Advertisement

    நேசம் –  9

“ஹப்பா பாட்டி எல்லாரையும் ஒருவழி படுத்திட்டிங்க போங்க.. நீங்க மட்டும் சீக்கிரம் முழிக்காம இருந்திருந்தா, உங்க பேத்தி என் பெட்டியை கட்டி அனுப்பி இருப்பா..” என்று சிரித்தபடி பேசும் ரகுநந்தனை வாஞ்சையோடு பார்த்தார் ஜெகதா..   

“ என்ன பாட்டி அப்படி பாக்குறிங்க?? உங்களை நான் தப்பா நினைப்பேனா?? எனக்கு அவங்க யாருன்னே தெரியாது. அம்மாவை பத்தி பேசுறாங்கன்னு தான் நான் அவங்ககிட்ட பேசினேன்.. அதுக்குள்ள நீங்க இவ்வளோ டென்சன் ஆகணுமா ??” ஜெகதாவின் கைகளை தடவிக்கொடுத்தான் ரகுநந்தன்.

இதை எல்லாம் சுவற்றில் சாய்ந்தபடி நின்று மிதிலா வேடிக்கை பார்த்து கொண்டுதான் இருந்தாள். “ அங்க ஹாஸ்பிட்டல்ல என்னை எப்படி கத்துனான்.. இங்க வந்து பாட்டிகிட்ட எப்படி பேசுறான். நடிப்பு எல்லாம் நடிப்பு.. “ என்று மனதினில் அவனுக்கு அர்ச்சனை நடத்திக்கொண்டு இருந்தாள்.

“ இல்லை நந்து… உனக்கு அந்த விசாலத்தை பத்தி தெரியாது.. இத்தனை வயசு ஆனாலும் அவ குணம் மாறவே இல்லை. எங்க உன்னை என்கிட்டே இருந்து பிரிச்சிடுவாளோன்னு தான் நான் கொஞ்சம் டென்சன் ஆகிட்டேன்.. வேற ஒண்ணுமில்ல“ என்றார் ஜெகதா..

“ ஏன் பாட்டி யார் வந்து என்ன சொன்னாலும் எனக்கும் யோசிக்க மூளை இருக்கு தானே.. மத்த எல்லாத்தையும் விடுங்க, அம்மா எழுதின லெட்டரை படிச்சிங்க தானே. இவங்களை பத்தி ஒருவார்த்தை கூட இல்லையே. அப்படி இருக்கும் போது நான் எப்படி அவங்க பேச்சை நம்புவேன் சொல்லுங்க. சரி இதை பத்தி இனிமேல் நம்ம பேசவேண்டாம் நீங்க தூங்கி கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க “ என்று கூறிவிட்டு எழுந்தான்..

மிதிலா இன்னும் அப்படியே நிற்பதை கண்ட ரகுநந்தன் “ உனக்கு வேற தனியா சொல்லனுமா அதான் எல்லாம் பேசி முடிச்சிடோமே வேடிக்கை பார்த்தது போதும், பாட்டி தூங்கி ரெஸ்ட் எடுக்கட்டும் வெளிய வா” வேண்டுமென்றே அதிகாரமாய்..

“ ஹா !! அதுசரி.. இவ்வளோ நேரம் நீங்க பேசும் போது நான் ஏதாவது சொன்னேனா ?? இல்லைல.. நீங்க போங்க எனக்கு வர வழி தெரியும்..” என்று அவனுக்கு முகம் சுளித்து பதில் அளித்துவிட்டு ஜெகதாவிடம் திரும்பினாள் மிதிலா.

“பாட்டி நான் ஒன்னு சொன்னா கேட்பிங்களா??” என்றான் ரகுநந்தன் கிண்டலாய்..

“ என்ன நந்தப்பா??”

“பாட்டி தயவு செய்து இவகிட்ட பேசுறதை கம்மி பண்ணுங்க.. அதான் உங்களுக்கு இவ்வளோ பிரஷர் இருக்கு.. இப்போ நான் உங்ககிட்ட பேசினதை தான் வேற மாடுலேஷன்ல மிதிலா பேசுவா. அதனால இப்போ என்ன பண்றீங்க கண்ணை மூடி தூங்குங்க “ என்று கூறிவிட்டு மிதிலாவின் கைகளை பிடித்து இழுத்து சென்றான்.. ஜெகதாவுமே இதை எதிர்பார்கவில்லை..

