Advertisement

நேசம் – 7

நாட்கள் யாருக்கும் காத்திராமல் நகர்ந்தோடி கொண்டு இருந்தது.. அப்படி இப்படி என்று ரகுநந்தன் பால் பண்ணையின் பொறுப்பேற்று ஒரு மாதம் ஆகிவிட்டது.. ஆரம்பத்தில் சிறிது தயங்கினாலும், தடுமாறினாலும் ஜெகதா மற்றும் மிதிலாவின் உதவியால் ஒரு மாத காலத்தில் அனைத்தையும் கற்று கொண்டான் ரகுநந்தன்..

மிதிலாவிற்கும் இப்பொழுது வாழ்கை ஒருவிதமாக பொருந்திக்கொண்டது. ரகுநந்தனை தனக்கும் பாட்டிக்கும் நடுவில் வந்தவனாய் நினைக்க தோன்றுவதில்லை.. அவனும் இக்குடும்பத்தை சேர்ந்தவனே என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது..

இருவருக்குள்ளும் பொதுவான பேச்சுகளையும் தாண்டி சிறு சிறு உரையாடல்களும் நடக்கத்தான் செய்தான. மாலை நேரம் ஆகிவிட்டால் போதும் ஜெகதாவின் அறையில் அமர்ந்து கொண்டு அன்று என்ன நடந்தது என்று மூவரும் பேசி தீர்ப்பர்..

ஆலையின் நடந்ததை அவளும், பண்ணையில் நடந்ததை அவனும் தங்கள் பாணியில் விளக்கி, ஏதாவது முடிவுகள் எடுக்கவேண்டும் என்றாலும் கலந்தாலோசித்து பேசி முடிவுகள் எடுப்பர்… இப்படியாக நாட்கள் நன்றாகவே கழிந்து கொண்டிருக்கும் போது முகேஷ் மெதுவாக தன் வேலையை ஆரம்பித்தான்..

அன்று பண்ணையின் கணக்கு வழக்குகளை எல்லாம் பார்த்து முடித்துவிட்டு ரகுநந்தன் சிறிது ஓய்வாக இருக்கையில் அமர்ந்து இருந்தான்.. அந்நேரம் உள்ளே நுழைந்த முகேஷ் “ என்ன சார் எதுவும் பிரச்சனையா ?? ஏன் இப்படி அமைதியா இருக்கீங்க சார் “ என்றான் மிக அக்கறையாக..

“ ஹா !! பிரச்னை எல்லாம் ஒண்ணுமில்ல முகேஷ்.. சும்மாதான் அப்படியே”

“ ஓ !!  சரிங்க சார்.. ஆனா உங்களுக்கு என்ன தேவைன்னாலும் என்னை கூப்பிடுங்க சார்.. உங்களுக்கு இங்க பிரண்ட்ஸ் யாருமில்லையே என்னைய உங்க ப்ரண்டா ஏத்துகோங்க சார்..” என்று விஷமமாய் நட்புக்கரம் நீட்டினான்..

“ தேங்க்ஸ் முகேஷ்.. ஆனா பாட்டி, மிதிலா இவங்களை விடவா ஒரு பிரண்ட்ஸ் தேவை இங்க….” என்று அழகாய் அவன் மூக்கை உடைத்தான் ரகுநந்தன்.. ஏனோ அவனுக்கு முகேஷை முதல் பார்வையிலேயே பிடிக்காமல் போய்விட்டது..

கேள்விப்பட்ட வரையில் அவனை பற்றி நல்லவிதமாகவும் யாரும் கூறவில்லை..

ஜெகதாம்பாளின் தூரத்து உறவினரின் சிபாரிசின் பெயரில் வந்தவன்.. வேலையில் அதிக ஆர்வம் இருப்பது போல காட்டிக்கொள்ளவும், அனைத்தையும் இழுத்து போட்டு பார்ப்பதும் ஜெகதாவிடம் ஒரு நல்ல பெயரை பெற்று தந்தது. அதையே இன்று வரை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டான்.

