் யாரு?? இரு டி…  வீட்டுக்கு வந்து உன்னை கவனிக்கிறேன்.” என்று கருவிக்கொண்டே அவள் இருந்த இடம் சென்றான்..

அவள் பேச ஆரம்பிக்கும் முன்னே கைகளை உயர்த்தி “ போதும்..!! முதல்ல ஒன்ன புரிஞ்சுக்கோ அவங்க எனக்கும் பாட்டி தான்… சொல்ல போனா எனக்குதான் முதல்ல… விட்டா பேசிகிட்டே போற.. எனக்கு மட்டும் என்ன ஆசையா இப்படி எல்லாம் நடக்கணும்ன்னு.. தெரிஞ்சோ தெரியாமையோ நான் தப்பு பண்ணிட்டேன் தான்.. அதுக்காக என்னவோ நான் தான் பாட்டிகிட்ட அந்த போட்டோஸ் எல்லாம் காட்டி அவங்களை இங்க வந்து படுங்க பாட்டின்னு சொல்லி கூட்டி வந்த மாதிரி கத்துற…” என்று அவளுக்கும் மேலே அவன் கத்தவும் போவோர் வருவோர் எல்லாம் இவர்களை பார்த்தபடி சென்றனர்..

மிதிலாவிற்கோ இவன் இப்படி பேசுகிறானே என்று கோவம் ஒரு புறமும், அனைவருக்கும் இங்கே காட்சி பொருளாய் நிற்பதை கண்டு அவமானம் ஒருபுறமும் பிடுங்கி தின்றது..

“ ச்சே, உங்ககிட்ட எல்லாம் பேசி எந்த யூசும் இல்லை… “ என்று பல்லை கடித்துவிட்டு நகர போனவளை கைகளை பிடித்து இழுத்து நிறுத்தினான்..

“ என்ன நீயா பேச்சை ஆரம்பிச்ச, இப்போ பாதியில் போற.. ஒழுங்கா நில்லு நான் பேசணும்…” என்று பிடித்து நிறுத்தினான் அவளை.. மிதிலாவிற்கு இது இன்னும் அதிர்ச்சி, நேற்று வரை பேசு பேசு என்று கெஞ்சிக்கொண்டு இருந்தவன் இன்று இத்தனை பேர் முன்னிலையில் கைகளை பிடித்து நிறுத்துகிறான்..

பேசு என்று அதிகாரமாய் வேறு கூறுகிறான்.. என்ன தைரியம் இவனுக்கு என்று நினைக்கும் பொழுதே அவளுக்கு இன்னும் கோவம் அதிகமாய் வந்தது..

“ நீங்க உங்க லவ்வர் கூட எடுத்த போட்டோஸ் எல்லாம் பார்த்து ரசிக்கணும்னா தனியா பார்க்க வேண்டியது தானே அதை ஏன் பாட்டி கண் முன்னே வச்சிங்க…” என்று பிறருக்கு கேட்கா வண்ணம் எரிந்து விழுந்தாள்…

அவளது அத்தனை கோபத்திலும் அவளது கைளை மட்டும் அவன் விடவில்லை.. மருத்துவமனை என்றும் பாராமல் அவளிடம் நெருங்கி நின்று “ நீ பார்த்தியா நான் ரசிச்சு பார்த்ததை??? அந்த போட்டோஸ் எல்லாம் தான் இவ்வளோ பிரச்சனைக்கு ரீசன்னு அதை தூக்கி தூர போட்டேன், அது பாட்டி கையில கிடைக்கும்னு நான் என்ன கண்டேனா ?? இல்லை இப்படி பப்ளிக்ல உன்கிட்ட பேச்சு வாங்க எனக்கு என்ன ஆசையா ???” பதிலுக்கு அவனும் காய்ந்தான்..

