Advertisement

      நேசம் – 10

“எப்படி டா… எப்படி?? எப்படி இந்த நிச்சயம் நடந்தது?? ஒவ்வொரு நிமிசமும் அவங்களை நம்ம கவனிக்கும் போது எப்படி டா இத்தனை வேகத்துல ரகுநந்தனுக்கும், அந்த அனாதை பொண்ணுக்கும் நிச்சயம் பண்ணி வைச்சா ஜெகதா ?? அதுவும் ஒருவாரம் கழிச்சு தான் நமக்கு தெரிய வந்திருக்குன்னா என்ன அர்த்தம்?? நம்ம ஆளுங்க எல்லாம் என்ன பண்ணிட்டு இருக்கானுங்க” என்று காட்டு கத்தலாய் முகேஷை பார்த்து கத்திகொண்டு இருந்தார் விசாலம்..

முகேஷோ தங்கள் திட்டங்கள் எல்லாம் ஒன்றுமில்லாமல் போனதை எண்ணி வாயடைத்து போயிருந்தான்..

“ என்னடா பதில் சொல்லாம அமைதியா இருக்க, என்கிட்டே பணம் வாங்கிட்டு அந்த ஜெகதாக்கு விசுவாசியா இருக்கியா என்ன ??” என்று அதட்டல் போடவும்

“ ஐயோ!! என்னம்மா இப்படி சொல்லிட்டிங்க.. உங்க புண்ணியத்தில தான் நான் அங்க வேலைக்கு போனேன். ஆனா இது.. இதெல்லாம் எப்படி நடந்ததின்னு எனக்கும் ஒன்னும் தெரியலை மா..”

“ ச்சி வாயை மூடு.. ஒரு வயசு பொண்ணு மனசில இடம் பிடிக்க துப்பில்ல உனக்கெல்லாம், ஜெகதாவோட சொத்தை எப்படிடா ஆள முடியும் உன்னால.. ஆமா கல்யாணம் எப்போ ??“ என்று கோவத்தில் கண்கள் சிவந்து கர்ஜித்து கொண்டிருக்கும் விசாலத்தை பார்த்து நடுங்கித்தான் போனான் முகேஷ்..

“ அதில்லம்மா, அந்த மிதிலா என்னைய பார்த்தாலே முகம் சுளிக்கும்.. கல்யாணம் இன்னும் ஒரு மாசத்தில” என்றான் ஒருவிதமான குரலில்.

“ அடச்சி… இப்படி சொல்ல உனக்கு வெட்கமா இல்லை. அப்புறம் என்ன டா ஆம்பிளை நீ.. ஒரு பொண்ணு மனசை கலைக்க தெரியலை நீயெல்லாம் வந்துட்ட பெரிய இவனாட்டம்.. “ என்று கத்தியவருக்கு மூச்சு வாங்கியது..

“ அம்மா பார்த்து மா மெல்ல..” என்று அவரை பிடிக்க வந்தவனின் கைகளை உதறிவிட்டு இருக்கையில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டார்.. ஆனாலும் கோவம் மட்டும் தணிந்த பாடில்லை..

முகேஷோ மனதில் “ இத்தனை வயசு ஆகியும் இந்த கிழவிக்கு திமிர் குறையலை.. என்ன பேச்சு பேசுது.. இத்தனை வருசமா ஜெகதம்மாவை இவங்கனால எதுவுமே பண்ண முடியாம தானே என்னை கூப்பிட்டாங்க.. இப்போ கத்தல் வேற.. “ என்று முனங்கினான்

“என்னடா அங்க முனுமுனுன்னு பேசிட்டு இருக்க.. சத்தமா சொல்லு “ என்று மீண்டும் கர்ஜித்தார் விசாலம்..

“ ஹா!! அது ஒண்ணுமில்லமா.. அடுத்து என்ன பண்றதுன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன்..”

“அந்த சுகிர்தா என்னடா பண்ணி தொலைக்கிறா?? வாங்கின பணத்தை எல்லாம் மறந்துட்டாளா என்ன ?? கட்டு கட்டா வாங்கினாளே டா.. ஒரு தடவை கூடவா அந்த ரகுநந்தன் பார்வை இவ மேல பதியல…”

“ அந்த பொண்ணும் எத்தனையோ முயற்சி பண்ணிக்கிட்டு தான் இருக்கு. ஆனா அவன் பெரிய எமகாதகனா இருப்பான் போல.. “ என்று கைகளை பிசைந்தான் முகேஷ்..

