Advertisement

அத்தியாயம் – 4
இப்படி மழை அடித்தால்
நான் எப்படி துணி துவைப்பேன்…
இத்தினி வெயில் அடித்தால்
நான் துணியை துவைத்தெடுப்பேன்…
எப்ப வேண்டுமானானும் உன்னை நனைத்து விடுவேன்… என மிரட்டிக் கொண்டிருந்த கருமேகங்களைக் கண்டு கவலையுடன் பாடிக் கொண்டிருந்தாள் யாழினி. அப்போது தான் வீட்டுக்குள் நுழைந்த இலக்கியன், யாழினியைத் தேடிக் கொண்டு வீட்டின் பின் பக்கம் வர பக்கெட்டில் துவைக்க வேண்டிய துணியை நனைத்து வைத்துவிட்டு மேகத்தைப் பார்த்து பாடிக் கொண்டிருந்தவளைக் கண்டு சிறிது நேரம் ரசனையுடன் பார்த்து நின்றவன் சிரித்தான்.
“மியாவ்வ்…” மெல்ல சத்தம் கொடுத்துவிட்டு அவள் திரும்பும் முன் தூணின் பின்னில் மறைந்து கொள்ள சட்டென்று திரும்பியவள் யாரையும் காணாமல் திகைத்தாள்.
“யாரா இருக்கும்… எல்லாரும்தான் மதனி வீட்டுக்குப் போயிட்டாங்களே… பூனை குரல் போலத் தெரியலியே…” என யோசித்தபடி சுற்றிலும் கண்ணால் துளாவியவள் கண்ணுக்கு கணவனின் சட்டையின் சிறுபகுதி காற்றில் ஆடுவது சிக்கிவிட, “ஆத்தி… இவருதானா… ம்ம்… கவனிச்சுக்கறேன்…” என்றவள் அங்கிருந்த குச்சி ஒன்றை எடுத்துக் கொண்டாள்.
“எந்தப் பூனையும் காணோமே… ஒருவேள, வீட்டுல யாருமில்லன்னு தெரிஞ்சு எவனாச்சும் திருட வந்திருப்பானோ… கைல மட்டும் சிக்கட்டும்… பூனையா இருந்தாலும் சரி, ஆனையா இருந்தாலும் சரி… குச்சியால மண்டைல ஒரே போடு…” வாய்விட்டு சொல்லிக் கொண்டே அவள் ஒரு அடி எடுத்து வைக்க கேட்டுக் கொண்டிருந்த இலக்கியன் மனசுக்குள் பதறினான்.
“அய்யய்யோ… ராட்சசி, ஒருவேளை யாருன்னு பார்க்காம  அடிச்சாலும் அடிச்சிருவாளோ…” என நினைத்தவன் சட்டென்று அவள் முன்னில் பிரசன்னமானான்.
“அட, நீங்க எப்ப வந்திங்க… இருங்க, ஒரு திருட்டுப் பூனை வீட்டுக்குள்ள நுழைஞ்சிருக்கு… அதை கவனிச்சிட்டு வரேன்…” என்றபடி அவள் தேட அவன் முழித்தான்.
“அது…வந்து… கண்ணம்மா, நான்தான் அப்படி கூப்பிட்டேன்…”
“என்னது நீங்களா… நான் நிஜமாலுமே பூனை தானோன்னு நினைச்சுட்டேன்…” என்றாள் சிரிப்புடன்.
“அது… சும்மா, தனியா இருக்கும்போது சட்டுன்னு சத்தம் கேட்டா நீ பயப்படுவியான்னு பார்த்தேன்…”
“ஓ… டெஸ்ட்டிங்கா…”
“ம்ம்… சரி, நீ இன்னும் கிளம்பாம என்ன பண்ணிட்டு இருக்க… அக்கா வீட்டுக்குப் போகணும்ல…”
“கொஞ்சம் வெயில் இருந்துச்சு… அதான் யூனிபார்ம் எல்லாம் துவைச்சுடலாம்னு பார்த்தேன்… இப்ப மறுபடி மழை வர போல இருக்கு…” என்றாள் எரிச்சலுடன்.
