Advertisement

      நேசம் – 21

“ நந்தன் நீங்க பண்றது கொஞ்சம் கூட சரியே இல்லைப்பா….” நூறாவது முறையாக இதைத்தான் கூறிக்கொண்டு இருந்தாள் மிதிலா.. ஆனாலும் அவனிடம் எந்த பதிலும் இல்லை..

“ இப்போ ஏன் நந்தன் இப்படி உட்கார்ந்து இருக்கீங்க ?? நான் இவ்வளோ சொல்றேன் நீங்க புரியாம இருந்தா எப்படி ???” என்று அவனை தொட்டு தோள் திருப்பினாள்..

என்ன முயன்றும் அவனிடம் பதில் இல்லை.. அமைதியாய் கல் சிலை போல இருந்தான்.. முகமோ எந்த உணர்வையும் காட்டாமல் துடைத்து வைத்தது போல  இருந்தது.. கண்கள் மட்டும் மிதிலாவை ஆராய்ந்தது..

“ என்ன நந்தன் இது ?? என்ன இப்படி ஒரு கோவம் என்மேல ??”

“ஏன் உனக்கு தெரியாதோ !!!!” குத்தலாய் வந்தது பதில்…

“ நீங்களே சொல்லுங்க, நந்தினி வீட்டுக்கு வந்து இன்வைட் பண்ணிட்டு போனா.. நம்ம போகாம இருந்தா நல்லா இருக்காது தானே.. உங்களுக்கு மீட்டிங் இருக்குன்னு நினைச்சு தான் நான் மட்டும் போய்ட்டு வந்தேன்…”

“ யாரை கேட்டு போன??” அதிகாரமாய் ஒலித்தது அவன் குரல்.. அவனது குரலும், முக பாவனையும் மிதிலாவின் பொறுமையை சிறிது சிறிதாய் கரைத்துக்கொண்டு இருந்தது..

“ நான் நேத்தே உங்கட்ட சொன்னேனே….” அவளுமே சற்று கடினமான குரலில் பதில் கூறினாள்..

“ நானும் நேத்தே உன்கிட்ட சொன்னேனே போக கூடாதுன்னு..” அழுத்தம் இன்னும் கூடியது அவனுக்கு…

“ அது தான் ஏன் ??? நேத்து இருந்து நானும் கேட்கிறேனே… என்ன காரணம்னு ?? சொன்னாதானே எனக்கும் தெரியும் ??” அவளும் பதிலுக்கு பதில் கொடுத்தாள்..

“ம்ம்ச்.. அப்படி எல்லாம் உன்கிட்ட எல்லா விஷயத்துக்கு காரணம் சொல்லிட்டு இருக்க முடியாது.. இங்க பார் மிதிலா, நான் உன் ஹஸ்பன்ட் நான் சொல்றதை தான் நீ கேட்கணும்.. உன் இஷ்டத்திற்கு எல்லாம் இங்க அட முடியாது என்ன ???!!!” உறுமினான்…

அவ்வளோதான் கொஞ்சம் நஞ்சம் இருந்த பொறுமையும் கையசைத்து விடைபெற்று விட்டது மிதிலாவிற்கு..

“ என்ன ??? என்ன சொல்றிங்க நீங்க.. கல்யாணம் ஆனதில் இருந்து நீங்க சொல்றபடி தான் நான் நடந்துட்டு இருக்கேன்.. ஒரு சின்ன விசயத்தில கூட நான் உங்க பேச்சை மீறினது இல்லை.. ஆனா வாழ்க்கைங்கிறது இது இல்லை ஒன் சைட் ரோடு இல்லை.. அன்பும், பாசமும், நம்பிக்கையும் ரெண்டு பக்கமுமே இருக்கனும் “

“ போதும் நிறுத்து நீ எனக்கு கிளாஸ் எடுக்காத..!!!!”

“ ஏன்?? எனக்கு பேச உரிமை இல்லையா ??? நீங்க மட்டும் எனக்கு ஒவ்வொன்னும் இப்படி இருக்கணும், அதை அப்படி செய்யனும்னு சொல்றிங்க நான் கேட்கிறேன் தானே.. ஆனா ஒரு சின்ன விஷயம் அதை கூட நான் சொல்ல கூடாதா??”

மிதிலா பதிலுக்கு பதில் பேசவும் நந்தனின் கோவமும் வேகமும் அதிகமானது.. இத்தனை நாள் இப்படி பேசியிராதவள் இன்று இப்படி பேசுகிறாள் என்றால் என்ன அர்த்தம்.. ஒரு நாள் இவள் விருப்பப்படி வெளியே போயிவிட்டு வந்ததற்கே என்னை இத்தனை எதிர்க்கிறாள்..

இனி ஒவ்வொன்றிற்கும் இவள் இஷ்டபடி செய்தால் அவ்வளோ தான் என்று எண்ணியவன் தான் நினைத்ததை வார்த்தை பிசகாமல் அப்படியே அவளிடம் சொல்லவும் செய்தான்..

