Advertisement

                               நேசம் – 22

“என்ன மிதிம்மா என்ன இந்த நேரத்தில டிரஸ் எல்லாம் மாத்தி வர ?? ரெண்டு பேரும் வெளிய போறிங்களா என்ன ??” என்று தன் பேத்தி முகத்தையும், பேரன் முகத்தையும் ஆவலாய் மாற்றி மாற்றி பார்த்தபடி கேட்டார் ஜெகதா..

ரகுநந்தனுக்கோ மிதிலாவின் இந்த திடீர் மாற்றம் எதனால் என்று ஒன்றும் புரியவில்லை.. இத்தனை நாள் இல்லாமல் இப்பொழுது ஏன் இவளுக்கு இந்த மாற்றம்..??

மிதிலாவோடு சண்டையிடும் போது இருந்த கோவம் அவனுக்கு வெளியில் சென்று வரவும் மாறிவிட்டது.. மறுபடியும் அதை பற்றி பேசி வீணாய் வம்பு வளர்க்க வேண்டாம் என்று எண்ணியிருந்தான்.. போதாத குறைக்கு மிதிலாவின் மீது தனக்கு இருப்பது தீராத காதல் தான் என்று உணர்ந்த பின் சொல்லவும் வேண்டுமா என்ன ??

அந்த காதல் தந்த உரிமையில் தான் இத்தனை நாள் அவளிடம் அப்படியெல்லாம் நடந்துகொண்டோம், இனிமேல் உரிமையை காட்டாமல், என் உண்மையான நேசத்தை அவளுக்கு வெளிபடுத்த வேண்டும் என்று அவன் எண்ணியிருந்த வேலையில் அவளோ வேறு ஒரு மனநிலையில் இறங்கி வந்தாள்..

“ என்ன மிதிலா பாட்டி கேட்கிறாங்கல இப்படி அமைதியா வந்தா என்ன அர்த்தம் ???” என்று கோகிலா வினவவும் அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஜெகதாவின் அருகில் அமர்ந்துகொண்டாள்..

“ என்ன மிதி குட்டி என்ன டா ???” என்று ஜெகதா அன்பொழுக கேட்டதும் மிதிலாவிற்கு அழுகையை அடக்க முடியவில்லை.. இருந்தாலும் இந்நேரம் தான் அழுதால் நிச்சயம் பாட்டியால் தாங்கி கொள்ள முடியாது என்றெண்ணி மிகவும் சிரமப்பட்டு தன் அழுகையை விழுங்கினாள் மிதிலா.. ஒரு சிறு அமைதிக்குப்பின்

“ ஹ்ம்ம் பாட்டி…. நான்.. நாளைக்கு இருந்து மில்லுக்கு மறுபடியும் போக போறேன்.. நான்.. நான் மறுபடியும் பொறுப்பு எடுத்துக்கிறேன்… “ என்று அழுத்தம் திருத்தமாய் கூறியவளை அங்கிருந்த மூவரும் அதிர்ச்சியை பார்த்தனர்..

மனதில் இருக்கும் வலியை மிதிலா முயன்று மறைத்தாள்.. அடுத்து அவர்கள் வாய் திறக்கும் முன்பு மீண்டும் அவளே ஆரம்பித்தாள் “ பாட்டி நான்.. இதை சொல்ல எனக்கும் கஷ்டமா தான் இருக்கு, ஆனா ப்ளீஸ் பாட்டி நீங்க என்னை தப்பா நினைக்ககூடாது… “ என்று அவரது கைகளை பிடித்துகொண்டு கேட்டாள்..

கேட்டாள் என்பதை விட கெஞ்சினாள் என்று தான் சொல்ல வேண்டும்…

மிதிலா இப்படி சொல்வாள் என்று அங்கிருந்த யாருமே சிறிதும் நினைத்துகூட பார்க்கவில்லை.. ரகுனந்தனுக்கோ சொல்லவே வேண்டாம்.

இத்தனை நாள் தான் சொல்லும் படியெல்லாம் இருந்தாலும்.. அவன் கண் பார்க்கும் திசையை அவள் பார்த்தாள், அவன் மனம் நினைக்கும் அனைத்தும் அவள் நினைத்தாள்.. அவனது எண்ணங்களே இவளது செயல்கள் என்று இருந்தாள்.. ஆனால் இன்று, ரகுநந்தன் தன் காதலை உணர்ந்த இந்த நேரத்தில் மிதிலாவிடம் இருந்து இப்படி ஒருவார்த்தை வந்தால் அவன் என்ன செய்வான்..

திகைத்து போய் தான் அமர்ந்திருந்தான்.. மிதிலா இப்படி கேட்டதும் சட்டென்று ஜெகதா தன் பேரனின் முகத்தை தான் பார்த்தார்.. அவனது திகைத்தே முகமே இது அவனுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது என்று எண்ணி

“என்ன மிதிம்மா?? என்ன டா என்ன பிரச்சனை உனக்கு?? ஏன் டா இப்படி எல்லாம் பேசுற ??” என்று அன்பாய் கேட்டார்..

