Advertisement

அத்தியாயம் ஏழு:

சந்தியா பஸ்ஸிற்காக அலைச்சல் படுவதை இரண்டு மாதமாக பார்த்தவன்….  மீனாட்சி மூலமாக சந்தியாவின் அம்மாவிடம், “டூ வீலர் வாங்கிக்கொள்ள பண உதவி செய்கிறேன், மெதுவாக திரும்ப கொடுத்தால் போதும்”, என்று சொல்ல வைத்தான் வெற்றி.

சந்தியா ஒத்துக்கொள்ள மாட்டாள் என்று தோன்றியதால் தான் அவளின் அம்மாவிடம் மீனாட்சியை பேச சொன்னான்.

சந்தியாவின் அம்மா ராஜம், “சரி”, என்று சொல்லலாமா என்று யோசிக்கும் போதே….. “ம்கூம், வேண்டவே வேண்டாம்!”, என்று மறுத்து விட்டாள் சந்தியா.

“ஏன்?”, என்று ஒரு மாலையில் சந்தியாவை டியுஷன் முடித்து மாடியில் இருந்து இறங்கும் சமயம் வழிமறித்து வெற்றி கேட்டான்.

“என்ன? ஏன்?”, என்று ஒன்றும் தெரியாதவள் போல சந்தியா சொல்ல…..

அவளுடன் நின்றிருந்த கீர்த்தனாவை பார்த்து….. “நீ ஓடு!”, என்றான் வெற்றி…..

கீர்த்தனா கீழிறங்கி விடவும்….. “ஏன் வண்டி வேண்டாம்னு சொன்ன?”, என்று நேரடியாக கேட்டான்.

“என்னால பணம் திரும்ப குடுக்க முடியாது…….”,

“உடனே வேண்டாம் மெதுவா குடு….”,

“ம்கூம்! முடியாது!”,

“ஏன்? அதான் இவ்வளவு சம்பாரிக்கிறல்ல….. உனக்காக மாசம் ஒரு ரெண்டு மூணு ஆயிரம் செலவு பண்ண மாட்டியா!”,

“முடியாது!”, என்றாள்.

“ஏன்?”,

“என் தங்கச்சிக்கு நகை பண்ணினதுல கடன் ஆகிடுச்சு, அதை அடைக்கணும்…”,

“அவ படிக்கிற பொண்ணு அவளுக்கு எதுக்கு நகை….”,

சிரித்தவள், “ கீர்த்தனா இல்லை… அகல்யான்னு என்னோட பெரிய தங்கச்சி கல்யாணமாகிடிச்சு……. போன வருஷம்……. அவளுக்கு என் பாட்டியோட நகையை வாங்கி போட்டு கல்யாணம் செஞ்சு குடுத்தோம்…. பாட்டிக்கு நான் திரும்ப செஞ்சி குடுக்கறேன்னு சொல்லியிருந்தேன்…”,

“வயசானவங்க, அவங்க நல்லா இருக்கும் போது என் வாக்குறுதியை நிறை வேத்தணும் இல்லையா?”, என்று அவனிடம் எதிர் கேள்வி கேட்டாள்.  

நகை விஷயம் வெற்றியிடம் பின்னுக்கு போய்விட்டது…. தங்கைக்கு கல்யாணம் என்றால், இவளுக்கு ஏன் ஆகவில்லை என்ற யோசனை மூளையில் ஓடும் போதே….

“அக்கா, உனக்கு அகல்யாக்கா போன்!”, என்று கீர்த்தனா சத்தம் கொடுக்க…..

“நான் போறேன்!”, என்று துள்ளி ஓடினாள் சந்தியா.

வெற்றி நேராக சென்றது மீனாட்சியிடம் தான்…. “அம்மா! இந்த சந்தியா பொண்ணுக்கு இன்னொரு தங்கச்சி இருக்கா!”, என்று அவளின் குடும்ப விவரங்களை கேட்டான்.

மீனாட்சி எல்லாவற்றையும் பிட்டு பிட்டு வைத்தார்….. அவளின் தந்தையின் தற்கொலை….. சித்தப்பாவின் மாரடைப்பு… கடன்காரர்கள் தொல்லை…. திருமணத்திற்கு நல்ல வரன் வர…. அதை தங்கைக்கு மணம் முடித்தது என்று.

