Advertisement

நேசம்  – 1

 

“ பாட்டி… பாட்டி… எங்க இருக்கீங்க ??? “ என்று கத்திகொண்டே அப்பெரிய வீட்டினுள் நுழைந்தாள் மிதிலா.  சுற்றும் சுற்றும் பார்த்தவள் யாரும் இல்லை என்பதை உணர்ந்து..

“ கோகிலாக்கா.. நீங்க எங்க போயிட்டிங்க??? அக்கா “ என்று கூவியபடியே சமையல் அரை பக்கம் சென்றாள்.. அங்கே சமையல் செய்து கொண்டு இருந்த கோகிலா,

“ என்ன மிதிலா என்ன ஒரே கூப்பாடா இருக்கு.. காலையில எல்லாம் இருந்த மூலையே தெரியல.. இப்ப என்ன ஒரே ஆர்பாட்டமா இருக்கு” என்று வாஞ்சையாய் கேட்டார்..

“ ஹ்ம்ம் சொல்லமாட்டேன் போங்க.. பாட்டி எங்க அவங்க கிட்ட தான் முதல்ல சொல்வேன்.. எங்க பாட்டி?? “ என்று கேட்டுகொண்டே

“ அக்கா  மதியம் பாயாசம் பண்ணுங்க.. நல்லா நெய் எல்லாம் நிறைய விட்டு.. பாசிபருப்பு பாயாசம் ஓகேவா ” என்று அவர் கன்னத்தில் ஒரு முத்தத்தை பதித்துவிட்டு அவர் பதிலை கூட கேட்காமல் ஓடினாள்..

“ ஹா !!! என்னாச்சு இவளுக்கு??? முத்தம் எல்லாம் குடுக்கிறா?? பாயாசம் வேற செய்ய சொல்றா.. ஹ்ம்ம் நேத்து இருந்து இவ இருந்த கோலம் என்ன, இப்ப இப்படி துள்ளுறது என்ன?? “ என்று நொடித்தவர் அடுத்த நொடியே

“ கடவுளே இந்த பொண்ணுக்கு இதே மாதிரி சந்தோசத்தை எப்பயுமே கொடு சாமி“ என்று வேண்டிவிட்டு மிதிலாவை  தொடர்ந்தார்..

மிதிலா இருபத்தி மூன்று வயது இளமங்கை.. சுடிதார் அணிந்த தேவதை.. அவள் இருக்கும் இடம் எப்பொழுதும் கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காது. சிரிப்பு சத்தமும், பேச்சு சத்தமும் எந்நேரமும் கேட்டு கொண்டே இருக்கும். மனதில் என்ன இருக்கிறதோ அதை அப்படியே பேசிவிடுவாள். அவள் பாட்டி தான் உலகம், உயிர் எல்லாம். அவளுக்கு இருக்கும் ஒரே சொந்தமும் அவர் தான்.   

சிறு வயதிலேயே பெற்றோர்களை இழந்தாலும் அந்த அந்த பாதிப்பை இதுவரை உணராதவாறு அவள் பாட்டி ஜெகதாம்பாள், அவளுக்கு பக்க பலமாக, உற்ற துணையாக, அன்னையாக, தந்தையாக, தோழியாக இப்படி அனைத்துமாய் இருந்து அவளை இன்று வரை இருந்து வருகிறார்.

 

மிதிலாவின் இத்தனை ஆர்பாட்டதிற்கும் காரணம் இருந்தது.. இன்று தான் அவளின் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. மிதிலாவிற்கு நன்றாய் படிப்பு வரும். ஆனால் அவள் கேள்வி எல்லாம் “ படிச்சிட்டு  நான் செய்ய போறேன் ?? மேட்டூர் ஜில்லாக்கு கலக்டராவா வரப்போறேன்.. ஏன் பாட்டி நீங்க இதுல என்னைய பி. ஜி  வேற படிக்க வைக்கறிங்க??” என்று புலம்புவாள்..

