Advertisement

      நேசம் – 11

ரகுநந்தன், மிதிலா இருவரின் திருமணத்திற்கு இன்னும் இருபது நாட்களே இருந்தன. திருமண வேலைகள் ஒருபக்கம் சிறப்பாக நடந்துகொண்டிருக்க மிதிலாவும் ரகுநந்தனும் தங்களுக்கு இருக்கும் வேலைகளை செவ்வனே செய்து கொண்டு இருந்தனர்..

ஒரே வீட்டில் இருப்பதனால் பார்க்கவேண்டும், பேசவேண்டும் என்று அந்த படபடப்பு, தவிதவிப்பு இதெல்லாம் இல்லை போல.. ஆனால் சில நேரம் ரகுநந்தனோடு தனிமையில் பேசும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மிதிலா தான் தவித்துவிடுவாள்…

அவளது கைகளை பிடித்துக்கொண்டும், தோள் மீது கை போட்டு லேசாய் அணைத்தபடி அவன் பேசும் போதெல்லாம் மிதிலாவின் இதயம் பந்தய குதிரையை போலத்தான் இருக்கும்.. ஆனால் ரகுநந்தனோ  இதை எல்லாம் உணராது தன் பேச்சில் தான் இருப்பான்..

மிதிலாவிற்கு அப்பொழுதெல்லாம் தோன்றும் இவனுக்கு இது போன்ற உணர்வு இல்லையா என்று..?? கேட்க வேண்டும் என்று நினைப்பாள் ஆனால் ஏனோ கேட்க தோன்றாது.. காரணம் அவன் காட்டும் அதீத அன்பு என்று அவள் நினைத்தாள்..

ஆனால் அது அவள் மீது கொண்ட அன்பா?? காதலா ??? என்றெல்லாம் அவனுக்கு தெரியாது.. ஒரு நாளுக்கு நூறு முறையாவது மிது என்று அழைத்துவிடுவான். காலை எழுந்ததில் இருந்து, இரவு உறங்கும் வரை வீட்டில் மிது என்ற அவள் பெயர் ஒலித்துக்கொண்டே இருக்கும்..

இதை பார்த்து கோகிலா “ ஹ்ம்ம் ஜெகதாம்மா கல்யாணத்துக்கு முன்னமே இப்படி இருக்கே.. கல்யாணம் எல்லாம் ஆச்சுன்னா நமக்கு இந்த வீட்டில இடம் இருக்குமா ???” என்றார் கிண்டலாய்..

இதை மிதிலாவும் கேட்டபடி தான் இருந்தாள்.. அவன் இப்படி எல்லாம் செய்வது மனதிற்கு ஒருபுறம் மகிழ்ச்சியை கொடுத்தாலும் இன்னொரு புறம் அடடா என்று இருந்தது.

“என்ன நந்தன், இப்படி ஏன் ஓயாம என் பேரை ஏலம் போடுறிங்க ???” என்று ஒருமுறை கேட்டே விட்டாள்.. அவ்வளோ தான் அவன் முகம் அப்படியே வாடிவிட்டது..

“ என்ன மிது நான்.. உன்னை கேட்காம வேற யாரை கேட்கிறது..??” என்றான் அப்பாவியாய்..

“ இதுக்குமுன்ன இப்படிதான் பண்ணிங்களா என்ன ?? பாட்டி, கோகிலா அக்கா எல்லாம் என்னை கிண்டல் பண்றாங்க..” என்றாள் மெல்ல..

“ பண்ணா பண்ணட்டும்… இங்க பாரு மிது எத்தனை பேருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் சொல்லு.. கல்யாணத்துக்கு முன்னமே ரெண்டு பேரும் ஒரே வீட்டில இருக்கிறோம்… அதான் இதெல்லாம் அனுபவிக்கனும் மிது, ஆராயக்கூடாது..” என்று கூறி அவளது வாயை அடைத்துவிடுவான்..

மிதிலாவும் இதை எல்லாம் மனதில் ரசிக்க தான் செய்தாள்.. இப்படி நாட்கள் செல்ல ரகுநந்தன் சதிஸிடம் தன் திருமணத்தை பற்றி கூறினான்..

மிதிலாவும் கூட சதிஸிடம் பேசினாள்.. இருவரையும் சதிஸ் கிண்டல் செய்து ஒருவழி செய்துவிட்டான்..