“ பாட்டி.. பாட்டி.. ப்ளீஸ் பாட்டி.. என்னை ஏன் எதுக்குன்னு கேட்காம என்னை கொஞ்சம் நாளைக்கு வேற எங்கயாது அனுப்பி வைங்க பாட்டி…” என்று கேட்டதும் அவருக்கு நெஞ்சே வெடித்துவிடும் போல இருந்தது..

இத்தனை வருடத்தில் ஒருமுறை கூட கேட்டிராத வார்த்தை…. இன்று மிதிலா வாயிலிருந்து வருகிறது என்றால் அதற்கு என்ன அர்த்தம்?? ஒருவேளை தான் அவள் மீது கொண்ட நேசம் பொய்த்துவிட்டதா இல்லை அவளது திருமணம் என்று அவர் மனம் என்னும் பொழுதே சர்வமும் நடுங்கிவிட்டது..

வேகமாய் திரும்பி ரகுநந்தனை பார்த்தார்.. அவனுக்கோ என்ன நடக்கிறது என்றே முதலில் புரியவில்லை.. எதனால் மிதிலா இப்படி நடந்துகொள்கிறாள் என்று அவனுக்கு தெரியவில்லை..

“ பாட்டி அவங்களை ஏன் பாக்குறிங்க ?? நான்.. நான் தானே பே.. பேசுறேன்… “ என்று வார்த்தைகளை மென்று விழுங்கினாள்.. அவளுக்கு தெரியும் ஜெகதாவிற்கு இது எத்தனை பெரிய அதிர்ச்சியை கொடுக்கும் என்று.. ஆனால் மிதிலாவிற்கும் வேறு வழியில்லையே..

தான் அமைதியாய் இருந்தது போதும் என்றெண்ணி ரகுநந்தன் “ மிது.. மிது பேபி என்ன இது ?? ஏன் ஏன் இப்படி பேசுற ?? உன்.. உனக்கு என்ன டா ஆச்சு… என்ன மிது “ என்று வேகமாய் அவளருகில் வந்து கேட்டான்..

அவனது கைகள் பட்டதும் மிதிலாவிற்கு நெருப்பை தொட்டது போல இருந்தது.. படக்கென்று கைகளை உருவிக்கொண்டாள்.. அந்த நிமிசமே புரிந்துவிட்டது ஜெகதாவிற்கு இது கணவன் மனைவி பிரச்சனை என்று.. சரி ஏதாவது சின்ன விசயமாய் இருக்கும் என்று எண்ணியவர் மெல்ல நகைத்தபடி

“என்ன டா மிதி கண்ணா.. கல்யாணம்ன்னு நடந்தா புருஷன் பொண்டாட்டிக்குள்ள சின்ன சின்ன சண்டை வரது சகஜம் தான். அதுக்காக எல்லாம் இப்படி பேசுவாங்களா டா ??”

“பாட்டி ப்ளீஸ் நான்.. என்.. எனக்கு.. ப்ளீஸ் பாட்டி எனக்கு இங்க இருந்தா அப்படியே பைத்தியமே பிடிச்சிடும் போல இருக்கு பாட்டி.. இத்தனை நாள் எதாவது நான் இப்படி கேட்டு இருக்கேனா ப்ளீஸ் பாட்டி..” என்று கண்ணீர் வடிய கெஞ்சினாள்..

ஆசையாசையாய் அருமை பெருமையாய் தூக்கி வளர்த்த பேத்தி, இப்படி கண்ணீரும் கம்பலையுமாய் அழுதபடி கெஞ்சுவதை பார்த்து ஜெகதாவிற்கு நெஞ்சம் கலங்கியது. என்ன பதில் சொல்வது என்று பேச்சற்று போய் அமர்ந்திருந்தார்..

கோகிலாவோ அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தார்.. அவர் பார்த்த மிதிலா இவள் இல்லை.. பழைய மிதிலாவாய் இறங்கி வருவதை பார்த்து ஒரு நொடி மனம் மகிழ்ச்சியில் ஆழ்ந்தாலும் அடுத்த நொடி மிதிலா இப்படி ஒரு இடியை இறக்குவாள் என்று கண்டாரா என்ன ??

“ என்ன மிதிலா?? என்ன இது.. இந்நேரம் வந்து இப்படி பேசிட்டு இருக்க.. நீயா எதுவும் நினைக்காத டா.. போ.. போய் தூங்கு.. எதுவானாலும் நாளைக்கு பேசிக்கலாம்.. போ மா “ என்று சூழ்நிலையை சமாளிக்கும் விதமாய் பேசி அவளை சரி செய்ய நினைத்தார்.. ஆனால் மிதிலாவோ இன்னும் இன்னும் அழுதாள்..

