Advertisement

நேசம் – 20

“ ஹப்பா..!!!! விசாலம் பாட்டி கையெழுத்து போடவும் தான் மிது நிம்மதியா இருக்கு.. ஒருவழியா இந்த பிரச்சனை முடிஞ்சது.. இல்லைனா யாருமே நிம்மதியா இருக்க முடியாது“ என்று கார் ஒட்டியபடி மற்றொரு கரத்தால் மிதிலாவின் கைகளை பற்றியபடி பேசிக்கொண்டு இருந்தான் ரகுநந்தன்.

“ ம்ம் ஆமா நந்தன்.. நான் கூட இந்த விசாலம் பாட்டி ரொம்ப பிரச்சனை செய்வாங்கன்னு நினைச்சேன்.. நல்ல வேலை.. எப்படி நீங்க இந்த பாயிண்டை திங் பண்ணிங்க.. ??” இன்னும் நம்ப முடியாதவளாய் கேட்டாள் மிதிலா..

ரகுநந்தனின் முகத்தில் சற்றே குறும்பு கூத்தாடியது.. “ அதுவா மிது டார்லிங்… “ என்று வேண்டுமென்றே இழுத்தான்..

“ ஹ்ம்ம் நீங்க இழுக்கிற விதமே சரியில்ல.. ரோட்டை பார்த்து வண்டியோட்டுங்க.. “ என்று தன் கைகளை விலக்கிக்கொண்டாள்..

“ அட என்ன பேபி நீ.. ஒரு பிளோல சொல்ல வந்தா நீ இப்படி சொல்ற.. நீ ரொம்ப மோசம் மிது… “ என்று வேண்டுமென்றே அவளது கைகை பிடித்து இழுத்து இடையோடு அணைத்தான்.

“அட என்ன நந்தன் நீங்க, இது கார்ப்பா… இப்படி பண்ணிங்க ரெண்டு பெரும் போய் முட்டி மோத வேண்டியது தான். வீட்டிலும் இதே வேலை தான் பண்றீங்க.. கோகிலாக்கா கிட்ட கிண்டல் வாங்குறது மட்டும் நான் “ என்று அவனை செல்லமாய் கடிந்தபடி வெளியே பார்த்தவள்

“ நந்தன்.. நந்தன்.. சீக்கிரம் அங்க பாருங்களேன்…”  என்று வெளியே கையை காட்டினாள்.. மிதிலாவின் குரலில் இருந்த மாறுதலை உணர்ந்த ரகுநந்தன் காரை சற்று ஓரமாய் நிறுத்தி அவள் காட்டிய பக்கம் பார்த்தான்..

முகேஷ் தான் யாருடனோ காரசாரமாய் பேசிக்கொண்டு இருப்பது போல இருந்தது.. அந்த ஆளின் முகம் இவர்களுக்கு தெரியவில்லை.. முகேஷ் நின்றிருந்தது கூட இவர்களுக்கு பக்கவாட்டில் தான் தெரிந்தது.. அவன் கையை நீட்டி, முகத்தை சுளித்து பேசியவிதம் யாருடனோ இவன் கோவமாய் கதைப்பது போல இருந்தது..

“ என்னப்பா இவன், நடு ரோட்டில நின்னு இப்படி யார் கூட கோவமா பேசிட்டு இருக்கான்.. “ என்று தன் கணவன் முகம் பார்த்தாள் மிதிலா.. ரகுநந்தனின் முகத்தில் யோசனை அப்பிக்கிடந்தது.. கடந்த சில நாட்களாகவே முகேஷின் நடவடிக்கைகள் சரியில்லை..

மிதிலாவின் திருமணத்தால் இப்படி இருக்கிறான் போல என்று எண்ணியிருந்தான் ரகுநந்தன்.. ஆனால் இவனிடம் வேறு எதுவோ இருப்பது போலவே அவனுக்கு தோன்றியது..