“ டேய் டேய் பார்த்து டா நந்து.. அவ சின்ன பொண்ணு “ என்ற குரல் அவனின் காதுகாளில் விழவே  இல்லை.

“ என்ன பண்றீங்க ?? கையை விடுங்க… “ என்று அவனிடம் தன் கைகளை விடுவிக்க போராடியபடி அவனது வேகத்திற்கு ஈடு கொடுத்து நடந்தாள் மிதிலா.. ஜெகதாவின் அறையை தாண்டி வரவும் அவளது கைகளை விடுவித்தான் ரகுநந்தன்..

“ என்ன தைரியம் உங்களுக்கு?? என் கையை பிடிக்கிற அளவிற்கு வந்தாச்சா..” என்றாள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க..

“ மெல்ல மெல்ல!! மெதுவா மூச்சு விடு.. நீ ப்ரீத் பண்ற வேகத்துல நான் டெக்சாஸ்கே பறந்திட போறேன், அப்படி இல்லேன்னா உனக்கும் பாட்டிகிட்ட ஒரு பெட் போட வேண்டி வரும் “ என்றான் நக்கலாய்.

“ ஹலோ என்ன நக்கலா ??? என்னை பார்த்தா உங்களுக்கு எப்படி இருக்கு ஹா… பாட்டிகிட்ட பேசவிடாம கையை பிடிச்சு இழுத்துட்டு வந்தா என்ன அர்த்தம்…??”

“கையை பிடிச்சு இழுத்தேன்னு தான் அர்த்தம்… ஆமா உனக்கு ஏன் இவ்வளோ கோவம், பாட்டிகிட்ட பேச முடியலைன்னா ?? இல்லை நான் உன் கையை பிடிச்சதா ?? முதலாவது தான் காரணம்னா அப்போ நான் கை பிடிச்சது உனக்கு பிடிச்சிருக்கு. இல்ல இரண்டாவது தான் காரணம்னா பாட்டிகிட்ட பேசலைன்னாலும் உனக்கு ஒன்னும் இல்லை. அப்படிதானே.. சொல்லு சொல்லு ஏன் கோவம் “ என்று சிரித்தபடி கேள்வி கேட்டவனை சற்றே வித்தியாசமாய் நோக்கினாள் மிதிலா..

“ என்ன அப்படி ஒரு பார்வை?? ஐ நோ ஐம் மேன்லி.. அதுக்காக இப்படியா பார்க்கிறது… அதுவும் பட்ட பகல்ல “ என்று ரகுநந்தன் சற்றே பின்னே சாய்ந்து லேசாய் சிரித்தபடி கேட்கவும் நிஜமாகவே மிதிலா தடுமாறித்தான் போனாள்..

ஏதோ வேலையாய் அந்த பக்கம் போன கோகிலாவின் காதுகளில் இவர்களின் பேச்சு வார்த்தை விழ, அதிலும் மிதிலா பதில் கூறமுடியாமல் திணறியபடி நிற்பதை பார்த்ததும் சிரிப்பை அடக்க முடியவில்லை.. களுக் என்று சிரித்துவிட்டார்..

அவரின் சிரிப்பை கேட்டு தான் மிதிலா தன்னை உலுக்கி கொண்டாள்.. ரகுநந்தன் பேசியது ஒருபுறம் கோவத்தை தர, தான் அப்படி நின்றிருந்த விதம் எரிச்சலை தர, கோகிலா சிரித்தது வேறு கடுப்பை கிளப்ப என்று அனைத்தும் சேர்த்து தன் வழக்கம் போல தரையை ஒரு மிதி மிதித்துவிட்டு சென்றாள்..

“ அக்கா இவளுக்கு மிதிலான்னு சரியா தான் பேரு வச்சிருக்காங்க பாட்டின்னு” என்ற அவனது கிண்டல் வேறு தொடரவும் அங்கே இருந்த எதோ ஒரு பொருளை அவன் மீது தூக்கி வீசினாள்.. அதை லாவகமாக கையில் பிடித்து நேராய் நின்றான் ரகுநந்தன்…

“ ச்சே “ என்று அவனை பார்த்து எரிச்சலாய் கத்திவிட்டு தன் அறை நோக்கி ஓடி விட்டாள் மிதிலா..

அவள் சென்றதும் கோகிலா “தம்பி இந்த மிதிலா பொண்ணு எப்ப பாரு என்னைய வம்பு இழுத்துகிட்டே இருக்கும்.. இப்போ நீங்க பேசவும் பாருங்க பதில் சொல்ல முடியாம போறதை.. நல்லா வேணும்.. ஆனா நல்ல பொண்ணு தம்பி..” என்று அவனுக்கு சாதகமாய் பேசுவது போல ஆரம்பித்து அவளுக்கு சாதகமாய் பேசி முடித்தார்.

