Advertisement

                                             கணபதியே அருள்வாய்

          நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை

அத்தியாயம் ஒன்று :

விடிந்தும் விடியாத காலை பொழுது….. ஜனசந்தடி மிகுந்த சென்னையின் ஒரு பகுதி…..  அப்போது ஜனங்கள் அதிகமில்லாமல்…… நேற்றைய சந்தடிகள் எல்லாம் ஓய்ந்து…… அதிகாலை பொழுது கொடுத்த அதிக ஜனங்களற்ற அமைதியை….  அந்த தெரு அதற்கு அதுவே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

ஆம்! நாமிருப்போமா இல்லையோ…….. உயிரற்று இருந்தாலும் இவைகள் உயிருடன் இருந்தால்……. இருக்கும்…… இருக்கப்போகும் உயிரினங்களின்  ஞாபகங்களை கொண்டு இருக்கும்…

காலச் சுவடுகள் தான்…… 

அந்த தெருவின் தோற்றம் காலப்போக்கில் மாறலாம், அது இருந்த அடையாளம் கூட இல்லாமல் போகலாம்….. ஆனால் அந்த நிலம் அந்த நினைவுகளை தாங்கியே இருக்கும்…..

அது ஒரு மாதிரி நாம் பிட் ரோடு என்று கூட சொல்லாம்….. ஏனென்றால் அந்த தெருவின் இந்த புறம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மக்கள்… இந்த புறம் பணம் படைத்தவர்கள் வசிக்கும் இடம்…… இரண்டிற்கும் நடுவில் இணைக்கும் பாலம்…. அந்த தெரு.

அந்த தெருவின் நடுவில் எதிரில் ஒரு தெரு போக அதன் உள் சென்றால் எல்லாம் நடுத்தர குடும்பத்து வாசிகள்…….

ஆக அங்கே எல்லா வகையான மக்களையும் காணலாம்…. பணம் படைத்தவர்கள்….. நடுத்தர வர்க்கத்தினர்…… பண வசதி மிகவும் குறைந்தவர்கள்……

தெரு மட்டுமல்ல….. மற்றொருவனும் கேட்டிற்கு உள் இருக்கும் வீட்டின் படியில்  அமர்ந்து அந்த சந்தடிகளற்ற அமைதியை ரசித்துக் கொண்டிருந்தான்……. இன்னும் சிறிது நேரம் தான் பரபரப்பு ஆரம்பமாகிவிடும்…..

அவன் அமர்ந்து கொண்டிருப்பது அவன் வீடு…. இப்போது தான் புதிதாக கட்டியிருந்தான்…… இரண்டு பெட்ரூம், ஹால், கிட்சன் என்று கச்சிதமான அமைப்பு கொண்ட வீடு.. ஒரு சிறு அடியை கூட வீணாக்கவில்லை…..

தேவைக்கு அதிகமாக இடம் வீணாக்க அவனுக்கு விருப்பமில்லை… ஒரு சிறு இடம் மிச்சமிருந்தலும் அதில் என்ன செய்யலாம்… ஒரு ரூம் கட்டி வாடகைக்கு விடலாமா இப்படி தான் அவன் யோசனைகள் ஓடும்…..

வாழ்க்கையின் அடி மட்டத்தில் இருந்து உழைத்து முன்னேறியவன், அதன் சான்று இப்போது அவன் புதிதாக கட்டியிருக்கும் இந்த வீடு….. அதே காம்பௌண்டில் அவன் கட்டியிருந்த வீட்டிற்கு சேர்ந்த மாதிரி ஒரு சந்து இருக்க…. அதை தாண்டி ரோடை பார்த்த மாதிரி ஒரு வீடு…. சந்துக்குள் இரண்டு வீடுகள்…. அதன் மாடி மேல் மூன்று வீடுகள்… வாடகைக்கு விட்டிருந்தான்.

ரோடை பார்த்த மாதிரி இருந்த வீடு வேறு காலியாக இருந்தது… இன்று அதற்கு குடித்தனக்காரர்கள் வருவார்கள் என்று சொல்லப்பட்டிருந்தது.

அவன் அமர்ந்திருப்பதற்கு எதிரில் வெற்றி வெல்டிங் அண்ட் பெயிண்ட்டிங் ஒர்க்ஸ் என்ற பலகையை தாங்கி ஒரு ஷெட்டு… முன்னால் வாகனங்கள் நிறுத்துவதற்கு காலி இடம் உள்ளே ஷட்டர் இறக்கி ஒரு கட்டடம் இருந்தது……. சற்று பெரிய இடம்.

