Advertisement

                                 நேசம் – 17

ரகுநந்தன் காலில் சக்கரம் கட்டாத குறைதான்.. ஆலையின் பொறுப்பை முழுதாய் ஏற்றுக்கொண்டான்.. முதலில் ஒரு நான்கு நாட்கள் மிதிலாவை உடன் அழைத்து சென்றான் பின் அதுவும் இல்லை..

ஏதாவது தெரியவேண்டும் என்றால் மிதிலாவிடம் கேட்பான் அவ்வளவுதான்.. மிதிலாவிற்கோ வீட்டில் இருப்பது ஏதோ சிறையில் இருப்பதை போல இருந்தது.. அவளது வேலை எல்லாம் ரகுநந்தன் காட்டும் இடத்தில கையெழுத்து போடுவது ஒன்றுதான்..

வீட்டில் சில நேரம் இழுத்து போட்டு வேலை செய்வாள். அதுவும் இல்லையென்றால் அமைதியாய் தோட்டத்தை சுற்றி வருவாள்.. ஜெகதாவிற்கு இவள் இப்படி இருப்பது பிடிக்கவே இல்லை..

ஆனால் தன் பேரனிடம் இதை பற்றி பேசினால் பலன் பூஜ்ஜியம் என்று அவருக்கு தெரிந்து தான் இருந்தது.. 

மிதிலாவும் ரகுநந்தனும் இருபது நாட்களே ஆனா புதுமண தம்பதிகள் என்று கூறினால் யாரும் நம்ப கூட மாட்டார்கள். அத்தனை இயல்பாய் இருந்தார்கள்.. ஒருவேளை அப்படி காட்டிக்கொண்டார்களோ என்னவோ ?? ஆனால் நிச்சயமாய் மிதிலாவை பார்த்தால் யாரும் புதிதாய் திருமணம் ஆனவள் என்று யாரும் கூற முடியாது..

ரகுநந்தன் என்னவோ கூறிவிட்டான் தாம்பத்தியம் என்பது இயல்பாய் நடக்கவேண்டும் என்று.. ஆனால் மிதிலாவின் காதல் கொண்ட மனமோ அவனது அருகாமைக்காக ஏங்கியது..

அவனோடு பேசவேண்டும், வெளியில் செல்லவேண்டும், தனிமையில் பொழுதை கழிக்க வேண்டும் என்றெல்லாம் ஆசை கொண்டாள்.. இதை அவனிடம் கூறவும் செய்தாள்..

“ நந்தன் என்னப்பா இது ??? எப்ப பாரு வேலை வேலைன்னு… நம்மளை பார்த்தா யாரும் நியூலி மேரிட்ன்னு சொல்லவே மாட்டாங்க…” என்று சிணுங்கினாள்.. ஆனால் அவனோ

“ என்ன டியர் இது??? உன் வயசு என்ன?? நீ ஏன் இப்படி பேசுற ?? வயசுக்கேத்த மெச்சுரிட்டி வேண்டாமா ??? நம்ம லைப் நம்ம  விருப்பப்படி தான் டா இருக்கணும் மத்தவங்க தாட்ஸ்க்கு எல்லாம் இடம் கொடுக்க கூடாது” என்று  கூறி சென்று விட்டான்..

அவளுக்கோ ஏன் டா இவனிடம் இப்படி கேட்டோம் என்று ஆனது.. இவன் மட்டும் என்னிடம் அனைத்து உரிமையையும் எடுத்துக்கொள்கிறான், ஆனால் கணவன் தானே என்று என்னை ஒருவார்த்தை கூட சொல்ல விடுவதில்லை என்று யோசனையில் ஆழ்ந்தாள்..

இப்படியாக நாட்கள் சில செல்ல மிதிலாவிடம் ஏனோ இனம் புரியாத ஒரு அமைதி குடிகொண்டது..

“ என்னடா இப்படி அமைதியா இருக்க ???” என்று கோகிலா கூட இருமுறை விசாரித்தார்..

“ ஒண்ணுமில்லையே கா “ என்று சிரித்தே சமாளிப்பாள்..

ஆனால் ரகுநந்தன் வீட்டில் இருக்கும் நேரம் எல்லாம் அவள் அவனோடு மட்டுமே இருக்க வேண்டும்… அவனோடு தான் பேசவேண்டும், அவனை மட்டுமே கவனிக்கவேண்டும்..

