Advertisement

அத்தியாயம் பதிமூன்று:

காலையில் ஹோம் செக்ரடரி வீட்டில் டியுஷன் எடுப்பது….. மாலையில் பள்ளி குழந்தைகளுக்கு டியுஷன் எடுப்பது என்ற இந்த இரு வேலை மட்டுமே செய்தாள் சந்தியா.

காலையில் செல்வதற்கு வேலையும் கிடையாது…… புதிதாக வேலை தேடும் ஆர்வமும் அவளிடத்தில் இல்லை. அகல்யா இப்போது மாதம் மாதம் அமெரிக்காவில் இருந்து பணம் அனுப்புவதால் சந்தியா வேலைக்கு போயே ஆக வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.

ராஜம் சந்தியாவிற்கு திருமணம் செய்ய முடிவெடுத்து அகல்யாவிடம் மாப்பிள்ளை பார்க்க சொல்லியிருப்பதை பற்றி இன்னும் சந்தியாவிடம் சொல்லவேயில்லை….. முதலில் ஒரு மாப்பிள்ளை அமையட்டும் அதன் பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்து விட்டு விட்டார்.

ஒரு உற்சாகம் என்பது சந்தியாவிடம் குறைந்து விட்டது…… கலகலப்பாக இருக்கும் பெண் அமைதியாகி விட்டாள்… புன்னகையை பூசி இருக்கும் முகம்… இப்போது புன்னகைக்க மறந்தது…..

நிறைய நேரம் இப்போது வேலையின்றி இருப்பதால் ஒரு மாதிரி சோம்பித் தெரிந்தாள். சமையலை அம்மாவும் சித்தியும் பார்த்துக் கொள்ள அந்த வேலையும் இல்லை.   

வெற்றி கேஸ் விஷயமாக ராமை பார்க்க ரமணன் வீட்டிற்கு போனாலும்….. அந்த கொண்ட கட்லாவை ரமணன் என்ன செய்தான் என்று தெரியவில்லை. என்னவானான்  என்று கேட்டதற்கு ரமணனும் சொல்லவில்லை…..    

“காத்துக்கு கூட காது இருக்கும். சில விஷயங்கள் என்னோட மட்டுமே, நான் யாரோடயும் எப்பவும் சொல்றது இல்லை”, என்று விட்டான்……

பகல் முழுவதும் சந்தியா வீட்டில் வேலை இல்லாமல் இருப்பதால் ஒரு மாதிரி மனதளவில் மிகவும் சோர்வாக உணர்ந்தாள். அதே சமயம் வேலை தேடவும் மனதில்லை.

வெற்றிக்கு அந்த மாதிரி எதுவும் இல்லை…… அவன் ஜெயில் சென்று வந்ததோ…. இப்போது கேஸ் நடந்து கொண்டிருக்கிறது, அதன் முடிவு என்ன ஆகுமோ என்ற கவலை எல்லாம் வெளியில் தெரியவில்லை.

அவன் எப்பொழுதும் போல காலையில் இருந்து இரவு வரை உழைத்துக் கொண்டிருந்தான். அவன் வாழ்க்கை முறையில் எந்த மாற்றமும் இல்லை.  

வெற்றி ஜாமீனில் வந்த இந்த ஒரு மாதமாக சந்தியா இயல்பாக இல்லை என்பதை கவனித்து….. வெற்றியாக ஒரு நாள் டியுஷன் முடிக்கும் சமயம் போய்….. “ஏன் இப்படி இருக்க.. பழைய உற்சாகமே இல்லையே”, என்றான்.

“இல்லை, நல்லா தான் இருக்கேன்”, என்றாள் சந்தியா.

வெற்றி அவளை கூர்மையாக பார்க்கவும்…. “அது காலையில இருந்து சாயந்தரம் வரை சும்மா இருக்கேன் இல்லையா, அதனால இருக்கும்”, என்றாள் சந்தியா.

