Advertisement

நிலவு – 9 
           “விபீஷ் போதும் இதுக்கும் மேல முரளி விஷயத்துல தலையிட்டு எத்தனை நாள் நிம்மதி இல்லாம இருக்க போற? உன்னாலயாவது நாங்க நிம்மதியாகனும்…” வசுந்தராவின் குரல் காதில் விழுந்தாலும் கண்டுகொள்ளாமல் சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.
“நடந்த எதையும் மாத்த முடியுமா? இல்லை அந்த வலியை முரளிக்கு குடுக்கறதால நமக்கு இழந்தது திரும்ப கிடைச்சிடுமா? சொல்ல போனா முரளி மேல எந்த தப்பும் இல்லைன்னு தான் நான் சொல்வேன்…” 
“வசு, எப்போ பார்த்தாலும் நம்ம பையனை தப்பு சொல்ற? அவன் பன்றதுல என்ன தப்பிருக்கு? அவன் சரியா தான் செய்யறான். அந்த முரளி மட்டும் அன்னைக்கு நம்மக்கிட்ட சொல்லியிருந்தா இந்த நாலு வருஷம் நாம கண்ணீர் விட்டுட்டு இருக்கவேண்டியதே இல்லை. நினைச்சு நினைச்சு நெஞ்செல்லாம் புண்ணாகி போச்சு…” வசுந்தராவின் கணவர் நாகராஜ் சொல்ல,
“அவனுக்கு கொம்பு சீவறதே உங்க வேலையா போச்சு. அவனுக்குன்னு ஒரு வாழ்க்கை வேண்டாமா? எத்தனை நாள் தான் சீமா அவனுக்காக வெய்ட் பண்ணுவா?…”
“மாம், அவளால வெய்ட் பண்ண முடியலைன்னா யாரையும் காட்டிக்க் சொல்லுங்க. இப்ப இந்த கல்யாணத்தை நிறுத்த நான் யோசிக்கனும். இத்தனை வருஷம் இல்லாம அவன் ரொம்ப தீவிரமா இருக்கான். அது தப்பு…”
“விபிஷ், ஒருத்தர் வாழக்கூடாதுன்னு நினைக்கிறது ரொம்ப தப்புப்பா. நம்ம எதிர்காலத்தை அழிச்சிடும்…” 
“ஒருத்தியோட எதிர்காலமே இல்லாம போச்சே. அதை அவன் உணரனும்ல. இத்தனை வருஷம் கொஞ்சமாவது குற்றவுணர்ச்சியோட அவன் கல்யாணம் வேண்டாம்னு இருந்தான். ஆனா இந்த வெண்மதி விஷயத்துல…” என நிறுத்தி தலையை இடமும் வலமுமாக யோசனையுடன் அசைக்க,
“அவன் எண்ணமும் செஞ்சிட்டு போகட்டும். நீ விட்டுட்டு உன் எதிர்காலத்தை பாரு விபீஷ். நான் சீமாவுக்காக மட்டும் சொல்லலை. எங்களுக்கும் வயசாகிடுச்சு. அப்பாவை பாரு எப்படி ஆகிட்டாருன்னு. உனக்காவது ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சு நீயும் என் மருமகளும் சந்தோஷமா வாழறதை பார்க்கிற பாக்கியம் மட்டும் போதும்…” 
வசுந்தராவின் கெஞ்சல் எல்லாம் காதிற்குள் கேட்ட குரலின் முன்னே மறைந்தே போனது. முகம் இறுக அவன் அமர்ந்திருக்க,
“தம்பி நீ சாப்பிட்டு கிளம்பு. அவ பேசிட்டே தான் இருப்பா. நான் நல்லா தான் இருக்கேன். நல்லா தான் இருப்பேன். எனக்கொண்ணும் ஆகாது. ஆனா எங்களை நினைச்சு அவனை விட்டா அந்த நிமிஷம் என் மூச்சு நின்னுடும்…” நாகராஜ் படமெடுத்த நாகமென விஷம் காக்க,
“என்ன அப்பா நீங்க? அவனுக்கு நல்லதை சொல்லி தராம…”
“வசு, போதும். அவன் மேல உனக்கு என்ன அத்தனை இரக்கம்? நீ சொல்ற மாதிரி அவன் மேல தவறே இல்லைனாலும் நம்ம இழப்புக்கு முதல் காரணம் அவன் தான். விட சொல்றியா?…” என நெஞ்சை தடவிக்கொண்டே தட்டு தடுமாறி அங்கிருந்த ஒரு அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டர்.