இது அத்தனையும் அவன் உழைப்பு… ஒரு வருட இரண்டு வருட உழைப்பு அல்ல பதிமூன்று வருட உழைப்பு…. அவனுடைய பதினைந்தாவது வயதில் பத்தாம் வகுப்பில் எப்படியோ தட்டு தடுமாறி பாஸ் செய்தவுடன்…. படிப்பு நமக்கு செட் ஆகாது என்று தோன்றி உடனே முடிவெடுத்து….. ஒரு வெல்டிங் பட்டறையில் வேலைக்கு சேர்ந்தான்.

மூன்று வருடங்கள் உதவியாளராக இருந்து பிறகு சொந்தமாக ஆரம்பித்து…. அதனோடு கார் வாங்கி விற்கும் தொழிலும் செய்ய….. அவன் உழைப்போடு நேரமும் காலமும் சேர்ந்து கொள்ள…. அதன் பரிசுகள் எல்லாம் தான் இவை.

இல்லாதவனுக்கும் பணத்தின் அருமை தெரியும்…… இருப்பவனுக்கும் பணத்தின் அருமை தெரியும்… இருந்தும் இல்லாமல் இருப்பவனுக்கு தான் அந்த அருமை தெரியாது….

ஆதலால் வெற்றிவேலுக்கு பணத்தின் அருமை நன்றாக தெரியும்….. ஆம் அவன் பெயர் வெற்றிவேல்…  பெயருக்கு தகுந்த மாதிரி வெற்றியை கடின உழைப்பின் காரணமாக தக்க வைத்துக் கொண்டிருந்தான். 

முன்பு வெற்றிவேல் இல்லாதவன்….. இப்போது இருப்பவன்…..      

“அண்ணா”, என்றழைத்தபடியே பட்டறையில் வேலை செய்யும் தங்கபாண்டி பையன் வந்துவிட…  அவன் கையில் சாவியை வைத்தான் வெற்றிவேல்.

“அண்ணா! டீ வாங்கிட்டு வந்துடட்டுமா…..!”,

“கேட்டை திறந்து வெச்சிட்டு போ…. பசங்க வந்துடுவாங்க”, என்று வெற்றி சொல்லவும்…. வெல்டிங் பட்டறையின் கேட்டை திறந்து…. அதன் முன் வாசலை கூட்டிக் கொண்டிருக்கவும்….. அதற்குள் மற்றவர்கள் வர…… ஆளுக்கு ஒரு வேலையாக செய்தனர்.

ஒருவன் தண்ணீர் தெளிக்க… ஒருவன் உடற்பயிற்சி உபகரணங்களை  எடுத்து வைக்க…. ஷெட்டிற்கு முன் இருந்த காலி இடத்தில் ஆளுக்கு ஒரு பக்கம் உடற்பயிற்சியை ஆரம்பித்தனர்.

வெற்றிவேல் தான் அங்கே உடற்பயிற்சி ஆசிரியன்…. பாடி பில்டிங் மட்டுமல்ல சிலம்பம் ,களறி போன்ற தற்காப்பு கலைகளையும் கற்றுக் கொடுப்பவன்.

அவனுக்கு இதில் மிகுந்த ஈடுபாடு… எல்லோரும் இந்த கலைகளை கற்றுக் கொடுப்பதில் பணம் பார்த்துக் கொண்டிருக்க… இலவசமாக பயிற்சி அளித்துக் கொண்டிருந்தான்.

அவனுடைய மாணவர்கள் எல்லா வகையையும் சேர்ந்தவர்கள்….. மேல் தட்டு வர்க்கத்தினர்…. நடுத்தர வர்க்கத்தினர்… கீழ் தட்டு மக்கள்… என்று மூன்று வகையையும் சேர்ந்த இளைஞர்கள்.   

தங்கபாண்டி திரும்ப வந்து, “டீ வாங்கிட்டு வரட்டுமா அண்ணா….”, என்று நின்றான்.

“ம்”, என்று சொல்லி வெற்றி அவனிடம் பணத்தை கொடுக்க…… வீட்டிற்குள் சென்று பிளாஸ்கை எடுத்துக் கொண்டு வேகமாக சென்று டீ வாங்கி வந்தான்….