சில நேரம் வேண்டும் என்றே படிக்காமல் ஜெகதாவை கடுப்பேற்றுவாள். அவர் ஏதாவது கண்டித்தால் “ ஆமா, எப்படியும் ஒருத்தனுக்கு கல்யாணம் பண்ணி கொடுப்பிங்க, நான் சட்டி தான் சுரண்ட போறேன்.. அதுக்கு ஏன் இவ்வளோ பெரிய புக் எல்லாம் நான் படிக்கணும்..” என்று எதிர் கேள்வி கேட்பாள்..

ஆனாலும் பாட்டியின் மனம் நோக கூடாது என்பதற்காக படித்துவிடுவாள். அப்படி அவள் படித்த படிப்பின் தேர்வு முடிவுகள் இன்று வந்துவிட்டன.. அதை சொல்ல தான் பாட்டியை தேடி கொண்டு வந்தாள்.  

 “ பாட்டி.. ஹப்பா இங்க இருக்கிங்களா ?? எவ்வளோ தூரம் உங்களை தேடுறது??” என்று மூச்சு வாங்கியபடி அவரிடம் வந்து அமர்ந்தாள்..

ஜெகதாம்பாள் எழுபதை எட்டி பிடித்த பெண்மணி.. அன்பும் பாசமும் வாரி வழங்குபவர்.. தேவையான நேரத்தில் கண்டிப்பும் அவரிடம் அதிகமாகவே கிடைக்கும்..

சொந்தங்கள் எல்லாம் இல்லாத நேரத்தில் மிதிலாவை தன் சொந்தமாக ஏற்று கொண்டு, இன்று வரை தான் ஏற்றுகொண்ட பொறுப்பில் இருந்து விலகாமல் நேர்த்தியாய் அனைத்தையும் நிர்வகித்து வருகிறார்..

மிதிலாவிற்கு எப்பொழுதுமே தன் பாட்டியை கண்டால் ஆச்சரியம் தான். “ எப்படி பாட்டி உங்கனால எத்தனையோ வருசத்துக்கு முன்ன நடந்ததை எல்லாம் நியாபகம் வச்சு சொல்ல முடியுது ?? ஹ்ம்ம் எனக்கு பாருங்க முதல் நாள் படிக்கிறது கூட மறுநாள் பரிட்சைல மறந்திடுது..” என்று எப்பொழுதும் கேட்பாள்.

அதற்கு ஒரு புன்னகை மட்டுமே பதிலாய் தருவார் ஜெகதா.. இப்பொழுதும் அப்படி தான் பாட்டி என்று கூவிக்கொண்டு வந்தவளை புன்னகையோடு எதிர்கொண்டார்..

“ என்ன மிதிலா என்ன ஒரு ஆர்பாட்டமா இருக்கு?? என்ன விஷயம்” என்றார் மெல்ல அவள் தலையை தடவியபடி..

“ பாட்டி இன்னைக்கு…”

“ ஹ்ம்ம் இன்னைக்கு என்ன ??”

“ இன்னைக்கு..”

“ அட சீக்கிரம் சொல்லு டா, நீயும் என்ன சொல்லபோறன்னு கேட்க சமையலை கூட விட்டு வந்து நிக்கிறேன் “ என்று பின்னாடி வந்து நின்றார் கோகிலா..

“ அது வந்து.. பாட்டி இன்னைக்கு ரிசல்ட் வந்துடுச்சு.. “ என்றாள் அமைதியாக..

“ ஹா ஹா அதுக்கு தான் இத்தனை சத்தமா கண்ணா. இன்னைக்கு ரிசல்ட்னு எனக்கு ஏற்கனவே தெரியும். நேத்தே உங்க காலேஜ் பிரின்சிபல் எனக்கு போன் பண்ணி சொல்லிட்டார்”

“ ஓ !!! “

“ என்ன ஓ !! சரி சொல்லு ரிசல்ட் எப்படி வந்து இருக்கு. ??”