வயோதிகம் அவரை உடலளவில் வலிமை குன்ற செய்திருந்தது என்றால் மனதின் வருத்தம் அவரை உயிரோடு உருகுலைத்திருந்தது. ஏதோ வாழ்கிறேன் என்னும் அளவிலான வாழ்க்கை அவர்களது.
எத்தனை வசதிகள் இருந்தும் அத்தனை பெரிய வீட்டில் புன்னகை மருந்துக்கும் இல்லாமல் போய் நான்கு வருடங்கள் கடந்துவிட்டது. இன்று வரை அதன் தாக்கமும் இறுக்கமும் அந்த வீட்டைவிட்டு அகலவே இல்லை.
“விடாதடா மகனே” என இளைக்க இளைக்க சொல்லி சென்ற தந்தையை உணர்ச்சியற்ற முகத்துடன் வலிக்க வலிக்க அதை பார்த்த விபீஷ் தாயை பார்த்துவிட்டு ஒரு இகழ்ச்சியான புன்னகையுடன் கையை கழுவி விட்டு எழுந்துசெல்ல கோபத்துடன் சீமாவிற்கு அழைத்தார் வசுந்தரா.
“என்னால முடியலைம்மா. ரெண்டுபேரும் வெறி பிடிச்சது போல பேசறாங்க. நீ தான் போனமுறை மாதிரி அந்த பொண்ணை காப்பாத்தனும்…”
“கண்டிப்பா அத்தை, இது அந்த பொண்ணுக்காக மட்டுமில்லை அத்தானுக்காகவும் தான். எனக்கு அவர் எந்த விஷயத்திலையும் மாட்டிக்காம வேணும். நான் பார்த்துக்கறேன்…” 
“போனமுறை வெறும் பயமுறுத்த தான் பண்ணினான். ஆனா இந்த தடவை கல்யாணம் நிச்சயம் நடக்கும்னு தெரிஞ்சிடுச்சு. முரளி பின்வாங்கலை. விபீஷ் கோபம் தான் அதிகமாகிருக்கு…”
“நம்ம வீட்டு பொண்ணு பண்ணின தப்புக்கு சம்பந்தமில்லாதவங்களை சம்பந்தப்படுத்துவது எந்த விதத்திலும் நியாயமே இல்லை அத்தை. பெரிய தப்பு. தான் ஒழுங்கில்லை உங்க பிள்ளை. அடுத்தவனை குறை கண்டுபிடிக்க வந்துட்டாரு…” சீமா பொரிய,
“சீமா…” வசுந்தரா கொஞ்சம் கண்டிப்புடன் சொல்ல,
“கோவம் மட்டும் வந்திடும் அவரை சொல்லிட்டா. எனக்கு மட்டும் யார் இருக்கா?…” சீமா சொல்லி அவரை ஆறுதல் படுத்தி பேசிக்கொண்டிருக்கும் பொழுது சிறிது நேரத்தில் விபீஷ் அவளுக்கு லைனில் வர,
“வைக்கிறேன் அத்தை. உங்க பிள்ளை தான்…” என சொல்லி கட் செய்துவிட்டு அவனுக்கு அழைக்க,
“ஏன் உனக்கு இன்னும் கொஞ்சம் நாள் வெய்ட் பண்ண முடியாதா?…” எடுத்த எடுப்பிலேயே அவன் கத்த,
“அடுத்தவன் கல்யாணத்தை நிறுத்திட்டு பழி வாங்கிட்டு இவர் மட்டும் கல்யாணம் பண்ணி வாழ்வாராம். இது தப்பில்லையாம். நான் கல்யாணம் செஞ்சிட்டு பழி வாங்கிக்கலாம்னு சொல்றேன். இது தப்பாம். உலக உத்தமர் தான்…” 
வழக்கம் போல சீமா படபடக்க விபீஷின் கோபம் அதிகமாகியது. இந்த நிமிடம் அவள் எதிரில் இல்லாமல் போயிருக்க,
“கண்ணுல சிக்கிடாத. என் மூஞ்சிலையே முழிக்காத…” என கட் செய்துவிட அவனுக்கு மீண்டும் அழைப்பாள் என இவன் எதிர்ப்பார்த்திருக்க அவளோ,
“மாஸ்க் போட்டுட்டே கல்யாணம் செஞ்சு குடும்பம் நடத்த நான் ஓகே. உங்களுக்கு தான் கஷ்டம் அத்தான். ப்ராப்ளம் இல்லைனா ஓகே…” என்று மெசேஜ் அனுப்பியிருக்க பல்லை கடித்தான் விபீஷ்.
