Advertisement

அத்தியாயம் ஒன்பது:

வெற்றியின் இந்த அதீத கோபமும் ஆவேசமும் சந்தியாவிற்கே பயம் கொடுத்தது.

அவன் விட்ட உதையில் அந்த மேனேஜர் சுவரில் மோதி அந்த லேடி கான்ஸ்டபிள் மேல் விழ…….    

இருவரும் கீழே விழுந்தனர்…. அவசரமாக வெற்றிக்கு தெரிந்த கான்ஸ்டபிள் வந்து அந்த மேனேஜரை இழுத்து கீழே போட்டு தன் சக ஊழியரை தூக்கி விட்டவர்…….

அவருக்கு ஏதாவது அடியா என்று பார்க்க….. கீழே விழுந்ததில் சில ஊமை அடிகள் அதை விட பயமும் அந்த லேடியிடம் தெரிந்தது. 

“வெற்றி கை வைக்காத பா! ஏதாவது ஏடாகூடமா ஆகிடப் போகுது”, என்றார்…. ஏனென்றால் கீழே விழுந்த மேனேஜர் அதுவரை எழுந்திருக்கவில்லை.

மெதுவாக அந்த மேனேஜரை கை கொடுத்து எழுப்பினர்….  அவனை ஒரு சேரில் அமர வைத்தனர்.

அந்த மேனேஜர் வெற்றி போல ஒருவனை எதிர்ப்பார்க்கவில்லை….

ஹாஸ்பிடல் ஓனர் அழகாக இருந்தாலும் பெரிதாக பேக் கிரௌண்ட் இல்லாத பெண்களை தான் குறி வைப்பார்….. இந்த மேனேஜர் தான் விவரங்களை சேகரித்து சொல்வான்.

மேனேஜர் அறிந்தவரை சந்தியாவிற்கு பெரிய பின் புலம் எதுவும் கிடையாது… இப்படி ஒருவன் வந்து நிற்பான் என்று எதிர்பார்க்கவில்லை.

அதற்குள் வெற்றி அந்த லேடி கான்ஸ்டபிளிடம் சண்டைக்கு போனான்… “ஏன் மேடம்? யார் என்ன சொன்னாலும் அப்படியே நம்பிடுவீங்களா? அப்புறம் நீங்க என்ன போலீஸ்……. எவன் நல்லவன் கெட்டவன்னு பார்த்தவுடனே அப்படியே தெரிஞ்சிக்க முடியலைன்னாலும் ஓரளவு தெரிய வேண்டாம், யாரு என்னன்னு தெரியாம கை வெப்பீங்களா”, என்று பொரிந்தான்.

சந்தியாவிடம் என்ன விஷயம் என்று வெற்றி கேட்கவும்….         

 அவள் நடந்த அனைத்தையும் சொல்ல…. 

   “ப்ரச்சனைன்னா உடனே எனக்கு சொல்ல மாட்டியா…..”, என்று சந்தியா அடிப்பட்டத்தில் கோபப்பட….

“போன் பிடிங்கி வெச்சிட்டாங்க……”, என்று அழுத விழிகளோடு சந்தியா சொல்லவும்…. வெற்றிக்கு கோபத்தை அடக்க முடியவில்லை…. மீண்டும் ஒரு அறைவிட்டான் அந்த மேனேஜரை.  

மேனேஜர் ஏறக்குறைய அரைமயக்க நிலைக்கு சென்று விட்டான்.    

“பொண்ணுங்களுக்கு ஏதாவது பிரச்சனைன்னா வீட்டுக்கு சொல்லணும் முதல்ல…. நீ போனை பிடிங்கி வெச்சிருக்க……. அப்போ நீ தான் ஏதோ செய்யற… கூப்பிடுறா உன் முதலாளிய”, என்று அங்கேயே சட்டமாய் அமர்ந்து கொண்டான்.

அந்த மேனேஜரும் உடனே போனை போட, அந்த எம் டீ உடனே வந்தவன் சூழ் நிலையையே நிமிடத்தில் மாற்றி விட்டான்….. “யாரை கேட்டு போலிசை வர சொன்ன”, என்று அந்த மேனேஜரிடம் சத்தம் போட்டு……

“என் ஸ்டாஃப் எனக்கு தெரியும், இப்படி பண்ணியிருக்க மாட்டாங்க!”, என்று சந்தியாவிற்காக சப்போர்ட் செய்து….. அவளிடம் மன்னிப்பு கேட்டான்.