யாருடனோ அடிக்கடி பேசுகிறான்.. சில நேரம் கோவமாய், சில நேரம் அதிகாரமாய்.. இப்படி அவனது பலவித முக மாறுதல்கள் ரகுநந்தனை குழப்பத்தில் ஆழ்த்தியிருந்தன.. இதை பற்றி மேற்கொண்டு சிந்திக்க விடாமல் இந்த உயில் பிரச்சனை வேறு வந்ததால் முகேஷின் சிந்தனையை ஓரம் கட்டியிருந்தான்..

ஆனால் இன்று இவன் வெளிப்புறம் என்றும் பாராமல் யாருடன் இத்தனை கோவமாய் பேசுகிறான். யார் அந்த நபர் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்தது ரகுநந்தனுக்கு..

“ மிது.. நீ உள்ளேயே இரு.. நான் என்னானு பார்த்துட்டு வரேன்..” என்று இறங்க போனவனை

“ நந்தன் வேண்டாம்.. ஒருவேளை அவனுக்கு தெரிஞ்சவங்களா கூட இருக்கலாம்… தேவையில்லாம நம்ம தலையிட கூடாது.. இங்கயே இருக்கலாம் ஒருவேளை எதாவது பிரச்சனை மாதிரி தெரிஞ்ச போங்க…” என்று நிறுத்திவைத்தாள்..

“ இல்ல மிது..” என்று நந்தன் மிதிலாவிற்கு பதில் கூறும்பொழுதே முகேஷ் பேசிகொண்டிருந்த ஆள் அவனிடம் இருந்து நடந்து வந்தான்..

ரகுநந்தனுக்கு இந்த மனிதனை எங்கோ பார்த்தது போல இருந்தது.. அந்த ஆளுக்கு எதிரே நின்றிருந்த இவர்களின் காரை கண்டதும் முகம் ஒருமாதிரி இருண்டது.. ஒரு சில நொடிகள் தான் இந்த மாற்றம்.. பின் முகேஷை திரும்பி பார்த்தவன் வேகமாய் நடையை கட்டிவிட்டான்.. கிட்டத்தட்ட ஓடாத குறைதான்..

“என்னப்பா இவர் இப்படி ஓடுறார் ??? “ என்று கேட்டபடியே மிதிலா திரும்பி பார்த்தாள், முகேஷ் வருவதும் தெரிந்தது.. இப்பொழுது ரகுநந்தன் இறங்கியிருந்தான். மிதிலாவும் கூட இறங்கினாள்.. முகேஷின் முகத்தில் எதோ ஒரு பதற்றம் இருப்பது போல தெரிந்தது இருவருக்கும்..

“ என்ன முகேஷ்.. இந்நேரத்தில் இந்த பக்கம்..” என்று வினவிய நந்தன் அவன் முகத்தையே கூர்ந்து பார்த்தான்.. “ என்னாச்சு இவனுக்கு ஏன் இவ்வளோ டென்சனா இருக்கான் ??” என்று யோசித்தபடி முகேசை கவனிக்க ஆரம்பித்தான்..

மிதிலாவை கண்டதும் ஒருநொடி அவன் முகம் வேறு சில பாவனைகளை கொண்டது.. “ மிதி… மிதிலா.. எப்படி இருக்க?? கல்யாணத்து அன்னிக்கு பார்த்தது.. அடுத்து வீட்டுக்கு வரமுடியலை…” திக்கி திணறினான்..

ரகுநந்தனுக்கோ மனதில் ஏக கடுப்பு.. நான் இவனிடம் கேள்வி கேட்டால் இவன் மிதிலாவிடம் பேசுகிறான் என்று..

மிதிலா பதில் கூறும்முன் “ முகேஷ்.. உங்கட்ட கேள்வி கேட்டது நான்.. சரி அதை விடுங்க, அதென்ன மிதிலான்னு பேர் வச்ச மாதிரி கூப்பிடுறிங்க?? கால் ஹேர் அஸ் மேடம்.. சரியா ??” என்று அழுத்தம் திருத்தமாய் சொன்னவனை திகைத்துப்பார்தான் முகேஷ்..