மிதிலாவிற்கு ஏனோ நந்தன் இப்படி பேசுவது மனதிற்கு சங்கடமாய் இருந்தது.. இது இவனது இயல்பு இல்லை.. பொதுவாய் அமைதியானவன் தான்.. வீட்டில் இருக்கும் நேரம் மட்டும் இவளை சீண்டிக்கொண்டு இருப்பான். அவ்வளவே.. அவன் முகத்தையே பதில் எதுவும் கூறாமல் அமைதியாய் பார்த்தாள்.. இவர்களது அமைதியை குலைக்கும் விதமாய் ஒரு குரல் கேட்டது..

வேறு யார் விசாலம் தான்..

“ அட என்ன இது ?? இப்படி ஹாஸ்பிட்டல்ல வந்து புருசனும் பொண்டாட்டியும் சண்டையிட்டு இருக்கீங்க…” என்றபடி வேகமாய் நடந்து வந்தார்..

“ இவங்க எதுக்கு இங்க வந்தாங்க ??” என்ற கேள்வி இருவர் முகத்திலும் தெரிந்தது..

“ என்ன அப்படி பாக்குறிங்க.. நான் மன்த்லி செக்கப்புக்கு வந்தேன்.. அப்போதான் சொன்னாங்க ஜெகதா இங்க அட்மிட் ஆகி இருக்கிறதா.. அதான் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன் “ என்றார் மிகவும் நல்ல விதமாய்..

ஆம் இப்பொழுதெல்லாம் விசாலத்திடம் நல்ல மாற்றங்கள் சில ஏற்பட்டிருக்கிறது.. அது எதனால் என்று யாருக்கும் தெரியவில்லை.. இந்த சொத்து பிரச்சனை, உயில் விஷயம் எல்லாம் நல்ல படியாய் முடியவும் ஜெகதாவிற்கு நிம்மதியோ இல்லையோ விசாலத்திற்கு நிறைய நிம்மதி..

அவருடைய மகனுக்கு எப்பொழுதும் இந்த சொத்துக்கள் மீது அத்தனை பிரியம் இல்லை, அதனாலே மருமகளை காய்ந்து கொண்டு இருந்தார்.. விசாலத்தின் பேரனோ தன் மனைவி வீட்டு பக்கம் சென்று சேர்ந்துவிட்டான்..

இப்படி எல்லாம் இருக்கும் பொழுது தான், வயது ஆக ஆக விசாலத்திற்கு கவலை வேறு இத்தனை சொத்துக்களையும் யார் பொறுப்பாய் பார்த்துக்கொள்வார்கள் என்று.. அதனால் தான் அவர் தூரத்து உறவான முகேஷை இங்கு வர வைத்தது..

மிதிலாவிற்கு இவனை கட்டி வைத்துவிட்டால் பிறகு ஜெகதாவையும் தன் வழிக்கு கொண்டு வந்து விடலாம் என்று எண்ணினார்.. ஆனால் நடந்தது எல்லாமே வேறு.. இதில் அவரது தம்பியின் உயில் வேறு பிரச்சனை கிளப்பியதும் ஆடித்தான் போனார் விசாலம்..

எங்கே இது தான் வாய்ப்பு என்று எண்ணி ஜெகதா தன்னை பலி வாங்கி விடுவாரோ என்று மனதினுள்ளே அஞ்சினார்.. ஆனால் ஜெகதாவோ இதில் எந்த பிரச்சனையும் எழுப்பாமல் அமைதியாய் இருந்தது அவரை யோசிக்க வைத்தது.. அதுவும் இல்லாமல் தன் பாட்டியின் நிம்மதிக்காக இந்த பிரச்சனையை ரகுநந்தன் அழகாய் கையாண்டது அவரை இன்னும் தொட்டது..

“ எனக்கும் தான் மகன், மருமக, பேரன் இப்படி எல்லாம் இருக்காங்க.. ஆனா ஜெகதா கிட்ட இருக்க அமைதி ஏன் எனக்கு இல்லை ???” என்ற கேள்வி வெகுவாக வந்து அவரை தாக்கியது..