“ டேய் ராக்கி.. இது தான் உன் ஜஸ்ட் ரிலேசனா டா. அன்னிக்கு என்னவோ சொன்ன இப்ப என்ன டா கல்யாணம்னு சொல்ற..” என்று நன்றாய் வாரினான்..

இதற்கு ரகுநந்தன் என்ன பதில் கூறுவான்… அசடு வழிய மட்டுமே முடிந்தது.. சதிஸ் மிதிலாவோடும் பேசினான்..

“ இவருக்கு பிரன்ட்னா எனக்கும் பிரன்ட் தான் “ என்று கணினி திரை முன்பு கைகளை குலுக்க நீட்டுவது போல நீட்டினாள், சதிஸும் அதை அங்கீகரிப்பது போல அவனும் அந்த பக்கம் கையை நீட்டினான்.. இருவரும் அவராகவே குலுக்கிகொண்டனர்..

இதை ரகுநந்தனும் அமைதியாய் பார்த்தபடி தான் இருந்தான்..

“ ஏன் டா கல்யாணத்துக்கு இன்னும் இருபது நாள் தான் இருக்கு இப்போ சொல்ற?? நான் எல்லாம் வரவேண்டாமா ???” என்று எகிறினான் சதிஸ்.

“ வா டா உன்னை வரவேண்டாம்னு சொன்னேனா??” என்றான் ரகு.

“ அது சரி நம்ம ஆபிஸ் பத்தி உனக்கு தெரியாதா லீவ் குடுத்துட்டு தான் மறுவேலை பார்ப்பான்.. சரி நான் ட்ரை பண்றேன்.. கல்யாணத்துக்கு வர முடியாட்டியும் அதுக்கு அப்புறம் கண்டிப்பா வருவேன் டா” என்றான் சதிஸ்..

“ அடடா உங்களை யாராவது வரவேண்டாம்னு சொன்னாங்களா?? கல்யாணத்துக்கே வர முயற்சி பண்ணுங்க சதிஸ் “ என்றாள் மிதிலா..

பிறகு இன்னும் சில நேரம் பேசிவிட்டு சதிஸ் விடைபெறவும் அப்பொழுது தான் மிதிலா ரகுநந்தனின் அமைதியை உணர்ந்தாள்..

“ என்ன நந்தன் என்ன இவ்வளோ சைலென்ட்டா இருக்கீங்க ??? உடம்பு ஏதாவது பண்ணுதாப்பா ??” என்றாள் அக்கறையாய்..

அவனோ அதற்கு பதில் கூறாமல் “ நீ ஏன் இப்படி எல்லாம் என்கிட்டே பேசல??” என்றான் மொட்டையாக.. அவளோ புரியாமல் பார்த்தாள்..

“ எப்படி எல்லாம் பேசல ???”

“ அதான் இப்போ சதிஸ் கிட்ட எப்படி பேசின, ஆனா என்னை முதல் தடவை பார்க்கும் போது எப்படி எரிஞ்சு விழுந்த, கையை பிடிச்சு இழுத்துகிட்டு போயி வெளிய வேற விட்ட. “ என்று முகம் திருப்பினான்..

இதை கேட்ட மிதிலாவிற்கு முதலில் சட்டென்று கோவம் வந்தது.. ஆனால் அவனது முகத்தை பார்த்தாள் அவன் சந்தேகமாய் கேட்டது போல தெரியவில்லை.. இவள் நம்மிடம் இப்படி பேசவில்லையே என்ற வருத்தமே இருப்பது போல இருந்தது.. நொடியில் புரிந்துகொண்டாள் மிதிலா.. அவளுக்கு சிரிப்பு தான் வந்தது.

“ம்ம்ச்.. இப்ப ஏன் சிரிக்கிற ??” எரிந்து விழுந்தான் அவன்..

“ ஒண்ணுமில்ல கொஞ்ச நேரம் மொட்டை மாடிக்கு போலாமா?? காத்து நல்லா வீசுது “ என்று எழுந்தாள்.. அவனும் அவளோடு சென்றான்..

மாடியில் வீசிய காற்று கொஞ்சம் அவன் மனதையும் குளிர்வித்தது போல.. கைகளை கட்டியபடி அவன் முகத்தையே பார்த்தபடி நின்றாள் மிதிலா..

“ என்ன மிது ஏன் இப்படி பார்க்கிற???”