“மழைக்காலத்துல அப்படி தான இருக்கும்… நைட்டு துவைச்சு பான் காத்துல போட்டுக்கலாம்… இப்ப கிளம்பு…”
“ம்ம்… சரிங்க… உங்களுக்கு காபி வேணுமா…”
“வேண்டாம், அக்கா வீட்டுல போயி குடிச்சுக்கலாம்… நீ சீக்கிரம் வா…” என்றான் இலக்கியன்.
“இதோ, பத்தே நிமிஷம்…” என்றவள் அவர்கள் அறைக்குள் நுழைந்து கொள்ள இலக்கியன் ஹாலில் காத்திருந்தான்.
கல்யாணம் முடிந்து இரண்டு வாரம் முடிந்திருந்தது. பொங்கல் விடுமுறை முடிந்து நான்கு நாட்கள் மேலும் பள்ளிக்கு விடுமுறை எடுத்திருந்தாள் யாழினி.
மறுவீடு விருந்து, முக்கியமான உறவுகளின் வீட்டில் விருந்து என்று நாட்கள் கழிய, யாழினி பள்ளிக்கு செல்லத் தொடங்கி இருந்தாள். வெள்ளிக் கிழமை பள்ளி முடிந்து இலக்கியன் வீட்டுக்கு அழைத்து வந்தான்.
இலக்கியனின் மூத்த அக்கா கிருபாவின் மகள் பெரியவளாகி இருந்தாள். மாமனோடு அத்தை முறைக்கு இவளும் அங்கே செல்ல வேண்டுமென்பதால் இவளைத் தயாராக சொல்லி காத்திருந்தான்.
பள்ளியில் தோழியரின் கிண்டல் அவளை எரிச்சலடைய வைத்தது. அவர்களுடன் ஆசிரியர்களும் நக்கலாய் விசாரிக்க இவளுக்கு கல்யாணம், கணவன் மீது கோபமாய் வந்தது.
“ஏய்… யாழினி, படிக்கும்போதே கல்யாணம் பண்ணிட்டு வந்துட்ட… அவ்வளவு அவசரமா…” ஒருத்தி கேட்க இவளது முகம் சுருங்கியதைக் கண்ட உமா தான் பதில் சொன்னாள்.
“ஏய், அவ வீட்டுல அவசரமாப் பண்ணி வச்சா அவ என்ன பண்ணுவா… ஓவரா கிண்டலடிக்காம போங்க…”
“யாழினி, அப்புறம், அந்த விஷயம் எல்லாம் நடந்திருச்சா…” வேறொருத்தி ஆவலுடன் இவள் தோளைப் பற்றிக் கேட்க, “எந்த விஷயம்…” என்றாள் மற்றொருத்தி.
“அதான்டி… அந்த மேட்டர் விஷயம்… கல்யாணம் முடிஞ்சதும் நைட்டு ஏற்பாடு பண்ணுவாங்களே…”
“ஓ… அதுவா… அதெல்லாம் முடியாமயா இருக்கும்…” என்றவளின் பார்வை இவளை உடலெங்கும் அளவிட கடுப்புடன் முறைத்தவள் எழுந்தாள்..
“இப்ப என்ன தான்டி, உங்களுக்குத் தெரியணும்…”
“அதான்டி, அந்த சம்திங் மேட்டர்லாம் முடிஞ்சிருச்சா… எப்படி இருந்துச்சு…” என்றாள் கண்ணை சிமிட்டி. அந்த அரைகுறை வயதுக்கே உரித்த அரைகுறை ஆர்வத்துடன் கேட்டாள்.
