Advertisement

       நேசம் – 23

“ இப்போகூட சதிஸ்காகதான் என்னை நல்லபடியா நடந்துக்க கேட்கிறிங்க.. எனக்காக இல்லை.. உங்களை சொல்ல கூடாது என்னை தான் சொல்லணும். ஏன்னா முட்டாளா இருந்தது நான்தானே.. நீங்க சரியா தான் நடந்துகிட்டிங்க. ஆனா எனக்கு தான் இதை எல்லாம் புரிஞ்சுக்க முடியல.. உங்களுக்கு என்மேல இருந்தது லவ் இல்லை ஜஸ்ட் லஸ்ட் தான்… “ என்று மிதிலா கண்ணீர் மல்க கூறியது இப்பொழுதும் ரகுநந்தனின் கண்முன்னே வந்து போனது…

கண்களை இறுக மூடி திறந்தான்… சதிஸ் வந்தும் நான்கு நாட்கள் மேல் ஆனது அவனுக்காகவும், ஜெகதாவிற்காகவும் இருவரும் ஒரே அறையில் தான் இருந்தனர்.. நன்றாய் தான் பேசினர் பிறர் முன். அறைக்குள் நுழைந்துவிட்டால் நீ யாரோ நான் யாரோ தான்..

புதிதாய் கட்டிய வீட்டிற்கும் பழைய வீட்டை புதுப்பித்ததற்கும் தெரியும் வித்தியாசம் தான் இவர்களுக்கும். முன்பு இயல்பாய் இருந்ததற்கும், இப்பொழுது இயல்பாய் இருப்பதை போல் காட்டிக்கொள்வதற்கும் நிறைய வித்தியாசம் தெரிந்தது.. அது அனைவரின் மனதிலும் பதிந்தது..

ஜெகதா யாரும் அறியாமல் சதிஸிடம் இவர்கள் பிரச்சனை சரியாகும் வரை இங்கேயே இருக்கும்படி கூறிவிட்டார்.. அவனுக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை ஆனால் எதோ ஒரு பிரச்சனை என்று மட்டும் தெரிந்தது.,. ஜெகதா கோகிலா இருவரும், கணவன் மனைவி இருவரிடமும் வித விதமாய் கேட்டு பார்த்துவிட்டனர், ஆனால் பதில் பூஜ்ஜியமே..

மிதிலா பழையபடி ஆலைக்கு செல்ல தொடங்கியிருந்தாள்.. அவளது விருப்பம் போல தான் இருந்தாள்.. இருந்தாலும் தன்னை ஒரு வெறுமை சூழ்வதை உணரும்போது அவளது நெஞ்சின் வெடிப்பை அடக்க மிகவும் சிரமமாய் போனது..

எத்தனை முறை, எத்தனை வழிகளில் ரகுநந்தன் அவளை நெருங்க முயன்றாலும் வார்த்தைகளால் அவனை வாட்டி எடுத்தாள்..

மிதிலாவின் இந்த ஒதுக்கத்தை ரகுநந்தனால் ஏற்றுகொள்ளவே முடியவில்லை.. அவனுக்கு காலையில் எழுந்ததில் இருந்து இரவு உறங்கும் வரை மிது வேண்டும். அனைத்திற்கும் அவளது அருகாமை இருக்கவேண்டும்.. அப்படி இருந்தவனுக்கு இவளின் இந்த திடீர் விலகல் திக்குமுக்காட வைத்தது..

ஒருநாள் இரவு தாங்கமுடியாமல் “ ப்ளீஸ் மிது… இனிமே நான் அப்படியெல்லாம் இருக்கவே மாட்டேன்.. ஐம் ரியலி சாரி மிதும்மா.. என்.. எனக்கு நிஜமாவே உன்னை ரொம்ப பிடிக்கும் டா.. ப்ளீஸ் மிது… எனக்கு நீ இல்லாம இருக்கவே முடியலை.. நீ என்னை அடிக்ட் பண்ணி வச்சிருக்க மிது..” என்று கூறியபடி அணைத்தான்.

“ச்சி என்ன பண்றிங்க ?? என்னை விடுங்க.. “ என்று கடிந்தபடி அவனிடம் இருந்து திமிறினாள்..

“ நோ மிது.. ஐ கான்ட் ஹான்டில் திஸ்… எனக்கு நீ வேண்டும் மிது.. நீ நீ இல்லாம என்னால இருக்க முடியல மிது…” என்று கூறினான்.. அவன் கூறியது,  அவன் மனதில் இருக்கும் காதலை வைத்து.. ஆனால் மிதிலாவோ சரியாய் தவறாக புரிந்துகொண்டாள்..

“ ஏன்.. ஏன் முடியல.. உங்களுக்கு தான் என் மனசு முக்கியம் இல்லை.. இப்போகூட என் உடம்பு தான்.. “ என்று அவள் கூறி முடிக்குமுன்னே அவள் கன்னம் எரிந்தது.. அடித்திருந்தான்..

கன்னத்தில் கை வைத்து அவனை திகைத்து பார்த்தாள்… கண்களில் இருந்து நீர் வழிந்தது.. அவளது பார்வை அவனை என்ன செய்ததோ, உடனே

“ ஐம் சாரி பேபி.. ப்ளீஸ்… ஐம் ரியலி சாரி டியர்..” என்று மீண்டும் அவள் அருகில் நெருங்கவும் முன்னை விட வெகுவாய் விலகினாள் மிதிலா..