“ நீங்க எனக்கு யாரு ??” என்று வினவினாள்..

“ என்ன ?? உனக்கு தெரியாதா ??? “

“ ம்ம்ச் சொல்லுங்க நந்தன்..“

“ என்ன மிது கேள்வி இது?? நம்ம மேரேஜ் செய்ய போறோம்.. எனக்கு நீ தான் உனக்கு நான் தான் மிது “ என்றான்..

“ ஹ்ம்ம்.. அப்போ யு ஆர் மை டியர்… அப்படிதானே ??” என்றாள் அவனது கைகளை பிடித்து தனக்குள்ளே அடக்கி. இதை கேட்டதும் அவன் முகம் பிரகாசமானது..

“ நீங்க என் டியர்.. மை டியர் நந்தன் ஒருத்தரை என் பெஸ்ட் பிரன்ட்ன்னு பேச வைக்கும் போது நான் நல்லவிதமா பேசாம இருக்க முடியுமா என்ன?? சதிஸ் உங்க பிரன்ட்னா அப்போ எனக்கும் பிரன்ட் தானே.. அதாவது நம்ம பிரன்ட் அதுனால தான் நான் சகஜமா பேசினேன். நீங்க இங்க வரதுக்கு முன்ன நம்ம பார்த்து இருக்கோமா நந்தன் ??”

இல்லை என்று தலையசைத்தான்..

“ ஆட பார்த்திருக்கிறத விடுங்க, என்னை நீங்க கேள்வி பட்டுகூட இருக்க மாட்டிங்க. நானும் அது போல தான். அப்படி இருக்கும் போது திடீர்னு பார்த்தா எப்படி பேச தோணும்.. “ என்று சிறு குழந்தைக்கு விளக்குவது போல விளக்கினாள்..

அவனுக்கு என்ன புரிந்ததோ, அவள் தன் கரங்களை பிடித்து இருப்பதிலும், தன்னை டியர் என்று கூறியதிலுமே அவன் மனம் நின்றுவிட்டது..

“ என்ன நந்தன் அமைதியா இருக்கீங்க.. நான் சொல்றது சரிதானே பா..” என்று ராகம் பாடினாள்..

அவனும் அந்த ராகத்திற்கு ஏற்ற தாளத்தில் தலையை ஆட்டினான்..

இதன் பிறகு என்ன பேசினர் என்று அவர்களை கேட்டால் இருவருக்கும் தெரியாது.. பேசினார்கள் நிறைய. மிதிலாவிற்கு ரகுநந்தனை சமாதானம் செய்துவிட்டோம் என்று நிம்மதியாக இருந்தது..

அவளை பொருத்தவரைக்கும் ரகுநந்தன் உடனான இந்த வாழ்க்கை எந்த பிரச்சனையும் இருக்க கூடாது என்றே எண்ணினாள்.. அப்படி சிறு பிணக்கு ஏற்பட்டாலும் அது ஜெகதாவை இன்னும் பாதிக்கும் என்று நினைத்தாள். அது மட்டுமில்லாமல் ரகுநந்தனை அவளுக்கு பிடித்து இருந்தது.. அவனை தன் கணவனாக, தன் சரி பாதியாக நினைத்து பார்க்க ஆரம்பித்துவிட்டாள்..

ஆனால் ரகுநந்தன் என்ன நினைக்கிறான் என்று அவளால் சில நேரங்களில் புரிந்துகொள்ள முடியவில்லை.. சில நேரம் என்ன பல நேரம் குழைகிறான், ஆனால் அவன் கூறும் எதற்காவது இவள் மறுப்பாய் ஒருவார்த்தை பேசினால்  ஒன்று அவன் முகம் வாடி விடுகிறது, இல்லை சிறு குழந்தை போல பிடிவாதம் பிடிக்கிறான், அப்படியும் இல்லை என்றால் கோவமாய் பேசுகிறான்..

எப்படி இருந்தாலும் மிதிலாவிற்கு அவனை ஒவ்வொரு விசயத்திற்கும் சமாதானம் செய்யவே நேரம் சரியாய் இருக்கிறது. அவளுக்கு ஒன்று மட்டும்   புரியவில்லை தன் வாழ்வு ரகுநந்தனை சமாதானம் செய்வதிலேயே கழிய போகிறது என்று..