வேலை ஒழுங்காக நடப்பதனால் ஜெகதாவும் இதை எல்லாம் கண்டும் காணாமல் விட்டான்.. ஆனால் என்று மிதிலாவின் மீது அவன் பார்வை விழுந்ததோ அன்றிலிருந்தே அவன் மனதில் பல திட்டங்கள் உருவாகின.. அதன் பின் இன்னும் நல்லவன் போல காட்டிக்கொண்டான்.. இவனது இந்த மாற்றத்தை ஒரு சில நாட்களிலேயே மிதிலா புரிந்துகொண்டாள்..

அவன் பார்க்கும் பார்வையும், பேசும் பேச்சும் ஒரு தினுசாய் இருப்பது போலவே தோன்றும். தான் தவறாய் நினைக்கிறோமோ என்று கூட குழம்பினாள்.

அன்று கோகுலம் பண்ணையின் இருபத்தி ஐந்தாவது ஆண்டு நிறைவு விழா சிறிது நாட்களுக்கு முன் நடந்தது.. ஜெகதா வேண்டாம் என்று கூறியும் முகேஷ் தான் முன் நின்று நிகழ்சிகளை மிக நேர்த்தியாகவும், விமரிசையாகவும் நடத்தி முடித்தான்.. இதை பார்த்த ஜெகதாவின் உள்ளம் பூரித்துவிட்டது.

“ ரொம்ப நல்லா பண்ணிட்ட முகேஷா. எனக்கு ரொம்ப சந்தோசம்..” என்று பாராட்டவும், சிரித்தபடியே மித்ராவை ஒரு பார்வை பார்த்தபடி

“ என்னம்மா நீங்க சொல்றிங்க… இது நம்ம பண்ணை.. நான் அப்படிதான் நினைக்கிறன்.. நானே இதை எல்லாம் பண்ணலைனா வேற யார் இதெல்லாம் செய்வாங்க…” என்றான் நல்லவன் போல..

அவர் பதில் கூறுமுன் ஜெகதாவை காண மற்ற தொழிலாளிகள் வர அவர்களோடு பேச சென்றுவிட்டார்.. மிதிலா மட்டுமே நின்று இருந்தாள்.. அவளிடம் நெருங்கி வந்து

“ என்ன மிதிலா பிடிச்சிருக்கா ??” என்றான் இரு பொருள்பட.. இதை எதிர்பாராத மிதிலா

“ ஹா !! என்ன ??” என்றாள் திக்கி திணறி…..

“ இல்லை இந்த ஏற்பாடு எல்லாம் உனக்கு பிடிச்சிருக்கான்னு கேட்டேன்..”

“ ம்ம் நல்லாத்தான் இருக்கு…” என்றாள் சலிப்பாய்..

“ அப்புறம் மிதிலா உன்கிட்ட நான் கொஞ்சம் பேசணும்… “ என்றான் அவளையே பார்வையில் விழுங்கி.. அவனது பார்வையே அவளை பின்னே நகரவைத்தது.. அவள் பதில் கூறுமுன்னே அவனே பேச தொடங்கினான்..

“ இங்க பாரு மிதிலா, இதெல்லாம் நான் எனக்காகவா செய்றேன்.. எல்லாம் உனக்காக.. என்ன பார்க்கிற… நிஜம் தான் மிதிலா.. எல்லாம் உன்மேல இருக்கிற காதல் தான்..” என்று கூறவும் திடுக்கிட்டு விழித்தாள்…

“ ஆமா மிதிலா.. உன்மேல காதல் தான்.. நீயே நினைச்சு பாரு.. ஜெகதாம்மா சொந்தம் எல்லாம் இனிமே வர போறாங்களா என்ன?? இவ்வளோ சொத்தும் யாருக்கு.. எல்லாம் உனக்கு தானே.. இந்த கடல் போல இருக்க சொத்தை  நிர்வாகம் பண்ண நம்பிக்கையான ஆள் வேணாமா, அதான் நான் சொல்றேன் நீயும் நானும் வாழ்கையில ஒன்று சேர்ந்தா“ என்று தன் கனவுகளை வார்த்தைகளால்   கொட்டிக்கொண்டு இருந்தான்..

