Advertisement

நேசம் – 19

“ஸ்ஸ்!!! நந்தன் போதும்பா… உங்க வெளிநாட்டு பழக்கத்தை எல்லாம் இங்க வெளியிடாதிங்க…” என்று அவனிடம் சிணுங்கியபடியே மிகவும் சிரமப்பட்டு அவனிடம் இருந்து விலகினாள்..

“ என்ன டியர் இப்படி சொல்லற ?? நீதானே நேத்து ஊடல் கூடல்ன்னு எல்லாம் பேசி உசுப்பேத்தின… இப்போ இப்படி சொன்னா எப்படி??” என்று அவளை வால்பிடித்தபடி பின்னேயே சென்றான்…

“ மிதிலா முதல்ல ரெண்டு பேரும் சாப்பிடுங்க” என்று கோகிலா அழைக்கவும் அமைதியாய் சென்றனர்.. ஜெகதாவிற்கோ இனிமேலாவது தன் பேரன் மிதிலாவை நல்லபடியாய் வைத்துக்கொள்வான் என்று எண்ணி மகிழ்ந்தார்.. விதியும் அவரை பார்த்து சிரித்தது..

“ பாட்டி சொல்ல மறந்துட்டேன், இன்னும் கொஞ்ச நேரத்தில் விநாயகம் அங்கிள் அந்த லாயரோட இங்க வரேன்னு சொல்லி இருக்கார்.. “ என்றான் நந்தன்..

இத்தனை நேரம் ஜெகதாவின் முகத்தில் இருந்த நிம்மதி இப்பொழுது இல்லை..

“ம்ம் சரி நந்து.. இப்போ சாப்பிடுங்க..” என்று கூறியவரிடம் மேற்கொண்டு எந்த பேச்சும் இல்லை.. மிதிலா இதை எல்லாம் பார்த்துகொண்டு தான் இருந்தாள்.. ஜெகதாவின் முக மாறுதல்கள் அவளது மனதை பாதித்தது.

மெல்ல நிமிர்ந்து ரகுநந்தனின் முகம் பார்த்தாள்.. அவனோ அமைதியாய் இட்லியை விழுங்கிக்கொண்டு இருந்தான்.. அவனுக்கு மேலும் இட்லியை வைக்கும் சாக்கில் “ நந்தன் சாப்பிட்டு மேல வாங்க கொஞ்சம் பேசணும் “ என்று அவனுக்கு மட்டுமே கேட்கும்படி கூறினாள்..

“ ஆகா !! ராக்கி உன் காட்டில் இன்னைக்கு மழைதான் “ என்று மகிழ்ந்து வேகமாய் தலையை ஆட்டினான்..

மிதிலா தங்கள் அறையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தபடி இருந்தாள்,, முகத்தில் யோசனை அப்பி இருந்தது.. வேகமாய் கதவை திறந்து உள்ளே வந்தவன் அவளை பின்னிருந்து அணைத்தபடி “ மிது டியர், இப்போ புரியுதா உனக்கு என் நிலைமை, பார்த்தியா உனக்கு கூட என் கிஸ் இல்லாம இருக்க முடியலை” என்றபடி அவளது கழுத்தில் முகம் புதைத்தான்..

அவனது கைகளை மெல்ல பற்றி தன் புறம் திருப்பியவள் “ நந்தன் நான் உங்கட்ட கொஞ்சம் பேசணும்… “ என்றாள்.. அவளது குரலில் இருந்த வேறுபாடு ரகுநந்தனை மாய உலகில் இருந்து மீட்டு வந்தது..

“ என்ன டியர்?? எனி பிராப்ளம்?? ஏன் ஒருமாதிரி இருக்க?? “ என்று வினவினான்.. அவளது முக வாட்டம் அவனுக்கு மன வாட்டத்தை கொடுத்தது..

“ நந்தன் நான் கேட்கிறதுக்கு அப்படியே உங்க மனசில என்ன இருக்கோ அதை அப்படியே சொல்லணும்.. சரியா “ என்று பீடிகை போட்டாள்..

“ இவ என்ன கேட்க போறா ?? ஒருவேளை இந்த சதிஸ் கிறுக்கன் எதையும் உளறிட்டானோ?? இல்லையே நான் மிதிலாவை சந்தோசமா தானே பாத்துக்கிறேன்.. வேற என்ன ???” என்று யோசித்தபடி                                             

“ கேளு மிது “ என்றான்..