“ ம்ம் எனக்கும் தெரியும் கா.. நல்ல பொண்ணு தான். ஆனா அப்பப்போ மூளைய அடமானம் வச்சிடுவா போல…” என்று போகிற போக்கில் சொல்லிவிட்டு சென்றான்..

ரகுநந்தன் கூறியதை கேட்டபடி சிரித்துகொண்டே கோகிலா ஜெகதாவின் அரைக்கு சென்றார். இங்கே நடந்ததை கூறவில்லை என்றால் கோகிலாவிற்கு தலையே வெடித்துவிடும் போல. இப்படிதான் ரகுநந்தன், மிதிலாவின் ஒவ்வொரு அசைவுகளும் ஜெகதாவிற்கு தெரியவந்து கொண்டு இருந்தன.

அங்கே மிதிலாவோ தன் அறையில் நகத்துடன் சேர்த்து விரலையும் கடித்து துப்பி விடுவாள் போல.. அத்தனை கோவத்தில் இருந்தாள்..

“ என்ன நினைச்சுக்கிட்டு இருக்கான்… எவ்வளோ தைரியம்?? வெளிநாட்டில எல்லா பொண்ணுங்க கிட்டயும் பேசுறது மாதிரி இவன் என்கிட்டையும் பேசினா நான் விழுந்திடுவேனா என்ன…?? இவன் என்ன பேசினாலும், எப்படி சிரிச்சு மயக்கினாலும் இந்த மிதிலா ஒன்னும் சாய்ந்திட மாட்டா.. “ என்று தனக்கு தானே கூறி கொண்டாள்..

இங்கே வீட்டில் இத்தனை களேபரம் நடந்துகொண்டிருக்க, அங்கே முகேஷ் தன் அடுத்த திட்டத்தை செயல்படுத்த முதல் அடியை எடுத்து வைத்தான். அதன் காரணமாக யாருக்கோ அழைத்தான்

“ சொல்லுங்க.. ஓ !! சரி.. நானும் இப்படிதான் செய்யனும்னு இருந்தேன்.. சரி சரி.. அப்படியே செய்திடலாம். நீங்க யாருன்னு மட்டும் சொல்லுங்க, உள்ள கொண்டு வரவேண்டியது என் பொறுப்பு. ஹி ஹி ஹி எனக்கு எப்படியாவது மிதிலா கிடைச்சா மட்டும் போதும்” என்று கூறிவிட்டு வைத்தான்..

பிறகு சிறிது நேரம் இப்படியும் அப்படியுமாய் தன் நெற்றியை தேய்த்தபடி நடந்தான். என்ன யோசித்தானோ கிளம்பிவிட்டான்..

“ அம்மா!! என்னம்மா கொஞ்சம் உங்க உடம்பையும் பார்த்துகோங்க.. இப்போதான் எல்லா பொறுப்பையும் தம்பிகிட்டையும், மிதிலாகிட்டையும் கொடுத்தாச்சு. அதுக்கும் மேல நான் இருக்கேன் உங்களுக்கு.. என்ன மிதிலா நீயாவது நல்லா பார்த்துக்க கூடாதா ?? எப்பயும் பாட்டி பாட்டின்னு சொல்லுவ இப்போ பாரு அம்மா எப்படி இருக்காங்கன்னு..” என்று மூச்சு விடாமல் பேசிக்கொண்டிருந்தான் முகேஷ்..

மிதிலாவின் அலட்சிய பார்வையும், ரகுநந்தனின் அழுத்தமான பார்வையும் பொருட்படுத்தாமல் மீண்டும் ஜெகதாவிடம் ஆரம்பித்தான்.

“ உங்களுக்கு என்ன கஷ்டமா இருந்தாலும் என்கிட்டே சொல்லுங்கம்மா, உங்களுக்காகவே சேவை செய்ய நான் இருக்கேன்.. நீங்க இன்னும் பார்க்க வேண்டியது எத்தனையோ இருக்கேமா.. எங்க எல்லார் கல்யாணத்தையும் நீங்க தான் முன்ன நின்னு நடத்தி வைக்கணும்.. என்ன மிதிலா நான் சொல்றது சரிதானே “ என்று தன் பேச்சில் மிதிலாவை இழுக்கவும்

ரகுநந்தன் “ முகேஷ் உங்ககிட்ட நான் என்ன சொன்னேன். நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க..?? ” என்றான் ஒருவித கண்டன குரலில்..

