Advertisement

அத்தியாயம் இரண்டு :

வீடு புக சம்மதம் கொடுத்தது தான் போதும்…. தீனாவும் நாராயணனும் சேர்ந்து மளமளவென்று சாமான்களை இறக்கினர்…..

தீனா, வெற்றிக்கு பயந்து யாரையும் உதவிக்கு கூப்பிடவில்லை…  பெரியவர்களை வேலை செய்ய விடவில்லை…… கீர்த்தனாவும் சந்தியாவும் கூட நிறைய சாமான்களை இறக்கி வைத்தனர்.

லேட் செய்தால் எங்கே சாமானத்தை கட்ட சொல்லிவிடுவார்களோ என்று பயந்து அரை மணி நேரத்தில் இறக்கி விட்டனர்.

இவர்கள் சாமனை உள் கொண்டு வைக்க… சந்தியாவின் அம்மாவும் சித்தியும் சமையலறையை பால் காய்ச்சுவதற்கு சரி செய்துவிட….. சந்தியாவின் அம்மா ராஜம் கணவனை இழந்தவர் என்பதால் எல்லாவற்றையும் சரி செய்து கொடுத்து ஒதுங்கிக் கொள்ள…

அவளின் சித்தி கற்பூரம் பொருத்தி பால் காய்ச்சி முதலில் மாமியாருக்கும் மாமனாருக்கும் கொடுத்தார்.

நாராயணனை விட்டு மீனாட்சி அம்மாவை கூப்பிட்டு இருந்தனர்… அவர் “நீங்க பண்ணுங்க”, என்று விட்டார்.

வெற்றி உடற்பயிற்சி முடித்து வந்தவுடனே பசி, பசி என்று பறப்பான்…. அதற்காக சமைத்துக் கொண்டிருந்தார்….. காலையில் டீ மட்டும் தான் வெளியில் மற்றபடி எல்லா நேரமும் அவனுக்கு வீட்டுச் சாப்பாடு தான் வேண்டும், வெளியில் சாப்பிட பிரியப்பட மாட்டான்……

இதற்கு மீனாட்சியம்மாவின் சமையல் மிகவும் சுமார் தான் அதற்கே இப்படி…..

ஞானவேலும் அப்படித்தான் வீட்டில் சாப்பிடுவதை தான் விரும்புவான்……. வெற்றி படிப்பு வரவில்லை என்று படிக்கவில்லை…. ஆனால் அவனை விட மூன்று வயது இளையவனான ஞானவேலுக்கு படிப்பு நன்றாக வர…  நிறைய பணம் செலவு செய்து அவன் விரும்பிய படிப்பை பெரிய கல்லூரியில் படிக்க வைத்தான்.

ஞானவேல்லின் தோற்றமும் அண்ணனை போல தான்… உயரமாய், நல்ல உடல் கட்டோடு இருப்பான். ஆனால் வெற்றியின் அளவு கருப்பு கிடையாது….. மாநிறமாய் இருப்பான்… மீனாட்சி அம்மாவை கொண்டு…  

தன்னை போல நெருப்பிற்கு நடுவில் வெற்றி அவனை வெந்து போக விடவில்லை. எல்லோரும் ஐ டீ பீல்ட்…. வெளிநாட்டு வேலை என்றிருக்க…. ஞானவேல் அதற்கு இஷ்டபடவில்லை…

மிகவும் தெளிவாக இருந்தான்….. “எடுத்தவுடனே பெரிய சம்பளம் தான், வெளிநாட்டு வாழ்க்கைக்கும் வாய்ப்பு இருக்கு…. ஆனா ரொம்ப டென்ஷனான வேலை….. எனக்கு ஃப்ரீயா இருக்கணும்..”, 

“காலையில ஒன்பது மணிக்கு வேலைக்கு போகணும், சாயந்தரம் ஆறு மணிக்கு வீட்டுக்கு வந்துடணும், அப்படி ஒரு வேலை தான் வெற்றி எனக்கு வேணும்”, என்று வெற்றிவேலிடம் வேண்டுகோள் வைக்க…..