வெற்றி அசந்து விட்டான், இப்படியும் பெண்ணா என்று…. மனம் முழுவதும் சந்தியாவை பற்றிய பிரமிப்பே….

அடுத்த நாள் காலை அவன் மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கும் போது…. சந்தியாவின் வீட்டு வாசலில் அவள் தெரிய…… “ஹோம் டியுஷன் போகாம இங்க என்ன பண்றா?”, என்ற கேள்வி ஓட…….

மாணவர்களிடம் இருந்து தள்ளி வந்தவன், “இன்னைக்கு டியுஷன் சொல்லி கொடுக்க போகலையா?”, என்றான். முன்பெல்லாம் யாரும் பாராத போது பேசியவன் இப்போது சகஜமாக பேசினான்.

அவனிடம் விரைந்து வந்தவள்…. “இன்னைக்கு சந்தியா எல்லா இடத்துக்கும் லீவ்!”, என்றாள்.

“ஏன், உடம்பு சரியில்லையா”, என்றான் அக்கரையாக….  

“ச்சே! ச்சே! இல்லை…… என் தங்கச்சி வர்றா, அவ வீட்டுக்காரர்க்கு திடீர்ன்னு யு எஸ் ல வேலை போல, அவங்க ஆபிஸ்ல போக சொல்லியிருக்காங்களாம். ரெண்டு பேரும் போறாங்க, இன்னைக்கு நைட் பிளைட்டாம்…… அதான் வீட்ல இருந்துகிட்டேன்”, என்றாள் முகம் முழுக்க சந்தோஷத்தோடு…

இப்படி யு எஸ் சிற்கு இவளல்லவா போயிருக்க வேண்டும், ஆனால் எவ்வளவு சந்தோஷத்தோடு சொல்கிறாள் என்றிருந்தது. பயிற்சி செய்யும் மாணவர்களின் கவனம் சந்தியா மீதும் இருப்பதை பார்த்தவன்…. “நீ போ”, என்று அனுப்பி விட்டான். 

சற்று நேரம் அவள் வெளியில் இருந்தாலும் பார்வைகள் அவளை வட்டமிடுவதை பார்த்திருக்கிறான்…. “ரொம்ப அழகு போல இவ!”, என்று மனதிற்குள் நினைப்பதும் உண்டு. 

சிறிது நேரம் கழித்து வீட்டு முன் டாக்சி நிற்க….. ஒரு யுவனும் யுவதியும் இறங்க….. அந்த பெண்ணின் யவ்வனத்தை விட பையன் இன்னும் கவர்ந்தான்.

சந்தியாவின் தங்கையும், தங்கை கணவரும் என்று பார்த்த மாத்திரத்தில் புரிந்தது….

“யார்?”, என்பது போல ஞானவேலும் வெற்றிவேலுடன் சேர்ந்து பார்த்தான்…… “டேய் ஞானம்! இந்த பையனை போய் சந்தியா வேண்டாம்னு சொல்லி தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வெச்சிருக்காடா”, என்றான்.

ஞானவேலும் ஒத்துக் கொண்டான், “ஆளு சூப்பர்ரா இருக்கான்…. பார்த்தாலே வசதி தெரியுது….. வேண்டாம்னு சொல்லி தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வெச்சிருக்கா! பெரிய மனசு!”, என்று தம்பியும் சொல்ல…..

அண்ணனும் அதையே தான் நினைத்தான்…….

நாள் முழுவதும் அன்று சந்தியாவின் வீடு பரபரப்பாக இருந்தது…..    

மாலை சந்தியாவின் தங்கை அகல்யாவும் அவளின் கணவனும்  வந்து வெற்றியை பார்த்தவர்கள், “தேங்க்ஸ்! நீங்க நிறைய ஹெல்ப் பண்ணுணிங்களாமே”, என்றனர்..

“அதெல்லாம் ஒன்னுமில்லை…. அவங்க எல்லோரும் உழைக்கறாங்க!”, என்று வெற்றி சொல்ல….

“அவங்களை பார்த்துக்கோங்க….. நாங்களும் தூரமா போறோம், பக்கத்துல யாரும் கிடையாது!”, என்றாள் அகல்யா….