வெற்றிக்கு ஊற்றிக் கொடுத்தவன்.. “இன்னும் சின்ன அண்ணன் எந்திரிக்கலையா”, என்று வெற்றியிடம் கேட்க….

“அவனை எழுப்பர நேரத்துக்கு நான் நூறு தண்டால் எடுத்துடுவேன்…… நீயே அவனை எழுப்பி டீ குடுத்து அங்க கூட்டிட்டு வா!”, என்று சொல்லி டீயை குடித்து அவன் உடற்பயிற்சி நடக்கும் இடத்திற்கு சென்றான்.

“வணக்கம் அண்ணாத்தே!”, என்று இவனை பார்த்ததும் பவ்யமாக வந்து அவன் காலை தொட்டு குரு வணக்கம் செலுத்த முற்பட்டவர்களை…. “இன்னாத்துக்குடா…. டெய்லி காண்டி உங்கலாண்ட சொல்லிக்கினே இருப்பனா…”,

“அவராண்ட ஒரு வணக்கத்தை போடுங்க….”, என்று அங்கே இருந்த ஆஞ்சநேயர் படத்தை காட்டினான்…

இப்படி ஒரு பக்கம் அவன் மாணவர்கள் இருக்க…

“குட் மார்னிங் ப்ரோ”, என்றபடி சில மாணவர்கள் இருக்க….

“குட் மார்னிங் பாஸ்!”, என்றான் இவன் அவர்களை பார்த்து….

“நான் கேட்ட கார்”, என்று ஒரு மாணவன் ஆரம்பிக்க….

“ட்ரைனிங் டைம்ல நோ டாக்கிங்”, என்றான். 

“அங்க ஒரு குட் மார்னிங்”, என்று ஆஞ்சநேயரை காட்ட…… அவர்கள் அவன் சொல் தட்டாது சாஷ்டாங்கமாக விழுந்து வாங்கினர்.    

வெற்றியின் தமிழ் ஆளுக்கு தகுந்த மாதிரி வேறுபடும்…. அவனிடம் சென்னை தமிழில் பேசுபவர்களுக்கு அவனும் சென்னை தமிழிலேயே பதில் கொடுப்பான்…. இப்போது சென்னை பணியின் நிமித்தம் மற்ற மாவட்ட தமிழ் மக்களின் சரணாலயம் ஆகிவிட்டதால்…. அந்த தமிழும் நன்றாக பேசுவான்.

பிறகு பயிற்சியை ஆரம்பித்தான் வெற்றிவேல்…. லாவகமாக அவன், அவன் போட்டிருந்த கையிலா பனியனை கழற்றி… அங்கே இருந்த சேரில் போட்டவன்… லுங்கியை உடற்பயிற்சி செய்வதற்கு ஏதுவாக இரண்டு கால்களுக்கும் இடையில் சுற்றி கட்டி…… கீழே மண்ணை தொட்டு வணங்கி…. அதே மண்ணை எடுத்து இரண்டு உள்ளங்கைகளிலும் தேய்த்து விட்டுக் கொண்டான்.

“ம், ஆரம்பி!”, என்று எதிரில் இருந்தவனை பார்த்து சொல்ல…… அவன் சிலம்பத்தை சுழற்ற ஆரம்பித்தான்.        

அட்டை கருப்பு, மை போன்ற கருப்பு என்றெல்லாம் சொல்லகிற அளவு வெற்றிவேல் கரிய நிறத்தவன் கிடையாது…. ஆனால் கருமை நிறத்தவனே…. நிறம் மட்டுமே கறுப்பு….. மற்றபடி மிகவும் வசீகரிக்கும் முகத் தோற்றமுடையவன்…. நல்ல உயரம்.. தினமும் உடற்பயிர்சியினால் இருக்கும் கட்டு மஸ்தான உடல்…… உழைப்பு……. அதன் வெற்றி கொடுக்கும் திமிர்… மொத்தத்தில் கருப்பன் ஆனால் அழகன்.

ஆங்காங்கே பால் வாங்க…. காய்கறி வாங்க…. டியுஷன் போக…. என்று பரபரப்பு ஆரம்பித்து கொண்டிருக்கும் அந்த காலை நேரத்தில்….. அது ஆண்களாயினும் சரி பெண்களாயினும் சரி…. எல்லா வயதினரும் அந்த பயிற்சி கூடத்தை பார்வையிட்டு கொண்டே சென்றனர்….