“ம்ம் “ என்று கேட்ட விசாலமோ சற்றே யோசனையில் ஆழ்ந்தார்.. சிறிது நேரம் கழித்து “ டேய் முகேஷா !!!” என்று அவனை அழைக்கவும் பதறி அடித்து திரும்பினான்..

“ என்னம்மா !!!”

“ நம்ம போட்ட திட்டத்தில எந்த மாற்றமும் இல்லை.. கல்யாண ஏற்பாடு எல்லாம் நடக்கட்டும். பத்திரிக்கை அடிக்கட்டும், ஊரை கூட்டட்டும், அலங்காரம் பண்ணட்டும், எல்லாம் நடக்கட்டும் ஆனா இந்த கல்யாணம் மட்டும் நடக்காது டா.. நடத்த இந்த விசாலம் விடமாட்டா..” உறுதியுரைத்தார் விசாலம்..

“ எப்படிம்மா… எப்படிம்மா கல்யாணம் நிக்கும் ???”

“ ஆமா எல்லாம் என்கிட்டையே கேளு.. உனக்கு மூளையே இல்லையா ?? “ என்று பொரிந்து விட்டு தன் திட்டத்தை விளக்கினார்.. அதை கேட்ட முகேஷின் முகம் ஆயிரம் விளக்குகளை பற்ற வைத்தது போல பிரகாசித்தது..

“ என்ன டா அப்படியே பிரமிச்சு போயி நிக்கிற ?? நான் சொன்னது எல்லாம் புரிஞ்சதா ?? போ போய் அந்த சுகிர்தா பொண்ணுகிட்ட எல்லாம் எடுத்து சொல்லு. நீயும் அங்க அவளுக்கு உதவியா இரு. அப்போதான் நம்ம காரியம் முடியும்..” என்று விரட்டவும்

“ சரிங்கம்மா “ என்று கூறிவிட்டு தன் வேலையை பார்க்க ஓடினான் முகேஷ்..

விசாலத்தின் முகத்தில் ஒரு குரூர புன்னகை வந்து போனது.. “ ஜெகதா இந்த ஜென்மத்தில ஒரு தடவையாவது நீ என்கிட்டே தோத்து போகணும்.. இது இன்னைக்கு நேத்து வந்த பகை இல்லை.. கிட்டத்தட்ட அறுபது வருசமா நமக்குள்ள இருக்கிறது.. உன் பேரனுக்கும் பேத்திக்கும் கல்யாணம் நடந்தா தானே நீ நிம்மதியா இருப்ப.. கவலையே படாத நான் அதை நடக்க விடமாட்டேன்..” என்று சூளுரைத்து கொண்டார்…

அங்கே ஆலையில் மிதிலாவிற்கோ வேலை நெட்டி முறித்தது.. மதியம் வரைக்கும் அவளால் மூச்சுவிடக்கூட முடியவில்லை.. மதிய உணவை உண்டுவிட்டு அமர்ந்திருந்தாள்.

“ ஹப்பாடி… “ என்று கண்களை மூடி சாய்ந்து இருந்தவளுக்கு, வழக்கம் போல “ வில் யு மேரி மீ “ என்று ரகுநந்தன் கேட்ட கேள்வி மனதினில் வந்து போனது.. அக்கேள்வியோடு உடம்பில் ஒரு சிலிர்ப்பும் தோன்றி மறைவதை மிதிலா உணர்ந்தே இருந்தாள்..

இந்த ஒரு வாரமாக இதே தான்.. எப்பொழுது மிதிலா கண்கள் மூடி சாய்ந்தாலும் அடுத்த நொடி அவன் கேட்டது அப்படியே மனக்கண்ணில் தோன்றும்.. அதோடு சேர்த்து அதன் பிறகு நடந்த நிகழ்வுகளும்..

எப்படி.. எப்படி… இவனால் இப்படி கேட்க முடிந்தது.. என்று இப்பொழுதும் யோசித்தவளுக்கு அவளையும் அறியாது அதன் தொடர்ச்சியாய் நடந்த அனைத்தும் மீண்டும் கண் முன்னே காட்சிகளாய் விரிந்தது..

“ மிது.. வில் யு மேரி மீ ???”

“ வாட் !!!!???” அதிர்ந்தே விட்டாள் மிதிலா..