படிப்பறிவு இல்லாவிட்டாலும் அனுபவ அறிவு அதிகமாக கொண்ட வெற்றிவேலுக்கு அப்படி ஒரு வேலை கவர்மென்ட் வேலையாக மட்டுமே தெரிய…..

பணம் செலவு செய்து……. அரசுடைமையாக்கப்பட்ட ஒரு பெரிய தனியார் அமைப்பில் நல்ல வேலையில் அமர்த்தி விட்டான். இப்போதே நல்ல சம்பளம் தான்…. போகப் போக இன்னும் அதிகமாகும். 

காலையில் மகன்களுக்கு இட்லி அவித்து வைத்த மீனாட்சி….. தங்கபாண்டி எடுத்து வந்த நாட்டுக் கோழியில் குருமா செய்திருந்தார்…..

பயிற்சி முடித்து…. குளித்து வந்த வெற்றி தம்பியை கடிந்தான்….. “இன்னைக்கு எக்ஸசைஸ்க்கு வராம நீ ஏமாத்திட்ட…….”,

“வெற்றி ஒரு வாரத்துக்கு நாலு நாளைக்கு தான் வருவேன், மூணு நாள் ரெஸ்ட்”, என்று டீல் பேசிக்கொண்டு சாப்பிட அமர்ந்தான்….

புது வீடு கட்டியவுடன் டைனிங் டேபிள் வாங்கி போட்டிருந்தான் தான்….. இருந்தாலும் அதில் அமர்ந்து சாப்பிட மாட்டான் வெற்றி… சம்மனமிட்டு கீழே அமர்ந்து தான் உண்பான்.

“மா! இன்னைக்கு என்ன பண்ணின நீ?”, என்று மீனாட்சியம்மாவை நோக்கி கேட்க….

“ஒன்னும் பண்ணலையே!”, என்றார்…..

“வட்டிக்கு விட்டு அதுல நஷ்டப்படறவன் உலகத்துலயே நான் ஒருத்தன் தான்…… சொல்லுமா! இன்னைக்கு என்ன பண்ணின….”,

“அஞ்சாயிர ரூபா குடுக்க வேண்டாம்னு சொல்லிட்டேன்… அது அவங்களுக்கு ரொம்ப கஷ்டம்…….”, என்று யாரையோ பற்றி மீனாட்சியம்மாள் ஆரம்பிக்க…..

“நீ காரணத்தை சொல்லாத… இன்னைக்கு நஷ்டம் எனக்கு அஞ்சாயிரம்னு சொல்லு!”, என்று வெற்றி கோபப்பட…..

ஞானவேலை நோக்கி, “என்னை காப்பாத்துடா!”, என்று மீனாட்சியம்மா ஒரு பார்வை பார்க்க…..

“ம்கூம்! உன்னோட நானும் காசோட அருமை தெரியலைன்னு திட்டு வாங்கறதா….. போ! போ!”, என்று அம்மாவை ஒரு பார்வை பார்த்தான்…….

“பெரியம்மா நானு!”, என்றபடி சரியாக தீனா வர…..

வெற்றி அவனை பார்வையால் எரித்தான்…..

அவன் பாவமாக ஞானவேலை பார்த்தான்…. “விடு, விடு”, என்று பார்வையால் அவனை தேற்றியவன்….. “வாடா! சாப்பிடு!”, என்று ஞானவேல் தீனாவை பக்கத்தில் இருத்த….

அதற்குள், “அண்ணா!”, என்ற குரல் வாயிலில் கேட்க எல்லோர் பார்வையும் அங்கே…..

அங்கே நாராயணன் ஒரு சிறிய ட்ரேயில் மூன்று சிறிய கிளாஸ்களில் பாலை வைத்து நின்றிருந்தான்… “பால் காய்சினோம், அம்மா குடுக்க சொன்னாங்க!”, என்று…

இது போன்ற பழக்கங்கள் மீனாட்சியம்மாள் எப்போதும் யாரோடும் வைத்துக் கொள்ள மாட்டார்… வெற்றிக்கும் ஞானவேலுக்கும் கூட பிடிக்காது….