“ நந்தன் உங்களுக்கு இப்போ இங்க, அதாவது நம்ம வீட்டில இந்த லைப் ஸ்டைல் ஓகே தானே செட் ஆகிடுச்சு தானே.. இல்ல இன்னும் சொபஸ்டிகேட்டா இருக்கணும்னு தோணுதா ??” என்று அவன் முகம் பார்த்து வினவினாள்.

“ என்ன கேட்கிறா இவ ??” என்று ஒருநொடி குழம்பியவன் பிறகு அவள் கேட்க வருவதை புரிந்துகொண்டான்..

“ என்ன மிது இது கேள்வி நமக்கு என்ன குறைச்சல்.. எல்லாமே இருக்கே.. அப்புறம் என்ன ??”

“ அதான் நந்தன்.. உங்களுக்கு அந்த உயில், உங்கம்மா சாரி அத்தையோட அப்பா எழுதின உயில்.. அது அந்த சொத்து…” என்று மேலும் கூற முடியாமல் அவன் முகம் பார்த்து தவித்தாள்..

“ சொல்லு மிது எதுனாலும் நீ சொன்னாதானே தெரியும்…” மேலும் ஊக்கினான்..

“ அது நமக்கு வேண்டாம் நந்தன்.. ப்ளீஸ்…” என்று இறைஞ்சினாள்..

“ ஏன் ???” அவனுக்கு காரணம் தெரியவேண்டுமே

“ அது.. அது அதை பத்தி பேசினாலே பாட்டி முகம் மாறுது, அவங்க டென்சன் ஆகறாங்க.. நமக்கு இருக்கிறது போதாதா ?? ஏற்கனவே விசாலம் பாட்டிக்கும் நமக்கும் சேராது. அதுவும் இல்லாம அவங்க கொஞ்சம் ரொம்பவே ரோசம் பாக்குறவங்க. இத்தனை நாளா அவங்க கையில இருந்தது உடனே நமக்கு கொடுன்னா என்ன நினைப்பாங்களோ என்னவோ ?? அப்புறம் எல்லாத்துக்கும் பாட்டியை தான் சொல்லுவாங்கப்பா” என்றால் அவனுக்கு புரியவேண்டுமே என்ற ஆதங்கத்தில்.

அவள் கூறுவதை எல்லாம் பொறுமையாய் கேட்டவன் “ ம்ம் இப்போ என்ன சொல் வர மிது ??? “ என்றான் அமைதியாய்.

அவனது அமைதியான குரலே இவளுக்கு பயத்தை கொடுத்தது..

“ அது நமக்கு வேண்டாம் நந்தன்…” என்றாள் மீண்டும்..

“ ஹ்ம்ம்!! நான் அந்த லாயரை இங்க வர சொன்னதே என்ன விஷயம்ன்னு தெரிஞ்சுக்க தான் மிது.. அதுவும் இல்லாம இதில் ரோசம் பார்க்க வேண்டிய அவசியம் என்ன வந்தது அவங்களுக்கு.. நியாயமா யாருக்கு சேரனுமோ அவங்களுக்கு சேரட்டும்.. ஒன்னை நல்லா புரிஞ்சுக்கோ மிது இங்க வரும்போது எனக்கு இதைப்பத்தி எல்லாம் எதுவும் தெரியாது..

ஆனா இங்க எனக்கானது நிறைய இருக்குன்னு தெரியும் போது எனக்கு சந்தோசமா தான் இருக்கு  நான் ப்ராபெர்ட்டியை மட்டும் சொல்லலை சொந்தத்தையும் சேர்த்து தான் சொல்றேன்.. இப்போதான் புரியுது என்னை ஏன் எங்கம்மா இங்க போக சொன்னாங்கன்னு..

அங்க நாங்க வாழ்ந்த வாழ்கை நல்ல வசதியான வாழ்க்கை தான், ஆனாலும் எனக்கு அதெல்லாம் மனசில ஒருநொடி கூட ஒட்டல.. ஒருவேளை அதான் காரணமோ என்னவோ இங்க போகணும்னு அம்மா சொல்லவும் நான் வந்தது. இல்லைனா இத்தனை வருஷம் அங்க இருந்துட்டு என் வாழ்க்கையே இங்கயே நான் அமைச்சுக்க  முடிஞ்சு இருக்காது.. சோ புரிஞ்சுக்கோ எனக்குன்னு என்ன இருக்கோ அது எனக்கு தான் சரியா மிது.. பட் ஒன் திங் எந்த காரணம் கொண்டும் பாட்டி மனசு கஷ்டபடாம பார்த்துப்பேன்.. சரியா ” என்று கூறி அவளது கன்னங்களை தட்டினான்..

