Advertisement

நேசம் – 12

“ இல்ல மிது.. அது வந்து….” என்று திக்கி திணறி கொண்டு இருந்தான் ரகுநந்தன்.. ஏனோ அவனால் மிதிலாவின் பார்வையை நேருக்கு நேராய் சந்திக்க முடியவில்லை.. 

பின் என்ன நினைத்தானோ மிதிலாவின் முகத்தை நிமிர்ந்து பார்த்தான்.. அவளது இறுகிய முகமும், கலங்கிய கண்களும் என்ன உணர்த்தியதோ தெரியவில்லை.. கண்களை மூடி சில நொடிகள் தன்னை திட படுத்தி கொண்டான் ரகுநந்தன்..

அதன் பின் ஒரே மூச்சில் தனக்கும் லிசிகும் இருந்த பழக்கம், அதன் பிரச்சனைகள், தாங்கள் பிரிந்த விதம் என அனைத்தையும் கொட்டி தீர்த்துவிட்டான்..

ரகுநந்தன் பேசும் பொழுது மிதிலா அவன் முகத்தையே தான் பார்த்தாள். பழைய காதலை பற்றி பேசும் போது அவன் முகத்தில் அந்த வலி, ஏக்கம் தென்படுகிறதா என்று பார்த்தாள்..

ஆனால் அவன் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது ஒரு அருவருப்பு கலந்த வெறுப்பு.. அவன் கண்களில் சொல்ல முடியாத ஒரு உணர்வு.. இவன் எதோ ஒரு விஷயத்தை கூறாமல் மறைக்கிறான் என்று மிதிலா உணர்ந்தாள். உண்மையும் அதுவே.

அவன் கூறாமல் விட்டதை ஏன் என்று கேட்டு அவனை இன்னும் கலங்கடிக்க விரும்பவில்லை அவள். அவன் முகத்தில் தெரிந்த உணர்வு அவளுக்கு மனதில் ஒரு திருப்தியை கொடுத்தது.. அவன் பேசி முடிக்கும்வரை அமைதியாய் இருந்தவள்

“ நந்தன், நான் உங்களை முழுசா நம்புறேன். ஏன்னா கல்யாணத்துக்கு அடிப்படையே நம்பிக்கை தான்.. கல்யாணத்துக்கு மட்டும் இல்லை எந்த ஒரு உறவுக்குமே நம்பிக்கை தான் முக்கியம். அது இல்லாம எதுவுமே இல்லை. ஆனா நான் கேட்கிற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க.. உங்க மனசில இருந்து சொல்லணும் சரியா ???” என்றாள்..

அப்பொழுதும் அவள் குரல் எப்பொழுதும் பேசும் தொனியில் இல்லை.. ரகுநந்தன் மனம் என்னவோ செய்தது.. மிதிலாவின் கைகளை பிடித்துகொண்டான்

“ மிது நான் இதை எல்லாம் உன்கிட்ட மறைக்கணும்னு இல்லை. ஆனா அவளை பத்தி பேசுற அளவுக்கு அவ வொர்த் இல்லை மிது அதான். ஆனா நானே நேரம் கிடைக்கும் போது உன்கிட்ட சொல்லி இருப்பேன் மிது..” என்றான் பரிதாபமாக..

அவன் கூறுவதை வைத்து பார்க்கும் பொழுது அங்கே டெக்சாஸில் வேறு எதுவோ நடந்து இருக்கிறது என்று மிதிலாவால் யூகிக்க முடிந்தது. ஆனால் அதை பற்றி ரகுநந்தன் நினைக்க கூட விரும்பவில்லை என்பதும் அவள் தெரிந்துகொண்டாள்..

“ நந்தன்.. இந்த பிரிவுக்கு, அதாவது நீங்களும் லிசியும் பிரிந்ததுக்கு ஏதாவது ஒருவகையில நீங்க காரணமா??? அதாவது உங்க மேல எதாவது தப்பு இருக்கா ??” என்று வினவினாள்..

அவன் இல்லை என்று கூறினான்..

“ ஹ்ம்ம் சரி, ஒருவேளை எதிர்காலத்தில லிசியை பார்த்தாலோ, இல்லை ஒருவேளை நம்ம கல்யாணத்துக்கு பிறகு ஏதாவது காரணத்தினாலோ  அவளை நினைச்சு இப்படி நம்ம மிஸ் பண்ணிட்டோமேன்னு உங்களுக்கு தோணுமா ?? “ என்று அவள் கேட்டு முடிக்கும் முன்னே அவனிடம் இருந்து

“ கண்டிப்பா இருக்காது மிது.. என்னை பொருத்தவரைக்கும் இனிமே என் வாழ்க்கைக்கு நீ தான்.. நீ மட்டும் தான்“ என்றான் உறுதியாக.. அவன் குரலில் தெரிந்த உறுதி அவனது முகத்திலும் தெரிந்தது.. மிதிலாவின் மனதிலும் தெளிவு பிறந்தது.

