Advertisement

     நேசம் –  13

மிதிலாவிற்கு யார் என்ன சமாதானம் கூறினாலும் தன் மனதை அவள் மாற்றிக்கொள்ளவில்லை.. நடந்த இந்த சம்பவத்தில் தன் மீதும் தவறு இருக்கிறது என்றே கூறிக்கொண்டு இருந்தாள்..

ரகுநந்தன், ஜெகதா, கோகிலா என அனைவரும் எத்தனை கூறியும் அவள் எண்ணம் மட்டும் மாறுவேனா என்று இருந்தது.. இதற்கு காரணமும் இருந்தது..

ஜெகதா இந்த ஆலையை மிதிலா பெயருக்கு மாற்றும் போதே இவள் மனதில் பயம் இதை நாம் சரியாக செய்ய வேண்டுமே என்று.. அதன் பின் ஆலைக்கு சென்று தன் வேலையை தொடங்கும் போதே அங்கே இருந்த இருவர் பேசிய பேச்சு இவள் காதில் விழுந்தது..

வேலை செய்யும் ஒருவன் கூறினான் “ ஏன் டா  சின்ன பொண்ணு இது.. நமக்கு முதலாளியா ?? ஹ்ம்ம் அனாதை பொண்ணுக்கு வந்த வாழ்வை பாரு டா.. அந்த ஜெகதம்மாவோட நிஜ வாரிசு கூட இத்தனை சொகுசை அனுபவிக்காது போல.. “ என்றான்

மற்றொருவன் “ மெதுவா பேசு டா.. மேனேஜர் காதில விழுந்தது அவ்வளோ தான்.. ஹ்ம்ம் என்ன பண்றது.. பார்க்கலாம் இந்த பொண்ணு எப்படி என்ன பண்ணுதுன்னு.. உரிமை இருக்கிறவன் பார்த்தாதான் எதுவுமே முன்னேறும்.. இந்த பொண்ணுக்கு இதெல்லாம் தேவையே இல்லை. சும்மா அந்த பெரியம்மா சொன்னதுக்காக ஏனோ தானோன்னு தான் பார்க்கும் நீ வேணா பாரு..” என்றான்..

“ அது உண்மை தான் டா.. எதுவுமே வீட்டு ஆளுங்க பார்த்தா தான் ஆச்சு.. இந்த பொண்ணுக்கு எங்க இதெல்லாம் தெரிய போகுது..” என்று பேசினார்..

இதை மட்டும் தான் அவள் கேட்க நேர்ந்தது.. இதற்கு மேல் என்ன பேசினார்களோ தெரியவில்லை.. அவளால் இதை தாங்கி கொள்ளவே முடியவில்லை அன்று.. ஆனாலும் முயன்று தன் மனதை தேற்றி வேலையை கவனித்தாள்..

சிறு துளி அளவு கூட யாரும் தவறு சொல்லிவிடக்கூடாது என்று பார்த்து பார்த்து அத்தனையும் கவனித்தாள். ஆனால் அத்தனைக்கும் மீறி இந்த சம்பவம் நடந்தது மிதிலாவிற்கு அத்தனை வருத்தமாய் இருந்தது..

அவள் முகம் தெளியவில்லை என்று பார்த்ததுமே ரகுநந்தன் புரிந்துகொண்டான்.. அவளோடு ஆலைக்கு சென்று வந்தான்.. காவல் நிலையம் சென்றான்.. இப்படி அவளுடனே இருந்தான்.

ஆனால் இதெல்லாம் மிதிலாவிற்கு மனதில் பதியவில்லை.. தான் தவறு செய்து விட்டோமோ என்ற உணர்வே அவளை ஆட்டி படைத்தது.. என்னதான் ரகுநந்தன் அவளுடனே இருந்தாலும் அவன் பக்கம் இவள் பார்வை கூட திரும்பவில்லை.. அவன் ஏதாவது கேட்டால் பதில் கூறுவாள் அவ்வளவே.. 

ரகுநந்தனுக்கு சிறிது சிறிதாக பொறுமை கரைய ஆரம்பித்தது.. சும்மா இருக்கும் போதே மிதிலா தன்னை கவனிக்க வேண்டும் என்று நினைப்பான்.. இதில் கூடவே இருக்கும் பொழுது தன்னை கண்டுகொள்ளாமல் இருந்தால் எப்படி இருக்கும்..