அவன் கூறுவது எல்லாம் நியாயம் தான் ஆனால் மிதிலாவிற்கு ஜெகதாவை நினைத்தாலும் மனம் சங்கட பட்டது.. அவளது குழம்பிய முகத்தை பார்த்தவன்

“ இங்க பாரு டியர் இதை எல்லாம் நினைச்சு நீ வொரி  பண்ணாத.. சரியா.. ஐ வில் ஹேண்டில் திஸ் “ என்று கூறி அவளது உச்சியில் இதழ் பதித்துவிட்டு சென்றுவிட்டான்..

“ ஹ்ம்ம்ம் !!!!” என்று ஒரு பெருமூச்சு மட்டுமே அவளால் விட முடிந்தது… கீழே கார் வந்து நிற்க்கும் சத்தம் கேட்டது..

“ வந்துட்டாங்க போல “ என்று கூறியபடி கீழே இறங்கினாள் மிதிலா.. விநாயகத்தோடு ஒரு எழுபது வயது மதிக்கத்தக்க நபரும் உடன் இருந்தார்.. ரகுநந்தன் தான் இருவரையும் வரவேற்றுக்கொண்டிருந்தான்..

மிதிலா இறங்கி வரவும் “ ஷி இஸ் மை வைப் “ என்று கூறி அவருக்கு அறிமுகம் செய்துவைத்தான்..

“ மிது பாட்டியை கூட்டி வா “ என்று கூறவும் அவளும் வேறு வழியில்லாமல் ஜெகதாவை அழைக்க சென்றாள்..

“ பாட்டி நீங்க டென்சன் ஆகவேண்டாம். கண்டிப்பா எந்த பிரச்சனையும் ஆகாது. நான் நந்தன் கிட்ட பேசிட்டேன்.. அவர் பாத்துக்கிறேன்னு சொல்லிட்டார்.. ப்ளீஸ் பாட்டி டென்சன் இல்லாம வாங்க “ என்று அவரின் அந்த நேரத்து நிம்மதி முக்கியமாய் பட ஜெகதாவை சமாதனம் செய்து அழைத்து வந்தாள் மிதிலா.

“ வாங்க பாட்டி.. இவர் தான் தாத்தா ஓட வக்கீல் “ என்று அவர்களையும் அறிமுகம் செய்துவைத்தான் ரகுநந்தன்..

வந்தவர் பேச ஆரம்பித்தார் “ நல்ல வேலை தம்பி நீங்க இப்போவாது இங்க வந்திங்க.. இல்லை உங்க தாத்தா என்னை நம்பி கொடுத்துட்டு போன பொறுப்பை என்னால சரியா முழுசா செய்ய முடியலைன்னு ஒரு நெருடல் இருந்துகிட்டே இருக்கும் எனக்கு. Mr. விநாயகம் எல்லா விபரமும் சொல்லி இருப்பார்னு நினைக்கிறேன். எதுக்கும் இன்னொரு முறை உங்க கிட்ட இந்த உயிலை படிச்சு காட்டிடறேன்” என்று உயில் முழுவதையும் படித்து காட்டினார்..

ரகுநந்தன் கூர்மையாய் கவனித்துகொண்டு இருந்தான். மிதிலாவோ தன் கணவனின் முகம் பார்ப்பதும், தன் பாட்டியின் முகம் பார்ப்பதுமாய் இருந்தாள்.

வக்கீல் படித்து முடிக்கவும் “ என்ன தம்பி எல்லாம் கிளியர் தானே.. மேற்கொண்டு நீங்க இதில் என்ன செய்யணும்னு முடிவில இருக்கிங்களோ அதை அப்படியே பண்ணலாம்.. நான் முதல்ல இதை எல்லாம் விசாலம்மா கிட்ட தான் பேசினேன். ஏன்னா சொத்து முழுக்க இப்போ அவங்க கண்ட்ரோல இருக்கு. பட் அவங்க இந்த உயிலுக்கு  எந்த மதிப்பும் கொடுத்த மாதிரி தெரியலை. அதான் உங்களை தேடி வந்தேன்.. என் வேலையும் எனக்கு முடியனும் இல்லையா வயசும் எழுபது ஆகிடுச்சு” என்றார்..

அவர் சொல்வதும் சரிதானே.. அவருக்கான வேலையை அவர் முடிக்கவேண்டும் தானே. ரகுநந்தன் ஜெகதாவின் முகம் நோக்கினான்.. அவரது முகத்தில் இருந்து எதவும் கண்டுபிடிக்க முடியவில்லை..

