Advertisement

                                  நேசம் –  14

மறுநாள் விடிந்தால் ரகுநந்தனுக்கும், மிதிலாவிற்கும் அவர்கள் ஊர் அம்மன் கோவிலில் திருமணம். மாலை வரவேற்பு நிகழ்ச்சி. ஏற்கனவே கோவிலில் வைத்து நிச்சயம் முடிந்ததால் முதல் நாள் விசேஷம் என்று எதுவும் இல்லை..

விடிந்தால் கல்யாணம் என்று எண்ணும் பொழுதே மிதிலாவிற்கு ஒரு இனம் புரியாத உணர்வு. என்னதான் இத்தனை நாட்களாய் பார்த்து, பேசி, பழகியவன் என்று இருந்தாலும் அவளுக்கு ஏனோ ஒரு நடுக்கம் உள்ளே இருக்கத்தான் செய்தது.

ஆனால் ரகுநந்தனுக்கு, அவன் என்ன உணர்கிறான் என்று அவனுக்கே தெரியவில்லை.. சிறிது நேரம் யோசனையாய் நடப்பான். பிறகு அமர்ந்துக்கொள்வான்.. இல்லையென்றால் தன் அன்னையின் புகைப்படத்தை எடுத்து பார்ப்பான்.. அதுவும் இல்லையென்றால் சதிஸோடு அரட்டையில் இறங்கிவிடுவான்.. இந்த மூன்று நாட்களாய் இது தான் நடக்கிறது..

மிதிலாவிடம் வேறு சீண்டல்களோ, பேச்சுக்களோ இல்லை… சதிஸ் இருவரையும் அழைத்து ஸ்கைப்பில் தினமும் பேசினான். தன் வாழ்த்துக்களை தெரிவித்தான்.. எப்படியும் இரண்டொரு மாதத்தில் வருவதாய் கூறினான்..

ஜெகதா கூட இருவரின் அமைதியாய் கவனித்தபடி தான் இருந்தார்.. “ என்ன கோகிலா இவனுக்கு மிதுன்னு கூப்பிடாம பொழுது விடியாது, இவளுக்கு அவன் முகம் பார்க்காமல் கண்ணு உறங்காது, ஆனா ரெண்டும் இப்படி அமைதியா இருக்காங்க..” என்றார்.

கோகிலா மெல்ல சிரித்து “ அது ஒன்னுமில்லைங்கம்மா கல்யாணம் நடக்க போகுதுல அதான் கொஞ்சம் தயக்கமா, வெட்கமா இருக்குமா இருக்கும்..” என்றார்..

“ ஓ !! வேற எதுவும் பிரச்சனை எல்லாம் இல்லையே…” என்றார் பாட்டியாய்..

“ அதெல்லாம் எதுவும் இல்லைங்கம்மா.. காலையில கூட மிதி தான் தம்பிக்கு டிபன் வச்சு குடுத்துச்சு.. “

“ ம்ம் சரி ரொம்ப முக்கியமானவங்ககளுக்கு மட்டும் தான் கல்யாணத்துக்கு அழைப்பு இருக்கு கோகிலா. மத்தவங்க எல்லாம் சாயங்காலம் தான் வருவாங்க. எல்லாருக்கும் ரூம் வசதி எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துக்கோ கோகிலா. எந்த குறையும் இல்லாம நல்லபடியா நடக்கணும்.. எனக்கு இந்த விசாலத்தை நினைச்சா தான் கொஞ்சம் நெருடலாவே இருக்கு.. எப்போ என்ன பண்ணுவாளோ..” என்றார் கவலையாய்..

“ நீங்க கவலை படாம இருங்கம்மா.. பசங்களுக்கு தெரிஞ்சா மனசில எதா நினைப்பாங்க.. இத்தனை நாள் எதுவும் பண்ணாதவங்க, இன்னிக்கா பண்ண போறாங்க “ என்று கோகிலா சொல்லிக்கொண்டு இருக்கும் பொழுதே ஜெகதா வீட்டின் முன் கார் வந்து நிற்கும் ஓசை கேட்டது.. விசாலம் தான்..

சாத்தானை நினை உடனே வந்து நிற்க்கும் என்ற வரிதான் ஜெகதாவிற்கு நினைவு வந்தது. ரகுநந்தனின் தாய் வழி சொந்தம் என்று இருப்பது விசாலம் மட்டும் தான். அதனால் அவருக்கு சென்று அழைப்பு விடுத்து தான் இருந்தார் ஜெகதா..

வயதில் மூத்தவராய் ஆசிர்வாதம் செய்ய தான் வந்திருக்கிறார் என்று நினைத்த ஜெகதா “ வா.. வா.. வா விசாலம்..” என்று வாசலுக்கு சென்று வரவேற்றார்…

கார் வந்து நிற்கும் ஓசையை கேட்டு மிதிலா, ரகுநந்தன் கூட வெளியே வந்தனர்.. விசாலத்தை பார்த்ததும் இருவரின் முகத்திலும் ஒரு யோசனை.. மிதிலா “ வாங்க பாட்டி..” என்றாள் முறையாக..

ரகுநந்தன் “ வாங்க  “ என்ற சொல்லோடு நிறுத்திக்கொண்டான்..

“ வரேன்.. வரேன்.. என்ன ஜெகதா வரவேற்பு எல்லாம் பலமா இருக்கு.. என்ன இவ ஏதாவது செய்து குட்டையை குழப்பிடுவாலோன்னு இப்பவே குல்லா போடுறிங்களா???” என்று எகத்தாளமாய் கேட்டபடி உள்ளே நுழைந்தார்..