“நீ இப்போ இந்த ஒரு மாசமா வேலைக்கு போறதில்லை, எப்படி செலவு சமாளிக்கறீங்க…..”,

“அகல்யா யு எஸ் ல இருந்து பணம் அனுப்பறா… அவ அங்க வேலைக்கு போறா”, என்றாள் சந்தியா…..

“இந்த வேலையை நீ செஞ்சிருக்கலாம் தானே”, என்றான் வெற்றி.

சந்தியா புரியாமல் பார்க்கவும்…. “நீ கல்யாணம் பண்ணி இப்படி உன் குடும்பத்தை சப்போர்ட் பண்ணியிருக்கலாம் தானே, அந்த மாப்பிள்ளையை ஏன் வேண்டாம்னு சொல்லி உன் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வெச்ச”, என்றான்.

“இந்த மாதிரி பேசக்கூடாது…. அவர் என் தங்கை கணவர்…..”,

“ப்ச், லூசு மாதிரி பேசக் கூடாது….. நான் அந்த அர்த்தத்துல சொல்லலை….. உன் தங்கச்சி கல்யாணம் செஞ்சு குடும்பத்துக்கு உதவற மாதிரி நீயும் உதவி இருக்கலாம் தானே”, என்றான்.      

இதற்கு என்ன பதில் சொல்வது என்று சந்தியாவிற்கு தெரியவில்லை……. சந்தியா அசையாமல் நிற்கவும்……

“வேலைக்கு போகணும்னு அவசியம் இல்லைன்னா மேல படியேன்….. டீச்சர் படிப்புக்கு ஏதோ படிப்பாங்களே அதை படிச்சு முடிச்சிடேன்…. ஒரு வருஷம் தானமே அந்த படிப்பு….”,

“ஏற்கனவே வீட்ல ரெண்டு பேர் படிக்கறாங்க…. இப்போ நான் எப்படி படிக்கறது…..”,

“ஏன் படிச்சா என்ன? நீ உன் வாழ்க்கைல செட்டில் ஆக வேண்டாமா?”, என்று கேள்வி எழுப்பினான்.

எல்லாவற்றையும் வாய் திறந்து கீர்த்தனா கேட்டுக் கொண்டிருந்தாள்…..

“கீழ போயிட்டு அப்புறம் உங்கம்மாவை வரச் சொல்றியா, கீர்த்தனா!”, என்று கீர்த்தனாவிடம் வெற்றி சொல்ல

“எதுக்கு”, என்றாள் சந்தியா.

“நீ தான் படிக்க மாட்டேங்கற இல்லை, பேசாம உனக்கு கல்யாணம் பண்ணச் சொல்லி உங்கம்மா கிட்ட சொல்ல தான்”, என்று வெற்றி சொல்லவும்….

கையை கட்டி இந்த பேச்சை நான் ரசிக்கவில்லை என்பது போல சந்தியா ஒரு லுக் விட……

வெற்றிக்கு மெல்லிய புன்னகை முகத்தில்…. “இன்னா லுக் இது?”, என்றான்….

அப்போதும் அமைதியாக தான் நின்றாள் எதிர்த்து பேச வாய் வரவில்லை..      

“எதையும் போட்டு குழப்பாம சந்தோஷமா இரு டீச்சரம்மா….. இந்த வீட்டுக்கு நீங்க குடி வந்தப்போ நான் அந்த திட்டு திட்டுவேன், அதுக்கு கூட அசராம நிற்ப! இப்போ என்ன….?”, என்றான்.

“நான் நல்லா தான் இருக்கேன், நான் இப்போ கல்யாணம் எல்லாம் பண்ணிக்க மாட்டேன். நாராயணன் படிப்பை முடிக்கணும். அவன் வேலைக்கு போகணும், அதுக்கு அப்புறம் தான்”, என்றாள்.