ஆனால் வாசலில் முகத்தில் ஒரு பணிவோடு நின்றிருந்த நாராயணனை தட்ட மனது வரவில்லை……..

“வாப்பா!”, என்றார்…

அவன் தயக்கத்தோடு உள்ளே வந்தான்…. அப்போதுதான் பார்த்தார் அவனின் பின்னால் சந்தியா நின்றிருந்ததை……

தலைக்கு குளித்து அதன் ஈரம் காயாமல் ஒரு முடியிட்டு…. முகத்தில் ஒப்பனை எதுவுமில்லாமல் ஒரு பொட்டு மட்டுமே வைத்து அதன் மேல் பெரிதாக திருநீறு ….. கீழ் சிறியதாக ஒரு குங்குமம்….

மீனாட்சியம்மாவிற்கு அந்த முகத்தை பார்த்ததும் மனதிற்கு அப்படி ஒரு அமைதி….. பார்க்க மகாலக்ஷ்மி மாதிரி இருக்கா…. 

“உள்ள வா கண்ணு”, என்றார் சந்தியாவை பார்த்து….

“இன்னாது பேசினது, நம்ம அம்மாவா!”, என்று அந்த வீட்டு ஆண்மக்கள் இருவரும் பார்த்தனர்….. யாரையும் வீட்டிற்குள் கூப்பிடவே மாட்டார்.

சந்தியா அவரை பார்த்து சிறிதும் தயக்கமில்லாமல்….. “இல்லைங்கம்மா, நீங்க ஏதாவது தப்பா எடுத்துக்குவீங்களோன்னு இவன் நான் போகமாட்டேன்னு பயந்தான்… நான் வர்றேன் வாடான்னு கூட்டிட்டு வந்தேன்…”,

“குடுத்துட்டு வா!”, என்று வெளியில் நின்றே தம்பியிடம் சொல்ல…. அவன் யாரிடம் கொடுப்பது என்று தெரியாமல் தயங்க……. தீனா எழுந்து வந்து வாங்கவும்….

நாராயணன் வேகமாக வாசலை நோக்கி வந்துவிட, “வர்றோம் மா!”, என்று சொல்லி சந்தியா நடக்க… நாராயணன் பின்னேயே போய்விட்டான்.

உள்ளே அழைத்தும் சட்டென்று உள்ளே வராத சந்தியாவின் பண்பு மீனாட்சியம்மாளை மிகவும் கவர்ந்தது….. அதையும் விட அந்த பெண் தெளிவாக அவரின் முகத்தை பார்த்து பேசியது…. வீட்டின் உள் பார்வை செல்லவேயில்லை……

அது அவரை இன்னும் கவர்ந்தது…. சிலரை பார்த்தாலே எந்த காரணமும் இல்லாமல் பிடித்து விடும்….. அந்த மாதிரி சந்தியாவை பார்த்ததும் மீனாட்சியம்மாவுக்கு மிகவும் பிடித்தது.. 

அவர்களை பார்த்து திரும்பிய அம்மாவிடம், “இன்னாம்மா இது புது பழக்கம்….”, என்று வெற்றி கேட்க…

“புதுசா பால் காச்சினாங்க குடுத்தாங்க…. அதுக்கு என்ன?”,

“நீ யார் கிட்டயும் வாங்க மாட்டியே!”,

“யாரும் இம்பூட்டு அழகா இல்லைடா”,

“மா! அதெல்லாம் நாங்க சொல்லணும்!”, என்றான் ஞானவேல்.

“நீங்க… கிழிச்சீங்க….. நீயும் சொல்ல மாட்ட உங்கண்ணனும் சொல்ல மாட்டான்… நான் தாண்டா சொல்லிட்டு திரியணும்…”, என்றார் கடுப்பாக.