அப்போது பார்த்து மினி லாரி ஒன்று சாமான்களோடு அந்த தெருவில் வந்து நின்றது….

அங்கிருந்த இறங்கிய ஒரு டிரைவர் அட்ரஸ் யாரிடம் கேட்பது என்பது போல பார்த்தவன்……. இந்த பயிற்சி கூடத்தை பார்த்ததும் வந்தான். லாரியில் இருந்து ஒரு அரும்பு மீசை இளைஞனும் இறங்கினான்.

“டேய்! என்னன்னு பாரு!”, என்று வெற்றி தங்கப்பாண்டியிடம் கூற…… தங்கபாண்டி வந்து பார்த்தவன்…..

“அண்ணா, நம்ம வீட்டு அட்ரெஸ் தான்!”, என்றான்.

வெற்றிவேலின் கம்பௌண்டில் முன்புறம் காலியாக இருந்த வீட்டிற்கு இன்று குடித்தனக்கார்கள் வருவது அவனின் ஞாபகத்திற்கு வந்தது.

வெளியில் வந்த வெற்றிவேல்… “சாமான் வந்திருக்கு! ஆளுங்க எங்க?”, என்று அதட்டலாக கேட்கவும்……

டிரைவர் திரும்பி அந்த இளைஞனை பார்த்து, “தம்பி! முன்ன வா!”, என்று குரல் கொடுத்தான்………

வந்த அந்த இளைஞன், “நான் தீனாவோட ஃபிரண்ட்”, என்று அறிமுகப்படுத்திக் கொண்டான்.

தீனா வெற்றியின் சித்தப்பா பையன்… அவனுடன் காலேஜில் படிக்கும் நண்பனின் குடும்பம், இவ்வளவு நாள் ஒட்டன் சத்திரத்தில் இருந்தவர்கள் படிப்பை முன்னிட்டு இங்கே சென்னை குடிபெயர்கிறார்கள், அவர்களுக்கு வீடு வேண்டும் என்று சொல்லியிருந்தான்.

தீனாவின் சினேகிதன் என்பதால் உடனே வெற்றியும் சரியென்று சொல்லிவிட்டான்.

“உன் பேரென்ன?”, என்று வெற்றி கேட்டுக் கொண்டிருக்கும் போதே….. தீனா பைக்கில் பறந்து தான் வந்தான்….

“சாரிடா லேட் ஆயிட்ச்சு!”, என்று அவனிடம் சொல்லிகொண்டே…

“அண்ணா! இது தான்  நம்ம ஃபிரண்டு…. நாராயணன்!”, என்றான்.

“சாவி குடுண்ணா! சாமான் இறக்கணும்!”, என்று வெற்றியிடம் பேசிக்கொண்டே நாராயணனிடம் எதுவும் விசாரிக்க விடாமல்…….

“டேய்! போய் சாமானை இறக்கு!”, என்று நாராயணனை தீனா சொல்லி அனுப்பினான்.

“எங்கடா இவன் மட்டும் வந்திருக்கான்….. இவனோட அப்பா, அம்மா”, என்று வெற்றி கேட்க….

“அவங்கல்லாம் ட்ரெயின்ல வர்றாங்க…”, என்று சொல்லி தீனாவும் எஸ்கேப்…

வெற்றிக்கு எதுவும் வித்தியாசமாக தோன்றவில்லை….

சிறிது நேரத்தில் நாராயணின் குடும்பம் வர…. என்ன இத்தனை பேரா என்று அயர்ந்து விட்டான்… யார் யார் இருந்தர் என்று கூட பார்க்கவில்லை… எத்தனை தலை என்று தான் எண்ணினான்.

நாராயணன் இல்லாமல் பெரியவர்கள் மட்டும் ஐந்து பேர், அது இல்லாமல் இரண்டு இளம் பெண்கள்…. அதுவும் அந்த பெண்கள் வேறு லட்சணமாக இருக்க…. முதலில் பயிற்சிக் கூடத்தை தான் திரும்பி பார்த்தான்.

எல்லோர் பார்வையும் இங்கு தானிருந்தது…. வெற்றி திரும்பியது அவனவன் பயிற்சி செய்வது போல திரும்பிக் கொள்ள….

“என்னடா இதுகள் வந்த நாளே தலைவலி?”, என்பது போல தான் வெற்றிக்கு இருந்தது.

“டேய்! சாமான் இறக்கறதை நிறுத்து!”, என்று தீனாவை நோக்கி சத்தம் போட….