“ ஹ்ம்ம் ஓகே சர்.. ஒரு டூ டேஸ் டைம் கொடுங்க.. நாங்க எல்லாம் பேசி ஒரு முடிவு சொல்றோம்..” என்றான்

“ ஓகே Mr. ரகுநந்தன்.. நீங்க சொல்ற முடிவை வைச்சுதான் நான் விசாலம்மா கிட்ட பேசணும்.. அவங்க எதுக்கும் சரி வரலைன்னா தென் கோர்ட் வழியா தான் அவங்களை பார்க்கணும்.. எல்லாம் யோசிச்சு நல்ல முடிவா சொல்லுங்க “ என்று கை குலுக்கிவிட்டு சென்றார்..

அவர் சென்ற பிறகு தான் மிதிலாவிற்கு நிம்மதியே வந்தது.. “ ஊப் !!! பாட்டி ரிலாக்ஸ்…” என்று ஜெகதாவின் கைகளை பற்றினாள் வாசலில் அடுத்த கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது..

வருவது விசாலம் என்று தெரியவும் ஜெகதாவின் முகம் நொடி பொழுதில் கருத்துவிட்டது..

வேகமாய் வந்தவர் மூவரும் ஒன்றாய் இருப்பதைக்கண்டு “ ஓ !! நல்லது எல்லாம் ஒண்ணா தான் இருகிங்களா?? இப்போதான் அந்த வக்கீல் கார் போச்சு பார்த்தேன்..” என்று நக்கலாய் பேசியபடி அமர்ந்தார்.

ரகுநந்தன் அமைதியாய் தான் இருந்தான்.. ஜெகதா தான் “ வா விசாலம்.. மிதிலா குடிக்க ஜூஸ் எடுத்துட்டு வந்து கொடு “ என்றார்..

“ நான் ஒன்னும் உன் வீட்டுக்கு ஜூஸ் குடிக்க வரலை.. இங்க பாரு ஜெகதா நான் நேருக்கு நேரா சொல்றேன்.. என்னால இந்த சொத்தை விட்டுகொடுக்க முடியாது.. இத்தனை வருசமா எல்லாத்தையும் நான் தான் கட்டி காப்பாத்திட்டு வந்தேன்.. திடீர்னு வந்து கேட்டா எல்லாம் அப்படியே தூக்கி தாரைவார்க்க முடியாது.” என்றார் வெட்டு ஒன்று துண்டு இரண்டாய்..

“ இங்க பாரு விசாலம், இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை சரியா. இது முழுக்க முழுக்க உன் பிறந்த வீட்டு சமாச்சாரம்.. எங்களுக்கே இந்த தகவல் புதுசா தான் இருக்கு..” என்றார் ஜெகதா

“ அட அட அட.. என்ன ஒரு நடிப்பு.. இங்கபார் உன்னை பத்தி எனக்கு நல்லா தெரியும் ஜெகதா, ஒன்னும் தெரியாத மாதிரி எல்லாம் பேசாதே.. உன் பேரன் உன் பேச்சை தான் கேட்பான்னு எனக்கு தெரியாதா.. அவன்கிட்ட சொல்லி வை என்னால இதை கொடுக்க முடியாது. அவன் இதில் தலையிடவேண்டாம்..” என்று கூறும் பொழுதே

ரகுநந்தன் “ ஏன் ???” என்ற கேள்வியை எழுப்பி இருந்தான்..

அவனை கோவமாய் பார்த்தவர் “ என்ன ஏன் ?? என்னை கேள்வி கேட்கிற அளவுக்கு நீ வளர்ந்திட்டயா ?? இங்க பார் உங்கம்மா எதுவுமே வேணாம்னு தான் வெளிநாட்டுக்கு போனா.. அப்போ இருந்து இப்போ வரைக்கும் என் உசுருக்கும் மேல இந்த சொத்தை எல்லாம் பார்த்துட்டு இருக்கேன்.. இப்போ பொசுக்குன்னு வந்து கேட்டா எப்படி ???”

“ நான் இப்போ உங்கட்ட வந்து இப்போவே என் சொத்தை எல்லாம் கொடுங்கன்னு கேட்டேனா ???” என்று நந்தன் கேட்கவும் விசாலம் திகைத்து விழித்தார்..

“ என்ன சொல்ற ???!!!!”

“ முதல்ல கொஞ்சம் அமைதியா பேசுங்க பாட்டி.. மிது அவங்களுக்கு குடிக்க எதா கொண்டு வா..” என்றான்..

