Advertisement

அத்தியாயம்…7 
“எனக்கு தான் பெண் கேட்க..உன் தங்கையை…” எந்த வித முகாந்திரமும் இல்லாது,  நேரிடையாக இப்படி தன்னிடம் பேசுவான் என்று அஷ்வத் நினைத்து கூட பார்க்கவில்லை.
 மூன்று நாளாகவே தன் தங்கையை வைத்து ஏதோ இங்கு ஓடுகிறது என்று அஷ்வத் நினைத்ததால் தான்.. அவன் அறையை விட்டு வெளியே வரவில்லை.
தன் தங்கை விசயம் மட்டும் இல்லை என்றால்..அஷ்வத் மிக கலகலப்பான  ஆள் தான்..இப்படி ஒரே அறையில் இருப்பது எல்லாம் அவனால் முடியாத காரியம்…
ஆனால் தன் மாமியார் வீட்டில் இருந்தான்..காரணம் தன் தங்கை..தன் தங்கை இவ்வீட்டுக்கு மருமகளாய் வருவது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று.. அது அவனுக்கு நன்கு தெரியும்.
தன்னுடையது காதல் திருமணம்..வீட்டில் பேசும் போதே அவள் எவ்வளவு எதிர்த்தால் என்று அவன் அறிவானே..அவள் எதிர்ப்புக்கு பலன் இல்லை என்ற போது நேராக  தன்னிடம் வந்து..
“உனக்கு லவ் பண்ண வேறு பெண்ணே கிடைக்கலையா…? உன்னோடு படித்த ரோஸி உன் பின்னாடி  எப்படி லோ லோன்னு சுத்தினா..அவள் எவ்வளவு அழகா இருந்தா. ரேங்கில் உன்னோட டாப் லெவல் வேற… அந்த பெண்ணை விரும்பி இருந்தா நம்ம மருத்துவமனைக்கு ஒரு நல்ல மருத்துவரும் கிடைத்து இருப்பா… உனக்கு ஒரு நல்ல மனைவியும் கிடைத்து இருப்பா..இவ்வீட்டுக்கு ஒரு நல்ல மருமகளாவும் இருந்து இருப்பா…” 
தான் ஏற்கனவே வாணலியில் காய்ந்துக் கொண்டு இருக்கேன்..இப்படி இவன் அமைச்சர் வீட்டில் பெண் எடுத்து தன்னை எரியும் தணலில் தள்ள பார்க்கிறானே.. என்று நினைத்த மதி அதை அண்ணனிடம் சொல்லியும் விட்டாள்..
தன்னுடைய திருமணமே இவ்வீட்டில் வேண்டாம் என்றவள் எப்படி தான் இவ்வீட்டுக்கு மருமகளாய் வருவாள்…? இது நடக்கும் விசயம் இல்லை என்று நினைத்து தான் தன் மனைவியிடம் அந்த அளவுக்கு கண்டிப்போடு  அஷ்வத் பேசியது.
ஆனால் இப்படி அகில ரூபன் குடும்ப உறுப்பினர் அனைவரின் முன்னும் தன்னிடம் கேட்பான் என்று அவன் துளியும் எதிர் பார்க்கவில்லை.அவனுக்கு   என்ன ஒரு கொழுப்பு…? இது தான் தோன்றியது..
மதியின் செயலை வைத்தே அவளின் விருப்பமின்மையை தெரிந்த பின்னும் இவ்வளவு தைரியமாக பெண் கேட்க வர்றேன் என்று சொல்ல காரணம் என்ன…?அமைச்சர் என்பதாலா…?
நீ  அமைச்சர் என்பதால் தான் என் தங்கை உன்னை  திரும்பியும் பார்க்காததுக்கு காரணம்..என்று இவனிடம் சொன்னால் இவன் என்ன செய்வான்…? என்று அஷ்வத் நினைத்துக் கொண்டு இருக்கும் போதே..