அவருக்கு ரகுநந்தன் எதுவோ பதில் சொல்ல வாய் திறக்கும் முன்னே ஜெகதாவும் மிதிலாவும் ஒரே பார்வையில் வேண்டாம் என்று சைகை செய்துவிட்டனர்..

“ என்ன அமைதியா இருக்கீங்க.. ஏம்மா கோகிலா வீட்டுக்கு வந்தா ஒரு காபி கூட தரமாட்டியா..??” என்று கோகிலாவையும் ஒரு பிடி பிடித்தார்..

“ ஆத்தி!!! இந்தம்மா வாய்க்கு நான் அவலாகனுமா ??“ என்று எண்ணிய கோகிலா “ இதோம்மா…” என்று சமையலறைக்கு சென்றார்..

விசாலமும் ஜெகதாவும் எதிர் எதிரே அமர்ந்து இருந்தனர். மிதிலாவும் ரகுநந்தனும் உட்காருவதா வேண்டாமா என்ற எண்ணத்தில் நின்றுகொண்டு இருந்தனர்..

“ என்னம்மா கல்யாண பொண்ணு, இங்க வா.. உன் பேரென்ன மதி… ம்ம்ஹும் மிதிலா தானே.. ஹ்ம்ம் சீதா தேவி பேரு.. பரவாயில்ல ரெண்டு பேருக்கும் பேர் பொருத்தம் நல்லா தான் இருக்கு. யப்பா ரகுநாந்தா, கல்யாணத்துக்கு அப்புறம் அந்த ராமர் பண்ணது மாதிரி நீயும் இந்த புள்ளைய தவிக்க விட்டுடாத..” என்றார் அறிவுரை கூறுபவர் போல இடக்காய்..

ஜெகதாவிற்கு பகிர் என்றது.. இது என்ன மாதிரியான பேச்சு.. கலக்கமாய் தன் பேரப்பிள்ளைகளின் முகம் நோக்கினார். ஆனால் இருவரும் சாதாரணமாய் ஒருவரை ஒருவர் பார்த்தபடி தான் இருந்தனர்..

“ என்னடா இவ இப்படி சொல்றாளேன்னு நினைக்கவேண்டாம். இந்த வீட்டு ராசி அப்படி.. உங்க அப்பா லீலாவை தான் கல்யாணம் செய்வேன்னு பிடிவாதம் பண்ணி கட்டி இங்க கூட்டிட்டு வந்தான். ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் ரெண்டு பேரும் சந்தோசமா இருந்தாங்களா?? அப்புறம் அவன் அல்பாயூசுல…” என்று கூறும் பொழுதே ஜெகதா

“ விசாலம்!!!!” என்று கத்தி விட்டார்..

ஆனால் அதற்கெல்லாம் விசாலம் அசருவது போல இல்லை.. “ என்ன ஜெகதா நியாயமா பார்த்தா நீ தான் இதெல்லாம் சொல்லணும்.. பிள்ளைங்களுக்கு எடுத்து சொன்னாதானே புரியும்.. “ என்று மீண்டும் பேச்சை துவக்கினார்..

“ விசாலம் போதும்..!! பெரிய மனுசியா அவங்களுக்கு ஆசிர்வாதம் பண்ணு இப்படி எல்லாம் பேசி மனசை கலைக்க வேண்டாம்…”  என்றார் ஜெகதா சற்றே கடுமையாய்…

ரகுநந்தனுக்கு விசாலம் எதுவோ கூற வருவது போலவும், அதை ஜெகதா தடுப்பது போலவும் இருந்தது.. “ இந்த பாட்டி ஏன் இப்படி டென்சன் ஆகுறாங்க?? அவங்க ஏதோ சொல்ல வராங்க. இவங்க விடாமா பேசிட்டு இருக்காங்க..” என்று எண்ணத்தில் மிதிலாவை பார்த்தான்..

அவனது பார்வைக்கான பொருளை உணர்ந்த மிதிலா “ அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை”  என்பது போல  தலையை ஆட்டினாள்..

கோகிலா காபி கொண்டு வந்து தரவும் விசாலம் “ ம்ம் பரவாயில்ல.. “ என்று சொல்லிக்கொண்டே குடித்தார்..

ஜெகதாவிற்கோ எப்பொழுது தான் விசாலம் இடத்தை காலி செய்வார் என்று இருந்தது..

“ என்ன ஜெகதா இவ எதுக்கு இங்க வந்திருக்கான்னு நினைக்கிறியா?? அது ஒண்ணுமில்ல நாளைக்கு என்னால கல்யாணத்துக்கு வர முடியாது. ஒருவேலையா ஊருக்கு போறேன்.. நான் போய் கூப்பிட்டேன் ஆனா அவ தான் வரலைன்னு நாளைக்கு நீ என்னை குறை சொல்ல கூடாது பாரு அதான் இன்னிக்கே வந்து என் பரிசை கொடுக்கலாம்ன்னு “ என்று சொல்லி வாய் மூடவில்லை

சுகிர்தா அழுதபடியே வந்து ஜெகதாவின் காலில் விழுந்தாள்.. “ அம்மா…!!! அம்மா.. நீங்க தான் எனக்கு ஒரு நல்ல வழி சொல்லணும் “ என்று அழுதபடி காலில் விழுந்தவளை அனைவரும் திடுக்கிட்டு பார்த்தனர்..