இதை எதிர்பாராத முகேஷோ “ என்.. என்ன சார்…” என்றான் திக்கலாய்..

“ நியூ எம்பிலாயிஸ் சேர்க்கணும் பாட்டி.. அது சம்பந்தமா இன்டெர்வியுவ்க்கு   ஒரு விளம்பரம் குடுக்க சொல்லி ரெண்டு நாள் ஆச்சு. இன்னும் வந்த பாடில்லை. அதுக்குள்ள சார் இங்க வந்து கல்யாணம் பத்தி பேச ஆரம்பிச்சுடார்..” என்றான் நக்கலாய்..

மிதிலா மனதிற்குள் “ பரவாயில்ல.. இந்த வெள்ளைக்காரனுக்கு இதெல்லாம் கூட புரியுதே.. எங்கடா எல்லாமே சொல்லி தரனும் போலன்னு நினைச்சேன்.. நல்லவேளை இந்த முகேஷை பத்தி தெரிஞ்சு வைச்சிருகான்..” என்று எண்ணிக்கொண்டே நன்றியோடு நந்தனை நோக்கினாள்.. அதை கண்ட ரகுநந்தனும் மெல்ல சிரித்து கொண்டான்..

முகேஷ் இதை எல்லாம் பார்த்து கொண்டு தான் இருந்தான். இப்பொழுது அவனால் பார்க்கத்தானே முடியும். “ சிரிக்கவா செய்றிங்க.. உங்க ரெண்டு பேரையும் எப்படி பிரிக்கிறதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்..” என்று வஞ்சித்துகொண்டே

“ அடடா என்ன தம்பி.. ஜெகதம்மாக்கு இப்படின்னு கேள்வி பட்ட உடனே எனக்கு கையும் ஓடல காலும் ஓடல.. அதான் போட்டது போட்டபடி வந்துட்டேன்..” என்று தன் முப்பத்தி இரண்டு பல்லையும் காட்டினான்..

“ விடு நந்து.. முகேஷ் எதாவது டென்சன்ல மறந்திருப்பான்.. “ என்று ஜெகதாவும் அவனுக்கு ஒத்து ஊதவும் ரகுநந்தனின் பொறுமை கரைந்தது..

“பாட்டி, நமக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கும். அதுக்காக எல்லாத்தையும் விட்டு அப்படியே வந்துட்டா எப்படி?? இன்னிக்கு லேபர்ஸ்க்கு சாலரி கொடுக்கணும்.. முகேஷ் அங்க இருக்கார்னு தானே நான் இங்க உங்க கூட இருக்கேன். ” என்று ஜெகதாவிடமும் சற்றே அழுத்தத்தை காட்டினான்.. இதற்கு மேல் ஜெகதா பேசுவாரா என்ன??

முகேஷோ வாய் திறக்காமல் இருந்தான். “என்ன இன்னும் அப்படியே இருக்கீங்க. கிளம்புங்க முகேஷ்.. போய் வேலையை பாருங்க. நான் மதியத்திற்கு மேல வருவேன். எல்லாம் ரெடியா இருக்கனும்..” என்று பற்களை கடித்தபடி பேசினான்..

ஏனோ ரகுநந்தனால் மிதிலா மீது முகேஷின் பார்வை படிவதை பொறுக்க முடியவில்லை.. தனக்கு மட்டுமே உரிமையான பொருளை வேறு ஒருவன் பார்க்க கூட கூடாது என்ற பிடிவாதம் எண்ணம் தோன்றி மறைந்தது. அதனால் வந்த கோவத்தில் தான் இப்படி முகேஷை விரட்டிக்கொண்டு இருந்தான்.

“ ம்ம் சரிங்க தம்பி..” என்று மிக மிக நல்லவனாய் கிளம்பினான் முகேஷ்..

“ ஒரு நிமிஷம் இந்த தம்பின்னு சொல்றது எல்லாம் வேண்டாம் சரியா.. ஏறக்குறைய நம்ம ரெண்டு பேருக்குமே இரண்டு இல்ல மூணு வயசு வித்தியாசம் தான். சோ கால் மீ சார் ஆர் ரகுநந்தன்… ரைட் “ என்று கூறியவனை ஒன்றும் செய்ய முடியாத கையாலாகாத தனத்துடனும், மனதில் வன்மத்துடனும் பார்த்துவிட்டு சென்றான்..

