Advertisement

அத்தியாயம் நான்கு:

வெற்றிக்கு பக்கத்தில் இருந்து பார்த்திருந்தால் சந்தியாவின் கண்களில் தோன்றிய பயம் புரிந்திருக்கும்…… அதை பார்த்திருந்தால் வெற்றியின் கோபமும் சற்று மட்டுப்பட்டிருக்குமோ என்னவோ….

வெற்றி இயல்பில் மிகவும் நல்லவன்… எல்லோருக்கும் உதவுகள் புரிபவன். அக்கம் பக்கம் பிரச்சனை என்றாலும் முன் நிற்பவன். ஆனால் யாரும் தங்களை ஏய்த்து விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாய் இருப்பவன்.

அந்த விஷயத்தில் மீனாட்சியம்மா ஏமாந்து போவார்… அவரிடம் யாரும் உருக்கமாக பேசிவிட்டால் உண்மை என்று நம்பி விடுவார்.

அதை இந்த பெண் செய்கிறதோ என்ற சந்தேகம் வெற்றிக்கு…. அதான் இவ்வளவு கடுமை.    

அதுவும் சாதரணமாக எல்லோரும் பயந்து நிற்கும் தங்களிடம் அந்த பெண் சகஜமாக பேசியது… அவளை மீனாட்சிக்கு பிடித்து போனது…. காலையில் தொட்டியை தூக்க தன்னிடம் வந்து கேட்காதது…….. சந்தியா மீது அவ்வளவு நல்ல அப்பிராயத்தை கொடுக்கவில்லை. 

அதனால் மிகவும் கடுமையாக அவளை பார்த்து முறைத்து நின்றான்.    

தூரமாக இருந்ததினால் சந்தியா தன்னை பார்த்ததும் தடுமாறி நிற்பது மட்டும் தான் தெரிந்தது……

மீனாட்சியம்மாவிடம் ராஜமும் கேட்டுவிட்டார், சந்தியாவும் கேட்டுவிட்டாள்…… இப்போது இவனிடம் கேட்க வேண்டுமா என்னவோ தெரியவில்லையே என்று சந்தியா தடுமாறினாள்.

போர்ட் மாட்டுவதா? வேண்டாமா?

ஸ்டூலில் ஏறி நின்று மாட்ட முயற்சித்து கொண்டிருந்தவள்…. அது ஒரு மதிய நேரம்… வெற்றியின் வெல்டிங் பட்டறையில் அதிக ஆட்கள் இல்லை….. அவனிடம் வேலை செய்யும் பையன்கள் உணவுக்கு போயிருந்தனர்…..

எப்போதும் அவர்கள் வந்த பிறகு தான் இவன் உணவுண்ண செல்வான்…. நான் உண்ட பிறகு இந்த பையன்கள் போகட்டும் என்ற எண்ணமெல்லாம் இருக்காது.. 

அவனிடம் கிட்டத்தட்ட பத்து பையன்கள் வேலையில் இருந்தனர்….. ஓரிருவர் தவிர மற்றவர்கள் சென்றிருந்தனர். 

வெற்றிக்கு ஏனோ தன்னை பிடிக்கவில்லை என்று இங்கு வந்ததிலிருந்து நிகழ்ந்த சிற்சிறு நிகழ்வுகளால் உணர்ந்திருந்த சந்தியா மேலும் மேலும் அவனிடம் பிரச்சனையை வளர்க விரும்பாமல் வெற்றியிடமே கேட்டு விடுவோம் என்று  சந்தியா பட்டறையை நோக்கி நடந்தாள்….

சந்தியா தன்னை நோக்கி வருவதை அறிந்த வெற்றியும் அசையாமல் நின்றான்…. அவளின் உடல் மொழியை பார்த்த படி…… அலட்சியம் திமிர் மாதிரி தென்படுகிறதா என்று.

அப்படி எதுவும் அவனுக்கு தெரியவில்லை….. ஒரு மாதிரி தயங்கி தயங்கி தான் அவனை நோக்கி வந்தாள்.  ஓகே! சற்று பயம் இருக்கிறது என்று மனதை தேற்றிக்கொண்டான்.

தைரியமான பெண் தான் சந்தியா, ஆனால் வெற்றி பயத்தைக் கொடுத்தான்…. அவனின் ரௌடி போன்ற தோற்றம்….. அவனின் கருமை நிற உடுப்பு…..  சிறு பெண் தானே…. 