“ என் கிட்ட வராத.. நீ.. நீ முதல்ல என் மனசை கொன்னுட்ட.. இப்போ இப்போ அடிச்சு என்னை கொள்ள பார்க்கிற இல்ல.. நான் உன் மேல பாசம் வச்சது தான் தப்பா…??? உனக்கு அந்த லிசி போனது அவ்வளோ கஷ்டமா இருந்ததுன்னா அவளையே தேடி பிடிச்சு கல்யாணம் கட்டியிருக்க வேண்டியது தானே.. என்னை ஏன் இப்படி?? மனசில கொஞ்சம் கூட காதலே இல்லாம  எப்படி உன்னால என்கூட வாழ முடிஞ்சது???” என்று விசும்பியபடி கேட்டவளை பதில் கூற முடியாமல் பார்த்தான் ரகுநந்தன்..

“என்ன பார்க்கிற?? எனக்கு தெரியும் உன்கிட்ட பதில் இல்லை.. உன் மனசில கொஞ்சமாது என் மேல நேசம், பாசம் எல்லாம் இருந்தா இப்படி நீ என்னை அழ விடமாட்ட.. நீ உன் தேவைக்காக தானே என்னை கல்யாணம் பண்ணிகிட்ட.. அதான் இப்பவும் என்கிட்டே வர.. “ என்று அவள் பாட்டில் பேசிக்கொண்டே போனாள்..

“ ப்ளீஸ் மிது  கொஞ்சம் நம்ம எப்படி இருந்தோம்னு நினைச்சு பாரேன் மிதும்மா.. நான் உன்னை கண்ட்ரோல் பண்ணது எல்லாம் ஓவர் தான். தப்பு தான் டா.. ஆனா அது உன்னை அடக்கிவைக்கணும்னு இல்லை, உன் மேல இருந்த அதிகபடியான அன்பால வந்தது மிது ப்ளீஸ்… நீ என் கூட சந்தோசமா தானே மிது இருந்த ??” என்று அவன் பேசி முடிக்கவில்லை

விலுக்கென்று நிமிர்ந்து பார்த்த மிதிலா “ சந்தோசமா ?? சந்தோசம்னு நீ எதை சொல்ற ?? இதோ இந்த பெட்ல நம்ம ஒன்னா இருந்தமே அதையா ?? ச்சி உனக்கு இதை சொல்ல வெட்கமா இல்லை… இந்த சந்தோசம் புருஷன் தான் பொண்டாட்டிக்கு கொடுக்கணும்னு இல்லை… யாருவேணா “

“ மிதிலா !!!!!” அலறியே விட்டான்…       

ஒரு அளவுக்கு மீறி ரகுநந்தனால் அவள் பேசுவதை எல்லாம் கேட்கவே முடியவில்லை.. அவனை பொருத்தமட்டில் அவனுக்கு மிதிலா வேண்டும்.. அவனது காதலை எப்படி இவளுக்கு புரியவைப்பது என்று அவனுக்கு தெரியவில்லை.. என்ன பேசினாலும் அதற்கு குதர்க்கமாய் ஒரு அர்த்தம் கண்டுபிடித்து பேசுகிறாள்.

இவள் பேசுகிறாளே என்று இவனும் பதிலுக்கு பதில் ஏதாவது பேசினால் இப்படி அழ ஆரம்பித்து விடுகிறாள். அவள் திட்டுவதை கூட பொறுத்துக்கொண்ட ரகுநந்தனால் அவளது அழுகையை தாங்க முடியவில்லை..

தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான். அவளது விசும்பலோ நின்றபாடில்லை.. என்ன கூறியும் சமாதானம் ஆகாமல் இருப்பவளை என்னவென்று கூறுவது..

அவளையே பார்த்தபடி இருந்தான்.. இந்த பிரச்சனையால் அவனது வேலை கூட சரிவர செய்ய முடிவதில்லை. நல்லவேளை மிதிலா ஆலையின் பொறுப்பை மறுபடி ஏற்றது என்று கூட தோணியது.. இன்னும் சிறிது நேரம் இதே அறையில் இருந்தால் தன்னை மீறி ஏதாவது பேசிவிடுவோம் என்று தனக்கே பயந்து வேகமாய் வெளியேறினான்..

“ என்ன பேசிட்டா… நான்.. நானா?? என் தேவைக்கு கல்யாணம் பண்ணேன்னு சொல்றா.. ஓ !! காட்.. “

“ நீ பண்ணதும் தப்புதானே.. ஒருநாள் ஒரு பொழுதாவது அந்த பொண்ணு மேல நீ பாசமா ஏதாவது பேசியிருக்கியா ?? மனசுக்குள்ள எல்லாம் இருந்தா பத்தாது.. வெளிய சொல்லணும். இல்லைனா எப்படி புரியும்..” என்று நேரம் காலம் பாராமல் அவனது மனம் இடித்துரைத்தது..

“ என்ன பண்றது.. எனக்கு இருக்கும் நேரமே சதிஸ் இங்க இருக்கும் வரைக்கும் தான் அதுக்கப்புறம் நிச்சயம் மிது இந்த அளவு கூட என்கிட்டே பேசமாட்டா.. ஏதாவது செய்யணும்.. ஏதாவது செய்தே ஆகணும்..” என்று தீவிரமாய் உருப்போட்டான்.. ஆனால் என்ன யோசித்தும் என்ன செய்து மிதிலாவின் கோபத்தை தணிப்பது என்று தெரியவில்லை..