அனைத்து பிரச்சனையும் மீறி, மிதிலா தன்னை கண்டுகொள்ளாமல் இருப்பதே அவனுக்கு முக்கிய பிரச்சனை ஆனது.. “ அதெப்படி நான் கூடவே இருக்கேன் இவ நம்மளை பார்க்க கூட இல்லை.. சாப்டேனான்னு கேட்கலை, அவ்வளோ ஏன் ஒரு பார்வை.. அது கூட இல்லை “ என்று கடிந்தான்..

ஆனால் இதெல்லாம் உணரும் நிலையில் அவள் இல்லை.. எப்படியாவது நடந்த இந்த தவறை சரி செய்ய வேண்டும் என்று நினைத்தாள்.. என்னதான் போலிஸ் தீவிரமாக விசாரணை செய்தாலும் ஏனோ ஒரு துப்பு கூட கிடைக்கவில்லை.. அதுவேறு மிதிலாவிற்கு கவலையை அளித்தது..

“ இங்க பாரு மிதிம்மா போலிஸ் கிட்ட சொல்லியாச்சுல அப்புறம் ஏன் இன்னும் இப்படி இருக்க. இன்னும் நாலு நாள்ல கல்யாணம் உன்னை பார்த்தா கல்யாண பொண்ணு மாதிரியே இல்லை.. “ என்று கடிந்தார் ஜெகதா..

ஆனால் மிதிலாவின் மனதில் நிச்சயமாக இந்த சூழலில் திருமணத்தை பற்றிய எண்ணம் சிறிதும் இல்லை.. தான் கடமை தவறிவிட்டோம் என்ற எண்ணமே அவளை ஆட்கொண்டு இருந்தது..

இதெல்லாம் ரகுநந்தனின் மனதில் பதியவில்லை மிதிலா தன்னை கண்டுகொள்ளவில்லை என்பதே அவனுக்கு மனதை போட்டு அறுத்தது.. இன்று அவளோடு பேசியே தீரவேண்டும் என்று முடிவோடு இருந்தான்.. எப்பொழுதும் இரவு உறங்க போகும் முன் இருவரும் பேசிவிட்டு தான் உறங்குவர்.. இந்த இரண்டு நாட்களாக அதுவும் இல்லை..

ரகுநந்தன் ஒரு முடிவுடன் தான் இருந்தான்.. இன்று இவளை விட போவது இல்லையென்று.. அதற்கேற்றபடி மிதிலாவும் தோட்டத்து பக்கம் செல்லவும் இவனும் பின்னோடு சென்றான்..

 “ மிது…” அவனது அழைப்பு அவளது மோன நிலையை கலைத்தது..

“ ம்ம்…”

“ திரும்பு…. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்…” என்றான் அழுத்தமாக.. அவனுக்கு தெரியும் சாதரணமாய் பேசினால் அவள் சொல்வதை கேட்கமாட்டாள் என்று..                 

“ நீங்க தூங்கலையா நந்தன்???” என்றாள் திரும்பாமல்..

“ உன்கிட்ட பேசணும் மிது …” என்றவாறு அவளை தன்புறம் திருப்பினான்..

“ என்ன நந்தன்???”

“ ஐ நீட் எ கிஸ்…” என்றான் சளைக்காத ஒரு பார்வை பார்த்து..

“ வாட்!!!!” அதிர்ந்து விழித்தாள்.. ஒவ்வொரு முறையும் இப்படிதான் எதையாவது கேட்டு தன்னை அதிர வைக்கிறான் என்று எண்ணினாள்..

“ எஸ் மிது.. ஐ நீட் எ கிஸ்…” என்றான் இன்னும் அழுத்தமாக..

அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.. இவன் என்ன இப்படி கேட்கிறான் என்று எண்ணினாள்.. தான் இருக்கும் மனநிலைமை என்ன இவன் வந்து கேட்பது என்ன?? இப்பொழுது காதல் செய்யும் சூழ்நிலையிலா மிதிலா இருக்கிறாள் என்று அவளே எண்ணிக்கொண்டாள்..

“ என்ன நந்தன் இது.. ம்ம்ச் நான்.. நான் வேற மூட்ல இருக்கேன் பா.. டோன்ட் மிஸ்டேக்கன் மீ.. ப்ளீஸ்…”

“ உனக்கு ஒரு தடவ சொன்னா புரியாதா ?? எனக்கு இப்போ கிஸ் வேணும்.. குடுக்க முடியுமா முடியாதா ???” என்றான் பிடிவாதமாய்.. அவளது கைகளை பிடித்திருந்தவனின் பிடி இன்னும் இறுகியது..