அவளுக்கு பின்னே கைகளை பிசைந்தபடி முகேஷ் வேகமாய் வந்தான்  “ ஏய் சுகிர்தா உனக்கு எத்தனை தரம் சொல்றது.. இது கல்யாண வீடு, இங்க இப்படி எல்லாம் வந்து கலாட்டா செய்ய கூடாதுன்னு..” என்று அவளது கைகளை பற்றி இழுத்தவாறே 

ஜெகதாவை பார்த்து “ அது ஒன்னும் பிரச்சனை இல்லைங்கம்மா நான் பார்த்துக்கிறேன்” என்று கூறினான்..

ரகுநந்தனுக்கும், மிதிலாவிற்கும் என்னவோ நடக்க போகிறது என்பது போல இருந்தது.. மிதிலா திகைத்து போய் நந்தனின் முகத்தை நோக்கினாள்..ரகுநந்தனுக்குமே ஒன்றும் புரியவில்லை.. ஆனால் நிச்சயம் முகேஷ் ஏதாவது ஒரு பிரச்சனை செய்வான் என்று எதிர்பார்த்து தான் இருந்தான்.. ஆனால் அது சுகிர்தாவின் வடிவில் வரும் என்று அவன் சற்றும் நினைக்கவில்லை..

ஜெகதாவிற்கு இன்னும் கண் முன்னே என்ன நடக்கிறது என்று நம்ப முடியவில்லை.. அதுவும் விசாலத்தின் முன்பா இப்படி என்று நினைக்கும் பொழுதே ஐயோ !!! என்று இருந்தது..

முகேஷ் தான் விடாமல் “ ஏய்!! நீ முதல்ல எழுந்திரு… என்ன இது?? உனக்கு நான் எத்தனை தடவை சொல்லிட்டேன்.. இங்கபார் இது விசேஷ வீடு..” என்று அவளை அரட்டி எழுப்பினான்.

ஆனால் அந்த சுகிர்தாவோ விடாமல் இருக்கமாய் ஜெகதாவின் கால்களை பற்றியிருந்தாள்.. “ அம்மா!! எனக்கு ஒரு பதில் சொல்லிட்டு நீங்க உங்க வீட்டில கல்யாணம் பண்ணுங்க… “ என்று கதறி அழுதாள்..

“ இந்தாம்மா பொண்ணு, முதல்லா எழுந்திரி.. ஆமா நீ யாரு?? ஏன் இங்க வந்து இப்படி அழுதுட்டு இருக்க??” என்று ஜெகதா கேட்பதற்குள் விசாலம் கேட்டு இருந்தார்..

ஆனால் சுகிர்தாவோ பதிலை ஜெகதாவிற்கு வழங்கினாள் ” நான் சுகிர்தா, புதுசா உங்க பண்ணையில வேலைக்கு சேர்ந்தேன்.. உங்க பேரனுக்கு அசிஸ்டேன்ட்டா… “ என்று கூறும் பொழுதே மீண்டும் அழ ஆரம்பித்தாள்..

ஜெகதா “ இங்க பார் சுகிர்தா, நீ என்னனு சொன்னா தானே உன் பிரச்சனை என்னன்னு தெரியும்??” என்றார் சற்றே குரல் உயர்த்தி..

ரகுநந்தன், மிதிலா இருவரும் அமைதியாய் நின்று இருந்தனர்.. ஆனால் முகேஷோ “ ஜெகதாம்மா!! அதெல்லாம் ஒண்ணுமில்லை, இந்த பொண்ணு சும்மா வந்து பிரச்சனை பண்ணுது… நீங்க உள்ள போங்க நான் பார்த்துக்கிறேன் “ என்றான் நல்லவன் போல..

“ அதெல்லாம் வேண்டாம் முகேஷ்… நீ சொல்லுமா “ என்று ஜெகதா கேட்கவும் சுகிர்தா ரகுநந்தனை நோக்கி கைகளை நீட்டினான்..

இது ஓரளவுக்கு மிதிலா ரகுநந்தன் எதிர்பார்த்தது தான் போல.. இருவர் முகத்திலும் அதிர்ச்சி லேசாய் தான் தெரிந்தது.. விசாலத்திற்கு உள்ளே அத்தனை மகிழ்ச்சி..

“ இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்த ஜெகதா தலை குனிய போறா… நான் கேட்கிற ஒவ்வொரு கேள்விக்கும் இவளால பதில் சொல்ல முடியாம கண்ணீர் வடிக்க போறா” என்று எண்ணிக்கொண்டார்..

ஆனால் யாரும் யோசிப்பதற்குள் சூழ்நிலையை தனதாக்கிக் கொண்டாள் மிதிலா..

“ ஸ்ஸ் !! பாட்டி முதல்ல நீங்க ரெண்டு பேரும் உட்காருங்க.. சுகிர்தா நீங்களுமே உட்காருங்க.. பாருங்க வயசானவங்க என்னவோ ஏதோன்னு நினைக்க போறாங்க “ என்று கூறவும் இவள் என்ன செய்ய போகிறாள் என்பது போல ரகுநந்தன் பார்த்தான்..

அவனை பார்த்து புன்னகைத்த மிதிலா “ என்ன நந்தன் உங்களுக்கு நான் தனியா சொல்லனுமா என்ன?? உட்காருங்கப்பா.. எவ்வளோ நேரம் இப்படியே நின்னுகிட்டே பேச முடியும்.. “ என்று கூரியவளின் முகத்தில் “ நான் பார்த்துகொள்கிறேன் “ என்ற செய்தி பிரதிபலித்தது.