மிதிலாவிற்கே கூட இது சிறு அதிர்வு தான்.. அவளுக்கு தெரிந்து முகேஷ் வேலைக்கு சேர்ந்ததில் இருந்து அப்படி தான் அழைக்கிறான். அதை ஜெகதாவும் எதுவும் சொன்னதில்லை.. மிதிலாவிற்கும் இதில் தவறொன்றும் இருப்பது போல தெரியவில்லை.. ஆனால் ரகுநந்தன் கூறும் பொழுது அவளுக்கு எப்படியோ இருந்தது..

“ ஸ் !! நந்தன் என்னப்பா இது ???!!!” என்று கேட்டவளுக்கு அவனது வெற்று பார்வை மட்டும் தான் பதிலாய் கிடைத்தது..

முகேஷிற்கு ஒருபக்கம் அவமானமாய் இருந்தது.. என்னதான் சம்பளம் கொடுக்கும் முதலாளி என்றாலும் ஒரு சகவயதினனை இப்படியா நடந்துவது?? மனம் குமுறியது அவனுக்கு ஆனாலும் எதையும் வெளிக்காட்டாமல்

 “ இட்ஸ் ஓகே மிதி.. சாரி மேடம்… இட்ஸ் ஓகே… சரிங்க சார் நான் வரேன் “ என்று கூறி வேகமாய் சென்றுவிட்டான்.. மிதிலாவிற்கு கூட பாவமாய் இருந்தது..

கார் சீட்டில் அமர்ந்தபடி “ என்ன நந்தன் இது?? இப்போ இதெல்லாம் அவசியம் தானா ?? “ என்றாள்..

“ ஏன் ?? நம்மகிட்ட வேலை பார்க்கிறான், மேடம்ன்னு சொன்னா என்ன தப்பு ?? அதென்ன என்னவோ இவன் பேர் வச்ச மாதிரி மிதிலான்னு கூப்பிடுறான்…” என்றான் பதிலுக்கு கடுப்பாய்..

“ ஸ்ஸ்!! ஆரம்பிச்சுட்டான்.. “ என்று நொந்தவள் அமைதியாய் வெளியே திரும்பிக்கொண்டாள்..

சற்றுமுன்னே முகேஷிடம் கோவமாய் பேசிய அந்த நபர் இவர்கள் நின்றிருக்கிறார்களா இல்லையா என்பது போல ஒரு கடையில் தடுப்புக்கு பின்னே நின்று பார்ப்பதும் மறைவதுமாய் இருந்தான்.. அது மிதிலாவின் கண்களில் பட்டது.. அவளுக்கு ஏனோ வித்தியாசமாய் இருந்தது..

“ நந்தன்.. நந்தன்.. அங்க.. அந்த.. அவனை கொஞ்சம் பாருங்களேன்..” என்றாள் வேகமாய்..

“ ம்ம்ச் மறுபடியும் என்ன மிது…” என்று லேசாய் சலித்தவாறே பார்த்தவனுக்கும் அந்த ஆளின் நடவடிக்கைகள் வித்தியாசமாய் இருந்தது..

மிதிலாவிற்கு அந்த நபரை எங்கோ பார்த்தது போல இருந்தது. ஆனாலும் சரியாய் அடையாளம் தெரியவில்லை..

“ ஒருவேலை பண்ணையில் வேலை பார்ப்பவரோ?? ஹ்ம்ம் எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே…” என்று யோசிக்கையில்

“ மிது வீட்டுக்கு ரிடர்ன் போகும்போது, இந்த பைலை இன்ஸ்பெக்டர்கிட்ட கொடுக்கணும். “ என்றாவாறு ஒரு பைலை மிதிலாவின் கையில் கொடுத்தான். என்ன இது என்பது போல பார்த்தாள்..

“ நீ நைட் ஷிப்ட்டுக்கு ஒரு முப்பது எம்ப்ளாயிஸ் அப்பாயின்ட் பண்ணிருந்தல மிது அவங்க டீடைல்ஸ் இன்ஸ்பெக்டர் கேட்டார் “ என்றபடி காரை ஓட்டினான்..