ரகுநந்தனுக்கு புரிந்துவிட்டது தன்னை பற்றி எதையோ மனதில் கொண்டு தான் இவள் இப்படி பேசுகிறாள் என்று.. மேற்கொண்டு விசயத்தை பெரிது படுத்த எண்ணாமல்

“ பாட்டி, அக்கா, நீங்க யாரும் டென்சன் ஆகவேண்டாம் ப்ளீஸ்.. நான்.. மிது கிட்ட பேசிக்கிறேன்.. ஐ வில் ஹென்ட்ல் திஸ்… நீங்க போங்க பாட்டி, அக்கா பாட்டியை கூட்டிட்டு போங்க.. அவங்க முகமே சரியில்லை.. “ என்று மிதிலாவிடமும் ஒரு அழுத்தமான பார்வையை செலுத்தி கூறினான்..

பாட்டியின் முகமே சரியில்லை என்று கேட்டபின்பு தான் மிதிலாவிற்கு தான் என்ன செய்துகொண்டு இருக்கிறோம் என்றே புரிந்தது..

“ அய்யோ !!! முட்டாள் மிதிலா… நீ நீ என்ன பண்ணிட்டு இருக்க ?? கொஞ்சம் கூட இதை பத்தி உன் பாட்டியை பத்தி யோசிக்கவே இல்லையா நீ.. நீ பாட்டுக்கு என்னவோ வந்து இப்படி பேசிட்டு இருக்க?? அவங்க மனசு என்ன நினைக்கும் ?? அவங்க உடம்பு என்ன ஆகுறது ??” என்று தன்னை தானே நொந்துகொண்டாள்..

ரகுநந்தன் மீதிருந்த கோவத்தால், அந்த கோவத்தின் வேகத்தால் வேறு எதை பற்றியும் சிறிதும் சிந்திக்காமல் தான் என்ன நினைத்தாளோ அதை செயல்படுத்தும் விதமாய் பேச தொடங்கினாள்.. ஆனால் ரகுநந்தன் பாட்டியின் முகமே சரியில்லை என்று சொல்லவும் மனதில் கோடாரி கொண்டு அடித்தது போல இருந்தது…  

ஒரு சில நொடிகளில் தான் செய்யும் மடத்தனம் புரிந்து அடுத்த நொடியே தன் உணர்வுகளை மறைத்து, தன் முகத்தையும் மாற்றிக்கொண்டாள்..

இத்தனை நேரம் இவளா இப்படி அழுதாள் என்று யாராவது கூறினால் கூட நம்ப முடியாது.. கோகிலாவோ “ அட இந்த பிள்ளைக்கு என்ன பேய் ஏதும் பிடிச்சிருச்சா என்ன?? இப்படி மாத்தி மாத்தி ரியாக்சன் காட்டுரா ??” என்று எண்ணிக்கொண்டார்..

ஜெகதாவோ தன் பதற்றத்தை காட்டியபடி “ மிதி.. மிதி குட்டி என்ன டா?? “ என்று கேட்கவும் மெல்ல சிரித்தபடி

 “ அட பாட்டி… ஹய்யோ !!! எல்லாரும் டென்சன் ஆகிட்டிங்களா என்ன ?? அக்கா எப்படி என் நடிப்பு ?? எல்லாரும் பயந்துட்டிங்களா என்ன ??” என்று  கூறி பலமாய் சிரித்தாள்…

சற்று நேரத்திற்கு முன்னே உயிரே உருகியது போல அழுததும், இப்பொழுது கண்ணில் நீர் வர சிரிப்பதும், பார்ப்பவருக்கு நிச்சயம் பைத்தியம் தான் பிடிக்கும்..

ஜெகதாவின் மனமோ இன்னும் குழம்பியது.. கோகிலாவோ இதற்குமேலும் தன்னை போட்டு குழப்பிக்கொள்ள கூடாது என்றெண்ணி என்னத்தான் நடக்கிறது என்று பார்த்துகொண்டு இருந்தார்..

“ இல்ல மிதிம்மா… நீ இப்ப.. கொஞ்ச நேரத்துக்கு முன்ன அழுதியே டா.. மிதிகுட்டி உண்மையை சொல்லுமா.. எதுவும் பிரச்சனையா ??” என்று இன்னும் தன் டென்சன் அகலாமல் கேட்டார் ஜெகதா..

அவரது கைகளை எடுத்து தன் கைகளில் வைத்து “ பாட்டி!!! அய்யோ !!! சாரி பாட்டி.. பாருங்க நான் எவ்வளோ முட்டாள் மாதிரி நடந்துகிட்டேன்.. நான் சும்மா இப்படி பண்ணா உங்க எல்லார் ரியாக்சனும் எப்படி இருக்கும்னு பார்க்கலாம்னு நினைச்சேன்.. ஐம் சாரி பாட்டி, பட் நீங்க இந்த அளவுக்கு டென்சன் ஆவிங்கன்னு எனக்கு தெரியலை..