அந்த போலிஸ்காரர்களை அனுப்புவதில் குறியாய் இருந்தான்… “நீங்க கிளம்புங்க சார்”, என்று வெற்றியை அனுப்புவதிலும் குறியாய் இருந்தான்….

“நீ போய் வேலையை கண்டினியு பண்ணு!”, என்றான் சந்தியாவை நோக்கி….

அந்த போலிஸ்காரர், “அப்போ பணம் காணாம போனது?”, என்று கேட்க….

“அதொன்னுமில்லை பிரச்சனையாக்க வேண்டாம், நான் பார்த்துக்கறேன்”, என்றான் அந்த எம் டீ.

“இல்லைங்க! அப்படியெல்லாம் விட முடியாது! தேவையில்லாம எங்க பொண்ணு பேரை நீங்க இதுல இழுத்து விட்டிருகீங்க…..”,

“எனக்கு தெரியாது….. இந்த பய தெரியாம பண்ணிட்டான்… இதை விட்டுடுங்க”, என்று அந்த எம் டீ வெற்றியிடம் கூறினான்.

 “அப்படியெல்லாம் விட முடியாதுங்க”, என்ற வெற்றி…. “பணம் காணாம போனது மட்டும் பிரச்சனைனா அது உங்க பிரச்சனை….. ஆனா சந்தியா ஹேண்ட் பேக்ல கொஞ்சம் பணம் இருந்திருக்கு, அவளை யாரோ மாடி விட ட்ரை பண்றாங்க. அவங்க யாருன்னு எங்களுக்கு தெரியணும்”, என்று வெற்றி அவன் நிலையில் நின்றான்.

எம் டீ நுழைந்தவுடனே யே… சந்தியாவை எம் டீ பார்த்த ஒற்றை பார்வை…. அவன் பார்வை நொடிகளில் சந்தியாவை மேய்ந்தது.. பின்பு அந்த மேனேஜரிடம் ஏதோ பார்வையிலேயே சங்கேத மொழி….. பின்பு நல்லவன் போல பேச ஆரம்பித்தது……. இப்படி எதுவும் சரியாக படவில்லை வெற்றிக்கு

ஏதோ பெரிய தவறாக மனதிற்கு பட…..

“நம்ம போகலாம் சந்தியா!”, என்று வெற்றி கிளம்ப போக….

“நான் பிரச்சனையை முடிச்சிக்கலாம்னு சொல்றேன்… நீ அந்த பொண்ணை கூட்டிட்டு கிளம்பினா…. அப்போ நீ என்னோட ஒரு ஸ்டாஃப் மேல கை வெச்சிருக்க… உன் மேல நான் கம்ப்ளைன்ட் கொடுக்கவா”, என்று அந்த எம் டீ எகிற…..

“நீ என்னவோ பண்ணு”, என்ற வெற்றி…… “வா!”, என்று சந்தியாவை கூப்பிட……

“அப்படியெல்லாம் என்னன்னு தெரியாம அனுப்ப முடியாது. நான் என்ன நடந்ததுன்னு விசாரிக்கணும். போலிஸ் கம்ப்ளைன்ட் இல்லைனாலும் யாருன்னு தெரியணும்!”, என்று அந்த எம் டீ எகிற…

“இப்போ தானே விட்டுடுன்னு சொன்ன……”,

“அது…..”, என்று அந்த எம் டீ தடுமாற..

“இப்போ நாங்க போறோம்… நீ எப்போ சொன்னாலும் நானே கூட்டிட்டு வர்றேன்… இனிமே இங்க சந்தியா வேலைக்கு வரமாட்டா”, என்று வெற்றி சொன்னதும்….  

“அப்படியெல்லாம் மூணு மாச நோட்டிஸ் இல்லாம வேலையை விட்டு போக முடியாது. பணம் வேற காணாம் போயிருக்கு”, என்று அந்த எம் டீ எகிற….

என்னவோ அந்த எம் டீ சந்தியாவை குறி வைப்பதாக வெற்றிக்கு பட….