இதற்கு நடுவில் ரகுநந்தன் வேறு அவ்வபோது அவரை சந்தித்து பேசினான்.. இந்த சொத்துக்கள் மீதும் அதை நிர்வகிப்பதன் மீதும் அவனுக்கு சில பல சந்தேகங்கள் இருந்தன.. முதலில் ஜெகதவிடம் தான் கேட்டான். ஆனால் அவரோ விசாலத்தை கை காட்டி விட்டார்..

இப்படியாக இரண்டு குடும்பத்திற்கு இடையில் இருந்த ஒரு திரை விலகியது.. அதிலும் ரகுநந்தனுக்கு விசாலம் தன் அன்னையை பற்றி எதாவது பேசினால் அவனும் நேரம் காலம் தெரியாமல் பேசிக்கொண்டு தான் இருப்பான்..

தன் பேரனிடம் கிடைக்காத நேரமும், நெருக்கமும் ரகுநந்தனிடம் கிடைத்ததில் விசாலம் சற்றே அமைதி அடைந்து இருந்தார்.. இடையில் மிதிலாவோடு பிரச்சனை ஆரம்பமான பின்னர் தான் விசாலத்தை காண செல்லாமல் இருந்தான்.. ஆனால் இப்படி ஒரு சூழ்நிலையில் அவரை காண்பான் என்று அவன் நினைக்கவில்லை..

“ என்ன நான் கேட்டுட்டே இருக்கேன், ரெண்டு பேரும் இப்படி முழிச்சா என்ன அர்த்தம்.. என்ன நந்து, நீ அந்த பக்கமே ஆளை காணோம்?? போன் பண்ணா கூட எடுக்கலை.. என்ன உன் பொண்டாட்டி போக வேண்டாம்னு சொல்றாளா ???” என்று வேண்டுமென்றே மிதிலாவையும் இழுத்தார்..

“ கிழவிக்கு குசும்பு குறையலை “ என்று எண்ணிய மிதிலா “ இல்லை பாட்டி நான் இப்போ மறுபடியும் மில்லுக்கு போறேன். அவருக்கும் வேலை சரியா இருக்கு..” என்று இழுத்தாள்..

“ ஹ்ம்ம்..!!! உள்ள ஜெகதவை படுக்க வச்சிட்டு இங்க என்ன ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டு இருக்கீங்க??”

இதற்கென்ன பதில் கூற முடியும்.. இருவரும் ஒருவரின் முகத்தை மற்றொருவர் பார்த்தபடி நின்றனர். அப்பொழுது அங்கே வந்த நர்ஸ் மீண்டும் ஜெகதா உறக்கத்தில் புலம்புவதாய் கூறவும் அனைவரும் அங்கே விரைந்தனர்.. 

மீண்டும் ஜெகதா பழைய பல்லவியை ஆரம்பித்திருந்தார்… அதையெல்லாம் கேட்க கேட்க விசாலத்தின் முகமும் மாறியது… திரும்பி கணவன் மனைவி இருவரின் முகத்தையும் கூர்ந்து பார்த்தார்.. பின் என்ன நினைத்தாரோ “ நான் வெளியே இருக்கேன் ஜெகதாவ சமதானம்  பண்ணிட்டு வாங்க கொஞ்சம் பேசணும்..” என்றுவிட்டு சென்றுவிட்டார்..

“இவங்க என்ன நம்மகிட்ட பேசணும் ??” என்று யோசித்தபடியே நந்தனும், மிதிலாவும் ஜெகதாவிடம் மெல்ல மெல்ல பேசி அவரை சற்றே அமைதி படுத்தி தூங்க செய்தனர்..

விசாலம் என்ன கூற போகிறாரோ என்று நினைக்கும் பொழுதே மிதிலாவிற்கு தலை சுற்றியது.. புதிதாய் ஒரு பூகம்பம் கிளம்ப கூடாதே என்ற எண்ணம் அவளுக்கு.. அவளையுமறியாமல் அவளது கைகளை நந்தனின் கரங்களை பிடித்துக்கொண்டன..