நான் சும்மா தான் பாட்டி, நேத்து ஒரு படம் பார்த்தேனா அதில ஹிரோயின் பேசிட்டு இருக்கும் போதே அழுவா, சரி நம்ம இப்படி ட்ரை பண்ணி பார்க்கலாமேன்னு தான் “ என்று பாவமாய் இழுத்தவாளை இன்னும் நம்ப முடியாத பார்வை பார்த்தார் ஜெகதா..

இதற்கு மேல் ஜெகதா இங்கே இருந்தால் அவ்வளோதான் இப்படி விளக்கம் சொல்லி சொல்லியே கடைசியில் உண்மையை சொல்ல வேண்டியது இருக்கும் என்று பயந்த மிதிலா,

“அட கோகிலாக்கா இங்க என்ன நான் சினிமாவா காட்டுறேன்.. இப்படி என் வாய் பார்த்துட்டு இருக்கீங்க.. நீங்களுமா நம்பிட்டிங்க ?? அவ்வளோ பச்ச புள்ளையா நீங்க?? ஹா ஹா ஹா !!!” என்று சிரித்தவளை முறைப்பதை தவிர அவருக்கு வேறு தெரியவில்லை..

கோகிலாவிடம் இருந்து முறைப்பை பெற்று கொண்ட மிதிலா அடுத்து திரும்பியது தன் கணவனிடம்.. அவன் முகம் கூட பார்க்க பிடிக்கவில்லை என்றாலும் பிறருக்காகவாது பேசியாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள்..

ஜெகதாவிற்கும், கோகிலாவிற்கும் முதுகு காட்டி நின்றாள்.. அவள் முகத்தில் இதனை நேரம் இருந்த சிரிப்பு சுத்தமாய் இல்லை.. ஆனால் அவள் பேசுவதை கேட்டால் சிரித்தபடி பேசுகிறாள் என்றே எண்ண தோன்றும்..

“ என்னங்க… என்ன அப்படியே சிலை மாதிரியே நிக்கிறிங்க?? ஹா ஹா !! அப்படியே மனசில என்னென்னவோ வந்து போயிருக்குமே… ஆனா உங்களவுக்கு என்னால முடியாது பா… “ என்று கையை ஆட்டி விரித்து பேசியவளை வெறித்து பார்த்தான் ரகுநந்தன்.. அவளது பேச்சில் இருந்த ஒவ்வொரு குத்தல் வார்த்தைகளும் அவனுக்கு மனதில் ஈட்டியாய் குத்தியது…

பதில் பேசாமல் அமைதியாய் பார்த்தபடி நின்றிருந்தான்.. “ பாட்டி பாருங்க உங்க பேரனை அரண்டு போன மாதிரி எப்படி நிக்கிறாங்கன்னு.. ஹா ஹா ஹா பரவாயில்ல மிதிலா நீ கூட நல்லா தான் நடிக்கிற “ என்று தன்னை தானே பாராட்டி வேறு கொண்டாள்…

“ ஸ்ஸ்!!! மிதி என்ன இது ??? இன்னும் நீ என்ன சின்ன பிள்ளையா என்ன ?? பாரு அவன் முகமே விழுந்திடுச்சு.. இப்படிதான் பண்றதா ??? “ என்று லேசாய் கடிந்தார் ஜெகதா..

“ ஹப்பா!!! பாட்டி நம்பிட்டாங்க போல..” என்றெண்ணி

“ அட பாட்டி நான் தான் சாரி கேட்டேன்ல.. ப்ளீஸ்..”

“ நல்ல பொண்ணு மிதி நீ.. ஆமா ஏன் உன் பழைய ரூம்க்கு ஷிபிட் ஆன??” என்று சற்றே ஜெகதா கடுமையாய் கேட்கவும் சட்டென்று பதில் சொல்ல வரவில்லை..

“ என்ன மிதி ?? என்ன அமைதியா இருக்க ?? பதில் சொல்லு… “

“ அது பாட்டி.. அது…” என்று இழுத்தவள்

 “ ஹா !!! பாட்டி நாளைக்கு சதிஸ் வராங்க இல்லையா.. அவரும் இவரும் ஒரே ரூம்ல இருக்கட்டும்னு தான்.. இத்தனை நாள் கழிச்சு பிரண்ட்ஸ் ரெண்டு பெரும் பார்க்கிறாங்க.. பேச எத்தனையோ இருக்கும் அதான் பாட்டி..”
என்று  ஒருவழியாய் கிளறி மூடினாள்..

மிதிலாவின் மனதில் ஒருநாள் இப்படி நடிக்கிறதுக்கே இவ்வளோ கஷ்டமா இருக்கே என்று எண்ணம் தோன்றி மறைந்தது.. பிறகு அவளாய் நினைத்துக்கொண்டாள், எல்லாம் சதிஸ் வந்து செல்லும் வரை தான் அதன் பிறகு நானே இதற்கு ஒரு முடிவை கட்டிவிடுவேன்  என்று..   

