Advertisement

அத்தியாயம் – 2
ஞாயிற்றுக் கிழமை.
அனைவருக்கும் அன்று விடுமுறை என்றாலும் வீட்டில் ஓய்வில்லாத பெண்களைப் போல சூரியனும் தன் வேலையில் மும்முரமாய் இருந்தான். தனக்கு மட்டும் ஓய்வில்லாத கோபத்தில் அன்று சற்று அதிகமாகவே உக்கிரமாய் இருக்க அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் பெருமூச்சை வெளியேற்றிக் கொண்டே வீட்டுக்குப் பின்னிலிருந்த வேப்ப மரத்தடியில் அமர்ந்தார் நடேசன்.
“உஸ்… என்னா வெயிலு… இதுல அடிக்கடி கரண்டை வேற ஆப் பண்ணிப் போடறாங்க…” அவரைத் தொடர்ந்து வெளியே வந்த வசந்தாவின் கையில் பாக்கு வெற்றிலைத் தட்டு இருக்க கணவர் அருகே அமர்ந்தவர், அளவாய் வெற்றிலையில் சுண்ணாம்பு தடவி பாக்கு வைத்து மடித்துக் கொடுக்க வாங்கி வாயில் போட்டுக் கொண்டார்.
“என்னங்க, மாப்பிள்ள வீட்டுல இப்படி பொசுக்குன்னு பொண்ணைப் பிடிக்கலன்னு சொல்லிட்டாங்க…”
“ம்ம்… யாருக்கு யார்னு கடவுள் போட்ட முடிச்சு… நாம என்ன பண்ண முடியும்…” என்றார் நடேசன். சற்று முன்னர் தான் யாழினியின் அண்ணன் வீட்டுக்கு வந்து மாப்பிள்ளை வீட்டார் சொன்ன விஷயத்தை சொல்லிப் போயிருந்தான்.
அதைக் கேட்டதும் வசந்தாவின் மனம் வருந்த, யாழினிக்கு தான் மிகவும் சந்தோஷமாய் இருந்தது.
“எப்படியோ, இனி கொஞ்ச நாளைக்கு கல்யாணம்னு பேச்செடுக்க மாட்டாங்க… நாம நிம்மதியா பரிட்சைக்குப் படிக்கலாம்… பிள்ளையாரப்பா, என் வார்த்தையைக் காது கொடுத்துக் கேட்டியே…” என மனதுக்குள் கடவுளிடம் நன்றியும் சொல்லிக் கொண்டாள்.
“ஏய், அது என்னோடது… குடுடி…” மாலினி கத்த ஓடி வந்து தந்தை அருகில் அமர்ந்து கொண்டாள் யாழினி.
“என்ன கண்ணம்மா, அக்காவோடது என்னத்த தூக்கிட்டு வந்த…” என்றார் மகளிடம் கரிசனத்துடன்.
“பாருங்கப்பா… நெயில் பாலீஷ் அடிக்கறதுக்கு கேட்டா அக்கா குடுக்க மாட்டேங்கறா…” குற்றப் பத்திரிகை வாசித்தாள்.
“ஹூக்கும்… எத்தன நெயில் பாலீஷ் பாட்டில் உன்னால வீணாப் போயிருச்சு… அப்பா, இவளைப் பத்தி உங்களுக்குத் தெரியாது… கை, கால் எல்லாம் போட்டு முடியுற வரைக்கும் பாட்டிலைத் திறந்தே தான் வச்சிருப்பா… காத்து பட்டா கட்டியாகிரும்னு சொன்னாலும் கேக்க மாட்டா… இது புது நெயில் பாலீஷ்… நானே வேணும்னா போட்டு விடறேன்… குடுக்க சொல்லுங்கம்மா…” அன்னையையும் துணைக்கு அழைத்தாள் மாலினி.