“ ஓ !!!” என்றபடி அந்த பைலை புரட்டினாள் இரண்டு பக்கம் புரட்டியவள் “ நந்தன்.. நந்தன் ஸ்டாப் தி கார்…” என்று பதட்டமாய் கூறவும் அவன் என்னவோ எதோ என்று வேகமாய் வண்டியை ஓரங்கட்டினான்..

“ என்ன மிது ?? வாட் ஹெப்பேன் ???”

“ இங்க பாருங்களேன்.. இந்த போட்டோ?? இவர்.. இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னே பார்த்தமே அந்த ஆள் மாதிரி இல்லை..” என்று ஒரு புகைப்படத்தை காட்டினாள்..

வாங்கி பார்த்த அவனுக்கும் முகேஷோடு பேசிய அந்த நபரை போலத்தான் தோன்றியது.. ஒருநொடி தன் மனைவியின் முகத்தை பார்த்தான்.. மீண்டும் அந்த புகைப்படத்தை பார்த்தான்..

“ மிது.. இவன் மில்லுக்கு பத்து நாள் தான் வேலைக்கு வந்திருக்கான்.. சரியா கடைசியா வேலைக்கு வந்த நாள் தான் அங்க பாயர் ஆக்ஸிடென்ட்..” என்று ரகுநந்தன் கூறவும் மிதிலாவின் முகம் வெளிறியது.

சிறு நேர மௌனத்திற்கு பின் “ அப்போ நந்தன்… இது.. இவன் கூட அந்த முகேஷ் பேசினானே.. அப்போ…” என்று மேலும் கேட்க தெரியாமல் திகைத்தாள்.. முகேசால் இப்படி எல்லாம் கூட செய்ய முடியுமா என்ன ?? இந்த கேள்வியே அவளது மனதை போட்டு வாட்டியது.. அவன் மனதில் சிறிதும் விசுவாசம் இல்லை..

“ ஹ்ம்ம் இப்போதான் எனக்கும் இப்படி இருக்குமோன்னு நினைக்க தோணுது மிது.. கொஞ்ச நாளாவே இந்த முகேஷ் ஆக்டிவிட்டீஸ் சரியே இல்லை.. யாருக்கோ அடிக்கடி பேசுறான்.. சில நேரம் கோவமா!! சில நேரம் அதிகாரமா !! என்னைய பார்த்ததும் அவன்கிட்ட இப்போயெல்லாம் அதிக பதட்டம் இருக்கு.. நான் கூட நம்ம மேரேஜ் நடந்ததால இப்படி பீகேவ் பண்ணுறானு நினைச்சேன்.. பட் சம்திங் இஸ் தேர்..” என்று கூறியவனின் முகத்தில் யோசனை அப்பிக்கிடந்தது..

இருவருக்குமே மேற்கொண்டு என்ன பேசுவது என்று தெரியவில்லை.. கண் முன்னே கண்டதை அப்படியே நம்புவதா?? இல்லை இதற்கெல்லாம் வேறு ஏதாவது காரணம் இருக்குமா என்றெல்லாம் இருவருக்கும் புரியவில்லை. முகேஷ் இதில் இருக்கிறான் என்றால் நிச்சயம் ஜெகதாவின் மனம் வருத்தப்படும்..

அவன் இப்படி ஒரு காரியம் செய்தது உறுதியென்றால் அவனது நம்பிக்கை துரோகத்திற்கு மன்னிப்பே இல்லை.. ஆனால் இதை எப்படி யாரிடம் சென்று, கேட்டு தெளிவுபடுத்தி கொள்வது??

சிறு நேர யோசிப்பு தான், ரகுநந்தன் முடிவு செய்துவிட்டான்.. தப்பு யார் மீது இருந்தாலும் சரி அவர்களுக்கு தண்டனை நிச்சயம்..

“ மிது, இன்ஸ்பெக்டர் கிட்ட போய்ட்டு எல்லாம் சொல்லலாம்.. அவர் மேற்கொண்டு என்ன சொல்றார்ன்னு பார்க்கலாம்.. அதுவரைக்கும் பாட்டிகிட்ட எதுவும் சொல்லவேண்டாம்..” என்றவனுக்கு சரியென்று சொல்வதை தவிர வேறு என்ன சொல்ல முடியும் அவளால்..