எந்த பதிலும் சொல்லாமல் அந்த எம் டீ பேச பேச சந்தியாவை அழைத்துக் கொண்டு வெளியில் வந்தவன்…… நேரே தெரிந்த ஒரு ஆட்டோ ஏற்றி அவளை பத்திரமாக வீட்டிற்கு அனுப்பிவிட்டு அவன் போய் நின்ற இடம்……

சென்னை போலிஸ் கமிஷனர் வெங்கட ரமணனின் வீடு……  அதாவது நமது தலைவியின் நாயகனின் வீடு……. தெரிந்த காவலாளி இல்லை…. புதியவன் இருக்க…   வாசலில் நின்று, “கமிஷனர் அய்யாவை பார்க்கணும், அவருக்கு என்னை தெரியும்”, என்று சொல்ல…..

“ஐயா, வீட்ல இல்லை”, என்று காவலாளி சொல்ல….

“இப்போ சாப்பிட வருவாங்களா?”, என்று கேட்க….

“தெரியாது”, என்று அவன் சொல்ல…

“ராம் சார் கிட்ட, இல்லை கமிஷனர் அம்மா இருப்பாங்க அவங்க கிட்ட கேளுங்க”, என்று வெற்றி சொல்ல….

“கமிஷனர் அம்மா இங்க எங்க இருக்காங்க”, என்று காவலாளி கேட்க….

“அவங்க வீட்டுக்காரம்மா மகாலக்ஷ்மி அம்மா”, என்று வெற்றி சொல்லும் போதே….. கமிஷனரின் ஜீப் வர….. வெற்றிய பார்த்து ஜீப்பை நிறுத்த சொல்லிய ரமணன்…

“வெற்றி என்னடா இங்க”, என்றான் ஆச்சர்யமாக…..

“சார்”, என்று பவ்யமாக ஒரு வணக்கத்தை வெற்றி வைக்க… அங்கேயே இறங்கி அவனோடு பேசிய படி ரமணன் உள்ளே போக ஆரம்பித்தான்.  

“ஒரு விஷயம்! அதுதான் உங்க கிட்ட யோசனை கேட்கலாம்னு”, என்று வெற்றி சொல்ல…..

“என்ன விஷயம் சொல்லு?”,

“அது என்னோட நினைப்பு தான்! அது நான் சரியா நினைக்கிறனா இல்லையான்னு கூட தெரியலை”, என்று வெற்றி பீடிகை போட……

“என்கிட்ட என்னடா? சொல்லு!”, என்றான் ரமணன்…..

அப்போது ரமணன் வந்த அரவம் உணர்ந்து வரமஹாலக்ஷ்மி வந்தாள்……. நிறை மாத கர்ப்பிணி….. பிரசவத்திற்கு இன்னும் இருபது நாட்களே….

சின்ன தேர் போல வரா ஆடி அசைந்து வர…. ரமணன் அவளை காதலாய் பார்வையால் தழுவ… அவனுக்கு சரியாய் ஒரு பார்வை பார்த்து.. வெற்றியிடம் பார்வையை திருப்பினாள்.  

வராவை பார்த்ததும், “வணக்கம்மா”, என்றான் வெற்றி….

“மாஸ்டர் எப்படி இருக்கீங்க?”, என்றாள் வரா……

ராம் கல்பனாவின் மகன் ரோஹிதிற்கு தற்காப்பு கலைகள் சொல்லிக் கொடுத்த மாஸ்டர் வெற்றி.

போன வருடம் ரோஹித்தை கராத்தே சேர்த்ததால்….. இந்த கிளாஸ் ஒரு வருடம் போகட்டும் என்று ராம் சொல்லியிருந்தான்…… அதனால் வெற்றி இப்போது வருவதில்லை…… அந்த வீட்டில் உள்ள எல்லோருக்கும் வெற்றியை தெரியும்.

ரமணன் இங்கே வந்து இது இரண்டாவது வருடம்…. சென்னை அவன் கைகளில் முடிந்தவரை சௌக்கியமாக இருந்தது.

“நல்லாயிருகங்கம்மா”, என்றான் இன்னும் பவ்யமாக.

“உட்காருங்க!”, என்று வரா சொல்ல..

வெற்றி உட்காரவில்லை…. “பரவாயில்லைங்கம்மா”, என்று நின்று கொண்டே இருந்தான்……

“நீங்க சாப்பிட்டிட்டு வாங்க சார்! நான் இருக்கேன்!”, என்றான் வெற்றி.