இதை எதிர் பார்க்காத விசாலம் வேகமாய் ஏதோ சொல்ல முயன்றார். ஆனால் மிதிலா பேசவிட வில்லை

“ என்ன பாட்டி உட்காருங்க.. பாட்டி உங்களையும் தான்..” என்று கூறியவள் பேச்சை யாரும் தட்ட முடியவில்லை. ஆனால் சுகிர்தாவின் கண்ணீர் மட்டும் நிற்க்கும் பாடில்லை.. போட்ட கிளிசரின் இன்னும் கரையவில்லை போல..

அனைவரும் அமர்ந்த பின்பு மிதிலா சுகிர்தாவிற்கு குடிக்க நீர் கொடுத்தாள்.. அவளை ஆச்சரியமாய் பார்த்தபடி சுகிர்தாவும் மறுக்காமல் வாங்கிகொண்டாள்..

முகேஷோ நிலைமை கை மீறுகிறது என்று தெரியவுமே “ சரிங்கம்மா அப்போ நான் கிளம்புறேன், கல்யாண வேலை நிறைய இருக்கு.. “ என்று கிளம்ப பார்த்தான்..

ஆனால் நந்தனோ “ அட எங்க முகேஷ் கிளம்புறிங்க, பொண்ணு மாப்பிள்ளையே இங்க தான் இருக்கோம். நீங்க போய் என்ன வேலை பார்க்க போறீங்க “ என்று அவனது தோளில் கைகளை போட்டு அமர வைத்தான்.. அவன் கை போட்ட விதத்தில் முகேஷ் விட்டால் நிலத்தின் உள்ளே சென்று விடுவான் போல..

வெளியே செல்ல வழியில்லாமல் விசாலத்தின் முகத்தை பார்த்தபடி அமர்ந்து இருந்தான் முகேஷ்.. ஆனால் விசாலமோ இதை எல்லாம் கவனிக்காது நடக்க போகும் நிகழ்வுகளை காண ஆவலாய் இருந்தார்..

மிதிலா சுகிர்தாவின் கைகளை பிடித்து “ இங்க பாருங்க சுகிர்தா என்னை உங்க சிஸ்டரா நினைச்சுக்கோங்க. என்கிட்டே பேச எந்த தயக்கமும் வேண்டாம். பாருங்க நீங்க வந்த தலையும் புரியாம காலும் புரியாம பேசினதுல எங்க பாட்டி டென்சன் ஆகுறாங்க.. நான் எது சொன்னாலும் பாட்டி சரின்னு சொல்லுவாங்க. சோ எதுவா இருந்தாலும் என்கிட்டே சொல்லுங்க “ என்றால் மென்மையாய்..

இதை உண்மையென அனைவரும் நம்பினார் ரகுநந்தனை தவிர.. அவனுக்கு சிரிப்பு அடக்க முடியவில்லை.. ஆனாலும் அமைதியாய் இருந்தான்..

சுகிர்தா விசும்பிக்கொண்டே “ என்.. என் வாழ்க்கையே போச்சு.. எல்லாமே கேட்டுச்சு.. எல்லாம் பண்ணிட்டு ஒன்னும் தெரியாதவங்க மாதிரி இதோ இவரு உங்களை கல்யாணம் பண்ண போறார்..” என்று மீண்டும் நந்தனை நோக்கி கைகள் நீட்டினாள்..

இதை கேட்டதும் ஜெகதாவிற்கு என்ன சொல்வதென்றே பபுரியவில்லை.. ரகுநந்தனோ எதுவும் சொல்லாமல் இருந்தான். மறுத்தும் பேசவில்லை, ஆமாம் என்று சொல்ல வில்லை.. அவன் மறுத்து பேசாமல் இருந்ததே ஜெகதாவிற்கு பயத்தை கொடுத்தது..

“ பாட்டி நான் தான் பேசிக்கிறேன்னு சொன்னேன்ல.. நீங்க ஏன் டென்சன் ஆகறிங்க?? நடக்கிறதை மட்டும் பாருங்க “ என்று மெல்ல கூறினாள் மிதிலா..

“ ம்ம் மேல சொல்லுங்க சுகிர்தா.. என்ன செய்தாங்க நந்தன்??”  என்றாள் கதை கேட்கும் பாவனையில்.. விசாலத்திற்கு லேசாய் மனதில் தன் திட்டம் தவிடு பொடியாவது போல இருந்தது.. ஆனாலும் கடைசி வரைக்கும் இருந்து பார்த்துவிட வேண்டும் என்று எண்ணினார்..

ஆனால் சுகிர்தாவோ “ என்னங்க மேடம் நீங்க, நான் என் வாழ்கை போச்சுன்னு சொல்லிட்டு இருக்கேன், நீங்க என்னவோ கதை கேட்கிற மாதிரி பேசுறிங்க??” என்று எரிந்து விழுந்தாள்.. அப்பொழுது ரகுநந்தன் எதுவோ கூற வரவும் மீண்டும் மிதிலா பார்வையில் அடக்கிவிட்டாள்..

“ இங்க பாருங்க சுகிர்தா உங்க நிலைமை எனக்கு புரியுது.. ஆனா எதுனாலும் நீங்க என்கிட்டே தெளிவா சொல்லணும் தானே.. சரி சொல்லுங்க என்ன நடந்தது..” என்றாள்

ஒரு இரண்டு நிமிட இடைவெளி விட்டு சுகிர்தா அனைவரின் முகத்தையும் ஒருதரம் பார்த்து “ நான்.. நான்.. கர்ப்பமா இருக்கேன்..” என்றாள் திக்கி திணறி..