தாங்கள் கண்டது, முகேஷின் நடவடிக்கை, அந்த புதியவனின் நடவடிக்கை என்று ஒன்றுவிடாமல் ரகுநந்தன் போலீசிடம் கூறினான்.. அவரும் அமைதியாய் கேட்டபின்

“ ஹ்ம்ம் ஓகே Mr. ரகுநந்தன், முகேஷ் மேல உங்களுக்கு சந்தேகம். பட் இத்தனை நாளா அவன் இந்த சீன்லையே இல்லை.. பட் அவன் இதை செய்திருப்பான்னு சொல்ல ஏதா ரீசன் வேணுமே?? எதா மோடிவ் இருக்கா என்ன ??” என்று விசாரித்தார்.

கணவனுக்கும் மனைவிக்கும் சில தயக்கம் இருந்தது.. இந்த காரணங்களை வெளியில் கூறவேண்டாம் என்றே நினைத்து இருந்தாள் மிதிலா. ஆனால் இன்று இத்தனை தூரம் நடந்தபின்பு போலீசிடம் கூறாமல் இருந்தால் அது சரியாய் இருக்காது என்று எண்ணி, முகேஷ் மிதிலாவை திருமணம் செய்ய கேட்டது. பிறகு இந்த சொத்தின் மீது இருக்கும் விருப்பம் அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறினாள்.

இதை எல்லாம் கேட்கும் போது ரகுநந்தனின் முகம் சுருங்கியது தான்.. அவனுக்கு மனதில் ஏனோ தன் அன்னையின் நியாபகம் வந்தது.. இப்பொழுது நடக்கும் விசாலம் பிரச்சனை ஆகட்டும், இல்லை இந்த முகேஷின் பிரச்சனை ஆகட்டும்அனைத்திற்குமே காரணம் தன் அன்னை அன்று இந்த வீட்டை விட்டு அனைத்தையும் விட்டு சென்றது தானோ என்று தோன்றியது..

உடையவர்கள் இல்லாமல், உறவுகள் இல்லாமல், இத்தனையும் ஜெகதா எப்படித்தான் சமாளித்தாரோ என்று தோன்றியது..

“ அம்மா மட்டும் இங்கயே இருந்திருந்தா இது எல்லாம் இப்போ நடந்தே இருக்காது.. பாவம் ஜெகதா பாட்டி எத்தனை கஷ்டத்தை தனியா சமாளிச்சாங்கலோ ?? ஹ்ம்ம் மிதுவை மட்டும் தத்து எடுக்காம இருந்திருந்தா நிச்சயம் பாட்டி நிம்மதியா இருந்திருக்க மாட்டாங்க.. அம்மா ஏன் இப்படி பண்ணிங்க ?? பாருங்க நமக்கு சொந்தமானதை யார் யாரோ உரிமை கொண்டாடா என்னென்னவோ பண்றாங்க.. “ என்று மானசீகமாய் தன் அன்னையிடம் கேட்டான்..

“Mr.ரகுநந்தன்… “ என்று இன்ஸ்பெக்டர் அழைத்தும் அவனிடம் பதில் இல்லை.

“ நந்தன்” என்று மிதிலா அவனது கைகளை அழுந்த பற்றிய பின்னே சுய நினைவிற்கு வந்தான்..

“ ஹா !! என்ன மிது??” அவள் இன்ஸ்பெக்டரை கண்காட்டினாள்..

“ சாரி சார்.. கொஞ்சம் சிந்தனை.. சாரி.. என்ன கேட்டிங்க??”

“ முகேஷோட நம்பர் குடுங்க.. கால் ட்ரேஸ் பண்ணலாம். தென் உங்க பண்ணையோட லேன்ட் லைன் நம்பர் கொடுங்க. அதில இருந்து வேற எதா நம்பருக்கு கால்ஸ் போயிருக்கான்னு பார்க்கலாம்.. சந்தேகம் உறுதியாச்சுன்னா கண்டிப்பா ஆக்சன் எடுக்கிறேன் “ என்று கூறவும் அவர் கேட்டதை கொடுத்துவிட்டு இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்..