“ ஹா!! இதை மட்டும் ஏன் என்கிட்டே கேட்கிறிங்க?? அதையும் பிரின்சி கிட்டே கேளுங்க”

“ வாயாடி, யாரு சொன்னாலும் என் பேத்தி சொல்லறது மாதிரி வருமா?? சரி சரி சீக்கிரம் சொல்லு”

“ எனக்கே தெரியல பாட்டி எப்படி இது நடந்துச்சுன்னு,, எப்படியோ பாஸ் பண்ணிட்டேன்.. என்னால இப்ப கூட நம்பவே முடியல பாட்டி.  ஹப்பா இனிமே படிப்புக்கு லீவ்..“ என்று கூறிக்கொண்டே ஜெகதாவிற்கு ஒரு முத்தத்தை பதித்து, கோகிலாவை கட்டிக்கொண்டு சுற்றினாள்..

“ ஹே ஹே மிதிலா அவளை விடு.” என்று சிரித்தபடி கூறினார் ஜெகதா..

“மிதிலா விடு கண்ணு.. பாஸ் பண்ணதுக்கு தான் பாயாசம் பண்ண சொன்னியா ?? “

“ அட என்னக்கா இப்படி சொல்லிட்டிங்க, பாஸ் ஆவேன்னு எனக்கே நல்லா தெரியும்.. நான் ஒன்னும் அதுக்கு பண்ண சொல்லல”

“ பின்ன…”

“ இனிமே படிக்க வேண்டிய அவசியமே இல்லைல அதுக்கு தான்.. போதும்டா சாமி.. என் வாழ்கையில இருபது வருசத்தை படிப்பிலேயே கழிச்சுட்டேன்.. இனிமே அதுக்கு லீவு அதான்..”

“ஓ !! கேட்டிங்களா மா இந்த பிள்ள சொல்றத, ஹ்ம்ம் எல்லாம் நேரம்.. நீ காலேஜ் போகும் போதே உன் சேட்டைய தாங்க முடியாது, வீட்டுல இருந்தா அவ்வளோ தான்.. அம்மா இதுக்கு நீங்க தான் ஒருவழி பண்ணனும்” என்று கோகிலா ஜெகதாவிட்ம் முறையிட்டாள்..

அவரை செல்லமாக முறைத்துக்கொண்டு,”பாட்டி என்ன அமைதியா இருக்கீங்க ??” என்று வினவினாள்..

“ ஹ்ம்ம் ஒண்ணுமில்ல டா, படிப்பு முடிஞ்சுடுச்சு, இனி அடுத்தது என்னன்னு யோசிச்சேன்.. சரி நீயே சொல்லு வேலையா ?? கல்யாணமா ??”

“ என்ன!! என்ன!! வேலைக்கு போகனுமா?? நானா?? என்ன பாட்டி இப்படி சொல்றிங்க?? நான் வேலைக்கு வெளிய போயிட்டா இங்க இருக்க வேலை எல்லாம் யார் பார்க்கிறது.. அதெல்லாம் முடியாது.. நான் எங்கயும் போகலை.. நம்ம பண்ணை, தோட்டம், மில்லு, ஸ்கூல் இதெல்லாம் நீங்க பார்த்தது போதும். இனிமே பாட்டிக்கு ரெஸ்ட்” என்று கூறியவளை பெருமையுடன் பார்த்தார்..

ஆம் மேட்டூரில் ஜெகதாம்பாள் பெயரை தெரியாது என்று யாராலும் கூற முடியாது. ஜெகதா பண்ணை, ஜெகதா ஆலைகள், ஜெகதா ஆரம்பப்பள்ளி என்று இன்னும் இன்னும் எத்தனையோ இருக்கிறது.. இதை எல்லாம் ஒற்றை மனுசியாய் நிர்வகித்து வருகிறார் ஜெகதா.. இப்பொழுது அந்த சுமையை தன் தோல் மேல் ஏற்றுகொள்ள கேட்கிறாள் மிதிலா.

“ அதெல்லாம் வேணாம் மிதிலா. பாட்டி சொன்னா கேளு. உனக்கு எதுக்கு அந்த சுமை எல்லாம். வேலை வேணாம்னா, அடுத்து கல்யாணம் தான். என்ன மாப்பிள்ளை பார்க்கவா ??