ரகுநந்தன் முகத்தில் அப்பட்டமாய் அதிர்ச்சி.. அவன் எதிர்பார்த்தது எல்லாம் “ இவன் என்னை காதலித்தான், கல்யாணம் பண்ணிகிறேன்னு சொல்லி இப்போ முடியாது சொல்றான்” என்று கூறுவாள் போல என்று இருந்தான்..

ஆனால் இந்த சுகிர்தாவோ கர்ப்பமாய் இருக்கிறேன் என்று சொல்லவும் அவனுக்கு ஒரு நொடி இதயம் நின்று தான் துடித்தது.. படக்கென்று திரும்பி மிதிலாவின் முகத்தை பார்த்தான். ஆனால் அவள் முகத்தில் எந்த சலனமும் இல்லை..

ஜெகதா விட்டால் மயங்கியே விழுந்து விடுவார் போல.. ஆனால் மிதிலா வேறு யாரையும் கவனிக்காமல் சுகிர்தாவிடம்

“ ஓ !! நல்ல விஷயம்.. இந்த காலத்தில குழந்தை பிறக்கிறது எத்தனை கஸ்டமா இருக்கு ஆனா பாருங்க உங்களுக்கு ஆண்டவன் கல்யாணத்துக்கு முன்னே இப்படி ஒரு பரிசை கொடுத்து இருக்கார்.. நீங்க அதுக்கு சந்தோசம் தானே படனும். அதை விட்டு ஏன் அழனும் ??” என்றாள் நக்கலாய்..

ரகுநந்தனுக்கோ மிதிலாவிற்கு இப்படி எல்லாம் கூட பேச தெரியுமா என்று இருந்தது.. முகேஷிற்கு எப்படியாவது இந்த திருமணம் நின்று, மிதிலாவிற்கு தான் வாழ்கை கொடுக்கிறேன் என்று ஜெகதாவிடம் நல்ல பெயர் எடுத்து மிதிலாவையும் அவள் பெயரில் இருக்கும் சொத்துகளையும் அடைந்து விட வேண்டும் என்று எண்ணினான்.

விசாலமோ எப்படியாவது ஜெகதா தலைக்குனிவதை காண ஆவலாய் இருந்தார்..

சுகிர்தா “ இங்க பாருங்க மேடம்!! நீங்க எந்த அர்த்தத்தில இப்படி பேசுறிங்கன்னு எனக்கு தெரியலை.. ஆனா நான் சொல்றது நிஜம்.. அதுக்கு ஆதாரமும் இருக்கு.. இங்க பாருங்க “ என்று ஒரு மெடிக்கல் ரிப்போர்டை எடுத்து நீட்டினாள்..

அதை வாங்கி பார்த்த மிதிலா “ ஹ்ம்ம்!! நான் ஒரு ஐந்நூறு ரூபாய் கொடுத்தா இதே மாதிரி என் பேருல கூடத்தான் ஒரு ரிபோர்ட் கிடைக்கும்..” என்றால் அழுத்தமாய்..

“ நீங்க பணக்காரங்க.. ஐந்நூறு என்ன ஆயிரம் கூட செலவு பண்ணலாம். ஆனா நான் அப்படியில்லை, நான் ஒருத்தி வேலைக்கு போய் சம்பளம் வாங்கினா தான் எங்க வீட்டில எல்லாம் சாப்பிட முடியும்..” என்று நீலி கண்ணீர் சிந்தினாள்..

“ ச்சு ச்சு… கேட்கவே கஷ்டமா இருக்கு மா.. ஆனா குடும்பத்து மேல இவ்வளோ அக்கறை இருக்கிறவ வேலைக்கு வந்த இடத்தில நீ வேலை மட்டும் தானே பார்த்திருக்கணும்..” என்று மிதிலா இழுத்தாள்..

“ உண்மை தானுங்க.. வேலை மட்டும் தான் பார்த்திருக்கணும்.. ஆனா இவரு அதுக்கு விடலையே.. நானும் என்னதான் செய்வேன் முதலாளி வேற. சரி இவர் நிஜமா தான் என்னை விரும்புறார்னு நினைச்சேன். நமக்கும் ஒரு நல்ல வாழ்க்கை இருக்குன்னு நம்பி என்னை கொடுத்தேன்.. ஆனா ஆனா இப்போ உங்களை கல்யாணம் பண்ண நிக்கிறார்…” என்று பெருங்குரலெடுத்து அழுதாள் சுகிர்தா..

ஜெகதாவிற்கு சற்று நேரத்தில் எல்லாம் புரிந்துவிட்டது இதெல்லாம் கட்டுக்கதை என்று.. ஆனாலும் வெளிக்காட்டாமல் நடப்பதை கவனித்தார்..

ரகுநந்தனை ஒரு பார்வை பார்த்துவிட்டு மிதிலா “ ஹ்ம்ம் சரி சுகிர்தா நீ சொல்றது எல்லாம் உண்மையாவே இருக்கட்டும், ஆனா இத்தனை நாள் உனக்கு தெரியலையா??? எனக்கும் இவருக்கும் கல்யாணம்னு?? இப்போ தான் உனக்கு தெரிஞ்சதா??” என்றாள் ஒருமாதிரி.. அவளுக்கு உள்ளே கோவம் கனன்று கொண்டு இருந்தது..

