“அம்மா, அப்பாக்கு உடம்புக்கு முடியலைனு என்னை அவசரமா கல்யாணம் பண்ணிக் கொடுப்பீங்களா…”
“இங்க பாரு யாழினி… இது ஒண்ணும் நாங்களாப் பார்த்த சம்மந்தம் இல்ல… மாப்பிள வீடு நல்ல வசதிக்காரங்க… ரெண்டு தெரு தள்ளி தான் அவங்க வீடு இருக்கு… நம்ம சாதி சனத்துல நல்ல பொண்ணு இருக்கான்னு பார்த்திட்டு இருந்தவங்க மாலினிக்கு கல்யாணம் நிச்சயமானது தெரியாம அவளைத்தான் முதல்ல கேட்டாங்க… அப்புறம் விஷயம் தெரிஞ்சு வேற யாரும் நம்ம சொந்தத்ததுல பொண்ணுக இருக்கான்னு கேக்கவும் தான் மாமாக்கு உன்னை அவங்க வீட்டுக்கு கொடுக்கணும்னு யோசனை… நாங்க என்ன, உனக்கு கெடுதலா பண்ணிடப் போறோம்… பேசாம கண்ணைத் துடைச்சுட்டு அவங்க முன்னால வந்து நில்லு…” சொல்லிவிட்டு கடமை முடிந்தது போல் அவள் ஹாலுக்கு சென்றுவிட யாழினியின் சின்ன இதயம் பொருமியது.
“என் ஆசையைப் பத்தி யாருமே நினைச்சுப் பார்க்க மாட்டாங்களா… என்னோட விருப்பம் இவங்களுக்கு முக்கியம் இல்லையா…”
முகம் சுருங்க யோசித்துக் கொண்டிருந்தவளின் கையை வசந்தா ஆதரவுடன் பற்றிக் கொண்டார்.
“கண்ணம்மா, அவள விடு… நானும், அப்பாவும் உனக்கு நல்லது தான் பண்ணுவோம்னு நீ நம்பறியா இல்லியா…”
“என்னமா, நான் உங்கள நம்பாம யாரை நம்புவேன்… நீங்க எனக்கு கல்யாணம் பண்ணனும் நினைச்சதை நான் தப்புன்னு சொல்லலை… இப்ப பண்ணனுமான்னு தான் கேக்கறேன்…”
“கல்யாணம் முடிவாகறது எல்லாம் நம்ம கைல இல்ல கண்ணு… எப்ப, யாருன்னு கடவுள் முடிச்சு போட்டு வச்சிருக்காரோ அது படி தான் எல்லாம் நடக்கும்… நீ இப்படி பேசிட்டு இருக்கறதைப் பார்த்தா அப்பா வருத்தப்படுவாங்க… நல்ல புள்ளயா கண்ணைத் துடைச்சிட்டு எழுந்து வா… அப்புறம் மத்ததைப் பேசிக்கலாம்…” அன்னை சொல்லவும், மாலினி, “அம்மா தான் இவ்வளவு சொல்லறாங்கள்ள… நீ என்ன படிச்சு கலக்டரா ஆகப் போற… எழுந்து சொன்ன பேச்சைக் கேளு…” என்று அதட்ட முறைத்தாள்.
இருந்தாலும் அன்னையின் பரிதாபப் பார்வையைத் தாங்கிக் கொள்ள முடியாமல், “ம்ம்… நான் வரேன்… ஆனா, என்னை இந்த வருஷம் பரீட்சையாவது எழுத விடணும்…” என்றாள்.
“சரி டா கண்ணு… அதுக்கு நான் பொறுப்பு… அப்புறம் மேல படிக்கறது எல்லாம் நீ மாப்பிள்ளய கேட்டுப் படிச்சுக்க…” என்று சந்தோஷமாய் எழுந்த வசந்தா, “மாலினி, காப்பி எடுத்திட்டு வந்து கண்ணம்மா கிட்ட கொடு…” என்றவர் மகளது கண்ணைத் துடைத்துவிட்டு லேசாய் பவுடர் போட்டு விட்டு அழைத்து வர மாலினி அவள் கையில் காபித் தட்டைக் கொடுக்க தயக்கத்துடன் முன்னே நடந்தாள்.
ஹாலில் ஆண்களும், பெண்களுமாய் ஜமுக்காளத்திலும், நாற்காலியிலும் அமர்ந்திருந்தனர். மனதின் விருப்பமின்மை முகத்தில் தெரிய ஒருவித கலக்கத்துடன் அனைவருக்கும் காபி கொடுத்து முடிக்க, “பெரியவங்களுக்கு நமஸ்காரம் பண்ணிக்க மா…” என்றார் வசந்தா. இவள் குனிந்த தலையுடன் யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் பொத்தாம் பொதுவாய் ஒரு நமஸ்காரத்தை வைத்தாள்.
“மாப்பிளையை நல்லாப் பார்த்துக்க மா… அப்புறம் பார்க்கலைன்னு சொல்லிடக் கூடாது…” பையனின் அன்னை பர்வதம் சொல்லவும் இவள் படபடக்கும் இதயத்தோடு அப்படியே குனிந்து நின்றாள்.
“ஓ… உங்க தொம்பி அவ்ளோ அழகுன்னா மியூசியத்துல வச்சுப் பார்த்துக்க வேண்டியது தான… யாரு என்னைக் கட்டிக்கோன்னு இங்க தவம் கிடக்குறா…” அடுத்து அவளைப் பார்த்து மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் யாழினி.