அவனது முகத்தையே சில நொடிகள் பார்த்தவள் “ சரி போகலாம். இது நமக்கு மட்டுமே தெரிஞ்ச விசயமா இருக்கட்டும்.. பாட்டிக்கு எல்லாம் தெரிஞ்சா டென்சன் ஆவாங்க.“ என்று கூறி நகர பார்த்தாள்.. மிது என்ற அவனது அழைப்பு நிறுத்தியது..

என்னவென்பது போல திரும்பி பார்த்தாள்.. அவன் முகம் இன்னும் ஒரு மாதிரி தான் இருந்தது.. “ என்ன நந்தன்??? ”

“மிது.. ஐ நீட் எ ஹக்???” என்றான் இரு கைகளையும் விரித்து..

ஒரு கேள்வியான பார்வை மட்டுமே அவளிடம் இருந்தது வந்தது..

“ இல்லை மிது எங்க நீ என்னை புரிஞ்சுக்காம ஏதாவது சொல்லிடுவியோன்னு கொஞ்சம் டென்சன் ஆகிட்டேன்.. ஒருவேளை இதை நான் பெருசா நினைக்காம இருந்ததுக்கு நான் வளர்ந்து விதம் காரணமா இருக்கலாம்.. பட் இப்ப கூட என் டென்சன் இன்னும் குறையல மிது.. ஒரே ஒரு தடவை கட்டிபிடிச்சுக்கவா?? ப்ளீஸ் வேற எதுவும் பண்ண மாட்டேன் “ என்றான் நல்ல பிள்ளை போல..

அவன் கூறிய விதத்தை பார்த்து அவளை அறியாமல் ஒரு புன்னகை எட்டி பார்த்தது.. அவளது புன்னகையை சம்மதமாக ஏற்று அவளை தன்னோடு அணைத்துக்கொண்டான்..

“ தேங்க்ஸ் மிது.. தேங்க்ஸ் எ லாட்.. இப்போதான் எனக்கு நிம்மதியா இருக்கு.. கொஞ்ச நேரத்தில, அதுவும் நீ பார்த்த பார்வையில நான் அப்படியே சாக் ஆகிட்டேன் மிது.. நல்ல வேளை நீ எதுவும் என்னை தப்பா நினைக்கல“ என்றான் ஆழ்ந்த குரலில்.. அவன் பேச பேச அவனது அணைப்பு இறுகியது..

அவனது குரலே அவன் உண்மையை பேசுகின்றான் என்று உணர்த்தியது.. மிதிலாவோ இவனை இன்னும் ஏதாவது பேசி வருத்த கூடாது என்று எண்ணினாள்.. யாருக்கு தான் கடந்த காலம் இல்லை.. அதில் காதல் இல்லை.. எல்லாரும் அதையே நினைத்தா தொங்கி கொண்டு இருக்கிறார்கள்?? இல்லையே..

அதுபோல இவனுக்கும் என்னை பார்த்ததும் ஒரு புது வாழ்வு தொடங்க வேண்டும் என்று எண்ணியிருப்பான்.. என்ன மனதில் இருக்கும் அன்பை, ஆசையை கூற தெரியவில்லை. அதை வெளிபடுத்த தெரியாமல் தவிக்கிறான் என்று எண்ணினாள்.. ஆகையால் பேச்சை மாற்றி அவனை சற்று சமாதானம் செய்ய நினைத்தாள்..           

“ ஸ்ஸ்!! என்ன நந்தன் இது.. இவ்வளோ இருக்கமா பிடிச்சா எப்படி?? ஹப்பா என் எலும்பு எல்லாம் நொறுங்கிடும் போல..” என்று வேண்டுமென்றே அவனிடம் இருந்து திமிறினாள்..

அவனுக்கு அவள் எண்ணம் புரிந்ததோ என்னவோ “ அட இதுக்கே இப்படி சொன்னா எப்படி மிது.. இது ஜஸ்ட் ட்ரைலர் தான்.. சொல்ல போனா அதுகூட இல்லை. ஒரே ஒரு கிஸ் தான் பண்ணிருக்கேன் ஹ்ம்ம்.. அதுவும் வெஜ் கிஸ்“ என்றான் அவளை இன்னும் இறுக்கிக்கொண்டு..