“ஏய். அவதான் போட்டு விடறேன்னு சொல்லுறாளே, குடேன்டி… எருமைமாடு கணக்கா வளர்ந்தாச்சு… இன்னும் ஒண்ணுக்கொண்ணு அடிச்சுட்டு கிடக்குதுங்க…”
“ஹூக்கும்… எரும மாடுன்னா அடிச்சுக்கக் கூடாதா… இந்த அம்மா வேற அவளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு…” என நினைத்தாலும் அன்னை சொன்னபிறகு கொடுக்காமல் இருந்தால் அவரது வேறொரு முகத்தைக் காணவேண்டும் என்ற பயத்தில் அக்காவிடம் நீட்டினாள்.
இருவரும் அங்கேயே அமர்ந்து நகத்துக்கு பாலீஷ் போடத் தொடங்கினர். சின்ன மகளையே பார்த்துக் கொண்டிருந்த வசந்தாவுக்கு மீண்டும் மாப்பிள்ளை வீட்டார் சொன்னது நினைவுவர அதை ஜீரணிக்க முடியாமல் கேட்டார்.
“என் பொண்ணுகளுக்கு என்ன, ராசாத்தி மாதிரி இருக்காங்க… சின்னவ கறுப்புதான்… இருந்தாலும் அழகா தான இருக்கா… அவங்களுக்கு ஏன் இவளைப் பிடிக்காமப் போயிருச்சு…”
அன்னையின் நம்பிக்கையைக் கண்டு, “ஹூக்கும், இவங்க பெத்தது எல்லாம் ஐஸ்வர்யா ராயும், சுஷ்மிதா சென்னும் பாரு… மாப்பிள்ளைக்குப் பிடிக்கலேன்னா போகட்டும்… யாருக்கென்ன…” யாழினிக்கு சிரிப்பு வந்தது.
“ஹூம்… பெரிய வீட்டு சம்மந்தம்… புள்ள கல்யாணம் முடிஞ்சு போனா நல்லாருப்பான்னு ஆசையா இருந்தேன்… இப்படி வேண்டாம்னு சொல்லி போட்டாகளே…” அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியாமல் புலம்பினார். அதைக் கேட்டு யாழினிக்கு கூட அன்னையைக் கண்டு பாவமாய் இருந்தது.
“அச்சோ, இந்த அம்மா ரொம்ப எதிர்பார்த்துட்டாங்க போலவே… பாவம்…”
“விடு… வசந்தா… இது இல்லேன்னா இதை விட நல்ல சம்மந்தம் நம்ம புள்ளைக்கு வரும்னு நினைச்சுக்க வேண்டியது தான்…” சமாதானம் சொன்னார் தந்தை.
“எந்த சம்மந்தமா இருந்தாலும் நான் படிச்சு முடிச்ச பிறகு வரட்டும்…” என யாழினி யோசிக்கையில் அவள் கையில் ஒரு அடி போட்டாள் மாலினி.
“ஏய், ஒழுங்கா கையை ஆட்டாம வைடி…” என்றதும், “ஆ…” என தடவிக் கொண்டே ஒழுங்காய் வைத்தாள்.
“அம்மா, நல்லவேளை, அந்த மாப்பிள்ளை தப்பிச்சார்னு நினைச்சுக்குங்க… அவரைப் பார்க்க ரொம்ப சாதுவா இருக்கார்… இவளை எல்லாம் அவரால மேய்க்க முடியாது…” மாலினி சொல்லவும் கை நகத்தை ஊதிக் கொண்டிருந்த யாழினி எழுந்து கொண்டு, “ஹூம்… உன்னையே ஒரு ஏமாளி கல்யாணம் பண்ண ஒத்துகிட்டார்… எனக்கு ஒரு சூனாப் பானா கிடைக்காமலா போயிருவான்…” என சொல்லிக் கொண்டே ஓட மாலினி துரத்தியபடி ஓடினாள்.