வீட்டை விட்டு கிளம்பும் போது மகிழ்ச்சியாய் சென்ற இருவரும், யோசனையும் குழப்பமுமாய் திரும்பவும் ஜெகதாவிற்கு என்ன பிரச்சனையோ ?? என்னவோ என்று ஆகிவிட்டது..

ரகுநந்தன் எதுவும் பேசாமல் மேலே அறைக்கு சென்றுவிட்டான். மிதிலாவை தான் பிடித்துக்கொண்டார் ஜெகதா.

“ மிதிமா என்னடா எதுவும் பிரச்சனையா ?? இந்த நந்து பையன் எதுவும் சொன்னானா?? “ என்று வருத்தமாய் கேட்டார்..

“ ஐயோ !! பாட்டி அதெல்லாம் இல்லை.. கொஞ்சம் வேற டென்சன் அதான்.. போலிஸ் ஸ்டேஷன்ல இருந்து போன் வந்தது அங்க போய்ட்டு வந்தோம்.. அதான் “ என்று பாதி உண்மையும் பாதி பொய்யுமாய் கலந்து கூறினாள்..

“ என்னடா?? போலிஸ் எதுக்கு கூப்பிட்டாங்க?? ஏன் திடீர்ன்னு ??” என்று அதற்கும் பதறினார்.

“ பாட்டி முதல்ல இப்படி எல்லாத்துக்கும் டென்சன் ஆகாம இருங்க.. ஒரு பிரச்சனையும் இல்லை.. “ என்று ஒருவாறு அவரையும் சமாதானம் செய்துவிட்டு ரகுநந்தனிடம் சென்றாள்.

அவனது முகமோ இன்னும் தெளியாமல் இருந்தது.. “ ஹ்ம்ம் சின்ன குழந்தையை கூட சமாளிக்கலாம் போல இவனை ஒவ்வொரு விஷயத்துக்கும் பேசி பேசியே சரி பண்றதுகுள்ள நான் ஓய்ஞ்சு போயிடுறேன்.. இப்ப என்ன நினைச்சு இப்படி இருக்கானோ !!!” என்று புலம்பியபடி

“ என்ன நந்தன், அதான் இன்ஸ்பெக்டர் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்னு சொன்னாரே.. அப்புறம் என்ன ஒருமாதிரி இருக்கீங்க..??”

“ ம்ம்ச்.. நத்திங் மிது..”

“ அதுசரி.. இது என்ன பதில் நந்தன் எது கேட்டாலும் நத்திங்க்னு சொல்லி என் வாயை மூடுறது.. உங்க முகமே காட்டுதே எதோ சரியில்லைன்னு “ என்று சற்றே கடிந்து கேட்டாள்..

அவளது குரலில் சற்றே நிமிர்ந்து அவள் முகம் பார்த்தவன் அவளது மடியில் தலைசாய்த்து,

 “ அம்மா மட்டும் இங்க இருந்து போகாம இருந்திருந்தா இப்போ நடக்கிற எந்த பிரச்சனையுமே நடக்காதுல மிது.. ஆனா ஏன் போனாங்க ?? பாட்டிக்கும் அவங்களுக்கும் எதுவும் பிரச்சனையா ?? ஆனா பாட்டியை பார்த்தா அப்படி இல்லையே. என் அம்மாவும் அப்படி இல்லை மிது..”

“ எனக்கு இங்க வந்தபிறகு கூட இந்த கேள்வி அவ்வளோ தோணலை. சரி இங்க இருக்க பிடிக்காம போயிட்டாங்கன்னு நினைச்சேன்.. ஆனா ஒவ்வொரு பிரச்சனையும் பேஸ் பண்ணும் போது எனக்கு அம்மா ஏன் இங்க இருந்து போனாங்கன்னு கேட்டுகிட்டே இருக்கு டியர். ஆனா பாட்டிக்கு இதெல்லாம் கேட்டு மறுபடியும் பழசெல்லாம் நியாபக படுத்த கஷ்டமாவும் இருக்கு” என்றான்  குழந்தை போல..