சில நொடிகளுக்கு மேல் பொறுக்க முடியாத மிதிலா “ ஜஸ்ட் ஸ்டாப் இட் முகேஷ்.. இதுக்கு மேல ஒருவார்த்தை இப்படி பேசுனிங்க அவ்வளோதான்.. உங்க சீட்டை கிழித்துடுவேன்.. ஜாக்கிரதை “ என்று விரல் நீட்டி மிரட்டி சென்றுவிட்டாள்..

அன்றிலிருந்து இன்றுவரை இதே கதை தான். மிதிலாவை காணும் போதெல்லாம் அவள் மீது காதலில் உருகுவது போல காட்டிகொண்டான்.. அடுத்தவர்களிடமும் தனக்கும் மிதிலா மேல் அக்கறை இருப்பது போலவும் காட்டிகொண்டான்.. அதே போலத்தான் இன்று ரகுநந்தனிடமும் தன் பேச்சை ஆரம்பித்தான்..

“ சார் பாட்டி, மிதிலா எல்லாம் எப்படி இருக்காங்க.. அன்னைக்கு வந்துட்டு போனவங்க தான்.. என் கண்ணுகுல்லையே இருக்காங்க சார்.. அதிலும் மிதிலா தங்கமான பொண்ணு சார்…” என்று பேச ஆரம்பிக்கவும்

ரகுநந்தன் “ என்ன முகேஷ் உங்க வேலை எல்லாம் முடிஞ்சதா ?? இன்னைக்கு புது மெசினரீஸ் எல்லாம் வருதுல அதுக்கான ஏற்பாட்டை எல்லாம் பாருங்க போங்க “ என்று சற்றே கடுப்பான குரலில் கூறவும் வேறு வழியில்லாமல் எழுந்து சென்றான்..

மனதினுள் “என்னையவாடா விரட்டுற ?? இரு இரு உன்னை எத்தனை சீக்கிரம் இங்க இருந்து கிளப்பனுமோ அத்தனை சீக்கிரம் கிளப்புறேன் “ என்று கருவிகொண்டான்..

அவன் போவதையே ஒரு புன்னகையோடு பார்த்திருந்த ரகு தன வேலைகளை முடித்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பி சென்றான். அங்கே சென்றால் மிதிலா அவனுக்கு முன்பாகவே வந்திருந்தாள்.. அன்று நடந்தவைகளை ஜெகதாவிட்ம் கூறிக்கொண்டு இருந்தாள்.. ரகுநந்தனும் வரவும் அவனை பார்த்து ஒரு புன்னகையை புரிந்துவிட்டு

“ பாட்டி நீங்க ரெண்டு பேசிட்டு இருங்க, நான் போய் காப்பி எடுத்துட்டு வரேன்..” என்று கூறி சென்றாள்.. இது அவர்களின் தினசரி வழக்கமும் கூட.. காப்பியை குடித்தபடி, சின்றுண்டியை கொறித்தபடி மாலை நேரம் அருமையாய் போகும் மூவருக்கும்.. இன்றும் அதுபோல பேசிவிட்டு மிதிலாவும், ரகுநந்தனும் தங்கள் அறைக்கு சென்றனர்..

சிறிது நேரத்தில் சதிஸ் அழைத்தான்.. “ என்ன இந்த நேரத்தில் கூப்பிடுறான் “ என்று எண்ணிக்கொண்டே

“ ஹே என்ன மச்சி இப்போ கூப்பிடுற?? “ என்றான் ரகு..

“ டேய் நல்லவனே.. உன்னால என் நிம்மதி போச்சு டா.. அந்த லிசி என்னைய போட்டு பாடா படுத்துறா!!!” என்று புலம்பி தீர்த்தான்..

“ ஏன் டா ?? வாட் ஹாப்பன் ?? உன்னைய ஏன் படுத்துறா ??” என்று வினவினான் ஒரு மாதிரி குரலில்..