மிதிலாவின் தொடுகையில் படக்கென்று திரும்பியவன் அவளது முகத்தை பார்த்தே தன் மனைவியின் மனதை புரிந்துக்கொண்டான்..

“ பயபடாத அவங்க எதுவும் பிரச்சனை செய்ய மாட்டாங்க “ என்று ரகுநந்தன் சொன்ன பிறகே தான் அவன் கைகளை பிடித்திருப்பது உணர்ந்து கைகளை உருவ முயன்றால் ஆனால் இப்பொழுது பிடி அவனதாகி இருந்தது..

“ ஸ்!! சைலென்ட்டா வா…” என்று அவன் அரட்டிய பிறகு அவளும் அமைதியானாள்..

“ என்ன பாட்டி என்ன பேசணும் ??” என்று நேரடியாய் விசயத்திற்கு வந்தான் ரகுநந்தன்..

“ உங்களுக்குள்ள என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியாது.. தெரியவும் வேண்டாம்.. ஆனா எனக்கு ஜெகதாவ சின்ன பிள்ளைல இருந்து நல்லா தெரியும் அதுனால சொல்றேன்.. ஜெகதா வாழ்கையில எத்தனையோ கஷ்டமான சூழ்நிலை எல்லாம் பார்த்திருக்கா.. அதுல நிறைய என்னால வந்தது.. ஆனா எந்த மாதிரி ஒரு சூழ்நிலையிலும் அவ இப்படி புலம்பினது இல்லை.. சோ, இத்தனை நாள் இல்லாத பிரச்சனை ஒன்னு அவ மனசில வேதனை படுத்தியிருக்கணும்.. அதாவது உங்க சம்பந்தபட்டதா இருக்கனும். அப்படிதானே…” என்று அவரும் நேராய் விஷயத்தை கேட்டு நிறுத்தவும் இருவருக்கும் என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை..

“ இன்னும் உனக்கு ஏன் உங்கம்மா இங்க எல்லாத்தையும் விட்டு அங்க போனான்னு தெரியாது இல்லையா ?? அப்புறம் மிதிலா உனக்கும் ஜெகதாவோட வாழ்க்கை பத்தி தெரியாது இல்லையா ??”

இருவரும் ஒரே போல இல்லையென்று தலை ஆட்டினர்..

“ ஏன் ??? நீங்க எதுவும் கேட்கலையா ஜெகதாகிட்ட ???”

“ இல்லை.. அது.. பாட்டி கிட்ட நாங்க ஏதாவது கேட்டா அவங்க பழசை எல்லாம் எண்ணி டென்சன் ஆவாங்கன்னு தான் எதுவும் கேட்கல “ என்று மிதிலா கூறவும், நந்தனும் அதை ஆமோதித்தான்..

“ தப்பு பண்ணிட்டிங்க பசங்களா.. கேட்டிருக்கணும்.. கேட்டிருந்தா அவ மனசில இருந்த பாரம் குறைஞ்சிருக்கும்.. உங்களுக்கும் வாழ்க்கை எப்படி வாழனும் ஒரு தெளிவு வந்திருக்கும். சரி விடுங்க நானே சொல்றேன் ” என்று ஆரம்பித்தவர் இருவரின் முகத்தையும் பார்த்தார்..

“ உட்கார்ந்து பேசலாம் பாட்டி “ என்று மிதிலா கூறவும் மூவரும் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தனர்..

“ உங்கப்பாக்கும் லீலாக்கும் லவ் மேரேஜ் தான் நந்து.. இந்த விசயத்தில எனக்கு ரொம்ப கோவம்.. வழக்கம் போல ஜெகதா என்னை தோற்கடிக்க தான் இப்படி சம்பந்தம் பேசியிருக்கான்னு நான் என் தம்பிகிட்ட ரொம்ப சண்டை போட்டேன்.. ஆனா என் எதிர்ப்பையும் மீறி அந்த கல்யாணம் நடந்தது..