இவளது பேச்சு முன்னுக்கு பின் முரணாய் இருப்பதை கண்டு கோகிலா “ என்ன மிதிம்மா சதிஸ் வரதுக்கும், நீ வேற ரூம்க்கு போறதுக்கும் என்ன இருக்கு?? எனக்கு எதுவும் புரியலையே… உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு அதை மறந்துட்டியா என்ன ???” என்று வினவினார்..

“அட என் செல்ல அக்காவே.. எனக்கு கல்யாணம் ஆனது நல்லா நியாபகம் இருக்கு. அதை யாரும் மறந்திடுவாங்களா என்ன ?? அதுவும் என் கல்யாணம் மறக்க கூடிய விசயமா என்ன ?? இல்ல நந்தன் ” என்று தன் பேச்சில் நந்தனையும் இழுத்தாள்..

ரகுநந்தனோ இதற்குமேல் இவளை பேசவிட்டு வேடிக்கை பார்த்தால் அது நல்லதல்ல என்று எண்ணி

“ ம்ம் !! மிது, போதும்.. உன் பேச்சை கேட்டு கேட்டு பாட்டி டயர்ட் ஆகிட்டாங்க… மேல போலாம்.. இப்போ என்ன சதிஸ் ரிட்டர்ன் போறது வரைக்கும் நீ உன் பழைய ரூம்ல இருக்க அவ்வளோ தானே.. சரி எனக்கு எந்த பிராப்ளமும் இல்லை “ என்று பேச்சை முடித்தான்..

“ அட பார்த்திங்களா பாட்டி உங்க பேரனை… எதுக்கெடுத்தாலும் மிது மிதுன்னு ஏலம் போட்டுட்டு இருந்தாரே, இப்போ பிரன்ட் வரவும் எப்படி பேசுறாங்கனு.. ஹ்ம்ம் எல்லாம் நடிப்பு போல “ என்று அவனை வார்த்தைகளால் குடைந்தபடி பேச்சை இழுத்தாள்..

மிதிலாவின் பேச்சால் ஜெகதாவிற்கு மனவுளைச்சல் தான் மிச்சம்.. அது அவர் முகத்திலேயே நன்றாய் தெரிந்தது.. தன்னை இத்தனை நாளாய் ஒரு குறையும் இல்லாமல் வளர்த்த பாட்டியின் முகம் வாடுதாலை கண்ட மிதிலா “ போதும் “ என்று அவளே நினைத்துக்கொண்டாள்..

“ சரி கோகிலாக்கா.. பாட்டியை கூட்டிட்டு போங்க.. நானும் போய் தூங்கனும்.. ஹப்பா இன்னிக்காது நிம்மதியா தூங்கனும் “ என்று போகிற போக்கில் மீண்டும் ஒரு இடைச்சொருகளை சொருகினாள்..

நன்றாய் இருந்த பெண் ஏன் திடீரென்று இப்படி நடந்துகொல்கிறாளோ என்று வருந்தியபடியே ஜெகதாவும் சென்றார் தன் பேரனுக்கு சில பல அறிவுரைகளை வழங்கிவிட்டு..

ரகுநந்தன் மட்டும் தனித்து இருந்தான்.. மிதிலா பேசிய ஒவ்வொரு வார்த்தையும், அவளது ஒவ்வொரு முக மாற்றங்களும் ரகுநந்தன் மனதில்வந்து போயின.. எதோ ஒரு கோவம் அவள் மனதில் என்று எண்ணினான்.. அவனுக்கு இன்னும் தெரியவில்லை தன் மனதின் அடி ஆழத்தில் இருந்த அத்தனை ரகசியங்களும் மிதிலாவிற்கு தெரிந்துவிட்டது என்று..

இப்படி தனித்து நிற்பதே அவனுக்கு மிகவும் சிரமமாய் இருந்தது.. சதிஸ் வரப்போகும் இந்த நேரத்திலா இப்படி எல்லாம் நடக்க வேண்டும் என்று நொந்துக்கொண்டான்

அவன் மனமே அவனை இடித்தது.. இத்தனை நாள் அவளை அதட்டி உருட்டும் போதெல்லாம் அவளுக்கும் இப்படித்தானே இருக்கும்மென்று.. ஆனாலும் ஏனோ ரகுநந்தனுக்கு தன் மனைவியின் இந்த உதாசினத்தை தாங்க முடியவில்லை.. அதுவும் அவள் மீது தான் கொண்ட காதலை உணர்ந்தபின்பு சொல்லவும் வேண்டுமா???..

சதிஸ் வந்தால் என்ன அவன் நாளை தானே வருகிறான்.. இன்று இரவு முழுவதும் இருக்கிறதே.. அதற்குள் பேசி சரி செய்து விடலாம் என்று நம்பிக்கை கொண்டு மிதிலாவின் அறைக்குள் சென்றான்..