அவனது அழுத்தமான பேச்சும் அமைதியான பார்வையும் விசாலத்தை அமைதியாய் இருக்க வைத்தது. ஜெகதாவிற்கே கூட இது ஆச்சரியம் தான். மிதிலா ஜூஸ் கொண்டு வந்து கொடுக்கவும் எதுவும் கூறாமல் கைகளில் வாங்கி வைத்துகொண்டார் விசாலம்.

நந்தன் பேச ஆரம்பித்தான் “ இங்க பாருங்க பாட்டி.. உங்களுக்கு என்னை பிடிக்கிறதோ பிடிக்கலையோ அதெல்லாம் எனக்கு கவலை இல்லை. ஆனா நீங்க என் அம்மாவை வளர்த்ததா சொன்னிங்க, அதுவும் இல்லாம உங்களோட வயசுக்கும் நான் மரியாதை கொடுக்கணும்.. இப்போ வக்கீலை அனுப்பிட்டு நான் உங்களை பார்த்து பேசத்தான் கிளம்பிட்டு இருந்தேன்.. ஆனா நீங்களே வந்துட்டிங்க. சரி இப்போ சொல்லுங்க என்ன பிரச்சனை உங்களுக்கு “ என்றான்

இவன் இத்தனை அமைதியாய் பேசும் பொழுது விசாலம் எப்படி தன் குரலை உயர்த்த முடியும்.. அவன் வேறு உங்கள் வயதுக்கு நான் மதிப்பளிக்கிறேன் என்றுவிட்டான்..

“ ஹ்ம்ம் !!!! “ என்று பெருமூச்சுவிட்டு “ இங்க பாரு, உன் அம்மா உன்னை தூக்கிட்டு எனக்கு இங்க இருக்க எதுவும் வேணாம்னு வெளிநாட்டுக்கு போயிட்டா.. அப்புறம் உன் தாத்தா அதான் என் தம்பி வைத்திக்கும் உடம்பு சரியில்லாம போச்சு. ஆனா அவன் எப்போ உயில் எழுதினான்னு தெரியாது. எல்லா பொறுப்பும் என்கிட்டே தான் இருந்தது.. உயில் பத்தி என்கிட்டே ஒரு வார்த்தை கூட சொல்லல..

நானும் இதை என் சொத்தா நினைச்சு தான் இன்னிக்கு வரிக்கும் பார்த்துட்டு இருக்கேன். இது ரத்தத்தில ஊறி போன விஷயம்.. என்னால இந்த சொத்துபத்து எல்லாம் இல்லாம இருக்க முடியாது. இத்தனை வருஷம் கழிச்சு வந்து இப்படி ஒரு உயில் இருக்கு இது எனக்கு தான் சொந்தம்னு நீ வந்தா, அப்புறம் இத்தனை வருஷம் நான் கட்டிகாப்பாத்தினதுக்கு என்ன அர்த்தம் இருக்கு சொல்லு. “ என்று விசாலமும் தன் பக்க நியாயத்தை விளக்கினார்.

அவர் கூறியதிலும் நியாயம் இருப்பது போல தான் இருந்தது ஜெகதாவிற்கு. பேரனின் முகத்தை பார்த்தார்.. அவனோ கொஞ்சம் புரிந்தும் புரியாதது போல இருந்தான். அவனை  பொருத்தமட்டில் சொத்து என் பேரில் இருக்கிறது அப்போ அது எனக்குதானே சொந்தம் என்ற எண்ணம்..

ஆனால் விசாலமோ இந்த சொத்துகளை எல்லாம் தன் உணர்வோடு கலந்தது என்பது போல பேசுகிறார். ரகுநந்தனுக்கு உடனே என்ன சொல்வது என்று புரியவில்லை. பிறகு ஜெகதா மெல்ல விசாலம் பக்கம் இருக்கும் நியாயத்தை எடுத்து கூறினார்.. அதையும் பொறுமையாய் கேட்டுக்கொண்டான். அங்கே சிறிது நேரம் ஒரு பலத்த அமைதி நிலவியது..

“சரிங்க பாட்டி நீங்க சொல்றதும் சரிதான்.. ஹ்ம்ம் இந்த சொத்து எல்லாம் உங்ககிட்டயே இருக்கட்டும். ஆனா உங்க காலத்துக்கு அப்புறம் எனக்கு சேரணும்னு எழுதிகொடுங்க.. நீங்க எத்தனை வருஷம் இருந்தாலும் சரி நீங்க இருக்க வரைக்கும் இந்த எல்லா சொத்தும் உங்களோடதாவே இருக்கட்டும்.. ஆனா அதுக்கு பிறகு எனக்கு வந்து சேர்ந்திடனும்.. என்ன பாட்டி நான் சொல்றது சரிதானே” என்று ஜெகதாவை நோக்கி கேட்டான்..