“நாங்க பெரிய குடும்பம்… அப்பா மறைவுக்குப் பின்னாடி அண்ணன், தம்பிங்க மூணு பேரும் ஒண்ணாத் தொழில் பண்ணிட்டு இருக்கோம்… குடும்பத்தோட நெளிவு, சுளிவு தெரிந்து அனுசரிச்சுப் போற பொண்ணு தான் எங்களுக்கு முக்கியம்…” என்றார் மூத்த அண்ணன். மாப்பிள்ளையின் தம்பியும், சின்னக்கா சுபாவும் மட்டும் எதுவும் சொல்லாமல் இருக்க, அவர்களையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.
யாழினியின் விழாவில் இடித்த மாலினி, “அடியே… ஓவரா பிகு பண்ணாம மாப்பிள்ளையைக் கொஞ்சம் பாரு… ரொம்ப அழகாருக்கார்… ஹூம், கொஞ்சநாள் முன்னாடி என்னைக் கேட்டு வந்திருந்தா நான் கட்டிட்டுப் போயிருப்பேன்… இப்ப உனக்கு லக் அடிச்சிருக்கு…” என்றாள் கிசுகிசுப்புடன்.
“ஹூக்கும்… அப்படி என்ன பெரிய ஆணழகன்… படிக்கிற புள்ளைய கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு கூடத் தெரியாத மாங்கா மடையன்… இதுல இந்த லொக்கா ரொம்பத்தான் ஓவராப் பேசுறா…” என அக்காவையும் விட்டு வைக்கவில்லை.
ஆனாலும் வீம்புடன் மாப்பிள்ளையைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் நின்று கொண்டிருந்தவளை இலக்கியனின் பார்வை ஆவலுடன் கவனித்துக் கொண்டிருந்தது.
யாழினி, கறுப்புதான்… ஆனாலும், அட்டக்கறுப்பு கிடையாது… களையாக இருந்தாள். அடர்த்தியான வளைந்த புருவம், கண்மை கூடப் போடாத மேக்கப்பே இல்லாத முகம்… மருண்ட விழிகள்… அழகான நெற்றி… நீண்ட கூந்தல் என இருந்தாலும் முகத்தில் குழந்தைத்தனம் மிச்சமிருந்தது.
ஒவ்வொருத்தரும் தன்னைப் பற்றி பெருமையுடன் சொல்லும்போதும் அவள் முகத்தில் குறும்போடு ஒரு நக்கல் தெரிவதை ரசித்துக் கொண்டிருந்தான். ஒரே ஒரு முறை அவள் தன்னைப் பார்க்க மாட்டாளா எனப் பார்த்துக் கொண்டிருந்த இலக்கியனுக்கும் வயது அதிகமில்லை. இருபத்து மூன்று வயது மட்டுமே ஆகியிருந்தது.
சிவந்த நிறம், அளவான உயரம், அலைபாயும் தலை முடி, கச்சிதமான உடம்பு என நிமிர்வாய் இருந்தாலும் அமைதியாய் அமர்ந்திருந்தான். இளவட்டப் பையன்களுக்கே உரித்தான கல்யாணம் பற்றிய ஆவல் கண்களில் தெரிந்தது. அவன் வீட்டிலும் மூன்று பெண்கள், மூன்று ஆண்கள்… தந்தை தவறியிருந்தார்.
பெண்கள் இருவரை அடுத்த தெருவில் மணமுடித்துக் கொடுத்திருக்க ஆண்கள் மூவரும் ஒரே தெருவில் இருந்தனர். மூத்த அண்ணன் அதே தெருவில் வேறு வீட்டில் இருக்க அன்னையும் இளைய இரண்டு மகன்களும் பெரிய வீட்டில் இருந்தனர். தந்தை தொடங்கிய சவுண்டு சர்வீஸ், மண்டபம், கோவில் விஷேஷங்களுக்கு சீரியல் லைட்ஸ் அலங்காரம் செய்யும் தொழிலை சகோதரர்கள் மூவரும் பெரிய அளவில் செய்து வந்தனர். அந்த ஊரிலேயே எல்லா பெரிய விசேஷங்களுக்கும் அவர்களின் பர்வதம் சவுண்டு சர்வீஸ் தான் பிரபலமாக இருந்தது.
“சரி, நாங்க வீட்டுக்குப் போயி கலந்து பேசிட்டு விவரம் சொல்லறோம்…” பர்வதம் சொல்ல எல்லாரும் எழுந்து கொண்டனர்.
“அதெல்லாம் அவளுக்கு அவரைப் பிடிக்காமலா இருக்கும்… கடவுளே, அவங்களுக்கு இவளைப் பிடிக்கணுமேன்னு தான் என் வேண்டுதல் எல்லாம்…” என்றார் வசந்தா.
“கடவுளே… அவங்களுக்கு என்னைப் பிடிக்கக் கூடாது… நான் உன்னை ஸ்பெஷலா கவனிச்சுக்கறேன்…” கடவுளிடம் டீல் பேசிக் கொண்டிருந்தவளிடம், “அப்பாக்கு இந்த சம்மந்தம் ரொம்பப் பிடிச்சிருக்கு கண்ணம்மா… உனக்கு இதுல விருப்பம் தானே…” என மீண்டும் கேட்டார் தந்தை.
அவரிடம் மறுக்க விரும்பாமல் மாப்பிள்ளை வீட்டில் எப்படியும் கருவாச்சியான தன்னை வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள் என்ற நம்பிக்கையில், “உங்க எல்லாருக்கும் பிடிச்சிருந்தா எனக்கும் விருப்பம் தான்ப்பா…” சம்மதமாய் தலையாட்டினாள் யாழினி.