“ உள்ள வரும் போது டோர் நாக் பண்ண தெரியாதா ???” என்ற மிதிலாவின் கடுமையான குரலே வரவேற்றது.. மிதிலா முடிவெடுத்துவிட்டாள் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் ரகுநந்தனை ஒருவழி செய்துவிட வேண்டும் என்று..

மிதிலாவின் இந்த குரலும், பார்வையும் அவள் கணவனுக்கு புதிதாய் இருந்தது. அவன் இங்கு வந்த புதிதில் இருவரும் எதிரெதிராய் இருந்தனர் தான் ஆனால் இன்று அவளிடம் இன்னும் வேறு எதுவோ கூடியிருப்பது போல இருந்தது..

ஒருவேலை தான் பேசியதால் இருக்கும் என்று நினைத்து “ மிது… ஐம் சாரி டியர்.. நான்… நான் கொஞ்சம் டென்சன் ல.. நீ நான் சொல்லியும் கேட்காம போயிட்டன்னு அந்த கோவத்தில் பேசிட்டேன் சாரி மா “ என்று அவளது கைகளை பிடிக்க போனான்..

அவளோ இரண்டடி தள்ளி பின்னே நகர்ந்து போனாள்.. சற்றே அதிர்ச்சியாய் அவளை பார்த்தன் ரகுநந்தன்.. சற்று முன் கீழேயும் இப்படிதான் செய்தாள்.. இப்பொழுது தான் அவனது புத்திக்கு அது உறைத்தது..

“ என்.. என்ன மிது ?? ஏன் ஏன் தள்ளி போற ?? “ என்றான்…

அவளோ வெற்று பார்வை பார்த்தாள்…

“ என்ன மிது நான் கேட்கிறேனே?? கீழ ஏன் அப்படி எல்லாம் பேசின ?? பாவம் பாட்டி எவ்வளோ டென்சன் ஆகிட்டாங்க.. ஏன் மிது நீ இப்படியெல்லாம் நடந்துக்க மாட்ட.. ஆனா ஏன் இப்படி எல்லாம் பண்ற மிது இதுக்கெல்லாம் என்ன அர்த்தம் “ என்று அவன் ஒன்றும் தெரியாதவன் போல பேசியதும் இத்தனை நேரம் கட்டுக்குள் இருந்த ஆத்திரம் எல்லாம் பொருத்தது போதும் என்று தன் பொறுமையை முடித்துக்கொண்டது..

“ என்ன அர்த்தமா ??? இதோ நீங்க எழுதி இருகிங்களே இந்த பேப்பெர்ஸ் அதுக்கெல்லாம் என்ன அர்த்தமோ அது தான் இதுக்கும் அர்த்தம் “ என்று ஆங்காரமாய் கூறியபடி அவன் எழுதி இருந்த காகிதங்கள் அனைத்தையும் அவன் முகத்தில் தூக்கி எறிந்தாள்..

மிதிலாவிடம் இருந்து இப்படி ஒரு செய்கையை எதிர்பார்க்காத அதிர்ச்சி ஒருபக்கம் என்றால், அவள் விசிறியடித்த காகிதங்களை எடுத்து பார்த்தவனுக்கு இன்னும் அதிர்ச்சி ஆனது..

“ இது.. இது.. இதெல்லாம் எப்படி.. எப்படி இதெல்லாம் உன்.. மிது… உனக்கு எப்படி இது “ என்று வார்த்தைகளை கோர்க்க முடியாமல் திக்கி திணறினான்..

“ என்ன வார்த்தை வரலியா ??? அதெப்படி வரும் ?? அட அட… இத்தனை நாள் என்னை ஒரு வார்த்தை ஒரு தரம் ஏதாவது சொல்ல விட்டு இருக்கீங்களா என்ன ? இப்போ மட்டும் ஏன் இத்தனை திக்கல் திணறல்?? என்ன பேச்சு வரலியா என்ன அர்த்தம் இதுகெல்லாம்???” என்று அவனது முகத்தையே ருத்ரமாய் பார்த்தாள் மிதிலா..

“ இல்ல மிது.. அது…!!!”

“ ஜஸ்ட் சட்டப்… இதுக்கு மேல் என்னை மிதுன்னு கூப்பிடுற உரிமை உங்களுக்கு இல்லை.. புரியுதா ??

“ மிது ப்ளீஸ்.. என்னை கொஞ்சம் பேச விடு… நான் சொல்றதையும் கேளு “ என்றான் கெஞ்சாத குறையாய்..

“ என்ன சொல்ல போறீங்க.. இதோ இதில சொல்லாததையா நீங்க இனிமே சொல்ல போறீங்க… இதோ இந்த பேப்பர்ல எழுதியிருக்கிங்களே அம்மா பாட்டி இப்படி ப்ராபெர்டி எல்லாம் எனக்கும் மிதிலாக்கு எழுதியிருக்காங்க, பட் அவங்க எழுதியிருக்கும் விதம் நிச்சயம் ரெண்டு பேரோட லைப்லயும் பிரச்சனை வரும்.. நான் என்ன மா செய்ய..