“ இந்த பேச்சை ஆரம்பித்தது தப்போ “ என்று எண்ணினாள் மிதிலா. அவனது அருகாமை அவளை என்னவோ செய்தது. அதை விட அவனது பார்வை.

“ போதும் நந்தன்.. நான் கிளம்புறேன்.. ரொம்ப நேரம் ஆச்சு.. கோகிலாக்கா பார்த்தாங்க.. அவ்வளோதான் அப்படியே பாட்டிகிட்ட சொல்லிடுவாங்க” என்று கூறி மீண்டும் விலக நினைத்தாள்..

“ நோ!! நான் தானே ஹக் பண்ணேன். சோ நான் விடுற வரைக்கும் நீ இப்படி தான் இருக்கணும் “ என்றான் பிடிவாதமாய்..

“ ஹா இது நல்லா இருக்கே.. ஹப்பா!!! எனக்கு மூச்சு முட்டுது… ஆளை விடுங்க..” என்று அவனை ஒரே தள்ளாய் தள்ளிவிட்டு ஓடிவிட்டாள்..

தன்னறைக்கு சென்றவளுக்கு உறக்கம் வருவேனா என்று அடம் பண்ணியது.. அன்று நாள் முழுக்க நடந்த அனைத்தையும் நினைத்தபடி படுத்து இருந்தாள்.. ரகுநந்தனின் எண்ணங்களே அவளை ஆக்கிரமித்து இருந்தன..

விவரம் அறிவதற்கு முன்னே தந்தையை இழந்தான். இப்பொழுது தாயையும் இழந்துவிட்டான். இதன் காயங்கள் ஆறுமுன்னே காதல் என்ற பெயரில் ஒருத்தி அவன் மனதை நோகடித்து இருக்கிறாள்.. போதும் அவன் பட்ட கஷ்டங்கள் எல்லாம் போதும் என்று எண்ணியவளுக்கே ஏனோ கண்களில் நீர் வழிந்தது..

அது எதற்கு என்று தெரியவில்லை..

“ எனக்காவது பாட்டி இருந்தாங்க.. அம்மாவா அப்பாவா எல்லமாவுமே பாட்டி இருந்தாங்க.. ஆனா நந்தன்.. என் நந்தனுக்கு நான் மட்டும் தானே.. எது நடந்தாலும் சரி கடைசிவரைக்கும் நான் இருக்கிற வரைக்கும் அவன் மனம் நோகமல் பார்த்துக்கணும்.. கல்யாணம் பண்ணி என்னால அவன் சின்ன வருத்தபட்டான்னு இருக்க கூடாது.. என் நந்தனை நான் நல்லா எவ்வளோ ஹாப்பியா பார்த்துக்கணுமோ அவ்வளோ ஹாப்பியா பார்த்துக்கணும் “ என்று முடிவெடுத்த பின்னே தான் அவளுக்கு உறங்கவே முடிந்தது..

இவள் இப்படி நினைத்திருக்க அங்கே ரகுநந்தனும் உறங்கவில்லை.. நினைக்க கூடாது என்று முயன்றும் அவனுக்கு பழைய நியாபகங்கள் எல்லாம் ஒன்றின் பின் ஒன்றாய் நினைவு வந்தது.. கூடவே கவலையையும் அழைத்துக்கொண்டு வந்தது..

அந்த நியாபகங்களையும் தாண்டி அவனது முகத்தில் சிந்தனை ரேகை ஓடியது.. என்ன சிந்தனை?? யாரை பற்றியது?? என்று அவனுக்கு மட்டுமே அறிந்த ரகசியம்.. சிறிது நேரம் அப்படியே படுத்து இருந்தான்.. மனதில் ஒரு முடிவு எடுத்துகொண்டான் போல..

என்ன முடிவு எடுத்தான் என்பதும் அவன் மட்டுமே அறிந்தது..

இப்படியாக நாட்கள் நகர திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரமே இருந்தது.. மிதிலாவோ ரகுநந்தன் சொல்வதற்கு எல்லாம் சரி என்பது தவிர வேறு எதுவும் கூறுவது இல்லை..

அப்படி தெரியாமல் அவள் ஏதாவது கூறிவிட்டால் தான் அவன் முகம் சுணங்கி விடுகிறது.. அவனது சுணங்கள் இவளை சுருட்டி விடுகிறது..

அன்று ஞயாயிற்று கிழமை.. வீட்டில் ரகுநந்தன், மிதிலா, ஜெகதா, கோகிலா என அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.. திருமண வேலைகள் எல்லாம் ஓரளவு முடிந்து விட்டது..