“அவனுக்கு இப்போ மூணாவது வருஷம் முடியப் போகுது, இன்னும் ஒரு வருசம் தானே….”,

“அதான்! இன்னும் ஒரு வருஷம் தானே”, என்றவள்… அவனருகில் வந்து கீர்த்தனாவிற்கு கேட்காத மாதிரி, “நான் உங்க கேஸ் முடிஞ்சு விடுதலை ஆகாம கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்”, என்றாள் உறுதியான குரலில்.

வெற்றி அதிர்ந்தான், “என்ன உளர்ற……. நீ நினைக்கற மாதிரி கேஸ் எல்லாம் அவ்வளவு சீக்கிரம் முடியாது….. அதெல்லாம் வருஷக்கணக்கா இழுக்கும்….”,

“இல்லை, நான் வரா மேடம் கிட்ட கேட்டேன்….. ராம் சார் சீக்கிரம் முடிஞ்சிடும்னு சொல்லியிருக்காங்க”, என்றாள்.

“நீ வரா மேடம் கிட்ட பேசினியா, எப்போ?”,

“அவங்களுக்கு பெண் குழந்தை பொறந்திருக்கு தான, அதுக்கு விஷ் பண்றதுக்காக கூப்பிட்டேன்……”,

“நேர்ல போய் பார்க்கலையா…?”,

“ரொம்ப பெரிய ஆளுங்க, நம்ம சும்மா சும்மா போய் நிக்க முடியாதில்ல….. போன்ல வாழ்த்து சொன்னேன்…..  நமக்கு ரொம்ப உதவி பண்ணியிருக்காங்க… நீங்க எப்போவாவது கேஸ் விஷயமா போகும் போது கூட்டிட்டு போங்க, சான்ஸ் கிடைச்சா அவங்களை பார்க்கிறேன்!”, என்றாள்.    

“சரி”, என்றவன்…… கீழே சென்று விட்டான். இனி சந்தியாவிடம் பேசி பிரயோஜனமில்லை, இவளின் அம்மாவிடம் தான் பேச வேண்டும் என்று……

“என் கேஸ் முடிஞ்சு நான் விடுதலையானா இவ கல்யாணம் பண்ணிக்குவாளாம் இல்லைன்னா பண்ணிக்க மாட்டாளா….. லூசு உளருது!”, என்று மனதிற்குள் திட்டிக் கொண்டே சென்றான்.

திரும்ப பட்டறைக்கு போக மனமில்லாமல் தங்கபாண்டியிடம், “பூட்டி சாவி கொண்டு வந்து குடுத்துடுடா”, என்று சொல்லி வீட்டிற்கு போய்விட்டான்.

அவன் செல்லவும்….. சிறிது நேரத்திலேயே ராஜம் வந்தார், “தம்பி! வர சொன்னீங்களாம்”, என்று சொல்லிக் கொண்டே……..

அப்போது அங்கே தான் மீனாட்சியும் ஞானவேலும் இருந்தனர்…

“சந்தியா சும்மா இருக்குதே, அதை டீச்சர் படிப்புக்கு சேர்த்துவிடலாம்ன்னு சொல்ல தான் கூப்பிட்டேன் மா…. அது படிக்க மாட்டேன்னு சொல்லுது. பேசாம அதுக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செஞ்சு வெச்சிடுங்களேன்…. வயசாகுது இல்லை!”, என்றான்.

“வெற்றி சொல்றது சரிதான் ராஜம்!”, என்று மீனாட்சியும் சொல்ல…..

ஞானவேலிற்கு தான் எரிச்சலாக இருந்தது….. “இவனுக்கு யாராவது தியாகி பட்டம் குடுக்க போறாங்களா என்ன….? அந்த பொண்ணுனால கொலைக்கேசுல மாட்டியிருக்கான், இதுல அந்த பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கிறான், அவ்வளவு நல்லவனாடா நீ”, என்று வெற்றியை ஏகத்திற்கும் முறைத்தான்.     