அங்கே சில நொடிகள் பலத்த மௌனம் நீடித்தது.. ரகுநந்தனுக்குமே இது அதிர்ச்சி தான்.. தான் இப்படி யோசிக்காமல் ஒரு பெண்ணிடம் கேட்போம் என்று அவன் எண்ணிக்கூட பார்க்கவில்லை.. ஆனால் அடுத்த நொடியே அவன் மனம் இவள் எனக்கு வேண்டும் என்று அடம் பிடித்தது..

“ மிது எனக்கு மட்டும் தான் வேண்டும் “ என்று பிடிவாதம் பிடித்தது.. இதற்கு பெயர் காதாலா என்று கேட்டால் எல்லாம் அவனிடம் பதில் இல்லை.. ஆனால் மிதிலா அவனுக்கு சொந்தமாக வேண்டும் அவ்வளவே..

அவளின் அதிர்ச்சி நீங்குவதாய் தெரியவில்லை.. தொண்டையை செருமிக்கொண்டு அவனே தான் பேச ஆரம்பித்தான்

“ மிது… இங்க பார்..” என்று அவளை தன் பக்கம் திருப்பினான்.. அவனது தொடுகையில் விழித்தவள் மீண்டும் திடுக்கிட்டாள்..

“ ஈஸி மிது… கூல்… ப்ளீஸ் டென்சன் ஆகாத..” என்றான் மிகவும் மென்மையாக..

“ம்ம்ச் என்ன நந்தன் இது.. இப்போ ஏன் காரை நிறுத்தி வச்சிருக்கிங்க ?? நேரம் ஆகுறது தெரியலையா ?? நான் வீட்டுக்கு போகணும் “ என்றாள் வேறு பேச்சுக்கு இடம் தாராமல்..

அவளின் எண்ணத்தை புரிந்தவன் மெல்ல நகைத்துகொண்டான் “ போகலாம் போகலாம். வீட்டுக்கு தானே போயாகனும்.. ஆனா கொஞ்சம் பேசிட்டு போலாம் “ எனவும்

“ பேச என்ன இருக்கு நந்தன்.. நத்திங் இஸ் தேர் “ என்று சிடுசிடுத்தாள்..

“ நோ மிது.. வி ஹேவ் டு டாக்..” என்றான் பிடிவாதமாக.. முகத்தை இருக்கமாய் வைத்து அமைதியாய் இருந்தாள் மிதிலா..

“ எனக்கு புரியுது மிது.. இது உனக்கு எவ்வளோ அதிர்ச்சின்னு.. பட் அட் தி சேம் டைம் இது எனக்குமே அதிர்ச்சி தான் மிது.. இது.. இப்படி எல்லாம் உன்கிட்ட நான் பேசணும்னு நான் கொஞ்சம் கூட பிளான் பண்ணலை..” என்று பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே கோவமாய் திரும்பியவள்

“ ஓ !!! அப்போ பிளான் பண்ணி வேற பேசுவிங்களோ??” என்று எகிறினாள்.. ஆனால் அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.. அது அவளுக்கு கடுப்பை தந்தது..

“ மிது… எனக்குமே இது புரியலை.. இதுக்கு பேரு லவ்வான்னு எல்லாம் எனக்கு சொல்ல தெரியலை.. பட் ஐ நீட் யு மிது.. எனக்கு நீ வேணும்.. உன் கேரிங், உன் பாசம் எல்லாம், எல்லாமே எனக்கு வேண்டும் மிது.. எனக்கு மட்டுமே வேணும்னு என் மனசு அடம் பிடிக்குது.. அப்படி இருக்கும் போது நான் என்ன பண்ணுவேன்..” என்றான் சிறு பையன் போல..

அவன் இப்படி எல்லாம் பேசுவது மிதிலாவிற்கு ஆச்சரியத்தை கொடுத்தது.. விழிகள் விரித்து அவனையே பார்த்தபடி அமர்திருந்தாள்..

“ இது இது தான் மிது.. நீ இப்படி பார்க்கிறையே.. இந்த பார்வை இது எனக்கே எனக்கு மட்டும் சொந்தமா இருக்கணும்னு ஆசை படுறேன்.. அந்த முகேஷ் உன்னை பார்க்கும் போது எல்லாம் எனக்கு அப்படியே அவனை நல்லா நாலு அடி அடிக்கணும் போல இருக்கும். ஆனா இதுக்கெல்லாம் ஏன்னு கேள்வி கேட்ட ரியலி ஐ டோன்ட் நோ டியர் “ என்றான் அப்பாவியாய்..

