Advertisement

அத்தியாயம் பதினேழு:

காலமும் நேரமும் யாருக்காகவும் நிற்பதில்லை…. சந்தியா வீட்டை விட்டு போய் எட்டு மாதங்கள் ஆகிவிட்டது.

ரமணனிடம் போய் சந்தியா வீட்டை விட்டு போன அன்றே வெற்றி விவரம் சொல்ல…….

“தொலைஞ்சு போயிருந்தா தேடலாம். தானா போனவளை என்ன செய்ய முடியும்…. சந்தியாவா தொடர்பு கொள்றாளா பார்க்கலாம். இல்லைன்னா தேடலாம்….. தைரியமான பொண்ணு வெற்றி… நீ பயப்பட அவசியமில்லை, கவலைப்படாத”, என்று சொல்லி ஆதரவாக வெற்றியின் தோள் தட்டி அனுப்பினான் ரமணன்.

வீட்டிற்கு வந்தால் ஞானவேல் சந்தியா வீட்டை விட்டு போய் விட்டாள் என்ற விவரம் தெரிந்து….. வெற்றியிடம், சந்தியாவிடம் தான் பேசினதை சொல்லி…… “என்னால தான் சந்தியா கல்யாணம் செஞ்சிக்க கேட்டாங்க”, என்ற உண்மையை சொல்ல…..

வெற்றியினால் கோபத்தை கட்டுப் படுத்தவே முடியவில்லை……. ஓங்கி ஞானவேலை அடிக்க வந்தவன் நொடியில் தானாக திசை மாற்றினான்… பக்கத்தில் இருந்த சுவரில் கை மோதியது.

“வெற்றி”, என்று ஞானவேலும் மீனாட்சியும் அருகில் போக….. முகத்தை திருப்பி கொண்டு வெளியில் விரைந்து விட்டான்……

பைக்கை எடுத்துக் கொண்டு வந்து க்ரௌன்ட் போல பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்த இடத்தில் நிறுத்தினான். யார் மேல் கோபத்தை காட்டுவது என்று தெரியவில்லை.

தான் இருந்தும், தன்னை சுற்றி இத்தனை நிகழ்வா…. மனம் வெறுத்துப் போனது…. யாரையும் பார்க்கப் பிடிக்கவில்லை, பேச பிடிக்கவில்லை….. வீட்டிற்கு போகப் பிடிக்கவில்லை.

சிறிது நேரம் கழித்து கை வீங்க ஆரம்பித்து வண்டியை அசைக்க கூட முடியாத வலி எடுக்க…… கைக்கு அடிப்பட்டது புரிந்தது…… இந்த அடி ஞானவேல் மேல் விழுந்திருந்தால் என்று மனது பதைத்தது.

வெகு நேரம் கழித்து வீடு வந்து சேர்ந்து விட்டான்…..

இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு அவனாக நாராயணனை தொடர்பு கொண்டு ஏதாவது தகவல் வந்ததா என்று கேட்க…….

“அக்கா, போன் பண்ணி பெரியம்மா கிட்ட பேசினாங்க….. பத்திரமா இருக்காங்களாம்”, என்றான்.

“எங்க இருக்கா?”, என்று கேட்டதற்கு முதலில் தடுமாறி,

பின்பு “தெரியாது”, என்று நாராயணன் சொல்லவும்…..

சொல்ல விருப்பமில்லை என்று புரிந்த வெற்றிக்கு மனம் வெறுத்தே போனது. “ஏண்டா, பத்திரமா இருக்கான்னு என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லக் கூட மாட்டீங்களா”, என்றான் மனம் பொறுக்காமல்.

அப்போதும், “பத்திரமா இருக்கா தானே?”, என்று பலமுறை கேட்டே போன் வைத்தான்.

பின்பு மீனாட்சியை அனுப்பி ராஜத்திடம் பேச சொல்லி, சந்தியா நன்றாக இருப்பதை தெரிந்து கொண்டான்.

அப்போதும் மீனாட்சியிடம் சொல்லி தான் அனுப்பினான். “எங்க இருக்குறான்னு அவங்களா சொன்னா கேட்டுக்கோ மா! நீயா கேட்காத!”, என்றான்.