ஜெகதா மிதிலாவை பார்த்து “ மிதிம்மா பார்லர்க்கு எல்லாம் சொல்லிட்டியா?? என்னிக்கு வர சொல்லி இருக்காங்க ?? நாளைக்கு இருந்து மில்லுக்கு போக வேண்டாம். நம்ம மேனேஜெர் கிட்ட சொல்லிட்டேன்.. வீட்டில இருந்து ரெஸ்ட் எடு.. நந்தப்பா உனக்கும் தான்.. ஒரு வாரத்துக்கு முகேஷ் பார்த்துக்குவான். நீயும் வீட்டில இரு” என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே அவர்கள் வீடு தொலைபேசி தொல்லை பேசியாய் மாறி அலறியது..

அதை எடுக்க ரகுநந்தன் எழும்போது மிதிலா “ நான்.. நான் தான் எடுப்பேன் “ என்று ஓடினாள்.. இது அவளுக்கு சிறு வயதில் இருந்தே பழக்கம்.. வீட்டில் தொலைபேசி அடித்துவிட்டால் போதும் எங்கு இருந்தாலும் வேகமாய் ஓடி வருவாள்..

இப்பொழுதும் அதை கண்டால் ஜெகதாவிற்கு சிரிப்பு தான் வரும்.. “ இன்னும் கொஞ்சம் கூட மாறவே இல்லை “ என்று தன் பேரனிடம் கூறிக்கொண்டு இருந்தார்..

ரகுநந்தனும் அதற்கு கிண்டலாய் பதில் சொல்ல வாய் திறந்தான், ஆனால் அவனது பேச்சு மிதிலாவின் “ என்ன !!!” என்ற அலறலில் நின்றது..

“ சரி நான் வரேன் “ என்று பதற்றமாய் கூறியவளை அனைவரின் கேள்வி நிறைந்த பார்வையே தாங்கி நின்றது..

 “ பாட்டி.. பாட்டி.. நம்ம மில்லுல… அங்க.. நெருப்பு …” என்று கூரியவளுக்கு அதற்கு மேல் பேச முடியவில்லை. வேகமாய் தன் அறைக்கு சென்று தயாராகி காரை நோக்கி ஓடினாள்..

நொடியில் அவள் கூறியதை ரகுநந்தன் புரிந்துகொண்டான்.. அவள் அறைக்கு செல்லவுமே ஜெகதாவிடம் “ பாட்டி.. நீங்க எதுவும் டென்சன் வேண்டாம் ப்ளீஸ்.. நான் அவ கூட போறேன்.. நீங்க எதுவும் நினைக்காம இருங்க. சரியா “ என்று இரண்டு தடவைக்கு மேல் கேட்டு

கோகிலாவிடம் “ அக்கா பாட்டியை பார்த்துகோங்க.. எந்த போன் வந்தாலும் எனக்கு கால் பண்ணுங்க.. சரிதானே “ என்று கூறிவிட்டு அவனும் மிதிலாவின் வேகத்திற்கு ஓடினான்..

வேகமாய் காரை திறந்து ஏற போனவளை தடுத்து “ நீ சைட்ல உட்கார் மிது. இத்தனை டென்சனில் நீ வண்டி ஓட்ட வேண்டாம்,,” என்று கூறி அவனே கிளப்பினான்…

மிதிலாவிற்கு அவன் உடன் வருவது கூட சற்று தெம்பாய் இருந்தது..

அங்கே ஆலையில் சென்று பார்த்தால் அனைவரும் ஒரு திகில் படிந்த முகத்துடன் நின்று இருந்தனர்.. தொழிலாளர்களின் தலைவனோ கைகளை பிசைந்தபடி நின்று இருந்தார்.. அதற்கும் மேல் மேனேஜெர்.. இவர்களின் முக பாவங்களை பார்க்கும் போதே மிதிலாவிற்கு வயிறு கவ்வி பிடித்தது..

ரகுநந்தன் “ இஸ் !! மிது.. நீ பயந்து டென்சன் ஆனா அவங்க எல்லாம் ரொம்ப டென்சன் ஆவாங்க. சோ, தைரியம் நீ தான் சொல்லணும்.. உன் பயத்தை வெளியே காட்டாதே.. இன்ஷூர் பண்ணி இருக்கு தானே “ என்ற அவனது கேள்விக்கு ஆமாம் என்று தலையை ஆட்டினாள்..