அசந்து மறந்து வேறு வேலை ஏதாவது பார்த்தால் “ என்ன மிது பேபி… நான் வீட்டில் இருக்கிறதே இப்ப கொஞ்ச நேரம் தான்.. இப்போ கூட வேலையா ??? என்னைவிட உனக்கு வேலை தான் முக்கியமா ??” என்று அவளை இறுக அணைப்பவனிடம்

“ எனக்கும் இதே உணர்வுகள் இருக்கும் தானே… நீ மட்டும் ஏன் கண்டுகொள்வது இல்லை “ என்று கத்த வேண்டும் போல இருக்கும் மிதிலாவிற்கு.. ஆனால் ஏனோ அவனிடம் கோவம்கொள்ள அவளால் முடியாமல் தான் போனது..

சில நேரம் சிறுபிள்ளை போல நடந்துகொள்வான், பல நேரம் புரியாத புதிர்தான் ரகுநந்தன்.. அவன் மிக மகிழ்ச்சியாய் இருக்கும் நேரம் என்றால் சதிஸோடு அரட்டையில் இருக்கும் நேரம் தான்..

தன் அனைத்து கட்டுப்பாடுகளையும் விட்டு பேசிக்கொண்டு சிரித்துகொண்டு இருப்பான்.. அதை பார்த்து மிதிலாவும் மகிழ்ச்சியாக இருப்பாள்.. இரவரின் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியை பார்த்து சதிஸோ இருவரும் நன்றாய் இருப்பதாய் புரிந்துகொள்வான்.. சரியான விதத்தில் தவறாய் புரிந்து ஒரு நிம்மதி பெருமூச்சு வேறு விட்டுகொள்வான்..   

இதுவே இவர்கள் வாழ்வின் தினசரி கதையானது.

அன்றும் அப்படிதான் சில்லென்று தென்றல் காற்று வீசிக்கொண்டிருக்க, இன்னும் சிறிது நேரத்தில் மழை வந்துவிடும் என்று செய்தியை கூற மேகமும் கருத்துக்கொண்டு இருந்தது.. இதில் மண் வாசம் வேறு மனதை மயக்கியது.. 

இதை எல்லாம் மிதிலா அனுபவித்தபடியும், ரசித்தபடியும்  தன் பாட்டியோடும் கோகிலாவோடும் பேசியபடி அமர்ந்து இருந்தாள்..  

“ பாட்டி கிளைமேட் செமையா இருக்குல??? ஹப்பா ஜில்லுனு இருக்கு… மழை வேற வரும் போல ” என்று கூறி கைகளை தேய்த்துக்கொண்டாள்..

“ ஆமா டா மிதிகுட்டி.. ஆனா காத்து வீசுது பாரு மேகத்தை எல்லாம் கலைச்சிடும்.. மழை வராது…” என்றார் ஜெகதா….

“ ம்ம் !!! கோகிலாக்கா இந்த கிளைமேட் இருந்தனால தான் சூடா பஜ்ஜி போட்டிங்களா?? ரொம்ப நாள் ஆச்சுல கா???” என்று கோகிலாவையும் விட்டுவைக்கவில்லை மிதிலா..

இன்னும் சிறிது நேரம் அப்படியே பேசிக்கொண்டு இருந்தவள் “ பாட்டி நான் இப்படியே கொஞ்சம் தூரம் வரைக்கும் நடந்து அப்படியே நம்ம பிள்ளையார் கோவிலுக்கு போயிட்டு வரேன் “ என்றாள்..

 “ வேணா மிதி.. இன்னும் கொஞ்சம் நேரத்தில நந்து வந்திடுவான்.. உள்ள நுழையும் போதே மிதுன்னு சொல்லிகிட்டே வருவான்.. அவன் வந்தபிறகு கூட போயிட்டு வாங்க.. ஏன் தனியா அனுப்புனிங்கன்னு என்னைய தான் கேட்பான் “ என்றார் ஜெகதா…

அவளுக்கும் ஆசை தான் இப்படி ஒரு நேரத்தில் கணவனோடு சேர்த்து சிறிது தூரம் நடந்து வர வேண்டும் என்று ஆனால் இதை அவனிடம் கூறமுடியுமா ?? கூறினால் தான் அவன் உடனே சரியென்று கூறிவிடுவானா என்ன ??

“ ம்ம்ச் என்ன பாட்டி நீங்க?? நீங்களும் இப்படி சொன்னா எப்படி?? கல்யாணம் ஆகி ஒரு  நாலு நாள் தான் மில்லுக்கு போனேன்.. அதுக்குள்ள உங்க பேரன் எல்லா வேலையும் பழகி என்னை வீட்டில இருக்க வைச்சுட்டாரு.. வீட்டிலேயே இருக்க ரொம்ப போரிங்கா இருக்கு பாட்டி.. இங்க இருக்க பிள்ளையார் கோவில் இதோ ஒரு சந்து திரும்பினா வரப்போகுது. உங்க பேரன் வேற நான் சொன்னதும் கிளம்பிட்டு தான் மறுவேலை “ என்று முகம் சுருக்கினாள்..