“நாங்க டியுஷன் எடுக்க… துணி தைக்க போர்ட் மாட்டிக்கட்டுங்களா”, என்றாள் மிகவும் மரியாதையாக…

இந்த வார்த்தைகள் இயல்பாக வருகிறதா இல்லை இந்த பெண் நடிக்கிறதா என்று ஆராய்ந்தான்… இயல்பாக தான் வருகிறது என்று மனம் அடித்து சொன்னது.. இருந்தாலும் மூளை ஆராய்ச்சி பார்வையை விடவில்லை.  

சந்தியாவின் கேள்விக்கு பதிலாக, “இது போர்ட் மாட்டுறதுக்கு முன்னாடி கேட்கணும்…….”, என்றான் விரைப்பாக….

“இல்லையில்லை, இன்னும் மாட்டலை…..”, என்றாள் அவசரமாக.

“அப்போ அந்த போர்டு….”,

“அம்மா கிட்ட கேட்டேன்…..”,

“எங்கம்மா எல்லாத்துக்கும் சரி சரின்னு தலையாட்டுவாங்க! அவங்க கிட்ட கேட்க கூடாது! என்கிட்டே தான் கேட்கணும்….. அவங்க சொல்றது எல்லாம் நான் ஒத்துக்க மாட்டேன்”, என்றான்.

“சரி”, என்று உடனே தலையாட்டினாள்……

“என்கிட்ட சரி சரின்னு சொல்லிட்டு, எங்கம்மா மூலமா ஏதாவது காரியம் சாதிச்சிக்க நினைச்சா….. அடுத்த நிமிஷம் கொஞ்சம் கூட யோசிக்க மாட்டேன், சாமானை தூக்கி வெளிய வீசிடுவேன்….”, என்றான் கடுமையாக…..

மனதிற்கு மிகவும் கஷ்டமாக போய்விட்டது சந்தியாவிற்கு….. நேற்றும் இப்படி தான் தூக்கி வீசுவேன் என்று பேசுகிறான், இன்றும் இப்படி தான் பேசுகிறான்…. ஆனால் முகத்தில் எதுவும் காட்டவில்லை அமைதியாக நின்றாள்.   

“வாடகை எங்கம்மா தான் வாங்குவாங்க, அது மட்டும் தான் அவங்க பொறுப்பு…… மத்தபடி வீட்டை பொருத்தவரை ஒரு ஆணி கூட எனக்கு தெரியாம அடிக்க கூடாது, நான் விடவும் மாட்டேன்! புரிஞ்சுதா”, என்றான்.

“சரி”, என்று தலையாட்டியவள்…. “நான் போர்ட் மாட்டிக்கட்டுமா?”, என்று கண்களில் மறுத்து விடுவானோ என்ற பயத்துடன் வெற்றியை பார்த்து சந்தியா கேட்ட போது …. இந்த பெண் நடிக்கிறாளோ என்ற எண்ணத்தையும் மீறி வெற்றியின் மனமே சற்று இளகியது தான்….

ஆனாலும் கறாராக….. “எல்லாத்துக்கும் நீயே அலையற… உங்கப்பா, தாத்தா கேட்க மாட்டாங்களா?”,

“தாத்தாக்கு ஊரை விட்டு வந்ததுனால மனசுக்கு வருத்தம், வெளில வர கொஞ்ச நாள் ஆகும்….. சித்தப்பாக்கு உடம்பு சரியில்லை, அதனால அவர் வர நினைச்சாலும், நாங்க விடறதில்லை”, என்றாள்.

அவள் உண்மையை சொல்கிறாள் என்று சந்தியா பதில் சொன்ன விதத்திலேயே புரிந்தது ….

“தாத்தா வெளில வரமாட்டார்…. சித்தப்பாக்கு உடம்பு சரியில்லைனா…. வாடகை எப்படி குடுப்பீங்க…… இத்தனை பேர் எப்படி சாப்பிடுவீங்க…. ரெண்டு பேர் காலேஜ் போறாங்க….  என்ன வருமானம் உங்களுக்கு….”, என்றான் வீட்டை வாடகைக்கு விட்டவனாக…

“தாத்தா கொஞ்சம் பணம் குடுப்பார்…. அப்புறம் நான் வேலைக்கு போவேன்…. சாயந்தரம் டியுஷன் எடுப்பேன்……. அம்மா துணி தைப்பாங்க”, என்றாள்.