கோபப்படுவதற்கான நேரம் அது இல்லையே. இன்னும் சிறிது நேரத்தில் வெண்மதி இந்த வழியாக வந்துவிடுவாள். பார்த்து பேசவேண்டுமே. காரை விட்டு இறங்கி நின்றான். 
காலை கடந்து பதினோரு மணியை நெருங்கியிருக்க விபீஷ் பொறுமையுடன் அந்த வழியில் மூன்று மணிநேரமாக காத்திருந்தான். அவனுக்கு கொஞ்சமும் சந்தேகமில்லை. வெண்மதி நிச்சயம் இதை தாண்டிக்கொண்டு சென்றிருக்க முடியாது.
அவள் இன்று விடுமுறையாக இருக்குமோ என்ற எண்ணமே மேலோங்கி இருக்க அதற்கு மேலும் சோதிக்காமல் வந்துசேர்ந்தாள் வெண்மதி.
ஆட்கள் நடமாட்டம் மிகவும் குறைவாக இருக்கும் பகுதி என்றாலும் வெண்மதியின் ஸ்கூட்டி சற்று வேகம் தணிந்தே வந்தது. 
அது ஒரு வருடத்திற்கு பின்னால் வந்து முரளி தன்னிடம் பேசிய இடம். இப்பொழுதும் அதை கடக்கும் பொழுதெல்லாம் ஒரு நிமிடம் அங்கே தாமதித்து செல்வது வழக்கமாகியது.
அன்றும் அதே போல அவ்விடத்தில் மெதுவாய் ஊர்ந்து வந்தவள் பார்வை பாதையில் இல்லாமல் போக விபீஷ் தன் முன்னே வருவதை கவனியாமல் வண்டியை அவன் மீது விட்டாள்.
அவள் நிறுத்துவாள் என அசட்டையாக முன்னால் சென்றவன் சட்டென்று அவள் ஆக்ஸிலேட்டரை முறுக்கி வண்டியை துரிதப்படுத்த எதிர்பாராமல் ஹேய் என்ற அலறலுடன் கீழே சாய வெண்மதியும் வண்டியுடன் கீழே விழ இருந்து சுதாரித்து நிறுத்தினாள்.
ஆனாலும் விபீஷின் காலை லேசாய் பதம் பார்த்துவிட்டது வெண்மதியின் ஸ்கூட்டி.
“ஏய் யூ…” என அவன் கத்த,
“ஏய் யார பாத்து ஏய் சொன்ன? யூ யூ…” அவனுக்கு மேல் அவள் கத்த,
“இடிச்சு தள்ளிட்டு கத்த வேற செய்யற?…” தடுமாறி எழுந்தவனின் கால்கள் விண்ணென்று வலியெடுக்க அவளின் வண்டியை பற்றுக்கோலாய் பிடித்து நின்றான்.
“கையை எடு மேன். ஆளை பாரு, வண்டில வரத்து கண்ணு தெரியலை?…”  
“உன்னை பார்க்க தான் வந்தேன். நீ தான் பராக்கு பார்த்திட்டு வந்து இடிச்ச…” 
“என் வண்டியை பிடிச்சு நின்னுட்டு என்னையே சொல்லுவியா நீ?. எடு கையை…” என அதற்கும் பொரிய,
“இங்க பாரு உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்…” முகத்தை தீவிரமாக வைக்க,
“இங்க பாரு, நானே ஏற்கனவே ஆபீஸ் லேட். செம கோவத்துல வேற போறேன். போய்டு…” என எரிந்துவிழ விபீஷிற்கு தான் இப்பொழுது எரிச்சல் அதிகமாகியது.