“ அதுக்கில்லைமா… “ என்று யோசித்தவர்

“ சரி கிளம்பு.. ஆனா பத்திரமா போயிட்டு வா மிதிம்மா.. நந்து வரதுக்குள்ள வந்திடு…. “ என்று கூறி அனுப்பினார் ஜெகதா..

“ சூப்பர் பாட்டி.. பத்தே பத்து நிமிஷம் தான்… நான் போயிட்டு வந்திடுவேன்.. நல்லா ஜில்லுனு இருக்குல.. அதான் கொஞ்சம் நடந்து போயிட்டு வந்தா நல்லா இருக்கும்.. “ என்று துள்ளி குதித்து கிளம்பியவளை பார்க்க ஜெகதாவிற்கு பெருமூச்சு தான் வந்தது..

மிதிலா வெளியே செல்லும் வரை காத்திருந்துவிட்டு “ கோகிலா மிதிலா கிட்ட நிறைய மாற்றம் தெரியுது.. முன்ன எல்லாம் ஒரு இடத்தில இருக்கமாட்டா.. இப்போ எப்படி தான் வீட்டிலேயே இருக்காளோ.. இந்த நந்து பையன் கொஞ்சம் புரிஞ்சு நடந்துக்கிட்டா நல்லா இருக்கும்…” என்று அங்கலாய்த்தார்…

“ ஆமாங்கம்மா…. ஆனா ஒரு அளவுக்கு மேல நம்ம சொல்ல முடியாது இல்லையா ?? ஆனா அவங்க ரெண்டு பேருக்கும் நடுவில எந்த பிரச்சனையும் இல்லாம சந்தோசமா இருந்தாலே போதும். மிதிலாவும் சந்தோசமா தானே இருக்கா.. தம்பியும் வீட்டில் இருக்கும் நேரம் எப்பயும் மிது மிதுன்னு தான் இருக்கு ” என்றார் கோகிலா..

“ஆனா எனக்கு என்னவோ இன்னும் மனசு தெளிவாகாம இருக்கு கோகிலா.. எல்லாம் நல்லதாவே நடக்கணும்” என்று கூறிக்கொண்டார்..

எப்பொழுதும் வரும் நேரத்தை விட ரகுநந்தன் அன்று சீக்கிரமே வந்துவிட்டன்.. கார் விட்டு இறங்கியதுமே ” மிது “ என்ற அழைப்பு தான் அவனுக்கு வரும்..

“ மிது… மிது பேபி…” என்று அவளை ஏலம் விட்டுக்கொண்டே தான் நுழைந்தான்..

பத்தே பத்து நிமிடத்தில் திரும்பி விடுவேன் என்று கூறிச்சென்ற மிதிலாவோ அறைமணி நேரம் ஆகியும் ஆளை காணவில்லை..

ஜெகதாவோ தன் பேரனிடம் “ என்ன நந்து பையா சீக்கிரமே வந்துட்ட ?? “ என்று அன்பாய் விசாரித்தார்..

“ வேலை சீக்கிரமே முடிஞ்சது பாட்டி..” என்று பதில் கூறியவனின் கண்கள் வீட்டையே அலசியது..

“ எங்க பாட்டி மிது…??”

“ அவ கிளைமேட் நல்லா இருக்கேன்னு கொஞ்சம் தூரம் நடந்துட்டு வரேன்னு போயிருக்கா டா.. இப்பதான் போனா.. நீயும் இல்லாம பாவம் அவளுக்கு போர் அடிக்குதாம்…” என்றார் அவனை சமாதானம் செய்யும் நோக்கத்தில்..

அவள் வீட்டில் இல்லையென்றதும் அவன் முகம் மாறிவிட்டது.. ஜெகதா கூறுவதற்கெல்லாம் “ம்ம்” என்று சொன்னதை தவிர வேறு பதில் இல்லை..

அவன் முகத்தில் என்ன இருக்கிறது என்று ஜெகதாவாலுமே கண்டு பிடிக்கமுடியவில்லை..

“ கோகிலா போய் மிதிலாவ கூட்டிட்டு வா மா.. “ என்றார் தன் பேரனின் மனம் அறிந்து..

அவனோ “வேண்டாம் பாட்டி அவ வரும் போது வரட்டும்..” என்று கூறிவிட்டு அமைதியானான்..