“ ஓகே!! உனக்கு நான் இருக்கேன்.. சோ.. தைரியமா இரு..” என்று கூறிவிட்டு அவளது கைகளை பற்றியபடி அழைத்துசென்றான்..

மேனேஜெர் “ மிதிலாம்மா எப்படி நடந்ததின்னு தெரியல.. முதல் ஷிபிட் முடிந்து இப்போதான் எல்லாம் போனாங்க.. இன்னும் அடுத்த ஷிபிட் ஆரம்பிக்க அரை மணி நேரம் இருக்கு.. “ என்று கூறவும் அவருக்கு எதுவும் பதில் கூறாமல் நெருப்பு பற்றிய இடத்தை பார்வையிட சென்றனர்..

அனைவரும் இவர்களை தொடர்ந்து பின்னே சென்றனர்..

கிட்டதாட்ட லோடுகள் அடுக்கி வைக்கும் இடம் முக்கால் வாசி நெருப்பில் வெந்து இருந்தது.. நெருப்பை அங்கிருந்த வேலையாட்களே தண்ணீர் விட்டு அனைத்து இருந்தனர்.. கருகிய துணிகளின் வாசமும், இன்னும் லேசாய் புகைந்து கொண்டிருந்த புகையும் மூச்சு முட்டுவது போல இருந்தது..

இருமியபடியே அந்த இடத்தை பார்வையால் அளந்தால் மிதிலா.. கிட்டத்தட்ட பல லட்சம் மதிப்புள்ள துணிகள் கருகி சாம்பலாகி இருந்தது. மிதிலாவிற்கு மனதில் சொல்ல முடியாத அளவிற்கு வேதனை..

எத்தனை மாத உழைப்பு, எத்தனை ஆர்வமாய் உழைத்தார்கள். அத்தனையும் பாழாய் போனது. நல்ல வேலை உயிர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.. ஆனால்.. ஆனால்.. இதை எல்லாம் சரி செய்ய எப்படியும் இன்னும் இரண்டு மாதங்களாவது ஆகும்..

அந்த நிலையில் அவளது எண்ணமெல்லாம் “ இதை எப்படி சரி பண்ணுறது?? பாட்டி என்னை நம்பி தானே பொறுப்பை கொடுத்தாங்க.. நான்.. நான் சரியா கவனிக்காம விட்டேனோ.. தப்பு என் மேல தானோ?? ஆனா இங்க தான் எல்லாம் பக்கா சேப்டியா தானே இருக்கு.. இதை எப்படி சரி பண்ணுறது“ என்று யோசிக்கும் பொழுதே அவளுக்கு தலை வெடிப்பது போல வலித்தது..

அவளை அமைதியாய் இருக்கும்படி கூறிவிட்டு ரகுநந்தன் தான் அங்கிருந்தவர்களோடு பேசி கொண்டு இருந்தான்.. அதாவது பேச்சுவாக்கில் விசாரித்துகொண்டு இருந்தான்..

அவனது சந்தேகம் எல்லாம் இது தற்செயலாய் நடந்ததா ?? இல்லை வேறு யாரின் ஏற்பாடா ??? இது தான்.. அவன் மற்றவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தாலும் அவ்வபோது மிதிலாவின் முகத்தில் படிந்து மீண்டது..

ஆனால் இதை எல்லாம் மிதிலா கவனித்தாளா தெரியவில்லை.. அவளது எண்ணமெல்லாம் இதை எப்படி சரி செய்வது, பாட்டிக்கு என்ன பதில் கூறுவது இதில் தான் இருந்தது.. இப்படி ஒரு அசம்பாவிதம் நிகழ தான் எங்கே தவறினோம் என்றே யோசித்து கொண்டு இருந்தாள்..

ஏனெனில் அவளுக்கு நன்றாய் தெரியும் இத்தனை ஆண்டுகளில் இது போன்ற சம்பவங்கள் நடந்தது இல்லை. அதுவும் திருமணம் ஏற்பாடாகி இருக்கும் இந்த நேரத்தில் இப்படி ஒரு நிகழ்வு.. திருமணம் என்று நினைக்கவும் தான் மிதிலாவிற்கு மனதில் வேறு ஒரு எண்ணம் தோன்றியது..

சட்டென்று ரகுநந்தனை பார்த்தாள்.. அவனும் புரிந்து கொண்டு தன் பேச்சை முடித்து மிதிலாவிடம் வந்தான்..

“ என்ன மிது… ??”