மிதிலாவிற்கு ரகுநந்தன் இந்த முகேஷை படுத்தியதை கண்டு சந்தோசம் தாங்கவில்லை.. ஜெகதா தான் “ ஏன் நந்து இப்படி விரட்டுற.. பாவம் நல்ல பையன்.. பாரு முகம் அப்படியே சூம்பி போச்சு..” என்றார்..

“ ஆமாம் நல்ல பையன். போங்க பாட்டி.. ஆயிரம் வேலை இருக்கு அதை விட்டு சாக்கு போக்கு சொல்லிட்டு வந்துட்டான்..“

“ ம்ம் என்னவோ யாருக்கும் மனசு கஷ்டப்படாம இருந்தா சரி.. “ என்று கூறிவிட்டு சென்றுவிட்டார் ஜெகதா.. மிதிலாவும், ரகுநந்தனும் மட்டுமே அமர்திர்ந்தனர்.. 

“ மிது, இது எத்தனை நாளா நடக்குது…??” என்று கேட்டான். ஏதோ முக்கியமாய் கேட்பது போல..

மிதிலாவிற்கு ஒன்றும் புரியவில்லை.. “ எது ??” என்று பதிலுக்கு கேள்வி கேட்டாள்..

“ அதான் முகேஷ் உன்னை உருகி உருகி லவ் பண்றது..” என்று கேட்கும் பொழுதே அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை..

“ என்ன !!” என்று கேட்க அரம்பித்தவளுக்கு அவனது சிரிப்பை பார்த்ததும் கொதித்து விட்டாள். முகேஷ் என்ற பெயரை கேட்டாலே பிடிக்காது.. அதில்லாமல் இப்படி கேட்டால் அவளது உணர்வை கூறவும் வேண்டுமா ??

“ ஜஸ்ட் ஸ்டாப் இட் நந்தன்..!!”

“ ஹா ஹா ஹா என்னால முடியல மிது… பாவம் அவன் ரொம்ப வருசமா லவ் பண்றான் போல.. கொஞ்சம் கருணை காட்ட கூடாத பேபி..” என்று சிரித்தபடி பேசியவனை வெறித்து பார்த்தாள் மிதிலா..  

ஏதாவது கத்துவாள், சண்டையிடுவாள், திட்டுவாள் என்று எதிர்பார்த்த ரகுநந்தன் அவள் அமைதியாய் இருக்கவும் தன் சிரிப்பை நிறுத்திவிட்டு என்னவென்பது போல பார்த்தான்..

அதே பார்வை தான் பதிலாய் வந்தது அவளிடம்.. ஒருவேளை தான் கிண்டலாய் சொன்னதை மிதிலா தவறாய் நினைத்துக்கொண்டாளோ என்று எண்ணி

“  ஹே டியர் நான்.. நான் சும்மா தான் சொன்னேன்.. நீ.. நீ தப்பா எல்லாம் எடுத்துக்காத என்ன.. அவன்.. அவனை பத்தி எனக்கும் தெரியும் பேபி“ என்றான் அவளை சமாதானம் செய்யும் நோக்கில்…

இரண்டு நிமிடம் அவனை பேசவிட்டவள் சிறிது நேரத்தில் அவனை போலவே வயிற்றை பிடித்து கொண்டு சிரித்தாள்.. அவனுக்கு ஒன்றும் புரியவில்லை..

“ என்ன இப்போ நான் ஏன் சிரிக்கிறேன்னு தெரியலையா?? நீங்க பேசி தான் என்னை டென்சன் பண்ண முடியும். நான் பேசமா இருந்தே, என் ஒரு பார்வையிலேயே உங்களை டென்சன் பண்ணேன் எப்படி ??!!!” என்று இல்லாத காலரை தூக்கிவிட்டாள்..

அவளது பதிலை கேட்ட ரகுநந்தன் அசந்தே விட்டான்.. “ அடிப்பாவி அப்போ சும்மா தான் அப்படி பார்த்தாளா ?? நான் கூட கோவமா இருக்களோன்னு நினைச்சேனே “ என்று எண்ணியவனுக்கு என்ன தோன்றியதோ அவளது கைகளை பிடித்து தன் பக்கம் இழுத்தான்..

இவன் இப்படி செய்வான் என்று அவளுக்கு என்ன தெரியுமா?? தன் போக்கில் சாய்ந்து அமர்ந்திருந்தவள் அவனின் ஒரே இழுப்பில் அவன் மீதே சாய்த்து அமர்ந்தாள்..