சீதாராமன்… “என்ன இப்படி திடு திப்புன்னு பெண் கேள் என்று சொல்ற..இது எல்லாம் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவு செய்யும் விசயம் இல்ல..இப்போ தானே உன் தங்கை கல்யாணம் நடந்து முடிந்து இருக்கு.. ஒரு மூன்று மாசம் போகட்டும்…
 இது எல்லாம் யோசிச்சி தான் செய்ய வேண்டும்.” என்று சீதாராமன் மக தன்மையாகவே தன் மகனிடம் பேசினார். அவருக்கு மருமகன் முன் நிலையில் எந்த ஒரு அசாம்பாவிதமும் நடைப்பெறுவதில் விருப்பம் இல்லை.
சீதாராமன் பேசிக் கொண்டு இருக்கும் போதே நவீன்… “முன்று மாதம் பின் கூட மதிக்கு யாரின் மேல் விருப்பம் என்று கேட்டுட்டு போங்க..அப்புறம் மூஞ்சியில் கறிய பூசிட்டு வரப்போறிங்க… இந்த பதவியில் இருக்கும் உங்களுக்கு இந்த அவமானம் எல்லாம் தேவையில்லாத ஒன்று…” என்று நவீன் நக்கலாக சொன்னான்.
நவீன் பேச பேச அகில ரூபனின் முகம் யோசனைக்கு தாவியது. அதுவும் அவன் சொன்ன மதிக்கு யாரை பிடிக்கும்…?என்ற அந்த  சொல் அவனை யோசிக்க வைத்தது..
அகில ரூபனின் மனதில் ஆயிரம் யோசனைகள் இருந்தாலும், “பெண்ணிடம் கேட்டால் தெரிந்து போய் விடும்.. விருப்பமா…?இல்லையா…? என்று.”  என்ற அவனின் பேச்சில் அஷ்வத்துக்கு இன்னும் கோபம் தான் ஏறியது.
“இல்ல முடியாது…அவளுக்கு விருப்பம்  இருக்காது நாளை நீங்க பெண் கேட்க தான் எங்க வீட்டுக்கு வருவது என்றால் நீங்கள் வராமல் இருப்பது தான் எல்லோருக்கும் நல்லது…”
அஷ்வத்தும் முடியாது என்று அகில ரூபன் போலவே தெளிவாக சொல்லி விட்டான்… அவனுக்கு இந்த அமைச்சர் முதல் அமைச்சர் கலெக்ட்டர் என்பதில் எல்லாம் பயம் இல்லை..
பதிவியில் அவர்கள் உயர்ந்து இருந்த போதும் செல்வ செழிப்பில் அஷ்வத் குடும்பம் மேலோங்கியது தான்..அவன் அப்பாவும் தொழில் சார்ந்த குடும்பத்தில் பிறந்தவர் தான்..அவரின் லட்சியம் என்று அவர் ஐ.பி.எஸ் ஆனது…
ஆனால் அவன் அன்னை அப்பாவோடு மேலான குடும்பத்தில் பிறந்தவர்…தானம் தர்மன் என்று வாரி இறைத்த போதும் செல்வம் குறையாது இருந்தது என்றால் அவர்களின் செல்வ செழிப்பை நீங்களே கணக்கிட்டு கொள்ளலாம்…அனைத்தும் ஒரே பெண்ணான புவனேஷ்வரியின் வசமே வந்தது..
இதில் புவனேஷ்வரியின்  மருத்துவமனை தான்  சென்னையில் நம்பர் ஒன்றில் இருக்கிறது..அதிலும் நல்ல வருமானமே..அதனால் சிறுவயது முதலே செல்வ செழிப்பு கொடுத்த செறுக்கு அஷ்வத்துக்கு கொஞ்சம் இருக்க தான் செய்தது… அந்த தெனவெட்டில் தைரியமாகவே அஷ்வத் பேசினான்.
“ஓ அப்படியா…?” என்று தாடையை தடவிய வாறு யோசித்த அகில ரூபனின் செயல் பவனியம்மாவின் வயிற்றை கலக்கவே செய்தது..
“அகிலா…நாளைக்கு முதல்ல அனிதாவை கூட்டி அனுப்பலாம்பா..இது பத்தி அப்புறம் சாவகாசமாய் பேசலாம்.” என்று  பொறுமையாக சொன்னார்.
தன் தாடை தடவுவதை நிறுத்தாது… “யோசிக்கலாம்.. ம் யோசிக்கலாம்.. அதுவும் பொறுமையா….” என்று ஏதோ போல் பேசியவனின் பார்வையும் ச…ரி குரலும் சரி.ஏதோ தவறு என்று பவனியம்மாவுக்கு உணர்த்தியது..