காப்பி வேண்டுமா, ஏதாவது உண்ண கொடுக்கவா என்று கோகிலா கேட்ட கேள்விக்கெல்லாம் ரகுநந்தனின் தலை மறுப்பாய் ஆடியது…

“ இந்த தம்பிக்கு ஏன் தான் இத்தனை பிடிவாதமோ “ என்று எண்ணியபடி நகர்ந்தார் கோகிலா…

அவனை இன்னும் சிறிது நேரம் காக்க வைத்துவிட்டு வந்து சேர்ந்தாள் மிதிலா.. நந்தனை கண்டதும் “ அட நந்தன்… வந்துட்டிங்களா?? அக்கா குடிக்க ஏதாவது கொடுத்திங்களா ???” என்று ரகுநந்தனிடம் ஆரம்பித்து கோகிலாவில் முடித்தாள்..

கோகிலாவோ இல்லை என்பது போல தலையசைத்தார்…

“ ஏன் கா ??? பாருங்க முகமே அலுத்து தெரியுது….” என்று பேசிக்கொண்டே இருந்தவளிடம் பதில் எதுவும் கூறாமல் விருட்டென்று எழுந்து சென்று விட்டான் ரகுநந்தன்.. மிதிலாவிற்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது..

“ ந.. நந்தன் “ என்று அவனை பின்தொடர போனவளை தடுத்து நிறுத்தினார் ஜெகதா..

“ அவனுக்கு சாப்பிட எதா கொண்டு போ மிதிம்மா.. சாப்பிட்டு முடிக்கும் வரைக்கு எதுவும் பேசாதா டா.. “ என்று சொல்லி அனுப்பினார்.. அவர் சொன்னது போலவே தான் சென்றாள் மிதிலா..

அவனோ இவள் வருவதற்குள் உடை மாற்றி அமர்ந்து இருந்தான் அவர்களின் அறையில்..

“ நந்தன், முதல்ல சாப்பிடுங்கப்பா..” என்று  காபியையும், பஜ்ஜியையும் கொடுத்தாள். அவனும் மறுப்பில்லாமல் உண்டான் தான் ஆனால் பேச்சில்லை..

சிறிது நேரம் பொறுத்து பார்த்தவள் “ கொஞ்சம் ஜில்லுனு இருந்தது கிளைமேட் அதான் கோவில் வர நடந்து போலாமேன்னு போயிட்டு வந்தேன்… சீக்கிரம் வரத்தான் பார்த்தேன் நந்தன், ஆனா பழைய பிரன்ட் ஒருத்தி பிடிச்சு நிறுத்திட்டா…” என்று அவனை பேச வைக்க முயற்சித்தாள்…

மௌனமாய் இருந்தவன் “ யாரை கேட்டு போன ???” என்று ஒற்றை கேள்வியில் முடித்துக்கொண்டான்..

முதலில் இக்கேள்வியே அவளுக்கு புரியவில்லை.. சில நேரம் பிடித்தது..

“ ஹா!! என்.. என்ன நந்தன் கேட்டிங்க???” என்றாள்

“ யாரை கேட்டு கோவிலுக்கு போன ???” என்று உறுமினான்..

அவளுக்கு சட்டென்று “ யாரை கேட்கவேண்டும் ???” என்று பதிலுக்கு எகிற தோன்றியது ஆனால் கோவத்தை அடக்கிகொண்டாள்..

“ என்னப்பா இது… கோவில் இங்க இருக்கு ஜஸ்ட் ஒரு டென் மினிட்ஸ் தான்.. அதுக்கேன் இவ்வளோ கோவம் ???” என்றாள் மெல்ல..

“ நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லை….” என்றான் கடுமையாய்..

கோவிலுக்கு போய் விட்டு வந்தது என்ன கொலை குத்தமா என்று இருந்தது மிதிலாவிற்கு… அமைதியாய் இருந்தாள்..

“சொல்லு.. யாரைக்கேட்டு போன ???” மீண்டும் அதே கேள்வி அவனிடம்…

“பா.. பாட்டி கிட்ட, அக்காகிட்ட எல்லாம் சொல்லிட்டு தான் போனேன்…” சத்தமே வரவில்லை அவளுக்கு…

“ ஓ !! நான் ??? என்கிட்டே சொல்லனும்னு உனக்கு தோணலைல??? நான் வந்ததுமே உன்னை தேடுவேன்னு தெரியும் தானே மிது உனக்கு?? அப்படி தெரிஞ்சும் நீ போயிருக்க அப்படின்னா உனக்கு எவ்வளோ அலட்சியம் என்மேல…” என்று பொரிந்து விழுந்தான்..