தீனா சிரிக்கவும்… வெற்றி அம்மாவை முறைத்தான்…..

“சும்மா என்னை முறைக்காத…. வீட்டை கட்டி முடிச்சிடோம். அடுத்ததா பொண்ணு பார்க்கலாம்னு இருக்கேன். நீ என்ன சொல்ற?”, என்றார்.

“இப்போ நான் சாப்பிடறதா? வேண்டாமா?”.

“என்னவோ பண்ணி தொலைங்கடா! அண்ணனும் தம்பியும் என் பேச்சை ஒன்னும் கேட்கறது இல்லை!”,

“என்ன கேட்கலை! இப்போ கூட நீ சொன்னேன்னு தான் அந்த கூட்டத்துக்கு வீடு விட்டேன்…!”, 

“ஒரு தடவை சொல்லலாம் வெற்றி…. திரும்ப திரும்ப அப்படி சொல்லாத, நம்மளும் இந்த மாதிரி வாடகை வீட்ல இருந்து வந்தவங்க தான்! பழசை மறக்க கூடாது, இப்படி திமிரா பேசக் கூடாது!”, என்றார் கடுமையான குரலில்… 

இந்த மாதிரி வெற்றியிடம் மீனாட்சியம்மா நிறைய கோபம் வந்தால் மட்டுமே பேசுவார்….. வெற்றிக்கு அம்மா இந்த குரலில் பேசியது மிகுந்த அதிர்ச்சி, கோபம் கூட…. அதுவும் தம்பியின் முன்னும் தீனாவின் முன்னும் பேசியது இன்னும் கோபத்தை கொடுத்தது..

“அப்போ நான் திமிரா பேசறேன்னு சொல்றீங்களா!”, உண்டு கொண்டிருந்தவன் எழுந்து போகப் போக…

“உட்காருடா”, என்று இன்னும் கோபமாக அதட்டியவர்.. “வீணாக்காத  சாப்பிட்டிட்டு போ…….”, என்றார்….

இந்த குரல் கண்டிப்பாக மீற முடியாது….. அமர்ந்து கொண்டான்…

ஞானவேலும் தீனாவும் மிகவும் அமைதியாகிவிட்டனர் பெரியம்மாவின் கோபத்தை பார்த்து….. 

இப்படி தான் மீனாட்சியம்மா மகனிடம் அடங்கும் நேரத்தில் முற்றிலுமாக அடங்கி விடுவார்….. அடக்கும் நேரத்திலும் சரியாக அடக்கி விடுவார்… 

வெற்றியின் வெற்றிக்கு பின் இருக்கும் பெண்மணி இவர்….. மகன் சரியாக செல்லவில்லை என்று தோன்றினால் உடனே முட்டுக்கட்டையிட்டு நிறுத்தி விடுவார்.

அந்த மாதிரி வாய்ப்புகளை எப்போதாவது ஒரு முறை தான் அவருக்கு வெற்றி கொடுப்பான்…

இப்போது அந்த குடும்பத்தை கூட்டம் கூட்டம் என்று சொல்லியதும் அவருக்கு கோபம் வந்தது….. யார் இப்போதெல்லாம் கூட்டுக் குடும்பமாக இருக்கிறார்கள்…. அதை நாம் பழிக்க கூடாது இல்லையா….        

அம்மாவின் பேச்சிற்கு பிறகு வெற்றிவேலின் கோபமெல்லாம் இப்போது குடிவந்த வீட்டினரிடம் திரும்பியது…..  “வந்த நாளே எனக்கும் அம்மாவிற்கும் இவர்களால் சண்டையா…..”,

“இந்த பெண் சரியில்லை போல, வந்த நாளே என் அம்மாவை கவர்ந்து விட்டாள்…. எனக்கும் அவருக்கும் சண்டையும் மூட்டி விட்டாள்…… ச்சே! ச்சே! எப்படிப்பட்ட பெண்ணாய் இருப்பாள்..”, என்று சந்தியாவை பற்றி தெரியாமலேயே ஒரு தவறான அப்பிராயம் உருவாகியது.