முதலில் அவளுக்கும் கோவம் என்பதை விட கவலை, வேதனை தான் மிகுந்து இருந்தது.. நான் இவனை எப்படி நினைத்திருந்தேன் ஆனால் இவனோ என்னை இப்படி சில காரணகளுக்காகவா திருமணம் செய்தான்??? என்னை நெருங்கும் போதும், அணைக்கும் போதும் கூடவா இவனுக்கு என் மீது காதல் தோன்றவில்லை?? இந்த எண்ணம் தான் அவளை போட்டு அரித்துக்கொண்டு இருந்தது..

அப்படியென்றால் எந்த எண்ணத்தில் என்னை நெருங்கினான் ?? மிது மிது என்று இழைந்தானே, அதெல்லாம் பொய்யா ?? இல்லை என்னை நம்ப வைக்கும் நாடகமா ?? இவனிடம் நான் மயங்கி கிடந்த பொழுது என்னை பற்றி என்ன நினைத்திருப்பான்.. நினைக்க நினைக்க மிதிலாவின் மனமோ மிகுந்த வேதனை அடைந்தது..

கண்ணிருந்தும் குருடியாய் இத்தனை நாள் இருந்தது போதும் என்று முடிவிற்கு வந்திருந்தாள்.. அவன் மனதில் இருக்கும் நேசத்தை அவள் நம்ப தயாராய் இல்லை. விசயம் வெளியில் தெரிந்துவிட்டது என்று இவன் பொய் கூறுவதாகவே அவள் மனதிற்கு பட்டது.

இப்படி இருவரும் வெவ்வேறு திசையில் யோசிக்க இவர்களை காண வந்த சதிஸோ இருவருக்குள்ளும் என்ன பிரச்சனை என்பதை அறிய முயன்றுக்கொண்டு இருந்தான்..

“ என்ன நடந்திருக்கும்.. இவனை நான் முன்னமே சொன்னேன் முதல்ல உன் மனசில இருக்கிறது லவ்வான்னு பாரு அப்புறம் கல்யாணம் பண்ணுன்னு.. எல்லாத்தையும் சொதப்பி வச்சிருக்கான்.. அன்னிக்கு பெரிய இவன் மாதிரி பேசுனான் இப்போ பார் இப்படி நடுராத்திரி தோட்டத்தில் இருக்கான்..” புலம்பியபடி ரகுநந்தனிடம் சென்றான்..

அருகில் நெருங்கிய பிறகு தான் தெரிந்தது ரகுநந்தன் அழுகிறான் என்று.. “ டேய்.. மச்சி.. டேய் ராக்கி.. என்னடா என்ன அழுதுட்டு இருக்க ?? வாட் ஹேப்பன் டா “ என்று தோள் பற்றிய தோழனை இறுக கட்டிக்கொண்டான்..

“ டேய் ராக்கி.. என்ன மென் இது… இப்படி பண்ணிட்டு இருக்க ??” என்று சதிஸ் கேட்க கேட்க அவனது அழுகை கூடியது..

சரி அவனது வேதனை குறையுமட்டும் அழுகட்டும் என்று நினைத்திருந்தான் சதிஸ்.. அவனது அன்னை இறந்த பொழுது அழுதது. இங்கு வந்தபிறகு அவனது மனதை முழுவதும் ஆக்கிரமித்தது மிதிலா மட்டுமே..

இன்றும் இந்த அழுகைக்கு காரணம் மிதிலாமட்டுமே..

“ டேய் போதும் டா மச்சி… ராக்கி போதும் டா…” என்று சமாதானம் செய்தான்..

“ என்னால முடியலை டா.. நான் நிஜமாவே மிதுவ ரொம்ப லவ் பண்றேன் டா மச்சி.. இதை நானே உணரல டா.. “

“ சரி அதுக்கு ஏன் டா என்னை கட்டி பிடிச்சு அழுகுற ?? மிதிலாகிட்ட சொல்லவேண்டியது தானே டா ” என்று தன்னையும் அறியாமல் லேசாய் நக்கல் அடித்தான்..

“ உனக்கு கூட என்னை பார்த்தா கிண்டலா இருக்குல டா…” என்று முகம் திருப்பினான்..

அங்கே நண்பர்களோடு வாய்க்கு வாய் நக்கல் கிண்டல் கேலி பேசும் ராக்கி இன்று சிறிய பேச்சுக்கே முகம் சுருக்குகிறான்..

“ ஹ்ம்ம் !!! என்ன மச்சி.. திஸ் இஸ் நாட் யுவர் நேட்சர்.. என்ன பிராப்ளம்ன்னு சொல்லு டா.. அப்போதானே சால்வ் பண்ண முடியுதான்னு பார்க்க முடியும் “ என்று உற்ற நண்பனாய் வினவினான்..

சொல்வதா வேண்டாமா என்று சிறிது நேரம் யோசித்தான் ரகுநந்தன். ஆனால் இன்று மிதிலா பேசிய பேச்சால் அவன் மனம் மிகவும் பாதிக்கபட்டு இருந்தது.. யாரிடமாவாது கூறினால் சற்று மனம் சமன்படும் என்று நினைத்து நடந்த அனைத்தையும் கூறினான்..

தன்னை பற்றி நண்பன் தவறாய் எண்ணினாலும் பரவாயில்லை என்று அனைத்தையும் சொல்லி முடித்தான்.. ஆனால் இப்பொழுதும் கூட லிசி என்ன தவறு செய்தாள் என்று கூறவே இல்லை..

ரகுநந்தன் கூறிய அனைத்தையும் பொறுமையாய் கேட்ட சதிஸிற்கு சிரிப்பதா இல்லை இவனை திட்டுவதா என்று புரியவில்லை. யாரோ ஒருவர் செய்த தவறுக்கு வேறு யாரோ பலனை அனுபவிக்கின்றனர்..