“ஆமாம், தம்பி, இருபத்தஞ்சு முடியப் போகுது…. நானும் அந்த எண்ணத்துல தான் இருக்கேன்… அவளுக்கு கல்யாணம் பண்ணிடலாம்னு… அகல்யாகிட்ட மாப்பிள்ளை பார்க்க சொல்லியிருக்கேன்…. ஏதாவது வரன் நல்ல படியா அமைஞ்சதுன்னா எப்பாடு பட்டாவது கல்யாணத்தை முடிச்சிடுவேன்…. என் மாமனாரும் அப்படி தான் சொல்லிட்டு இருக்கார்…..”,

“அவரும் ஊருக்கு போன் செஞ்சு நாலு பேர்கிட்ட சொல்லி வெச்சிருக்கார்”, என்று ராஜம் சொல்லவும்…

“நல்ல வேலை செஞ்சீங்க, அதை சொல்ல தான் கூப்பிட்டேன்”, என்றான் வெற்றி…..

ராஜம் சென்றதும், வெற்றிவேலை ஒரு பிடி பிடித்தான் ஞானவேல்….. “யாரு கல்யாணம் பண்ணினா, உனக்கென்ன? கல்யாணம் பண்ணிக்காட்டா உனக்கென்ன…….? ஏற்கனவே கேஸ்ல மாட்டியிருக்க, முதல்ல அதுல இருந்து வெளில வரணும்…. உனக்கும் வயசாகுது முதல்ல நீ கல்யாணம் பண்ணிக்கோ”, என்றான்.

“ஏண்டா கேஸ் என்னாகுதுன்னு தெரியாம நான் எப்படி இப்போ கல்யாணம் பண்ணிக்க முடியும்… முதல்ல கேஸ் முடியட்டும், அப்புறம் பார்க்கலாம்”, என்றான் தீவிரமான குரலில்…..

மீனாட்சி கவலையாக பார்க்கவும், “எனக்கு நம்பிக்கையிருக்கு மா, நான் விடுதலையாகிடுவேன்”, என்றான் நம்பிக்கையாக வெற்றி…

ஆனால் வெற்றியின் பதிலில் ஞானவேல் சமாதானமாகவில்லை…… “இவன் கேஸ் முடியற வரைக்கும் கல்யாணத்தை பத்தி நினைக்க மாட்டானாம், ஆனா இவனை மாட்ட வெச்சிட்டு அந்த பொண்ணு கல்யாணம் பண்ணிக்குமாம், எந்த ஊரு நியாயம்டா இது”, என்று மனதிற்குள் நினைத்தான், ஆனால் வெளியில் சொல்லவில்லை,

வெற்றி சந்தியாவிற்காக இவ்வளவு பார்க்கும் போது இதை சொன்னால் அவனுக்கு கோபம் வந்துவிடும் என்று அமைதியாகிவிட்டான். வெளிப்படையாக தன் எண்ணத்தை வெற்றியிடம் சொல்ல முடியவில்லை….. வெற்றியின் கோபத்தை ஞானவேல் நன்கு அறிந்தவன்…..

 ஆனால் அந்த எண்ணம் மட்டும் மனதினில் வலுவாக இருந்தது….    

மீனாட்சி தான், “நாமளும் பொண்ணு பார்க்கலாமே வெற்றி….”, என்றார்.

“அம்மா, யாரு பொண்ணு குடுப்பா? கொலைக் கேஸ் என் மேல இருக்கு…. விடுதலையானாலே பொண்ணு கிடைக்கறது கஷ்டம்…. இதுல கேஸ் நடக்கும் போது பொண்ணு பார்த்தீங்கன்னா, தேவையில்லாத பேச்சுக்கள் வரும்……”,

“எவனாவது பேசுனா எனக்கு கோபம் வரும்.. மேல மேல என் பேர் தான் எல்லார் வாயிலையும் வரும் …… அமைதியா இரு கொஞ்ச காலத்துக்கு…… வேணும்னா இவனுக்கு பொண்ணு பார்க்கலாமா?”, என்று ஞானவேலை பார்க்க….