“எல்லாம் முடிஞ்சிருச்சு… எண்ணிப் பத்து மாசத்துல புள்ள பெத்துக்குவேன்… போதுமா… போயி வேலையைப் பாருங்க…”
“ஏன் யாழினி கோச்சுக்குற… நம்ம செட்டுல உனக்கு தான முதல்ல கல்யாணம் ஆச்சு… அதான் தெரிஞ்சுக்கலாம்னு ஒரு ஆர்வத்துல கேட்டோம்…”
“நல்ல ஆர்வம் தான்டி… அடுத்த வாரம் மிட்டர்ம் டெஸ்ட் தொடங்குது… அதுல உனக்கு எந்த சந்தேகமும் இருக்காதே… இந்த மாதிரி விஷயத்துல தான் ஆர்வம் எல்லாம்…” உமா சொல்லவும் அவள் அலட்சியமாய் முகத்தை திருப்பினாள்.
“இவ ஒருத்தி… படிக்கறதை இத்தன வருஷமா பண்ணிட்டு தான இருக்கோம்… இது அப்படியா…”
“இப்படியே பேசிட்டு இருந்த, அப்புறம் அவ புள்ள வந்து உன்னோட இதே ஸ்கூல்ல படிக்கும்… போயி படிச்சு பாசாகுற வேலையைப் பாருங்கடி…” என்று உமா தோழிகளை அதட்டி அனுப்பினாள்.
“ப்ச்… இதான் இப்ப எனக்கு கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன்… ஆளாளுக்கு கிண்டல் பண்ணுறாங்க பாரு…”
“அதுக்கு இனி என்ன பண்ண முடியும் யாழினி… இதெல்லாம் நம்ம கைலயா இருக்கு… எப்படியோ உன்னை இந்த வருஷம் முடிக்க சொல்லி அனுப்புனாங்களே, அந்த வரை சந்தோசம்…”
“ம்ம்… இருந்தாலும் இவங்க எல்லாரும் நான் என்னமோ கல்யாணத்துக்குப் பறக்குற போல நக்கலாப் பேசவும் கோபமா வருது…” என்றாள் முகத்தை சுருக்கி.
“பேசறவங்களை எப்பவும் தடுக்க முடியாது… .இன்னைக்கு உன் விஷயம் பேசுவாங்க… நாளைக்கு இன்னொருத்தங்க… அவங்களுக்கு பேசிட்டே இருக்கணும்… இதெல்லாம் யோசிச்சு நீ பீல் பண்ணாத… உன் அப்பா, அம்மாவை விட வேற யாரு உனக்கு நல்லது யோசிக்க முடியும்… கிடைச்ச வாழ்க்கையை சந்தோஷமா ஏத்துகிட்டு நிம்மதியா வாழற வழியைப் பாரு…” என்றாள் உமா பெரிய மனுஷி போல.
அவளை ஆச்சர்யத்துடன் பார்த்த யாழினி, “ஏய்… நீ என்னடி பெரிய மேதாவி போலப் பேசற…” என்றாள் சிரிப்புடன்.
“தெரியல யாழினி… உனக்கு கல்யாணம் ஆனதும் நாம எல்லாம் பெரிய பொண்ணு ஆகிட்டோம்னு ஒரு நினைப்பு வந்திருச்சு… உன் அப்பா, அம்மா நிலைல, உன் நிலைல இருந்து யோசிச்சுப் பார்த்தேன்… இப்படி தோணுச்சு…”
சொன்ன தோழியை மெச்சுதலாய் பார்த்துக் கொண்டாள்.