“ நந்தன்.. இது.. இது தானா நடந்தது இல்லை.. வேற எதோ…” என்று அவள் கூறும் பொழுதே “ நானும் அதை தான் நினைச்சேன் மிது.. சரி சொல்லு உனக்கு எப்படி இது தானா நடந்தது இல்லைன்னு நினைக்கிற ??” என்று கேட்டான்..

அவள் பதில் கூறுவதற்கு முன்னே மேனேஜெர் வந்து மிதிலாவிடம் “ மிதிலாம்மா எல்லாரும் அடுத்து என்ன செய்யன்னு கேட்கிறாங்க” என்று கேட்கவும் மிதிலா இரண்டு நிமிடங்கள் யோசித்தாள்..

ரகுநந்தனும் அமைதியாய் இருந்தான்.. இங்கே மிதிலாதானே முதலாளி.  “ போலிஸ்க்கு சொல்லுங்க அங்கிள், இவ்வளோ நேரம்  இன்பார்ம் பண்ணாம இருந்ததே தப்பு. அப்புறம் நம்ம இன்சூரன்ஸ் ஆபிசருக்கு கூப்பிடுங்க.. எப்படியும் போலிஸ் வந்து எல்லார்கிட்டயும் விசாரிப்பாங்க. அதுக்கு முன்ன எவ்வாளோ லாஸ், என்ன மாதிரி லாஸ்ன்னு எனக்கு அப்ராக்சிமேட்டா கணக்கு போட்டு பிரிண்ட் பண்ணி கொடுங்க.. போலிஸ் வரதுக்கு முன்ன இதெல்லாம் என் கைக்கு வரணும். அப்போதான் அவங்க கிட்ட நான் தெளிவா பேச முடியும்…” என்றாள்..

ரகுநந்தனுக்கு அவள் கூறுவது சரியென பட்டது..

மேனேஜெர் சென்றதும் “ என்ன நந்தன் நான் சொன்னது சரிதானே..” என்றாள் அவனை பார்த்து.. அவனும் அதற்கு ஒரு புன்னகையை பதிலாய் தந்தான்..

“ நந்தன், பாட்டி இங்க இருக்கும் போது இப்படி எல்லாம் நடந்ததில்ல. அதுவும் இல்லாம இங்க எல்லா வொர்கர்ஸ்க்கும் ஐடி இருக்கு.. அதை வைச்சு மட்டும் தான் அவங்க உள்ளே வரமுடியும் , போக முடியும்.. ஆனாலும் எனக்கு என்னவோ இது நார்மலா நடந்தது போல தெரியலைப்பா.. வேற எதுவோ இருக்குன்னு மனசு சொல்லுது.”

“ ஹ்ம்ம் எனக்கும் இது தான் தோணினது மிது. சரி இருக்கட்டும் போலிஸ் வரட்டும். அவங்க வந்து விசாரிக்கிற விதத்தில் விசாரிச்சா உண்மை தானா வெளிய வரும். நல்ல வேலை மேனேஜ் பண்ண முடியுற அளவுக்கு தான் லாஸ் போல.. ஆளுங்களுக்கு எதுவும் ஆகல.. இந்த மட்டும் தப்பிச்சோம்..” என்று அவன் கூறும் பொழுதே அவள் கண்கள் கலங்கியது..

“ ஹேய் என்ன மிது.. என்ன நீ சின்ன பொண்ணு மாதிரி அழுதுகிட்டு.. இங்க பாரு.. நான் இருக்கேன்ல.. நீ ஏன் இவ்வளோ பயப்படுற???” என்று அவளை சமாதானம் செய்தான்.. அவனது நினைப்பு பயத்தில் அழுகிறாள் என்று..

அவளோ “ நான் ஒன்னும் பயந்து அழுகல..” என்றால் ரோசமாய்..

அத்தனை களேபரத்திலும் அவளை ரசிக்க தோன்றியது அவனக்கு.. “ பின்ன ??”

“ பாட்டி… பாட்டிக்கு நான் என்ன பதில் சொல்றது நந்தன்.. அவங்க என்னை நம்பி தானே இவ்வளோ பெரிய பொறுப்பை கொடுத்தாங்க.. ஆனா நான் அதை சரியா பார்த்துக்கலையோன்னு இருக்கு “ என்று கூறி மீண்டும் அழ துவங்கினாள்..

“ ஹேய் மிது டியர்.. என்ன பேபி நீ,, அப்படி எல்லாம் இல்லை. பாட்டி உன்னை தப்பா நினைப்பாங்களா?? நீ ஏன் இப்படி நினைக்கிற?? முதல்ல அழறதை நிறுத்து..”