“உங்கப்பா?”,

“அப்பா தவறிட்டார்…..”,

அப்பா இல்லை என்றதும் முதல் முறையாக அவள் மேல் இரக்கம் வந்தது…..  “என்ன வேலைக்கு போகப் போற……”,

“இனிமே தான் தேடணும்”, என்று சொன்னதும்…..

“கிழிஞ்சது…”, என்று மனதிற்குள் நினைத்தவன், “அப்போ வேலை கிடையாது….”, என்றான் தீர்க்கமாக பார்த்தபடி…..

“கிடைச்சிடும்! தேடிக்குவேன்!”, என்றாள் நம்பிக்கையோடு….

“அடிப் பெண்ணே!”, என்று இரக்கமாக ஒரு பார்வை பார்த்தான் வெற்றி….. ஏனோ அந்த பெண் பேசப் பேச பாவமாக இருந்தது….. அவளும் அவள் அம்மாவும் தான் வீட்டில் இப்போதைக்கு சம்பாதிப்பவர்கள் என்று புரிந்தது.      

இதற்கு சந்தியாவை பற்றி முழு விவரங்களும்  தெரியாது….  தன்னுடைய சந்தேகப் பார்வையை எல்லாம் ஒதுக்கி அவளின் உண்மை நிலையை ஆராய முற்பட்டான்.

“எந்த கிளாஸ் பசங்களுக்கு ட்யுஷன் எடுப்ப…..?”,

“எல்லா கிளாசுக்கும் எடுப்பேன்….. எம் எஸ் சீ மேத்ஸ் படிச்சிருக்கேன்….”,

“டீச்சருக்கு படிச்சிருக்கியா”, என்று அவள் பீ எட் படித்திருக்கிறாளா என்று சரியாக விஷயத்தை பிடித்தான்……

“இல்லை”, என்றாள்…..

“அப்புறம் எப்படி எடுப்ப….?”,

“மேத்ஸ் நல்லா வரும், ஊர்ல கூட பிளஸ் டூக்கு எடுத்துட்டு இருந்தேன்…..”,

“ஆனா ஸ்கூல்ல வேலை கிடைக்காது…. ஸ்கூல்ல வேலை இல்லைன்னா ட்யுஷனுக்கு ஆள் கிடைக்கறது கஷ்டம், இங்க அதெல்லாம் பார்ப்பாங்க”, என்றான்……

பதினைந்து வயதில் இருந்து உழைப்பவன், விஷயத்தை சரியாக புரிந்து கொள்வான்…. படிப்பு தான் கிடையாது…… உலக ஞானம் அதிகம்…..

சந்தியாவிற்கு பயம் வந்தது…. அது அவளின் கண்களில் நன்கு பிரதிபலித்தது…..

“அனுப்பமாட்டாங்களா”, என்று அவனிடமே கேட்டாள்…..

“சொன்னா தப்பா எடுத்துக்காத, இந்த பணம் வரும், அதுல இந்த செலவை சமாளிக்கலாம்னு வர்றதுக்கு முன்னாடி நினைக்க கூடாது…….. எதுவும் வந்தா தான் நிஜம்.. இது என்ன கவர்மென்ட் வேலையா……. டான்னு ஒன்னாம் தேதியானா சம்பளம் வர்றதுக்கு..”,

“டியூஷனுக்கு பசங்க வந்தாலும் உடனே பணம் குடுப்பாங்கன்னு சொல்ல முடியாது! ஒருத்தன் நாலாம் தேதி குடுப்பான், ஒருத்தன் பத்தாம் தேதி குடுப்பான்….. ஒருத்தன் குடுக்காமையே இழுதடிப்பான்.. உங்க ஊர் மாதிரி நினைக்காத…. இது சென்னை…..”, 

“ஐயோ, இது சரிவராதா”, என்ற ஒரு ஓய்ந்த தோற்றம் நிமிடத்தில் அவளிடம் தோன்றியது.

அதை பார்த்த வெற்றி… “அப்படி பயப்பட ஒன்னுமில்லை… வருவாங்க…… இருந்தாலும் பெருசா வருமானம் பார்க்க முடியாது, சின்ன கிளாஸ் பசங்க தான் வருவாங்க!”, என்றான்.