இப்படி எல்லாம் பேசினால் அவள் என்னதான் பதில் கூறுவாள்.. அமைதியாக தான் இருந்தாள்..

“ எனக்கு தெரியும் மிது நீ யோசிக்கிறது. பட் ஐ ப்ராமிஸ் யு உன்னை நான் நல்லா பார்த்துப்பேன்.. எப்படியும் நம்ம வேற யாரையாவது கல்யாணம் பண்ணிதான் ஆகணும். அதை ஏன் மிது நம்ம ரெண்டு பேரும் பண்ண கூடாது. உனக்கும் என்னை தெரியும், எனக்கும் உன்னை தெரியும்“ என்று வித விதமாக அவளை குழப்பி எடுத்தான்..

மிதிலாவிற்கோ தலையே வெடித்துவிடும் போல இருந்தது.. நேரம் வேறுநகரந்துகொண்டே இருந்தது.. ரகுநந்தனிற்கோ ஆரம்பித்துவிட்டோம் அதை முடித்துவிட வேண்டும் என்ற வெறி. மிதிலாவிற்கோ இவன் இப்படி பேசினால் என்ன பதில் சொல்வது என்று குழம்பம்.. 

தன் பொறுமையை இழுத்து பிடித்து “ ஸ்ஸ்ஸ்!!! நந்தன்… போதும்.. இதுக்கு மேல எதுவும் வேண்டாம்.. ப்ளீஸ்.. வீட்டுக்கு போகலாம். நாளைக்கு மீதி கதை எல்லாம் பேசலாம்..” என்றாள்..

“ என்ன கதையா??? நான் நம்ம லைப் பத்தி பேசிட்டு இருக்கேன்.. உன்.. உனக்கு கதையா தெரியுதா மிதிலா..” என்று பொறிந்து தள்ளினான்..

அட இவன் என்ன சிறிது நேரத்திற்கு முன்பு தான் திருமணம் செய்துகொள்ள கேட்டான். ஆனால் இப்பொழுது கோவத்தில் கத்துகிறான்.. ஒருவேலை நிஜமாகவே இவன் தீவிரமா இருக்கானோ என்று எண்ணினாள்.. ஆனாலும் இப்பொழுது தான் எந்த முடிவு எடுத்தாலும் அது சரியாய் இருக்காது என்பதே அவள் எண்ணம்.. 

“ நீங்க சொல்றது எல்லாம் சரிதான் நந்தன்….” என்று அவள் ஆரம்பிக்கும் பொழுதே

“அப்போ உனக்கும் இதில் சரிதானா???” என்று ஆர்வமாய் வினவினான்..

“ ம்ம்ச்.. என்னை கொஞ்சம் பேச விடுங்க.. இது நம்ம லைப் தான் அதான் நான் இவ்வளோ அமைதியா இருக்கேன். எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு எல்லாம் முடிவு எடுக்க முடியாது நந்தன்.. நிறைய யோசிக்கணும்.. உங்களுக்கு மனசில தோணிருக்கு சொல்லிட்டிங்க.. பட் ஐ நீட் எ டைம் “ என்று கூறி முடித்தாள்..

முடியாது என்று சொல்வதற்கு, யோசிக்கிறேன் என்று கூறினாலே அதுவே நல்லது என்று எண்ணினான் அவன்.. “ ஹ்ம்ம் நல்லது மிது.. நல்லா யோசி நல்ல முடிவா எடு.. நாளைக்கு மார்னிங் உன் முடிவை சொல்லு.. “ என்றான் தாரளாமாக நேரம் கொடுப்பவன் போல..

“ என்ன நாளைக்கு காலையிலையா???”

“ ஆமா ஏன்???”

“ அப்போ நைட் எல்லாம் நான் தூங்க வேண்டாமா ???!!!” என்றாள் அப்பாவியாக..

அவனோ அடப்பாவி என்பது போல பார்த்தான்.. “ என்ன தூங்கணுமா??? நீ என்ன சொல்வியோ ஏது சொல்வியோன்னு நான் தூங்காம இருப்பேன்.. நீ என்னடான்னா இப்படி சொல்ற..” என்று மீண்டும் எகிறினான்..