“ முடியாது போடா..” என்று சொல்ல துடித்த மனதை அடக்கி,, “ என்ன நந்தன் இது …” என்றாள் சலிப்பாய்..

“ எனக்கு வேணும் மிது… நீ ஏன் இப்படி இருக்க ?? என்கிட்டே சரியா பேசி ரெண்டு நாள் ஆகுது, இதுக்கும் நான் உன்கூடவே தான் இருக்கேன்.. ஒரு வார்த்தை விடு ஒரு பார்வை கூட நீ என்னை பார்க்கிறது இல்லை.. இதுல இன்னும் நாலு நாளில நமக்கு கல்யாணம் வேற.. உன்னை பார்த்தா கல்யாண பொண்ணு மாதிரியா இருக்கு??” என்றான் கோவமாய்..

“ இப்பொழுது இவனுக்கு என்னதான் பிரச்சனை..” என்று எண்ணிக்கொண்டே அவனுக்கு பதில் அளிக்க வாய் திறந்தாள் ஆனால் அவனோ

“ நீ எதுவும் பேசாதே மிது.. நான் சொல்றதை கேளு…” என்றான்.. அவளும் என்னவென்பது போல பார்த்தாள்.. மீண்டும் ஆரம்பித்தான்

“ ஐ நீட் எ கிஸ்…”

ஐயோ என்று இருந்தது மிதிலாவிற்கு.. ஆனால் அவன் சொல்வதும் சரியே இன்னும் நான்கு நாட்களில் திருமணம்.. அவனுக்கும் சில எதிர்பார்ப்புகள் இருக்கும் தானே.. மனதில் இப்படியெல்லாம் தோன்றினாலும், அவன் கேட்டதை விடுத்தது 

“ என்ன நந்தன் நீங்க நம்ம என்ன மாதிரி ஒரு சிச்சுவேசன்ல இருக்கோம் இப்போ போய் பார்க்கல, பேசலைன்னு சொல்லிட்டு இருக்கீங்க?? நம்ம தான் லைப் லாங் பார்க்க போறோம் பேச போறோமே.. அப்புறம் என்ன..” என்று அவள் பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே அவளை இறுக அணைத்து, அவளது இதழ்களையும் அணைத்தான் ரகுநந்தன்.. அவளின் நந்தன்…

இதை எதிர்பார்க்காத மிதிலாவோ திடுகிட்டாள், ஆச்சரியம், அதிர்ச்சி, கூச்சம் எல்லாம் சேர்ந்து தாக்க அவனிடம் இருந்து விடுபட திமிறினாள் ஆனால் பலன் என்னவோ பூஜ்ஜியமே..

அந்த நீண்ட முத்தத்தில் மிதிலா தன்னை தொலைத்தாள்.. தொலைக்க விரும்பினாள். ஏனோ ரகுநந்தனின் தீண்டலில் அவள் தன் கவலை, குழப்பம் எல்லாம் மறந்து போவது போல இருந்தது.. மனதில் இன்னதென்று கூற முடியாத ஒரு நிம்மதி பரவுவதை உணரத்தான் செய்தாள்..  அந்த நிம்மதியே அவனிடம் அவளை இன்னும் மயங்க வைத்தது..

மிதிலாவிடம் இருந்து வந்த எதிர்ப்பு காணாமல் போகவும் நந்தன் இன்னும் இன்னுமென்று முன்னேறினான்.. ஒருநிலையில் அவனே தன்னை கட்டுக்குள் கொண்டு வந்து விலகவும் செய்தான்..

இப்பொழுது மிதிலா தான் ஒன்றும் புரியாமல் விழிக்கும் நிலையில் இருந்தாள்..

“ என்ன பேபி… இப்படி பார்க்கிற. நான் கொஞ்சம் நல்லவன் தான் மா.. மத்தது எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான்..” என்றான் கண்ணடித்து..

முதலில் அவன் என்ன கூறுகிறான் என்பது போல பார்த்தவள் பிறகு அதன் பொருள் விளங்கவும் அவனை நன்றாய் தோளில் அடித்தாள்..

“ ச்சி ரொம்ப மோசம் நந்தன் நீங்க…” என்று  கூறும் பொழுதே அவள் முகம் சிவந்து இதழில் வந்து புன்னகை ஒட்டிக்கொண்டது.. அவளது முகத்தை பார்த்தவன் “ ஹ்ம்ம் இப்போதான் நீ என் மிது மாதிரி இருக்க..” என்று கூறி தலையில் முட்டினான்..