“ஏண்டா என்னை பார்த்தா உனக்கு எப்படி இருக்கு…… யாரோ ஒரு பொண்ணுக்காக நீ இவ்வளவு செய்வியான்…… நான் உன் மேல அக்கறையில்லாம கல்யாணம் பண்ணிக்கணுமா…. என்னை பார்த்தா உனக்கு அவ்வளவு கேவலமானவனா தெரியுதா?”, என்று ஏகத்திற்கும் கோபப்பட……

“டேய், ஞானம்! எதுக்கு இவ்வளவு கோபம்?”, என்று வெற்றி சமாதானப்படுத்தின போதும் ஞானவேலின் கோபம் தணியவில்லை….

“என்கிட்டே பேசாத நீ, நீ என்னோட அண்ணன், அந்த அக்கறை உன் மேல எனக்கு இருக்காதா….. ஏன் நீதான் என்னை பார்த்துக்கணுமா? நான் உன்னை பார்க்க கூடாதா…  நீ கல்யாணம் பண்ணிகாத போது நான் கல்யாணம் பண்ணிக்குவேணா….”,

“அப்படியா என்னை பார்த்தா உனக்கு தெரியுது”, என்று கோபப்பட்டு….. பைக்கை எடுத்து கொண்டு எங்கோ வெளியில் சென்று விட்டான்.     

“அம்மா ஏன் மா இவ்வளவு கோபப்படறான் இவன்?”, என்று வெற்றி மீனாட்சியிடம் சொல்ல……

“பொண்ணுங்களோ? பசங்களோ? அந்த அந்த வயசுக்குள்ள கல்யாணம் பண்ணிக்கணும் வெற்றி…… உனக்கு இருபத்து ஒன்பது முடியப் போகுது…. அவனுக்கு இருபத்தாறு முடியப் போகுது…. நீ கேஸ் முடியற வரைக்கும் பொண்ணு பார்க்க வேண்டாம்னு சொல்ற… என்ன பண்ணட்டும் நானு”, என்று அம்மாவும் சலிப்பாக பேசி செல்ல..

“என்னம்மா சொல்ற நீ, நம்ம வீட்டுல பொண்ணு இருந்தா இப்படி ஒருத்தனுக்கு கல்யாணம் செஞ்சு வெப்போமா… அப்படி இந்த சமயத்துல பொண்ணு குடுக்கறாங்கன்னா அவங்களுக்கு என்ன நிர்பந்தமோ! அப்படி ஒரு பொண்ணை நான் ஏன் கல்யாணம் பண்ணிக்கணும்”, என்று வெற்றி கேட்க….

“இதற்கு என்ன தீர்வோ?”, என்று தெரியாமல் மீனாட்சி சோகமாக படுத்துக் கொண்டார்.

பன்னிரெண்டு மணியாகியும் ஞானவேல் வீட்டிற்கு வராததால்….. வெற்றி அவனை தொலைபேசியில் அழைக்க…..

“நான் வீட்டுக்கு வரமாட்டேன். நீ தான் என்னை தள்ளி தள்ளி வெக்கிறியே….. அது உன்னோட வீடு, நான் ஏன் வரணும்?”, என்று ஞானவேல் சொல்ல…..

“டேய்! எதிர்ல மட்டும் நீ இப்ப இருந்த… மூஞ்சி முகரையெல்லாம் பேத்துடுவேன்….. இன்னும் பத்து நிமிஷத்துல நீ வீட்ல இருக்க…. உன் வீடு, என் வீடுன்னு சொன்ன தொலைச்சிடுவேன், ஒழுங்கு மரியாதையா வீடு வந்து சேருடா!”, என்று போனிலேயே கத்தினான்.