“உன் நம்பர் வேணுமாம் அவளுக்கு.. ரெண்டு நாளைக்கு முன்ன எதார்ச்சையா நம்ம பிரண்ட்ஸ் கிட்ட உன்ன பத்தி பேசிட்டு இருந்தேன். அதை கேட்டதில் இருந்து இவளுக்கு பைத்தியம் பிடிச்சிருச்சு போல… பொழுது விடிஞ்சதும் எங்க வீட்டுக்கு வந்திடுறா.. எங்கம்மா என்னைய முறைக்கிறாங்க “ என்றான் அழாத குறையாக..

நண்பனின் நிலை புரிந்தாலும் “ இங்க பாரு சதிஸ் என்ன ரீசன்காகவும் அவகிட்ட என் நம்பர் குடுக்காதா.. நேத்து கூட ஆன்லைன்ல கூப்பிட்டா பட் நான் ரெஸ்பான்ஸ் பண்ணலை.. சோ நீ இந்த நம்பர் குடுக்காத “ என்றான் உறுதியான குரலில்..

சதிஸிற்கு தன் நண்பனை பற்றி தெரியுமாதலால் ரகுவின் இந்த பேச்சு வித்தியாசமாய் இருந்தது..  ஏனெனில் லிசி அவனிடம் பிரிந்துவிடலாம் என்று கூறிய பிறகும் கூட இருவரும் அவ்வப்போது பேசிக்கொண்டு தான் இருந்தனர்.. ஆனால் இப்பொழுதோ முழுமையாக தவிர்கிறான் என்றால் வேறு காரணம் இருக்கக்கூடும் என்று எண்ணினான்..

“ ஹேய் மென்.. உண்மைய சொல்லு டா… உனக்கும் அவளுக்கும் வேற ஏதாவது பிராப்ளம் நடந்ததா ??” என்று வினவினான்..

ஒரு நொடி துணுக்குற்றாலும் சுதாரித்து “ அதெல்லம் இல்லை மச்சி.. எதுக்கு தேவை இல்லாம.. இப்போதான் இங்க செட் ஆகியிருக்கேன்.. இவகிட்ட பேசினா தேவை இல்லாம ஏதாவது பேசுவா.. அதான்.. உன்னை கேட்டா அவனே உனக்கு போன் பண்ணறதா சொல்லி இருக்கான்னு மட்டும் சொல்லு மற்றதை எல்லாம் நான் பார்த்துக்கிறேன்..”

“ என்னவோ நீ சொல்லுற.. நானும் அவகிட்ட சொல்றேன்.. ஆனா ரொம்ப படுத்தினான்னு வை எனக்கு தெரியாது.. தென் டோன்ட் மிஸ்டேக்கன் மீ”

“ சரி சரி… “

“ ஹேய் ராக்கி.. நீ போய் ஒரு மாசம் மேல ஆச்சு டா.. இன்னும் உன் பாட்டியை கண்ணில காட்டலை.. ஸ்கைப்ல வா டா பாட்டிகிட்ட பேசுறேன்… “ என்று கேட்ட நண்பனின் வார்த்தையை தவிர்க்க முடியாமல்..

“ ஓகே மச்சி.. லேப்ல போடுறேன் நல்ல பார்க்க முடியும் பாட்டினால.. வெயிட் “ என்று சொல்லிவிட்டு மடிக்கணினியயோடு ஜெகதாவின் அறைக்கு சென்றான்..

“ பாட்டி என் பிரன்ட் சதிஸ் உங்களை பார்த்து பேசணுமாம் “ என்று கூறியபடி சதிசை பாட்டிக்கு அறிமுகம் செய்து வைத்தான்.. சதிசும் நன்றாய் பேச ஆரம்பிக்கவும் நேரம் போனது தெரியவில்லை.. சதிஸிற்கு பேச ஆள் கிடைத்தால் கசக்குமா என்ன பேசிக்கொண்டே இருந்தான்..

ரகுநந்தனிற்கு ஆச்சரியம் இவனது பேச்சை கண்டு.. அந்நேரம் மிதிலா அங்கே வந்தாள்..