மிதிலாவிற்கு நந்தனின் வார்த்தைகளையும், முக மாறுதலையும் பார்த்து மனதிற்கு மிகவும் கஷ்டமாய் போய்விட்டது.. அவளுக்கு அவளது தாய் தந்தையின் முகம் நியாபகத்தில் இல்லை.  நியாபகம் இல்லையென்பதை விட தெரியாது என்றே சொல்ல வேண்டும்.. ஆனால் இவனுக்கு அப்படியில்லை.

“ ஹ்ம்ம் நந்தன்.. ப்ளீஸ் விடுங்கப்பா.. இதெல்லாம் நினைச்சு நம்ம எதுவும் செய்ய முடியாது. தேவை இல்லாத குழப்பமும், வருத்தமும் தான் மிஞ்சும்.. என்ன நடந்ததோ எனக்கும் தெரியாது. ஆனா நிச்சயமா என்ன நடந்து இருந்தாலும் அதில் பாட்டி மேலையோ இல்ல உங்க அம்மா மேலையோ தப்பிருக்காது.. அதுனால தான் இத்தனை வருஷம் கழிச்சு உங்க இங்க உங்களை போக சொல்லிருக்காங்க ” என்றபடி அவனது தலையை கோதினாள்..

அவளது கரங்களை பற்றி முகத்தில் வைத்துகொண்டவன் எதுவும் பேசாமல் கண்கள் மூடி கிடந்தான்.. அவளுக்குமே என்ன சொல்வது என்று தெரியவில்லை.. இவர்களது மோன நிலையை கலைக்கவென்றே கோகிலாவின் அழைப்பு கேட்டது.

“ மிதி.. மிதி ரெண்டு பேரும் கீழ வாங்களேன்..” என்று கூறியபடி கதவை தட்டினார்..

ரகுநந்தனுக்கோ எழ மனமில்லை. மிதிலாவிற்கோ தன் கணவனின் அருகாமையை இழக்க மனமில்லை.. ஆனால் பதில் பேசாமல் இருக்க முடியுமா என்ன??

“ இதோ வரேன் கா “ என்றபடி கதவை திறந்தாள்..

“ மிதி.. கீழ அந்த நந்தினி பொண்ணு அவ புருஷன் எல்லாம் வந்திருக்காங்க.. கீழ வாங்க “ என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.. இவளுக்கோ பகீர் என்றது.

இத்தனை நாள் கழித்து வீடு தேடி தோழி வந்திருக்கிறாள் என்று ஒரு பக்கம் மகிழ்ச்சி இருந்தாலும், இந்த ரகுநந்தன் இதை வைத்து மேற்கொண்டு எதுவும் பிரச்சனை செய்யகூடாதே என்று கலக்கமாயும் இருந்தது..

“ என்ன மிது ???”

“ இல்ல.. கீழ என் பிரன்ட் நந்தனி அவ ஹஸ்பன்ட் எல்லாம் வந்திருக்காங்களாம்!!” என்று இழுத்தாள்.

“என்னவாம்??!!!”

“ தெரியல.. கோகிலாக்கா கீழ வர சொன்னாங்க.. போலாமா “

“ம்ம் நீ முன்னாடி போ.. நான் கொஞ்சம் பிரெஷ் ஆகிட்டு வரேன் “ என்றவனின் குரல் சற்று முன்னே இருந்தது போல இல்லை.. சடுதியில் அத்தனை மாற்றம்..

“ம்ம் சரி..” என்று அவனுக்கு பதில் அளித்துவிட்டு கீழே விரைந்தாள். நந்தனின் முக்தில் வேறு எதுவோ ஒரு உணர்வு..

ஒரு பத்து நிமிட இடைவெளி விட்டு கீழே சென்றான்.. படி இறங்கும் போதே சிரிப்பு சத்தம் காதை பிளந்தது.. மிதிலாவும் நந்தினியும் தான் அரட்டையில் இருந்தனர். அவளது கணவன் ரவியோ தன் இரண்டு வயது குழந்தையை கையில் அடக்க படாத பாடு பட்டுக்கொண்டு இருந்தான்.. இவர்களை பார்த்து கோகிலாவும் ஜெகதாவும் சிரித்தபடி இருந்தனர்..