ஜெகதாவிற்கும் இந்த முடிவு சரி என்று பட்டது.. விசாலம் அமைதியாய் இருந்தார்.

“ என்ன விசாலம். அதான் நந்து சொல்றானே. இது எல்லாம் உன்கிட்டே உன் சொத்தாவே இருக்கட்டும்.. அவனும் மேற்கொண்டு இதுல தலையிடமாட்டான். ஆனா உனக்கு பிறகு இது எல்லாம் அவனுக்கு சேரணும்னு எழுதிகொடுக்க உனக்கு என்ன கஷ்டம்??” என்றார் ஜெகதா..

விசாலம் இதை சிறிதுகூட எதிர்பார்க்கவில்லை.. அவர் நினைத்தது எல்லாம் இந்த விஷயத்தை வைத்தே ஜெகதாவை நன்றாய் உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவது என்று நினைத்திருந்தார்.. ஆனால் தான் எண்ணி வந்ததற்கு மாறாய் ரகுநந்தன் இதை கையாண்டது சிறிது அதிர்ச்சியை கொடுத்தது.

“ என்ன டா இது நம்ம சண்டை போட்டு இவங்க நிம்மதியை கெடுக்கலாம்னு வந்தா இவன் இவ்வளோ சுளுவா ஒரு வழி கண்டுபிடிச்சுட்டான். இத்தனை சீக்கிரம் இவங்களுக்கு நான் அடங்கி போறதா ???” என்று யோசித்த விசாலம்.

“ ஹ்ம்ம் உங்க முடிவுக்கு நான் சம்மதம் சொல்லலைனா ???” என்றார் வன்மமாய்..

“ வெரி சிம்பிள் பாட்டி, கோர்ட் நோட்டிஸ் ஓட உங்க வீட்டு நடு ஹால்ல வந்து உட்காருவேன்..” என்றான் ரகுநந்தன் மிகவும்..

“ டேய் நந்து !!!” என்று ஜெகதா அதிர்ந்து விளிக்கவும்

 “ பின்ன என்ன பாட்டி.. நானும் பிரச்சனை வரக்கூடாதுன்னு தான் இந்த ஒரு முடிவை சொன்னேன். அதுக்கும் இடக்கா பதில் சொன்னா எப்படி??? இல்லை இதை கோர்ட் மூலமா பார்த்துக்கலாம்னா யாருக்கு நஷ்டம் நமக்கு தான்.. கேஸ் முடியுற வரைக்கும் இந்த சொத்தை யாரும் அனுபவிக்க முடியாது.. இவங்களும் நம்ம வழிக்கு வரமாட்டாங்க வாய்தா மேல வாய்தா வாங்கி வருஷ கணக்கா இழுக்கணும்.. தேவையா ??”

“ அதுவும் இல்லைனா போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்தா ஒரே நிமிசம்ல இவங்களை தான் அரெஸ்ட் பண்ணுவாங்க.. இதெல்லாம் இவங்களுக்கு தேவையா நீங்களே சொல்லுங்க. ஒன்னு நான் சொல்றதுக்கு சம்மதிக்கட்டும் இல்லை வேற வழி நம்ம பார்த்துக்கலாம்” என்று கூறி முடித்து அமைதியாய் அமர்ந்துக்கொண்டான் இதற்கு மேல் தான் பேச எதுவும் இல்லை என்பது போல..

விசாலத்தின் சிந்தனை அங்கும் இங்கும் அலைந்தது.. “ கோர்ட்டுக்கு போனா கண்டிப்பா இவனுக்கு சாதகமா தான் வரும். போலிஸ் கேஸ்ன்னு இந்த வயசுக்கு மேல நான் வழக்காட முடியாது. அது நல்லாவும் இருக்காது.. ஆனா இவன் சொன்ன உடனே நான் சரின்னு சொன்னா என் மரியாதை என்ன ஆகும்???” என்று யோசித்த விசாலம்..

“ ம்ம் நீ சொல்றதை நான் கொஞ்சம் யோசனை செய்து பார்க்கணும்.. ஏன்னா சொத்தை எனக்கு பிறகு வாங்கிக்கிறேன்னு நீ சொல்லிட்டு அடுத்த நிமிசமே என்னை போட்டுத்தள்ள ஆள் வைக்கமாட்டன்னு என்ன நிச்சயம் ?? “ என்றார் விசாலம் வேண்டும் என்றே.