அவன் பேசியதை கேட்டு முதலில் அதிர்ந்து தான் நின்றாள் மிதிலா.. என்ன ?? என்ன சொல்கிறான் இவன் ?? இவனுக்கு என் மீது இருக்கும் எண்ணம் இதுவா ?? அவளுக்கு எதுவுமே புரியவில்லை..

தன் மீது கொண்ட அதிகபடியான அன்பினால் இவன் இப்படி நடந்துகொள்கிறான் என்று இருந்தால் இவன் மனதில் வேறு எதுவோ இருக்கிறது போலவே,. என்னவாக இருந்தாலும் சரி.. இன்றே இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும்.. காலம் முழுதுக்கும் இதை என்னால் சகிக்க முடியாது..

இப்படி மனதில் பலவராக எண்ணங்கள் ஓட மிதிலா பேச்சற்று நின்று இருந்தாள்..

“ என்ன ?? அமைதியா இருக்க ?? இப்படி பேசாம இருந்தா ஒண்ணுமே தெரியாத அப்பாவின்னு யாரும் உனக்கு மெடல் கொடுக்க போறாங்களா ?? பதில் சொல்லு.. நான் போக கூடாதுன்னு சொல்லியும் நீ போயிருக்க இதுக்கு என்ன அர்த்தம் ???”

ஏதோ குற்றவாளியை விசாரிக்கும் அதிகாரியை போல கேட்டான்.. சலிப்பாய் இருந்தது மிதிலாவிற்கு.. இனி வாழ்வு முழுவதும் இவனுக்கு விளக்கம் சொல்லியும் ஒவ்வொன்றையும் புரியவைத்துமே கழிந்துவிடுமோ ??? 

“ம்ம்ச்.. நானும் சொல்றேனே.. நந்தினி வீட்டுக்கு வந்து இன்வைட் செய்த பிறகும் போகாமல் இருந்தா நல்லா இருக்காது.. நீங்களும் தானே சரின்னு சொன்னிங்க..”

“ நான் சொல்வேன்.. ஆனா உன்னை யார் போக சொன்னது.. யார் வந்து அழைத்தாலும் போயிடுவியா ??“ என்று ரகுநந்தன் கத்திக்கொண்டு இருக்கும் பொழுதே அவனது அலைபேசி அழைத்தது..

“ ச்சேய் இது வேற.. நேரம் காலம் இல்லாம “ என்று கடுத்துகொண்டே எடுத்து காதில் வைத்தான்..

அடுத்த நொடி அவனது முகம் மாறிவிட்டது.,… “ இதோ.. உடனே வரேன் சார்.. ஓகே” என்று கூறிவிட்டு  சென்றுவிட்டான்.

 “ என்ன தைரியம் இவனுக்கு.. பேசிட்டு இருக்கும் போதே பாதியில் போறது ?? இருக்கட்டும் இங்க தானே வந்தாகணும்.. வரட்டும்.. இன்னைக்கு எனக்கு ஒரு முடிவு தெரிஞ்சு தான ஆகணும்..” என்று கருவிக்கொண்டே இருந்தவள் படக்கென்று அமர்ந்துகொண்டாள்..

அடக்கப்படும் கோவத்தினால் மூச்சு வாங்கியது.. “ என்னை பார்த்தால் இவனுக்கு எப்படி இருக்கிறது.. புதிதாய் திருமணம் ஆனவர்கள் போலவா  இருக்கிறோம்?? இவனெல்லாம் வெளிநாட்டில் என்னதான் கிழித்தானோ??” என்று தன்போக்கில் எண்ணியவளுக்கு இப்படி வெறுமென அமர்ந்திருப்பதே எரிச்சலாய்..

அவன் வரும் வரை ஏதாவது செய்யலாம் என்று எண்ணி சுற்றி முற்றி          பார்த்தவளுக்கு நேராய் மேஜையின் மீது அடுக்கி வைத்திருந்த அவனது உடைகள் காட்சியளித்தது..

“என்னை மட்டும் அது செய் இது செய்ன்னு ஆர்டர் போட வேண்டியது.. ஒழுங்கா டிரஸ் கூட அடுக்க தெரியலை “ என்று அதற்கும் அவனையே திட்டிக்கொண்டு அவனது உடைகளை எல்லாம் எடுத்து பீரோவை திறந்தவள் ஒரு நொடி அப்படியே நின்றுவிட்டாள்..

அத்தனை அலங்கோலமாய் இருந்தது.. உடைகள் எல்லாம் கண்டேத்தமாக இருந்தது..

“வரட்டும்.. இவன் பீரோவை ஒழுங்கா வைக்க தெரியலை, என்னை சொல்ல வந்துட்டான்.. எல்லாத்துக்கும் மிது மிதுன்னு கத்த வேண்டியது.. இத்தனை நாள் பீரோ பக்கமே என்னை விடாம இருந்தான்ல.. இதுனால தானா இவன் லட்சணம் எனக்கு தெரிஞ்சிட்டா, இவன் கெளரவம் என்ன ஆகும் அதான் “ என்று தன் போக்கில் அவனை திட்டி கொண்டே அவனது உடைகளை எல்லாம் வெளியில் எடுத்துபோட்டு மடக்க ஆரம்பித்தாள்..