“அண்ணாவைப் பார்த்தா ரொம்ப நல்லவரா, அன்பானவரா தெரியறார்… எப்ப இருந்தாலும் நமக்கு கல்யாணம் பண்ணி வைக்க தான் போறாங்க… படிக்க வச்சு வேலைக்கும் அனுப்ப மாட்டாங்க… அப்புறம் கிடைச்ச வாழ்க்கையை சந்தோஷமா ஏத்துகிட்டு வாழறது தான சரி…”
“பார்றா… என் எருமை எவ்வளவு அழகா, பொறுப்பா பேசுது…”
“ஹூக்கும்… இவ்வளவு ஆன பிறகும் பொறுப்பா யோசிக்கலேன்னா எப்படி… சரி, வா படிக்கலாம்… காலேஜ் போறமோ இல்லியோ, நமக்கு மார்க்கு முக்கியம்  பிகிலு…” என்று சிரித்த உமாவின் அருகாமையில் மனதுக்கு ஆறுதலாய் உணர்ந்த யாழினி படிக்கத் தொடங்கினாள்.
அதற்குப் பிறகும் சில நாட்கள் அவளை வம்பு செய்த தோழியர் பிறகு மிட்டர்ம் தொடங்கவும் படிப்பில் பிசியாக இவளுக்கும் சற்று நிம்மதியாய் இருந்தது.
படிக்க வசதியாய் இருக்கட்டும் என்று ஒரு வாரம் அவளது வீட்டுக்கு அன்னையிடம் சொல்லி அனுப்பி வைத்தான் இலக்கியன். இன்று தான் கடைசி டெஸ்ட் முடிந்து பள்ளியில் இருந்து அவர்கள் வீட்டுக்கு அழைத்து வந்தான்.
இவளைத் தயாராக சொல்லிவிட்டு ஒரு வேலையை முடிக்க சென்றவன் திரும்பி வந்தபோது தான் யாழினி துணி துவைப்பதற்காய் மழையிடம் டீல் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு சிரித்தான்.
வெளிர் மஞ்சள் நிறத்தில் சிவப்புக் பூக்கள் தெளித்த சேலை ஒன்றை உடுத்துக் கொண்டு வெளியே வந்தாள் யாழினி.
“நான் ரெடி, கிளம்பலாமா…”
அலைபேசியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்த இலக்கியனின் கண்கள் நிமிர்ந்து பார்க்கவும் பிரகாசித்தது. எளிமையாய் புறப்பட்டாலும் அவளது மெலிந்த தேகத்தை தழுவிய புடவையில் அழகாய் மிளிர்ந்தாள்.
கணவனின் கண்கள் ஆர்வத்துடன் தன் மேனியை தழுவுவதைக் கண்டவள் கூச்சத்துடன் குனிந்து கொண்டாள்.
சட்டென்று எழுந்தவன், “ஒரு நிமிஷம்…” என்றுவிட்டு தனது டவலை எடுத்து அவள் கழுத்தில் இருந்த அதிகப்படியான பவுடரைத் துடைக்க அவளுக்கு படபடப்பாய் இருந்தது.
அவள் முகத்தையே ஆசையுடன் பார்த்தவன், “கிளம்பலாமா…” எனவும் தலையாட்டினாள்.
“வா…” என்றவன் சட்டென்று அவள் கையைப் பிடித்து அழைத்துச் செல்ல திகைப்புடன் தொடர்ந்தாள் யாழினி.
யாழினி அங்கிருந்த ஒரு வாரமும் இலக்கியன் ஒரு தோழமையுடன் நடந்து கொண்டானே தவிர கணவன் என்ற உரிமையை எல்லாம் அவளிடம் காட்டியதில்லை. இப்போது அவனது முதல் தொடுகை தேகத்தில் சிலிர்ப்பைக் கொடுக்க சிறு நாணத்துடன் அவனது கைகளுக்குள் அடங்கி இருந்த தன் கரத்தை நோக்கியபடி தொடர்ந்தாள் யாழினி.
கிருபா மதனி வீட்டில் குடும்பத்தினர் எல்லாரும் கூடியிருக்க இவர்களும் அந்த சோதியில் ஐக்கியமாகினர்.