மீனாட்சி வந்தவர்… “எங்கயோ வேலைக்கு போயிருக்கும் போல….. போன் செஞ்சு பேசிச்சாம்…… நல்லா இருக்கேன்னு சொல்லிச்சாம்….. இவங்களை பார்க்க வரக் கூடாதுன்னு சொல்லியிருக்காம்…..”,

“அப்போ எங்க இருக்கான்னு அவங்கம்மாக்கு தெரியுமா?”,

“தெரியும் போல வெற்றி! இல்லைன்னா இவ்வளவு தைரியமா இருக்க மாட்டாங்க……. நீ சொன்னதுனால எங்க இருக்கான்னு நான் கேட்கலை அவங்களும் சொல்லலை…..”,    

சந்தியாவின் நலன் அறிந்தவன், அதன் பிறகு ரமணனிடம் செல்லவில்லை.  ஆனால் தொலைபேசியில், “நல்லா இருக்காளாம் சார். அவங்க வீட்டுக்கு எங்க இருக்கான்னு தெரியும் போல சார்”, என்று சொல்லி, நன்றி சொல்லி வைத்து விட்டான்.    

விஷயம் தெரிந்த அன்று ஞானவேலுடன் பேசுவதை விட்டவன் தான். திரும்ப பேசவேயில்லை. சந்தியா வீட்டினருடனும் பேசுவதில்லை. யாரவது நேர்ப்பட்டால் காணாதது போல சென்றுவிடுவான்.

வெற்றி உள்ளுக்குள் மிகவும் இறுகி விட்டான். அவனின் கோபம் எல்லாம் இப்போது சந்தியாவின் மேல் தான்.

என்னவோ சந்தியா தன்னை குற்றவாளியாக்கி சென்றுவிட்டது போல ஒரு உணர்வு…….

எதிலும் மனம் செல்ல மறுக்க…….. மன அமைதிக்காக வேண்டி இன்னும் கடுமையாக உழைக்க ஆரம்பித்தான்.

“எனக்கு கல்யாணம் செய்ய இப்போ மனசில்லைம்மா…. எப்படியாவது பொண்ணு வீட்டுக்காரங்க மனசு சங்கடப் படாம கல்யாணத்தை நிறுத்திடு”, என்று மனம் நொந்து சொல்ல…..

மகனின் முகத்திலும் குரலிலும் தெரிந்த வருத்தத்தில் வெற்றியை சமாதானம் செய்ய முயலாமல், மீனாட்சி வெற்றியின் மேலேயே பழியைப் போட்டு……. இப்போதுதான் தனக்குத் தெரிந்தது திருமணம் வேண்டாம் என்று வேறு வழியில்லாமல் சொன்னார்.

அப்போதும் அவர்கள் நாங்கள் திருமண ஏற்பாட்டின் பொருட்டு அது செய்தோம் இது செய்தோம் என்று நஷ்ட ஈடு கேட்க…….

பஞ்சாயத்து பேசி, மூன்று லட்ச ரூபாய் பணம் கொடுத்து வெளியே வந்தனர்.

“போன மகராசி அவ வேலையைப் பார்த்து போயிட்டா, இனி என் பையனுக்கு யாரு பொண்ணு குடுப்பா?”, என்று மீனாட்சியும் உடல் தளர்ந்து விட்டார்.

காலையில் நான்கு மணிக்கு மார்க்கெட்டிற்கு வட்டிக்கு பணம் கொடுத்து மாலை வசூலிக்கும் பெண்மணி, இப்போது எந்த வேலைக்கும் போகாமல் வீட்டிலேயே அடைந்து கிடக்க ஆரம்பித்தார்.

வெற்றி தன்னோடு பேசாததால் ஞானவேலும் எதிலும் உற்சாகமில்லாமல் தான் உண்டு, தன் வேலையுண்டு என்று இருக்க ஆரம்பித்தான்.

மொத்தத்தில் பணம் இல்லாத போதும் சரி, அதன் பிறகு பணம் வந்துவிட்ட போதும் சரி, உற்சாகமாக இருக்கும் வெற்றியின் வீட்டில் இப்போது பேச்சு சத்தம் கூட அரிதாகி விட்டது.

அவ்வளவு ஒற்றுமையாக இருந்த அண்ணனும் தம்பியும் பேசுவதே இல்லை…..

மீனாட்சியும் ஓரிரு முறை சமாதானம் செய்ய முற்பட்டு… முடியாமல்  அதன் பிறகு காலம் விட்ட வழி என்று விட்டு விட்டார்.