“உன் நல்லதுக்கு பேச வந்தா என்னன்னு கேட்கிற பொறுமை கூட கிடையாதா?…”
“இல்லைன்னே வச்சுக்கோ. நீ யார்ன்னே தெரியாது. நான் ஏன் பேசனும்? என்ன ப்ரப்போசலா? போயா அங்கிட்டு…” என்று மீண்டும் வண்டியை உறுமவிட,
“ஏய் ச்சீ, பேச வந்தா உடனே இதானா?…” அவன் முகம் சுழிக்க,
“பின்ன எதுக்கு பேசனும்?. வண்டியில வந்து சாகவிழுந்திருக்க…” 
“மரியாதையே தெரியாதா உனக்கு?…”
“குடுத்திருப்பேன், ஆனா நீ என்னை ஏய்ன்னு ஏன் சொன்ன? உன் மரியாதை உன் பேச்சுல தெரிஞ்சு போச்சே…” வெண்மதியின் பேச்சில் இப்பொழுது தலை வேறு வலித்தது.
“நம்மகிட்டயே இந்த பேச்சு பேசறா, அவனை கட்டிகிட்டா பேசியே அவனை ஒரு வலி பண்ணிடுவா. பேசாம அனுபவிக்கட்டும்னு விட்டுடுவோமா?” என்னும் ஒருநொடி சிந்தனை தான் தலையை உலுக்கிகொண்டவன் முகம் தீவிரமாய் மாற அவனையே பார்த்துகொண்டிருந்தவள்,
“ஏதும் ஹாஸ்பிட்டல்ல இருந்து தப்பிச்சு வந்திட்டியா? பசிக்குதா?…” என்றுவேறு கேட்டுவைக்க மறைமுகமாக பைத்தியமா நீ? என்பதை போல கேட்பதும் அவளின் முகபாவனையும் விபீஷின் இதழ்களுக்குள் சிறு புன்னகையை விதைக்க அவளையே பார்த்தான்.
ஒரு வருடம் முன்பும் பார்த்தான் தான். பேசியதில்லை. அந்தளவிற்கு காலமும் இல்லை அவனிற்கு. அவளுக்கு விபத்தை ஏற்படித்தி தான் நினைத்ததை சாதித்ததோடு சென்றுவிட இன்று தான் அவளிடம் பேசுகிறான்.
சுவாரஸியம் மிகுந்த பார்வை அவனறியாது அவனின் விழிகளில் பரவ அவனின் பார்வை மாற்றத்தில் உஷாரானவள்,
“நினைச்சேன், ரொம்ப நல்லவனாட்டம் பேசின. ப்ரப்போசல்ன்ற வார்த்தையை கேட்டு என்னவோ தப்புன்ற மாதிரி பதறின. இப்ப உன் லுக்கே சரியில்ல. இதுவே எங்க ஏரியாவா இருந்தா தம்பி போய்டுன்னு யாராச்சும் ஜன்னலுக்கு உள்ள இருந்து உன்னை உஷார் பண்ணிருப்பாங்க. இப்ப நானே சொல்றேன் போய்ரு…”
அவள் சொல்லிய விதமும் முகமும் விபீஷை என்னவோ செய்ய இன்னும் சிரிப்பாக இருந்தது.
“ரொம்ப பயப்படாத. அப்படி எதுவும் சொல்ல மாட்டேன். உன்கிட்ட பேச தான் வந்தேன். நீ பேசி டைவர்ட் பன்ற…” அவனின் இறுக்கம் தளர்வதை போல உணர்ந்தான் அவளருகே.