“என்ன அத்தை, உங்க புது மருமக வேலை எல்லாம் செய்யுறாளா…” இலக்கியனின் மாமா மகள் ஒருத்தி கேட்க, “ஏன்… நீ வந்து வேலை செய்யப் போறியா…” என மனதுக்குள் நினைத்தாலும் யாழினி அமைதியாய் கவனித்துக் கொண்டிருந்தாள்.
“சின்னப் பொண்ணு தான… சொல்லிக் கொடுத்தா எல்லாம் பழகிட்டுப் போறா… படிப்பு முடியட்டும்… அப்புறம் எல்லாம் செய்துக்குவா…” என்றார் பர்வதம்.
“ஆத்தி, படிப்பு முடிஞ்சா என்னை புல் டைம் வேலைக்காரி ஆக்கிருவாங்க போலருக்கே…” என நினைக்கும்போதே, “ஏன் யாழினி… எப்ப உனக்கு பரீட்சை…” என்றாள் அத்தை மகள்.
“இன்னும் ரெண்டு மாசத்துல க்கா…” இவள் பதில் சொல்லவும், தலையாட்டினாள்.
“ஸ்கூலு முடிஞ்சதும் நல்லா சத்தா சாப்பிடக் கொடுத்து இவ உடம்பைத் தேத்தி விடு அத்தை… ரொம்ப ஒடிசலா இருக்கா… கொஞ்சம் புஷ்டிப்பா இருந்தாத் தான நல்லாருக்கும்…” என்று அவள் சொல்ல,
“அது சரி, என்னை என்ன சினிமாவுல நடிக்க வைக்கவா  போறீங்க…” என இவள் மனதில் நினைக்கும்போதே பர்வதம் மருமகளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “அதெல்லாம் ஒரு புள்ள பொறந்தா உடம்பு தானா வந்துட்டுப் போகுது… ஆரோக்கியமா இருந்தாப் போதும்… எதுக்கு மதமதன்னு உடம்பு எல்லாம்…” என சொல்ல, “சபாஷ் அத்தை, சரியா யோசிக்கறீங்க…” என சர்டிபிகேட் கொடுத்துக் கொண்டாள்.
“யாழினி, இந்தாம்மா… தலையில பூவை வச்சுக்க…” என்று மருமகளுக்கு கட்டிக் கொண்டிருந்த பூவில் சிறிது கொடுத்து வைக்க சொல்லிவிட்டு உள்ளே சென்றார். இரவு வரை அங்கே பேசிக் கொண்டு இருந்துவிட்டு அனைவரும் அவர்கள் வீட்டுக்குக் கிளம்பினர்.
கிருபாவின் கணவர் அரசுத் துறையில் நல்ல வேலையில் இருந்தார். அடுத்த வாரம் மண்டபத்தில் சிறப்பாய் சீர் வைக்க தீர்மானம் செய்திருந்தனர்.
விசேஷத்துக்கு வந்த சொந்தங்கள் புதிதாய் வந்த யாழினியைப் பற்றி அதிகம் விசாரிக்கவும், இலக்கியனின் அண்ணிக்கு சற்று எரிச்சலாய் இருந்தது.
யாழினியும் அத்தை சொல்லும் சின்னச் சின்ன வேலைகளை ஆவலோடு செய்து கொண்டு அவர் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தாள். எனவே பர்வததிடம் சின்ன மருமகளைப் பற்றி அதிகம் விசாரித்தனர்.
எங்கே தன்னை விட இப்போது வந்த மருமகளை அத்தை தலையில் வைத்துக் கொண்டாடுவாரோ என்ற அச்சம் அண்ணியின் மனதில் பொறாமைத் தீயை பற்ற வைத்தது.
கிருபாவின் வீட்டிலேயே இரவு உணவை முடித்து வந்திருந்ததால் அனைவரும் உறங்க சென்றனர்.