ஒருவழியாய் அனைத்தையும் அழகாய் மடக்கி அடுக்க கிளம்பியவள் அவனது பீரோவில் வித்தியாசமாய் ஒரு அட்டை பெட்டி இருப்பதை கண்டு கையில் எடுத்தாள்..

திறந்து பார்த்தவள் திகைத்தாள்… சிலது அவனும் அவனது அன்னையும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்.. மற்றது எல்லாம் அவனும் லிசியும்… சில படங்களை பார்க்கவே அவளது கண்களும் மனமும் கூசியது…

இதை எல்லாம் பார்க்க கூடாது என்று மனம் சொன்னாலும், அவளால் அதை ஏற்றுகொள்ள முடியவில்லை.. ஒவ்வொரு புகைப்படத்திலும் லிசியுடன் அத்தனை நெருக்கம், அத்தனை சிரிப்பு, அத்தனை காதல்….

இருவரை மிதிலா ரகுநந்தனிடம் எதிர்பார்த்த அத்தனையும் லிசியோடு இருந்த  ரகுநந்தன் பிரதிபளித்தான்.. என்னதான் இவையெல்லாம் அவனுடைய கடந்த காலம், என் மனதில் லிசி இல்லையென்று அவன் கூறினானே என்று மனம் திடம் பெற முயன்றாலும் மிதிலாவின் காதல் கொண்ட மனமோ ஏற்க மறுத்தது.. ஏங்கி தவித்தது..

ஒரு நாள், ஒரு பொழுது, ஒரு நிமிடம் என்னை இத்தனை காதலாய் பார்த்திருப்பானா ?? இவன் கண்களிலேயே அத்தனை அன்பும் நேசமும் தெரிகிறதே.. ஆனால் ஒரு முறை கூட என்னிடம் இத்தனை நெருக்கம் காட்டியது இல்லையே.. இவன் காதலை நான் உணர்ந்ததே இல்லையே என்று எண்ணும் பொழுதே அவளது நெஞ்சம்  அவன் காதலை உனக்கு உணர்த்தவே இல்லையே என்று கூறியது. இன்னதென்று சொல்ல முடியாத எதற்கோ ஏங்கியது மனம்.

அத்தனை நெருக்கமாய் தினம் தினம் இருந்த போதும் ஒருநாள் கூட என்னை நந்தன் இப்படி கண்டது இல்லையே.. ஒரு வேலை என் மீது காதலே இல்லையோ ?? அதனால் தான் இப்படி நடந்துகொள்கிறானோ ?? ஆனால் மனதில் இன்னொருத்தி இருக்கும் பொழுது என்னை எப்படி இவனால் அணைக்க முடிந்தது ?? அத்தனை ஆசையாய் தீண்டினானே??

எத்தனை முத்தங்கள், மூச்சிரைத்தாலும், இதழ்கள் வலித்தாலும் அத்தனை வேகமாய் முத்தமிடுவானே?? அதெல்லாம் பொய்யாகுமா ?? மிது மிது என்று ஓயாமல் என்பின்னே சுற்றுவானே ??  

ஒருவேளை அது ஆசை தானோ அன்பு இல்லையோ??? காதல் இல்லையோ வெறும் காமம் தான் இருந்ததோ ??? கடவுளே… மிதிலாவிற்கு நினைக்க நினைக்க இருதயம் வெடித்துவிடும் போல இருந்தது..

அந்த புகைப்படங்களை கையில் வைத்திருப்பதே அவளுக்கு தீ சுட்டது போல இருந்தது.. வேகமாய் அதனை எல்லாம் இருந்த இடத்தில் வைத்தவள் அதே பெட்டியில் ஒரு சிறிய டைரி இருந்ததை கண்டு அதை எடுத்தாள்..

அதை எடுக்காதே,, இதனால் உன் நிம்மதி கெடும் என்று மனதின் ஓரத்தில் ஒரு குரல் ஒலித்தது.. ஆனாலும் அவளது நேரம் அதை கையிலெடுத்து பிரித்து படித்தாள்.. முதலில் இருந்தது அவனது அன்னை அவனுக்கு கடைசியாய் எழுதிய கடிதம் இருந்தது.. அதனை படிக்கும் பொழுது அந்த நிலையிலும் ரகுநந்தனை எண்ணி அவளுக்கு அழுகை தான் வந்தது..

எத்தனை துடித்திருப்பான் என் நந்தன் ?? அவன் அன்னை சொல்லியதற்காகவே இங்கே வந்தானே. அத்தனை நேசமா தன் தாய் மீது ?? ஆனால் என் மீது மட்டும் அந்த நேசம் இல்லாமல் ஏன் போனது ?? 

அதன் பிறகு இன்னும் சில காகிதங்கள் இருந்தன… அதனை எல்லாம் எடுத்தவள் படிக்க படிக்க அப்படியே இடிந்து போய் அமர்ந்துவிட்டாள்.. கண்களில் இருந்து அவளை அறியாமல் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.. 