“இல்லை பரவாயில்லை, சொல்லு வெற்றி….”,

“அம்மா வெயிட் பண்றாங்க! நீங்க போங்க நான் இருக்கேன்!”, என்று வெற்றி பிடிவாதம் பிடிக்கவும்….. வராவையும் கருத்தில் கொண்டு ரமணனும் சென்றான்.

“இந்த மாஸ்டர் ஏன் என்னை அம்மான்னு கூப்பிடறாங்க, நான் அவ்வளவு ஓல்ட்டா தெரியறனா”, என்று வரா வருத்தப்பட….

“அது மரியாதைக்கு சொல்றது பாப்பா…”, என்று அவளிடம் பேசிக்கொண்டே ரமணனும் உணவு மேஜையில் அமர…. வராவும் அமர்ந்து பரிமாறிக் கொண்டே உண்ண ஆரம்பித்தனர்.

அவர்கள் உண்பதை வராவின் அம்மாவும், கல்பனாவும் வந்து எட்டி பார்த்து சென்றனர்.

“நான் உங்களை கவனிக்கறனா இல்லையான்னு என்னை கவனிக்கறாங்க”, என்று வரா சொல்லவும்…. புன்னகைத்தான் ரமணன்.

அவர்கள் எட்டி பார்த்து தான் சென்றனர்….. ஆனால் ராம் வந்து பக்கத்தில் அமர்ந்தான். அவர்கள் இருவரும் சரியாக உண்ணுகிறார்களா என்று பார்க்க…

“இது எல்லாம் சாப்பிடீங்களா?”, என்று அவர்கள் இருவரின் மெனுவை கேட்டு விட்டு எழுந்து சென்று விட்டான்.

“ஆனாலும் இந்த ராம் அண்ணா சான்சே இல்லை”, என்று சொல்லி வெற்றி இருப்பதால் உண்டவுடன் நேரே ரமணன் வெளியே சென்று வெற்றியை அழைத்துக் கொண்டு ராமின் அலுவலக அறைக்கு சென்றவன்….

“இப்போ சொல்லு!”, என்றான்.

சந்தியாவை பற்றி தன் வீட்டில் வாடகைக்கு இருப்பவள் என்று சொல்லி… தனக்கு நல்ல தோழமை என்று சொல்லி….. தான் வேலை வாங்கி கொடுத்ததை சொல்லி….. அன்று நடந்த பண திருட்டு…. சந்தியாவின் மேல் விழுந்த பழி… போலிஸ் அவளை அடித்தது…..

பின்பு தனக்கு தகவல் தெரிந்து சென்றது…. எம் டீ வந்தவுடன் நடந்தது என்று அனைத்தையும் சொன்னான்.

“வேணும்னே அந்த பொண்ணை மாட்ட விடறாங்கன்னு தோணுது சார்….. பண விஷயம்னா பரவாயில்லை….. பணம் போனா போகுதுன்னு செட்டில் பண்ணிடுவேன்….. ஆனா அந்த எம் டீ பார்வை சரியில்லை….. இப்படி ரிஸ்க் எடுத்து மாட்ட விடறவன் சாதரணமா விட மாட்டான்…. ஏதோ சரியில்லைன்னு என் மனசுக்கு படுது…..”,

“நான் நினைக்கற அளவுக்கு இது சீரியஸா இல்லையான்னு தெரியலை…… எதுவா இருந்தாலும் நீங்க பார்த்துக்குவீங்கன்னு வந்துட்டேன்….”,

வெற்றி பேசுவதை எல்லாம் நடுவில் குறுக்கிடாமல் கேட்ட ரமணன்….. “ரொம்ப வேண்டிய பொண்ணோ”, என்றான் சற்று குறும்பான குரலில்.

அவன் கேட்பதன் அர்த்தம் புரிந்த வெற்றி…. “அப்படியெல்லாம் இல்லைங்க சார்….. நமக்கு நல்ல தோஸ்து அவ்வளவு தான்…. நம்ம பசங்கன்னா செய்ய மாட்டேனா…  அப்படிதான்”, என்றான்.

அவன் குரலில் இருந்த உண்மையை உணர்ந்தவன்…… வெற்றியை தெரிந்தாலும் சந்தியாவை தெரியாதே.