நீங்களும் இல்லாமல், இப்படி திடீர்னு இங்க வந்து ஒரு பிரச்சனையான வாழ்கை நான் வாழனுமா ??? அம்மா எனக்கு ஒரு நல்ல யோசனை தோணுது பேசாம நானே அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிகிட்டா, பாட்டிக்கும் நிம்மதி எனக்கும் நிம்மதின்னு எழுதி இருக்கிங்களே!!! இத விடவா இப்போ சொல்ல போறீங்க..

பாட்டி நிம்மதி உங்க நிம்மதி மட்டும் தான் உங்க கண்ணனுக்கு தெரிஞ்சதா என் நிம்மதி தெரியலையா ??? பதில் பேசுங்க.. கடைசியில் இந்த சொத்துகாக, உங்க லைப் நிம்மதியா இருக்கணும்னு என்னை ச்சி….” என்று எரிந்து விழுந்தாள்..

அதிர்ந்து நின்று இருந்தான்.. ஏதோ ஒரு மன குழப்பத்தில் தன் அன்னையிடம் பேசுவதாய் எண்ணி இப்படி ஒரு காகிதத்தில் எழுதி இருந்தான்.. அதுவே அவனுக்கு வினையாய் வரும் என்று அவன் ஜாதகம் பார்த்தானா என்ன ??

“ மி… மிது.,. இது… இதெல்லாம்….”

“ இதெல்லாம் உண்மை இல்லைன்னு சொல்ல போறிங்களா என்ன?? அப்போ இது… உங்க அருமை காதலி லிசிக்கு எழுதுறதா நினைச்சு எழுதி இருக்கீங்களே இதென்ன?? “

“ எப்படி எப்படி லிசி நீ வேணா என்னை விட்டு போயிருக்கலாம்.. உனக்கு வேணா என் அருமை தெரியாம இருக்கலாம்.. ஆனா உனக்கு எவ்வளோ தைரியம் என்னை மீறி நீ போயிருப்ப ???? அத்தனை லாயக்கு இல்லாதவனா நான் ?? இத்தனை நாள் நீ என் பேச்சை கேட்காம இருந்த போதெல்லாம் எனக்கு பெருசா தெரியலை ஆனா நீ .. ச்சி… நல்லா கேட்டுக்கோ நான் நிச்சயம் வாழ்கையில் கல்யாணம் பண்ணுவேன்.. எனக்கு பொண்டாட்டியா வரவ நிச்சயம் என் பேச்சை மட்டுமே கேட்டு நடக்கும்படி செய்வேன்…

நீ என்னை உதாசின படுத்தின ஒவ்வொரு.. விசயத்தையும் எனக்கு வைபை கேட்க வைப்பேன்.. என் விருப்பத்துக்கு நீ ஒருநாள் கூட மதிப்பு கொடுத்தது இல்லை ஆனா, என் மனைவி என்னை தவிர வேறு எதையும் நினைக்க விடாம என் கைக்குள்ளே வச்சிருப்பேன்.. நீ ஒவ்வொரு நாளும் நினைக்கணும் இப்படி ஒரு வாழ்கையை இழந்துட்டேன், இப்படி ஒருத்தனை விட்டு வந்தது தப்புன்னு ஒவ்வொரு நாளும் எண்ணி எண்ணி வருந்தணும்…” இப்படி இன்னும் பல..

“ என்ன அப்படியே அதிர்ந்து போய் நிக்கிறிங்க ?? பேச்சு வரலியா ??? எப்படி டா எப்படி உனக்கு மனசு வந்தது ??? நான் எத்தனை நாள் ஏங்கியிருப்பேன் தெரியுமா என்னிக்காவது ஒருநாள், உன் பாசத்தை, உன் நேசத்தை என்கிட்டே சொல்லுவன்னு எத்தனை நாள் நான் எதிர்பார்த்திருப்பேன் ஆனா அதெல்லாம் எதுவுமே இல்லைன்னு இப்படி எல்லாமே பொய்யாக்கிட்டியே பாவி “ என்று அவனது சட்டையை பிடித்து உலுக்கினாள்..

ரகுநந்தன் பேச்சற்று நின்றுவிட்டான்.. அன்று அப்பொழுது இருந்த மன நிலையில் அப்படியெல்லாம் எழுதியிருந்தான்.. இதற்கும் அவன் அங்கிருந்த வந்தபின்பு ஒருமுறை கூட லிசியிடம் பேசவில்லை.. ஆனால் அதெல்லாம் இப்பொழுது எடுபடுமா என்ன ???

தன் காதலை சொல்ல எண்ணியிருந்த இந்த நேரத்தில் தானா இதெல்லாம் மிதிலா கண்ணில் படவேண்டும்..?? ஐயோ என்று இருந்தது.. ஸ்தம்பித்து நின்றுவிட்டான்..