எத்தனை நேரம் அப்படி இருந்தாளோ அவளுக்கு தெரியவில்லை.. தலையை இறுக பற்றி அமர்ந்திருந்தவள் ஆழ மூச்செடுத்து தன்னை நிலை படுத்திக்கொண்டாள்.. கண்களை துடைத்து அனைத்தயும் இருந்த இடத்தில வைத்துவிட்டு தன்னுடைய உடைமைகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு தன்னுடைய பழைய அறைக்குள் நுழைந்துவிட்டாள்..

இவர்களின் சண்டையும், ரகுநந்தன் கோவமாய் வெளியே சென்றதையும் ஜெகதாவும், கோகிலாவும் பார்த்துக்கொண்டு தான் இருந்தனர்..

சிறிதாய் ஏதாவது சண்டையாய் இருக்கும் எல்லாம் சரியாகிவிடும், என்றே எண்ணினர். ஆனால் நேரம் ஆக ஆக மிதிலா கீழே இறங்கி வராததும், சிறிது நேரத்தில் அவளது பழைய அறையில் அவள் நுழைந்து கொண்டதும் ஜெகதாவிற்கு பகீரென்றது…

“ என்ன கோகிலா இது?? இவ பாட்டுக்கு அந்த ரூமில போய் கதவை சாத்திகிட்டா..”

“ இல்லைமா நேத்தே மிதிலா சொல்லிட்டு தான் இருந்தா அந்த ரூமை கிளீன் பண்ணனும்னு.. அதை செய்வாளா இருக்கும்…” என்று கூறவும் சற்றே சமாதனம் ஆனார்..

சிறிது நேரத்தில் ரகுநந்தன் வேகமாய் உள்ளே வந்தான்.. “ பாட்டி, மிது… “ என்று அழைத்தபடி உள்ளே நுழைந்தவனை கேள்வியாய் கண்டனர் ஜெகதாவும் கோகிலாவும்….

“என்ன பாட்டி ஏன் இப்படி பார்க்குறிங்க?? மிது எங்க ?? மிது.. மிது டியர்…” என்று அழைத்தவனுக்கு எந்த பதிலும் இல்லாது போகவும் திரும்பி தன் பாட்டியை பார்த்தான்..

“அவ பழைய ரூம்ல இருக்கா நந்து…”

“ ஏன் ?? அங்க என்ன பண்றா ??”

“கிளீன் பண்ணனும் சொன்னா தம்பி “

“ஓ!! சரிக்கா அவளை வரச்சொல்லுங்களேன்…” எனவும் கோகிலா மிதிலாவை அழைக்க செல்ல திரும்பினார், அதற்குல் அவளே கீழிறிங்கி வருவதை கண்டு நின்றுவிட்டார்..

“ ஹேய் !! மிது டியர்.. என்ன இது நான் இவ்வளோ கூப்பிட்டேன் “ என்று கூறியபடி அவளது கைகளை பிடித்தவனை ஒரு வெற்று பார்வை பார்த்தாள் மிதிலா.. மெல்ல யாரும் அறியாமல் அவனது கைகளை விலக்கிக்கொண்டாள்..

அவளை பட்டென்று பார்த்த நந்தன் என்னவோ கூற வந்தான் பிறகு “இன்னும் இவளுக்கு கோவம் இருக்கும் போலவே “ என்று அவனாய் எண்ணிக்கொண்டு

“சரி வா மிது முக்கியமான விஷயம் பேசணும்…” என்று கூறவும் முகத்தில் எந்த உணர்வையும் காட்டாது ஜெகதாவின் அருகில் சென்று அமர்ந்துகொண்டாள்..

இது அனைவருக்குமே அதிர்ச்சியை கொடுத்தது.. ரகுநந்தன் மிதிலா இருவருக்கும் திருமணம் நிச்சயம் ஆனதில் இருந்து இன்று வரை மிதிலா ஒருநாள் கூட பிறர் அருகில் அமர்ந்தது இல்லை.. அனைவரின் பார்வையையும் நே சந்தித்தாள் ஒழிய அவளிடம் வேறு எந்த மாற்றமும் இல்லை..

ஆனால் இதை எல்லாம் உணரவேண்டியவனோ அதை உணரும் நிலையில் இல்லை.. அவனுக்கு அவன் சென்று வந்த விசயத்தை பற்றி கூறத்தான் மனம் பரபரத்தது..

“ என்ன நந்து ?? அப்படி என்ன முக்கியமான விஷயம்??” ஜெகதா கேட்கவும்,

“ பாட்டி இது உங்களுக்கு கொஞ்சம் ஷாக்கா தான் இருக்கும், பட் எனக்கும் மிதுக்கும் முன்னமே இதை பத்தி கொஞ்சம் தெரியும்.” என்று பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே ஜெகதா

“ என்ன நந்து ?? மறுபடியும் அந்த விசாலம் எதுவும் பிரச்சனை செய்றாளா என்ன ??” என்று கேட்டார்..

“அதில்லை பாட்டி…” என்று ரகுநந்தன் ஆரம்பிக்கும் பொழுதே அங்கே முகேஷ் வந்து சேர்ந்தான்..