இந்த உணர்வு பவனியம்மாவுக்கு மட்டும் அல்லாது சீதாராமனுக்கு..தனலட்சுமி சகுந்தலா அம்மாவுக்குமே  ஏதோ சரியில்லை என்று அவர்களுக்கு உணர்த்தியது.
“யோசிக்கலாம்..ஆனா பாருங்க  உங்க மாப்பிள்ளை யோசிக்க எல்லாம் வேண்டாம் உங்களுக்கு கொடுக்க முடியாதுன்னு திட்ட வட்டமா சொல்லிட்டார்..
அப்போ நானும் திட்ட வட்டமா பேசி தானே ஆகனும்… அப்போ தானே நம்ம கெத்த மெயிண்டன் பண்ண முடியும்..இல்லேன்னா சொம்பை என்று நம்மல நினச்சிட கூடாது பாருங்க…” என்று அவன் பேசிய இத்தனை பேச்சில் ஒரு முறை கூட தன்னை அம்மா என்று  கூப்பிடாதது அப்போது தான் பவனியம்மா கவனித்தார்..
இது சரியில்லையே..இவன் ஏதோ போல் பேசுகிறான்… நடந்துக் கொள்கிறான்..அதுவும் தன் தம்பியின் பார்வை அந்த பெண் மீது செல்கிறது என்று தெரிந்தும் தனக்கு அந்த பெண்ணை கேளுங்க…என்று சொன்னதிலே அவரின் மனது உணர்த்தி விட்டது..இனி எதுவும் நம் கையில் இல்லை..கை மீறி போக போகிறது என்று..
ஆனால் தன்னை அம்மா என்று கூப்பிடாது இவனால் பேச முடியுமா…? இதோ இவனால் முடிகிறதே… பேச்சுக்கு பேச்சு அகில ரூபன் அம்மா என்று  கூப்பிடாது அவனால் பேச வராதே…
அதே போல் தான் அப்பாவும்… ஆனால் இன்று அம்மா என்ற அழைப்புக்கே பஞ்சமாய்…ஏன்..?எதற்க்காக….? காரணம் தான் பவனியம்மாவுக்கு மட்டும் அல்லாது  அந்த குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் அகில ரூபனின் இந்த வித்தியாசமான நடவடிக்கையை பார்த்து எண்ணினர்..
தம்பி நினைத்தால் அவன் முன் கொண்டு வந்து நிறுத்தி விடுபவன்..அதே போல் தான் தங்கை என்றாலும் அவ்வளவு பிரியம் அவனுக்கு..இதோ மாப்பிள்ளையிடம் இப்படி பேசுவது அது தன் தங்கையை  பாதிக்கும் என்று கூட தெரியாதவன் இல்லையே இவன்…
 அப்படி இருந்தும் இவன் இவ்வாறு பேசுகிறான் என்றால்.. ஏதோ.. என்று பவனியம்மா யோசிக்கும் போதே..
அகில ரூபன் அஷ்வத்திடம்… “உங்க தங்கை இங்கு வர முடியாதுன்னா என் தங்கை அங்கு வர மாட்டா….” என்ற அவனின் பேச்சில் மொத்த குடும்பமும் ஆடி போயிற்று..
சீதாராமன் பதறி போனவராய்… “அகிலா என்ன பேச்சு பேசுற…?புரிஞ்சி தான் பேசுறியா…?”
எப்போதும் சீதாராமனின் குரல் ஓங்கி ஒலிக்காது…அனைவரிடமும் மென்மையாக தான் பேசுவார்…அதுவும் அகில ரூபன் என்றால் அந்த குரலில் மென்மையோடு அன்பும் சேர்ந்து தான் எப்போதும் ஒலிக்கும்..
அனைவருமே……“எப்போதும் நீங்க இப்படி தன்மையா தான் பேசுவிங்களா…?இல்ல இந்த பதவின்னா இப்படி தான் என்ற பட்சத்தில் உங்களுக்கு இந்த அமைதி வந்ததா…?என்று.”