“நான் பொண்ணை பார்க்கணும் வெற்றி…… உனக்கு தெரியாம பொண்ணு உண்மையிலேயே செஞ்சிருந்தா”,

“ச்சே! ச்சே! என்னை நம்பற அளவுக்கு நீங்க சந்தியாவை நம்பலாம்”, என்றான்….

“உன் பார்வைக்கும் என் பார்வைக்கும் வித்தியாசம் இருக்கும்…. அதுவுமில்லாம என்ன நடந்ததுன்னு அந்த பொண்ணு வாய் மொழியா கேட்டா இன்னும் விவரம் தெரிய வரும்…”,

“இப்போ வர சொல்லட்டுமா…… உங்களுக்கு நேரம் இருக்கா”,

“வர சொல்லு…..”,

சந்தியாவிற்கு அழைத்தவன் வர சொன்னான்…..

“நான் வீட்ல யார்கிட்டயும் இன்னும் சொல்லலை…. என்ன சொல்லிட்டு வரட்டும்….”,

“மேத்ஸ் டுயுஷன் சொல்லிக் குடுக்க நான் வர சொன்னேன்னு சொல்லிட்டு வா…. அட்ரெஸ் ஆட்டோகாரர் கிட்ட சொன்னா தெரியும்…. வெளில வந்து போன் பண்ணு”, என்றான்.

இதை கவனித்த ரமணன்…. “அது என்ன மேத்ஸ் டுயுஷன்….”, என்று கேட்டான்

வெற்றி அவள் டுயுஷன் எடுப்பதையும் கூற….. “ஒஹ்”, என்று மனதில் பதிய வைத்துக் கொண்டான்.

“என்னவோ சார் என் அறிவுக்கு புரியலை, நீங்க தான் பார்த்துக்கணும்”, என்றான் வெற்றி….

“உன் அறிவுக்கு தான் புரியாது! ஆனா என் அறிவுக்கு நல்லா புரியும்! நான் பார்த்துக்கறேன்”, என்றான் ரமணன்….. ரமணன் அறிவு என்று சொன்னது…. அவனின் மூளையை அல்ல… அறிவழகனை…… ரமணனின் தளபதி.

ரமணன் உடனே அறிவழகனை தொலைபேசியில் அழைத்து……. வர சொன்னான்.

அறிவழகன் சந்தியா வருமுன்னே வந்துவிட்டான்….. வெற்றி அறிவழகனை அவ்வப்போது பார்த்திருக்கிறான்….. இருவருக்கும் தொழில் முறை பழக்கமுண்டு….. அறிவழகன் மெக்கானிக் ஷாப் தானே வைத்திருக்கிறான்……. வெற்றி வெல்டிங் மற்றும் வாகன பெயிண்டிங்…..

“அண்ணா”, என்றழைத்தபடி அறிவழகன் வந்தவன்…. வெற்றிய பார்த்து “வெற்றி”, என்றான்.

“தெரியுமாடா வெற்றியை…..”, என்ற ரமணனின் கேள்விக்கு…….

“ஏன் தெரியாம? வெல்டிங்…. அப்போ அப்போ பழக்கம் உண்டு, பக்கத்துக்கு ஏரியா தானேண்ணா…”,

வெற்றி ஆச்சர்யமாக அறிவழகனை பார்க்க……

“என்னோட தளபதி!”, என்று அறிவை ரமணன் சொல்ல….

இன்னும் ஆச்சர்யமாக பார்த்தான் வெற்றி….

அதற்குள் சந்தியா போன் செய்ய….. வெளியே போய் அவளை அழைத்துக் கொண்டு வெற்றி வந்தான்…..

சந்தியா உள்ளே வரும் போதே ரமணன் விழிகள் அவளை அளவெடுக்க……. மிக மிக அழகான பெண்….. ஓய்ந்த தோற்றம்…. ஆனாலும் அதில் ஒரு நிமிர்வு….. அருகில் வந்து தயங்கி வணக்கம் வைத்த அவளை பார்த்தான்…. கண்களில் பயம் இருந்தது….. அதே சமயம் இப்படி ஒரு நிலைமையில் இருக்கும் பதட்டமும் இருந்தது.

“உட்காரும்மா”, என்று ரமணன் சேரை காட்ட… வெற்றியை பார்த்துக் கொண்டே அமர்ந்தாள்.

கன்னத்தில் அடி வாங்கிய தடம் அப்பட்டமாக தெரிந்தது….