அதைக் கண்டு சிரித்த நடேசன், “இன்னும் சின்னப் பிள்ளையாவே இருக்கா… இப்போதைக்கு இந்த கல்யாணம் சரியாகாததும் நல்லதுக்கு தான்னு நினைச்சுக்க வசந்தா…” என்று புன்னகையுடன் சொல்ல கணவரை முறைத்தார்.
“நீங்க பேசாம இருங்க… உங்களுக்கு அடிக்கடி முடியாமப் போகுது… எப்படியாச்சும் எல்லாப் பிள்ளைகளையும் கட்டிக் கொடுத்துட்டா நானும் கொஞ்சம் நிம்மதியா இருப்பேன்… நம்ம பசங்க எல்லாம் தங்கச்சிங்களுக்கு பெரிசா செய்வாங்கன்னு எனக்கு நம்பிக்கை இல்லங்க…”
“ம்ம்… அதும் சரிதான்… எல்லாருக்கும் அவங்கவங்க வேலை… சரி, மாலினி கல்யாணம் முடியட்டும்… அப்புறம் வேற மாப்பிள்ளை பார்க்கலாம்…” என்று பேச்சை முடித்தார்.
அடுத்த நாள் பள்ளி செல்கையில், “ஏண்டி யாழினி, பெரிய வீட்டுல இருந்து உன்னைப் பார்க்க மாப்பிள்ளை வந்தாகளாம்…” உமா அவளிடம் விசாரித்தாள்.
“ம்ம்… வந்தான்… கண்டான்… சென்றான்… அவ்ளோதான்…”
“என்னடி, இப்படி சொல்லற… உனக்கு மாப்பிள்ளையைப் பிடிக்கலயா…” என்றாள் ஆர்வத்துடன்.
“யாருக்குத் தெரியும்… நான்தான் அவரைப் பார்க்கவே இல்லியே…”
“என்னடி சொல்லற… நீ பார்க்கலியா…” என்ற உமாவிடம்,
“எனக்கு இப்ப கல்யாணமே வேண்டாம்னு சொல்லறேன்… அப்புறம் மாப்பிள்ளைய எதுக்குப் பார்க்கணும்…” என்றாள்.
“அதில்லடி, பெரிய வீட்டு சம்மந்தமாச்சே…”
“ஏய் உமா… இப்ப எதுக்கு நீ இவ்ளோ விசாரிக்கற… நாளைல இருந்து ஸ்டடி லீவ் தொடங்குது… இன்னும் நாலு நாள்ல பரீட்சை… இப்ப இந்தக் கல்யாணம், காதுகுத்து பத்தி எல்லாம் நமக்கு பேச்சு தேவையா…” என்றவள் அதற்கு மேல் அதைப் பற்றி பேச விருப்பமில்லாதவள் போல் வாயை மூடிக் கொள்ள உமாவும் அமைதியானாள். அதற்கு மேல் கேட்டாலும் யாழினியிடம் இருந்து பதில் வராது.
வழக்கம் போல் உமாவின் தெரு வந்ததும் அவள் டாட்டா சொல்லி செல்ல, பாலை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தாள் யாழினி. வீட்டு முன்னில் இருந்த சின்ன டீக்கடையில், காபி டீ, வடை போண்டா என்று சின்ன அளவிலேயே வைத்திருந்தனர். இங்கே செய்யும் பதார்த்தங்களை நாலு தெரு தள்ளி மெயின் ரோட்டில்  இருந்த ஹோட்டலுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லுவர். அங்கே மெயின் என்றால் இங்கே சின்ன அளவில் அருகிலுள்ளவர்களுக்கு வேண்டி வைத்திருந்தனர்.
நாட்கள் நகர, யாழினி நல்லபடியாய் தேர்வு எழுதி முடிய கோடை விடுமுறை தொடங்கியது. அடுத்து மாலினியின் கல்யாணம் நெருங்கி இருக்கவே உறவுகளும் வந்து போக இருக்க யாழினி பிஸியாகி விட்டாள்.