“முதல்ல இப்படி கத்துறதை விடுங்க.. நான் தான் யோசிச்சு சொல்றேன்னு சொல்றேன்ல.. முதல்ல வண்டியை எடுங்க…” என்று கூறிவிட்டு கண்களை மூடி அமர்ந்துவிட்டாள்..

அவனுக்கும் இதற்குமேல் எதுவும் கேட்க வேண்டாம் என்று எண்ணிவிட்டான் போல.. ஆனால் மனதில் வேறு ஒரு எண்ணம் முளைத்தது. அதை பற்றி சிந்தித்துக்கொண்டே வண்டியை கிளப்பினான்..

இவர்களின் வருகைக்காக ஜெகதா உறங்காமல் காத்துக்கொண்டு இருந்தார்.. ரகுநந்தனின் முகம் மகிழ்ச்சியாக இருப்பது போல இருந்தது. மிதிலாவின் முகமோ குழப்பத்தை குத்தகைக்கு எடுத்து இருந்தது..

இருவரின் முகத்தையும் பார்த்தவர் வேறு எதுவும் கேளாது “ ரெண்டு பேரும் சாப்டிட்டு வாங்க. அப்புறம் பேசலாம்.” என்று அனுப்பி வைத்தார்..

எப்பொழுதும் உண்ணும் பொழுதும் சலசலக்கும் மிதிலா அமைதியாய் உண்டாள்.. இர்வோரின் உகமே ஜெகதாவிற்கு காட்டி கொடுத்துவிட்டது எதுவோ இருக்கிறது என்று.. விசயம் தானாக வெளியே வரட்டும் என்று பொறுமையாய் இருந்தார்..

உண்டுவிட்டு வந்த ரகுநந்தன் நேராய் ஜெகதாவின் முன் தான் சென்று அமர்ந்தான்.. சரி தொழில் சங்க கூட்டதில் நடந்ததை சொல்ல போகிறான் என்று மிதிலா நினைத்து முடிக்கும் நேரத்தில்

“ பாட்டி நான் மிதிலாவை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுறேன்” என்று கூறியிருந்தான்..

ரகுநந்தனை தவிர ஜெகதா, மிதிலா, கோகிலா மூவருக்கும் ஆதிர்ச்சி.. மிதிலாவிற்கு விஷயம் தெரியும் தான் ஆனால் இவன் இப்படி பட்டென்று உடைப்பான் என்று சிறிதுகூட நினைக்கவில்லை..

கோகிலாவும் ஜெகதாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டனர்.. ஆனால் ரகுநந்தனோ ” என்ன பாட்டி அமைதியா இருக்கீங்க.. உங்க பேத்திகிட்ட சொன்னா அவளும் அமைதியா இருக்கா, சரின்னு உங்ககிட்ட சொன்னா நீங்களும் அமைதியா இருக்கீங்க ???” என்று அடுத்த போடு போட்டான்..

மிதிலாவிற்கோ எங்காவது சென்று முட்டிகொள்ளலாம் போல இருந்தது.. “ ஐயோ !!! இவன் ஏன் இப்படி பேசுறான்.. பாட்டி என்ன நினைப்பாங்க..” என்று அவனை முறைத்தாள், ஆனால் ரகுநந்தனோ தீர்மானமாகவே இருந்தான் போல

“ ஏன் முறைக்கிற மிது.. அதெல்லாம் நம்ம பாட்டி தப்பா நினைக்க மாட்டாங்க..” என்று இளித்து வேறு வைத்தான்..

“ பாவி.. பாவி..” என்று மனதிற்குள் அவளால் அவனை திட்ட மட்டுமே முடிந்தது.. ஜெகதாவோ இருவரின் முகத்தையும் பார்த்தபடி இருந்தார். கோகிலாவிற்கு இன்னும் அதிர்ச்சி அகலவில்லை.

இதற்குமேல் தான் வாய் திறக்கவில்லை என்றால் நிச்சயம் இவன் ஏதாவது பேசியே அனைவரையும் படுத்திவிடுவான் என்று நினைத்த மிதிலா “ பாட்டி நேரம் ஆச்சு, போய் தூங்குங்க. கோகிலாக்கா கூட்டிட்டு போங்க “ என்று ஜெகதாவை கிளப்ப பார்த்தாள். ஆனால் ரகுநந்தனோ “ பாட்டி பாருங்க நீங்க அமைதியா இருக்கவும் மிதுக்கு டன்சன் ஆகிடுச்சு. இரு மிது பாட்டி என்ன சொல்றாங்கன்னு கேட்டு அப்புறம் போகலாம் “ என்று கூறியபடியே அவளது கைகளை பற்றி அமரவைத்துவிட்டான்..