 ரமணன் அறிவழகனை பார்க்க…. அவன் சந்தியாவை வாய் திறந்து பார்த்துக் கொண்டிருந்தான்… இப்படி ஒரு அழகியா என்று….

“ஐயோ! இவன் வேற மடப்பய இப்படி பார்க்கிறானே!”, என்று நொந்த ரமணன், “வாயை மூடுடா”, என்று கைகளால் அறிவை நோக்கி சிறு சைகை செய்ய, டப்பென்று வாயை மூடினான் அவன்……. ஆனாலும் சந்தியாவை பார்த்த கண்களில் அப்படி ஒரு ஆர்வம்.

வெற்றி சாதரணமாக இருந்தால் கவனித்து இருப்பான்… ரமணன் சந்தியாவை சரியாக கணிக்க வேண்டுமே என்ற கவலை இருந்ததால்….. சந்தியாவிற்கு கண்களால் தைரியம் கொடுத்துக் கொண்டிருந்தான்.

“என்ன நடந்தது சொல்லும்மா”, என்று ரமணன் சொல்ல…….

சந்தியா நடந்ததை ஒன்று விடாமல் சொன்னாள்…… சொல்லும் போதே அவள் சொல்வதெல்லாம் உண்மை என்று ரமணனிற்கு புரிந்து விட்டது. இருந்தாலும் அவள் உண்மை தான் பேசுகிறாளா என்று தெரிந்து கொள்ள கேள்விகளை சற்று மாற்றி மாற்றி போட்டான்…..

எல்லாவற்றிற்கும் தடுமாறாமல் பதில் சொன்னாள்…. சொன்னதையே மறுபடியும் தெளிவாக சொன்னாள்….. பொய்யில்லை என்று நிச்சயமாகி விட….

எதற்காக என்ற காரணம் கணிக்க முடியவில்லை. ஏனென்றால் சந்தியா யாரை பற்றியும் தப்பாக சொல்லவில்லை……. அவளுக்கும் தெரியவில்லை.

“யாரவது தப்பா பார்த்தாங்களா…. தப்பா நடந்துகிட்டாங்களா”, என்று கேட்க….

“இல்லையில்லை”, என்று பயந்து பதறி பதில் சொன்னாள்….. அந்த மாதிரி சூழல்களை அவள் எதிர் கொண்டதில்லை என்பது அவள் பதிலளித்த விதத்தில் புரிந்தது….. அதை அந்த பெண் தாங்க மாட்டாள் என்றும் தெரிந்தது.

எங்கே நிறைய நேரமாக ரமணனை காணவில்லை…. பேசி முடித்து விட்டார்களா என்று பார்க்க வரா வந்தாள்…..

சந்தியாவை அங்கு பார்த்ததும், “யார் இது”, என்பது போல பார்க்க….

“என் தோஸ்த்துங்கம்மா”, என்ற வெற்றி… “நம்ம கமிஷனர் அம்மா”, என்று வராவை பற்றி சந்தியாவிடம் கூறவும், சந்தியா அவசரமாக வராவை பார்த்து விஷ் பண்ண…..

“மாஸ்டர்”, என்ற வரா…. “நான் கமிஷனர் அம்மா இல்லை கமிஷனர் வைஃப்”, என்று திருத்த…….

“அதாங்கம்மா சொன்னேன்”, என்றான் வெற்றி……

“ம்கூம்! இந்த அம்மாவை இவன் விட மாட்டான்”, என்பது போல ரமணனை பார்க்க….. கண்களால் அவளை பார்த்து சிரித்தான் ரமணன்.

ரமணனை பார்த்து கடுப்பில் கண்களை சுருக்கிய வரா… சந்தியாவின் மீது பார்வையை விட…. அவளின் அழகான முகம் மனதை கவர… ரசித்து பார்த்தவள்……. கன்னத்தில் அறையப்பட்ட தடமும் வீக்கமும் தெரிய……

“அச்சோ இது என்ன கன்னத்துல? யாரு அடிச்சா?”, என்று கவலையாக அக்கறையோடு கேட்கவும்… சந்தியாவின் கண்களில் மளமளவென்று கண்ணீர் வழிந்தது.. அழக் கூடாது என்று நினைத்தாலும் முடியவில்லை.