அவள் மனதுமே இப்பொழுது ரகுநந்தனுக்காக யோசித்தது.. இரண்டு நாட்களாய் தான் இப்படி இருந்தது அவனுக்கு என்னவோ செய்திருக்கிறது போல என்று எண்ணினாள்..

“ சாரி நந்தன்.. நான்.. அந்த பிரச்னைல உங்கள கொஞ்சம் கவனிக்கல.. “ என்றாள் நிஜ வருத்தத்தோடு..

“ கொஞ்சம் இல்லை மிது.. ரொம்பவே கவனிக்கலை நீ.. சரி அதை விடு ஏன் நீ இப்படி இருக்க??” என்றான் தீவிரமாய்..

“ எனக்குமே தெரியலைப்பா… நான்.. எனக்கு.. “ என்று வார்த்தைகளை தேடியவள் பின்பு அவனது தோள்களில் சாய்ந்துக்கொண்டாள்.. அவனும் அணைத்துகொண்டான்..

“ இங்க பாரு மிது, லைப்ல பிரச்சனை வரும் தான்.. நம்ம கல்யாணத்துக்கு அப்புறமும் கூட வரும் ஆனா அதுக்காக நீ என்னை மறந்துடுவியா என்ன ??”

அவன் கேட்டதும் நியாயம் தானே… ஏனோ மிதிலாவிற்கு இதை கேட்டதும் தன் மீது தவறு இருப்பதை போல உணர்ந்தாள்.. என்ன நடந்திருந்தாலும் அது எப்படி நடந்திருந்தாலும் ரகுநந்தனிடம் தான் பேசி இருக்க வேண்டும்  என்று எண்ணினாள்..

“ சாரி நந்தன்.. நான் இருந்த டென்சன்ல்… ஐம் ரியலி சாரிப்பா…” என்றாள்  பாவமாய் முகத்தை வைத்து..     

“ஹ்ம்ம் “ என்று யோசித்தவன் “ இனிமேல் உனக்கு இந்த டென்சன் எல்லாம் வேண்டாம் மிது.. ப்ரீயா இரு…” என்றான்…

அவளுக்கு அவன் என்ன கூறுகிறான் என்று புரியவில்லை..

“ எப்படி நந்தன் எப்படி ப்ரீயா இருக்கிறது?? இன்னும் இதை யார் பண்ணாங்கன்னு கூட கண்டுபிடிக்க முடியலை…” என்று மீண்டும் ஆரம்பித்தாள்..

“ஸ்ஸ்..” என்று அவள் உதட்டில் கடி வைத்து அவளது பேச்சை நிறுத்தியவன், ” நான் தான் சொன்னேனே மிது, இனிமேல் உனக்கு இந்த டென்சன் எல்லாம் வேண்டாம்.. நான் பாத்துக்கிறேன். நீ எப்பயும் போல நிம்மதியா சந்தோசமா இரு. உனக்கு எந்த குழப்பமும் வேண்டாம்.. உன் மனசில இருக்க வேண்டியது எல்லாம் நான் மட்டும் தான். என்னை பத்தி மட்டும் நீ நினைச்சா போதும்  டியர்.. சோ டோன்ட் திங் அபவ்ட் தி ப்ராப்ளம். ஐ வில் ஹேண்டில் தட்” என்றான்..

இவன் கூறுவது புரிந்தாலும் ஆனால் இவன் ஏன் இப்படி கூறுகிறான் என்று புரியவில்லை..

“ என்ன பேபி அப்படி பார்க்கிற?? இனிமே மில் பொறுப்பு என்னோடது.. நான் இன்சார்ஜ் எடுத்துக்கிறேன்.. நீ ரிலாக்ஸ் பண்ணு..” என்று கூறும் பொழுதே

“ ஆனா நந்தன்…” என்று பதில் கூற ஆரம்பித்தவளை “ நான் பேசி முடிச்சுடுறேன் டியர்…” என்றான் ஆழ்ந்த ஒரு பார்வை பார்த்து..