தீனா பதறி வந்தான்….. “என்னண்ணா?”, என்று அருகில் வந்து கேட்கவும்…..

“மொதல்ல எத்தனை பேர் குடியிருக்க போறாங்க, சொல்லு!”, என்றான்…

“இவங்க எல்லோரும்……”, என்றான் தயங்கி தயங்கி….

“இன்னாது”, என்று அதிர்ச்சியில் கூவினான் வெற்றி…..

“இன்னாடா சொல்ற நீ….. ஏண்டா குடும்பத்தை கூட்டிட்டு வந்து குடி வெப்ப நினைச்சா நீ ஒரு கூட்டத்தை கூட்டிட்டு வர்ற…. இத்தனை பேரையெல்லாம் குடி வைக்க முடியாது”, என்றான் கறாராக……

“அண்ணா! ப்ளீஸ் ணா!”, என்று தீனா கெஞ்ச ஆரம்பித்தான்….. “அங்க இருக்கிறது நாராயணனோட தாத்தா, பாட்டி, பெரியம்மா, அப்பா, அம்மா, அக்கா. அவன் தங்கச்சி… அவங்க எல்லோரும் கூட்டு குடும்பம்”, என்றான் பரிதாபமாக. இன்னும் திருமணமான ஒரு அக்கா உண்டு….

“ஏண்டா முதல்லயே என்கிட்டே சொல்லலை….”,

“சொன்னா நீங்க விட மாட்டீங்கன்னு பயந்து சொல்லலை… நீங்களே சொல்லுங்க இவ்வளவு பெரிய குடும்பத்துக்கு இங்க யாரு வீடு குடுப்பா!”,

“இன்னாடா பேசற நீ….. அங்க இருக்கிறதே ஒரு ஹாலு, ஒரு ரூமு, ஒரு சமையலறை…. இத்தனை பேர் எப்படிடா இருப்பாங்க… அவங்க செருப்பு விட்டாலே வீட்ல பாதி இடம் அடைச்சிடும் போல…. எல்லோரும் நின்னுட்டே தூங்குவாங்களா…..”,

“அண்ணா ப்ளீஸ்….. நாராயணன் என்னோட கிளாஸ் மேட்….. அவனோட தங்கச்சி என்னோட ஜூனியர்… இப்போ வீடு விடலைன்னா காலேஜ்ல எனக்கு ரொம்ப அசிங்கமாகிடும்…”,

“நீ முதல்லயே என்கிட்டே சொல்லியிருக்கணும் தானே!”,

“சொல்லலாம்னு சொன்னேன்… ஞான அண்ணா தான் வேண்டாம் நான் சொல்லிக்கறேன்னு சொன்னாங்க…..”,

“நீங்க ரெண்டு பேரும் கூட்டு சதியா!”, என்று வெற்றிவேல் கேட்டான்.

நாராயணின் குடும்பம் காம்பௌன்டிற்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்தது. ஏற்கனவே தீனா நாராயணனின் தந்தையிடம் சொல்லியிருந்தான், “அப்பா! இத்தனை பேருக்கு யாரும் வீடு விட மாட்டாங்க.. எங்கண்ணன் ஏதாவது சொன்னாலும் பொறுமையா இருங்க!”, என்று…..

அவருக்கும் அது தெரிந்தது தான்…. அது மட்டுமில்லாமல் வெற்றிவேல் வேறு லுங்கியை மடித்துக் கட்டி வெற்றுடம்புடன் பயில்வான் போல அவருக்கு தோற்றமளித்ததால்…. அமைதி விரும்பியான அவர் தள்ளியே நின்றார். 

அதற்குள் ஞான அண்ணா என்று சொல்லப்பட்ட வெற்றி வேலின் தம்பி ஞான வேல் எழுந்து வந்தான்..

“அண்ணா! நான் சொல்லிட்டேன்! நீ அவங்களுக்கு வீடு விடு!”, என்று சொல்லிகொண்டே….

“இன்னாடா உங்களோட ரோதனை…. இத்தனை பேர் இருந்தா எவ்வளவு தண்ணி செலவாகும்…. இன்னாங்கடா…”, என்றான் கடுப்பாக…

“அக்கா! அந்த அண்ணா பார்க்க ரௌடி மாதிரி இருக்காங்க! நமக்கு வீடு  விடமாட்டாங்க போல! நாம எங்க போவோம்!”, என்றாள் பாவமாக கீர்த்தனா…… தன் அக்கா சந்தியாவை பார்த்து…..