“பேசனும்னு பேசனும்னு சொல்லிட்டு எதுவும் சொல்லாம நான் பேசறதை வாய் பார்த்துட்டு நின்னா என்ன நினைக்க நான்?. வழிவிட்டு நில்லு. இல்ல மேல ஏத்திட்டு போய்ட்டே இருப்பேன். அந்த பபெல்லோ என்ன பேசுமோ? அதுவேற கடுப்பாகுது…” என்றதற்கும் அவன் புன்னகைக்க,
“அப்டி ஓரமா நின்னு சிரிச்சுட்டே இரு. நான் ஈவ்னிங் இதே வழியில தான் வருவேன். அப்போ என்ன பேசனுமோ பேசு…” என்றதும் தான் சுதாரித்தவன்,
“இல்லை நீ போகமுடியாது. நான் உன்கிட்ட பேசியே ஆகனும்…” என விபீஷ் சொல்லும் பொழுதே முகமும் தாடையும் இறுக அவனின் முகமாற்றத்தில் யோசனையானவள்,
“சீக்கிரம் சொல்லு, நான் கிளம்ப…” என துரிதப்படுத்தினாள்.
“நீ அந்த முரளியை கல்யாணம் பண்ணிக்க கூடாது…” அழுத்தமாய் அவன் சொல்லும் பொழுது அவனின் முகத்தில் வந்துபோன பாவனையில் வெண்மதி ஒரு நிமிடம் பயந்துதான் போனாள்.
“என்ன? எதுக்கு?…” வார்த்தைகள் தெரிந்துகொள்வதற்காக வந்து விழ,
“என்ன முடியாதுன்னு சொல்வியா நீ?…” முகம் பயங்கரமாய் மாறிப்போனது விபீஷிற்கு. அவளின் மறுப்பை கேட்க பிடிக்காதவன் போல கோபமாய் பார்த்தான்.
திருமணத்தை நிறுத்தவேண்டும் என்கிற முனைப்பை தாண்டிய ஒரு வேகம் அவனுள். முரளியை அவள் மறுக்கவேண்டுமேன்னும் பிரயாசை அவனறியாமல் உள்ளுக்குள் எழுந்தது.
“என்ன மிரட்டறியா? அவன் என்னனா கல்யாணம் செய்யனும்னு மிரட்டறான். நீ கூடாதுன்னு மிரட்டற? என்னடா நினைசுச்ட்டு இருக்கீங்க?…” என எகிறிவிட ஒருநொடி விபீஷிற்கு ஒன்றும் விளங்கவில்லை. 
“முரளி மிரட்டுகிறானா? இந்த பெண்ணிற்கு விருப்பமில்லையா? முதலில் ஏற்பாடு செய்த திருமணத்தின் பொழுது இப்படி கேள்விப்படவில்லையே?” விபிஈஷ் குழப்பமாய் பார்க்க, 
“என்ன?…” என்றால் எரிச்சலுடன்,
“உனக்கு இந்த மேரேஜ்ல இன்ட்ரெஸ்ட் இல்லையா?…” ஆர்வமாய் கேட்க,
“அத தெரிஞ்சு நீ என்ன பண்ண போற?…” அவனை சந்தேகமாய் பார்க்க அவளின் பார்வையை உணர்ந்தவன் பதில் சொல்லும் முன், 
“நீ என்ன வேணா பண்ணிக்க. ஆனா வேணும்னா உன் வேகத்தை அங்க காட்டு. நானே குயில புடிச்சு கூண்டில் அடச்சுன்னு போய்ட்டிருக்கேன். நீ வேற. நகரு அப்பால…” என்று கடுப்படித்துவிட்டு செல்ல விபீஷின் முகத்தில் இன்னும் அதிர்வு.
அவனுக்கு வெண்மதி உண்மையை தான் சொல்கிறாளா என்கிற சந்தேகமும் உண்மையில் வெண்மதிக்கு இத்திருமணத்தில் விருப்பம் இல்லை என்பதில் சந்தோஷமும் தோன்ற தன் மனதின் திசையை அதிர்வுடன் உணர்ந்தான்.
இத்தனை வருடத்தில் கோபம் மட்டுமே பிரதானமாக வாழ்ந்தவனின் சிரிப்பை சில நொடிகளில் மீட்டிருக்கிறாள் இப்பெண். என்னவோ இன்னும் சில நிமிடம் பேசியிருக்கலாமோ என்ற எண்ணத்தை அவனுள் விதைத்துவிட்டு சென்றிருந்தாள் வெண்மதி.