“ ஹ்ம்ம் நீ சொன்னது எல்லாம் இருக்கட்டும், லிசி என்ன பண்ணுனா?? அதை ஏன் டா இப்பவர சொல்லாம இருக்க?? அவ பண்ணுன தப்புக்கு இப்போ மிதிலா ஏன் டா தண்டனையை அனுபவிக்கனும்.. ஒழுங்கா சொல்லு டா லிசி என்ன பண்ணா ??” கோவமாய் கேட்ட நண்பனை வெறித்து பார்த்தான் ரகுநந்தன்..

“ என்ன அப்படி பார்க்கிற ?? அப்படி பார்த்தா நான் எதுவும் கேட்கமாட்டேன்னு நினைச்சியா ?? ஆன்சர் மீ மேன்.. “

“ இல்லை சதிஸ் வேண்டாம்.. சொல்ல போனா அது அவளோட பெர்சனல்.. அவ பண்ணது தப்பு தான்.. ஆனா நான் அதை மிதிலாவோட இணைச்சு பார்த்திருக்க கூடாது.. இந்த விசயத்தில தப்பெல்லாம் என் மேல தான்.. நான் தான் எல்லாரையும் தப்பா புரிஞ்சுகிட்டேன்.. மிதிலாகிட்ட இருக்க என் அன்பை நானே உணராம இருந்தது தான் பெரிய தப்பு டா.. “ என்று தத்துவம் பேசிக்கொண்டு இருந்தவனை முறைத்து பார்த்தான் சதிஸ்..

“ என்ன டா… முறைக்கிற ???”

“ பின்ன நீ இப்படி பேசுறதுக்கு முறைக்காம?? நல்ல வேலை லிசி என்கூட வரலை. உனக்கு தெரியுமா நான் இந்தியா போறேன்னு சொன்னதுமே என்னை ஒருவழி செய்து எடுத்துட்டா.. இந்த ராக்கி மேரேஜ்க்கு தான் இன்வைட் பண்ணல இருந்தாலும் ஐ வான்ட் டு மீட் ஹிம் அப்படின்னு என்னை படுத்தி எடுத்துட்டா.. நல்ல வேலை அவளுக்கு, அவ புது நீக்ரோ பிரன்ட் கூட டேட்டிங்காம்.. ஹப்பா விட்டது தொல்லைன்னு நான் வந்துட்டேன்.. எனக்கு இப்போ வரைக்கு ஒன்னு மட்டும் புரியலை டா நீ எப்படி டா அந்த லிசியை போய் அவளோ சிரியஸா லவ் பண்ண ???” என்று கோவம் பாதி நக்கல் பாதியாய் கேட்ட தன் நண்பனை ஆழ்ந்த பார்வை பார்த்தான் ரகுநந்தன்..

“ ஹலோ என்ன இப்படி பார்க்கிற ?? கேள்வி கேட்டா பதில் சொல்லணும் டா.. சரி உனக்கு பதில் சொல்ல பிடிக்கலையா விடு.. உன் பிரச்சனைய நீயே பார்த்துக்கோ நான் வந்தது உங்க எல்லாரையும் பார்க்க தான். பார்த்துட்டேன்.. மிச்ச நாளுக்கு இந்தியாவை ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு கிளம்புறேன்..” என்று எழுந்து சென்ற நண்பனை கை பிடித்து தடுத்தான்..

“ ப்ளீஸ் டா.. நீ கேட்ட எந்த கேள்விக்கும் என்கிட்டே பதில் இல்லைடா.. அந்த நேரத்தில் எனக்கு லிசியை பிடிச்சது.. நான் அந்த ரிலேஷன்ஷிப்ல ட்ரூவா இருந்தேன்.. பட் இப்போதான் புரியுது அவளோட என் வாழ்க்கை இருந்திருந்தா நிச்சயம் நரகமா இருந்திருக்கும்னு..”

“ ஓ !!! இப்போ மட்டும் உனக்கு ஹெவன்ல இருக்கிறதா நினைப்பா டா..?? முதல்ல தத்துவம் பேசுறதை நிறுத்து.. நீயா தப்பு தப்பா புரிஞ்சி எதுவோ பண்ணிட்ட.. அதை சரி செய்யணும்.. மிதிலாக்கு இப்போவாது உன் லவ்வை சரியான வழியில புரிய வைக்கனும். அவ திட்டறா, முறைக்கிறா அப்படின்னு நீயும் விலகி இருந்தா இன்னும் கொஞ்ச நாள்ல இந்த விலகலே உங்க ரெண்டு பெருக்கும் பழகி போயிடும்.. இதுக்கு மேல நான் சொல்ல என்ன இருக்குடா.. ” என்று
சதிஸ் கூறவும் ரகுநந்தனுக்கு புது நம்பிக்கை வந்தது..

பின் எதோ தோன்ற “ நல்ல வேளை  மச்சி லிசி வரலை.. அவ நேம்ல ஒரு லெட்டர் பார்த்ததுக்கே இப்போ இவ்வளோ ஆடுறா.. அவளை மட்டும் நேரில் பார்த்தா அவ்வளோ தான் அவளுக்கு நல்லா பூஜை நடந்திருக்கும்.. பாவம் டா என் மிது.. எனக்காக ரொம்ப பொறுமையா பொறுத்து போனா.. நான் தான்…” என்று மேலும் பேசிக்கொண்டே போனவனை இடைமறித்து

“ டேய் நல்லவனே, இப்போ எல்லாம் தான் செய்த தப்பை வெளிபடையா ஒத்துகிறதே ஒரு பேஷனா பண்ணிட்டாங்க போல.. போதும் நிறுத்து.. என்கிட்டே உன் மனசில இருக்கிறதை சொல்றது பெருசில்லை, மிதிலாகிட்ட சொல்லு. இப்போ என்னை ஆளை விடு “ என்று கூறவும் நண்பர்கள் இருவரும் வேறு பேசிக்கொண்டு லேசாய் சிரித்தபடி தங்கள் அறைநோக்கி சென்றனர்..