“ம், இது வேறா”, என்று தோன்றிய போதும், வெற்றியின் தலை சந்தியாவின் பொருட்டு தானாக ஆடியது….

“உங்க போன் நம்பர் குடுங்களேன்… அவங்களோட பேசினாலும் ஏதாவது பிரச்சனைன்னா யாரும் சொல்ல மாட்டாங்க… எப்பவாவது உங்களோட பேசி அவங்க சௌக்கியத்தை தெரிஞ்சிக்குவோம்”, என்றான் அகல்யாவின் கணவன்.

வெற்றி நம்பர் கொடுக்கவும், அவர்கள் சொல்லிக் கொண்டு கிளம்பினர்……

அகல்யாவின் கணவன் பேசிய விதம் வெற்றியை கவர்ந்தது……  “இந்த சந்தியா ஏன் இவனை வேண்டாம் என்றாள்….. பேசாமல் திருமணம் செய்துக் கொண்டு உதவியிருக்கலாமே”, என்று தான் வெற்றிக்கு தோன்றியது….

அந்த எண்ணம் அன்று இரவு நேர்ப்பட்ட சந்தியாவிடம் வெற்றியின் கண்கள் அப்பட்டமாக பிரதிபலிக்க… 

“ஏன் இப்படி பார்க்கறீங்க?”,

“வீட்டுக்கு வா!”, என்று உள் அழைத்தான்……

வீட்டினுள் சந்தியா இதுவரை சென்றதே இல்லை……. மீனாட்சியம்மாவிடம் கூட வெளியில் நின்று தான் பேசுவாள்.

“எதுக்கு?”.

“வா”, என்றான்… அவனுக்கு கேட்டே ஆக வேண்டி இருந்தது.  

தயங்கி உள்ளே சென்றவளிடம்…..

“நீயென்னா முட்டாளா?”, என்றான் வெற்றி.

டைனிங் ரூமில் இருந்த ஞானவேலுக்கும் மீனாட்சிக்கும் நன்கு கேட்க…. எட்டி பார்த்தனர்…. இவன் சந்தியாவிடம் சீரியசாக பேசுவதை பார்த்து நின்றனர்…

ஏதோ தப்பு செய்துவிட்டோமா என்று பயந்து நின்ற சந்தியா….. “என்ன பண்ணினேன்?”, என்றாள்.

“ம், வெங்காயம் பண்ண!”, என்று சந்தியாவிடம் எரிந்து விழுந்தான் வெற்றி…     

சந்தியா எதற்கு இவ்வளவு கோபம் என்று புரியாமல் விக்கித்து நிற்கவும்….

“இவ்வளவு நல்ல மாப்பிள்ளையை ஏன் வேண்டாம்னு சொல்லிட்டு, இப்படி பண்ணின!”, என்றான்.

“இதுதான் மேட்டரா, அற்ப பதரே!”, என்பது போல வெற்றியை ஒரு லுக் விட்டு இடுப்பில் கைவைத்து முறைத்தாள் சந்தியா.

“பண்றது எல்லாம் பண்ணிட்டு, என்ன லுக்கு”, என்றான் சீரியசாக வெற்றி.. “அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டு போய் அமெரிக்கால செட்டில் ஆகாம.. இப்படி காலையில அஞ்சு மணிக்கு எழுந்து உழைக்க ஆரம்பிச்சு, இப்படி ராத்திரி ஒன்பது மணிவரைக்கும் உழைக்கணும்னு என்ன?”,

சந்தியா ஏதோ பேச வர…

“சும்மா குடும்பத்தை காப்பாத்தணும்னு சப்பை கட்டு கட்டாத…. கல்யாணம் பண்ணியிருந்தா நீ கிழிச்ச கோட்டை அந்த பையன் தாண்டியிருக்க மாட்டான்…… அவன் மூலமா உன் குடும்பத்துக்கு ஹெல்ப் பண்ணியிருக்கலாம்”, என்று பொரிந்தான்.

அவனுக்கு எப்படி புரிய வைப்பது என்று யோசித்தவள், “உங்களுக்கு எதுக்கு என் மேல இவ்வளவு அக்கறை?”, என்றாள்.  

“அது, அது நீ என் ஃபிரண்ட்…. நீ நல்லாயிருக்கணும்னு….”, என்றான் பட்டென்று..