அவளிடம் பேசிய அந்த நிமிடங்கள் ஏதோ சுகம் பரவ மீண்டும் அந்த குரல் அவனை திசைமாற்றியது. முகம் மாறினாலும் ஏதோ ஒரு தடுமாற்றம் அவனை அந்த நொடியில் இருந்து ஆட்டுவிக்க ஆரம்பித்தது.
“இல்லை இல்லை எனக்கு என் குடும்பம் முக்கியம். முரளி திருமண வாழ்வை வாழ கூடாது. அதன்பின்பு தான் எனக்கு எதுவுமே” என நினைத்தவனின் மூளையின் மூலையில் யோசனை பளிச்சிட வழி பிறந்துவிட்ட திருப்தியோடு வெண்மதி சென்ற பாதையை பார்த்தபடி நின்றான்.
————————————————–
“என்னத்தடி பண்ணி தொலைச்ச? அந்தாளு குறுக்கும் நெடுக்குமா நடந்துட்டு இருக்கான். எனக்கு பிபி ஏறுது. பேசாம இப்ப இருந்தே மெடிக்கல் லீவ்ல போய்ட்டா என்னன்னு இருக்கு?…” ஈஸ்வரியின் புலம்பலை கேட்டு கொஞ்சமும் அரசாது கண்ணாடி கதவிற்குள் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“நீ சரிப்பட மாட்ட. நான் போறேன். என்னவும் பண்ணு…” கபத்துடன் சொன்னாலும் அங்கிருந்து ஈஸ்வரி நகரவே இல்லை.
“நடாஷா நீ என்னன்னு கேளு. நான் போறேன்…” என அவளை ஈஸ்வரி அழைத்துவிட்டு நகர அவளின் கையை பிடித்தவள்,
“கொஞ்சம் இரேன். சும்மா குதிக்காம. சொல்றேன்…” என்றவள் நகத்தை கடிக்க கையில் அடித்த ஈஸ்வரி,
“என்னத்தடி பண்ண? நகத்தை வேற கடிக்கிற?…”
“முரளின்னு நினைச்சு அந்தாள் கால் பன்றப்ப ரொம்ப திட்டிட்டேன்…” சாதாரணமாக வெண்மதி சொல்ல,
“உண்மையை சொல்லு. இது நம்பற மாதிரியே இல்ல…” ஈஸ்வரி இன்னும் நம்பாத பார்வை பார்க்க வெண்மதி முறைக்க,
“சரி சொல்லு…” அவளின் வழிக்கே வந்தாள் ஈஸ்வரி.
“இந்த வீக்கென்ட்ல கோவிலுக்கு போகனுமாம். ஏதோ பூஜை இருக்குன்னு சொல்லி கூப்பிட்டார்…”
“போக வேண்டியது தானே?…” 
“எதுக்கு போகனும்? அதெல்லாம் முடியாது. என்னை கேட்டா எல்லாம் நடக்குது?…” 
“அதுக்கும் உனக்கு வார்னிங் குடுக்கறதுக்கும் என்னடி சம்பந்தம்?…” ஈஸ்வரிக்கே அலுத்துவிட்டது.
“மொபைலுக்கு கால் பண்ணிட்டே இருந்தான். கட் பண்ணிட்டே இருந்தேன். ஆபீஸ் நம்பருக்கு கால் பண்ணவும் கோவம் வந்து திட்டிட்டு கட் பண்ணேன். திரும்பவும் கால் பன்றப்ப…”
“பன்றப்ப?…”
“ஏற்கனவே இங்க பஃபெல்லோ தொல்லை. நீ வேற படுத்தாதன்னு சொல்லவும் தான் தெரிஞ்சது போன் பண்ணாதே பஃபெல்லோ தான்னு. இன்னைக்கு லேட் வேற. சொன்ன வொர்க் முடிக்கலை. ப்ராசஸ் பண்ணலை. அந்த டென்ஷன். வர வழியில ஒருத்தன் வேற ராங் க்ராஸ். அதுவேற…”
“அடிப்பாவி. இல்லாத வேலையெல்லாம் பண்ணிவச்சுட்டு. சும்மாவே நீன்னா அவனுக்கு அவ்வளோ காண்டாகும். யார் என்னன்னு கேட்கமுடியாத அளவுக்கு உனக்கு என்னடி கோவம்?…” ஈஸ்வரி பொரிய அவளிடம் உள்ள பதட்டம் கூட வெண்மதியிடம் இல்லை.