“ இங்க பாரு மிது, எனக்கு இந்த சொத்து மேல எல்லாம் பெரிய இன்ட்ரெஸ்ட் இல்லை.. ஆனா என்னை பொருத்தவரைக்கும் லைப் ரொம்ப நிம்மதியா இருக்கனும். அப்படி இல்லைனாலும் நம்ம அதை நமக்கு ஏத்த மாதிரி மாத்திக்கணும்.. என்னால இப்படி உன்னை எப்பயுமே டென்சனா ?? எதா யோசனையோட எல்லா பார்க்க முடியல “

“ வெயிட் லெட் மீ டாக்… அப்புறம் இன்னும் ஒன்னு, நமக்கு இன்னும் நாலே நாளில கல்யாணம்.. நீயும் நானும் புது வாழ்கையை ஆரம்பிக்க போறோம். என் பொண்டாட்டிய பார்க்கும் போது என் கவலை எல்லாம் மறக்கனுமே ஒழிய, அவளை கவலை படுத்த கூடாது. அதுனால தான் சொல்றேன் உன் டென்சனை எல்லாம் என்கிட்டே விட்டிட்டு நீ என்னை கவனிக்கற வேலையை மட்டும் பார் மிது.  எனக்கு தெரியும் மிது உன்னால நிச்சயமா இதில் ஜெயிக்க முடியும் ஆனா எனக்கு அதை எல்லாம் விட  உன் சந்தோசம், நிம்மதி  மட்டும் தான் முக்கியம்” என்று கூறியவனை விழி விரித்து பார்த்தாள் மிதிலா..

அவன் சொல்வது எல்லாம் சரிதான்.. ஆனால் இவள் இப்படி செய்தால் தனக்கு கொடுத்த பொறுப்பில் இருந்து பின்வாங்கியது போல ஆகாதா?? ஜெகதா இவள் மீது வைத்த நம்பிக்கையை இவள் உடைத்து போல இருக்காதா?? ரகுநந்தன் பார்த்துகொள்வான் தான் அதில் சந்தேகமே இல்லை.. ஆனால்… ஆனால் மிதிலாவிற்கு ஏதோ நெருடியது..

“ என்ன மிது அப்படி பார்க்கிற.. நான் அங்க இருக்கும் போது வேலை விட்டு வந்ததுமே வந்து அம்மா மடில படுத்துப்பேன்.. அவ்வளோதான் எனக்கு இருந்த டயர்ட், டென்சன் எல்லாம் காணாம போயிடும்.. கொஞ்ச நேரம் அம்மா கூட பேசினா என் மனசு இன்னும் ரிலாக்ஸ் ஆகிடும்.. ஆனா இப்போ தான் எனக்கு அம்மா இல்லையே..”

“ நான் இதை எல்லாம் உன்கிட்ட தானே மிது எதிர்பார்க்க முடியும் சொல்லு பேபி.. ஆனா நீ இப்பவே இப்படி இருக்க, இன்னும் கல்யாணத்துக்கு அப்புறம் என்ன நடக்குமோ எனக்கு தெரியாது. ஆனா எனக்கு நான் வீட்டுக்கு வரும் போது என் பொண்டாட்டி என்னைய பிரெஷ்ஷா ரிசீவ் பண்ணனும்.. உன் முகத்தை பார்த்தே என் டென்சன் எல்லாம் போகணும்.. இதை நான் எதிர்பார்க்கிறது தப்பா மிது..?? அதைவிட்டு நீயும் நானும் அலுப்பா சலிப்பா வீட்டுக்கு வந்து ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்து அட கடவுளே நினைச்சு பாரேன்” என்று அப்பாவியாய் முகத்தை வைத்து கேட்பவனிடம் மிதிலாவால் என்ன கூற முடியும்..

ஒருவேளை தன் அன்னையை தன்னிடம் தேடுகிறானோ ?? என்று நினைத்தாள் மிதிலா. அவ்வளோதான் பாகாய் உருகிவிட்டது அவளது காதல் கொண்ட நெஞ்சம்.. பொறுப்பாவது இன்னொன்றாவது, என் நந்தனை நானே பார்கவில்லை என்றால் வேறு யார் கவனிப்பார்கள்?? எனக்கு இவன் தான் முக்கியம்.. இவன் மட்டுமே போதும்..

அனைத்தையும் இவனிடம் ஒப்படைத்துவிட்டு ரகுநந்தனின் தேவைகளை கவனிப்பது மட்டுமே போதும் என்று எண்ணினாள். ஆனாலும் ஜெகதாவை நினைத்தால் கொஞ்சம் பயமாய் இருந்தது..

“ ஆனா நந்தன்.. பாட்டி…” என்று இழுத்தாள்..

“ பாட்டிக்கிட்ட நம்ம பேசலாம் மிது..” என்றான் மென்மையாய்..