“ பாட்டி…………………..” என்று அலறியே விட்டாள்..

என்னவென்பது போல பார்துவைத்தார் ஜெகதா..

“ என்ன பாட்டி நான் உங்க கூட இருக்கணும்னு வேலையே வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கேன்.. இதுல கல்யாணமா ??? கல்யாணம் நோ.. வேலை நோ.. இனிமே நீங்க எங்க போனாலும் உங்க கூட நானும் வருவேன்.. என்ன கோகி கா நான் சொல்றது சரி தானே “ என்று துணைக்கு கோகிலாவையும் இழுத்தாள்..

“என்னை ஆளை விட்டால் போதும்“ என்பது போல ஒரு பார்வை பார்த்துவிட்டு “ நான் போய் பாயாசம் செய்றேன் “ என்று நகர்ந்துவிட்டார்..

அவர் செல்லவும் “ என்ன பாட்டி அமைதியா இருக்கீங்க??”

“ ஹ்ம்ம் ஒண்ணுமில்ல டா”  என்று பெருமூச்சு விட்டார்..

“ ஆரம்பிச்சுடிங்களா.. உங்களை நான் என்ன சொல்லிருக்கேன், எதையும் நினைக்க கூடாதுன்னு சொல்லி இருக்கேனா இல்லையா? கவலைய விடுங்க பாட்டி உங்களை புரிஞ்சுக்காம போனவங்க எல்லாம் ஒருநாள் கண்டிப்பா உங்களை தேடி வருவாங்க.. “

“ நான் அதை பத்தி மட்டும் நினைக்கலை மிதிம்மா“ என்று அவள் கைகளை எடுத்து தன் கரங்களுக்குள் பொதித்து கொண்டார்..

“ வேற என்ன பாட்டி கவலை ??” என்றாள் அவளும் கவலையாக..

“ நான் நல்லா இருக்கும் போதே உனக்கு ஒரு நல்ல வாழ்கைய அமைச்சு குடுக்கணும் கண்ணம்மா.. இப்போதைக்கு அது மட்டும் தான் என் மனசில இருக்கு. நான் பழசை எல்லாம் நினைக்கிறது இல்ல. என் கவலை எல்லாம் இப்போ உன்னை பத்தி தான்.. உனக்கு ஒரு நல்ல துணையை ஏற்படுத்தி குடுத்துட்டா நான் நிம்மதியா இருப்பேன். ”   

“ பாட்டி நீங்க நல்லாத்தான் இருக்கீங்க. இனியும் நல்லா தான் இருப்பிங்க. ஹ்ம்ம் கல்யாணம் எல்லாம் இப்போ வேணாம் பாட்டி ப்ளீஸ். இன்னும் கொஞ்சமே கொஞ்ச நாள் போகட்டும்.. ஆனா ஒன்னு கண்டிப்பா சொல்லிட்டேன் பாட்டி” என்று கூறி அவர் முகத்தை கூர்ந்து பார்த்தாள்..

“ என்ன மிதிம்மா ??”

“ கல்யாணம் ஆனாலும் நான் இந்த வீட்டை விட்டு உங்களை விட்டு போக மாட்டேன்.. சரியா??

“ ஹா ஹா.. இதுக்கு உன்னைய கல்யாணம் செய்ய போறவன் ஒத்துக்கணுமே. இப்படி தங்க சிலையாட்டம் ஒரு பொண்டாட்டியை விட்டு யாருக்கு தான் இருக்க முடியும்??”

“ ஹ்ம்ம் அப்போ இதுக்கு யாரு சம்மதிக்கிராங்களோ அவங்களை தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்.. இல்லாட்டி எனக்கு கல்யாணமே வேணாம். என் பாட்டி மட்டும் போதும்..” என்று கூறும் போதே அவள் கண்ணில் நீர் நிறைந்தது..