அடுத்தநாள் அக்காவின் கல்யாணத்துக்கு அன்னை கொடுத்த சேலையை உடுத்துக் கொண்டு தயாரானாள் யாழினி. அவளது மூத்த அக்கா ரூபினியும் குடும்பத்தோடு வந்திருக்க இவளுக்கு சந்தோஷமாய் இருந்தது. மூத்த அக்காவுக்கு இவளை ரொம்பப் பிடிக்கும்… பெற்றொருக்குப் பிறகு அவள் தான் கண்ணம்மா, என்று வாய் நிறைய அழைத்து சின்னவளை நன்றாகப் பார்த்துக் கொள்ளுவாள்.
“கண்ணம்மா, நான் தலை சீவி விடறேன் வா…” அழகாய் ஜடையைப் பின்னலிட்டு நிறையப் பூ வைத்து கழுத்தில் கிடந்த அவளது சங்கிலியுடன் தனது நெக்லஸ் ஒன்றைப் போட்டு விட்டு அழகு பார்த்தவள், “என் கண்ணம்மா அழகு… சிரிச்சா, நாளெல்லாம் பார்த்திட்டு இருக்கலாம்…” என்று திருஷ்டி கழிக்க யாழினி சிரித்தாள்.
“அக்கா… நீ இப்படி சொல்லற… என்னைப் பார்க்க வந்த மாப்பிள்ள என்னடான்னா, நான் அழகா இல்லேன்னு ஓடியே போயிட்டார்…” என்றாள் நக்கலாக.
“அதத்தான் என்னால நம்ப முடியல… உன்னை எப்படிடி கண்ணு உள்ள ஒருத்தன் வேண்டாம்னு சொல்லுவான்…”
“ஒருவேள கறுப்பு அவருக்கு சேராதோ என்னவோ…” கிண்டலாய் இவள் சொல்லவும் காமினி சிரித்தாள்.
“நீ ஒரு கறுப்பு ஐஸ்வர்யா ராய் னு பாவம் அவருக்குத் தெரியல போல…” என சிரித்துக் கொண்டே கிளம்பினர். அக்காவுக்கு மூன்று வயதில் ஒரு மகன் இருந்தான். அவன் யாழினியைக் கண்டதும், “சித்தி… சூப்பர்…” என்று சொல்ல, அவன் கன்னத்தில் முத்தமிட்டு எடுத்துக் கொண்டாள்.
அனைவரும் மண்டபத்துக்கு செல்ல, சுற்றமும் நட்பும் வாழ்த்த கல்யாணம் நல்லபடியாய் முடிந்தது. மாலினியின் கணவன் சொந்தம் தான் என்பதால் இவளைக் கண்டதும், “அட யாழினி, சேலை எல்லாம் கட்டி அழகா இருக்க… பேசாம நான் உன்னைக் கட்டி இருக்கலாம் போல…” என்று விளையாட்டாய் சொல்ல மாலினி முறைத்தாள்.   
கல்யாணம் முடிந்து எல்லாரும் பேசிக் கொண்டிருக்க யாழினியின் அருகில் அமர்ந்திருந்த உமா தோழியின் கையை சுரண்டினாள்.
“ஏய் யாழினி, உன்னைப் பார்க்க வந்த பெரிய வீட்டு மாப்பிள்ளையைப் பார்க்கலேன்னு சொன்னியே… அதோ வர்றாங்க பாரு… அவுங்க தான்…” என்று சொல்ல, “என்னை வேண்டாம்னு சொன்ன அந்த மூஞ்சிய நான் எதுக்குப் பார்க்கணும்… நீயே பார்த்துக்க…” என்றவள் முகத்தைத் திருப்பிக் கொண்டு அங்கிருந்து எழுந்து சென்றாள்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்த இலக்கியன் முகத்தில் புன்னகை பரவியது. அவர்களின் பர்வதம் சவுண்டு சர்வீஸ் தான் அந்த மண்டபத்தில் மேடை அலங்காரம், சீரியல் பல்பு ஸ்டீரியோ செட் எல்லாம் செய்திருந்தனர்.