ஆயிற்று எட்டு மாதங்கள் ஆகிற்று….. வீட்டில் இருந்த கீர்த்தனாவின் கல்யாணப் பத்திரிக்கையை பார்த்துக் கொண்டு இருந்தார் மீனாட்சி.

“ரெண்டு பசங்களும் ஆளுக்கொரு பக்கமா நிக்கறாங்க…. வெற்றி தோணினா பேசறான் இல்லைன்னா அது கூட இல்லை…. என் பசங்களுக்கு எப்போ நான் கல்யாணம் காட்சின்னு பண்றது”, என்று மனதிற்குள் அழுது கொண்டார்.

வெளியில் கலங்கினால் மகன்கள் இருவரும் திட்டுவர் என்பதை விட இன்னும் வருத்தப்படுவர் என்பதால் முடிந்தவரை தன்னுடைய மனநிலையை மீனாட்சி காட்டுவதில்லை.   

சந்தியா தன்னுடைய ஷேமலாபத்தை அவளின் அம்மாவிடம் அவ்வப்போது பேசி சொன்னாலும்….. வீட்டில் வேறு யாருடனும் பேசவில்லை.

அவளாக பேசும் போது தான், அதுவும் ராஜமாக பேசுதை எடுக்க மாட்டாள். தங்கைகளிடம் தம்பியிடம் பாட்டி தாத்தாவிடம் சித்தி சித்தப்பாவிடம் என்று யாரிடமும் பேசவில்லை. ஆண்மகனில்லாத அவளின் அன்னைக்கு தான் ஆற்ற வேண்டிய கடமைகள் இருப்பதால் அவரிடம் மட்டும் பேசுவாள்.

மற்றவர்களை நாராயணன் பார்த்துக் கொள்வான் என்று தெரியும்.

இருக்கும் ஊர் சொன்னவள், இருக்கும் இடம் சொல்லவில்லை…..         

“நீங்க அகல்யாவையும், கீர்த்தனாவையும் பாருங்கம்மா…. கொஞ்ச நாள் போகட்டும், நான் உங்களை கூப்பிட்டுக்கிறேன்”, என்று தைரியம் சொல்லியிருந்தாள். 

அதனால் அகல்யாவின் பிள்ளை பேருக்காக அமெரிக்கா சென்று இருந்த ராஜம்…. இப்போது கீர்த்தனாவின் திருமணத்தை முன்னிட்டு சென்னை திரும்பியிருந்தார்.

அதன் அழைப்பை தான் மீனாட்சி பார்த்துக் கொண்டிருந்தார். நாராயணனும் ராஜமும் சற்று நேரத்திற்கு முன் தான் வந்து அழைத்து சென்றிருந்தனர்.

வெற்றி வீட்டிற்கு வந்த போது அழைப்பை பார்த்தவன், தூக்கி தூரப் போட்டு போய் விட்டான்.

அவன் தூக்கி தூரப் போட்ட விதத்திலேயே அவன் திருமணத்திற்கு செல்ல மாட்டான் என்று புரிந்தது… மீனாட்சிக்கும் செல்வதில் ஆர்வமில்லை. ஆனால் ஞானவேல் செல்ல வேண்டும் என்று நினைத்தான்.

அவன் செல்ல வேண்டும் என்று நினைத்ததற்கு காரணம் சந்தியா எப்படியிருக்கிறாள் என்று தெரிந்து கொள்ள…. அவள் நன்றாக இருக்கும் பட்சத்தில் அதை காரணம் காட்டி எப்படியாவது வெற்றியை தன்னுடன் பேச வைத்து விட வேண்டும் என்ற எண்ணம்  ஓங்கியிருந்தது.

அதனால் முதல் ஆளாக திருமணத்திற்கு போய் நின்றான்…. எல்லா சடங்கு சம்ப்ரதாயங்களும் முடியும் வரை அங்கு தானிருந்தான், யாருடைய கவனத்தையும் அதிகம் கவராமல்.

திருமணம் மிகவும் விமரிசையாக நடந்தது. ஆனால் சந்தியா எங்கும் தென்படவில்லை… சந்தர்ப்பம் கிடைத்த போது தனிமையில் நாராயணனிடம், “உங்க அக்கா சந்தியா வரலையா?”, என்று கேட்க…..

“வரலை”, என்று நாராயணன் சொல்ல..