தவறான அப்பிராயம் மட்டுமல்ல…. அவனுக்கு சந்தியாவை பிடிக்காமல் போனது…. இன்னும் அவளின் முகம் கூட சரியாக பார்த்திருக்க மாட்டான்…. அதற்குள் தவறான அப்பிராயம், பிடிக்காமல் போனது…..

அதிகம் யாரையும் அவனுக்கு பிடிக்காமல் போகாது… எல்லோரிடமும் நன்றாக பழகுபவன் தான்…. ஆனால் இங்கே அவனுக்கு சந்தியாவை பிடிக்கவில்லை….  

இங்கே அதுதான் பிரச்சனையே, அவனுக்கு ஒருவரை பிடிக்காவிட்டால் ஒதுங்கி போக மாட்டான்…. அவனை பொருத்தவரை அவர்கள் அவனுக்கு பகையாளிகள்…      

சந்தியாவிற்கு இது எதுவும் தெரியவில்லை…. அவள் நிர்மலமான மனதுடன்….. வீட்டை ஒழுங்குபடுத்த சென்றாள்….

இங்கே வந்தவுடனே ஒரு கடுமையான பகைவனை சம்பாதித்துக் கொண்டோம் என்று அவளுக்கு தெரியவில்லை….. 

வெற்றி சாப்பிட்டுவிட்டு வெல்டிங் பட்டறைக்கு கிளம்பியவுடன்…. ஞானவேல் மீனாட்சியம்மாவை கடிந்து கொண்டான்….. “என்னமா நீ ஒரு தடவை பேசுவான், ரெண்டு தடவை பேசுவான், அப்புறம் சரி சரின்னு வெற்றியே விட்டுடுவான்…..”,

“நீ இப்படி பண்ணிட்டியே…… இப்போ நீ பேசினதுக்கு உன் மேல கோவம் வராது… அவங்க மேல தான் வரும்……”, என்றான் தன் அண்ணனை பற்றி தெரிந்தவனாக……

உடனே தீனாவும் தன் பெரியம்மாவிடம்…. “பெரியம்மா….. நான் உங்ககிட்டையும் சின்ன அண்ணன்கிட்டயும் சொல்லியிருக்கேன்… நாராயணன் எனக்கு  உயிர் நண்பன்னு கூட சொல்லலாம். அவங்களுக்கு இங்க சென்னையில யாரையும் தெரியாது….. நான் இருக்கேன் வாங்கன்னு தைரியம் சொல்லி கூட்டிட்டு வந்திருக்கேன்….”,

“அவங்களுக்கு இப்போதைக்கு வேற எங்கயும் வீடு பார்க்க முடியாது பெரியம்மா……. அண்ணன் கோபத்துல அவங்களை காலி பண்ணிட சொல்ல போகுது…”,

“டேய்! நான் இருக்கேண்டா! நான் விடமாட்டேன்!”, என்றார் மீனாட்சியம்மா.

“பெரியம்மா, வாடகை வேற உங்க கிட்ட கேட்டுட்டு குறைச்சு சொல்லியிருக்கேன்… அண்ணனுக்கு அது வேற தெரியாது”, என்றான்….

“நான் பார்த்துக்கறேன் விடு!”, என்று மீனாட்சியம்மாள் சொன்னாலும் தீனாவிற்கு அண்ணனை நினைத்து பயமாக இருந்தது.

“அம்மா சொன்னா, அண்ணன் கேட்பான் விடு!”, என்று ஞானவேல் தீனாவிற்காக சொன்னாலும்… வெற்றி எந்த நேரத்தில் என்ன செய்வான் என்பதை அனுமானிக்க முடியாது என்று அவனுக்கும் தெரியும்…..

பிறகு அவர்களின் பாடு என்பது போல அவன் அலுவலகத்திற்கு கிளம்பி விட்டான்.