“ பாட்டி என்ன பண்றீங்க ?? கிளம்புங்க டின்னெர் டைம் ஆச்சு.. எவ்வளோ நேரம் இப்படி சிஸ்டம் முன்ன இருப்பிங்க. எல்லாம் உங்க வேலை தானா நந்தன்“ என்று அரட்டல் போடவும் வேறு வழியில்லாமல் சதிஸ் இடமிருந்து விடை பெற்றுக்கொண்டு சென்றார் ஜெகதா..

இத்தனை நாள் வரை மிதிலாவை பற்றி ஒரு வார்த்தை கூட ரகுநந்தன் தன் நண்பனிடம் கூறவில்லை. திடீரென பெண் குரல் கேட்கவும், அதிலும் அழகும் இளமையும் நிறைந்த பெண் குரல் கேட்கவும் சதிஸ் தன் நண்பனை குழப்பமாய் பார்த்து வைத்தான். இதை எல்லாம் கவனிக்காமல் மிதிலா இந்த பக்கம் நின்று

“அப்போ இருந்து நீங்களும் பாட்டியும் அப்படி என்ன பண்றீங்க சிஸ்டம் முன்ன “ என்று கேட்டபடி முன்னே வந்தவளை பார்த்த சதிஸ் வாய் பிளந்தான்..

மனதிற்குள் “ பிராட், ஒரு வார்த்தை இந்த பொண்ண பத்தி சொல்ல கூட இல்லை இவன்.. இருக்கட்டும். ஆனா யாரு இது ???” என்று யோசித்தவனை பார்த்து அசடு வழிந்தவாறே

“ இல்ல மிது, என் பிரன்ட் சதிஸ் பாட்டியை பார்க்கணும் சொன்னான் அதான்” என்று இழுத்தவன் அவளையும் அறிமுகம் செய்து வைத்தான்.. சதிசை பார்த்து முறுவலித்துவிட்டு “ சரி நந்தன் கொஞ்சம் சீக்கிரம் வாங்க…” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.

அவள் அப்பக்கம் செல்லவும் சதிஸ் பிடி பிடியென பிடித்துவிட்டான்..

“ஹேய் !! யாரு டா இது…”

“ எது ???!!!”

“ம்ம்ச்.. கடுப்பை கிளப்பாதே… யார் இந்த பொண்ணு..”

“ அதான் இப்போ பார்த்தியே டா.. மிது.. மிதிலா …”

“ அது தெரியுது டா ராக்கி “ என்று பல்லை கடித்து.. “ இந்த பொண்ணு உனக்கு யார் ??” என்று வார்த்தைகளை கடித்து துப்பினான்..

“ எனக்கு எல்லாம் யாருமில்ல டா.. பாட்டியோட பேத்தி.. அவ்வளோதான் “

“ பாட்டியோட பேத்தியா… ஓ !! அப்போ உனக்கு சிஸ்டர்ரா….” எட்ன்று இழுக்கவும்

“ ஹேய் ஹேய் ஹேய் நிறுத்து.. அவ எனக்கு சிஸ்டர்னு உங்கிட்ட நான் சொன்னேனா?? “

“ பின்ன நீ அவங்க பேரன், மிதிலா பேத்தின்னு சொன்னா ரெண்டு பேரும் அண்ணன் தங்கை தானே டா “ என்று முழித்தான் சதிஸ்..

“ அதெல்லாம் ஒண்ணுமில்ல.. நா… நாங்க.. ஜஸ்ட்… “

“ஜஸ்ட் ???!!!! வாட் ???”

“ ஜஸ்ட் ரிலேசன்….”

“ஓ !!!! ரிலேசனா ??? ஹ்ம்ம் எப்படி பட்ட ரிலேசன் தம்பி ???” என்று வேண்டுமென்றே சீண்டினான் சதிஸ்..