இதை ரகுநந்தன் கூட எதிர் பார்கவில்லை போல.. அவன் முகத்தில் தான் அதிர்ச்சி அதிகமாய் இருந்தது.. அடுத்த நொடி அவனது முகம் கோவக்கனலாய் சீறியது

“உனக்கு என்ன தைரியம், பண்றது எல்லாம் பண்ணிட்டு இப்போ என் வீட்டுகே வந்திருக்க.. அத்தனை திமிரா டா உனக்கு  “ என்று கூறிக்கொண்டே அவனது சட்டையை பிடித்திருந்தான் ரகுநந்தன்..

ஜெகதாவும் கோகிலாவும் முதலில் திகைத்தாலும், பின்னே சுதாரித்து “நந்து வேண்டாம் டா, இவன் என்ன பண்ணான் ?? ஏன் இப்படி எல்லாம் பண்ணற ?? சொன்னா கேளு டா.. மிதி நீயாவது சொல்லேன் மா “ என்று கூறியபடி இருவரையும் விலக்க முயற்சி செய்தார்..

கோகிலாவோ “ மிதி என்ன இப்படி அமைதியா இருக்க ?? போ போய் உன் புருசன சமாதானம் பண்ணு.. ஏதா ஆகிட போகுது மா “ என்று மிதிலாவின் கைகளை பிடித்து எழுப்பவும் தான் அவளுக்கு தன்னை சுற்றி நடப்பதே புரிந்தது.

இத்தனை நேரம் ரகுநந்தன் வந்தது, அழைத்தது, அவன் பேசியது எதுவுமே அவளது எண்ணங்களை எட்டவில்லை.. அவளது மனமெல்லாம் ரகுநந்தன் அக்காகிதங்களில் எழுதிருந்த வரிகளிலேயே உறைந்து நின்றுவிட்டது..

மீண்டும் தன் உணர்வுகள் அவளை சுற்றி வளைக்க முயற்சித்தாலும், கோகிலாவின் பேச்சும், ஜெகதாவின் பதற்றமும் அவளது மனதை திசை திருப்பியது..

ஜெகதாவினால் என்ன முயன்றும் ரகுநந்தனை அமைதி படுத்த முடியவில்லை.. இந்த முகேஷாவது விலகுவான் என்று பார்த்தால், அவனோ இவன் கொன்று போட்டால் கூட நான் இப்படியே தான் நிற்பேன் என்பது போல இருந்தான்..

ஒருசில நொடிகள் தான் மிதிலா இதையெல்லாம் பார்த்தாள், ரகுநந்தன் முகத்தில் இருந்த கோபமும், முகேஷ் முகத்தில் இருந்த வருத்தமும் அவளுக்கு வேறு எதையோ உணர்த்தியது..

தான்  உணர்ந்தது சரியோ தவறோ, நிலைமை இன்னும் மோசமாகும் முன் இதை சரி செய்ய வேண்டும் என்று எண்ணியவள்  வேகமாய் ஜெகதாவை பிடித்து அமர வைத்தாள்..

“ நீங்க உட்காருங்க பாட்டி.. நான்.. நான் பார்த்துக்கிறேன்.. டோன்ட் வொரி” என்றவள்

“என்ன இது ??? இது வீடா இல்லை வேறு எதுவுமா ?? இப்படி கூச்சல் போட்டுக்கிட்டு.. ரெண்டு பேரும் படிச்சவங்க தானே.. வீட்டில இப்படியா பீகேவ் பண்றது?? ”  அவர்களுக்கும் மேலாய் சத்தம் போடவும் ரகுநந்தன் சிறிது விலகி நின்றான்..

ஆனால் மறந்தும் கூட மிதிலாவின் பார்வை தன் கணவனிடம் செல்லவில்லை.. முகேஷை கண்ணுக்கு நேராய் பார்த்தவள்

“ சொல்லுங்க முகேஷ், என்ன விஷயம் ?? “ அவளது குரலில் இருந்த மாற்றம் அனைவரையும் சற்றே விழி விரிய வைத்தது.. திருமணத்திற்கு முன்பிருந்த  மீதிலாவின் ஆளுமையும், அதிகாரம் நிறைந்த குரலும் திரும்பியிருந்தது.

முகேஷிற்கே மனதில் லேசாய் ஒரு நடுக்கம் ஓடுவதை உணர முடிந்தது..

“ அது.. அது வந்து….” என்று இழுக்கவும்

“நீ இப்படி எல்லாம் கேட்டா வழிக்கு வரமாட்ட…” என்றபடி மீண்டும் அவனை நெருங்கினான் ரகுநந்தன்..

“ நான் பேசி முடிக்கும் வரை வேற யாரும் நடுவில் பேசக்கூடாது…” என்று கர்ஜித்தாள் மிதிலா.. அவள் கண்களில் இருந்த கோவம் ரகுநந்தனுக்கு வேறு செய்தியை உணர்ந்தியது… அமைதியாய் விலகி நின்றான்..          

“ம்ம் சொல்லுங்க முகேஷ்… என்ன விஷயம் ???”