மிதிலாவிற்கு ஐயோ என்று வந்தது… “ இங்கு, இந்த முக்கு திரும்பினாள் இருக்கும் கோவிலுக்கு போய் விட்டு வந்ததற்கு இத்தனை அலம்பலா “ என்று தோன்றியது. ஆனால் தன் உணர்வுகளை எல்லாம் அடக்கி கொண்டு 

“ அப்படி எல்லாம் இல்லை நந்தன்.. நீங்க வரதுக்குள்ள வந்திடலாம்னு தான் நினைச்சேன் “ என்று சமாதானம் செய்ய அரம்பித்தவளுக்கு மேலும் ஒரு இருபது நிமிடம் பிடித்தது  அவனை சரி செய்ய..

ஒருவழியாய் அவனை சமாதானம் செய்து முடிக்கவும், “ ஹ்ம்ம் சரி பேபி இனிமேல் இப்படி பண்ணாத என்ன.. உன்னை காணோமா ஒருமாதிரி ஆகிட்டது” என்று கூறி அவளை  அணைத்து முத்தமிட்டவனை அவள் என்னவென்று சொல்ல முடியும்…

புயலில் சிக்கி வெளிவந்தது போல இருந்தது… ஒரு சின்ன விஷயம் இதுக்கே இத்தனை போராட்டமா என்று வந்தது.. இனிமேல் வாழ்கையில் எத்தனை எத்தனை சந்திக்க வேண்டும்.. அதற்கெல்லாம் இவனை சமாதானம் செய்து செய்தே இவளுக்கு வாழ்க்கை முடிந்துவிடும் போலவே என்று எண்ண தோன்றியது..

ஆனாலும் தன் மனதை “ ஒருவேளை ரொம்ப தேடிருப்பானோ அதான் நான் இல்லைங்கவும் கோவம் வந்தது போல.. ச்சே பாவம் என் நந்தன் என்னை தேடாமல் வேற யாரை தேட முடியும்” என்று கூறிக்கொண்டாள்…

கீழே எதோ பேச்சுக்குரல் கேட்கவும் கீழே சென்றாள் மிதிலா… ஜெகதா ரகுநந்தனோடு வக்கீல் விநாயகமும் பேசிக்கொண்டு இருந்தார்… அவர் முகத்தை பார்த்தாலே முக்கியமான விஷயம் என்று தெரிந்தது..

“ வாங்க அங்கிள் “ என்று கூறிவிட்டு தன் கணவனோடு சென்று அமர்ந்து கொண்டாள்.. தனியே அமர்ந்தாள் அதற்கும் ஏதாவது சொல்லுவான்.. ஏற்கனவே சொல்லியும் இருக்கிறான் தான்..

விநாயகம் “ இந்த விசயம் இப்போதான் என் காதுக்கு வந்தது தம்பி, விசாலம்மா லாயர் அந்த உயிலை மறைக்க ரொம்ப ட்ரை பண்றாரு.. பட் உங்க தாத்தா, அதான் உங்க அம்மாவோட அப்பா, அவங்க லாயர் ரொம்ப பிடிவாதமா இருக்கார்.. நேத்து தான் என்கிட்டே பேசினார்.. முதலில் விசாலம்மா கிட்ட பேசி இருப்பார் போல ஆனா அவங்க சரியா எதுவும் சொல்லலையாம்” என்று கூறினார்..

ஜெகதாவின் முகத்தில் “ இருக்கும் பிரச்சனை போதாது என்று இது வேறா “ என்ற உணர்வு.. ஆனால் மிதிலாவிற்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை.. தன் கணவன் முகம் நோக்கினாள்..

அவன் முகத்திலும் அதே பாவம் தான்..

“ என்ன தம்பி சொல்றிங்க நீங்க சரின்னு சொன்னா உங்க தாத்தா வீட்டு லாயர் உங்களை பார்க்க வரேன்னு சொன்னார்.. நான் என்ன சொல்லட்டும்.. “என்றார்

“ ஒருவேளை நான் சரின்னு சொல்லலைனா???” என்று கேட்டான் ரகுநந்தன்.. மிதிலாவிற்கு தலையில் அடித்துக்கொள்ள வேண்டும் போல வந்தது..

வக்கீலோ “ நீங்க சரின்னு சொல்லாம இருந்தா அப்புறம் கோர்ட் வழியா தான் நம்ம போக முடியும்.. ஏன்னா நீங்க இங்க வந்து ஆறு மாசம் முடிய இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு.. அந்த உயில்படி, நீங்களோ இல்லை உங்க அம்மாவோ இங்க வந்து ஆறு மாசத்தில் உங்ககிட்ட அதை ஒப்படைக்கனும்னு இருக்கு.. அவரும் அவர் கடமையை செய்யணும் தானே “ என்றார்..