“ அடடா… என்ன மிதிம்மா இது.. இப்ப என்ன அழுகை.. “ என்று அவளை சமாதனம் செய்தவர், இப்பொழுது எதுவும் வேறு பேச கூடாது என்று எண்ணி,

“ சரி மிதிலா இனிமே நான் எங்க போனாலும் நீயும் என் கூட வா.. எங்க எங்க என்னென்ன வேலை எல்லாம் நடக்குது, எப்படி வேலை வாங்கனும்னு எல்லாம் பழகு.. சரியா.. இனிமே எனக்கு நீ தான் பி எ..” என்றார்..

அவர் கூறியது சற்றே மனதை ஆற்றினாலும் “ ஹ்ம்ம் சரி பாட்டி.. ஆனா நான் சொன்னது சொன்னது தான்.. ஜெகதாம்பா பேத்தி பேச்சு மாறமாட்டா.. புரியுதா “ என்று கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டாள்..

அவள் போனபிறகும் மிதிலாவை பற்றிய சிந்தனையில் இருந்தார் ஜெகதா.. என்ன யோசித்தாரோ, தன் குடும்ப வக்கீலுக்கு அலைபேசியில் அழைத்தார்..

அவரும் அடுத்த சில மணி நேரத்தில் வரவும் இருவரும் ஏதேதோ பேசினர்.. ஜெகதா தீவிரமான முக பாவத்துடன் ஏதோ சொல்லிக்கொண்டு இருந்தார்.

பின்னே தோட்டத்தில் இருந்த மிதிலா, தன் பேட்டியின் பேச்சு சத்தம் சத்தமாய் கேட்கவும் என்னவென்று பார்க்க விரைந்தாள்..

“ இங்க பாருங்க விநாயகம், இது ஒன்னும் பரம்பரை சொத்து இல்லை.. முழுக்க முழுக்க நான் சம்பாரிச்சது.. பரம்பரை சொத்து எல்லாம் யாருக்கு போய் சேரனுமோ அவங்களுக்கே போகட்டும்.. எனக்கு அதை பத்தி எல்லாம் கவலை இல்லை.. ஆனா என் சொத்து, நான் சம்பாரித்த என் சொத்தில் யாரும் உரிமை கொண்டாட முடியாது. அதுனால என் சொத்தை எல்லாம் நான் யாருக்கு குடுக்க நினைக்கிறேனோ அவங்களுக்கு தான் குடுப்பேன்.. “

“ இல்லை மேடம் அது வந்து..”

“ என்ன சார் அது வந்து, இது வந்துன்னு.. போங்க போய் நான் சொன்ன மாதிரி டாகுமண்ட்ஸ் ரெடி பண்ணி கொண்டுவாங்க.. இன்னும் ஒரு வாரத்துல எல்லாம் தயாரா இருக்கனும்.. அடுத்த வெள்ளி கிழமை பத்திர பதிவு வச்சுக்கலாம்..” என்றார் முடிவாய்..

“ ஹ்ம்ம்.. நீங்க சொல்றது சரிதான் மா.. ஆனா நான் உங்க குடும்ப வக்கீல்.. அதுனால இதை நான் சொல்லித்தான் ஆகணும். நீங்க சம்பாரிச்ச இந்த சொத்து எல்லாம் உங்க விருப்படி யாருக்கு வேணா குடுக்கலாம். அதுக்கு யாரும் உரிமை கோர முடியாது. ஆனால்…”

“ என்ன ஆனால்…??”

“ ஆனா அந்த சொத்து எல்லாம் யாருக்கு போறதுங்கிறது தான் பிரச்சனை. மிதிலா அப்பா அம்மா இல்லாத பொண்ணு.. ஒரு பாசத்துல நீங்க உங்க வீட்டு பொண்ணா நினைச்சு வளர்த்து வரிங்க.. ஆனா இதே சொதுனால மிதிலாக்கு எந்த ஆபத்தும் பின்னால வராம இருக்கணுமே அதான்.. சொத்துக்கு ஆசைபாட்டு என்னவேணா செய்யலாம்..”