இருந்தாலும் அவளின் முகம் தெளியவில்லை…. “சரி”, என்று தலையாட்டியவள் …. அடுத்து அவன் என்ன சொல்ல போகிறான் என்பது போல நின்றாள்.

அவளுக்கு தந்தை இல்லை… குடும்பத்திற்காக உழைக்க முற்படுகிறாள் என்பது வெற்றிக்கு ஒரு இளக்கத்தை கொடுத்தது… எது எப்படியோ உழைப்பாளிகளை மதிப்பவன் அவன்….

“போ”, என்றான்.

“போர்ட் மாட்டிக்கட்டுங்களா”, என்றாள்.

“சரி”, என்பது போல தலையசைத்தவன்……. “என்னை கேட்காம சொல்லாம சும்மா எங்கம்மா கிட்ட சொல்லிட்டு எதுவும் செய்ய கூடாது….. புரிஞ்சதா!”, என்றான்.

“ம்”, என்று தலையாட்டி சென்றாள்.

அவனை நோக்கி வந்த போது இருந்த வேகம் கூட போகும் போது இருக்கவில்லை…… வெற்றியின் பேச்சில் தடுமாறி இருக்கிறாள் என்று அவனுக்கு புரிந்தது… ஆனால் வேறு வழியில்லையே உண்மை நிலவரம் அந்த பெண்ணுக்கு தெரியவேண்டும் அல்லவா?

வாழ்க்கை ஒன்றும் விக்ரமன் படத்தில் வரும் பாட்டில் வருவது போல ஒரே பாட்டில் பணக்காரர் ஆகிவிட முடியாதே…

உழைப்பு மட்டும் இருந்தால் போதாது….. அது சரியாக பரிமாணம் பெற வேண்டும்… அதன் பிரயோஜனங்கள் உழைப்பவரை சேர வேண்டும்.

இங்கு என்ன நடக்கிறது…… உழைப்பவர் பல இடங்களில் அதை புத்திசாலித்தனமாக பிரயோஜனப்படுத்திக் கொள்ளாமல், அவர்களின் உழைப்பு அவர்களுக்கு எந்த பலனையும் தராமல் வீணாக போகும்…. இல்லை அவரின் உழைப்பில் அடுத்தவர் பயன் பெறுவர்…..

மிக சரியாக அது சிலருக்கு மட்டுமே பயன் கொடுக்கும்…. அதில் ஒருவன் வெற்றி….

என்னவோ இந்த பெண் போடும் கணக்கு சரியாக வருமா என்று அவனுக்கு தோன்றியது………

என்னவோ அவர்கள் பாடு என்று நினைத்தவன் அவன் வேலைகளை பார்க்க முற்பட்டு…… சந்தியாவையும் மறந்து விட்டான்…. சந்தியாவிடம் நேரில் பேசிவிட்டதால் இப்போது அதிகமாக கோபம் கூட இல்லை…..

அதன் பிறகு அமைதியாக தான் இருந்தான் அவன்…… அடுத்து வந்த ஒரு வாரமமும் அவர்களை கவனித்தான்……. ம்கூம், அத்தனை பேர் இருந்தாலும் வீட்டில் சத்தமில்லை…..

துணி தைக்க ஒன்றிரண்டு பேர் கொடுத்த மாதிரி தான் இருந்தது….. அவளுக்கு டியூஷனுக்கு வாண்டுகள் ஒன்றிரண்டு சேர்ந்தது….

அதன் பிறகு அவர்களை அவ்வளவாக கவனிப்பதை விட்டு விட்டான்….. மற்ற குடித்தனக்கரார்கள் போல இவர்களும் பத்தோடு பதினொன்று…

அவனாக முன்வந்து கவனிக்காவிட்டாலும் அவன் பார்வையில் நன்கு பட்டது… சந்தியா தான் எந்த சின்ன சின்ன வேலைக்கும் அலைவது…. அவளாவது பார்வையில் படுவாள்….. கீர்த்தனா, ம்கூம், காலையில் காலேஜ் போகும்போது வெளியில் வருவாள்… பின்பு வந்து வீட்டினுள் புகுந்து கொண்டால், மறுநாள் காலை தான்…   

மீனாட்சி மூலமாக அவ்வப்போது உபரியாக….. “அந்த சந்தியா பொண்ணு இன்டர்வியூக்கு போகுது போல, எதுவும் செட் ஆக மாட்டேங்குது”, என்று……  

சந்தியா வீட்டினரும் வந்து ஒரு மாதமாகி விட்டது…… 

வெளி வேலைக்கும் , வேலை தேடுவதற்கும் என்று சந்தியா அலைவது  வெற்றியின் கருத்தில் பதிந்து கொண்டே தான் இருந்தது…….