உங்கம்மாவும், உங்கப்பாவும் சந்தோசமா தான் இருந்தாங்க.. ஆனா லீலா வீட்டில் ஒரு பெண்ணா வளந்தவ, கூடவே கொஞ்சம் பிடிவாதம் வேற.. இதெல்லாம் சேர்ந்து உங்க அம்மா அப்பா ரெண்டு பேருக்கும் நடுவில் சின்ன சின்ன சண்டைகள் வர ஆரம்பிச்சது.. அப்பப்போ கோவிச்சுக்கிட்டு என் தம்பி வீட்டுக்கு வருவா உங்கம்மா..

அப்புறம் ரெண்டு நாள் கழிச்சு உங்க அப்பா வந்து சமாதானம் ஆகி திரும்ப போவாங்க.. இதை நான் எனக்கு சாதகமா மாத்திகிட்டேன்.. உன் அம்மாக்கு நிறைய தூபம் போட்டேன்.. இப்போ நினைச்சா எனக்கே அசிங்கமா இருக்கு.. இதனால உங்கம்மா அப்பாக்கு மட்டுமில்ல லீலா ஜெகதா கூடவும் சண்டை போட ஆரம்பிச்சா..

எரியுற நெருப்பில் குளிர் காய்கிற மாதிரி நானும் லீலாவை பார்க்க அடிக்கடி உங்க வீட்டுக்கு போவேன்.. ஜெகதா பொறுத்து பொறுத்து பார்த்துட்டு ஒருநாள் லீலாவை திட்டியிருக்கா.. அன்னிக்கு தான் இன்னொரு விஷயமும் தெரிஞ்சது உங்கப்பாக்கும் வேற ஒரு பொண்ணுக்கும் தொடர்பு இருக்குன்னு..

இதை யாருமே எதிர்பார்க்கலை.. லீலா நொந்து போயிட்டா.. ஜெகதாவை கேட்கவே வேண்டாம்.. வீடே மயான அமைதியா இருந்தது.. வீட்டில் ஒரே சண்டை.. கடைசியில் லீலாவும் ஜெகதாவும் சொல்ல சொல்ல கேட்காம உன் அப்பா அந்த பொண்ணு கூட போயிட்டார்..

ஆனா எதிர்பார்க்காத விதமா போன இடத்துல விபத்து நடந்து அவங்க ரெண்டு பேருமே இறந்து போயிட்டாங்க.. என்னை விட்டு போயிட்டாரேன்னு கோவமா இருந்த உங்கம்மா இந்த செய்தியை கேட்டு இடிஞ்சே போயிட்டா.. கோவத்தை எல்லாம் ஜெகதா மேல காட்டினா.. எல்லாம் உங்கனால தான்.. உங்க பிள்ளைய நீங்கதான் கண்டிக்காம விட்டிங்கன்னு அப்படி ஒரு சண்டை..

அப்போ இருந்த நிலைமையில நானும் ரொம்ப பேசிட்டேன்.. ஜெகதா பிள்ளையும் பறிகொடுத்து, மருமககிட்டையும் இப்படி பேச்சு வாங்கி, உயிரையே வச்சிருக்கிற பேரனையும் பிரிஞ்சு ஆதரவா பேச ஒரு ஆள் கூட இல்லாம ரொம்ப நொந்து போயிட்டா.. கொஞ்ச நாள் வந்து லீலா என் தம்பி வீட்டில் இருந்தா.. இது தான் நல்ல நேரம்னு, நான் உங்கம்மாவை என் மகனுக்கு மறுபடியும் சம்பந்தம் பேசினான்..

ஆனா லீலா மனசில் என்ன நினைச்சாலோ அவ பிரன்ட் இருக்கான்னு சொல்லி கொஞ்ச நாள் தங்கிட்டு வரதா சொல்லிட்டு அங்க வந்தா..  கொஞ்சம் கொஞ்சமா என எல்லார் கூடவும் பேசுறதை கம்மி பண்ணிட்டா. ஆனா அதுக்கப்புறம் அவ அப்பா இறந்ததுக்கு வந்தா.. பிறகு வரவே இல்லை..