“ ஹ்ம்ம் நீங்க சொல்றது சரிதான் விநாயகம். ஆனா இவ்வளோ யோசிச்சவ இதை நான் யோசிக்க மாட்டேனா.. நான் அந்த சாமிகிட்ட போய் சேருறதுக்குள்ள மிதிலாக்கு ஒரு நல்லது செய்துட்டு தான் போய் சேருவேன். அதுனால நான் சொல்ற மாதிரி நீங்க ரெடி பண்ணி கொண்டு வாங்க போதும்“

“ சரிங்கம்மா..”   என்று கூறி அவர் கிளம்பிவிட்டார்..

இந்த அத்தனை பேச்சும் தன் பாட்டியை காண வந்த மிதிலாவின் காதுகளில் விழுந்தது. அவள் முகம் அனைத்தையும் கேட்டு கருத்து சிறுத்தது..

“ஏன் தான் இப்படி இந்த பாட்டி பண்ணுறாங்களோ.. இப்போ நான் சொத்து கேட்டேனா.. எனக்கு இதெல்லாம் தேவையா?? அந்த சொத்தை எல்லாம் வச்சு நான் பண்ண போறேன்.. “ என்று முனங்கியவாறே ஜெகதாவின் அறைக்குள் நுழைந்தாள்..

“பாட்டி… இப்ப ஏன் இப்படி எல்லாம் பண்றீங்க ??”

“ வா மிதிம்மா.. என்ன உள்ள வரும் போதே கேள்வி எல்லாம் பலமா இருக்கு “                                              

“ ஹா நீங்க பண்றதை பார்த்தா கேள்வி கேட்காம??? இப்ப ஏன் வக்கீல் வந்துட்டு போறாரு ??”

“ ஹ்ம்ம் விஷயம் தெரிஞ்சு தான் கேட்கிற போல..”

“ ஆமா சொல்லுங்க… ஏன் இப்படி பண்றீங்க..?? எனக்கு இந்த சொத்து எல்லாம் வேணாம் பாட்டி.. நீங்க மட்டும் போதும். கடைசி வரைக்கும் உங்க கூட இந்த வீட்டுல இருந்தாலே போதும் பாட்டி.. ப்ளீஸ்.. சொத்து எல்லாம் யாருக்கு உரிமையானதோ அவங்களுக்கு குடுங்க.. எனக்கு நீங்க மட்டும் போதும்..”

அவள் பேசுவதையே அமைதியாக பார்த்த ஜெகதா… “ ம்ம்.. நீ சொல்லறது எல்லாம் சரி தான் மிதிலா.. ஆனா கொஞ்சம் நினைச்சு பாரு.. எல்லாத்தையும் அவங்களுக்கு குடுத்துட்டா அப்புறம் நீயும் நானும் எங்க போறது.. நமக்குன்னு ஏதாவது வேணும் தானே.. அதுவும் இல்லாம நான் இருக்கும் போதே இதை எல்லாம் உன் பேருக்கு மாத்திட்டா பின்னால எந்த பிரச்சனையும் வராதே… “

அவர் கூறுவதன் அர்த்தம் அவளுக்கு வேறு ஒரு செய்தியை கூறியது.. “ பாட்டி நீ.. நீங்க.. சொல்றது..” என்று ஆச்சரியமாக நம்ப முடியாமல் கேட்டாள்..

“ ஆமா மிதிலா… அந்த பரம்பரை சொத்து எல்லாம் யாருக்கு தேவையோ அவங்களுக்கே போகட்டும்.. ஆனா நீ தான் டா எனக்கு பெரிய சொத்து.. என்னோட கடைசி காலத்தை என் மிதிலா கூட நான் நிம்மதியா இருக்க நினைக்கிறேன். அதுவும் இல்லாம  நான் எத்தனை நாளைக்கு தான் ஓடி ஓடி எல்லாம் பார்க்க முடியும். குடுக்க குடுத்துட்டு உன் கூட உன் நிழல்ல சந்தோசமா இருக்க போறேன்.  அதுக்காக தான் இதெல்லாம்…”

“ ஆனா பாட்டி நான்.. நான் உங்ககிட்ட சொத்து எல்லாம் எதிர் பார்க்கலை.. “

“ தெரியும் கண்ணா.. ஆனா உனக்கு ஒரு பக்கபலம் வேணுமே.. இந்த கிழவி எத்தனை நாளுக்கு உன்கூட இருந்திட போறேன்.. உனக்குன்னு கண்டிப்பா ஏதாவது இருக்கனும் மிதிலா.. அதான் சொல்றேன்.. அடுத்த வெள்ளிகிழமை பத்திர பதிவு..”  இதுதான் என் முடிவு என்பதை போல உறுதியாக கூறிவிட்டார் ஜெகதாம்பாள்..