என்ன தான் பணத்தேவை என்றாலும் ஒரு பெண் தன் மானத்தை விற்று தான் அதை பூர்த்தி செய்யவேண்டுமா என்று..

“ இல்லைங்க மேடம். எனக்கு முன்னமே தெரியும். ஆனா இவர் தான் பொறுமையா இரு, அந்த மிதிலா கிட்ட எப்படியாவது மில் பொறுப்பை வாங்கிடுறேன், அப்புறம் அவளால எதுவும் பண்ண முடியாது வீட்டுக்குள்ள போட்டு முடக்கிட்டா வெளிய நடக்கிறது எதுவும் தெரியாது. அதுக்கப்புறம் உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் எனக்கு எல்லாம் நீ தான்னு என் தலையில சத்தியம் பண்ணி சொன்னார் “ என்று சொல்லும் போதே ரகுநந்தன் அவளது கழுதை நெரித்திருந்தான்..

“ ஏய் !!! என்ன விட்டா நீ பாட்டுக்கு வசனம் பேசி ஒரு படமே டைரெக்ட்  பண்ணுவ போல?? நானும் பார்த்துகிட்டே இருக்கேன் நீ ரொம்ப பேசிக்கிட்டே இருக்க..” என்று கோவமாய் கர்ஜிதவனின் முகத்தை பார்க்க மிதிலாவே சற்று நடுங்கித்தான் போனாள்..

ஜெகதாவோ “ நந்து!!!” என்று அலறியேவிட்டார்.. 

சுகிர்தாவோ மூச்சு விடவே பாடுபட்டாள்..  “ நந்தன்.. நந்தன் அவளை விடுங்க. நான் தான் பேசிக்கிட்டு இருக்கேன்ல… ப்ளீஸ் விடுங்கப்பா..” என்று நந்தனின் கைகளை பிடித்து இழுத்தாள் மிதிலா..

விசாலமும், முகேஷும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்.

“விடு மிது.. இவளை..” என்று மீண்டும் சுகிர்தவை நோக்கி முன்னேறினான் மிதிலா தான் போராடி தடுக்க வேண்டி இருந்தது..

ஆனால் சுகிர்தாவோ இதற்கெல்லாம் சிறிதும் சளைத்தவள் அல்ல போல.. ஆடாமல் அப்படியே நின்று இருந்தாள்.. தான் வந்த காரியம் வெற்றி பெற்றால் விசாலம் சுளையாய் லட்சங்கள் தருவார்.. இன்னும் கொஞ்சம் சேர்த்து நடித்தால் ரகுநந்தனின் மனைவி ஆகவும் வாய்ப்பு உள்ளது என்று எண்ணினாள்..

மிதிலா “ நந்தன் ப்ளீஸ் கால்ம் டவுன் பா.. என்ன நீங்க இப்படி பீகேவ் பண்றீங்க.. எதா ஆகிட போகுது.. லெட் மீ ஹேண்டில் திஸ் ” என்று கூறிவிட்டு

“ கோகிலாக்கா நம்ம டாக்டருக்கு போன் செய்யுங்க.. அவங்க வந்து எதுக்கும் இவங்களை செக் பண்ணட்டும்.. அப்புறம் சுகிர்தா உங்க வீட்டுக்கு போன் போட்டு உங்க அப்பா அம்மாவை வர சொல்லுங்க. எதுவா இருந்தாலும் எல்லாரும் இருந்தா தானே நல்லது“ என்று கோகிலாவில் ஆரம்பித்து சுகிர்தாவில் முடித்தாள்..

இவள் இந்த கோணத்தில் யோசிப்பாள் என்று விசாலம் கூட எதிர்பார்கவில்லை ஏன் சுகிர்தாவுமே.. ஏனெனில் வீட்டில் இவள் செய்யும் வேலைகள் எல்லாம் தெரியாதே. அப்பா அம்மா என்று மிதிலா கூறவுமே மனம் லேசாய் ஆட்டம் காண ஆரம்பித்தது சுகிர்தாவுக்கு..

ஆனாலும் “ ஏன்? ஏன் அப்பா அம்மாவை கூப்பிட சொல்றிங்க?? இதை எல்லாம் பார்த்தா அவங்க அவ்வளோ தான் செத்தே போயிடுவாங்க.. அப்புறம் டாக்டர் எதுக்கு ஏதா விஷ ஊசி போட்டு கொள்ள போறிங்களா என்னைய ??” என்று பேச்சை திசை திருப்பினாள்..

அவ்வளோதான் மிதிலாவின் பொறுமை போய்விட்டது “ ஏய் !!! நிறுத்து டி… என்ன பேச்சை மாத்துரியா?? ஹா !! இங்க பார் நீ சொல்றது எல்லாம் உண்மையின்னா ஒழுங்கா செக்அப்க்கு  ஒத்துக்கோ. உங்க அப்பா அம்மாவை வர சொல்லு.. இல்லை இடத்தை காலி பண்ணு..” என்று உறுமினாள்..

மிதிலாவின் இந்த முகத்தை ஜெகதாவே கூட பார்த்தது இல்லை.. ரகுநந்தனோ “ மிது இவகிட்ட பேசி எந்த யூசும் இல்லை. இவங்க வீட்டு அட்ரெஸ் என் பைல்ல இருக்கு.. நானே அவ அப்பாக்கு கூப்பிடுறேன் வரட்டும்… “ என்று வேகமாய் பைலை எடுக்க தன் அறைக்கு சென்றவனை

சுகிர்தாவின் “ வேண்டாம் !!!” என்ற அலறல் நிறுத்தியது..