அப்போதும் அரை மணிநேரம் கழித்து தான் ஞானவேல் வீட்டிற்கு வந்தான்…… வெற்றி வாசலிலேயே அமர்ந்திருக்க…..

ஞானவேல் பைக்கிலேயே அமர்ந்திருந்தான்…….

“உள்ள வாடா!”, என்று வார்த்தைகளை வெற்றி கடித்து துப்ப…..

“என்னை அடிக்க மாட்ட தானே”, என்றான் ஞானவேல்…..

“இப்ப நீ இறங்கி வரலைன்னா தான் அடி வாங்குவ!”, என்று வெற்றி சொல்ல……

அப்போதும் தயங்கி தயங்கி வந்தான் ஞானவேல்…. “என்னடா பண்ணியிருக்க? இவ்வளவு பம்முற!”, என்று வெற்றி பக்கத்தில் போகப் போக…..

“பழைய ஃபிரண்ட்ஸ் பார்த்தனா, உன் மேல வேற கோவமா இருந்தனா, கொஞ்சமா குடிச்சேன்!”, என்று ஞானவேல் சொல்ல….

“உள்ளே போ!”, என்றான் வெற்றி…..

அப்போது எதுவும் பேசவில்லை…… ஆனால் காலையில் ஞானவேல் எழுந்த பிறகு மீனாட்சிக்கு தெரியாமல், அவனை பிடி பிடி என்று பிடித்து விட்டான்.

“இனிமே இப்படி பண்ணமாட்டேன்!”, என்று ஞானவேல் சொல்லும் வரை விடவில்லை. வெற்றிக்கு குடி பழக்கம் அறவே பிடிக்காது….

அப்போதும் ஞானவேல், “நான் உன்னோட நல்லதுக்கு சொல்றதை நீ கேட்கலைன்னா இப்படி தான் பண்ணுவேன்”, என்று சொன்னவன்…… உன் கல்யாணத்துக்கும் கேசுக்கும் சமந்தமில்லை…… நல்ல பொண்ணா கிடைச்துன்னா நீ கல்யாணம் பண்ணிக்கற…..”,

“எனக்கு இப்போ யாருடா பொண்ணு குடுப்பா…..”,

“அதை பத்தி நீ யோசிக்காத… அதை நானும் அம்மாவும் பார்த்துக்குவோம்…. நான் எப்படியோ போகட்டும் நீ விட்டுடுவன்னா சொல்லு……. நானும் உன்னை பத்தி கவலைப் படலை….”,

“நீ எப்படியோ போன்னு நான் விடுவானா”, என்று வெற்றி ஞானவேலிடம் எகிற…..

“உன்னால முடியாதுல்ல, அப்புறம் நான் மட்டும் உன்னை விட்டுடுவனா…… போடா போய் வேலையை பாரு…. நான் சொல்றதை கேட்கலை…… நான் வீட்ல இருக்க மாட்டேன். அப்புறம் வீட்டை விட்டு போயிடுவேன்”, என்று பயமுறுத்தினான்.

“இன்னாடா பேசற நீ”,

“அப்படித்தான் பேசுவேன், போடா!”, என்று ஞானவேல் அவன் வேலையை பார்க்க கிளம்பினான்.

இப்படியே சந்தியாவிற்கு ஒரு பக்கம் அகல்யா வீட்டினர் மாப்பிள்ளை பார்க்க……. வெற்றிக்கு ஞானவேலும் மீனாட்சியும் பெண் தேட இருவருக்குமே அமையவில்லை.

இப்படியே நான்கைந்து மாதம் ஓட… அகல்யாவின் கணவன் வெற்றிக்கு போன் செய்தவன்….. “சென்னையில வீடு வாங்கலாம்னு இருக்கேன்……… ஏதாவது நல்லதா இருந்தா பார்த்து சொல்லுங்களேன்!”, என்றான் அவன்.