பாட்டி தன்னுடன் தான் இருக்க போகிறார் என்று ஒருபக்கம் மகிழ்ச்சியாய் இருந்தாலும், ஏனோ மிதிலாவிற்கு மனம் கலக்கம் கொண்டது..

“ ம்ம் சரி பாட்டி.. “ என்று அரைகுறை மனதுடன் தலை அசைத்து சென்றாள் சிறியவள்..

அவள் செல்வதையே பார்த்தவருக்கு முதல் முதலாய் மிதிலாவை கண்ட நியாபகம் வந்தது.. இரண்டு வயது குழந்தையாய், தளிர் நடை போட்டு, தன் கருவிழிகளை உருட்டி சுற்று முற்றும் பார்த்தபடி இருந்த மிதிலா…

அச்சிறு வயதில் தாய் தந்தையை இழந்தது கூட அறியாத குழந்தை ஏனோ ஜெகதாவை பார்த்தும் தன் புன்னகையை வீசி அவரை தன் பக்கம் வளைத்துக்கொண்டது.. இருவருக்கும் அழகிய ஒரு உறவு பின்னப்பட்டு வாழ்வின் மீது பிடிப்பினை இருவருக்குமே கொடுத்தது.            

வாழ்வில் தனக்கென்று இருந்த அனைத்து சொந்தங்களையும் இழந்த ஜெகதாவிற்கு, சொந்தங்களே யாரென்று தெரியாத மிதிலா உறவாகி போனாள்..  ஐம்பது வயது பெண்மணிக்கு இரண்டு வயது பெண்குழந்தை ஓர் உறவு..

கேட்டால் எல்லாம் ஆச்சரியமாய் தான் பார்ப்பார்கள். பார்த்தார்கள். ஆனால் அத்தனை ஏச்சு பேச்சுகளையும் துடைத்து எரிந்து தான் மனதில் என்ன நினைத்தாரோ அதை இன்று வரை நடத்திக்காட்டியும் வருகிறார்.

அவரை பொறுத்த வரைக்கும் மனதில் வருத்தங்கள் இருந்தாலும், தன்னை விட்டுப்போன தன் உறவுகள் பற்றிய எண்ணங்கள் இருந்தாலும், அவர்களை எல்லாம் பார்க்கவேண்டும் என்ற ஆசைகள் இருந்தாலும், மிதிலா தான் முதலில் அவருக்கு எல்லாம். அதன் பிறகு தான் தன் மன விருப்பங்களுக்கு முக்கியத்துவம் குடுப்பார். 

மிதிலாவின் புன்னகையில் தன் கவலைகள் மறந்து அவளுக்காக என்று தன் வாழ்கையை அமைத்துக் கொண்டவர். மிதிலாவிற்கும் அப்படிதான் தன் பாட்டியின் முகம் என்ன பிரதிபலிக்கிறதோ அதையே தன் விருப்பமாய் கொண்டு நடப்பாள். 

அவரின் கவலை அறிந்து, தேவை புரிந்து நடந்து கொள்வதில் மிதிலாவிற்கு நிகர் மிதிலா தான்..

இப்படி தன் மேல் உயிரையே வைத்திருக்கும்  மிதிலாவிற்காக சிந்தித்து  ஒரு முடிவு எடுத்து அதை செயல் படுத்த எண்ணி சில காரியங்கள் செய்ய இருக்கிறார் ஜெகதா..

ஆனால் இதெல்லாம் நடந்தேறுமா??

 

                                       

  

                                                     

                                                                          

              

                       

 

 

Advertisement