இப்படிதான் அன்று மிதிலா ஆலையில் இருந்து வேகமாய் வீட்டிற்கு வந்துவிட்டாள்.. வந்தவள் பார்த்தால் திருமணத்திற்கு தைக்க கொடுத்து இருந்த ப்லௌசின் அளவு எல்லாம் மாறி இருந்தது..

“ நான் எப்படி டிசைன்ல குடுத்தா, கெடுத்து வச்சிருக்காங்க. கோகிலாக்கா நீங்களாவது பார்த்து வாங்க கூடாதா “ என்று அவரையும் ஒரு கடி கடித்துவிட்டு “ ம்ம்ச் “ என்று டென்சனாக அமர்ந்தாள்..

“ என்ன மிதிம்மா என்ன டென்சன் “ என்று ஜெகதா கேட்கவும் கோகிலா முந்திகொண்டார்

“ அது ஒண்ணுமில்ல மா மிதி குடுத்த மாதிரி சட்டை தைக்கல போல அதான்.. “ என்று விடை அளித்தார்..

மிதிலா எப்பொழுதும் உடை விசயத்தில் கவனமாக இருப்பாள்.. பார்த்து பார்த்து தான் தேர்வு செய்வாள், ஒரு சுடிதார் எடுக்கும் போதே இதை இப்படி இன்ன விதமாக தைத்து போடவேண்டும் என்று முடிவு செய்து அதை வரைந்து கொடுத்து விடுவாள் தையல்காரரிடம்.. இதற்கே இப்படி என்றால் திருமணதிற்கு அணியும் உடையை பற்றி கேட்கவா வேண்டும்??

தையல் காரரை தொடர்புகொண்டு பேசினாள்.. அவர் என்ன கூறினாரோ “ அக்கா எனக்கு ஒரு காபி கொடுங்க, குடிச்சிட்டு டைலர் கடைக்கு போறேன், இன்னைக்கே சரி பண்ணி தரேன்னு சொல்லி இருக்காங்க “ எனவும் கோகிலாவும் காபி போட்டு கொடுத்தார்..

ஜெகதா “ மிதிம்மா கோகிலாவையும் கூட்டிட்டு போடா.. எவ்வளோ தூரம் நீ மட்டும் போக வேண்டாம். வரும் போது நேரம் வேற ஆகிடும், அப்புறம் அவன் வந்து வேற தேடுவான்..”என்றார்

“அதெல்லாம் வேண்டாம் பாட்டி.. நான் போய் கொடுத்துட்டு எப்படின்னு சொல்லிட்டு வந்திடுவேன்.. நான் அவர்கிட்ட சொல்லிட்டே போறேன்.. கோகிலாக்கா இப்பையே அலுப்பா தெரியுறாங்க..” என்றாள்..

“ இல்ல மிதி நானும் வரேன் “ என்றார் கோகிலா.

“ வேணாம் கா நீங்க பாட்டி கூட இருங்க “ என்று கூறிவிட்டு ரகுநந்தனுக்கு அழைத்தாள்..

“ என்ன மிது ???”

“ நந்தன், நான் வீட்டுக்கு வந்துட்டேன் பா, வந்து பார்த்தா டைலர் சொதப்பி இருக்கார்.. நான் இப்போ டைலர் கடைக்கு போறேன்.. நீங்க வந்தா தேடுவிங்கன்னு தான் கூப்பிட்டேன்” என்றாள்.

அவளோடு பேசிக்கொண்டே மணியை பார்த்தான் நந்தன்.. ஏழு என்று காட்டியது..

“ அதெல்லாம் வேண்டாம். இன்னும் ஒரு அரை மணி நேரத்தில நான் வந்திடுவேன். அப்புறம் போகலாம்”

“ அட என்ன நந்தன் நீங்க, நீங்க வந்து ரெஸ்ட் எடுங்க நான் போயிட்டு வந்திடுறேன் “

“ ம்ச்.. ஒருதடவை சொன்னா உனக்கு புரியாதா?? நான் வந்தப்புறம் போகலாம்.. இரு “ என்று கூறி வைத்துவிட்டான்..

தன் அலைபேசியையே ஒரு நிமிடம் பார்த்தவள் பின் ஒரு பெருமூச்சை வெளியிட்டாள்..

“ என்ன மிதிம்மா என்ன சொல்றான் “ ஜெகதா வினவினார்..