வெற்றியின் மனம் தான் அவன் வெல்டிங் வைத்து கொண்டிருந்த இரும்பு சாமானில் இருந்து கிளம்பிய தீப்பொறி போல எரிந்து கொண்டிருந்தது…

வேறு ஏதாவது நினைப்புகள் கவலைகள் இருந்தால் இந்த மாதிரி சிறு சிறு விஷயங்கள் கவனத்தில் நில்லாது….. வெற்றிக்கு அது போல எந்த கவலைகளும் கிடையாது…. அதனால் இப்போதைக்கு வீட்டிற்கு புதிதாக குடிவந்தவர்கள் அவனின் நினைவுகளில் இருந்ததால்…. எதிரில் இருந்த அந்த வீட்டின் மீதும் ஒரு கண் வைத்திருந்தான்.

கதவு திறந்து இருந்தாலும் நன்றாக திறந்து இல்லை….. கதவு ஒருக்களித்து இருந்தது…. அதன் வாயிற் படியில் சந்தியாவின் தாத்தாவும் பாட்டியும் அமர்ந்திருந்தனர்….

சந்தியாவின் அம்மா ராஜம் தான்…. அவர்களை வெளியே சற்று நேரம் அமரச் சொல்லியிருந்தார்…… சாமான்களை ஒதுங்க செய்தவுடன் உள்ளே வரச் செய்யலாம் என்று…. சந்தியாவின் பாட்டிக்கு இந்த தூசுகள் சேராது என்பதால் இந்த ஏற்பாடு.   

வெற்றியின் வேலை பாட்டிற்கு நடந்து கொண்டிருந்தாலும்…. அங்கேயும் ஒரு பார்வை பதித்து இருந்தான்… நாராயணன் தான் வெளியே வருவதும் போவதுமாக இருந்தான்…..

அவன் வெளியே வரும்போது மட்டும் தீனா அவனுடன் சேர்ந்து கொள்வான்…. மற்றபடி தீனாவும் சந்தியாவின் வீட்டின் உள் எல்லாம் போகவில்லை.

மற்றபடி வீட்டில் இருந்த வயதான பெண்களும் சரி, வயதுப் பெண்களும் சரி, யாரும் வெளியில் எல்லாம் தென்படவில்லை…..

மதியம் உணவு உண்ண வீட்டிற்கு சென்ற போது அம்மாவும் மகனும் சகஜமாக பேச ஆரம்பித்து இருந்தனர்….. மீனாட்சியமாள் அவர்களின் சண்டையை முடித்துக் கொண்டார்… ஆனால் தனக்கு தெரியாமல் வெற்றிக்கு அந்த வீட்டுடன் ஒரு சண்டையை உருவாக்கி விட்டார்.

வெற்றி மதிய உணவு உண்டு சென்ற பின்….. சந்தியா வீட்டினரின் விவரம் தெரிந்து கொள்ள…. நாராயணனை அழைத்து கேட்க… அவன் அவனின் அம்மா ராஜமை அழைத்து விட்டான்.

மீனாட்சி யார் என்ன ஏது என்ற விவரம் கேட்க… அவர் வாயிலில் நின்று தான் பதில் சொன்னார்.                

மீனாட்சியம்மா தான் சந்தில் இருந்து யாராவது மற்ற குடித்தனக்கார்கள், இல்லை மேலே மாடியில் இருக்கும் குடித்தனக்காரர்கள் கேட்க வாய்ப்பு இருப்பதால், “உள்ள வாம்மா!”, என்று அவரை உள்ளே கூப்பிட்டார்.