“ இல்ல நந்தன், பாட்டி என்னை எதுவும் சொல்ல மாட்டாங்க தான். ஏன் ஒருவார்த்தை கூட ஏன்னு கேட்க மாட்டாங்க தான்.. ஆனா எனக்கு அது தான் கஷ்டமா இருக்கும்.. எனக்கு ஒரு மாதிரி கில்டியா இருக்கு..”

இவர்கள் பேசி கொண்டு இருக்கும் பொழுதே போலிஸ் வண்டியின் சைரன் சத்தம் கேட்டது.. மிதிலா நிமிடத்தில் முகத்தை துடைத்துகொண்டு எழுந்து நின்றாள்.. இத்தனை நேரம் அவள் முகத்தில் இருந்த கலக்கம் மறைந்து போனது..

நிமிடத்தில் அவளிடத்தில் இப்படி ஒரு நிமிர்வை அவன் எதிர்பார்கவில்லை.. ஆனாலும் அவளது கண்களில் ஒரு வலி இருப்பதை உணர்ந்தான்..

“இந்த நிமிர்வு மற்றவர்களுக்காக“ என்று எண்ணிக்கொண்டான். நிஜமும் அது தான்.

போலிஸ் வந்து விசாரித்தார்கள்.. மீண்டும் ஒருமுறை உள்ளே சென்று பார்த்தனர். அங்கிருந்த அனைவரையும் விசாரித்தார்கள்.

“மேடம், எப் ஐ ஆர் போட்டுடலாம்.. முதல் சிப்ட் வேலைக்கு யார் யார் வந்தாங்கன்னு லிஸ்ட் எடுத்து என்கிட்டே கொடுங்க. அப்புறம் நாளைக்கு காலையில அவங்களை எல்லாம் இங்க இருக்க சொல்லுங்க. “ என்று கூறியவர் கிளம்புமுன் நியாபகம் வந்தவராக “ சி சி டி வி இருக்கா ??” என்று வினவினார்..

இத்தனை பெரிய ஆலையில் அது இல்லாமல் இருக்குமா?? மிதிலாவிற்கு இப்பொழுது தோன்றியது எப்படி அதை மறந்தோம் என்று..

மிதிலா வேகமாய் கணினியை இயக்கி பார்த்தாள். மற்ற எல்லா இடத்தின் பதிவுகளும் இருந்தன.. சம்பவம் நடந்த இடத்தை தவிர.. அப்பொழுதே இது ஊர்ஜிதமானது இது சாதரணமாய் நடந்த சம்பவம் இல்லை என்று.. உடனே அங்கே அந்த அறைக்கு சென்று பார்த்தால் சி சி டி வி கேமராவின் வயர் அறுந்து இருந்தது.. அதாவது அறுக்கப்பட்டு இருந்தது.. 

அதை பார்த்த இன்ஸ்பெக்டர் “ மேடம் உங்களுக்கு வேற யார் மேலயாவது சந்தேகம் இருக்கா??” என்று கேட்டார்.

இல்லை என்பதை தவிர மிதிலாவால் என்ன கூற முடியும்   

“ யார் செய்திருப்பார்கள்.. யாரின் வேலை இது..” என்று யோசித்தவளுக்கு தலைவலி தான் பதில்.

இன்ஸ்பெக்டர் இருக்கும் பொழுதே இன்சுரன்ஸ் ஆபிசரும் வர அனைவருக்கும் பதில் கூறுவது மிதிலாவின் பொறுப்பானது.. சளைக்காமல் பதில் கொடுத்தவளை விழி விரித்து பார்த்து கொண்டு இருந்தான் ரகுநந்தன்.. ஏனோ மிதிலாவின் வாடிய முகமும் சோர்ந்த கண்களுமே அவனை உறுத்தி எடுத்தது..

ஒருவழியாக அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து வீட்டிற்கு வந்து சேர வெகு நேரம் ஆனது.. ஜெகதாவை பார்த்த மிதிலா தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.. அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.. ரகுநந்தன் தான் ஏதோ பேச வாய் திறந்தான் ஆனால் ஜெகதா

 “ அவளுக்கு நீ தான் வாயா ??? அவ பேசமாட்டாளா??” என்றார்.. அவன் அமைதியாகிவிட்டான்..

மிதிலா நிமிர்ந்து “ பாட்டி…” என்றால் கண்ணில் நீரோடு..

“ என்ன எதுக்கு இந்த கண்ணீர்??” சற்று காரமாகவே வினவினார்..

“ இல்லை பாட்டி.. ஐம் சாரி.. நான்.. இது.. எப்படி “ என்று திக்கி திணறினாள்..