இலக்கியனைக் கண்ட காமினிக்கு, அதுதான் யாழினியைப் பார்க்க வந்த மாப்பிள்ளை என்று சொல்லவும் ஆவலுடன் நோக்கினார்.
“ம்ம்… பார்க்க நல்லாவும் இருக்கார்… நல்லவனாவும் இருக்கார்… ஆனா நம்ம புள்ளைய ஏன் வேண்டாம்னு சொல்லிருப்பார்…” என யோசித்தாலும் சபையில் கேட்பது நாகரீகமில்லை என்று கேட்கவில்லை.
அன்று பெண் வீட்டில் மணமக்களுக்கு சாந்தி முகூர்த்தம், அடுத்த நாள் விருந்து என்று முடிய மூன்றாவது நாள் மணமகன் வீட்டுக்கு அனைவரும் விருந்துக்கு சென்றனர்.
கல்யாணப் பரபரப்பு எல்லாம் முடிய மூத்த அக்காவும் ஒரு மாதம் அங்கே இருந்துவிட்டு ஊருக்குக் கிளம்பினார். அனைவரும் சென்றதும் தான் சின்னக்கா இல்லாமல் யாழினிக்கு மிகவும் போரடித்தது. மீதியுள்ள விடுமுறை நாட்களைப் புத்தகம் படித்தும் தோழி உமாவின் வீட்டுக்கு சென்று விளையாடியும் போக்கினாள்.
பனிரெண்டாம் வகுப்புக்கான பள்ளி தொடங்க மீண்டும் பழையபடி சந்தோஷமாய் ஓடத் தொடங்கினாள். யாழினிக்கு விளையாட்டில் மிகுந்த விருப்பம் இருந்ததால் கூடைப் பந்து, கைபந்து விளையாட்டுகளில் எல்லாம் சேர்ந்து கொண்டாள். படிக்கவும் மோசமில்லாமல் நாட்கள் அழகாய் நகர்ந்தன.
காலாண்டுப் பரீட்சை முடிந்திருக்க, மீண்டும் ஒரு நாள் கல்யாணப் பேச்சு வந்தது.
யாழினியின் சின்ன அண்ணன் வீட்டுக்கு வந்திருந்தான்.
“அம்மா… பெரிய வீட்டுல இருந்து நம்ம யாழினியைக் கட்டிக்க சம்மதம் சொல்லிருக்காங்க…” எனவும் அவளுக்கு கோபம் வந்தது.
“அன்னைக்கு வேண்டாம்னு சொல்லிட்டு இப்ப எதுக்கு மறுபடி சம்மதம் சொல்லறாங்க… ஒண்ணும் வேண்டாம்… நான் படிக்கறேன்… அம்மா, வேண்டாம்னு சொல்லிடுங்க மா…” என்றாள் கடுப்புடன்.
“நீ கம்முனு இரு… இப்படி ஒரு சம்மந்தம் வந்தும் தட்டிப் போயிருச்சேன்னு நான் எத்தன நாளா வருத்தப்பட்டுட்டு இருக்கேன்… இப்ப அவங்களா மனசு மாறி சம்மதம் சொல்லிருக்காங்க, நாம எதுக்கு வேணாம்னு சொல்லணும்…”
“அம்மா, அதுக்காக அன்னிக்குப் பிடிக்காத கறுப்பு இன்னைக்கு மட்டும் பிடிச்சிருமாக்கும்…” என்று மகள் கேட்க, “யாழினி… எல்லாம் எனக்குத் தெரியும்… பேசாம உள்ள போ…” என்ற அன்னையின் அதட்டலில் அவரது கோபத்தைப் புரிந்து கொண்டவள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு உள்ளே சென்றாள். வசந்தாவுக்கு கோபம் வந்தால் மட்டுமே மகளைப் பேர் சொல்லி அழைப்பார்.