“ டேய் வேண்டாம்.. கடுப்பை கிளப்பாதே…. அவ பாட்டியோட பேத்தி “ என்று ஆரம்பித்து மிதிலாவை பற்றிய அனைத்தையும் கூறி முடித்தான்.. முடித்துவிட்டு

“ இப்போ புரிஞ்சதா ??? எங்க ரெண்டு பேருக்கும் எந்த உறவும் இல்ல புரியுதா. அவ யாரோ நான் யாரோ தான்.. எங்க ரெண்டு பேருக்கும் பொதுவான உறவு பாட்டி மட்டும் தான்.” என்று கூறுனான். 

அந்நேரம் சரியாக மிதிலா ஜெகதாவின் கண்ணாடியை எடுக்கவந்தவள் கடைசியில் ரகுநந்தன் கூறியதை கேட்டு சற்றே திகைத்து விழித்தாள்.. இதை எதிர்பாராத ரகுநந்தனும் சற்றே திணறிவிட்டு, சதிஸிடம் பிறகு அழைப்பதாய் கூறிவிட்டு மிதிலாவை நோக்கினான்.. அவளோ அந்த இடத்தில் இல்லை. சென்றுவிட்டாள்..

“ஆச்சோ இந்த பொண்ணு வேற தப்பா நினைசிடுச்சோ ???!! இப்போ என்ன பண்றது?? “ என்று யோசித்தவன் வேகமாய் சென்றான்.. ஜெகதாவின் முன்னே இதை பற்றி எதுவும் பேசவும் முடியாது. வருத்தபடுவார்.. அதனால் அமைதியாய் கழிந்தது உணவு நேரம்.. எப்பொழுதும் பேசியே படியே உண்ணும் மிதிலா தட்டில் மட்டுமே கவனமாய் இருப்பதை கண்ட ஜெகதா

“ என்ன குட்டி அமைதியா சாப்பிடுற….??” என்று கேட்கவும்..

“ ஹா !! சும்மா தான் பாட்டி” என்று கூறிவிட்டு மீண்டும் தன் பணியை தொடர்ந்தாள்.. ஏனோ அவளுக்கு மனதில் இன்னதென்று சொல்ல முடியாத ஒரு உணர்வு.. இத்தனை நாளில் தனக்கும் ரகுநந்தனுக்கும் இடையில் இருக்கும் திரை விலகியது போல உணர்ந்தவள் இன்று அவனது வார்த்தையை கேட்ட பிறகு நடுவில் ஏனோ பெரிய இரும்பு கதவே வந்தது போல உணர்ந்தாள்.. அது ஏன் என்று அவளுக்கும் தெரியவில்லை..

உண்டதும் மாடிக்கு சென்றுவிட்டாள்.. அவளின் பழக்கம் இது, உறங்குவதற்கு முன் சிறிது நேரமாவது காற்று வாங்குவது.. இது ரகுநந்தனிற்கும் தெரியும். ஆகையால் சிறிது நேரம் கழித்து அவளை தொடர்ந்து மேலே சென்றான்.. ஜெகதாவோ கண்டும் காணாதது போல தன் அறைக்கு சென்றுவிட்டார்..

“ நான் யாரோ அவ யாரோவா அவனுக்கு… பெரிய இவன்னு நினைப்பு… பக்கி.. இருக்கட்டும். இனிமேல் இவனுக்காகன்னு எதையுமே செய்ய கூடாது.. “ என்று முடிவெடுத்தவள் அங்கே ரகுநந்தனை எதிர்பார்கவில்லை.. முகத்தில் எந்த உணர்வையும் வெளிபடுதாமல் நின்று இருந்தாள்..

மனதில் “ இவன் மாடிக்கு வந்தா நான் கீழ இறங்கனுமா என்ன??” என்று முனுமுனுப்பு வேறு..

“ மிது….அது வந்து” என்று திணறினான். பாவம் என்ன பேசி சமாதானம் செய்வது என்று அவனுக்கு தெரியவில்லை.. ஆனால் மிதிலாவோ காதே கேட்காதது போல நின்றிருந்தாள்.. நேரம் கரைந்தது தான் மிச்சம்..