சந்தியா அழவும் பதறிய வரா…. “ஒன்னுமில்லை! எதுனாலும் பார்த்துக்கலாம்”, என்று ஆதரவாக அவளின் தோள் பற்ற….

சந்தியா கண்களை துடைத்தாலும் கண்ணீர் நிற்கவில்லை…..

“கூட்டிட்டு போய் ஏதாவது குடிக்க குடு…..”, என்று வராவிடம் ரமணன் சொல்ல……

“வா”, என்று வரா சந்தியாவை கூப்பிட……

“இல்லைங்க மேடம், வேண்டாம்”, என்று சந்தியா மறுக்க….

“ஹேய், நீ வாப்பா……”, என்று சந்தியாவின் கை பற்றி வரா கூட்டி போனாள்.    

சந்தியா சென்றதும் ரமணன் அறிவழகனை பார்க்க…… “நான் என்ன செய்யணும் அண்ணா?”, என்றான் கடமை வீரனாக அவன்.

“நடந்தது என்னன்னு கேட்ட தான….. வெற்றியோட போ, அவன் ஹாஸ்பிடலையும் ஆளுங்களையும் காட்டுவான்… பிரச்சனையை என்ன யார் பண்ணினா…… பணம் தான் விஷயமா இல்லை வேற ஏதாவது விஷயமான்னு தெரியணும்..”,

“வேற விஷயம்னா?”, என்று அறிவு இழுக்க…

“பொண்ணு…. பொண்ணாசை…… அது ரொம்ப டேஞ்சரஸ்…. இது சந்தியாவை பணத்துக்காக டார்கெட் பண்ணாங்களா…… இல்லை செஞ்ச தப்பை மறைக்க அவ மேல பழி போடறாங்களா…… இல்லை அந்த பொண்ணு தான் அவங்க டார்கெட்டா தெரியணும்……”, என்றான் சீரியசாக.

“ஹாஸ்பிடல் கம்ப்ளைன்ட் குடுக்கலை, அதனால போலிஸ் யாரையும் நேரடியா அனுப்ப முடியாது…… நீ என்ன விஷயம்னு பாரு.. அப்புறம் என்ன பண்றதுன்னு நான் பார்க்கிறேன்…”,

“சரிண்ணா….”,

“நீ கிளம்பு… வெற்றி யாருக்கும் தெரியாம ஆளுங்களை காட்டு….. அப்புறம் நீ வந்துடு….. அந்த பொண்ணு இங்க இருக்கட்டும்…. நீ காட்டிட்டு வா”, என்றான்.

வெற்றி முன் செல்ல….. வேறு ஏதாவது இருக்கிறதா என்று பின் தங்கிய அறிவழகனிடம்…… “ஏண்டா டேய், வெற்றி பார்க்கலை….. அந்த பொண்ணை அப்படி பார்க்கற…… தொலைச்சிடுவாண்டா”, என்றான் சிரிப்போடு.

“அண்ணா, அழகான பொண்ணுன்னா…. அப்படி எப்படி பார்க்காம இருக்க முடியும்…. ஒரு வேளை அந்த பொண்ணுக்கு என்னை பிடிச்சு லவ் ஆகிடுச்சுன்னா”, என்று ஆர்வமாக சொல்ல….

“நினைப்பு தான் பொழைப்பை கெடுக்கும்”, என்று ரமணன் கிண்டல் அடிக்க…..

“போங்கண்ணா”, என்றான் சலுகையாக அறிவு.

“விஷயம் கவனம்டா….”,

“கண்டிப்பா…. நீங்க சொன்னாலே எதுவும் செய்வேன்….. இப்போ அந்த பொண்ணு….. அதுக்காகவும் செய்வேன்”, என்றான்.

ரமணன் அவனை முறைக்க…. “எஸ்கேப்”, என்று அறிவு விரைந்து விட்டான்.                

வெற்றி அறிவழகனோடு போய் காட்டிவிட்டு அரை மணி நேரத்தில் வந்துவிட்டான்.

வரா அதுவரை சந்தியாவோடு பேசிக்கொண்டிருக்க… கல்பனாவும் இணைந்திருந்தாள்…. ராம் வந்து இவர்கள் பேசுவதை பார்த்தவன்…. ரமணன் முன் கோபமாக போய் நின்றான்…

“என்ன ராமண்ணா?”,

“என்ன வா? ஏண்டா எனக்கு இப்படி ஒரு கொடுமையை நீ செஞ்ச”,

“என்ன ராமண்ணா?”, என்றான் புரியாமல்…

“இவ்வளவு அழகா பொண்ணுங்க ஊருக்குள்ள இருக்கும் போது, எனக்கு இப்படி ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணி வெச்சிட்டியேடா”, என்று சிவாஜி பாணியில் சொல்ல….