“நான் சொல்லிட்டே இருக்கேன். நீ என்னடான்னா டெக்ஸ்டாப் நோண்டிட்டு இருக்க?…” என கத்த,
“வேற ஜாப்க்கு ட்ரை பண்ணலாமான்னு பார்த்துட்டு இருக்கேன்…” 
“நீயெல்லாம் உருப்படவே மாட்ட. எப்படியும் போ…” என்று அவள் நகர்ந்ததும் மேனேஜரிடம் இருந்து அழைப்பு வர தன்னை போல் அழைக்காமலே ஈஸ்வரி வந்து முறைத்தபடி அவளை பார்த்தாள்.
பார்வையே சொல்லிற்று, “ மவளே வாயை அடக்கி தலையாட்டிவிட்டு வா” என்று. உள்ளே சென்றவள் அமைதியாக நிற்க,
“மிஸ் வெண்மதி, நீங்க வேணும்ன்னே பன்றீங்களா? இல்லை தானா நடக்குதான்னு எதுவுமே புரியறதில்லை. நானும் வார்னிங் மேல வார்னிங் குடுத்திட்டே தான் இருக்கேன் நீங்க என்னனா…” என்று சொல்ல அவளோ யாருக்கு வந்த விருந்தோ என்பதை போல நின்றுகொண்டிருக்க சரியாக முரளி வேறு அழைத்துவிட்டான் மீண்டும்.
கையில் போன் வைப்ரேட் ஆக அதனை முறைத்துக்கொண்டே அவள் நிற்க அதை பார்த்த டீம் லீடர் பிரகாசம்,
“வெண்மதி…” என இரைய பதட்டத்தில் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தவள் தன் விரல் பட்டு கால் அட்டன் ஆனதை கவனிக்கவில்லை.
“பிரகாசம்…”
“கால் மீ பிரகாஷ்…”
“அதான் ஸார் சொல்ல வந்தேன். நீங்க தான் பினிஷ் பண்ண விடலை…”
“நான் பேசிட்டு இருக்கேன். நீங்க அதை கவனிக்காம போனை பார்த்திட்டு நின்னா என்ன அர்த்தம்?. ஏன் மொபைல் இங்க கொண்டுவந்தீங்க?…”
“எமர்ஜன்சின்னா பிரகாசம்?…” என இடைவெளிவிட்டு ஸார் சொல்லும் முன்,
“வெண்மதி…” மீண்டும் பொறுமை இழந்து அவர் கத்த,
“இப்ப கவனிக்கறேன் பிரகாசம்…. ஸார். நீங்க அப்பா என்ன சொன்னீங்களோ அதை இப்ப சொல்லுங்க…” என்று சலிப்புடன் அப்பாவியாக சொல்ல,
“கெட் லாஸ்ட்…” என்று கத்த தப்பித்தேன் என்பதை போல வேகமாக வெளியே வந்துவிட்டாள்.
“என்னாச்சு?…” ஈஸ்வரி ஆர்வமாக,
“பபெல்லோ டங்க் நாக் அவுட்…” என சிரித்து கன்னடித்தவளின் குரலில் போனில் கேட்டுக்கொண்டிருந்த முரளிக்கு அட்டகாசமான புன்னகை.  வாய்விட்டு சிரித்தபடி போனை கட் செய்தான்.
விபீஷ் வெண்மதியை பார்த்ததை தெரிந்ததும் என்னவோ போல் இருக்க வெண்மதி வேறு பிடிவாதமாய் பேசாமல் ஆட்டம் காண்பிக்க வேண்டுமென்றே ஓயாமல் போன் செய்து வெறுப்பேற்றினான்.
இப்பொழுது அவளின் பேச்சில் கவலை மறந்து புன்னகைத்தவன் அடுத்து கோவிலுக்கு செல்லவேண்டிய நாளை பற்றி சிந்திக்களானான். 
இன்னும் மூன்று நாட்களே உள்ளது கோவிலுக்கு செல்வதற்கு.

Advertisement