“ ஏன் ?? ஏன் வேண்டாம்??” என்று மிதிலா வினவினாள்..

“ அவங்களுக்கு இது.. இதெல்லாம் தெரியாது…” என்று இழுத்தாள். மனதிற்குள் இங்கே இருந்து தப்பித்தால் போதும் என்று இருந்தது..

விசாலாத்திற்கு மனதில் சிறிதும் நம்பிக்கை இல்லை. தான் தீட்டிய திட்டம் தன் கண் முன்னே ஒன்றும் இல்லாமல் போவதை அவரால் சகிக்க முடியவில்லை.. பெரிய மனுசி தோரணையில்

“ சரி ஜெகதா !! இது உங்க வீட்டு பிரச்சனை.. பார்த்து பேசி என்ன பண்ணணுமோ பண்ணுங்க.. நான் கிளம்புறேன் “ என்று எத்தனித்தார் ஆனால் நந்தனோ

“ அட என்ன பாட்டி இப்படி பாதியில கிளம்பினா எப்படி ?? வந்த வேலை இன்னும் முடியலையே??” என்றான் நக்கலாய்..

ஒரு நொடி கண்டுகொண்டானோ என்று நினைத்தார் விசாலம் ஆனாலும் வெளியில் “ என்ன ?? என்ன வேலை ??” என்று வினவினார் ஒன்றும் தெரியாதவர் போல..

“ அதான் பாட்டி எங்களுக்கு கல்யாண பரிசு குடுக்க தானே வந்திங்க.. இருங்க ஒரு பத்து நிமிசத்தில இந்த குழப்பம் எல்லாம் தீர்ந்திடும். நீங்க இருந்து எங்களை ஆசிர்வாதம் பண்ணிட்டு கிப்டும் கொடுத்துட்டு தான் போகணும் “ என்று அவரது கைகளை பிடித்து அமரவைத்து விட்டான் ரகுநந்தன்.

அவர் கொடுக்க நினைத்த பரிசை தான் மிதிலா நன்றாய் குழப்பம் செய்துக்கொண்டு இருக்கிறாளே..  மிதிலாவின் குரலில் கடுமை ஏறி இருந்தது..

“ சொல்லு சுகிர்தா, சீக்கிரம் உங்க வீட்டுக்கு கூப்பிட்டு சொல்லு. இன்னும் கொஞ்ச நேரத்தில் டாக்டர் வேற வந்திடுவாங்க. அவங்க வர முன்னாடி உன் அப்பா அம்மா இங்க இருந்தா நல்லா இருக்கும்.. ஒருவேளை ரிசல்ட் நீ சொன்ன மாதிரி இருந்தா உங்க வீட்டில பேசி கல்யாணம் பண்ண வசதியா இருக்குமே” என்றாள்

ஆனால் சுகிர்த்தாவுக்கோ பயம் தொற்றிக்கொண்டது.. அவள் மிதிலா இந்த அளவிற்கு செய்வாள் என்று தெரியாது. சொன்னதும், மெடிகல் ரிப்போர்ட் காட்டியதும் நம்பிவிடுவார்கள் என்று எண்ணினாள்.   

இந்த விஷயம் வீட்டில் தெரிந்தால் நிச்சயம் வீட்டில் இவளை ஒதுக்கி விடுவர்.. இதெல்லாம் நாடகம் என்று இங்கே தெரிந்தாள் என்ன நடக்கும் என்றே அவளுக்கு தெரியாது.. ஆனால் எப்படியாவது காலில் விழுந்தாவது மன்னிப்பு கேட்டு இங்கிருந்து தப்ப வேண்டும் என்று எண்ணினாள்..

ஏற்கனவே விசாலத்திடம் வாங்கிய இரண்டு லட்சத்திற்கு தான் இப்படி படும் அவஸ்தையே போதும் என்று நினைத்துக்கொண்டாள்..

“ ம்ம் என்ன அமைதியா இருக்க?? உங்க வீட்டுக்கு நீ சொல்றியா இல்லை நானே சொல்லவா ??” என்று ரகுநந்தன் கோவமாய் கேட்கவும்

“ இல்ல இல்ல அதெல்லாம் வேண்டாம்.. நான்.. நான் இதெல்லாம்.. இது.. பொய்  நான்.. என்னை மன்னிச்சுடுங்க சார் ப்ளீஸ்.. “என்று சொல்லும் பொழுதே சுகிர்தாவின் கன்னம் எரிந்தது..

மிதிலாதான் அறைந்திருந்தால்..

“ ச்சி வெட்கமா இல்லை உனக்கு ?? காசுக்கு ஆசைப்பட்டு இப்படி ஒரு காரியம் பண்ண கிளம்புனியே இந்த நிமிசம் உன்னை நான் போலீசில் சொன்னா உன் கதி என்ன தெரியுமா ???” அத்தனை நேரம் அடக்கப்பட்டு இருந்து கோவம் வெளிவந்தது..

“ இல்லை மேடம்… நான் வந்து“ என்று இழுத்த சுகிர்தாவால் மேலே பேச முடியவில்லை      

விசாலத்திற்கு அதிர்ச்சி. நிமிடத்தில் சுகிர்தா பின்வாங்குவாள் என்று எதிர்பார்க்கவில்லை. முகேஷோ தன் கனவெல்லாம் தவிடு பொடியாவது பொறுக்காமலும், இன்னும் சிறிது நேரம் விட்டாள் மிதிலாவும் ரகுநந்தனும் பேசியே விஷயத்தை கறந்துவிடுவர் என்று வேகமாய்,    

“ ஏய் !! ஒழுங்கு மரியாதையா இடத்தை காலி பண்ணு.. “ என்று சுகிர்தாவின் கைகளை பிடித்து வெளியே தள்ளினான்..