வெற்றி இதை பட்டறையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான்… சாமான்யத்தில் மீனாட்சி யாரையும் வீட்டுக்குள் விட மாட்டார்… இப்போது ராஜம்மை உள் அழைத்து பேசவும் வெற்றிக்கு இந்த அம்மா ஏன் இப்படி ஓவராக செய்கிறார் என்ன்று கோபமாக வந்தது…

உள் சென்றவர் எப்போது வெளியே வருவார் என்பது போல வெற்றி பார்த்திருக்க கிட்ட தட்ட அரைமணி வெளியே வரவில்லை… 

அதன் பிறகு ராஜம் போய் விட…. மாலை நான்கு மணியாகவும் எப்போதும் வரும் ஆட்டோ வந்து நிற்க… வீட்டை பூட்டி சாவியை வெற்றியிடம் கொடுத்து மீனாட்சியம்மாள் கோயம்பேடு மார்கேட்டிற்கு பணம் வசூலிக்க சென்று விட்டார்.

வீட்டை ஒழுங்குபடுத்திவர்கள் வீட்டின் வாயிலில் உள்ள படியின் இருபுறமும்……. ஒரு பக்கம் துளசி செடி இருந்த ஒரு தொட்டிய வைத்தவர்கள்… இன்னொரு பக்கம் தொட்டியில் இருந்த கற்பூரவல்லி செடியை வைத்தனர்….

அதுவரை பொறுமையை இழுத்து பிடித்துக் கொண்டிருந்த வெற்றி, நேராக போய் தொட்டியை வைத்து அதை சரி பார்த்துக் கொண்டிருந்த நாராயணனையும், சந்தியாவையும், கீர்த்தனாவையும் பார்த்து, “என்ன இது?”, என்றான்.

ஏற்கனவே கருப்பாக இருக்கும் வெற்றிவேல்…… செய்யும் வேலையில் உடையில் அதிக கிரீஸ்களும் அழுக்குகளும் ஆகும் என்பதால் எப்போதும் கருப்பு சட்டை கருப்பு பேன்ட் தான் அணிந்திருப்பான்…

மெக்கானிக் தொழிலில் இருக்கும் அவர்களின் உடையில் இருக்கும் அழுக்குகள் சொல்லவா வேண்டும்…. கருப்பாக கருப்பு உடையோடு அவன் போய் நிற்கவும்….. நாராயணன் என்ன சொல்வானோ என்று பதைத்து நிற்க….. கீர்த்தனா அக்காவின் பின் தானாக போய் நின்றாள்.

அவர்களின் இருவரின் பார்வையிலும் ஒரு மருட்சியை பார்த்த வெற்றி சந்தியாவை பார்க்க, அவளின் கண்களில் அது போல எல்லாம் எதுவும் இல்லை. அவனை நேர்பார்வை மிகவும் மரியாதையாக தான் பார்த்தாள். 

“என்ன இது?……. யாரை கேட்டு வெச்சீங்க.. உங்க எல்லோருக்கும் தண்ணி விடறதே பெரிய விஷயம். அதுக்கே நீங்க தண்ணிக்கு டபிள் சார்ஜ் குடுக்கணும்…. இதுல செடிக்கு தண்ணியா….”,

“அதுக்கு தண்ணி விட்டு, அதுல மண்ணும் தண்ணியும் வடிஞ்சு….. தரை வேற பாசம் பிடிக்கும், அழுக்காகும்…… எங்க வீட்டு காம்பவுண்ட் முழுசும் உங்களுக்கு வாடகைக்கு இல்லை…. நீங்க இருக்குற வீட்டுக்கு உள்ள மட்டும் தான், முதல்ல இதை எடுங்க!”, என்று நின்றான்.

கத்தி, சத்தம் போட்டு சொல்லவில்லை…. ஆனால் கடுமையான முக பாவனைகளோடு மிகவும் கடுமையாக பேசினான்.

“இல்லங்க! நாங்க அடில ட்ரே வெச்சிடுவோம்…… தண்ணி அதுல தான் விழும்…. தரை அழுக்காகாது!”, என்று சந்தியா சொன்னதை காதில் வாங்கவேயில்லை……

“முதல்ல எடு!”, என்று அவளை நோக்கி இன்னும் கடுமையாக சொன்னான். 

Advertisement