மிதிலாவிற்கு தலையில் அடித்துகொள்ளவேண்டும் போல இருந்தது.. கோகிலாவோ “ பையன் சரியான விடாகண்டன் போலவே “ என்று நினைத்து சிரித்துகொண்டார்..

ஜெகதாவிற்கு ரகுநந்தனின் முகத்தில் இருக்கும் தெளிவு, மிதிலாவின் முகத்தில் இல்லையோ என்பது போல தோன்றியது.. சிறிது நேரம் யோசித்தவர் “ நந்து, உன் மனசில தோணுனதை மறைக்காம எங்ககிட்ட சொல்லிட்ட. ரொம்ப சந்தோசம்.. ஆனா இதில என் முடிவை விட மிதிலா முடிவு தான் ரொம்ப முக்கியம்.. பொறு நான் பேசிக்கிறேன். உங்க ரெண்டு பேர் கல்யாணத்தை பத்தி எனக்கு கொஞ்சம் கவலை இருந்தது தான். இப்போ நீ சொல்றதை வைச்சு பார்த்தா, நீங்க ரெண்டு பேரும் வாழ்கையில ஒன்னு சேர்ந்தா எனக்கு நிம்மதி தான், சந்தோசம் தான். ஆனா அதை எல்லாம் தாண்டி இதில மிதிலாவோட விருப்பம் தான் எனக்கு முக்கியம். அவளுக்கு சம்மதம்ன்னா எனக்கும் பரிபூரண சம்மதம் தான் “ என்று கூறி முடித்துவிட்டார்..

ஆனாலும் மிதிலாவின் முகம் தெளியவில்லை.. “ என்ன மிதிம்மா அமைதியா இருக்க??” என்று ஜெகதா கேட்கவும், அவளை முந்திக்கொண்டு ரகுநந்தன்

“ அதெல்லாம் ஒண்ணுமில்ல பாட்டி, மிது நாளைக்கு அவ முடிவை சொல்லறேன்னு சொல்லிருக்கா” என்றான்.

மிதிலாவோ ரகுநந்தனை கண்களிலேயே எரித்துவிடுவாள் போல.. வேறு எதுவும் கூறாமல் “ நான் யோசிச்சிட்டு சொல்றேன் பாட்டி.. இப்போ எல்லாம் போய் தூங்கலாம்.” என்று கூறிவிட்டு யாரின் பதிலுக்கும் காத்திராது எழுந்து சென்றுவிட்டாள்..

ரகுநந்தனிற்கு மனம் நிம்மதியாய் இருந்தது.. அவனது மனதில் இருந்ததை எல்லாம் கொட்டி விட்டான்.. ஆனால் மிதிலாவின் மனமோ இன்னதென்று கூற முடியாத தவிப்பில் இருந்தாள்..

அவளுக்கு இருந்த குழப்பம் எல்லாம் இது தான். எனக்கு நீ வேண்டும் என்பதற்கும், உன்னை எனக்கு பிடித்திருக்கிறது என்பதற்கும் நிறைய  வித்தியாசம் இருக்கிறது. ஐ லவ் யு என்பதற்கும், ஐ நீட் யு என்பதற்கும் எத்தனை வித்தியாசம்.. அந்த வித்தியாசத்தில் தான் மிதிலாவின் மனம் ஊசலாடிக்கொண்டு இருக்கிறது..

இத்தனை பேசுகிறவன் ஒருதரம் கூட எனக்கு உன்னை பிடித்திருக்கிறது என்று கூற வில்லை.. எனக்கு நீ வேண்டும் என்று தான் கூறுகிறான்.. இதற்கு என்ன அர்த்தம்..??

இந்த கேள்விக்கு தான் அவளால் பதில் காண முடியவில்லை.. என்ன படுத்தும் அவளுக்கு உறக்கம் வரும் என்று தோன்றவில்லை… அந்நேரம் பார்த்து சரியாக கோகிலா வந்தார்..

“ என்ன மிதிம்மா தூங்கலையா ???”