“என்ன மாதிரி பார்க்கறீங்க? என்ன பட்ஜெட்?”, என்ற விவரத்தையெல்லாம் சேகரித்த வெற்றி…. “என்கிட்ட வட்டிக்கு, அவரோட வீட்டை வெச்சு பணம் வாங்கின ஒருத்தர்…. இப்போ வீட்டை விக்கற நிலைமையில தான் இருக்கார்… என்னை வாங்கிக்க சொன்னார்…..”,

“இப்போ நான் அவ்வளவு பணம் புரட்டுற சூழ்நிலையில இல்லை….  என்கிட்டயும் ஆளுங்க யாராவது இருந்தா சொல்லுங்கன்னு சொன்னார்….”,

“இங்க எங்க ஏரியா பக்கத்துல தான்….. ஆனா அது கொஞ்சம் மேல் தட்டு மக்கள் இருக்குற ஏரியா, அதனால மார்கெட் ரேட் கொஞ்சம் அதிகம் தான்….. அக்ரிமென்ட் போடாம ஃபுல் செட்டில்மென்ட் பேசினா, குறைய வாய்ப்பிருக்கு….. வீடு பழைய வீடு தான்….. வீட்டை பெருசா கணக்குல எடுக்க முடியாது… ஆனா இடம் ரொம்ப வேல்யு….    பேசி பார்க்கட்டுமா”, என்று வெற்றி கேட்க…….

அகல்யாவின் கணவன், “சரி”, என்று சொல்ல…. ஒரே வாரத்தில் விலை படிந்து விட.. ஒரே மாதத்தில் வீடு ரெஜிஸ்டர் ஆகிவிட…..   அதன் பிறகு சந்தியா வீட்டினர் அந்த வீட்டிற்கு குடி சென்றனர்.

வீடு பழைய வீடு என்றாலும் சற்று பெரிய இடமே, வெற்றி நடுவில் நின்றதால் தான் அந்த விலை படிந்தது.

இப்போது சந்தியா வீட்டினர் வெற்றியின் வீட்டில் குடி இருக்கவில்லை….. ஆனால் சந்தியா மாலை வேலைகளில் வெற்றியின் வீட்டு மாடியில் தான் டுயுஷன் எடுத்தாள்… ஏனென்றால் பிள்ளைகள் எல்லாம் அந்த வீதி, பக்கத்துக்கு வீதி என்று அந்த இடத்தை சுற்றியே இருந்தனர்.

இப்படியே ஆறேழு மாதங்கள் ஓடியது…. முற்றிலும் பழைய மாதிரி சந்தியா கலகலப்பாக மாறி விட்டாள் என்று சொல்ல முடியாவிட்டாலும் சந்தியா தேறியிருந்தாள்….. அவளுடைய தற்போதையை ஒரே பிரார்த்தனை வெற்றி இந்த கேசில் இருந்து விடுதலையாகிவிட வேண்டும் என்பது தான்.

ராமும் இன்னும் நான்கைந்து மாதங்களில் கேஸ் முடிந்து விடும் என்று வாக்குறுதி கொடுத்திருந்தான்.

சந்தியா மாலை ஐந்து மணிக்கெல்லாம் டுயுஷன் எடுக்க வந்துவிடுவாள்…. ஒரு ஆறரை போல கீர்த்தனா வந்துவிடுவாள்….. எட்டரை மணி வரை டியுஷன் இருக்கும்…

அங்கிருந்து சந்தியா வீட்டினர் இருந்த வீட்டிற்கு சற்று தூரம் நடக்க வேண்டும்….. எப்போதும் பட்டறையில் வேலை செய்யும் பையன்கள் யாராவது சந்தியாவும் கீர்த்தனாவும் வீடு திரும்பும் போது கூட இருப்பது போல பார்த்துக் கொள்வான் வெற்றி…..