கடைகளுக்காவது இந்த பையன் நாராயணன் காலேஜ் முடிந்து வந்து போகக் கூடாதா….. பெண் பிள்ளையை ஏன் இப்படி அலைகழிக்கிறார்கள் என்று ஒரு கோபம் தோன்ற…. தீனாவுடன் ஒரு மாலை நேரத்தில் பேசிக்கொண்டிருந்த நாராயணனை அழைத்து கேட்டே விட்டான்.

“எல்லாத்துக்கும் உங்க அக்காவையே அலைய விடறீங்களே….. உங்க தாத்தாவால முடியாது….. உங்க அப்பாக்கு உடம்பு சரியில்லை….. உனக்கு என்ன? சாயந்தரம் வந்து நீ செய்ய மாட்டியா?”, என்று கேட்டான்.

கண்டிப்பாக அந்த வார்த்தைகள் சந்தியா மேல் ஈர்ப்பினால் கிடையாது….பாவம் கஷ்டபடுகிறதே என்ற அக்கறை மட்டுமே….

“ம், சரிங்கண்ணா”, என்றான் பவ்யமாக நாராயணன்……

தீனாவையும் திட்டினான், “ஏண்டா டேய்! நீ வெட்டியா சுத்திட்டு இருக்குற மாதிரி அந்த பையனையும் கெடுக்காத புரிஞ்சுதா…..”, என்றான்.

“நம்ம செராக்ஸ் கடைக்காரரு…. சாயந்தறதுல கடையை பார்த்துக்க ஆள் வேணும்னு கேட்கறாரு, போறியாடா!”, என்றான் நாராயணனை பார்த்து….

“காலேஜ்ல இருந்து வர ஆறு மணியாகிடும், அப்போ போனா பரவாயில்லையாண்ணா”, என்றான்.

“ம், நான் சொல்லிக்கறேன்….. நீ போ சம்பளம் போட்டு குடுக்க சொல்றேன்…. போறியா…. நீ சொன்னா நான் அவர்கிட்ட பேசறேன்!”, என்றான்.

“நான் வீட்ல கேட்டுட்டு வர்றேன்”, என்று நாராயணன் ஓடினான்…… அவனின் அப்பா அவனுடன் வந்தார்….

“படிக்கறதுக்கு ஏதும் பிரச்சனை வராதாப்பா”, என்று வெற்றியிடம் கேட்டார்….

“சரியான முட்டாளாய் இருக்கிறாரே…..”, என்று வெற்றிக்கு கோபம் தான்….. “ஒன்னும் வராதுங்க…. அது செராக்ஸ்… ரீசார்ஜ் பண்ற கடை…. ஆள் வர்ற நேரம் தான் வேலையிருக்கும், மத்தபடி புக் எடுத்துட்டு போனா படிச்சிக்கலாம்”, என்றான்.

அவர் சரி, சரி என்று தலையாட்டி போக….

“இவனுங்க பொழப்புக்கு நம்ம சமாதானம் சொல்ல வேண்டியிருக்கு, எல்லாம் நேரம் இவனுங்க பொழைச்சி கிழிச்சு….”, என்று ஞானவேலிடம் திட்ட…….

“விடு வெற்றி! நம்ம நல்லது நினைச்சு பண்றோம்! அப்புறம் அவனுங்க திறமை”, என்றான் ஞானவேல்…. வெற்றிக்கு இப்போது அதிகமாக எதுவும் கோபமில்லை அந்த வீட்டுக்கார்ரகளிடம் என்று புரிந்து….

ஏனென்றால் மற்ற குடுத்தனக்காரர்கள் கொடுக்கும் தொல்லை எதுவும் கூட கொடுக்கவில்லை…. வீட்டில் சத்தமே இருக்காது…. தொல்லையற்ற மனிதர்கள் என்று புரிந்து விட்டுவிட்டான்.