“ம்ம்ச் எனக்கு எப்படி கா தூக்கம் வரும்.. நீங்களே சொல்லுங்க” என்றாள் சலிப்பாக..

“ ஏன் மிதிம்மா.. எதையும் நினைக்காம அமைதியா படுத்து தூங்கு.. எல்லாம் நல்லதுக்குதான்..” என்றார் ஆதரவாய்..

இது தான் கோகிலா.. மிதிலாவுடன் ஆயிரம் வம்பு இழுத்தாலும், அவளுக்கு தேவையான நேரத்தில் சரியான ஆறுதலையும், அறிவுரையும் வழங்குவார்..

“ம்ம் “ என்று கூறிக்கொண்டே அவர் மடியில் படுத்துகொண்டாள் மிதிலா..

“ என்ன மிதி என்ன குழப்பம்?? ரகு தம்பி சொன்னதை நினைச்சு குழப்பமா இருக்கா??”

“ஆமாக்கா… பாட்டியாவது ஏதாவது சொல்வாங்கன்னு பார்த்தா, அவங்களுமே என் முடிவு தான்னு சொல்லிட்டாங்க.. இப்போ நான் என்னதான் பண்ண?? எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலக்கா..” என்று கூறியவள் தன் மனதில் இருந்த குழப்பத்தையும் கூறினாள்..

அவள் பேசுவதை எல்லாம் பொறுமையாய் கேட்ட கோகிலா மெல்ல சிரித்துகொண்டு “ நீ சொல்றது எல்லாம் சரிதான். ஆனா ஒன்னு புரிஞ்சுக்கோ மிதிலா அந்த தம்பிக்கு தன் மனசில இருக்கிறதை சரியா வெளிபடுத்த தெரியாம கூட அப்படி சொல்லிருக்கலாம். எல்லாருக்கும் அன்பை வெளிபடுத்த தெரியும்னு சொல்ல முடியாதே.”

“ அப்புறம் இன்னொன்னு மிதிலா, எல்லாரும் மனசுக்கு பிடிச்சு தான் கல்யாணம் பண்றாங்களா இல்லையே?? ஆனா கல்யாணம் முடிஞ்ச பிறகு அந்த வாழ்கையை நமக்கு பிடிச்ச மாதிரி அமைச்சுக்கலாம் அதில தான் நம்ம சாமர்த்தியம் இருக்கு. அந்த தம்பி நல்ல குணமாவும் இருக்கு, பார்க்கவும் நல்லாத்தான் இருக்கு.. வேற எதுவும் தப்பா தெரியல மிதிம்மா… அதுவும் இல்லாம உங்க பாட்டிக்கு பெரிய நிம்மதியா இருக்கும். நீயும் கடைசிவரைக்கும் உங்க பாட்டிகூட இந்த வீட்டிலேயே இருக்கலாம் “ என்று கோகிலா கூறவும் கடைசி வரியில் மிதிலா விலுக்கென்று எழுந்து அமர்ந்தாள்..

“ அட இதை எப்படி நான் மறந்தேன்.. நான்.. நான் கடைசிவரைக்கும் பாட்டிகூட இந்த வீட்டிலேயே இருக்கலாம்.. யாரையோ கல்யாணம் பண்ணிட்டு போறதுக்கு, நந்தனை கல்யாணம் பண்ணா இங்கேயே இருக்கலாம். பாட்டிகூடவே இருக்கலாம், அவங்களை கவனிக்கலாம்” என்று அவளது மனம் தறிகெட்டு ஓடியது.. 

சிறிது நேரம் அமைதியாய் இருந்தவள் “ தேங்க்ஸ் கா.. நீங்க பேசினது என் மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருந்தது.. கொஞ்சம் தெளிவா கூட இருக்கு.. நான் நாளைக்கு ஒரு நல்ல முடிவா சொல்றேன் “ என்று கூறி உறங்கியவள் மறுநாள் விடிந்ததும் ஜெகதாவிடம் தனக்கு சம்மதம் என்று கூறிவிட்டாள்..

ரகுவிற்கு கொஞ்சம் உதறல் தான் மிதிலா முடியாது என்று கூறிவிட்டால் என்ன செய்வது என்று. ஆனால் அவள் சம்மதம் கூறிவிட்டாள் என்று தெரியவுமே அவனது உணர்வுகளை விளக்க வார்த்தை இல்லை.