சுகிர்தாவோ அவனை ஒரு முறை முறைத்துவிட்டு “ என்னை மன்னிச்சிடுங்க சார்.. மேடம் நீங்களும் தான்.. நான் கேட்க கூடாதவங்க பேச்சை கேட்டு இப்படி நடந்துக்கிட்டேன்.. ஐம் ரியலி சாரி “ என்று மொழிந்துவிட்டு விட்டால் போதும் என்பது போல சென்றுவிட்டாள்..

விசாலத்திற்கு ஆத்திரம் அடங்கவில்லை. சுளையாய் இரண்டு லட்சம்.. அத்தனையும் வீண்.. முகேஷோ கைகளை பிசைந்தபடி நின்று இருந்தான். மத்தளத்திற்கு இரண்டு பக்கம் அடி என்பது போல அவனுக்கு விசாலத்திடமும் பேச்சு கிடைக்கும், ரகுநந்தன் என்ன செய்வான் என்றே அவனால் யூகிக்க முடியவில்லை..

மிதிலாவிற்கு இப்பொழுது தான் நிம்மதி ஆனது.. ஜெகதாவின் கைகளை பிடித்துக்கொண்டு “ என்ன பாட்டி இப்படி டென்சன் ஆகலாமா ?? அவ எல்லாம் ஒரு ஆளுன்னு வந்து சொன்னா உடனே இப்படி நெஞ்சை பிடிக்கலாமா ??” என்று சிரித்தபடி கேட்டாள்.. அவளது சிரிப்பு ஜெகதாவையும் ஒட்டிக்கொண்டது..

இந்த சிரிப்பை காணவா விசாலம் வந்தார்.. அவரால் இதை கண்கொண்டு காண பொறுக்கவில்லை..

“ சரி சரி.. அதான் பிரச்சனை எல்லாம் முடிஞ்சதே.. நான் கிளம்புறேன்..” என்று வேகமாய் நகர்ந்தார்.

“ பாட்டி பரிசு” என்று வேண்டுமென்றே செல்லுபவரை வழி மறைத்தான் ரகுநந்தன்.. அவன் கேட்டதில் திகைத்த விசாலம் “ ஹா!!!! என்.. என்ன பரிசு?? “ என்று   திடுக்கிட்டவர்

“ அது அதுவா வயசாகுதுல பா அதான் மறந்திட்டு வந்துட்டேன் போல.. நான் அவசரமா வீட்டுக்கு போகனும். நான் கிளம்புறேன் “ என்று சென்றுவிட்டார்..

முகேஷும் பின்னோடு நகர பார்த்தான் ஆனால் நந்தன் விடவில்லை “ என்ன முகேஷ் இவ்வளோ பிரச்சனை நடந்து இருக்கு.. இப்படி எதுவும் சொல்லாம போனா எப்படி ??” என்று அவனை நிறுத்தினான் நந்தன்..

“ ஐயோ !! திட்டம் போட்டவங்களை விட்டுட்டான், வந்து பிரச்சனை பன்னவளையும் விட்டுட்டான், என்னைய ஏண்டா கேள்வி கேட்கிற ??” என்று மனதில் புலம்ப மட்டும் தான் அவனால் முடிந்தது..

“ என்ன முகேஷ் பதிலையே காணோம்?? சரி அதெல்லாம் விடுங்க.. நாளைக்கு காலைல கல்யாணம்.. எல்லாம் நீங்க தான் பார்க்கணும்.. சோ என்ன பண்றீங்க இன்னைக்கு நைட்டே ஹோட்டலுக்கு போங்க, அங்க ஸ்டே பண்ணி இருக்கிறவங்களுக்கு என்ன வேணுமோ பாருங்க. அப்புறம் மண்டபம் போங்க “ என்று வேலையை அடுக்கிகொண்டே போனான்..

இதை எல்லாம் கேட்கும் போது முகேஷின் முகம் போன போக்கை பார்த்து மிதிலாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை.. ரகுநந்தனை பார்த்து சிரித்துகொண்டே ஜெகதாவை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டாள்..

சிறிது நேரத்தில் “ தேங்க்ஸ் எ லாட் பேபி “ என்று வந்து முரட்டு தனமாய் அணைத்துகொண்டான் ரகுநந்தன் மிதிலாவை..

ஒருநிமிடம் திடுகிட்ட மிதிலா சுற்றும் முற்றும் பார்வையை ஓட்டினாள்..

“ அதெல்லாம் யாரும் இல்லை.. என் மிது தனியா இருக்கிறதை பார்த்து தான் வந்தேன் “ என்று கண்ணடித்தான்..

அவளுக்குமே அவனது அருகாமை தேவை பட்டது.. அவனது தோள்களில் வாகாய் சாய்ந்துகொண்டாள்..

“ ஊப்!!!!! மிது.. நான் இதை கொஞ்சம் கூட நினைக்கல.. பட் தேங் காட்.. யு ஹேண்டில் திஸ் ப்ராப்ளம் க்ளவெர்லி… தேங்க்ஸ் டியர்…” என்று மீண்டும் இறுக அணைத்துக்கொண்டான்..

 

             

 

                                                                                                                                                                                          

            

        

                                                                             

Advertisement