“ இல்லை.. மிதி… அது சாரி மேடம்…அது வந்து..” என்று ஆரம்பித்தவனை,

“ சி முகேஷ், இங்கயே நம்ம கார்பரேட் கல்ச்சர் தான் பாலோ பண்றம்?? பிறகு என்ன மேடம் அது இதுன்னு.. என்ன சொல்லணுமோ அதை மட்டும் சொல்லுங்க “ என்றால் அழுத்தம் திருத்தமாய்..

“ ம்ம்ம் சரி.. நான் ஜெகதாம்மா கிட்ட கொஞ்சம் பேசனும் “ என்றான் குனிந்த தலை நிமிராமல்..

இதை கேட்ட ஜெகதாவும் “ என்ன முகேஷ், வா இங்க  என்கிட்டே வந்து உட்கார், ஏன் வந்ததில் இருந்து ஒரு மாதிரி இருக்க ?? உனக்கு என்ன பிரச்சனை?? பண்ணையில் எதுவும் பிரச்சனைய ?? அதான் நந்து கோவமா இருக்கானா??” என்று அன்பாய் கேட்டவரை ஒரு நொடி இமைக்காமல் பார்த்தவன் என்ன நினைத்தானோ அடுத்த நொடி சாஸ்டாங்கமாய் அவர் காலில் விழுந்துவிட்டான்..

“ என்னை மன்னிச்சிடுங்க ஜெகதாம்மா…. நான் உங்களுக்கு துரோகம் பண்ணிட்டேன். நான்… நான்  ரொம்ப தப்பு பண்ணிட்டேன்.. என்னை தயவு செஞ்சு மன்னிச்சிடுங்கம்மா.. நான் அடுத்த இந்த பக்கம் கூட வரமாட்டேன்… ப்ளீஸ் “ என்று அவரது காலை பிடித்து கெஞ்சியவனை தலையும் புரியாமல் காலும் புரியாமல் பார்த்தார் ஜெகதா..

விஷயம் ஓரளவுக்கு அறிந்திருந்த மிதிலாவே இதை திகைத்துபோய் தான் பார்த்தாள்.. ஆனால் ரகுநந்தனோ  “ பாட்டி அவன் பொய் சொல்றான்.. நம்பாதிங்க.. கூடவே இருந்து நம்மை அழிக்க சதி பண்ணியிருக்கான் சதிகாரன்… “ என்று கோவமாய் கூறினான்.. 

விட்டால் ரகுநந்தன் முகேஷை மிதித்தே கொன்று இருப்பான்.. ஆனால் மிதிலாவின் வார்த்தைகளை தாண்டி அவனிடம் நெருங்க முடியவில்லை அவனால்..

“ என்ன நந்து நீ…” என்று பேரனை ஒரு பார்வை பார்த்துவிட்டு “ முதல்ல எழுந்திரு முகேஷ், என்ன பிரச்னை ?? என்ன தப்பு பண்ண நீ ?? ஏன் இப்படி எல்லாம் செய்ற “ என்று அவனது கைகளை பற்றி எழுப்பினார் ஜெகதா..

கோகிலாவிற்கு நடப்பது அனைத்தும் சினிமா பார்ப்பது போல இருந்தது..

“ ஜெகதாம்மா.. நான்.. நான்.. அந்த விசாலம்மா சொல்லி தான் உங்கட்ட வேலைக்கு சேர்ந்தேன் “ என்று ஆரம்பித்து அனைத்தையும் சொல்லி முடித்தான்..

ஜெகதாவிற்கு அனைத்தையும் கேட்கும் பொழுது தான் எத்தனை ஏமாற்ற பட்டு இருக்கிறோம் என்பதை எண்ணி வேதனையாக இருந்தது.. ஆனாலும் இதை இப்பொழுதாவது தெரிந்துகொண்டோமே என்று சற்று நிம்மதியாக இருந்தது.

இந்த நிலையில் நான் வேகம் காட்டி பேசினால், என் வயதிற்கும், என் அனுபவத்திற்கும் நன்றாய் இராது என்று நினைத்தவர்

“ ஹ்ம்ம் அப்போ அந்த பொண்ண அனுப்பி, பிரச்னை பண்ண சொன்னது   எல்லாம் உங்க வேலைதானா ??” என்றார் அமைதியாய்

“ஆமாம் “ என்பது போல தலையாட்டினான்.

“ ஹ்ம்ம்.. சரி மில்லுக்கு ஏன் நெருப்பு வைச்ச ??”

“ நெருப்பு வைக்க சொன்னது நான் தான் மா, ஆனா அவன் நெருப்பு வைக்கிறதுக்கு முன்னமே, எதோ கரன்ட் லீக்காகி பிடிச்சிருச்சு. இதை அவன் அவனுக்கு சாதகமா பயன்படுதிக்கிட்டான்.. இத்தனை நாளா என்னை ஏமாத்தி பணம் வேற வாங்கிட்டு இருந்தான்.. எனக்கே இது இன்னிக்கு போலிஸ் ஸ்டேசன்ல தான் தெரியும் “ என்று கூறியவனை நம்பமாட்டாமல் ஒரு பார்வை பார்த்தார் ஜெகதா..