ஜெகதாவிற்கு மனதில் மிக பெரிய பாரம் இறங்கியது போன்ற உணர்வு.. இதுதான் சமயம் என்று ரகுநந்தன் நிச்சயம் செய்துவிடலாம் என்று வேறு அடம் பிடிக்கவும் அதற்கும் சம்மதித்து கோவிலில்  வைத்து சிம்பிளாக இருவருக்கும் நிச்சயத்தையும் முடித்தார்..

இப்படி நடந்ததை நினைத்து பார்த்துகொண்டிருந்த மிதிலாவின் எண்ணவோட்டத்தை அவளது அலைபேசி சிணுங்கி கலைத்தது..

எடுத்து பார்த்தால் ரகுநந்தன் தான் அழைக்கின்றான்.. நிச்சயம் முடிந்து இந்த ஒருவாரமாக இது ஒரு பழக்கம் மதிய நேரத்தில் அழைப்பான்.. அவனது எண்ணை பார்த்து மிதிலாவிற்கு ஒரு புன்னகை வேறு வந்தது..

“ ஹலோ !!!” என்றாள்

“ ஹலோ மை டியர் மிது….” என்றான் அவன்..

அவளது புன்னகை இன்னும் விரிந்தது.. ” ம்ம் சொல்லுங்க”                 

“ என்ன பண்ற சாப்பிட்டியா டார்லிங் ??”

“ சாப்டேன்… நீங்க..”

“ நானும் தான்.. சரி சொல்லு???” என்றான் மொட்டையாக..

“ என்ன ?? என்ன சொல்ல சொல்றிங்க ??” என்றால் யோசனையாக..

“ டியர்ன்னு சொல்லு..” என்றான்.. இதுவும் இந்த ஒரு வாரமாய் நடந்து வரும் வழக்கம் தான்.. நிச்சயம் முடிந்த அன்றே ஆரம்பித்துவிட்டான் டியர் என்று சொல்லென்று..

இதை கேட்டதும் மிதிலா சிரித்துவிட்டாள்..

“ என்ன மிது.. பதில் சொல்லாம சிரிக்கிற?? சொல்லு டியர் ”

“ இப்படி சொன்னா எப்படி நந்தன்.. நீங்க கேட்டு நான் சொல்ல கூடாது இதெல்லாம்.. எனக்கு தோணும் போது நான் கட்டாயம் சொல்வேன்.. “

“ எப்போ தோணும்??” என்றான் விடாபிடியாக..

“ அடடா!!! எனக்கென்ன ஜோசியமா தெரியும்.. இங்க பாருங்க எனக்கு தோணும் போது கண்டிப்பா சொல்வேன். உங்களை சொல்லாம வேற யாரை சொல்ல போறேன்..” எனவும் தான் அவன் மனம் சற்றே சமன் பட்டது..

“ ஹ்ம்ம் சரி மிது.. ஆனா சொல்லணும் “ என்று கூறிவிட்டு வைத்துவிட்டான்..

மிதிலாவிற்கு இப்பொழுதும் அதே கேள்வி தான் மனதில் தோன்றியது.. தன்னை இப்படி சொல் சொல்லென்று படுத்துகிறான். ஆனால் இவன் ஏன் இன்னும் ஒரு வார்த்தை கூட உன்னை எனக்கு பிடித்து இருக்கிறது என்று கூறவில்லை.. ஆனாலும் அனைத்தும் சரியாகி போகும் என்று எண்ணி தன் மனதை தேற்றிக்கொண்டாள்..

ரகுநந்தனை பொருத்தவரைக்கும் தன்னுடைய உணர்வுகளை பகிர தனக்கே தனக்கென்று ஒரு உறவு வேண்டும்.. அவன் அன்னையும் இல்லாமல், லிசியும் பிரிந்து சென்றபின்  அவன் மனதளவில் மிக பெரிய தனிமையை உணர்ந்தான்..

தன் மீது மட்டுமே கவனம் செலுத்த, தன்னை மட்டுமே நேசிக்க, தன் உணர்வுகளை எல்லாம் பகிர்ந்துகொள்ள அவனுக்கு ஒரு துணை வேண்டும் அவ்வளவே இதை விட்டு மிதிலா மீது காதலா என்று கேட்டால் அவன் தெரியாது என்றே கூறுவான்..

                           

          

                                                                                                                    

        

                                                   

 

                         

       

 

 

  

                                      

                                                                        

Advertisement