“ ஹா !!! வந்து கூட்டிட்டு போறாங்களாம்.. சொல்ற பேச்சே கேட்கிறது இல்ல பாட்டி உங்க பேரன் “ என்று செல்லமாய் கடிந்து கொண்டாள்..

“ பாத்திங்களா மா, இப்போவே தம்பிக்கு மிதி மேல எவ்வளோ அக்கறைன்னு“ என்று கோகிலா தன் பங்கிற்கு சொல்லவும் அத்தனை நேரம் மிதிலா மனதில் இருந்த சிறு கசப்புணர்வு காணாமல் போனது..

“ இந்நேரம் தனியா போகவேண்டாம்னு தான் சொல்லி இருப்பான் போல. அதையே கொஞ்சம் அன்பா சொன்னா என்னவாம் ??” என்று நினைத்தபடி தன் அறைக்கு சென்றாள்..

சொன்னது மாதிரியே ரகுநந்தனும் வந்தான், வந்தவன் பத்தே நிமிடத்தில் தயாராகி அவளை அழைத்தும் சென்றான். ஆனால் அவளுக்கு தான் மனம் சங்கட பட்டது..

“ ஏன் நந்தன் நானா போயிருக்க மாட்டேனா ?? உங்களுக்கு இந்த அலைச்சல் தேவையா ??” என்றால் மெல்ல

அவள் கேள்விக்கு பதில் கூறாமல் “ ஏன் மிது நான் உன்னை கூட்டிட்டு போக கூடாதா ?? இல்லை உனக்கு இப்படி வரது பிடிக்கலையா ???” என்றான்..

இதற்கு என்ன பதில் சொல்வாள் மிதிலா. “ நான் அப்படி நினைக்கலை நந்தன். உங்களுக்கு சிரமம்னு தான் அப்படி சொன்னேன் “ என்று கூறி பேச்சை முடித்துவிட்டாள்.. மனதிற்குள் “ இப்படி ஏதாவது குதர்க்கமாக பேசி வாயை அடைத்துவிடுவான்” என்று கறுவிக்கொண்டாள்..

சிறிது நேரம் அமைதியாக வந்த ரகுநந்தன் “ இங்க பாரு மிது, நான் இப்படி நடந்துக்கிறது உனக்கு பிடிக்காமல் கூட இருக்கலாம், ஆனா நான் உன் நல்லதுக்கு தான் சொல்றேன். இனிமே வெளிய போகணும்னா ஒன்னு நான் கூட்டிட்டு போறேன், இல்ல பாட்டி, கோகிலாக்கா கூட போ. தனியா எங்கவும் போகாத.. எனக்கு பிடிக்கல..” என்றான் ஒருமாதிரி முகத்தை வைத்து..

சுள்ளென்று கோவம் வந்தது தான் மிதிலாவிற்கு. இது நான் பிறந்து வளர்ந்த ஊர்.. நான் ஒன்றும் சிறு குழந்தை இல்லை, அத்தனை பெரிய ஆலையை தனியாக நிர்வகிக்கிறேன் இது கூட எனக்கு தெரியாதா?? என்று கூறவேண்டும் போலத்தான் இருந்தது, ஆனால் மௌனியாக இருந்தாள்..

“ என்ன மிது எதுவும் சொல்லாம இருக்க ???” என்றான் விடாமல்.

அவள் பதில் கூறுவதற்கு முன் தையல் கடை வந்துவிட்டது.. இருவரும் இறங்கி சென்று வந்த வேலையை கவனித்தனர்.. கடைகாரர் சிறிது நேரம் இருந்து வாங்கிகொண்டு போகுமாறு கூறவும் வேறு வழியில்லாமல் காத்திருக்க முடிவு செய்தனர்..

அப்பொழுது தான் மிதிலாவிற்கு இவன் இன்னும் ஒரு டீ கூட குடிக்கவில்லை என்று நினைவு வந்தது.. “ நந்தன் ஏதா சாப்டிட்டு வரலாமா ?? நீங்க வீட்டுக்கு வந்தும் எதுவும் குடிக்க கூட இல்லை.. “ என்றாள்..

முதலில் மறுப்பாக கூற வாய் திறந்தவன் தன் மீது உள்ள அக்கறையில் கூறுகிறாள் என்று சரி என்று சொன்னான்.. இருவரும் அங்கிருந்த ஒரு சிறு உணவகத்திற்கு சென்றனர்..