சந்தியாவும் அந்த பரிதவிப்பில் தான் இருந்தாள்…. இவன் பார்ப்பதற்கு இவ்வளவு முரடாக தெரிகிறானே…..  நம்ம ஊரில் இருக்கும் அய்யனார் போல இருக்கிறானே…. விடுவானா என்று பார்த்திருந்தாள்….

தாத்தாவும் பாட்டியும் பயண களைப்பில் வெற்றிவேல் வீட்டு படியில் அமர்ந்து கொண்டார்கள்…..

நாராயணனின் பெரியம்மாவும் அம்மாவும்….. அவர்கள் ஒருப்பக்கம் வீடு விடுவார்களா மாட்டார்களா என்று பார்த்து இருந்தார்கள்…..

நாராயணன் வீட்டினர் யாரிடமும் எந்த வம்பு தும்புக்கும் போகாத மக்கள்….. மற்றவர்களிடம் பேசுவதற்கே தயங்கி எந்த பிரச்சனையும் வராதே என்பதை யோசித்து தான் பேசுவார்கள்.

இப்போதும் வெற்றிவேலின் உரமேறிய தோற்றத்தை பார்த்து பயந்து பேச தயங்கி அவன் என்ன முடிவு சொல்வானோ என்று தயங்கி நின்றனர்….. 

“அண்ணா! ரெண்டு பொண்ணுங்களை வெச்சிகிட்டு நிக்கறாங்க! எங்க போவாங்க?”, என்று ஞானவேல் சொல்ல…..

“இன்னாடா பேசற நீ! அவனவன் பொண்ணு பெத்து வெச்சா… நான் பொறுப்பா!”, என்று எகிறினான்…..

பெண்களோடு கூடப் பிறக்கவில்லை….. அம்மாவை தவிர வெற்றிக்கு வேறு பெண்களோடு பழக்கமில்லை….. எப்போதாவது பெண்களிடம் பேச நேரிட்டாலும் என்ன, ஏது என்ற பேச்சோடு சரி….  அதன் பொருட்டு அவனுக்கு பேச்சு அப்படி தான் வந்தது.    

அதற்குள் மற்ற குடித்தனக்காரர்கள் எல்லாம் ஏதோ வேலை இருப்பது போல வந்து வந்து பார்த்து சென்றனர்.

தைரியமாக அப்படியெல்லாம் நின்று வேடிக்கை பார்த்துவிட முடியாது.. ஒரு பார்வையால் உனக்கு இங்கே என்ன வேலை என்று கேட்டுவிடுவான் வெற்றிவேல்…

அவனாவது பார்வையால் கேட்பான் அவனின் அம்மா மீனாட்சி…. அந்த குடித்தனக்காரர்களை ஆட்சி புரிபவள் தான்….  

வெற்றிவேலோடு தீனாவும் ஞான வேலும் வாக்குவாதித்துக் கொண்டிருக்க… ஆட்டோவில் வந்து இறங்கினார் மீனாட்சியம்மா…… அவருக்கு கோயம்பேடு மார்க்கெட்டில் சற்று லேவா தேவி உண்டு…. காலையில் மார்க்கெட்டில் பணத்தை கொடுத்து வருவார்….. மாலையில் அதை வட்டி போட்டு வசூலித்து வருவார். அது அவரின் தொழில்…… பின்ணனியில் வெற்றி வேல் தான்.

மார்க்கெட்டில் அதிகம் பெண்கள் தான் அவர்களிடம் பணம் வாங்க, கொடுக்க இருப்பதால்…… அந்த பொறுப்பை மீனாட்சியம்மாவிடம் கொடுத்திருந்தான் வெற்றிவேல்.

“இன்னாங்கடா காலையில பேஜாரு”,  என்று அவர் இறங்கி வர….

“ம்மா… ஒரு குடும்பத்தை குடி வைக்க இத தீனா பய இட்டாருவான்னு பார்த்தா….. இவன் கூட்டத்தை கூட்டிகினு வந்திருக்கான்!”, என்று வெற்றி சொல்ல…..

திரும்பி அந்த குடும்பத்தை பார்த்தார் மீனாட்சி…..