“ ஹ்ம்ம் “ என்று யோசித்தவன் “ பாட்டி நீங்க என்ன சொல்றிங்க?? அவரை வரச்சொல்லலாமா ???” என்று ஜெகதாவிடம் கேட்டான்..

“ ஹ்ம்ம் வரசொல்லி பேசி பார்க்கலாம் நந்து.. ஆனா அவர்கிட்ட முடிவை சொல்றதுக்கு முன்ன நம்ம விசாலம் கிட்டயும் பேசிட்டு அதுக்கு பிறகு அந்த லாயர் சொல்றதுக்கு நம்ம பதில் சொல்லிக்கலாம்” என்றார்..

“ ஹ்ம்ம் சரிங்க பாட்டி “ என்று கூறிவிட்டு

“ அங்கிள் பாட்டி சொல்றமாதிரி பண்ணிடலாம்” என்று கூறவும் விநாயகத்திற்கு மனம் கொஞ்சம் நிமம்தியாய் இருந்தது.. மேலும் சிறிது நேரம் இருந்துவிட்டு பேசிவிட்டு சென்றார்…

ஜெகதாவிற்கோ மனதில் மீண்டும் ஒரு கவலை தொற்றிக்கொண்டது.. நிச்சயமாய் இதில் விசாலம் ஏதாவது பிரச்சனை செய்வார் என்று எண்ணினார்.

ரகுநந்தனோ “ பாட்டி நீங்க எதுவும் டென்சன் ஆக வேண்டாம். நான் பார்த்துக்கிறேன்.. கண்டிப்பா இதில் நம்ம சைட் எந்த தப்பும் இல்லை. அப்புறம் ஏன் அவங்களை நினைச்சு பயப்படுறிங்க.. “ என்றுஆறுதலாய் பேசினான்..

மிதிலாவிற்கு விஷயம் தெரியாவிடினும், அவளும் ஜெகதாவிற்கு ஆறுதல் சொன்னாள்.. சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள்..

ரகுநந்தன் “ மிது வா வெளிய போயிட்டு வரலாம் ??” என்று அழைத்தான்.. ஆனால் மிதிலாவிற்கோ ஜெகதாவை விட்டு செல்ல மனமில்லை.. தயக்கமாய் இருந்தாள்..

“என்ன அப்படியே இருக்க ?? கிளைமேட் நல்லா இருக்குன்னு போன தானே?? இப்போ என் கூடவும் வா.. போகலாம் “ என்று கை பிடித்து அழைத்து சென்றான்..

இதையே சற்று மென்மையாய் சொல்லி இருந்தால் நன்றாய் தான் இருக்கும் ஆனால் அவன் சொல்லவேண்டுமே..

ஜெகதாவிற்கு இவர்களை நினைத்து வருத்தம் கொள்வதா இல்லை விசாலம் செய்ய போகும் கலாட்டவை எண்ணி கலக்கம் அடைவதா என்றே தெரியவில்லை..

கோகிலா “ என்னம்மா என்ன பிரச்சனை??” என்று வினவவும் ஜெகதா என்ன விஷயம் என்று கூற ஆரம்பித்தார்..

ரகுநந்தனின் அன்னை லீலாவின் அப்பா திரு. வைத்தியநாதன் எழுதிய உயில் தான் அது… ஆனால் இப்படி ஒரு உயில் இருந்த விஷயம் யாருக்குமே இதுவரை தெரியவில்லை..

லீலாவின் தந்தையும் விசாலமும் உடன் பிறந்தவர்கள்.. ஏற்கனவே விசாலத்திற்கு பிறந்த வீட்டில் இருந்து நிறைய சொத்துக்கள் தான் கொடுத்து இருந்தனர்..

அதன் பிறகு வைத்தியநாதன் தனிப்பட்டு சம்பாரித்த சொத்துக்களும், குடும்ப சொத்துக்களும் சேர்த்தே நிறைய சேர்ந்துவிட்டது.. இதற்கெல்லாம் ஒரே வாரிசி லீலா..

இதன் காரணமாகவே லீலாவை தன் மருமகளாக கொண்டுசெல்ல எண்ணினார் விசாலம்..

ஆனால் லீலாவோ ஜெகதாவின் வீட்டிற்கு மருமகளாய் சென்றார். தன் கணவனை இழந்து,வெளிநாட்டிற்கே சென்றுவிட்ட தன் மகளின் நிலையை எண்ணி எண்ணி தவித்தார் அந்த தந்தை.. அவரது உடல் நலமும் கேட்டது..