“அதேதான்! அகல்யா என் தங்கச்சி! ஒரு பொருள் பெஸ்ட்டா இருக்கும் போது என் தங்கச்சிக்கு கிடைக்கணும், அவ நல்லா இருக்கணும்னு நினைச்சேன்!”, என்றாள்.

“உன்ட்ட பேசி ஜெயிக்க முடியாது!”, என்றான் சலிப்பாக…… “உனக்கு புரியலை, உன் அக்கான்னா கூட பரவாயில்லை…. உந்தங்கச்சிக்கு கல்யாணம் ஆன பிறகு…. உனக்கு கல்யாணத்துக்கு பார்க்கும் போது கேள்வி வராதா?”, என்றான்………

சந்தியாவிற்கு மனம் மிகவும் நெகிழ்ந்தது….. “ஏன் இப்படி டென்ஷன்? கூல்!”, என்றாள். ஞானவேலும் மீனாட்சியும் இவர்கள் பேசுவதை வாய் திறந்து பார்த்தனர்….

அவர்களின் அருகில் வந்த இருவரும் அவர்களுக்கு கேட்கும்படியாக…… “எப்போர்ந்துடா இப்படி?”, என்று மீனாட்சி ஞானவேலிடம் கேட்க….

“ம், எனக்கே இப்ப தான் தெரியும் …… இவங்க இவ்வளவு ஃபிரண்ட்ஸ்ன்னு”, என்றான் கடுப்பாக ஞானவேல்.

“உனக்கு ஏண்டா காண்டு?”,

“அன்”, என்ற ஞானவேல்… “இது அக்கா……”, என்றான் சந்தியாவை காட்டி….. “தங்கச்சிக்கு எவ்வளவு சூப்பரா மாப்பிள்ளை பார்த்து வெச்சிருக்கு….. இவனும் இருக்கானே!”, என்று வெற்றியை பார்த்து பல்லை கடித்தவன்…..

“இவனும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்றான், எனக்கும் பொண்ணு பார்த்து தர மாட்டேங்கறான்….”,

“நீ காதல் கல்யாணம் பண்ணிக்கோடா”, என்று மீனாட்சி அட்வைஸ் செய்ய….

“கடுப்பை கிளப்பாத கிழவி….. உன் பையன் என்னை லவ் பண்ண விட்டுட்டு தான் வேலையை பார்ப்பான்…. போ, போ, என் சார்பா நீயே ஏதாவது பொண்ணுக்கு லெட்டர் குடு!”, என்றான்.

சந்தியா நன்றாக சிரித்து விட, வெற்றி புன்னகைத்தான்.     

ஞானவேலுக்கு அண்ணனை பற்றி தெரியும்…. எந்த பிரச்சனை, என்றாலும் முன் நிற்பவன்….. காதல் என்று யாராவது உதவி கேட்டு வரும் போது பின்னடித்து விடுவான்.  காதல் திருமணங்களை அவ்வளவாக வெற்றி ஆதரிப்பது இல்லை….. பெற்றோர் சார்பாக தான் பேசுவான்.    

“டேய்! சிரிக்கதடா! சட்டு புட்டுன்னு கல்யாணத்தை பண்ற வழியை பாரு…..”,

“போடா!”, என்று வெற்றி இடத்தை விட்டு நகர போக…..

“அண்ணா…. டேய்! எங்க போற….? இரு!………”,

“அம்மா! அந்த தரகர் குடுத்த பொண்ணு போட்டோ எல்லாம் எடுத்துட்டு வா! இன்னைக்கு இவனை விடறதில்லை!”, என்று வெற்றியின் கையை பிடித்துக் கொண்டான்.

ஒரு மாதமாக தீவிரமாக மீனாட்சியும் ஞானவேலும் அண்ணனுக்கு பெண் பார்க்க முனைந்தனர்….. அதான் இந்த பெண்களின் போட்டோ வில் வந்து நின்றிருந்தது.   

வெற்றி இன்னும் பிடி கொடுக்கவில்லை…..

கை உருவ போன வெற்றியை குறுக்கு காட்டி நிறுத்திய சந்தியா…. “போட்டோ பாக்காம போகக் கூடாது!”, என்றாள் அவளின் பங்குக்கு…..  