கண்டிப்பாக வெற்றி சொல்லியது…. அந்த பாட்டி தாத்தாவின் காதில் விழுந்திருக்காது….. ஆனால் மற்றவர்கள் காதில் விழுந்திருக்கும்……

ஆனால் அதற்கான வருத்தம் மட்டுமே அவர்களின் முகத்தில் தெரிந்தது…. கோபமில்லை…. மனிதர்களை பார்வையாலேயே எடை போடக் கூடியவர்…..

அவர்களை பார்த்தால் பிரச்சனை எதுவும் கொடுக்க மாட்டார்கள் என்று தான் தோன்றியது… அதுவும் இரண்டு இளம் பெண்கள் வேறு…. “இன்னா ஷோக்கா இருக்குதுங்க…. என் மவன் அதை கூட பார்க்கலை…”,

வெற்றியை குறித்து அவருக்கு அவ்வளவு பெருமை…. அவன் வீட்டில் குடியிருந்த எந்த பெண்ணையும் இதுவரை கண்கொண்டு பார்த்ததில்லை….    

சந்தியாவின் கீர்த்தனாவின் முக பாவனைகளை பார்த்தவருக்கு பாவமாக இருக்க…..

“இருக்கட்டும் விடு வெற்றி”, என்றார்…..

“அம்மா, இத்தினி பேரா….. வீடு நாஸ்தி பண்ணிடுவாங்க”, என்று வெற்றி சொல்ல….

“நமக்கு ஒத்து வந்தா பார்ப்போம், இல்லைன்னா காலி பண்ண சொல்லிடுவோம்!”, என்று மீனாட்சி சொல்ல…. அம்மாவின் பேச்சை தட்ட முடியாமல் அரை மனதோடு பயிற்சி கூடத்தை நோக்கி திரும்பி நடந்தான்.

“ஹப்பா!”, என்று மொத்த குடும்பத்தின் முகத்திலும் நிம்மதி…

மீனாட்சி இப்போது அந்த குடும்பத்தவர்களை பார்க்க…. அவர்களுக்கு வெற்றி வேலை விட இந்த அம்மாவை பார்த்து பயம் அதிகமாக இருந்தது……

அவரும் ரெட்டை நாடி சாரீரத்துடன்…. உயரமாகவும் இருந்தார்…. என்ன வெற்றியின் அளவு கருப்பு கிடையாது…. சற்று நிறத்துடன் இருந்தார்….  

“நீங்க போங்க….. அப்புறம் யாரு என்னன்னு விசாரிக்கிறேன்!”, என்று சொல்லி சென்ற மீனாட்சியம்மாளின் கண்கள் அந்த பெண்களின் மேல் தான் இருந்தது…….

பெண்கள் நல்ல கலருடன், ஒடிசலான தேகத்துடன், அளவான உயரத்துடன்… முக லட்சனத்துடன் இருக்க…. அவர்களின் அன்னையரும் அப்படி தான் இருந்தனர்… அதில் ஒருவர் கணவனை இழந்தவர் என்று பார்த்தவுடனே தெரிந்தது.

“நம்ம ஆளுங்க இல்லை போல”, என்று அவர்களின் தோற்றதை பார்த்தவுடனே கணித்தவர்…

“எப்புடி இந்த பொண்ணுங்க இம்பூட்டு ஜோரா இருக்குதுங்க”, என்று இந்த வயதில் அவரின் தோற்றத்தோடு ஒப்பிட்டு அவரின் பாஷையில் யோசித்துக் கொண்டு போனார்.     

“அக்கா, வீடு கிடைச்சிடுச்சு” என்று சந்தோஷத்தோடு கீர்த்தனா கவலை அகன்றவளாக சிரித்தாள்…….

அவளுடைய கவலை அவளுக்கு…. பணம் சமாளிக்க முடியாமல் அவளின் படிப்பு கேள்வி குறியாக இருந்தது….

 நாராயணன் இரண்டாம் வருட பொறியியல் படிப்பில் இருக்க, கீர்த்தனா அதே கல்லூரியில் முதல் வருட படிப்பில் இருந்தாள்…. இருவருக்கும் ஹாஸ்டல் ஃபீஸ் கட்ட முடியாமல் தான் சந்தியாவின் குடும்பம் சென்னைக்கு குடி பெயர்ந்து இருந்தது. 

“ஷ்! வா! நிறைய வேலை இருக்கு! சாமான் இறக்கணும்!”, என்று பெரியவளாக பொறுப்பாக பேசினாள் சந்தியா.         

 

Advertisement