“இன்னாடா இது, இந்த பொண்ணு எப்போ கண்ல படறது எங்க வீடு எப்போ சரியாகறது”,  மனமே விட்டுப் போயிற்று ஞானவேலுக்கு.

வெற்றியை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான்….. மிகவும் உள்ளுக்குள் இறுகி விட்டான் வெற்றி… ஒரு சிரிப்பில்லை….. ஒரு உற்சாகமில்லை……. ஒரு கலகலப்பு இல்லை.

சந்தியா வீட்டை விட்டு சென்றிருந்தது வெற்றியை மனதளவில் மிகவும் பாதித்து இருந்தது. அவள் வீட்டை விட்டு செல்லும் அளவுக்கு நான் என்ன தீங்கிழைத்தேன் என்பதாக அவனின் எண்ணம் இருந்தது.

ஞானவேல் அண்ணனை நெருங்க கூட முடியவில்லை. அடித்தாலும் பிடித்தாலும் எப்போதும் ஞானவேல் வெற்றியிடம் பேசாமல் இருந்ததில்லை….. எப்போது வெற்றி இப்படி இருப்பது ஞானவேலுக்கு இன்னும் கவலையை கொடுத்தது.

ஏற்கனவே வெற்றியின் நலத்தை முன்னிட்டு தான் ஞானவேல் சந்தியாவிடம் சண்டை போட்டதே… இப்போது அது திசை மாறி விட்டது.

அந்த பெண் கண்ணில் பட்டலாவது வெற்றியை சரியாக்கலாம் என்று பார்த்தால் தங்கையின் திருமணத்திற்கு கூட வராதவளை என்ன செய்வது.

ஞானவேல் வீட்டிற்கு வந்ததும், மீனாட்சி, “சந்தியா வந்திருக்காளாடா”, என்று கேட்க….

“இல்லைம்மா”, என்றான் ஞானவேல் சோர்வாக…..

அங்கேயிருந்த வெற்றியின் காதுகளில் இது விழ, இன்னும் மனமே கசந்து போனது வெற்றிக்கு….

“என் வீட்டுக்கு குடி வந்து, என் உயிரையே எடுத்துட்டு போயிட்டா…. ஏதோ நான் வில்லன் மாதிரி ஆகிட்டேன்”, என்று மனதில் எண்ணங்கள் சுழன்று சுழன்று அடித்தன.

ஒரு பத்து நாள் கழித்து ரமணன் வெற்றியை தொலைபேசியில் அழைத்தான்.

“வெற்றி, நாங்க கம்பம் வரைக்கும் போகணும்…… வரா குழந்தை நானு மூணு பேரும் போறோம், கார்ல தான் போறோம்…. நைட் ட்ராவல்….. டிரைவர் வண்டியை ஓட்டறான்….”,

“நான் தூங்காம போனா அங்க ப்ரெஷா இருக்க முடியாது…. நான் தூங்கிடுவேன்…. நீ வர்றியா…….. டிரைவரோட நீ முன்னாடி உட்கார்ந்து இருந்தா நான் கொஞ்சம் தூங்குவேன்”,

வெற்றிக்கு புரியவில்லை……. ரமணனுக்கு வேலை செய்ய ஆட்களா இல்லை… தன்னை ஏன் கூப்பிடுகிறார்…… யோசனைகள் இப்படியாக ஓடும் போதே, “வர்றேன் சார்”, என்று பதில் சொல்லியிருந்தான்.

“இன்னைக்கு நைட் கிளம்பணும் வெற்றி…… உனக்கு வேலை இருக்கா”,

“உங்களை விட எனக்கு வேற என்ன வேலை சார்…. நான் வந்துடறேன்”, என்றான் வெற்றி.

சொன்னது போல எட்டு மணிக்கெல்லாம் ரமணனின் வீட்டில் இருந்தான்…    

“வாங்க மாஸ்டர்”, என்று வரா வந்து வரவேற்ற போதும் வேறு எதுவும் பேசாமல்…….. வீட்டின் உள்ளே போய்விட்டாள்.

“வராம்மாவுக்கு மூடு சரியில்லை போல”, என்று எண்ணிக் கொண்டான் வெற்றி…… சிறிது நேரம் ராம் தான் வெற்றியுடன் பேசிக் கொண்டிருந்தான்…. பின்பு உணவு உண்ண அழைக்க, “இல்லை, உண்டுவிட்டேன்”, என்று வெற்றி மறுக்க அவனும் உள்ளே சென்று விட்டான்.   