“ என்ன பேசுங்க ??? பதில் பேசுங்க… இப்படி இருந்தா இதெல்லாம் பொய்னு சொல்ல போறிங்களா என்ன ?? சொத்துக்காக, உங்க லவ்வர் உங்களை ஏமாத்திட்டு போனதுனால எல்லாம் தான் என்னை கல்யாணம் பண்ணிங்களா ??? இதெல்லாம் ஒரு காரணமா ??? அவ அப்படி பண்ணா அதுக்கேன் என்னை இப்படி எல்லாம் பண்ணிங்க ?? நான் என்ன உங்களுக்கு பாவம் செய்தேன் ??” என்று கேள்வி மேல் கேள்வியை அடுக்கினாள்..

இதற்கெல்லாம் என்ன பதில் சொல்வான் ரகுநந்தன்?? இப்பொழுது அவன் ஒன்றுமே இல்லை என்று எண்ணியிருந்த விசயமெல்லாம் பூதாகரமாய் நின்று வேடிக்கை பார்த்தது..

“ பதில் பேசுங்க ரகுநந்தன்.. நான் என்ன பண்ணேன்.. இத்தனை நாள் உங்க மேல எந்த எதிர்பார்ப்பும் இல்லாம நீங்க சொன்ன எல்லாத்துக்கும் சரின்னு இருந்தேனே அதெல்லாம் தான் தப்பா ??? பேசுங்க.. ஒவ்வொரு நாளும் எத்தனை எத்தனை….” என்று பேசியவள் பின் என்ன நினைத்தாளோ

“ ஹேய் பதில் பேசு என்ன அமைதியா நிக்கிற ??? என்னை மிதிலான்னு நினைச்சு வாழ்ந்தியா இல்லை அந்த லிசி தான் உன் மனசில இருந்தாளா ??? என்னை கொன்னுட்டா நீ “ என்று மடிந்து சரிந்து அழுதாள்..

அவளுக்கு என்ன செய்ய  என்று தெரியவில்லை.. பிறந்த வீடும் புகுந்த வீடும் ஒன்றாய் போனதால் அவள் எங்கு தான் செல்வாள்.. ஆறுதலுக்கு கூட வெளியில் சொல்ல முடியவில்லை. தன் பேரனா இப்படி ?? தன் பேத்தியின் வாழ்க்கை ?? என்று பலதும் எண்ணி ஜெகதா ஓய்ந்தே போய்விடுவார்..

ஆனால் இதற்கெல்லாம் சம்பந்தப்பட்டவன் பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்..

ரகுநந்தனுக்கு மிதிலா கேட்ட ஒவ்வொரு கேள்வியும் திருகு கத்தியை சொருகுவதை போல் இருந்தது.. இத்தனை நாள் அவளுக்கு எப்படி இருந்திருக்கும் ?? அவள் அழுவதையும் பொறுக்க முடியவில்லை…

“ ப்ளீஸ் மிது.. டோன்ட் க்ரை ப்ளீஸ் மிது “ என்று அவளது தோள்களை பற்றினான்..

“ச்சி என்னை தொடாத.. கிட்ட கூட வராத.. உன்னை பார்த்தாலே அவ்வளோ ஆத்திரம் வருது “ என்று தள்ளினாள்..

“ ப்ளீஸ் மிது என்னை போக சொல்லாத.. என்.. எனக்கு யார் இருக்கா ??”

“ டேய்.. இப்படி இப்படி பேசி பேசிதானே என்னை இப்படி உட்கார வைச்சிருக்க.. போதும் இன்னும் நான் ஏமாற விரும்பலை.. போ !!“

“ என்னை போக சொல்லாத மிது.. இதெல்லாம் அப்போ, நான் எதோ ஒரு தாட்ஸ்ல எழுதினது.. என்.. எனக்கு நீ வேண்டும் மிது..” என்று கூறி முடிக்கும் முன்னே அவள் அவனை ஒரு தள்ளு தள்ளியிருந்தாள்….

“ என்ன வேண்டும் உனக்கு ?? எப்போ பாரு எனக்கு நீ வேணும் எனக்கு நீ வேணும்னு சொல்லி சொல்லியே என் வாழ்கையை நாசம் பண்ணிட்ட.. உனக்கு என்ன தேவை தெரியுமா ?? நீ சொல்றதை எல்லாம் கேட்க, உன் எல்லா தேவையையும் பூர்த்தி செய்ய, நீ ஆட்டுறதுக்கு எல்லாம் ஆட ஒரு பொண்ணு தேவை, பொண்டாட்டி இல்லை.. உயிரும் உடலுமா இருக்க ஒரு பொம்மை தான் தேவை உனக்கு.. நான் இல்லை இந்த மிதிலா இல்லை…” என்று ஆங்காரமாய் பேசியவளை வாயடைத்து பார்த்து நின்று இருந்தான்…                         

                                                                                                             

                                                               

 

                                 

         

                                             

 

Advertisement