“நான் மாட்டேன்”, என்று வெற்றி சொல்ல……

“அய்யே! என்ன இது டூ மச் அலப்பர……? பொண்ணு போட்டோ தான் காட்டுறோம். பொண்ணைக் காட்டலை….. அப்படி உட்காருங்க!”, என்று சோபாவை காட்டினாள்.

அதற்குள் ஞானவேல் போட்டோவை மீனாட்சி கையில் இருந்து வாங்கி பார்க்க துவங்கினான்…. அவனும் இன்னும் போட்டோ பார்க்கவில்லை………

ஒவ்வொன்றாக பார்த்து விட்டு சந்தியாவிடம் கொடுத்தான்…..  சந்தியா பார்த்துவிட்டு வெற்றியிடம் கொடுக்காமல் மீண்டும் ஞானவேலிடம் கொடுத்தாள்…..

ஞானவேல் எப்படி என்பது போல சந்தியாவை பார்க்க…

“சாத்வீகம், பிரச்சோதகம், பயானகம்”, என்று ரஜினி வழியில் சந்தியா அந்த பெண்களை அலச முற்பட…..

ஞானவேல், “ஜில், ஜங், ஜக்”, என்று வடிவேலு பாணியில் அலச முற்பட….

இருவரும் கடைசி வரை போட்டோவை மட்டும் வெற்றியிடம் காட்டவேயில்லை…

சுத்தமாக கால் மணிநேரம் சந்தியாவும் வெற்றியும் பெண்களின் விவரங்களை பேச….. “டேய், என்னடா நடக்குது?”, என்று வெற்றி சத்தம் போட்டான்.

“இந்த அம்மா கிழவியா முதல்ல நல்ல கண் ஆசுபத்திரிக்கு கூட்டிட்டு போகணும்….. ஒன்னும் சகிக்கலை! போட்டோ வாங்கி வெச்சிருக்கு பாரு, போட்டோ தான் இப்படின்னா மத்த விஷயமும் ஒன்னும் திருப்தியில்லை”, என்று சீரியசாகவே திட்டினான் ஞானவேல்.

மீனாட்சி சந்தியாவை பார்க்க……

”நிஜம்மா, ஓகே சொல்ற மாதிரி ஒன்னு கூட இல்லைம்மா”, என்றாள் அவளும்….  

“இவன் எப்படிபட்ட பொண்ணு வேணும்னு சொன்னா, அதை நான் சொல்வேன். இவன் எதுவும் சொல்ல மாட்டேங்கறான்”, என்று மீனாட்சி சலிக்கவும்………

“எனக்கு சொல்ல தெரியலைம்மா?”, என்றான் வெற்றி…

“இப்படி சொன்னா எப்படி….?”, என்று மீனாட்சி சலிக்க……

“கல்யாணதுக்குன்னு பார்த்துட்டு…. ஒரு பொண்ணை எப்படி வேண்டாம்னு சொல்றது”, என்றான்…..

“பத்து தடவை கொஞ்சம் கூட தயவு தாட்சண்யம் பார்க்காம என் சாமான் செட்டை தூக்கி வெளில வீசிடுவேன்னு சொன்ன வாயா இது…….”, என்று மைன்ட் வாய்ஸோடு சந்தியா பார்க்கவும்…..

“என்ன”, என்றான் அவளை நோக்கி வெற்றி.

“நீங்க நல்லவங்கன்னு தெரியும், ஆனா இவ்வளோ நல்லவங்கன்னு தெரியாது!”, என்றாள்.

“என்ன நக்கலா?”,

“ம்கூம்! விக்கல்!”, என்றாள் ரைமிங்காக சந்தியா.

ஞானவேலும் மீனாட்சியும் சிரிக்க…. வெற்றி முறைத்தான் சந்தியாவை பார்த்து……

“பின்ன, நேர்ல பார்த்துட்டு வேண்டாம்னு சொன்னா மனசு கஷ்டப்படும்னு தான் போட்டோ குடுக்கறது….. நான் அதையே பார்க்க மாட்டேன்னா……”, என்றாள் கடுப்பாக…..