“ஹேய் கல்ப்ஸ், ராமண்ணா என்ன சொல்லராருன்னு கேளு”, என்று கல்பனாவை கூப்பிட்டு ராம் பார்க்க பார்க்க விஷயத்தை சொல்ல….. கல்பனா ராமை துரத்த….

“நீ துரத்துரதனால உண்மை இல்லைன்னு ஆகிடுமா”, என்று அப்போதும் ராம் கல்பனாவை கடுப்படிக்க…..

தூரத்தில் இருந்து இதை சந்தியாவும் வராவும் பார்த்தாலும் என்ன விஷயம் என்று தெரியாமல் வேடிக்கை பார்க்க….

வெற்றி வந்துவிட்டான்…….

வெற்றியை பார்த்ததும் கல்பனா அமைதியாக……

சந்தியா கிளம்பவும்…. “நடந்ததை கெட்ட கனவா நினைச்சு மறந்துடு, எந்த பிரச்னையும் இல்லை போ…”, என்று தைரியம் சொன்ன ரமணன்…..

வெற்றியையும் பார்த்து… “நீ இது எதுலயும் தலையிடாத! யார் மேலயும் கை வைக்காத…. ஏன்னா நமக்கு எதிரி யார்ன்னும் தெரியலை…. எப்படின்னும் தெரியலை….. நீயும் ஜாக்கிரதையா இரு…. பிரச்சனை என்னன்னு தெரியற வரைக்கும் பொண்ணை தனியா விடாத”, என்று தனியாக வெற்றியிடம் சொன்னான்.

சந்தியாவும் வெற்றியும் போய்விட….

வரா ரமணனிடம்…… “என்ன பிரச்சனை”, என்று கேட்கவில்லை…. ரமணன் சொல்ல மாட்டான் என்று தெரியும்….. ஆனால் இருவரும் காதலர்களா என்று தெரிய……

“ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறாங்களா…. மாஸ்டர் நல்லா இருந்தாலும் இந்த பொண்ணோட அப்பியரன்ஸ்க்கு மேட்ச் கொஞ்சம் கம்மி தான். பொண்ணு ரொம்ப அழகு, ட்ரெஸ்ஸிங் ரொம்ப ஆர்டினரியா இருந்தாலும்…. நல்ல ஹய் ஃபை அப்பியரன்ஸ்… ஆனா மாஸ்டர் பக்கா சென்னை பாய்…. ஸ்லாங் கூட ரெண்டு பேருக்கும் மேட்ச் ஆகாது”, என்று சொல்ல….

“ச்சே! ச்சே! இல்லடா அந்த மாதிரி எல்லாம் இல்லை….. வெற்றியோட ஃபிரண்ட் தான்….. வெற்றியை எனக்கு நல்லா தெரியும். அவன் கூட இருக்குற பசங்களுக்கு எதாவது பிரச்சனைன்னா வருவான்… அப்படி தான் இதுவும்”, என்று சொன்னவன்….

அதே சமயம், “நீ சொன்னது எல்லாம் மேட்ச் இல்லை வரா! மனசு தான் மேட்ச் ஆகணும்…”, என்று சொல்லவும் தவறவில்லை.

ராம் அப்போதும்…… “இவ்வளவு அழகான பொண்ணை கல்யாணம் பண்ண இப்போ விரும்பலைன்னாலும் அப்புறம் விரும்பலாம்”, என்று சொல்ல…

“அப்படி கிடையாது ராமண்ணா….. நட்புன்றதும் ஒரு வகையான கற்பு தான்…. அதை வெற்றி மீறுவான்னு எனக்கு தோனலை…. பேசற பேச்சு, பார்க்கற பார்வை, எனக்கு தெரியும்…..”, 

ரமணனின் வார்த்தை உண்மை என்பதை போல…. சந்தியாவை ஆட்டோவில் ஏற்றி விட்ட வெற்றி….. ஆட்டோவை தொடர்ந்தான்.    

Advertisement