ரமணனுக்காக காத்து இருந்தனர்……. அவன் வந்து உடை மாற்றி  அவர்கள் கிளம்ப பதினோரு மணியானது, வரா காத்திருந்து, காத்திருந்து களைத்து உறங்கி விட்டாள்.  வராவின் ஒன்றரை வயது குழந்தையும் உறக்கத்தில் தானிருந்தது.   

ராமும் ராஜேஸ்வரியும் அவர்கள் கிளம்புவதற்காக காத்திருக்க….. 

ரமணன் வராவை எழுப்ப, “ம்”, என்று எழுந்து முறைத்தவளை, “சாரி”, என்று அவள் திட்டும்முன்னே வேகமாக குழந்தை விழிக்காமல் தூக்கி தோளில் போட்டு காருக்கு விரைந்து விட்டான். எப்படியும் எல்லார் முன்னிலையிலும் திட்ட மாட்டாள் என்ற நம்பிக்கையில்.

முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு வரா வந்து காரில் அமர்ந்தாள்.  “கொஞ்சம் லேட் ஆகிடிச்சு”, என்று ரமணன் சொல்ல.

“கொஞ்சம் இல்லை ரொம்ப”, என்று கடுப்பாக முகத்தை வைத்து வரா சொல்ல……

“ஒன்னும் பிரச்சனையில்லை, வெற்றி இருக்கான் பார்த்துக்குவான், நீ தூங்கு”, என்று ரமணன் சொல்லி கண்களை மூடிக் கொள்ள…..

“குழந்தையை குடுங்க….. ஊர் பூராவும் சுத்திட்டு வந்து குளிக்காம குழந்தையை தூக்கிட்டு”, என்று தன் மடியில் வாங்கி வைத்துக் கொண்டு…. நன்கு தள்ளி அமர்ந்து கொண்டாள்.

வராவை பற்றி தெரிந்தவனாக, ரமணனும் வாய் மூடிக் கொண்டான்.

பின்பு பயணம் துவங்க….. சிறிது நேரத்திலேயே அந்த டிரைவர் கார் ஓட்டுவது ரமணனுக்கு பிடிக்கவில்லை. எப்போதும் வருபவன் வர முடியாத சூழ்நிலை இருக்க… இவன் புதியவன்.  

அடிக்கடி பிரேக்கை அழுத்தி ஜெர்க் கொடுக்க….. என்ன செய்வது என்பது போல வராவை பார்க்க….

“அவனை இறக்கி விட்டுட்டு நீங்க ஓட்டுங்க இப்படி போனா குழந்தை முழிச்சிக்குவா” என்று சொல்ல.

அவனை அனுப்பி ரமணன் அமர போக, “நான் ஓட்டட்டுமுங்களா சார்”, என்று வெற்றி சொல்ல……

அப்போதும் வராவிற்கு பயம், “குழந்தை முழிச்சிக்குவா”, என்று தயங்க….

“கொஞ்ச தூரம் ஓட்டறேன் சரியில்லைன்னா மாத்திக்கலாம்”, என்றான் வெற்றி.

அதன் பிறகு வெற்றியை ஓட்ட விட….. வெற்றி நன்றாக ஓட்ட, கார் கம்பத்தை சென்று தான் நின்றது.

கம்பம் உள் வந்துவிட்டான், எங்கு வீடு என்று தெரியாததால் நிறுத்தி திரும்பி பார்க்க…. ரமணன் வரா குழந்தை மூவரும் நல்ல உறக்கத்தில் இருந்தனர்.

தயங்கி, “சார்”, என்று வெற்றி அழைக்க….. சட்டென்று முழித்து விட்டான் ரமணன்.

“வீடு எங்க சார்?”, என்று கேட்க…..

இறங்கி முன்னால் உட்கார்ந்து வழி சொல்ல ஆரம்பித்தான்.

வீடு வந்துவிட….. இவர்கள் காரை பார்த்ததும் காவலாளி வந்து அவசரமாக கேட்டை திறந்து விட…. சுந்தரவல்லி, ரமணனின் அம்மா பங்களா வாயிலிலேயே நின்றிருந்தார்.