அதற்குள் தந்தை நடேசனும் வீட்டுக்கு வந்துவிட்டார்.
“யார் செய்த புண்ணியமோ மறுபடி பெரிய வீட்டுல இருந்து நம்ம பொண்ணைக் கேட்டு வந்திருக்காங்க… காரணம் எல்லாம் கேட்டுட்டு இருக்காம சீக்கிரம் கல்யாணத்தைப் பேசி முடிச்சிடலாங்க…” என்றார் வசந்தா.
“சரிம்மா…” என்று வழக்கம் போல் மனைவி சொல்லே மந்திரம் என்று நடேசனும் தலையாட்டினார்.
யாழினியின் குடும்பத்தைப் பொறுத்தவரை அன்னை சொல் மிக்க மந்திரமில்லை… அவர் வார்த்தைகளே அங்கே தீர்மானம் என்பதால் அதற்கு மேல் தான் இனி என்ன பேசினாலும் எடுபடாது என்ற முடிவுக்கு வந்த யாழினியும், “என்னமோ போடா, அன்னைக்குத் தட்டிப் போற மாதிரி காட்டிட்டு, மறுபடியும் என்னை இந்த கல்யாணத்துல சிக்க வச்சிட்டியே விநாயகா…” என்று மனதுக்குள் சலித்துக் கொண்டு நடப்பது நடக்கட்டும் என்று இருந்து விட்டாள்.
“எப்படியாச்சும் இந்த வருஷத்தை கம்ப்ளீட் பண்ண அனுமதி வாங்கிக் கொடுங்க…” என்று அன்னையிடம் சொல்ல அவரும் மாப்பிள்ளை வீட்டில் சொல்லுவதாய் சொன்னார். 
இரு வீட்டாரும் பேசி முடிவெடுக்க அடுத்து வந்த நல்ல ஒரு வெள்ளிக்கிழமையில் கோவிலில் பொண்ணுக்குப் பூ வைத்து சம்மந்தத்தை உறுதி செய்யத் தீர்மானித்தனர்.
இரு வீட்டினரும் கோவிலில் நிறைந்திருக்க கல்யாணத்தை இரண்டு மாதம் கழித்து முடிவு செய்து தாம்பூலம் மாற்றி உறுதி செய்தனர். மாப்பிள்ளையின் சார்பாய் அவனது மூத்த அக்கா கிருபா பொண்ணுக்குப் பூ வைத்து விட்டார்.
யாழினியின் அருகே வந்த உமா, “ஏய்.. இப்பவாச்சும் மாப்பிள்ளை முகத்தைப் பார்ப்பியா, இல்லியா…” என்று கிசுகிசுக்க, தலை குனிந்து பொம்மை போல் நின்றிருந்தவள் மெல்ல நிமிர்ந்து கடைக்கண்ணில் அவளது கண்ணாளனைப் பார்த்தவள் திகைத்தாள்.
“ஆத்தி, மாப்பிள்ள கலரா, அழகா இருக்காங்களே… அதான்  கருவாச்சியான என்னை வேண்டாம்னு சொன்னாங்களோ, இப்ப மட்டும் எப்படிப் பிடிச்சுது…” என நினைத்தாலும் அமைதியான அவனது முகம் மனதில் ஒட்டிக் கொண்டது.
“இவன் எனக்கானவனா…” என்ற கேள்வியே பெருமையைக் கொடுக்க நாணத்துடன் மீண்டும் கடைக்கண்ணில் அவனைப் பார்த்தவளை நோக்கி மெல்ல கண்ணை சிமிட்டினான்.
அதை எதிர்பார்க்காதவள் சட்டென்று பார்வையை மாற்றிக் கொண்டு தலையைக் குனிந்து கொண்டாள். போட்டோகிராபர் அந்த நிகழ்ச்சியை தனது பிலிம் சுருளுக்குள் அடக்கிக் கொண்டிருந்தார். அதற்குப் பிறகு வாரம் ஒருமுறை மாப்பிள்ளை வீட்டில் இருந்து பொண்ணுக்கு பூ வைக்க வீட்டுக்கு வந்து சென்றனர் அவனது சகோதரிகள்.