சிறிது நேரத்தில் தொண்டையை செருமிக்கொண்டு தானே பேச தொடங்கினான் “ அது, அவன் சதிஸ் ஏதாவது கிண்டல் செய்வான்னு தான், நான் அப்படி சொன்னேன்” என்றான் சிறுவன் போல விளக்கம் சொல்லி.. நிஜமும் அது தான்.. சதிஸ் ஏதாவது கேலி செய்வான் என்றே அவன் அப்படி சொல்லி அவனின் வாயை அடைத்தது. 

நீ சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டாய் நானும் கேட்டுவிட்டேன். கிளம்புகிறேன் என்றது போல ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றுவிட்டாள்..

“ இவ என்ன இப்படி போறா?? நான் வந்து பேசிட்டு இருக்கேன்.. கொஞ்சம் கூட மதிப்பே இல்லாமல் போறா.. இதுக்குமேல நானும் எதுவும் செய்ய முடியாது.. என் மனசில எந்த எண்ணமும் இல்லை. அவ தப்பா நினைக்கிறதுக்கு எல்லாம் நான் எதுவும் சொல்ல முடியாது..” என்று தோளை குளுக்கிவிட்டு நகரந்துவிட்டான்..

அன்றிலிருந்து இருவரின் கண்ணாமூச்சி ஆட்டம் தொடங்கியது.

ஜெகதாவிற்கு இப்பொழுது வாழ்க்கை நிம்மதியாய் இருப்பது போல இருந்தது. மனமும் உடலும் மிகவும் லேசாய் இருப்பது போல உணர்ந்தார்.. பொறுப்புகளை எல்லாம் பேரன் பேத்தியிடம் ஒப்படைத்த பின்பு அடிக்கடி கோவிலுக்கு சென்று வர ஆரம்பித்து இருந்தார்.  இன்றும் அப்படிதான் இறைவனை தரிசித்துவிட்டு பிரகாரத்தில் அமர்ந்திருந்தார்..

“ என்ன ஜெகதா ரொம்ப நிம்மதியா இருக்க போல “ என்று குரலை கேட்டவர் திடுக்கிட்டு திரும்பினார்..

அங்கே விசாலத்தை பார்த்தவரின் மனம் மீண்டும் தன் நிம்மதியை இழந்தது.. ஆனால் அதை வெளிக்காட்டாமல் விசாலத்தை நேராய் நோக்கினார்.

“ பொறுப்பை எல்லாம் பேரன் பேத்திகிட்ட கொடுத்துட்டு நீ இப்படி என்ன கோவில் குளம்னு அலைஞ்சு புண்ணியம் தேடிக்கிறையா ?? “ அவர் குரலில் எகத்தாளமும், பந்தாவும், பணத்திமிரும், அகந்தையும் சேர்ந்தே ஒலித்தது..

“ ஆமா விசாலம்.. எப்பையுமே நமக்கு தான் எல்லாம் தெரியும்ன்னு இல்லாம, அடுத்த தலைமுறையும் வாழ வழிவிட்டு அவங்களை வழிநடத்தி போறது தான் வீட்டில இருக்கிற பெரியவங்க வேலை. அதை விட்டு என் காலம் முழுக்க நான் தான் எல்லாம் செய்வேன், எனக்கு தான் எல்லாம் தெரியும் அப்படின்னு இருக்க கூடாது பாரு” என்றவரின் பார்வை பாவமாய் நின்றிருந்த விசாலத்தின் மருமகளை தொட்டு மீண்டது..

பேரன் பேத்தி பெற்ற பின்பும் கூட இன்னும் தன் மாமியாருக்கு கொத்தடிமை போல தொண்டுழியம் செய்யும் பாவப்பட்ட ஜீவன் ஜீவா… விசாலத்தின் மகனான வெங்கடேசனின் மனைவி…

“ அதென்னவோ சரி தான் ஜெகதா நீ சொல்றதும்.. ஆனா பாரு எதையுமே விட்டு கொடுத்துகிட்டே இருந்தா கடைசியில் நம்மை மதிக்காம போயிடுவாங்க.. எப்படி தெரியுமா உன் மருமக உன்னை விட்டு உன் பேரனோட போனது மாதிரி..” என்று தன் வார்த்தைகளில் விசத்தை தடவி பேசினார்.