இது தான் சாக்கு என்று அனைத்து சொத்துக்களையும் மேற்பார்வை பார்க்கும் பொறுப்பு விசாலத்திடம் வந்தது.. ஆனால் வைத்தியநாதன் என்ன நினைத்தாரோ தன் உடன் பிறப்பிற்கு தெரியாமலே சொத்தை எல்லாம் தன் மகள் பெயரிலும் பேரன் பெயரிலும் எழுதிவைத்து விட்டார் உயிலாக..

எப்பொழுது லீலாவோ, இல்லை ரகுநந்தனோ இங்கு வந்தாலும் அவர்கள் வந்து ஆறு மாதங்களுக்குள் இந்த சொத்துக்கள் முழுவதும் அவர்களுக்கு சேர வேண்டும் என்று இருந்தது..  

என்ன நினைத்து எழுதினாரோ உயில் எழுதிய சில நாட்களிலேயே இறைவனை சென்றடைந்து விட்டார் வைத்தியநாதன்.. தந்தையின் மரணத்திற்கு வந்த லீலாவிடம் இதை பற்றி வக்கீல் சொல்ல வந்தார் ஆனால் விசாலம் உடன் இருந்ததால் எதுவும் கூற முடியவில்லை..

லீலாவை தனியில் அழைத்து பேச முயற்சி செய்தார், ஆனால் லீலாவோ “எதுவா இருந்தாலும் விசாலம் அத்தைக்கிட்ட பேசுங்க “ என்று கூறி மறுபடியும் பறந்து விட்டார்.. ஆனால் விசாலத்திடம் கூற வக்கீலுக்கு மனமும் இல்லை..

அப்படி சொல்லும்படி வைத்தியநாதனும் சொல்லவில்லை.. அதலால் அவர்கள் திரும்பி வரும் வரைக்கும் அமைதியாய் இருப்பதென முடிவு செய்தார்..  

இதோ இப்பொழுது தான் ரகுநந்தன் வந்திருக்கிறான்.. வைத்தியநாதனின் குடும்ப வக்கீல் தன் மனைவி மக்களோடு வெளியூரில் இருந்ததால் அவருக்கு விஷயம் தெரியவில்லை..

தெரிந்தபிறகு முதலில் விசாலத்தை தான் அணுகினார் ஆனார் விசாலமோ சரியான ஒத்துழைப்பு தராததால் இப்பொழுது ரகுநந்தனை காண முடிவு செய்துள்ளார்..

விசாலாத்திற்கு இத்தனை ஆண்டுகளாய் தான் கட்டி காப்பாற்றி வந்த சொத்துகளை நேற்று வந்த ரகுநந்தனிடம் கொடுக்க மனமில்லை.. என்ன இருந்தாலும் அது என் பிறந்தவீட்டு சொத்து, எனக்கும் அதில் உரிமை உள்ளது என்று கூறிக்கொண்டு இருக்கிறார்..

இதை எல்லாம் ஜெகதா கூறி முடிக்கும் பொழுது கோகிலாவிற்கே அடேயப்பா என்று இருந்தது..

இருக்கும் பிரச்சனை  எல்லாம் போதாது என்று இதுவேறா என்று நினைத்தார் ஜெகதா.. ஆனால் இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை இதற்கும் மேலே நிறைய இருக்கிறது என்று ரகுநந்தன் ரூபத்தில் விதி சிரித்தது..

இரவு அனைவரும் அமைதியாய் உண்டுக்கொண்டு இருந்தனர்… ஜெகதா வேறு பேசியிருக்கலாம் ஆனால் போராதா காலம் அவரை பேச வைத்தது “ என்ன மிதிகுட்டி கோவிலுக்கு போயிட்டு பத்து நிமிஷத்தில் வரேன்னு ஏன் அவ்வளோ நேரம் பண்ண ???” என்று கேட்டார்..

மிதிலாவுக்கு “ இப்போ இந்த பேச்சு தேவையா ??” என்று இருந்தது ஆனாலும் தன் அன்பான பாட்டி கேட்கும் பொழுது பேசாமல் இருக்க முடியுமா.. ரகுநந்தனின் முகம் பார்த்தாள், அவன் சாதரணமாய் தான் இருந்தான்..

“ ஹப்பாடி!!!!” என்று எண்ணிக்கொண்டு “ அது ஒண்ணுமில்ல பாட்டி, கோவில்ல நம்ம நந்தினியை பார்த்தேன்… பார்த்து ரொம்ப நாள் ஆச்சா அதான் பேசிட்டு வர கொஞ்சம் நேரம் ஆனது.”

“ நந்தினியா யாருமா அது கேட்ட பேரு மாதிரி இருக்கே…..” என்று விசாரித்தார்..