“ இல்ல நந்தன், பாட்டி ரொம்ப ஆசையா இதை என்கிட்டே ஒப்படைச்சாங்க. ஆனா நான் ஒரு பிரச்சனைன்னு வரவும் இதில இருந்து பின்வாங்கின மாதிரி இருக்காதா?? எனக்கே ஒருமாதிரி தான் இருக்குப்பா.. எனக்கு உங்ககிட்ட மில் இன்சார்ஜ் கொடுக்கிறது பத்தி எந்த அப்ஜெக்சனும் இல்லை. ஆனா பாட்டியை நினைச்சா தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு.. நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் இதை பத்தி பேசலாமா அவங்க கிட்ட ???”

“ ஹ்ம்ம் நீ சொல்றதும் சரிதான்.. பட் பாட்டிகிட்ட இப்போ சொன்னாதான் மிது நல்லா இருக்கும்.. கல்யாணத்துக்கு அப்புறம் சொன்னா மே பி இது வேற மாதிரி டைவேர்ட் ஆகா கூட சான்ஸ் இருக்கு. சோ நம்ம இதை நாளைக்கே பாட்டிக்கிட்ட சொல்லலாம். அவங்களுக்கும் உன் சந்தோசம் தானே மிது முக்கியம்.  “

“ அப்புறம் இது முழுக்க முழுக்க உன் விருப்பம் தான் மிது. நான் என் மனசில இருந்ததை, என் மிது என்னை தப்பா புரிஞ்சுக்கமாட்டாங்கிற நம்பிக்கைல தான் இதை சொன்னேன் “ என்று நிறுத்திதான்..

“ எனக்கு அதை விட நம்பிக்கை உங்க மேல இருக்கு நந்தன்.. நீங்க கண்டிப்பா எல்லாத்தையும் மேனேஜ் பண்ணுவிங்க.. எனக்கு இதில எந்த சந்தேகமும் இல்லை..” என்றால் சிறிது புன்னகையோடு..

அவளது புன்னகையை பார்த்த நந்தன் “ ஹ்ம்ம் இது கொஞ்சம் குட்.. பட் இன்னும் கொஞ்சம் ஸ்மைல் பண்ணா பெட்டரா இருக்கும் “ என்று அவன் கூறிய பாவனையில் அவளுக்கு சிரிப்பே வந்துவிட்டது..

“ தட்ஸ் மை கேர்ள்…” என்று கூறி மீண்டும் அவளை இறுக அணைத்தான்.. அவனது அணைப்பிலும், அவனது பேச்சிலும் மிதிலாவிற்கு இத்தனை நேரம் இருந்த பாரம் எல்லாம் காணாமல் போனது.. ஒரு நிம்மதி பரவுவதை உணர்ந்தாள்..

அன்றிரவு மிதிலாவிற்கு நிம்மதியான உறக்கம் வந்தது.. ஆனால் அவளுக்கு தெரியவில்லை இந்த நிம்மதியின் ஆயுள் காலம் வெகு சில நாட்களே என்று..

ஜெகதாவிற்கு இன்னும் இதை நம்ப முடியவில்லை.. தன் காதுகளில் விழுந்ததை இன்னும் அவரால் ஜீரணிக்க முடியவில்லை. அவருக்கே அப்படி என்றால் கோகிலா வாயடைத்து போய் நின்றிருந்தார்.. காரணம் ரகுநந்தன்..

பொழுது விடிந்ததும் முதல் வேலையாக வந்து ஜெகதாவிடம் விசயத்தை கூறிவிட்டான்.. கேட்டதும் ஜெகதாவிற்கு அதிர்ச்சி.. அதிலும் மிதிலாவிற்கும் இதில் சம்மதம் என்று தெரியவும் இன்னும் அதிர்ச்சி..

ஜெகதா மிதிலாவின் முகத்தை பார்த்தார், அவளோ ரகுநந்தனை நோக்கினாள்.. அவருக்கு அவளது ஒற்றை பார்வையிலேயே புரிந்துவிட்டது.. மிதிலா இப்பொழுது தன் பேத்தியாய் மட்டும் இல்லை ரகுநந்தனின் சரிபாதியாகவும் யோசிக்கிறாள் என்று.. இதற்குமேல் இதில் தன் மறுப்பு செல்லுபடி ஆகாது என்று நினைத்தார்..

ஆனாலும் மிதிலாவிடம் “ என்ன மிதிலா நந்து சொல்லிகிட்டே இருக்கான். நீயும் அமைதியா இருக்க. “ என்று வினவினார்..

“ எனக்கு இதில் முழு சம்மதம் பாட்டி.. கல்யாணத்துக்கு அப்புறம் அவர் கூட நானும் மில்லுக்கு போறேன். அவருக்கு எல்லாம் செட் ஆகும் வரை நான் கூட இருக்கேன்.. “ என்று கூரியவளின் முகத்தில் ஒருவித நிம்மதியே இருந்தது.