இவர்கள் உள்ளே நுழையவும் அதே நேரம் முகேஷ் வேறு யாரோ ஒருவனுடன் மிக முக்கியமாக பேசியபடி வெளியே வரவும் சரியாக இருந்தது.. தங்களை பார்த்ததும் முகேஷ் பேசுவான் என்றே இருவரும் நினைத்து சற்று ஒதுங்கி நின்றனர். ஆனால் அவனோ அந்த நபருடன் ஏதோ பேசியபடி இவர்களை கவனிக்காமல் சென்றுவிட்டான்..

மிதிலாவும் ரகுநந்தனும் இருவரும் ஒருவரின் முகத்தை இன்னொருவர் பார்த்துகொண்டனர்..

“ என்ன நந்தன் இது… இவன் இப்படி போறான்..” என்றாள் மிதிலா..

“ விடு மிது போகட்டும்.. இல்லைனா இவன் அறுவையை தாங்க முடியாது. அதுவும் அவன் உன்னை பார்கிறதை என்னால தாங்கவே முடியாது..” என்று கூறி லேசாய் சிரித்தான்.. அவளுக்குமே கூட அந்த சிரிப்பு தோற்றி கொண்டது..

ஏனோ இந்த மாலை பொழுது இருவருக்குமே இனிமையாய் கழிந்தது போல இருந்தது.. கிளம்பும்போது இருந்த மனநிலை மாறி இருவருமே உற்சாகமாக இருந்தனர்..

“ ஒரு ப்ளௌஸ்க்கு இத்தனை ஆர்ப்பாட்டமா மிது ??” என்று அலுத்துகொண்டான் வரும்போது.

“ அது சரி.. நீங்க போடுற சர்ட் கோணல் மாணலா இருந்தா உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையா ??? எப்படி இருந்தாலும் போடுவிங்களோ ??” என்றாள் பதிலுக்கு.. இப்படி பதிலுக்கு பதில் இருவரும் பேசியபடி சலசலத்த படி வந்தனர்..

“ மிது வீட்டுக்கு போகவும் எனக்கு இந்த ப்ளௌஸ் போட்டு காட்டு “ என்றான்..

“ ஹ்ம்ம் போயி குளிச்சிட்டு போட்டு பார்க்கணும் நந்தன் “ என்றாள் அவன் என்ன கூறுகிறான் என்று புரியாமல்..

அவனோ “ நான் எனக்கு போட்டு காட்டுன்னு சொன்னேன் மிது “ என்றான் உல்லாசமாய்.. அப்பொழுது தான் அவன் என்ன கூறுகிறான் என்று உரைத்தது அவளுக்கு..

“ ஹா !! அது சரி கல்யாணத்துக்கு போடுவேன் பார்த்துகோங்க “ என்றாள்..

“ ம்ம்ச்.. அதெல்லாம் முடியாது.. சரி பண்ண நான் கூட வந்தேன்ல, அப்போ எனக்கு நீ போட்டு காட்டு நான் பார்க்கணும்” என்றான் வேண்டும் என்றே..

“ சோ !! என்ன இவன் “ என்று எண்ணியவளுக்கு பேச்சு வரவில்லை..

“ என்ன டியர் சைலென்ட் ஆகிட்ட “ என்று இடையோடு சேர்த்து அணைத்தான்..

“ ச்சு!! சும்மா இருங்க நந்தன்.. என்ன இது இத்தனை அலம்பல்…” என்று நெளிந்தாள்..

“ அடப்பாவி அலம்பலா, சரி இவளுக்காக இத்தனை அலையுறமே, கொஞ்சமாது நம்மை கவனிப்பான்னு பார்த்தா ரொம்ப கஞ்சமா இருக்க மிது நீ “ என்று கூறியபடி அவள் எதிர்பாரா நேரத்தில் அவளின் கன்னத்தில் இதழ் பத்திதான்..

அவள் இன்னதென்று உணருமுன்னே விலகியும் இருந்தான்.. மிதிலாதான் திணறி போனாள்.. அவளின் இதய துடிப்பு அவளுக்கே கேட்டது.. முதல் முத்தம்.. அவன் தீண்டிய இடம் இன்னும் குறுகுறுப்பாய் இருப்பது போல உணர்ந்தாள்.. ரகுநந்தனோ அவளின் முக மாற்றங்களை ரசித்தபடி இருந்தான். இப்படியாக இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.