“ அதான் பாட்டி நம்ம நிசா மில் வீட்டு பொண்ணு.. என் கூட படிச்சாலே.. ரெண்டாவது வருஷம் படிக்கும் போதே கல்யாணம் பண்ணிட்டு துபாய்க்கு போனாளே, இப்போதான் வந்திருக்கா.. ஒரு பையன் வேற அவளுக்கு..” என்று தன் தோழியை பார்த்த மகிழ்ச்சியை கூறிக்கொண்டு இருந்தாள்..

“ ஓ !! அவங்க வீடா… இந்த பொண்ணு அண்ணனுக்கு தானே மிதி உன்னை கேட்டது ?? அம்மா உங்களுக்கு நியாபகம் இருக்கா, அவங்க அதான் நந்தினி பொண்ணு மாமா கூட வந்து இங்க பேசினாரே..” என்று இரண்டு வருடத்திற்கு முன் நடந்த விசயங்களை நியாபக படுத்தினார் கோகிலா..

இவர்களை பேசுவதை எல்லாம் அமைதியாய் கேட்டபடி இருந்தான் ரகுநந்தன், கடைசி சம்பாசனையை கேட்கவும் விலுக்கென்று திரும்பி பார்த்தான் மிதிலாவை.. ஆனால் மிதிலாவோ பேச்சு சுவாரசியத்தில் இருந்தாள்..

“ ஹப்பா !! கோகிலாக்கா மறக்க கூடிய விசயமா அது.. நந்தினி ஓட மாமா பாட்டி காலில விழாதா குறைதான்.. என் பொண்ணு அந்த பையனை தான் கல்யாணம் செய்யனும்னு சின்ன வயசுல இருந்து ஆசையை வளர்த்திட்டா, நீங்க தயவு செய்து இந்த சம்மந்தத்திற்கு சரின்னு சொல்லாதிங்கன்னு..” என்று அவளும் அன்றைய நிகழ்வுகளை பேசிக்கொண்டு இருந்தாள்..

ரகுநந்தனுக்கு இது போதாதா ?? அமைதியாய் எழுந்து சென்றுவிட்டான்.. ஆனால் மிதிலா இத்தனை நேரம் அவனோடு வெளியே சென்று வந்ததால் அவன் சென்றதை தவறாய் எண்ணவில்லை..

இரவு அறைக்கு வந்து பார்க்கும் போது அவன் எதோ யோசனையில் இருப்பது போல இருந்தது..

“ என் நந்தனுக்கு யோசனை எல்லாம் பலமாய் இருக்கே “ என்று கேட்டபடி அருகில் படுத்தவளை வெறித்து பார்த்தான்….

“ என்ன நந்தன் அமைதியா இருக்கீங்க ??? ”

“ ஹ்ம்ம் ஒண்ணுமில்லை.. ஆமா இந்த நந்தினி யாரு ?? அவங்க அண்ணனுக்கு ஏன் உன்னை கேட்டாங்க…” என்று சாதாரணமாய் வினவினான்..

தன் கணவன் தன்னோடு பேசி நேரம் கழிக்க விழைகிறான் என்று மகிழ்ந்த மிதிலாவோ “ நந்தினி என் கிளாஸ் மேட் பா.. அவங்க அண்ணன் கூட எங்க காலேஜில் தான் வேலை பார்த்தாங்க.. இப்போ எங்கன்னு தெரியலை.. என்னை பார்த்து பிடிச்சு போச்சு போல அதான் அவங்க வீட்டில சொல்லி பொண்ணு கேட்டு அனுப்புனாங்க,.. ஆனா அவங்க மாமா தான் வந்து ஒரு குழப்பம் பண்ணிட்டாரு..” என்று கூறி முடித்தாள்..

அவளது எண்ணம், வெளிநாட்டில் வளர்ந்தவன், இந்த மாதிரி பேச்சை எல்லாம்  குதர்க்கமாய் எடுக்க மாட்டான், அதுவும் இல்லாம அவனுடைய பழைய காதலை பற்றி எல்லாம் பேசினவன் தானே இதையும் இயல்பாய் தான் எடுத்துக்கொள்வான் என்றே அனைத்தையும் கூறியது..

ஆனால் அவனோ இயல்பாய் எடுத்துக்கொண்டால் அவன் ரகுநந்தன் அல்லவே..

“ ஓ !!! அப்போ அவங்க மாமா வந்து பேசலைனா, நீ அவனை கல்யாணம் செய்து இருப்ப அப்படி தானே ???” என்று கேட்டவனை திகைத்து பார்த்தாள் மிதிலா…                  

                          

            

    

          


                                            

                                

                                            

                  

                                    

Advertisement