அதை கேட்டுக் கொண்டிருந்த மீனாட்சியம்மா தான், “அப்படியே அந்த பொண்ணுக்கு ஏதாவது வேலையிருந்தா சொல்லுடா வெற்றி, ரொம்ப வேலைக்காக சிரமப்படுது…..”,

“ஏம்மா சென்னையில வேலையா கிடைக்கலை…..”,

“சாயந்தரம் இப்போதான் டுயுஷனுக்கு நாலஞ்சு பசங்க வர்றாங்க….  எதுவும் நேரம் சரிவரலை போலடா….. எல்லாம் காலையில போனா ராத்திரி ஆகும் போல…..”,

“ஏம்மா பீ பீ ஓ , கால் சென்ட்டர் இங்கல்லாம் வேலை கிடைக்குமே…….”,

“ஷிப்ட் டுயுட்டியாம்டா யோசிக்குது…. இந்த டுயுஷன் வருமானம் போகுதில்ல…. கொஞ்சம் பசங்க சேர்ந்தா…. சுலபமா நாலஞ்ஜாயிரம் வரும்னு சொல்லுது…. அவங்கம்மா இந்த நைட் ஷிப்ட்னா பயப்படறாங்க போல.. அப்பா இல்லாத பசங்க இல்லை, அதான் ரொம்ப ஜாக்கிரதை……”, 

“இன்னாம்மா பேசற நீ….. இந்த காலத்துல அத்தனை பேர் சாப்பிட அதெல்லாம் எந்த மூலைக்கு……”, என்றான் ஞானவேல்.

“ரொம்ப சிரமம் தான்….. வெளில காட்டிக்கறது இல்லடா…… அந்த பொண்ணோட அம்மா துணி தெக்குது…… சித்தியும் எம்மிங் பண்ணி குடுக்குது”, என்றார் மீனாட்சியம்மா வருத்தமாக…      

“ஏதாவது வேலை சொல்றியாடா வெற்றி?”, என்று ஞானவேலும் கேட்டான்…. மீனாட்சியம்மாவும் கேட்டார்.

“பொண்ணுக்கு நான் எங்கம்மா வேலை தேடிக்குடுக்க முடியும்! பசங்கன்னா அது வேற….”,

“சும்மா சொல்லாத வெற்றி…. நீ நினைச்சா செய்யலாம்…. அந்த பொண்ணுக்கு என்ன வேலை தோதா இருக்கும்னு உனக்கா அனுமானிக்க தெரியாது”, என்றான்…. ஞானவேல்.

“சரி, பார்க்கிறேன்”, என்று வெற்றி சொன்னதும் அவ்வளவு சந்தோசம் மீனாட்சியம்மாவிற்கு….. இந்த வார்த்தை சொன்னாலே வெற்றி நிச்சயம் செய்வான் என்று தெரியும்.

அடுத்த நாள் காலை சந்தியாவின் தாத்தா வெற்றியிடம் வந்தவர்…. “நான் காலையில கொஞ்ச நேரம் இங்க வந்து உட்காரட்டுமா தம்பி! வீட்லயே அடைஞ்சு இருக்கேன்!”, என்றார்.

மிகவும் மரியாதையான தோற்றம் சந்தியாவின் தாத்தாவிற்கு…. வெற்றிக்கு மறுக்க முடியவில்லை…. ஆனாலும், “இங்க சூடு பெரியவரே உடம்புக்கு ஆகாம போகப் போகுது”, என்றான்.

“ரொம்ப நேரமா இருக்க போறேன், கொஞ்ச நேரம்…. தள்ளி தான உட்கார்ந்து இருக்கேன்…..”, என்றார்.

சரியென்று விட்டுவிட்டான்….. அன்றிலிருந்து சந்தியாவின் தாத்தா அங்கு அமர்வது வாடிக்கை ஆயிற்று.

பேச்செல்லாம் யாரிடமும் அதிகமாக கொடுக்க மாட்டார்…. போவோர் வருவோரை.. வேலை செய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பார்…

அன்றும் அப்படித்தான் அவர் வெல்டிங் பட்டறையில் அமர்ந்து இருக்க…. சந்தியா மூன்று தரம் கடைக்கு நடந்து கொண்டிருக்க….

“டேய்  சந்தியா! எங்கடா போயிட்டு போயிட்டு வர்ற…. ?”, என்று அவளை அழைத்தார்.