இருவரின் முகத்தை பார்த்த ஜெகதாவிற்கு மனம் நிம்மதி அடைந்தது.. அவருக்கு மிதிலா தனக்காக தான் இந்த திருமணத்திற்கு சம்மதித்தாளோ என்ற எண்ணம் தோன்றி மிகுந்த கவலையை கொடுத்தது.. ஆனால் இன்று மிதிலாவின் முகத்தில் இருந்த வெட்கம், செம்மை எல்லாம் சேர்ந்து அவருக்கு ஒரு சந்தோசத்தை கொடுத்தது..

சதிஸ் அழைக்கவும் பேசிக்கொண்டே தன் அறைக்கு சென்றுவிட்டான் ரகுநந்தன்.. அங்கு சதிஸ் புலம்பி தீர்த்தான்.

“ டேய் இந்த லிசி என் உயிரை வாங்குறா டா.. நான் எங்க அம்மாகிட்ட சொன்னேன் உனக்கு கல்யாணம்னு.. அதை அம்மா லிசிகிட்ட சொல்லிட்டாங்க போல “ என்றான்..

“ அம்மா ஏன் டா அவகிட்ட சொன்னாங்க ???” என்று கடுகடுத்தான் ரகு..

“ அவ தினமும் உன்னை பத்தி விசாரிக்கிறேன்னு இங்க வந்து கடுப்பை கிளப்பிகிட்டு இருந்தா டா அதான் அம்மா அவனுக்கு கல்யாணம் ஆக போகுது, இனிமேலாவது நந்து நிம்மதியா இருக்கட்டும், அவன் பேச்சை நீ இனிமே பேசக்கூடாதுன்னு திட்டி அனுப்பிட்டாங்க..”

“ சரி விடு……”

“ என்ன விடா ??? டேய் அவ என் உயிரை எடுக்கிறா டா.. ஒரு தடவை அவகிட்ட பேசிடேன்.. “ என்றவன் படக்கென்று “ டேய் லிசி பத்தி மிதிலாக்கு தெரியுமா ???” என்று வினவினான்..

“ இல்ல மச்சி இன்னும் தெரியாது” என்றான் நந்தன்..

“ ஏன் டா ஏன் சொல்லல?? சொல்ல வேண்டாமா??” இது சதிஸ்..

“ சொல்லணும் தான் டா.. சொல்ல கூடாதுன்னு எல்லாம் எதுவும் இல்லை.. ஆனா சொல்ற மாதிரி இன்னும் சூழ்நிலை அமையல அதான்.. “

“ ஹ்ம்ம் எதுவா இருந்தாலும் முன்னமே சொல்லிடு ராக்கி.. அதான் நல்லது.. பின்னால இதை பத்தி தெரிஞ்சா பிரச்சனை..” என்றான் நிஜ அக்கறையோடு..

“ ஆமா டா சதிஸ்.. ஆனா நான் மிதுகிட்ட மறைக்கணும்னு எல்லாம் நினைக்கல.. கண்டிப்பா சொல்லிடுவேன் “ என்று பேசிக்கொண்டு இருந்தான்..

இவை அனைத்தும் ரகுநந்தனின் ஆபிஸ் பையை அவனிடம் கொடுக்க வந்த மிதிலாவின் காதுகளில் தெள்ள தெளிவாய் விழுந்தது..

கேட்டு உறைந்து போய் நின்று இருந்தாள்..

“ லிசி… யார் அது??”

“அவளுக்கும்  இவனுக்கு என்ன சம்பந்தம்??”                                                

“ வந்து இத்தனை நாளில நம்மகிட்ட ஒருவார்த்தை கூட சொல்லவே இல்லை.. ஏன் ??”

என்று இன்னும் பல கேள்விகள் அவள் மனதில் தோன்றின.. ஏனோ மனதில் சொல்ல முடியாத ஒரு தவிப்பு அவளை ஆட்கொண்டது.. கண்களில் அவளையும் அறியாமல் கண்ணீர் வழிந்தது.. அப்படியே நின்றிருந்தாள்..

சதிஸிடம் பேசிவிட்டு திரும்பிய ரகுநந்தன் அவள் இருப்பதை பார்த்து அதிர்ந்தான்..

      

                                                                                                                                                                                  

        

        

                                                          

  

 

                

 

Advertisement