“ ஹே என்ன இது… என்ன பண்றீங்க?? “ என்று திமிரியவளின் கைகளை  அவனிடம் இருந்து விடுவிக்கவே முடியவில்லை..

“ நந்தன் என்ன இது ??” என்ற அவளின் கேள்விக்கு அவனின் ஊடுருவும் பார்வை மட்டுமே பதிலாய் வந்தது.. விட்டால் அவளது கண்களுக்குள்ளேயே மூழ்கி முத்தெடுத்து விடுவான் போல.. வார்த்தைகள் இல்லை. அவனது விழிகள் மட்டுமே பேசின அவளது விழிகளுடன்..

“ ந… நந்தன்.. என்ன.. இது..” என்று திக்கி திணறினாள்.. ஏனோ அவளாலும் தன் பார்வையை விலக்க முடியமால் தவித்தாள்..

மிதிலாவின் இதழ்கள் மட்டும் அவன் பெயரை விடாமல் கூறிக்கொண்டே இருந்தது.. எத்தனை நொடிகள் இப்படி அவளை தன் பார்வையால் கட்டி போட்டு இருப்பானோ இறுதியாக “ நந்தன்… ப்ளீஸ்…..” என்று அவள் முனங்கவுமே மென் சிரிப்புடன் அவளை விடுதலை செய்தான்..

ஆனாலும் நகர தோன்றாமல் அப்படியேதான் அமர்ந்திருந்தாள்..

“ என்ன மிது டார்லிங்.. டென்சன் ஆகிட்டயா?? உன்னால மட்டும்தான் ஒரு பார்வையில என்னைய ரியாக்ட் பண்ண வைக்க முடியுமா ?? எனக்கும் பார்க்க தெரியும்.. இதை விட.. இன்னும் உன்னைய ரியாக்ட் பண்ண வைக்க தெரியும்.. என்ன டா பண்ணவா????” என்றான் ஆழ்ந்த குரலில்..

அவன் குரல் அவளுக்கு என்ன உணர்த்தியதோ அவளுக்கே அது புரியவில்லை.. திடுக்கிட்டு “ ஹா என்ன சொன்னிங்க ??” என்றால் மெல்ல..

“ அது சரி… அப்போ நான் சொன்னதே உனக்கு புரியல… அப்படிதானே” ஆமாம் என்பது போல தலையை ஆட்டினாள்..

“ ரொம்ப நல்லது.. புரியவே வேண்டாம் டார்லிங்”

“ ஏன் புரியவேண்டாம்?? எதையும் புரியும்படி சொன்னா தானே புரியும்…” என்றாள் சலிப்புடன். அவளுக்கோ அவன் என்ன கூறினான் என்று தெரிந்துகொள்ள ஆர்வம்..

“ புரியும் தான்.. ஆனா இன்னும் விளக்கி சொன்னா நீ என்னை அடிச்சாலும் அடிக்க வருவ.. அதுனால இன்னக்கு இது போதும்.. இனிமேல் கொஞ்சம் கொஞ்சமா புரியவைக்கிறேன் “ என்று கூறிக்கொண்டே எழுந்தவன், இவள் மட்டும் நிதானத்திற்கு வந்தால் நான் தொலைந்தேன் என்று எண்ணி ஓடியேவிட்டான்..

“ இவன் என்ன என்னென்னவோ சொல்லறான், செய்றான், இதில டியர் டார்லிங்னு வேற சொன்ன மாதிரி இருந்ததே “ என்று நினைத்தவள் “ச்சே இடியட் என்னை எப்படி குழப்பிட்டான்” என்று திட்டி தீர்த்தாள்..

இதுவே ரகுநந்தனின் தினசரி வழக்கம் ஆனது.. ஜெகதா இல்லாத நேரத்தில் மிதிலா தனியே கிடைத்தாள் என்றால் அவளை சீண்டுவதே அவன் பொழுது போக்கானது.. ஆனால் மிதிலாவோ ஒரு அளவிற்கு மேல் எதுவும் பேசாமல் இருந்துவிடுவாள்..

“ என்ன மிது நீ.. இப்படி இருக்க… உனக்கு நிறைய கத்து கொடுக்கணும் போலவே “ என்று சலித்துகொள்வான்.. ஆனாலும் தன் செயலை மட்டும் விடமாட்டான்.