ரகுநந்தன் கீழே இறங்கி வரவும் அவனை அறிமுக படுத்தி வைத்தாள் மிதிலா.. வந்தவர்களோடு என்ன பேசுவது என்று இவனுக்கு தெரியவில்லை. ரவியோடு இரண்டொரு வார்த்தைகள். ஆனால் அவனது கவனம் எல்லாம் தன் குழந்தையின் மீது இருந்ததால் அதுவும் நின்று போனது..

நந்தினி தான் “ ஓகே மிதி, நாங்க இன்னும் நாலு நாள்ல கிளம்பறோம் பா.. அதான் நாளைக்கு ஒரு சின்ன கெட் டு கெதர் மாதிரி அறேஞ் பண்ணிருகோம். நம்ம கிளாஸ் செட் எல்லாம் வராங்க.. நீயும் உன் ஹஸ்பண்டும் கண்டிப்பா வரணும் “ என்று கூறி ரகுநந்தனிடமும் இரண்டுமுறை கூறிவிட்டே கிளம்பி சென்றனர்..

மிதிலாவிற்கு அத்தனை நேரம் இருந்த கவலை எல்லாம் தன் தோழியோடு பேசிய சிறு நேரத்தில் காணமல் போயிருந்தது.. முகத்தில் கூட புன்னகை ஒட்டிக்கொண்டு தான் இருந்தது.. இதையெல்லாம் ரகுநந்தனின் பார்வை அளவெடுத்து..

ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை மிதிலா மேலும் ஜெகதாவிடம் தன் கல்லூரி கதைகளை பேசியபடி இருந்தாள்.. தன்னை கண்டுகொள்ளாமல் தன் மனைவி இருப்பதை உணர்ந்த ரகுநந்தன் விருட்டென்று எழுந்து சென்றுவிட்டான்.. அவன் இல்லையென்பதே அவளுக்கு கோகிலா சொல்லித்தான் தெரிந்தது..

இரவின் தனிமையில் நந்தனின் அருகே படுத்தவாறு “ அப்போ நாளைக்கு நீங்க சசீக்கிரம் வீட்டுக்கு வந்திடுவிங்கள்ள நந்தன் “ என்று வினவினாள்.

“ எதுக்கு ???” ஒற்றை கேள்வி தான் அவனிடம் இருந்து பதிலாய் வந்தது..

“ அட!! என்னப்பா இது.. நம்ம நாளைக்கு நந்தினி வீட்டுக்கு போகணுமே.. அதுக்குள்ள மறந்துட்டிங்களா ??”

“ போறோம்னு யார் சொன்னா ??!!!” அதுவும் கேள்வி தான்.. அவனது இந்த கேள்வி மிதிலாவை திகைக்க வைத்தது..

“என்ன நந்தன் இது. கொஞ்ச நேரத்துக்கு முன்ன தானே வந்து இன்வைட் பண்ணா.. நீங்க கூட சரின்னு சொன்னிங்களே.. “

“ இன்வைட் பண்றவங்க எல்லாத்துக்கும் பண்ணிட்டு தான் இருப்பாங்க. அவங்க முன்னாடி நம்மளும் சரின்னு தான் சொல்லணும்.. அதுக்காக எல்லா இடத்துக்கும் போயிட்டு இருக்க முடியுமா என்ன.. வேற வேலை இல்ல “ என்றான் கடுப்பாய்..

“ ஓ !! ஏன் பா உங்களுக்கு நாளைக்கு எதுவும் முக்கியமான வேலை இருக்கா? மீட்டிங் எதுவும் ??”

“ எஸ் “

“ ஹ்ம்ம் சரி அப்போ நான் மட்டும் கூட போயிட்டு வரேன். நீங்க வீட்டுக்கு வரும் போது என்னை பிக் அப் பண்ணுங்க “

“ அதெல்லாம் வேணாம்” சட்டென்று பதில் வந்தது அவனிடம்.   

                                                                              

                             

                       


Advertisement