“ சத்தியம்மா… வேண்டும்னா சார்கிட்ட கூட கேளுங்க.. இப்போ சாரும் ஸ்டேஷனுக்கு தான் வந்திருந்தார்.. அவர் முன்னாடி தான் இன்ஸ்பெக்டர் என்கிட்டே கையெழுத்து வாங்கினார்.. “ என்று கூறவும் ஜெகதா ரகுநந்தனை பார்த்தார்.

அவனும் ஆம் என்பது போல தலையாட்ட, ஜெகதாவோ இன்னும் எத்தனை அதிர்ச்சிகள் காத்திருக்கிறதோ என்று எண்ணியவராய்

“ஹ்ம்ம் !!! இவ்வளோ தானா ?? இல்லை இன்னும் வேறு ஏதாவது இருக்கா ?? உனக்கு நான் என்னடா குறை வச்சேன்.. இந்த சொத்து மேல இத்தனை வெறியா உனக்கு ??” என்று கோவமாய் கேட்டவரை மீண்டும் மன்னிப்பு கோரும் பார்வை பார்த்து

“ அம்மா நான் இதை எல்லாம் சொத்துக்காக மட்டும் பண்ணலை.. நான்.. நான்.. இதை இப்போ சொல்ல கூட கூடாது இருந்தாலும் இனிமே நான் இங்க வரப்போறது இல்லை அதுனால சொல்லிடுறேன், நான் நிஜமாவே மிதிலாவை விரும்பினேன் மா.. இதை நானே இப்போ தான் உணர்ந்தேன். சரியா கல்யாண சமயத்தில் அந்த பொண்ணு பிரச்சனை வந்து, நீங்க இந்த கல்யாணத்தை நிருத்திடுவிங்க, அந்த நேரத்தில் என் விருப்பத்தை சொன்னா,

நான் மிதிலாவ கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைச்சேன் மா.. அப்போ சொத்து மேல ஆசை இருந்தது என்னவோ உண்மை தான் ஆனா இப்போ தான் புரியுது நான் எதை நிஜமா நேசிச்சேன்னு.. ஹ்ம்ம் அதான் எல்லாத்தையும் சொல்லிட்டு, உங்ககிட்ட மனசார மனிப்பு கேட்டு போயிடலாம்னு வந்தேன்.. தயவு செய்து என்னை மன்னிக்கணும் மா.. ப்ளீஸ் … மிதிலா நீயும் தான்  ” என்று கையெடுத்து கும்பிட்டான்..

அங்கே ஊசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அமைதி.. செய்த அணைத்து தவறையும் வெளிப்படையாய் கூறி காலில் விழுந்து மன்னிப்பும் கேட்டபிறகு அவனை என்ன சொல்ல முடியும்..

மிதிலாவோ நடப்பது எதுவும், தனக்கு சம்பந்தம் இல்லை என்பது போல இருந்தால்.. ரகுநந்தனுக்கோ உள்ளே குமுறிக்கொண்டு இருந்தது..

“ என்ன தைரியம், என் முன்னாடி என் மிதுவ காதலிச்சேன்னு சொல்றான்… இவனை “ என்று மனதில் வறுத்து எடுத்தபடி நின்று இருந்தான்..

நேரம் காலம் பார்க்காமல் அவனது மனசாட்சியோ “ அடடா !!! என்ன பாசம்  உன் மனைவி மேல.. நீதான் இப்போவரைக்கும் அவளை காதலிக்கலை.. அவனாவது மனசில் இருக்கிறதை சொல்றானேன்னு அமைதியா இரு” என்று அவன் தலையில் குட்டியது..

அந்த நொடி ரகுநந்தன் மனம் என்ன எண்ணியது என்று அவனுக்கே தெரியவில்லை.. காதலா  ??? மிது மீதா ?? எனக்கா ?? இல்லையே நான் இன்று வரை இதை காதல் என்று சொன்னது இல்லையே ?? என்று பல கேள்விகள் எழுப்பியது..

“ ஆமாம் எல்லாம் நீ சொல்லித்தான் நடக்க வேண்டுமா ?? காதல் என்று நீ சொல்லாவிட்டால் அதற்கு பெயர் என்னவாம் ?? உனக்கு அவள் வேண்டும், அவளோடான வாழ்வு வேண்டும் அதுவும் மகிழ்ச்சியாக வாழவேண்டும், அவள் எப்பொழுதும் உன் கைகளுக்குள்ளேயே  இருக்க வேண்டும், உனக்கோ நாள் ஒன்றுக்கும் நூறு முறையாவது மிது என்று ஜெபிக்காமல் இருக்க முடியாது.. பிறகு இதெற்கெல்லாம் அர்த்தம் என்னவாம் ??” என்று மீண்டும் கேள்வி கணைகளை தொடுத்தது மனச்சாட்சி..