அங்கே மிதிலாவோ அழுது அழுது ஓய்ந்து போய் அப்படியே உறங்கியும் இருந்தாள்.. கண்ணிற் கோடுகள் கன்னத்தில்  வடிந்து காய்ந்த தடத்துடன் கீழே கால்களை மடக்கி சுருந்து போய் படுத்திருந்தவளை பார்க்கவே ரகுநந்தனுக்கு மனம் வேதனை பட்டது..

முதல் நாள் அவளை பார்த்தது இருவரும் பேசியது, ஊஞ்சலுக்காக, காருக்காக   சண்டை போட்டது இப்படி பழைய நியாபகங்கள் எல்லாம் அவனது நினைவில் வந்து போயின..

“ ஐம் சாரி பேபி.. எனக்கு நிஜமா என்ன சொல்லி உன் மனசை மாத்துறதுன்னு தெரியலை.. நீ கோவமா பேசினதை கூட என்னால தாங்க முடிஞ்சது, ஆனா நீ அழுதா என்னால தங்கவே முடியல.. அதுவும் என்னால நீ இப்படி அழுவதை பார்த்து என்னால முடியலை மிது “ என்று மெதுவாய் அவளது கன்னம் வருடினான்..

“ நான் என்னென்னவோ நினைச்சேன் தான்.. ஆனா ஒருநாள் கூட உன்கிட்ட நான் பொய்யா நடந்துகிட்டது இல்லை மிது.. ப்ளீஸ் என்னை நீ நம்பு.. என் மனசில நீ மட்டும் தான்.. நீ என்கூட இருக்கும் போது எனக்கு மனசுக்குள்ள ஒரு நிம்மதி மிது.. ஆனாலும் என்னோட பழைய அனுபவம்னால எங்க எதா ஒரு சூழ்நிலையில நீ என்னை விட்டு போயிடுவியோன்னு ஒரு பயம்.. அதுனால தான் நான் அப்படி முட்டாள் மாதிரி நடந்துகிட்டேன்.. பட் ரியலி ஐ லவ் யு மிது.. நான் எந்த ரீசனுக்காகவும் உன்னை மிஸ் பண்ண விரும்பல  மிது“ என்று தன் போக்கில் அவன் பேசிக்கொண்டே இருந்தான்..

இறுதியில் எப்பொழுது உறங்கினானோ தெரியவில்லை.. ஜென்னல் வழியே வந்த வெளிச்சம் சரியாய் மிதிலாவின் முகத்தில் படியவும், சற்றே முகம் சுருக்கி கண்களை திறக்க முடியாமல் திறந்து பார்த்தாள்.. இரவு இருந்தே ஒருமாதிரி படுத்திருந்தது அவளுக்கு எழ சிரமமாய் இருந்தது..

அதுவும் இல்லாமல் வேறு எதோ ஒன்று சற்றே வித்தியசமாய் பட என்னவென்று பார்த்தால் ரகுநந்தன் தான்.. அவளது கைகளை எடுத்து அவனது இரண்டு கைகளால் இறுக்கி பிடித்து தன் நெஞ்சில் அழுந்த வைத்திருந்தான்..

இதை பார்த்த மிதிலாவிற்கு லேசாய் புன்னகை விரிந்தது.. “ எப்பயும் சின்ன பையன் மாதிரி தான் உரசிக்கிட்டே இருக்கனும் என் நந்தனுக்கு “ என்று தன் போக்கில் எண்ணியவள் வழக்கம் போல அவனது நெற்றியில் இதழ் ஒற்ற குனிந்தாள்.. 

அப்பொழுது தான் அவளுக்கு உரைத்தது தாங்கள் இருக்கும் நிலையும் இடமும்…

“என்ன பெட்ல படுக்காம “ என்று யோசித்தவளுக்கு உறக்கத்தால் மறந்திருந்த அனைத்தும் நினைவு வந்து பதறி துடித்து அவனிடம் இருந்து விலகினாள்..

“ச்சே ஒருநிமிஷம் நான் என்ன பண்ண இருந்தேன்.. இது மட்டும் இவனுக்கு தெரிஞ்சது அவ்வளோ தான்.. என்னை எவ்வளோ கீழ நினைக்க முடியுமோ அப்படி நினைப்பான்..” என்று எண்ணியவளுக்கு முதல் நாள் இரவு அவளது உறக்கத்தில் அரைகுறையாய் கேட்ட அவனது வார்த்தைகள் எல்லாம் கோர்வை இல்லாமல் வந்து போயின..

என்னதான் முழு வாக்கியமாய் நினைவில் இல்லையென்றாலும் அவனது பேச்சின் பொருளை உணராமலா இருப்பாள் மிதிலா ??

அவளது கைகளை பிடித்து, அவளது அருகாமையில் நிம்மதியாய் உறங்குபவனின் முகத்தை பார்க்க பார்க்க மிதிலாவின் காதல் கொண்ட நெஞ்கிற்கு திவட்டவில்லை தான் ஆனாலும் அவன் செய்த அனைத்து குளறுபடியும் அப்படியே இருக்கிறதே..