இது எல்லாம் ஒருபுறம் இருக்க அங்கே பண்ணையில் முகேஷ் “ இங்க பாரு சுகிர்தா, எப்படியோ உனக்கு இங்க வேலை வாங்கி கொடுத்துட்டேன். நான் சொன்னது, அவங்க சொன்னது எல்லாம் நினைப்பில் இருக்கு தானே. உன் வேலை இங்க ரகுநந்தனுக்கு அசிஸ்டென்ட் மட்டும் இல்லை, எப்படியாவது நீயும் அவனும் நெருக்கமா இருக்கிற மாதிரி ஒரு போட்டோ கிடைச்சா போதும். அதுவும் உங்க பழக்கம் ஜெகதா மிதிலா பார்வைக்கு போகணும். சரியா. நான் சொல்றது மாதிரி செய்துட்டா உனக்கு நிறைய பணம் கிடைக்கும்.. ஒருவேளை அந்த ஜெகதம்மா உன்னையவே கூட தன் பேரனுக்கு கல்யாணம் பண்ணிவைச்சாலும் சரிதான். எனக்கு தேவை எல்லாம் அவன் மிதிலா பக்கம் பார்வையை கூட திருப்ப கூடாது..  புரிஞ்சதா “ என்று கேட்கவும்

புதிதாய் வேலைக்கு சேர்த்திருக்கும் சுகிர்தாவோ “ என்கிட்டே சொல்லிட்டிங்க தானே. இனிமே கவலையை விடுங்க சரியா. ஆனா எனக்கு நான் கேட்ட பணம் அட்வான்ஸா வேண்டும். அதுக்கு அப்புறம் தான் உங்க வேலை நடக்கும்” என்றாள் கறாராக..

அவளையே ஒரு நொடி பார்த்தவன் “ ஹ்ம்ம் சரி நாளைக்கு உன் பணம் உனக்கு வரும். நான் சொன்னது எல்லாம் நியாபகம் இருக்கட்டும்.” என்று கூறிவிட்டு சென்றுவிட்டான்.

இப்படி ஒவ்வொருவரும் ஒரு ஒரு திட்டம் போட்டு காய் நகர்த்த இதை எதுவுமே அறியாதா ஜெகதாவோ தன் பேரனையும் பேத்தியையும் தொழில் சங்க மீட்டிங்கிற்கு சென்று வருமாறு கூறினார்..

“ என்ன பாட்டி, நாங்க மட்டும் எப்படி போறது.?? நீங்களும் வாங்க “ என்று வழக்கம் போல மிதிலா கொடி பிடித்தாள்.. ரகுநந்தனக்குமே இதில் கொஞ்சம் தயக்கம் தான்..

அங்கே யாரை தெரியும். ஜெகதா உடன் வந்தால் நன்றாய் இருக்கும் என்று எண்ணினான். அதை கூறவும் செய்தான். இதை கேட்ட மிதிலாவும்..

“ சரியா சொன்னிங்க நந்தன். பாட்டி ரெண்டு பச்சை பிள்ளைங்களை தனியா அனுப்ப உங்களுக்கு எப்படி மனசு வந்தது..” என்று மீண்டும் ஆரம்பித்தாள்..

“ யாரு நீங்க ரெண்டு பேரும் பச்சை பிள்ளைங்களா ?? ஹ்ம்ம் உங்களுக்கு கல்யாணம் ஆகட்டும் அப்போ தெரியும்..” என்று கூறியவர் உறுதியாக இருவரும் தான் செல்ல வேண்டும் என்று கூறிவிட்டார்.. வேறு வழியில்லாமல் இருவரும் கிளம்பினர்..

ரகுநந்தன் மனதில் “ ஆகா ராக்கோழி தனியா மாட்டுறா. இன்னைக்கு அவளை எப்படியாது வாயை திறந்து பேச வைத்திடனும் “ என்று எண்ணிகொண்டான்.

மீட்டிங் முடிந்து திரும்பும் பொழுது வழக்கம் போல ஆரம்பித்தான். “ ஹேய் மிது டியர்… மீட்டிங் சூப்பரா இருந்ததில.. “ என்று ஆரம்பித்தான் ..

அவளோ ஒற்றை வார்த்தையில் ஆமாம் என்று முடித்துவிட்டாள்.. காரை ஒட்டிக்கொண்டே இருந்தவன் திரும்பி அவள் முகம் பார்த்தான்..

“ஷெல் ஐ ஆஸ்க் சம்திங்??” என்று கேட்டவனை விழி உயர்த்தி பார்த்தாள்..