இதை அகில ரூபனே நிறைய முறை தன் தந்தையிடம் கேட்டு இருக்கிறான்… அப்போதும் கூட.. அவர் மென்மையாக ஒரு சிரிப்பு சிரிப்பார் அவ்வளவே..
ஆனால் இன்று சீதாராமன் “புரிஞ்சி தான் பேசுறியா…?” என்று கேட்கும் போதே அவர் குரல் கொஞ்சம் கடுமையாக தான் இருந்தது.
ஆனால் அதை எல்லாம் கவனிக்கும் நிலையில் அகில ரூபன் இல்லையா..?இல்லை சீதாராமனின் இந்த கோபம் என்னை ஒன்றும் செய்யாது என்ற  எண்ணமா…? ஆக மட்டும் அவர் பேச்சை காதில் வாங்காதவனாய்…
“நான் என்ன சொன்னாலும் என் தங்கை கேட்பா… அண்ணனுக்கு அவமரியாதை தரும் வீட்டுக்கு அவள் வர மாட்டாள்…” என்று சொன்னவன்..
அனிதாவை பார்த்து…. “சரி தானேம்மா…?” என்று கேட்டும் வைத்தான். அவனே ஒரு முடிவு எடுத்து விட்டு  அதை… “சரி தானா…?” என்று கேட்கும் அண்ணனுக்கு என்ன என்று  அவள் சொல்வாள்.
அவளுக்கு இரு அண்ணன்களின்  மீதுமே பாசம் இருக்கிறது..கொஞ்சம் கூடுதல் பாசம் அகிலா அண்ணன் மீது..சிறு வயது முதலே தனக்காக அனைத்தையும் விட்டு கொடுப்பார்..அதனால் அவரை கொஞ்சம் அதிகப்படியாக தான் அனிதாவுக்கு பிடிக்கும்.. ஆனால் அதற்க்காக தன் வாழ்க்கையை விட்டு கொடுக்க முடியுமா…? என்று முடிவு எடுத்தவளாய்..
அதை அகிலா அண்ணன் மனது  நோகாது எப்படி சொல்வது…?என்று  அவள் யோசிப்பதற்க்குள் அஷ்வத்…  “உன் பேச்சை கேட்டு அவள் இங்கு இருந்தாள்..நாளை வராது போனால்..இனி அவள் எப்போதும் இங்கு தான் இருப்பாள். முடிவு அவளே எடுக்கட்டும்…” என்று பேசும் கணவனை அதிர்ந்து போய் அவனை திரும்பி பார்த்தாள்.
இவன் என்ன சொல்கிறான்… முடிவு என் கையிலா…? முடிவு என் கையில் தான்..ஆனால் அவன் சொன்ன விதம்…அவன் பேச்சு… என்ன இது…? இப்படி தான் யோசித்தாள்.
அண்ணன் சொன்னதற்க்கு நான் இங்கு இருக்க வேண்டும் என்று துளியும் யோசிக்க வில்லையே… என் மறுப்பை என் அண்ணன் மனது நோகாது எப்படி சொல்வது என்று  தானே யோசித்தேன்….
ஆனால் அவன் சொன்ன..நாளை என்னோடு வரவில்லை என்றால் எப்போதும் வர முடியாது என்ற வார்த்தையை எப்படி அவன் சொல்வான்… அவனிடம் இருந்து அவள் இந்த வார்த்தையை எதிர் பார்க்கவில்லையே..
நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு… “யார் தடுத்தாலும்  அவள் என்னோடு தான் வருவாள்.” என்று தன் அண்ணனே ஆனாலும் அவனிடம் ஆணவத்தோடு தானே சொல்லி இருக்க வேண்டும்..
 ஆனால் இப்படி பேசி தன்னையும் தாழ்த்தி அவனையும் தாழ்த்திக் கொண்டானே என்று யோசிக்கும் போதே… அகில ரூபன்… “என் தங்கை வர மாட்டாள். அவள் அண்ணனுக்கு மதிப்பு இல்லாத இடத்தில் அவளுக்கும் அங்கு என்ன மதிப்பு இருக்கும் என்று தெரியாத முட்டாள் இல்ல என் தங்கை.” என்று அகில ரூபன் சொன்னான்.

Advertisement