கார் பாதையில் சற்று தூரம் சென்று தான் வாயிலை அடைந்தது. கார் நின்றபின்னும் வரா உறங்க…. கதவை திறந்து இறங்கிய ரமணன்… “கும்பகர்ணிம்மா, குழந்தையை தூக்குங்க, அப்போ தான் முழிப்பா”, என்று அம்மாவிடம் சொல்லிக்கொண்டே இறங்கினான் ரமணன்.

“நீயேண்டா வராவை சொல்ற! பாரு! உன் பொண்ணு அதுக்கு மேல தூங்கறா”, என்று அம்மாவின் மடியில் தலைவைத்து உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை காட்ட…

“தூக்குங்கம்மா, நேத்து ராத்திரியே என்னை அவ குழந்தையை தூக்கினதுக்கு திட்டினா…… நான் போய் குளிச்சிட்டு வர்றேன்”, என்று உள்ளே விரைந்து விட்டான்.

“இன்னாடா இது, நான் என்ன பண்றதுன்னு சொல்லாம சார் நம்மை அம்போன்னு விட்டுட்டு போயிட்டார்”, என்று வெற்றி நினைக்க….. ஒரு வழியாக குழந்தையை தூக்கி வராவை எழுப்பிய சுந்தரவல்லி…..

அவர்கள் இறங்கியதும்…. “காரை, அங்க நிறுத்திட்டு வாப்பா”, என்று கார் நிறுத்துமிடம் காட்டி உள்ளே சென்றார்.

வராவிற்கு தூக்க கலக்கம்… அவள் பாட்டிற்கு உள்ளே சென்று விட…..

“இன்னாடா இது? புது இடம் நம்ம கிட்ட ஒன்னும் சொல்லாம சாரும் போயிட்டார், வராம்மாவும் போறாங்க”, என்று நொந்து கொண்டே வெற்றி காரை பார்க் செய்து இறங்கினான்.

இறங்கி காரின் அருகில் தான் நின்றிருந்தான் உள்ளே எல்லாம் போகவில்லை…. ஒரு பத்து நிமிடம் கழித்து வந்த ரமணன், “என்ன வெற்றி, உள்ள வராம இங்க நிக்கற”, என்று சொல்லிக்கொண்டே அருகில் வந்தவன்,

“சாரி வெற்றி”, என்றான்.

தன்னை இப்படி விட்டு சென்றதற்கு தான் சாரி கேட்கிறார் என்று நினைத்த வெற்றி, “அதுபத்தி என்னங்க சார்”, என்று சொல்ல….

அவனை பார்த்து புன்னகைத்த ரமணன், “வா பின்னாடி தோட்டத்துல அப்பா இருப்பாங்க!”, என்று அவனை அழைத்து போனான்.

தோட்டத்தில் நடந்து செல்ல செல்ல ரமணன் சாரி கேட்ட காரணம் நன்கு வெற்றிக்கு புரிந்தது….. அங்கே செடிகளுக்கு நடுவில் ரமணனின் தந்தை ராமனாதன் சேர் போட்டு அமர்ந்திருக்க….

கீழே குனிந்து அந்த பெரியவர் செடிக்கு உரம் போட சொல்வதை கர்ம சிரத்தையாக புன்னகை முகத்தோடு செய்து கொண்டிருந்தது சந்தியா…….

பார்த்த வெற்றி அதிர்ந்து ரமணனை பார்க்க…. “நான் என்ன பண்றது? சொல்ல வேண்டாம்னு வரா சொல்லிட்டா! என்னால மீற முடியலை…”,

“இப்போ தான் வரா சொல்ல பெர்மிஷன் குடுத்தா, அதான் இங்கயே கூட்டிட்டு வந்துட்டேன்”, என்று விளக்கம் சொன்னான் ரமணன்.

இவர்கள் சற்று தூரமாக நின்றதால் ராமநாதன் கவனிக்கவில்லை. சந்தியா குனிந்து இருந்ததால் பார்க்க வாய்ப்பில்லை.

“இது அந்த பொண்ணுக்கு தெரியுமா சார்”, என்று வெற்றி ரமணனிடம் சந்தியாவை காட்டிக் கேட்க…..

“இல்லை தெரியாது”, என்றான் ரமணன்.

“நான் ஊருக்கு கிளம்பறேன் சார்!”, என்று வெற்றி வந்த வழியே திரும்ப நடக்கத் துவங்கினான்.    

 

Advertisement