அதையெல்லாம் எங்கே சென்று போடுவாள் மிதிலா ?? இல்லை இவன் தான் என்ன காரணம் கூறினாலும் அதெல்லாம் இல்லையென்று ஆகி விடுமா என்ன ??

ரகுநந்தனின் ஒவ்வொரு சிறு செயலுக்கும் மிதிலாவின் மனம் ஏங்கியது தான்.. அவனது ஒவ்வொரு தேவையையும் ஓடி சென்று செய்திட அவளது உடலும் உள்ளமும் துடிக்கிறது தான்.. ஆனால் அவன் இப்பொழுதெல்லாம் அவளை தேடவில்லையே.. அவனுக்கு தான் தேவை இல்லை என்ற எண்ணமே மிதிலாவை இன்னும் நிலைகுலைய வைத்தது..

“ நந்தன்… ஏன் பா.. ஏன் இப்படி ஒரு காரியம் செஞ்சிங்க.. நம்ம வாழ்க்கை எவ்வளோ அழகா இருந்திருக்க வேண்டியது தெரியுமா.. ஏன் நந்தன்… அப்படியா நான் உங்களை விட்டு போயிடுவேன்.. என்னால எங்க போக முடியும் சொல்லுங்க.. என் மேல அவ்வளோ தானா உங்க நம்பிக்கை.. அது சரி காதல், நேசம் எல்லாம் இருந்தா தானே நம்பிக்கை வரும்.. உங்களுக்கு தான் எதுவுமே இல்லையே “ என்று மெல்ல கூறியபடி எழுந்தாள்..

அவளது அசைவில் அவனும் உறக்கம் கலைந்தான் தான்.. ஆனால் கண்களை திறக்கவில்லை.. இன்னும் சில நொடிகள் அவள் படுத்திருந்த இடத்தில் படுத்தவன் மீண்டும் உறங்கியே போனான்.. மனதில் இருந்த அழுத்தம் அவனது உடலையும் சேர்ந்து அழுத்தியது போல..

மிதிலா குளித்து முடித்து மில்லுக்கு செல்ல தயாராகி வந்தவள் ரகுநந்தன் இன்னும் எழாதது கண்டு திடுக்கிட்டாள்.. எது எப்படியோ ரகுநந்தனுக்கு நேரம் மிகவும் முக்கியம்.. சரியான நேரத்தில் எதையும் செய்ய வேண்டும் என்று நினைப்பான்..

அப்படி இருப்பவன் இன்று கட்டாந்தரையில் இவ்வளோ நேரம் உறங்கி கொண்டிருக்கிறான் என்றால் என்ன அர்த்தம் ?? “ ஒரு வேளை உடம்பு எதுவும் சரியில்லையோ ?? இல்லையே நல்லாதானே இருந்தான்.. உடம்பு கூட சூடா இல்லையே..” என்று எண்ணியவள் அவனை எழுப்பலாமா வேண்டாமா என்ற யோசனை வந்து பட்டிமன்றம் நடத்தியது..

பின் தனக்கும் நேரமாவதை உணர்ந்த மிதிலா அவனை மெல்ல உலுக்கினாள்.. இத்தனை நாள் செல்ல சில்மிசங்களுடனும், அவளது செல்ல சிணுங்கலுடனும்  தான் பொழுது விடியும்.. இன்றோ வெறும் மௌனம் தான்..

“ ம்ம்.. ப்ளீஸ் மிது.. இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேன்..” என்றபடியே புரண்டு படுத்தவனை என்ன செய்யலாம் என்பது போல பார்த்தவள் பின் என்ன நினைத்தாலோ ஒரு தலையனையை எடுத்து அவனது தலையின் அடியில் வைத்துவிட்டு கீழே சென்றுவிட்டாள்..

“ என்ன மிதிலா நீ மட்டும் இறங்கி வர, ராக்கி எங்க ??” என்று சதிஸ் கேட்கவும் முதலில் என்ன சொல்வது என்று திகைத்தவள் ஜெகதாவின் முகமும் இதே கேள்வியை கேட்டவும்

“ அது.. அவங்க இன்னும் தூங்கிட்டு தான் இருக்காங்க சதிஸ்.. எழுப்புனேன் இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேன்னு சொன்னாங்க அதான் நான் கிளம்பி வந்தேன் பாட்டி… சதிஸ் வேற இன்னிக்கு மில்லுக்கு வரேன்னு சொன்னாங்களா அதான் நேரம் ஆயிடுமேன்னு வந்துட்டேன்… கோகிலாக்கா இன்னும் அரை மணி நேரம் பாருங்க உங்க தம்பி எழும்பளைன்னா எழுப்பிடுங்க “ என்று அனைவருக்கும் பொதுவாய் பதில் கூறிவிட்டு உண்ண அமர்ந்தாள்..

அதன் பின் பொதுவான பேசுக்கள் தான் அங்கே இருந்தன. சதிஸ் மிதிலாவோடு கிளம்பியதே அவளோடு ரகுநந்தன் பற்றி பேசவேண்டும் என்று தான்.. அது மிதிலாவும் உணர்ந்தே இருந்தாள்..

கார் கிளம்பிய அடுத்த நொடி “ சொல்லுங்க சதிஸ் ..” எனவும் அவன் ஆச்சரியமாய் பார்த்தான்..