எங்கிட்டயும் எந்த உறவும் இல்லை.. அங்கேயே தங்கிட்டா.. ஆனா ஜெகதா கொஞ்ச நாள் ஒடுங்கி போயிருந்தா.. அவளுக்குன்னு யாருமே இல்லாம தனியா இருந்தா.. பிறகு என்ன நினைச்சாலோ மிதிலாவை தத்தெடுத்தா.. அதுக்கு பிறகு அவ வாழ்க்கையே மாறிடுச்சு.. இதையும் நான் ரொம்ப கிண்டல் பண்ணி, அவளை ரொம்ப குத்தி குத்தி பேசினேன்..

ஆனா அதையெல்லாம் ஜெகதா பெருசா நினைக்கவே இல்லை.. ஏன்னா அவ உலகமே மிதிலான்னு மாத்திகிட்டா.. ஆனா என்னிக்காவது ஒருநாள் நீயும் உங்கம்மாவும் இங்க வருவிங்கன்னு அவ நம்புனா.. ஹ்ம்ம் நான் பண்ண வேளைக்கு லீலாகிட்டையும் மன்னிப்பு கேட்டு இருக்கனும் ஆனா விதி இப்படி ஆயிடுச்சு.. ஆனா நல்ல விஷயம் என்னன்னா உன்னை இங்க போக சொன்னது.. ஜெகதாவோட இத்தனை நாள் காத்திருப்புக்கு ஒரு பலன் கிடைச்சதுன்னு நினைச்சேன்..” என்று கூறி பெருமூச்சு விட்டவரை விழிகள் இமைக்காது பார்த்தனர் இருவரும்..  

“ என்ன அப்படி பார்க்குறிங்க ?? இந்த கிழவி செய்றதை எல்லாம் செய்துட்டு இப்போ நல்லவ மாதிரி பேசுறாலேன்னா ?? ஹ்ம்ம் சில நேரம் வாழ்க்கை நமக்கு சில பாடங்களை சொல்லி தரும்.. நம்ம தான் புரிஞ்சு நடந்துக்கணும்.. எனக்கு அந்த புரிதல் ரொம்ப லேட்டா வந்திருக்கு அவ்வளோ தான்.. நான் சொல்றதை எல்லாம் சொல்லிட்டேன்.. இனிமே பார்த்து நடந்துக்க வேண்டியது உங்க பொறுப்பு.. ஜெகதாவை நான் கேட்டதா சொல்லுங்க.. வீட்டுக்கு வந்து ஒருநாள் பார்க்கிறேன் ”  என்று சொல்லி செல்பவரை ஆச்சரியமாய் பார்த்தனர் இருவரும்..

விசாலம் கூறியதை எல்லாம் கேட்கவும் தான் ஜெகதாவின் மனம் எத்தனை துன்பங்களை தாங்கியிருக்கும் என்று எண்ண தோன்றியது..

மிதிலா “ பாட்டி எத்தனை கஷ்டங்களை தாண்டி எதையுமே வெளிய காட்டாம எப்படிதான் இத்தனை நாள் இப்படி இருந்தாங்களோ.. ஆனா நான் ஒரு பிரச்சனைக்கே இப்படி இவ்வளோ ரியாக்ட் பண்ணிட்டேன்.. ச்சே எவ்வளோ வேதனை பட்டிருப்பாங்க.. நானும் கொஞ்சம் இவன் சொன்னதை காது கொடுத்து கேட்டு இருக்கணுமோ??” என்று நினைத்தாள்..

ரகுநந்தனோ “ இப்போதான் புரியுது, லிசி கூட இருக்க போட்டோ பார்த்துட்டு எங்க அப்பா மாதிரியே நானும் நடந்திடுவேனோன்னு பயந்துட்டாங்க போல. ஆனா பாட்டி ரியலி கிரேட்.. என்ன நடந்தாலும் சரி இனிமே பாட்டி மனசு கஷ்டப்படக்கூடாது “ என எண்ணினான்..                                                    

                                                                                                                                      

    

Advertisement