துடித்துப்போன ஜெகதா பதிலேதும் சொல்லாமல் விறுவிறுவென சென்றுவிட்டார். “போ ஜெகதா போ… எவ்வளோ தூரம் போயிட போற, இல்ல எங்க போயிட போற?? எங்க போனாலும் கடைசியில என் முன்ன தான் நிக்கனும்…” என்று இறுமாந்து சிரித்தார்..

ஜெகதாவும் விசாலமும் ஒரே ஊரில் பிறந்தவர்கள் தான்.. பெரிய செல்வந்தர் வீட்டு மகள்களான இருவருக்கும் ஆரம்பத்தில் இருந்தே சேராது.. ஒரே பள்ளி, ஒரே வகுப்பு வேறு.. போட்டியும் பொறாமையும் கேட்கவும் வேண்டுமா??

இதெல்லாம் போதாது என்று விசாலத்தை பெண் பார்க்க வருவதை கூறி பின் ஏதோ காரணத்தினால் வராமல் போனார்கள் மாப்பிள்ளை வீட்டார்.. ஆனால் சிறிது நாட்களிலேயே அந்த சம்பந்தம் ஜெகதாவிற்கு முடிந்தது.. இதை அறிந்த விசாலாமா கொதித்து விட்டார். வேண்டும் என்றே தன்னை அவமான படுத்த இப்படி ஜெகதாவின் குடும்பம் நடந்ததாக நினைத்து தன் மனதில் பழிவெரியை வளர்த்துக்கொண்டார்.

ஜெகதாவின் நிம்மதியை குலைக்கவென்றே பிடிவாதம் பிடித்து ஜெகதா வாழ்க்கைப்பட்ட ஊரில் மற்றொரு செல்வந்தர் வீட்டில் மருமகளாக நுழைந்தார் விசாலம். ஆனால் விதியோ வேறு கணக்கு போட்டது..

கல்லூரிக்கு படிக்க சென்ற இடத்தில ஜெகதாவின் மகன் வேனுகோபலனுகும் விசாலத்தின் தம்பி மகளான லீலாவிற்கும் காதல் ஏற்பட, தன் அக்காவின் குணமறிந்த லீலாவின் தந்ததை ஜெகதா பெண் கேட்டு வரவுமே சம்மதம் கூறி சம்பந்தம் பேசிவிட்டார்..

லீலாவை தன் மகனுக்கு முடித்து பிறந்த வீட்டு சொத்தையும் தன்னோடு இணைத்துக்கொள்ள நினைத்து இருந்த விசாலத்தின் தலையில் இச்செய்தி பெரிய இடியாக இறங்கியது.. அன்றிலிருந்து இன்றுவரை ஜெகதாவின் மேல் இருக்கும் வன்மமும் குரோதமும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறதே ஒழிய குறைந்தபாடில்லை..

ஜெகதாவும் முன்பு பகட்டும், பந்தாவும் விசாலத்தை பதிலுக்கு பதில் சாடுவதுமாகத்தான் இருந்தார்.. ஆனால் தன் கணவரையும், மகனையும் அடுத்து அடுத்து எப்பொழுது பறிகொடுத்தாரோ அப்பொழுதே மனம் மாறிவிட்டார்..

மனிதர்களின் அருமை தெரிந்து, அன்பையும் பண்பையுமே மட்டுமே தன் அடையாலமாக்கி கொண்டார்.. இது ஜெகதாவிற்கு இன்னும் நல்ல பெயர்களை பெற்று தந்தது.. அது விசாலத்தின்  மனதில் இன்னும் விசத்தை கலந்தது..

“ நீ உயிரோடு இருக்கும் வரை உன் நிம்மதியை கெடுக்காமல் விடமாட்டேன்” என்று சூளுரைத்து கொண்டார்..             

           

                             

                                                  

                                            

           

   

                                          

     

    

                                                        

            

 

                  

Advertisement