“ரேஷன்ல கோதுமை போடறாங்க தாத்தா! நான் போகும்போது அப்புறம் வான்னு சொல்லி அனுப்பிடறாங்க….”,

“என்ன டைம்ன்னு கேட்டுட்டு போக வேண்டியது தானேடா….”,

“அப்படி தான் தாத்தா போறேன்…. திரும்பவும் வேணும்னே நடக்க வைக்கிறான்….”,

“சரி வேண்டாம்னு விட்டுடுறா……”,

“கார்ட் வாங்கி வெச்சிக்கிட்டான் தாத்தா…..”,

“கேட்டா அப்புறம் வான்றான்…. ஒரே வீட்ல மூணு கார்ட் வெச்சிருக்கீங்கன்றான்…… எல்லாத்துக்கும் நீயே வர்ற அவங்களை வர சொல்லுன்றான்……. வேணும்னே வம்பு பண்றான்….”, சொல்லும் போதே குரல் கம்மி போயிற்று..

“நீ ஏண்டா போற….?”,

“சித்தப்பா காலையில இருந்தே மூச்சு விட சிரமப்படறார், அம்மாவும் சித்தியும் போனாலும் இப்படி தான் பேசுவான்….. அவங்களுக்கு ரொம்ப மனசு கஷ்டமா போயிடும்….”,

“அதான் நானே போறேன்….”, என்று சொல்லி சந்தியா வீடு நோக்கி நடந்தாள்.

இவர்கள் பேசியது அங்கு பக்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த பையன் ஒருவனுக்கு கேட்க…

அவன் ஒரு காருக்கு ஸ்ப்ரே பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்த வெற்றியிடம் போய் இதை ஒரு பெரிய விஷயமாக சொன்னான்.

“அண்ணா நம்ம அக்காகிட்ட வம்பு பண்றான்”, என்று…..

“யாருடா நம்ம அக்கா….?”, என்றான் ஆச்சர்யமாக வெற்றி.

“நம்ம வீட்ல இருந்தா நம்ம அக்காதானே…. என் தங்கச்சி கூட அவங்க கிட்ட தான் படிக்குது”, என்று விளக்கம் கொடுத்த அந்த பையன்…..

“இப்படி தான் எங்கம்மாவை கூட அவன் மரியாதையில்லாம போன தடவை சீம்மண்ணை வாங்க போகும் போது பேசியிருக்கான்…. எங்கம்மா கூட வீட்டுக்கு வந்து என்னடா நம்ம பொழப்புன்னு ரொம்ப அழுதிச்சுண்ணே…. எல்லோரையும் மரியாதையில்லாம பேசறான் அங்க பில் போடறவன்….. புதுசா வந்திருக்காண்ணே….. மூணு மாசம் ஆகுது…….  இப்போல்லாம் எங்கம்மாவை நான் ரேஷன்க்கு அனுப்பறதே இல்லை….. உங்ககிட்ட கேட்டுகிட்டு நான் தான் போயிட்டு வர்றேன்”, என்றான்.

அந்த பையன் சொல்லும்போதே மீனாட்சியம்மா வந்தார்… “டேய் சாவியை பிடி! நான் ரேஷன் கடை  வரைக்கும் போயிட்டு வர்றேன்… எத்தனை தடவை அவன் வேணும்னே இந்த பொண்ணை நடக்க வைக்கிறான்”, என்று வர…..

அவருடன் இருந்த சந்தியாவை பார்த்தவன்…… “நீ போ….. நான் பின்னாடி வர்றேன்…”, என்று அவளிடம் கூறி….

“அவன் எல்லார்கிட்டயும் இப்படி தான் வம்பு பண்றான் போல, நான் பார்த்துக்கறேன்மா…… மா இது என் ஏரியா… நீ சும்மா காபரா பண்ணாத போ”, என்றான்.   

“டேய், நான் போனா வாய் வார்த்தையோட போகும்! நீ போனா கைய கியா வெச்சிடப் போறடா!”,

“நான் பார்த்துக்கறேன் மா”,…..என்றவன் , நீ போ!”, என்றான் சந்தியாவை பார்த்து…….

சந்தியா முன் நடக்கவும்…. அவனின் கண் அசைவில் தங்கபாண்டி பைக்கை எடுக்க அதன் பின் அமர்ந்த வெற்றி…. ரேஷன் கடை  பக்கத்தில் சந்தியாவிற்கு முன்பாக போய் நின்று கொண்டான்.    

 

Advertisement