“யாழினி, இலக்கியனுக்கு ஒரு கிளாஸ் பால் கொடும்மா… அவன் அங்க சரியாவே சாப்பிடல…” பர்வதம் சொல்ல “சரி அத்தை…” என்றவள் இதமான சூட்டில் பாலை சூடாக்கி எடுத்துக் கொண்டு மாடிக்கு சென்றாள்.
இலக்கியனின் வீடு சற்றுப் பெரியது. மூன்று நிலைகளைக் கொண்டது. கீழே இரண்டு படுக்கை அறை, ஹால், அடுக்களை, இரண்டாவது நிலையில் ஒரு படுக்கை அறை, ஹால், மேல் நிலையில் ஒரு படுக்கை அறை ஹாலைக் கொண்டது. மேல் நிலையில் தான் இலக்கியனின் அண்ணனும், அண்ணியும் இருந்தார்கள்.
இலக்கியனுக்கு கல்யாணம் முடிவானதும் தான் அவர்கள் வாடகைக்கு கொடுத்திருந்ததில் ஒரு வீட்டைக் காலி செய்ய சொல்லி அதைப் புதுப்பித்து அங்கே மாறினர். இரண்டாவது நிலையில் இலக்கியனும், யாழினியும்… கீழே தான் பர்வதமும் இளைய மகனும் இருந்தார்கள். அவர்கள் தெருவிலேயே இவர்கள் நிறைய வீட்டை வாடகைக்குக் கொடுத்திருந்தனர்.
யாழினி பாலை எடுத்துக் கொண்டு மாடிக்கு செல்ல இலக்கியன் காதில் இயர் போனை மாட்டிக் கொண்டு கண் மூடிப் படுத்திருந்தான்.
கட்டில் அருகே சென்றவள், “பால்…” என்று சொல்ல அவனுக்குக் கேட்கவில்லை.
“ஹூக்கும்… அப்படி என்ன தூங்கற நேரத்துல பாட்டு…” என நினைத்தவள் சூடாய் இருந்த பால் கிளாஸை அவன் கையில் வைக்க அதிர்ந்து கண்ணைத் திறந்தான் இலக்கியன்.
“ஸ்ஸ்…” என்றவன் தனக்கு வெகு அருகில் நின்றவளைக் கண்டு, “என்ன…” என்று கேட்க, “பால்…” என்று நீட்டினாள்.
“கூப்பிட வேண்டியது தான…” என்றான் எரிச்சலாய் இருந்த கையைத் துடைத்துக் கொண்டு.
“கூப்பிட்டேன், உங்களுக்குக் கேட்கலை… அதான்…”
“அதுக்காக சூடு வைப்பியா…” என்றான் கடுப்புடன்.
“அவ்ளோ சூடாவா இருந்துச்சு… லைட்டா தான சூடு பண்ணேன்…” என்றவள் தனது கையில் வைத்துப் பார்த்து, “ஆ…” என்று இழுத்துக் கொண்டாள்.
“சாரிங்க… லைட்டா தான் சூடு பண்ணேன்… டம்ளர் சூடாகிருச்சு போலருக்கு…” என்றாள் பயத்துடன்.
அவள் முகத்தில் தெரிந்த பதட்டத்தைக் கண்ட இலக்கியன், “ஒருவேள, எனக்கு சூடு சொரணை இருக்கோன்னு டெஸ்ட் பண்ணறியோன்னு நினைச்சேன்…” சலிப்புடன் சொல்லிக் கொண்டே பால் கிளாசை வாங்கி ஒரே மூச்சில் குடித்துவிட்டு கொடுத்தான்.
உண்மையிலேயே அவளுக்கு மனதுக்கு கஷ்டமாக இருக்க, “சாரிங்க… நிஜமாலுமே இவ்ளோ சூடு இருக்கும்னு தெரியல…” என்றாள் வருத்தத்துடன்.
அவளது கண்களில் முணுக்கென்று கண்ணீர் எட்டிப் பார்க்க அவனே பதறிப் போனான்.