“ என்ன அப்படி பாக்குறிங்க… நான் பிஸினெஸ் லைன்ல இருக்கேன். ஒருத்தர் முகத்தை பார்த்தே அவங்க என்ன மனநிலையில் இருக்காங்கனு கண்டுபிடிக்கணும்.. அப்போதான் தொழில்ல ஜெயிக்க முடியும்… ஹ்ம்ம்.. ஆனா வாழ்கையில நந்தன் முகத்தை பார்த்து நான் ஏமாந்து போனது தான் மிச்சம் “ என்று சிரிப்பாய் ஆரம்பித்து சோகமாய் முடித்தாள்..

“ ஓ !! குட் மிதிலா நீ நேராவே இந்த பேச்சுக்கு வந்தது எனக்கும் கொஞ்சம் ஈஸி தான்.. மிதிலா நீ இப்போ நடந்தது மட்டும் நினைச்சு இப்படி ரியாக்ட் பண்றன்னு தோணுது..” எனவும் அவள் புரியாமல் பார்த்தாள்..

“ எஸ் மிதிலா.. சாதாரணமா எந்த ஒரு மனுசனும் இப்படி எல்லாம் யோசிக்க மாட்டான்.. ஆனா ராக்கி இப்படி எல்லாம் திங் பண்ணியிருக்கான்னா அதுக்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கனும் இல்லையா.. “ என்று சதிஸ் கூறும் பொழுதே

“ என்ன காரணம்.. பொல்லாத காரணம்.. கை புண்ணுக்கு கண்ணாடி தேவையா சதிஸ்.. எல்லாம் அந்த லிசி தான் காரணம்.. அவமேல இருந்த லவ் தான் காரணம்..” என்று சிடு சிடுத்தாள்…

“ ஹ்ம்ம் கோவப்படாமா கேளு மிதிலா.. எனக்கு உங்க ரெண்டுபேர் லைப்பும் நல்லா இருக்கனும்.. நீயே சொல்லிட்ட லிசி மேல இருந்த காதல்ன்னு.. அதாவது அது பாஸ்ட்… இப்போ அவன் மனசில இருக்கிறது நீ தான் மிதிலா.. இனிமேலும் நீ தான்.. லிசி மேல இருந்த காதல்னால அவன் இப்படி நடக்கலை, அவளால இவன் ஏதோ காயம் பட்டிருக்கான் அதான் இப்படி..” என்று சிறு குழந்தைக்கு எடுத்து சொல்வது போல எடுத்து கூறினான்..

மிதிலாவிற்கு சதிஸ் பேசுவதை கேட்க கேட்க இப்படியும் இருக்குமோ என்று தோன்றியது.. ஆசை கொண்ட மனம் அதை நம்பிட துடித்தது.. ஆனால் இதெல்லாம் சதிஸின் யூகங்களே.. ரகுநந்தனின் வார்த்தைகள் அல்ல.. அதலால் அமைதியாய் இருந்தாள்..

“ என்ன மிதிலா அமைதியா இருக்க.. இங்க நான் கிளம்பி வரும்போது அவ்வளோ சந்தோசமா வந்தேன்.. ஆனா வந்தபிறகு அந்த சந்தோசம் இல்லை.. ராக்கிக்கு எப்பயுமே அவன் அம்மாதான் எல்லாமே. லீலா ஆன்ட்டி இறந்தது அவனுக்கு பெரிய சாக்.. அதைவிட பெரியது அவனை இந்தியா போக சொன்னது.. இதெல்லாம் அடுத்து அடுத்து நடந்தது அவனை அறியாம அவனை ரொம்ப பாதிப்பு அடைய வைச்சிடுச்சு மிதிலா..

ஆனா இதெல்லாம் அவன் வெளிய காட்டிக்காம இருந்ததுக்கு காரணம் லிசிக்கும் அவனுக்கும் வேற எதோ பிரச்சனை நடந்திருக்கு. எங்க கேங்ல எல்லாருமே சொல்வோம் உனக்கு லிசி லாயக்கு இல்லைடான்னு ஆனா இவன் கேட்டதே இல்லை.. ஒரு ஸ்டேஜ்ல பட்டுன்னு ரெண்டுபேரோட ரிலேஷன்ஷிப் ப்ரேக் அப். அதுக்கப்புறம் அப்பபோ பேசிட்டு தான் இருந்தாங்க.. பின்ன என்ன நடந்ததோ இவன் அவளை அப்படியே ஒத்துகிட்டான்.. அடுத்து இங்கயும் வந்துட்டான்.. உனக்கு தெரியுமா மிதிலா அவன் இங்க வந்ததுக்கப்புறம் அவங்க அம்மா பத்தி பேசினது விட உன்னை பத்தி பேசினது தான் அதிகம்..

ராக்கோழி என்னை தூங்க விடலை, அந்த ராக்கோழி ஊஞ்சலுக்கு சண்டை போட்டா இப்படி அப்படின்னு… உன்னை பத்தி பேசாத நாளே இல்லை.. உங்க ரெண்டு பேர் மேரேஜ்ன்னு சொன்னதும் எனக்கு அவ்வளோ சந்தோசம்.. ஆனா இங்க வந்து பார்த்தா எல்லாமே சொதப்பி வச்சிருக்கான்..” என்று கசப்பாய் கூறி முடித்தான்..

சதிஸின் வார்த்தைகள் ஏனோ மிதிலாவின் மனதிற்கு இதமாய் இருந்தது.. என்னை பற்றி தான் பேசினானாமே.. வெள்ளைக்காரன் ராக்கோழின்னு எல்லார்கிட்டயும் சொல்லி இருக்கான்.. என்று மகிழ்வாய் எண்ணியவள் உடனே சோர்ந்தும் போனாள்..