கிருபா வீட்டுக்கு வரும்போதெல்லாம், “இப்படி சேலை கட்டாதே… இன்னும் கொஞ்சம் இறக்கிக் கட்டு… பிளவுஸ் எதுக்கு குளோஸ் நெக் போட்டிருக்க… கொஞ்சம் கழுத்துக்குப் பின்னாடி இறக்கி வை… புருவத்தை பிளக் பண்ணிக்க… பவுடர் போட்டுக்க… இப்படி இருந்தா தான் எங்க வீட்டுல எல்லாருக்கும் பிடிக்கும்…” என்று கூற யாழினிக்கு அதைக் கேட்டு கடுப்பாய் வந்தாலும் காட்டிக் கொள்ளவில்லை.
அன்னையிடம் சொல்லிப் புலம்ப, “உன் நல்லதுக்கு தானே கண்ணம்மா சொல்லிக் கொடுக்கறாங்க… அவங்க சொன்ன போல செய்தா நல்லது தானே…” என்று சொல்லிவிட இவளுக்கு அந்த கிருபாவைப் பிடிக்காமலே போனது.
அதற்குப் பிறகு பள்ளிக்கு சென்றால் தோழியரின் கிண்டலும், கேலியும் அவளைத் தொடர, டீச்சர்களே கல்யாணமாகாமல் இருக்க மாணவிக்குக் கல்யாணம் என்று தெரிந்து டீச்சர்களும், “என்ன யாழினி, அதுக்குள்ள கல்யாணத்துக்கு அவசரமா…” என்று கிண்டல் செய்தனர்.
இனி பிளஸ் டூ முடிந்தாலும் தன்னை இவர்கள் கல்லூரிக்கு விடுவது நடக்காத விஷயம் என்று தோன்ற யாழினியும் தோழிகளுடன் சிரித்து அரட்டை அடிக்கத் தொடங்கினாள்.
பூ வைக்கும் நிகழ்ச்சியில் எடுத்த போட்டோவில் தான் இலக்கியனை நன்றாகப் பார்த்தாள்.
சின்னண்ணனிடம், “என்னண்ணா, அவருக்கு முன் மண்டைல முடி ஒரு மாதிரி ஊசையா இருக்கு…” என்று கேட்க,
“மாப்பிள்ளைக்கு சீக்கிரமே என்னைப் போல சொட்டை விழுந்திரும்னு தோணுது… அதான் சீக்கிரம் கல்யாணம் வைக்குறாங்களோ என்னவோ…” என்று கூற தந்தை, அண்ணன் தலையில் சொட்டையைக் கண்டிருந்தவளுக்கு அது ஒரு குறையாகத் தோன்றவில்லை. பள்ளி முடிந்து வீடு திரும்பும் வழியில் சிலநேரம் யாரோ மறைந்து நின்று தன்னைப் பார்ப்பது போலத் தோன்ற, “அவர்தான் என்னைப் பார்க்க ஒளிஞ்சு நிக்கறார் போல…” என நாணத்துடன் சிரித்துக் கொண்டு சென்று விடுவாள்.
மொத்தத்தில் அவள் மனதில் படிப்பின் மீதுள்ள ஆர்வம் குறைந்து இலக்கியன் நினைவெங்கும் ஆக்ரமிக்கத் தொடங்க கல்யாணக் கனவுகளில் வலம் வரத் தொடங்கினாள்.
மழலையிலே மங்கையில்லை
சரிதான் – ஆனால்
மங்கைக்குள் மழலையுண்டு…
பூக்கள் கொத்தாய் வளர்வதுண்டு…
ஒரு பூச்செண்டே பெண்ணாக
என் முன்னில் வளர்ந்து
நிற்பதைக் காண்கிறேன்…

Advertisement