“ ம்ம் நான் உன்னை இப்படி வளர்க்கலையே??” என்றார் ஒருமாதிரி..  மிதிலா பதில் சொல்ல தெரியாமல் ஜெகாதவையே பார்த்தபடி அமர்ந்து இருந்தாள்..

“ என்ன மிதிலா?? ஏன் இந்த அமைதி.. அப்போ என்னை நீ புருஞ்சுகிட்டது இவ்வளோ தானா ?? உன்னை நான் எவ்வளோ தைரியமா வளர்த்தேன். ஆனா இந்த ஒரு பிரச்சனைக்கே நீ இப்படி ஓய்ஞ்சு போய் வந்திருக்க?? வாழ்கையில எதிர் பார்க்காத நேரத்தில் தான் எல்லாமே நடக்கும். ஆனா நாம் எப்பயும் எல்லாத்துக்கும் தயாரா இருக்கணும்.. உன்னை அங்க பொருப்பில வைக்கும் போதே இது மாதிரி பிரச்சனையை சந்திக்கிற அளவு உன் மனசுக்கு திடம் வந்து இருக்கனும்..” என்றவரின் குரலில் அதற்கு மேல் கடுமை ஒலிக்கவில்லை..

மிதிலாவின் தலையை வருடி “ வாழ்கையில இன்னும் எத்தனையோ பிரச்சனைகள் வரும் மிதிம்மா.. இதென்ன சில நஷ்டம் அவ்வளோதான்.. அதை நம்ம சரி பண்ணிடலாம்.. ஆனா அதுக்காக நம்ம மனசை நம்ம இழந்திட கூடாது.. தைரியமா இருக்கனும்.. எந்த ஒரு பிரச்சனைக்கும் கண்டிப்பா தீரவு இருக்கும்.. உனக்கு நாங்க எல்லாம் இருக்கோம் அப்புறம் என்ன.. போ.. போய் கொஞ்ச நேரம் தூங்கு.. நாளைக்கு காலையில என்ன பண்ணணுமோ அதை பண்ணலாம்..எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்..” என்று கூறி அவளை அனுப்பினார்..

பின்னே கோகிலாவும் செல்ல, ரகுநந்தனும், ஜெகதாவும் தனித்து இருந்தனர்..

“ சொல்லு நந்து.. என்ன நடந்தது…??”

“ யாருன்னு தெரியலை பாட்டி.. பற்பஸா தான் பண்ணிருக்காங்க.. சிசிடிவி வயர் கட் ஆகியிருக்கு.. நாளைக்கு மறுபடியும் வொர்கர்ஸ என்கொயரி பண்ணுவாங்க.. பார்க்கலாம் பாட்டி. பட் பெரிய பிரச்சனை இல்லை.. ஆனா மிது தான் ரொம்ப பீல் பண்ணுறா. அவளுக்கு கொடுத்த பொறுப்பை சரியா செய்யலைன்னு நினைக்கிறா” என்றான்..

“ அது எனக்கும் தெரியும் நந்து.. அவளோட ஒவ்வொரு அசைவுக்கும் எனக்கு அர்த்தம் தெரியும்.. விடு காலையில எழும்போது சரியாகிடுவா.. இந்த பிரச்சனை எல்லாம் முடியும் வரைக்கும் நீ அவ கூட இரு”

“ இதை நீங்க என்கிட்டே சொல்லனும்னு அவசியமே இல்லை பாட்டி.. மிது கூட நான் எப்பயும் இருப்பேன்“

“ சரி நீயும் போய் ரெஸ்ட் எடு..” என்று அவனையும் அனுப்பி வைத்தார்..

ஜெகதாவிற்கு மனதில் ஒரே யோசனையாக இருந்தது.. கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களாக இந்த ஆலையை நிர்வகித்து வந்திருக்கிறார்.. இது போன்ற சம்பவங்கள் நடந்தது இல்லை. தொழிலாளர் பிரச்சனை, வாடிக்கையாளர் பிரச்சனை அது இது என்று நடக்கும் தான்..

ஆனால் இது.. இதுவே முதல் முறை..

ஏனோ ஜெகதாவிற்கு விசாலத்தின் நினைவு வரவே இல்லை, ஏனெனில் இத்தனை வருட காலங்களில் அப்படி நடந்தது இல்லை அதனால் தான்..

இப்படி ஒவ்வொருவரும் தங்கள் யோசனையில் மூழ்கி இருக்க.. விதி தன் வேலையை செவ்வனே செய்ய ஆரம்பித்தது…                                                            

               

                    

                                         

 

Advertisement