என் மீதானா நேசத்தை அனைவருக்கும் சொல்ல தெரிந்தது ஆனால் என்னிடம் மட்டும் சொல்லாமல் விட்டது ஏன் ?? இந்த கேள்வி மீண்டும் வந்து அவளது மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்தது..

“ என்ன மிதிலா இவ்வளோ சொல்றேன் அமைதியா இருக்க??”

“ ஹ்ம்ம் என்ன சதிஸ்…??”

“ இல்ல நான் எதுவும் தப்பா சொல்லிட்டேனா என்ன ?? “

“ இல்ல இல்ல. அப்படியெல்லாம் இல்ல.. கொஞ்சம் யோசனை அவ்வளோ தான்.. “

“ ஹ்ம்ம் நல்லது மிதிலா.. யோசிச்சு பார்.. இன்னும் வாழ்க்கை உங்களுக்கு எவ்வளோ வருஷம் இருக்கு.. இதோட முடிஞ்சிட போறது இல்லை.. இந்த நேரம் இந்த வயசு, இந்த காலம் எல்லாம் நமக்கு திரும்ப வராது.. அவன் பண்ணது தப்புதான்.. ஆனா உன் காதல் உண்மை தானே.. உண்மையான காதல் மன்னிக்கும். ஒருத்தன அவனோட தப்பு தவறுகளோட ஏத்துக்கிறது தான் உண்மையான அன்பு, நேசம், காதல் எல்லாம் மிதிலா.. யோசி “ என்று கூறியவன் இதற்கு மேல் சொல்ல எதுவும் இல்லை என்பது போல பேச்சை முடித்தான்..

“ ம்ம்ம் சரி சதிஸ்…” என்றவளுக்கு வேறு என்ன கூறுவது என்று தெரியவில்லை.. ஆனால் ரகுநந்தனின் நிலையிலிருந்தும் தான் யோசிக்க வேண்டுமோ என்று தோன்றியது.. அதன் பின்னே அவளுக்கு நினைவு வந்தது அன்று ஒரு நாள் லிசி பற்றி அவன் கூறிய பொழுது ஏதோ ஒன்றை அவன் சொல்லாமல் விட்டது.. என்ன அது ??

என்னவாக இருக்கும் ?? அவனிடமே கேட்பதா?? கேட்டால் பதில் சொல்வானா ?? உற்ற நண்பனிடமே சொல்லவில்லையே… என்னிடம் எப்படி ??? இப்படி பல கேள்விகள் அவளோடு பயணித்தன..

அங்கே வீட்டில் படுத்து இருந்த ரகுநந்தனுக்கு அப்பொழுது தான் உறக்கம் விடைகொடுத்தது போல.. சோம்பல் முறித்து எழுந்தவன் நேரத்தை காண “அட இவ்வளோ நேரமா ?? கடவுளே “ என்று நொந்தபடி வேகமாய் எழுந்து குளிக்க சென்றான்..

குளியலறைக்குள் சென்ற பின்னே தெரிந்தது கையில் உடுப்பு எதையும் எடுத்து வராதது.. “ ச்சே.. இது வேற.. ஏன்டா ராக்கி இப்படி ஆகிட்ட.. எல்லாம் இந்த ராக்கோழியால வந்தது..” என்று புலம்பிக்கொண்டே வந்து பீரோவை திறந்தவன்

“ஹ்ம்ம் இத்தனை நாள் மிதுவே எல்லாம் பார்த்து பார்த்து செய்வா..” என்று முன்முனுத்து ஒரு சட்டையை உருவவும் உள்ளே இருந்து அந்த புகைப்படங்கள் விழுந்தன..

அவனும் லிசியும் விதவிதமாய்.. இதையெல்லாம் கண்ட ரகுநந்தனுக்கு பற்றிக்கொண்டு வந்தது.. “ எல்லாம் இந்த போட்டோஸ்னால தானே.. என் சந்தோசமே போச்சு.. எல்லாம் இவளால இந்த லிசினால.. அதுசரி நான் மிதுகிட்ட முட்டாள் மாதிரி நடந்துகிட்டா அதுக்கு இவ என்ன செய்வா “ என்று தன்னை தானே திட்டியபடி அந்த புகைப்படங்களை எடுத்து கசக்கி தூக்கி விசிறினான்..

அது அறைக்குள்ளே அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறி கிடந்தது. அவன் இருந்த நிலையில் அதையெல்லாம் கவனிக்கும் படி இல்லை.. குளிக்க சென்றுவிட்டான்..

அதேநேரம் கீழே கோகிலா “ அம்மா ரொம்ப நேரம் ஆச்சு தம்பி இன்னும் கீழ வரக்காணோம்.. நான் போய் எழுப்பவா ?? மிதி வேற அரைமணில எழுப்ப சொன்னா “ என்று ஜெகதாவிடம் கேட்கவும்

“ வேண்டாம் கோகி.. நானே போறேன்.. அவன்கிட்ட பேசி நாளாச்சு.. தட்டுல டிபன் வச்சு குடு.. நான் கொண்டு போறேன்…” என்றார்.. கோகிலாவும் அவர் கூறியது போல எடுத்துவைத்து கொடுக்க தன் பேரனிடம் பேசவென்று அவனது அறைக்குள் நுழைந்தவரை அங்கே இங்கே என்று சிதறிக்கிடந்த அந்த புகைப்படங்களே வரவேற்றன…


                                

           


       

Advertisement