சில நாட்கள் அவனும் கூட நடந்து செல்லுவான்…..

மொத்தத்தில் சந்தியா வீடு தூரமாக சென்று விட்டாலும்…… வெற்றிக்கு சந்தியாவின் மீது இருந்த அக்கறையும், தோழமையும் தொடர்ந்து கொண்டுதானிருந்தது.

ஞானவேலும் அண்ணனிற்காக தீவிரமாக பெண் தேட, பெண் தான் அமைந்த பாடில்லை. ஏற்கனவே வெற்றியின் வேலையின் பொருட்டு  பெண் அமைவது தடையாக இருக்க….. இதில் கொலை பழி வேறு, அதற்காக நடந்து கொண்டிருக்கும் கேஸ் இன்னமும் விஷயத்தை சிக்கலாக்க……

மீனாட்சியும் ஞானவேலும் கடுமையான மன உளைச்சலில் இருந்தனர்……

இதற்கிடையில் அகல்யாவின் கணவன் யு எஸ் ஸில் வேலை பார்க்கும் இடத்தில் இருந்த ஒரு தமிழ் பையன் அகல்யாவின் வீட்டிற்கு வந்த போது அகல்யாவின் திருமண ஆல்பத்தை பார்த்துவிட்டு….. சந்தியாவிற்கு மாப்பிள்ளை பார்க்கும் விஷயம் அறிந்து… திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தான்.

ஜாதகமும் பொருந்த.. அந்த பையனுக்கும் பெண் கொடுத்தால் மட்டும் போதும் என்பது போல சந்தியாவை மிகவும் பிடித்து விட…… 

சந்தியா வெற்றியின் கேஸ் முடியட்டும் பேசலாம் என்பது போல ஸ்ட்ரிக்ட்டாக அம்மாவிடம் பேச…..

அகல்யாவின் கணவன் வெற்றி சொன்னால் சந்தியா சற்று கேட்பாள் என்று வெற்றிக்கு தொலைபேசியில் அழைத்து சொல்ல……

வெற்றியும் சந்தியாவிடம் பேச போனான்……

அகல்யாவின் கணவன் அழைத்த தொலைபேசி அழைப்பு மீனாட்சியும் ஞானவேலும் அருகில் இருக்கும் போது தான் வர….. விஷயத்தை அவர்கள் இருவரிடமும் வெற்றி சொல்ல…..

ஞானவேல் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான்….. முதல்ல ரொம்ப கஷ்டத்துல இருந்தாங்க…… இப்போ மாப்பிள்ளை வீடு வாங்கவும், அந்த வீட்டுக்கு போயிட்டாங்க….. கொஞ்ச நாள்ல நாராயணன் முடிச்சிடுவான்…. அவனுக்கு வேலை கிடைச்சிடும்……

இந்த சந்தியா கல்யாணம் செஞ்சு யு எஸ் போயிட்டு நல்ல கணவனோட வசதியா வாழ்வா…  அப்போ எங்கண்ணன்? இந்த பொண்ணுக்கு உதவி செய்ய போய் அவன் கொலை கேசுல மாட்டி…..  நல்ல படிச்ச அழகான பொண்ணு கிடைக்காம யாரையாவது கல்யாணம் பண்ணிகிறதா…..?

அப்படி தான் பரவாயில்லை, பொண்ணு சுமாரா இருந்தா போதும், ஆனா குடும்பம் நல்ல குடும்பமா இருந்தா போதும்னு நினைச்சாலும் அதுக்கும் இன்னும் பொண்ணு கிடைக்கலை…… இப்போவே வெற்றிக்கு முப்பது வயசு…. பதினஞ்சு வயசுல இருந்து உழைக்கறான்….. 

அப்போ வெற்றி? அவன் கல்யாணம்? ஞானவேலின் மனம் கொந்தளிக்க ஆரம்பித்தது.        

               

 

Advertisement