“எனக்கு போட்டோ பார்த்தெல்லாம் சொல்ல தெரியாது…. பாரு, நீ அழகா இருக்கன்னு எங்கம்மா எத்தனை தடவை என்கிட்டே சொல்லியிருப்பாங்க தெரியுமா…. எங்கண்ணுக்கு இன்னும் அப்படி தெரிஞ்சதேயில்லை, இதுல போட்டோ பார்த்து நான் எப்படி சொல்ல?”, என்று வெற்றியும் பதிலுக்கு கடுப்படிக்க…….

“இப்போ என்ன? சந்தியா அழகுன்றியா? இல்லைன்றியா?”, என்று ஞானவேல் மிக முக்கியமான சந்தேகத்தை எழுப்ப……

“இப்போ அது ரொம்ப முக்கியமா?”, என்று வெற்றி கிண்டலாக கேட்க……

மிகவும் கடுப்பான சந்தியா, “இது என்ன பேச்சு? நான் ரசிக்கவில்லை!”, என்பது போல வெற்றியை ஒரு பார்வை பார்த்து  வெளியே போகப் போக…..    

அவள் வெளியே போக முடியாமல் இடையில் நின்றவன்….. “சரி போ! உனக்காக பொய்யா ஒத்துக்கறேன், நீ அழகு தான்!”, என்றான்….

மீனாட்சியை பார்த்த சந்தியா, “மா! யாரும் இவருக்கு பொண்ணு செலக்ட் பண்ண வேண்டாம்! அவரே பண்ணட்டும்…… ரொம்ப அழகா பண்ணுவார்!”, என்று நக்கலாக சொன்னவள்….

“குடுங்க! அந்த போட்டோவை குடுங்க! பார்க்கட்டும்!”, என்று போட்டோவை எடுத்து வெற்றியிடம் கொடுக்கப் போக….

“நான் பார்க்க மாட்டேன்!”, என்பது போல வெற்றி வெளியில் விரைந்து விட….

சந்தியாவும் ஞானவேலும் சீரியசாக மீனாட்சியிடம், “எந்த பொண்ணும் நல்லாயில்லை……. குடும்ப பின்னணி ஒன்னும் சொல்ற மாதிரி இல்லை…. முக்கியமா படிச்சிருக்கலை……. இப்படி எல்லாம் ஜாதகம் வாங்காத!”, என்றனர்.

“அவன் படிக்கலை…… வெல்டிங் பட்டறை வெச்சிருக்கான்… ஆளும் கொஞ்சம் கருப்புன்னு……. பொண்ணு கொஞ்சம் நல்லா இருந்தா, படிச்சிருந்தா ஒத்துக்க மாட்டேங்குது..”,

“அவனோட சம்பாதனை பக்கத்துல பொண்ணு வீட்டுக்காரங்க நிக்க கூட முடியாது, அவ்வளவு கிராக்கி பண்றாங்க!”, என்றார் கவலையாக மீனாட்சி.

“மா! நீஎன்னம்மா? வெற்றிக்கு சூப்பரா பொண்ணு கிடைக்கும்! அவனுக்கு என்ன குறை!”, என்றான் ஞானவேல்….

“ஆமாம்மா….. நீங்க கவலைப்படாதீங்க சூப்பரா பொண்ணு நாம செலக்ட் பண்ணலாம்”, என்றாள் சந்தியாவும்.

மீனாட்சியின் கண்களில் கடகடவென்று நீர் திரண்டது…… “என் மகனுக்கு என்னடா? ராஜா அவன்! ஆனா இந்த பொண்ணுங்க வெல்டிங் பட்டறை வெச்சிருக்குறவனை எங்க கல்யாணம் பண்ணிக்கிறேன் சொல்லுதுங்க…”, என்றார்.

“மா! வெற்றிக்கு நல்ல பொண்ணா பார்க்க வேண்டியது என் பொறுப்பு! நீ கவலைப்படாத”, என்று மீனாட்சியை தோளோடு அணைத்து ஞானவேல் ஆறுதல் சொல்லவும்……

சந்தியா அதற்கு ஆதரவாக புன்னகைத்தாள்.   

இப்படியெல்லாம் தன்னை பற்றி பேச்சுக்கள் ஓடுகின்றது என்று தெரியாமல் வெற்றி அவன் பாட்டிற்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.  

Advertisement