ஆனால் ஜெகதா விடாமல் “ நல்லா யோசனை பண்ணு மிதி, உன்னை வீட்டில முடக்கவைக்க நினைக்கல, உனக்கு இப்போ இது சரின்னு தெரியலாம் ஆனா பின்னால நீ பீல் பண்ற மாதிரி எதுவும் நடக்க கூடாது… “ என்றார்.   

ரகுநந்தனோ “ பாட்டி மில் மிதிலா பேர்ல தான் இருக்கும். அதோட M.D அவதான்.. நான் ஜஸ்ட் இன்சார்ஜ் மட்டும் தான்.. சொல்ல போனா மேடம் தான் எனக்கு சம்பளம் கொடுக்கணும்.. அவளுக்கு தெரியாம மில்லில எதுவும் நடக்காது பாட்டி.. அவ பைல்ஸ் பார்த்து சைன் பண்ணுனா தான் எதுவுமே நடக்கும். சோ நீங்க எந்த கவலையும் படவேண்டாம்.. அவளை நான் முடக்கிட மாட்டேன்.. எனக்கும் முதலாளி அவதான்” என்று  லேசாய் சிரித்தபடி சூழ்நிலை இலகுவாக்க கூறினான்.

மிதிலாவிற்கு இவன் கூறியதை கேட்டு இன்னும் புன்னகை விரிந்தது.. தனக்காக எவ்வளவு யோசிக்கிறான். இவன் மனதில்நம்மீது நேசம் இல்லாமல் போகுமா ?? நான் தான் என்னை குழப்பிக்கொள்கிறேன் என்று நினைத்துகொண்டாள்.

“ பாட்டி நீங்க எதுக்கும் கவலை படவேண்டாம்.. எல்லாமே சரியா நடக்கும்.. நீங்க கவலையை விடுங்க.. இன்னும் மூணு நாள் தான் இருக்கு.. சோ நான் இன்னைக்கு இருந்து வீட்டில ரிலாக்ஸ்டா இருக்க போறேன்.. ஹப்பா ரெண்டு நாளும் எனக்கு சரியான தூக்கமே இல்லை பாட்டி “ என்று அவரது மடியில் தலை சாய்த்து கொண்டவளை ஆதரவாய் பார்த்தார் ஜெகதா.. சிறிது நேரம் பேசிவிட்டு ரகுநந்தன் வெளியே சென்றுவிட்டான்..

ஜெகதாவிற்கு ஏனோ ரகுநந்தன் மிதிலாவின் மீது அன்பு செலுத்துவதற்கு பதிலாய் ஆதிக்கம் செலுத்துவது போல தெரிந்தது.. ஆனால் என்ன தான் பேரப்பிள்ளைகள் என்றாலும் இருவரும் கணவன் மனைவி என்று ஆகப்போகிறார்கள், வாழ்கையை ஒன்றாய் சேர்ந்து வாழப்போகிறார்கள் ஒரு அளவுக்கு மேல் தான் இதில் தலையிடமுடியாது என்று எண்ணினார்..

ஆனாலும் மனதின் ஓரத்தில் ஒரு சிறு சஞ்சலம் எழுவதை அவரால் தடுக்க முடியவில்லை..

மிதிலாவின் தலையை வருடியபடி “ மிதிம்மா நல்லா யோசிச்சு தான் இதுக்கு நீ சரின்னு சொன்னியா டா…?? “ என்றார் மீண்டும்..

“ பாட்டி நீங்க எதுக்கு கவலை படுறிங்கன்னு எனக்கு நல்லா தெரியுது. ஆனா நந்தன் என்கிட்டே எதிர்பார்க்கிறதே வேற பாட்டி.. அவர் என்கிட்டே அவங்க அம்மாவை தேடுறாங்க.. எல்லாமே நான்தான்னு நினைக்கிறாங்க. அவங்களை சந்தோசமா பார்த்துகிறது என் பொறுப்பு தானே பாட்டி. அதுவும் இல்லாம நான் வீட்டில இருந்தே எல்லா வேலையும் செய்ய போறேன். அப்புறம் என் செல்ல பாட்டிகூட நிறைய நேரம் இருக்கலாம் “ என்று கூறி சிரித்தவளிடம் வேறு எதுவும் கூற முடியவில்லை.           