ரகுநந்தனுக்கு இதை கேட்கும் பொழுது சிரிப்பு தான் வந்தது..

“ நீங்க பேசுறது உங்களுக்கே காமடியா இல்லையா ?? இந்த ப்ராபெர்ட்டி எல்லாம் உங்க சம்மதம் இல்லாமலே என் கைக்கு வரும். அப்படி இருக்கும் போது உங்களை போட்டு தள்ளி தான் இதை எல்லாம் நான் எனக்கு சொந்தமாக்கனுமா ?? என்ன பாட்டி நீங்க பழைய படத்தில வர வில்லி பாட்டி மாதிரியே பேசுறிங்க..”  என்று கூறி சிரித்தான்..

விசாலம் மனம் சற்று எச்சரித்தது “ இவனை நம்ம ரொம்ப யோசிக்க வைக்ககூடாது.. பிறகு நமக்கு தான் கஷ்டம் “ என்று எண்ணியவர்

“ ம் பொடி பையன் நீ இவ்வளோ பேசுற.. சரிவிடு உன்னை மன்னிச்சு விடுறேன்.. ஆனா நீ சொன்ன முடிவுக்கு நான் என் மகன் மருமகளை எல்லாம் கலந்து தான் முடிவு சொல்லணும்.. “ என்றார்..

“சரிங்க பாட்டி நீங்க யார்கிட்ட வேணா கலந்து பேசி உங்க முடிவை சொல்லுங்க ஆனா ரெண்டு நாள்ல சொல்லுங்க.. ஏன்னா நான் லாயர்கிட்ட ரெண்டு நாள் தான் டைம் கேட்டு இருக்கேன். இதுக்கு மேல என்னாலையும் இதை இழுத்துட்டு இருக்க முடியாது. நிறைய வேலை இருக்கு..” என்று கூறி தன் மனைவியை பார்த்து கண்ணடித்தான்..

அவன் வேலை என்று கூறியது மற்றவர்களுக்கு புரிந்ததோ என்னவோ மிதிலாவிற்கு நன்றாய் புரிந்தது.. “ இந்த ரணகளத்துல கூட இவனுக்கு.. இல்லை இல்லை இவருக்கு குதூகலம் கேட்குது.. ம்ம்ம் “ என்று நொந்துகொண்டாள்..

இதற்கு பிறகும் இங்கு இருக்க வேண்டாம் என்று எண்ணி விசாலம் “ சரி நான் கிளம்புறேன் “ என்று கூறி சென்றே விட்டார்.. ஜெகதாவிற்கு இப்பொழுது தான் நிம்மதி பெருமூச்சு வந்தது.

“ டேய் நந்து.. எப்படி டா இந்த விசாலத்தை சமாளிச்ச. எனக்கு இப்போதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு.. இனி இவ சம்மதம் சொன்னதான் முழு நிம்மதியும்..”

“அட பாட்டி ஆல்ரெடி அவங்க ஓகே சொல்லியாச்சு அதை உடனே ஒத்துக்க அவங்க ஈகோ சம்மதிக்கலை அதான் இப்படி மகன் கிட்ட பேசணும் அது இதுன்னு சொல்லிட்டு போறாங்க.. இவங்களாவது இன்னொருத்தர் கிட்ட கலந்து பேசி முடிவு எடுக்கிறதாவது..” என்றான் மிக சாதாரணமாய்..

தன் பேரனை மேச்சுதலாய் பார்த்தா ஜெகதா “ பரவாயில்லையே.. நல்லது நந்து.. பெரிய பிரச்சனை செய்வாலோன்னு டென்சன்ல இருந்தேன்..” என்று கூறிவிட்டு பேரனுக்கும் பேத்திக்கும் தனிமை கொடுத்து சென்றார்..

மிதிலாவிற்கே கூட மனம் சற்று நிம்மதியாய் இருந்தது.. தன் கணவனை பார்த்து மெல்ல புன்னகைத்தாள்.. அப்பொழுதுதான் கவனித்தவன் போல “ ஆமா டியர், இது என்ன இந்த கலர்ல ட்ரெஸ் போட்டு இருக்க, நல்லாவே இல்லை மாத்து..” என்றான்..

“ அட கடவுளே இவன் மாறிட்டான்னு நினைச்சேனே.. இல்லையா ?!!!!” என்று துணுக்குற்று

“ இல்ல நந்தன் இந்த கலர் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. இந்த கலர் என்னை ப்ரைட்டா காட்டும்..” என்று முடிப்பதற்குள்

“ நீ என்ன ஷோ காட்டுறியா ????!!!” என்றான் இறுகிய குரலில்.. அந்த குரலே அவளுக்கு பயத்தை கொடுத்தது..