சட்டென்று அவள் கையைப் பற்றி அருகில் அமர்த்தியவன், “ஹேய் கண்ணம்மா, என்ன இதுக்குப் போயி அழுதுட்டு… தெரியாமப் பண்ணது தானே… போகட்டும் விடு…” என்றான்.
“இல்ல, தெரியாமன்னாலும் நான் அப்படிப் பண்ணிருக்கக் கூடாது… வீட்ல எங்கண்ணன் கிட்ட விளையாடற போலப் பண்ணிட்டேன்… சாரி…” என்றாள் வருந்தும் குரலில்.
தனக்கு அருகில் அமர்ந்து சிறு பிள்ளை போல் வருந்தும் மனைவியின் முகத்தை ரசித்தவன், “கண்ணம்மா, தப்பு பண்ணினா இப்படியா சாரி கேப்பாங்க…” என்றான் சிரிப்போடு.
சட்டென்று நிமிர்ந்தவள், “வேற எப்படி கேட்கணும்… நாங்க இப்படிதானே கேப்போம்…” என்றாள் புரியாமல்.
“ம்ம்… நீ சொல்லறது மத்தவங்களுக்கு சரிதான்… ஆனா புருஷன் கிட்ட இப்படியா மன்னிப்பு கேக்கறது…” அவன் சொல்லவும் யோசித்தவள், “ஒருவேளை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க சொல்கிறானோ…” என நினைத்தாள்.
“காலில் விழுந்து கேக்கணுமா…” கண்கள் விரிய உதடுகள் குவித்து காதில் அணிந்த குட்டி ஜிமிக்கி அசைய கேட்டவளின் அருகாமை அவனை மயக்கியது.
“எழுந்திரு…” என்றான் சற்று மிரட்டும் குரலில்.
அவள் பட்டென்று எழுந்து நின்று மிரண்டு விழித்தாள்.
“எனக்கொரு முத்தம் குடு…” அவன் ஏதோ தண்டனை சொல்லப் போகிறான் என நினைத்தவள் அவன் கேட்டதில் திகைத்து நாணத்துடன் குனிந்து கொண்டாள்.
“கேட்டது காதுல விழுந்துச்சா இல்லியா… நான் எதாச்சும் தப்புப் பண்ணினா உனக்கு முத்தம் குடுப்பேன்… நீ தப்பு பண்ணினா எனக்கு முத்தம் கொடுக்கணும்… இதான் நம்ம டீல்… சரியா… முத்தம் கொடு…” என்றதும் திணறினாள்.
மெல்ல அவனை நெருங்கியவள் அவனது கன்னத்தில் பட்டும் படாமலும் மெல்ல இதழ் ஒற்றி எடுத்தாள்.
“என்ன கண்ணம்மா இது… இதான் உங்க ஊருல முத்தமா… ஒரு முத்தம் கூட உனக்குக் கொடுக்கத் தெரியாதா…” என்றவன் சட்டென்று நின்று கொண்டிருந்தவளை அருகில் இழுத்து அவளது முகத்தை நோக்கிக் குனிய நாணத்தில் கண்களை இறுக மூடிக் கொண்டாள் யாழினி.
அவளது இதழ்கள் நடுங்குவதைக் கண்டவன் ரசனையுடன் நோக்கிவிட்டு விரலால் வருட அவளுக்குள் என்னென்னவோ தோன்றியது. அவனது மூச்சின் வேகத்தில் கண் மூடி நின்றவளின் கன்னத்தில் அழுத்தமாய் இதழ் பதிக்க தேகம் உணர்ச்சி வேகத்தில் நடுங்குவதை உணர்ந்து விலகினான்.
கவிதைத் தொகுப்பின் அழகிய
தலைப்பாம் அவள் பெயர்…
தென்றல் தொட்டே
வெட்கம் கொள்ளும் மலரென
என் மூச்சு பட்டே
பேச்சிழக்கும் பாவையிவள்…
இவள் என்னவள்…

Advertisement