“ இல்லையில்லை.. இது இது காதல்.. காதல் எல்லாம் இல்லை.. நான்.. எனக்கு மிது வேண்டும் அவ்வளவே “ என்று பதில் உரைத்தவனுக்கு முன்பிருந்த திடம் இல்லை. வார்த்தைகள் தந்தி அடித்தன… அவனது மனசாட்சியோ கைதட்டி சிரித்தது…

“ அட முட்டாளே !!! அந்த வேண்டும் என்பதற்கான அர்த்தம்  என்ன ?? மகனே உனக்கு காதல் என்றோ வந்துவிட்டது, அதை நீ உணரவும் இல்லை உன் காதலிக்கு உணர்த்தவும் இல்லை.. இனியாவது விழித்துப்பார்.. உன் முட்டாள் தனமான எண்ணங்களை எல்லாம் விட்டு நிஜம் எது என்று யோசி.. லிசி உன் வாழ்வில் பொய்யாய் போனவள். ஆனால் மிதிலா, தன் வாழ்வையே உனக்காய் கொடுத்தவள்.. அவளுக்கான உன் நேசத்தை இனியாகினும் நீ புரிந்துகொள்“ என்று சாட்டையடியாய் உணர்த்திவிட்டு மீண்டும் தன்னிடம் புகுந்துகொண்டது ரகுநந்தனின் மனசாட்சி…

“ நான்… காதல்.. மிது…” என்று வார்த்தைகளை தொடர்புபடுத்த முயன்று தோற்று போனான்..  “ நெஜமாவே இது காதல் தானோ ??? ஆனால் ஒருமுறை கூட நான் ஏன் இதை உணரவில்லை…?? ச்சே நான் எத்தனை தவறு செய்துவிட்டேன்… மிது.. அவள் “ என்று இன்னும் என்ன என்ன நினைத்தானோ அப்படியே அமர்ந்திருந்தான்     

விட்டால் தன் நினைவுகளிலேயே மூழ்கி விடுவான் போல இருந்தது..  தன்னையே ஒரு உலுக்கு உலுக்கியவன் அப்பொழுதுதான் சுற்றத்தை உணர்ந்தான்.. அங்கே முகேஷ் இல்லை.. மிதிலாவும் இல்லை.. ஜெகதா கோகிலாவிடம் ஏதோ வருத்தமாய் பேசிக்கொண்டு இருந்தார்..

“ என்ன இது ?? அப்போ இத்தனை நேரம் நடந்தது எல்லாம் கனவா ?? இந்த முகேஷ் வந்தானே, அவனை நான் அடிச்சேனே.. மிது.. மிது எங்க.. இங்க தானே இருந்தா “ என்று சுற்றி முற்றி பார்த்தவன்

“ பாட்டி அவன், அவன் அந்த முகேஷ் எங்க ??” என்று சத்தமாய் கேட்டான்..

“ அதுக்கு ஏன் டா இவ்வளோ சத்தமா கேட்கிற ??” என்று சலித்துக்கொண்டே “ அவன் போயிட்டான்.. இனி என்ன செய்ய முடியும் சொல்லு.. இந்த விசாலமும் இப்பதான் கொஞ்சம் அடங்கியிருக்கா.. இவனும் மன்னிப்பு கேட்டான். இப்போ போய் நம்ம வீராப்பு காட்டினா மேலும் பிரச்சனை தான் வரும். அதான் அவனுக்கு கணக்கு எல்லாம் முடிச்சு அனுப்பியாச்சு..” என்று கூறியவரை பார்த்தவன்

“ம்ம்ம் சரி பாட்டி… மிது.. மிது எங்க ??” என்றான்.. அவனது கண்களோ இந்த நொடியே அவனது காதலை உணர்த்திட துடித்தது.. ரகுனந்தனின் ஒவ்வொரு அணுவும் மிதிலாவிற்காக துடித்தது..

“ என் மிது “ என்று மனதில் மென்மையாய் கூறிக்கொண்டான்..

அவனது முகத்தில் தெரிந்த மாறுதல்களை கண்ட ஜெகதாவின் முகமும் புன்னகை பூசியது “ இதோ வந்திடுறேன்னு போனா நந்து..” என்றார்.. 

“ ஹ்ம்ம் அப்படி என்ன வேலை இவளுக்கு.. நான் வேற சண்டை போட்டேன்.. லூசு மாதிரி தான் பீகேவ் பண்ணேன்.. ச்சே ரொம்ப பீல் பண்ணியிருப்பா.. அவட்ட முதல்ல எல்லாம் பேசணும்.. அன்னிக்கு சதிஸ் கூட சொன்னானே.. “ நினைத்தபடி மிதிலாவிற்காய் காத்திருந்தான்..

அவன் காத்திருப்பிற்கு பதிலாய் மிதிலா படியிறங்கி வந்தாள்.. அவளை கண்டவன் அதிர்ந்து எழுந்து நின்றான்.. அவளது தோற்றம், நடை, உடை, பாவனை என அனைத்தும் பழைய மிதிலாவாய் வந்தாள்.. ஆனால் பெயருக்கு கூட முகத்தில் மகிழ்ச்சி இல்லை…      

                                                                                                                                                 

                          

         

                                                      

 

Advertisement