“ இல்லை அது வந்து…”

“ என்ன மிது நான் சொன்னது எல்லாம் மறந்திடுச்சா என்ன ??? போ முதல்ல போயி மாத்து, ப்ரைட்டா போடுறாளாம் ப்ரைட்டா… கண்றாவி.. மிது உன் அழகு எனக்கு மட்டும் பிடிச்சா போதும் சரியா.. போ “ என்று கத்தாத குறையாக..

வாயடைத்து போனாள் மிதிலா.. “ என்ன பேசுறான்.. நான் எதோ விதவிதமா போட்டு அடுத்தவங்களை மயக்குற மாதிரி பேசுறான்.. இதுக்கு நான் சும்மா இருக்கிறதா ?? நோ வே…” என்று வேகமாய் கோவமாய் பதில் அளிக்க அவனிடம் திரும்பினாள், ஆனால் அவனோ தன் பர்சில் இருந்த அவனது அன்னையின் புகை படத்தில் லயித்திருந்தான்..

இதற்குமேல அவளால் சண்டை போட முடியுமா என்ன… வேறு வழியே இல்லாமல் மேலே சென்றாள்.. ஆனாலும் அவள் மனம் குமுறிக்கொண்டு தான் இருந்தது..

 “ இவனுக்கு அப்பப்ப என்னாகும்னே தெரியலை.. ச்சே… எப்போ பாரு இந்த சாயம் போன கலர்லையே போட சொல்றது..” என்று முனங்கியபடி அவன் கூறும் வண்ணத்தில் உடுத்தி வந்தாள்..

அவளை பார்த்தவன் விசிலடித்துக்கொண்டே“ ஹ்ம்ம் திஸ் இஸ் சூப்பெர்ப்… இப்போதான் என் மிது நீ “ என்று கூறி இறுக அணைக்கும் பொழுது அவ்வளோ நேரம் இருந்த கோவம் எல்லாம் இருந்த இடம் காணமல் போனது.. ஒருவேளை இது தான் காதல் செய்யும் மாயமோ ??

அவர்களது மோன நிலையை கலைக்கவென்றே ரகுநந்தனின் அலைபேசி அழைத்தது.. சதிஸ் தான் அழைத்தது..

எடுத்து காதில் வைத்தவனது இன்னொரு கரம் மிதிலாவின் இடை விட்டு நகரவே இல்லை.. “ சொல்லு மச்சி…”

அவன் என்ன கூறினானோ… “ ஹேய் ரியலி… விசா கிடைச்சிடுச்சா ??? எப்படி டா அந்த ஜேம்ஸ் லீவ் கொடுத்தான்.. “ என்று தன்  நண்பன் இந்தியா வரும் மகிழ்ச்சியில் திளைத்தான் நந்தன்.. தன் சந்தோசத்தை வெளிபடுத்தும் விதமாய் மிதிலாவிற்கு சில பல முத்தங்களை வேறு நகர்த்தினான்..

“ முதல்ல போன் பேசுங்க “ என்று சைகை காட்டி விலகி அமர்ந்தாள்.. ஆனால் விடாமல் அவளை இறுக்கியபடி பேசி முடித்தான்..

“ என்ன நந்தன் இது போன் பேசும் போது இப்படி தான் சேட்டை செய்யனுமா என்ன ?? “ சிணுங்கினாள்..

“ நான் தானே பேபி போன் பேசினேன்.. நீயா பேசின..” என்று கூறி மீண்டும் தொடர்ந்தான்..

“ ஐயோ !! நடு வீட்டுல இது என்ன நந்தன்..” என்ற படி ஓடியவளை துரத்தி பிடித்தான்.. 

“ யு கான்ட் எஸ்கேப் ப்ரம் மீ…” என்று கூறி சிரித்தான்..

“ நீங்க இருக்கிங்களே….”

“ ஹ்ம்ம் இங்க தான் இருக்கேன்…” மீண்டும் நகைத்தான்..

நண்பன் வரும் மகிழ்ச்சி அவனுக்கு, அவனது மகிழ்ச்சி அவளுக்கு.. இதே மகிழ்ச்சி இதே சிரிப்பு சதிஸ் வரும் பொழுது இருக்குமா என்ன ???                                                                                                         

                                    

                                 

                                                                                

 

 

Advertisement