“ என் மேல எதுவும் கோவமா மிதிலா??” என்றான்.. இல்லை என்பது போல தலையாட்டினாள்..

“ அப்புறம் ஏன் மிது, நான் என்ன பேசினாலும் ஒரு வார்த்தை இல்லை ரெண்டு வார்த்தையில் பதில் சொல்லி முடிச்சிடுற ?? நான் கிண்டல் செய்தாலும் ஒரு லிமிட்டுக்கு மேல அமைதியா போயிடுற ?? ஏன் ??” என்றான்

“ ஹ்ம்ம் அப்படியெல்லாம் இல்லை நந்தன்.. எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல. நீங்க டியர் டார்லிங் இப்படின்னு எல்லாம் பேசுறிங்க. மே பி அது நீங்க வளர்ந்து வந்த கல்ச்சர் அப்படியா இருக்கலாம். “

“ நான் காலேஜ்லயும் கவனிச்சிருக்கேன், பசங்க சில நேரம்  டியர்னு, டின்னு, டார்லிங்ன்னு பொண்ணுங்க கிட்ட பேசுவாங்க. பொண்ணுங்களும் வா டா போடான்னு பேசுவாங்க.. நான் இதை தப்பா சொல்லல.. ஆனா என்னை பொருத்தவரைக்கும் சில விஷயங்கள் இப்படிதான் இருக்கணும்னு நினைப்பேன்”

“ அதாவது இப்போ நீங்க என்னைய டியர் டார்லிங் அப்படின்னு சொல்றிங்க. உங்களுக்கு கல்யாணம் அனா பிறகு உன் மனைவியையும் அப்படிதான் சொல்விங்க. அப்போ அந்த வார்த்தையில என்ன ஸ்பெஷல் இருக்கும்  சொல்லுங்க?? எல்லாரையும் அப்படி சொல்லிட்டு, பொண்டாட்டியையும் அப்படி சொல்றதுங்கிறது நல்லாவா இருக்கும். ஆனா எனக்கு இந்த மாதிரி எல்லாம் என்கிட்ட என் ஹஸ்பன்ட் மட்டும் தான் பேசணும்னு நினைப்பேன். அதே மாதிரி தான் நானும்“

“ அப்புறம் நீங்க கேட்டிங்களே நான் சைலென்ட்டா இருக்கேன்னு, ம்ம் நீங்க பேசுறதுக்கு பதிலுக்கு பதில் என்னாலையும் பேச முடியும் நந்தன்.. ஆனா பேச்சு ஒரு லிமிட்டிற்கு மேல போகும்னு தெரிஞ்சா நான் அமைதியா இருந்திடுவேன். உங்களை அப்படி எல்லாம் பேசவேண்டாம்னு சொல்ல தோணும் ஆனா உங்க மனசு கஷ்டப்படுமேன்னு தான் நான் எதுவும் பேசாமல் இருப்பேன் “ என்று நீண்ட பிரசங்கம் செய்து முடித்தாள்.

அப்பொழுது தான் கவனித்தாள் ரகுநந்தன் காரை ஓரமாக நிறுத்தி இருந்தான்.. வியப்புடன் அவளது முகத்தையே பார்த்தபடி இருந்தான்..

என்ன பெண்ணிவள், சாதாரணமான அன்பை வெளிபடுத்தும் வார்த்தைகளை கூட நான் என் கணவனிடம் தான் பேசுவேன் என்று இருக்கிறாள்.. ஆனால் ரகுநந்தனின் மனமோ அடுத்த நொடி மிதிலாவை தன் சொந்தமாக்கி, அவள் தனக்கு வர போகும் கணவனிடம் பேசும் காதல் மொழிகளை தன்னிடம் மட்டுமே பேசவைக்க வேண்டும் என்று எண்ணினான்..

அதாவது மிதிலாவின் அனைத்தும் அவனுக்கே வேண்டும் என்பது போல இருந்தது.. அவள் மிதிலா அவனுக்கு மட்டுமே சொந்தமாக வேண்டும் போல தோன்றியது.. 

அவளது அன்பும், நேசமும், காதலும் அக்கறையும் தனக்கு மட்டுமே வேண்டும் என்று எண்ணினான்.. அதன் விளைவு   

அடுத்த நொடி “ மிது வில் யூ மேரி மீ ??? ” என்று கேட்டேவிட்டான்..

“ வாட் !!!!” அதிர்ந்தே விட்டாள் மிதிலா..                                                               

                                

 

 

 

             

                                   

                 

                                                                                

 

 

Advertisement