தனிமையில் இருக்கும் பொழுது கோகிலாவிடம்  “ என்ன கோகிலா இது, இந்த பசங்க இப்படி பண்ணிட்டு இருக்காங்க. இதெல்லாம் சரியா இருக்குமா ??? இந்த மிதிலா பொண்ணை பாரு அவன் சொல்றதுக்கு எல்லாம் தலையாட்டிட்டு இருக்கா.. அவன் என்னவோ இவளை புரிஞ்சு நடந்துக்கிற மாதிரி தெரியலை…” என்று புலம்பினார்..

“ ஹ்ம்ம் ஒருவேளை ரெண்டு பேருக்கும் மனசு ஒத்துபோயிட்டா எந்த பிரச்சனையும் இல்லையே மா.. விடுங்க மா ரெண்டு பேருக்குமே விவரம் தெரியும். எப்படினாலும் சந்தோசமா இருந்தா சரி. நம்ம மிதி முகத்தை பார்த்திங்களா ரெண்டு நாளைக்கு அப்புறம் இன்னிக்கு தான் சிரிக்குது.. நீங்க கவலை படும் படி எல்லாம் எதுவும் நடக்காது.. “ என்று ஆறுதல் கூறினார்..

இப்படி ஜெகதா கவலையில் இருக்க அங்கே விசாலம் கோவத்தில் இருந்தார்.. அவர் கோவத்தின் காரணம் முகேஷ்..

“ என்னடா இவளுக்கு வயசாயிடுச்சு இவனால எதுவும் செய்ய முடியாதுன்னு தான் நீ இப்படி பண்ணியா?? உனக்கு எனன் தைரியம் அத்தனை பேரு வேலை பண்ணுற இடத்துல போய் நெருப்பு வைக்க ஆள் அனுப்பி இருக்க ??” என்று சீறினார்..

முகேஷினால் விசாலத்தை புரிந்துகொள்ளவே முடியவில்லை..” என்ன இந்தம்மா இப்படி பேசுது, சந்தோசப்படும்ன்னு பார்த்தா இப்படி கத்துது “ என்று எண்ணினான்..

“ டேய் என்ன பதில் சொல்லு.. நானும் ஜெகதாவும் ஜென்ம எதிரிங்க தான் ஆனா அதெல்லாம் தனிப்பட்ட விசயத்தில.. தொழில்ல நாங்க யாரையும் ஒருத்தரை ஒருத்தர் அடிச்சிக்கிட்டது இல்லை.. ஏன்னா அது மத்தவங்க சம்பந்தப்பட்டது.. அதில நிறைய பேரோட உழைப்பு இருக்கு.. எனக்கு ஜெகதாவை பிடிக்காது தான், அவ மனசில அடிக்க தான் நினைக்கிறேனே ஒழிய அவளை பணத்தில வீழ்த்த நினைக்கலை..” என்று தத்துவம் பேசியவரை புரியாத பார்வை பார்த்தான் முகேஷ்..

“ உனக்கு இதெல்லாம் புரியாது, புரிஞ்சா நீ ஏன் இப்படி இருக்க?? இங்க பார் இந்த மாதிரி சின்ன பிள்ளைங்க தனமா செய்றது எல்லாம் விடு.. எனக்கு தேவை ஜெகதா ஒருதடவையாவது என் முன்னால கண்ணீர் விடனும் அவளோ தான்.. அவளோட அந்த ஈகோ என்கிட்டே அடிபடணும்.. அது போதும் எனக்கு.. அதுக்காக நான் எதுவும் செய்வேன் ஆனா இந்த மாதிரி முதுகில குத்தமாட்டேன்.. புரியுதா??” என்று கர்ஜித்தார்..

“ ஹா!! சரிங்கம்மா…” என்றான் வேறு வழியில்லாமல்..

“ இங்க பார் இது போலிஸ் வரைக்கும் போயிடுச்சு, விசாரணைல உன் பேர் வெளிய வராம பார்த்துக்க. ஒருவேளை நீ மாட்டுற மாதிரி சூழ்நிலை வந்தா அப்புறம் என்னை குறை சொல்ல கூடாது.. ஏன்னா ஒரு தப்பு பண்ணுனா அதில இருந்து தப்பிக்கவும் தெரியனும் அதான் புத்திசாலித்தனம்..  போ போய் நான் சொன்ன வேலையை பாரு. இன்னும் மூணு நாள் தான் இருக்கு” என்று அனுப்பி வைத்தார் விசாலம்.

முகேஷிற்கு இன்னுமே கூட விசாலத்தை புரிந்துகொள்ள முடியவில்லை.                  

                     

                    

     

             

            

                                                                   

        

 

   

                                                       

                                               

Advertisement