Advertisement

“நான் நினைச்சேன்டா நீ கதறிட்டு எனக்கு போன் பண்ணுவன்னு. நினைச்ச மாதிரியே பண்ணிட்ட…” மறுமுனையில் விபீஷ் வன்மத்துடன் கொக்கறிக்க,

“தேங்க்ஸ் விபீஷ் என்னை நினைச்சுட்டே இருந்ததுக்கு. நான் என்னை காப்பாத்திக்க உங்களுக்கு போன் பண்ணலை. உங்களை காப்பாத்த தான் கால் பண்ணேன்…”

“வாட்? நீ என்னை காப்பாத்தறயா? நீ எப்படி காப்பாத்துவன்னு தான் எங்களுக்கு தெரியுமே. ஒரு தடவை காப்பாத்தி இன்னை வரைக்கும் என் குடும்பம் வேதனைப்பட்டுட்டு இருக்கறது உனக்கு தான் இன்னும் முழுசா புரியலை…” 

கலங்கிய குரலில் விபீஷ் சொல்ல முரளியின் முகம் சொல்லொண்ணா வேதனையை பிரதிபலித்தது.

“இவரை அவன்கிட்ட பேசவேண்டாம்னு சொன்னா கேட்கறதே இல்லை. இப்ப அவன் சொல்லி காண்பிச்சு பீல் பண்ண வச்சுட்டான்.” ராம் முரளியையே பார்த்துக்கொண்டிருக்க,

“நடந்தது முடிஞ்சதுக்கு யாருமே பொறுப்பாக முடியாது விபீஷ். அதையே நினச்சுட்டு நீங்க தப்பு மேல தப்பு பன்றீங்க. அது உங்களையே அழிச்சிடும். உங்க குடும்பத்துக்காக தான் இப்பவும் சொல்றேன்…”

“டேய் நீ இப்படி சொல்ல சொல்ல எனக்கு வர ஆத்திரத்துக்கு உன்னை என் கையால கொல்லனும்னு வெறியே வருதுடா. ஆனா உன்னை அவ்வளவு சீக்கிரம் சாகவிடமாட்டேன். மொட்டைப்பயலா நீ வாழறதை பார்ப்பேன்…”

“விபீஷ், இப்பவும் என் மேல தப்புன்ற மாதிரியே பேசறீங்க…”

“அப்படித்தான்டா பேசுவேன். நான் இழந்திருக்கேன். அப்படித்தான் செய்வேன்…”

“பர்சனல் வெஞ்சன்ஸ் வச்சு இப்படி பிஸ்னஸ்ல கொண்டுவந்தா நானும் சும்மா இருக்கமாட்டேன் விபீஷ். என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு. உங்க பாதிப்புக்கு ஏதோ ஒரு வகையில் நானும் காரணமாகிட்டேன்ற ஒரு சின்ன கில்டினஸ். அது மொத்தமா என்னைவிட்டு போச்சு அன்னைக்கு நீங்க வேற முரளியை பார்க்கவேண்டி வரும்…” என்றவன்,

“நான் விஷயத்துக்கு வரேன். உங்ககிட்ட வெறும் பேச்சு தான் போல? உங்க குடோன்க்கு அந்தளவுக்கு செக்யூரிட்டி சிஸ்டம் சரியில்லைன்னு நினைக்கேன்…”

“வாட்? முரளி என்ன பன்ற?…” விபீஷ் கத்த,

“நான் ஒன்னும் பண்ணலை. நீங்க எனக்கு அனுப்பினதை திருப்பி உங்ககிட்டயே சேர்க்க வந்திருக்கேன். அவ்வளோ தான்…”

“ஓஹ் கண்டுபிடிச்சுட்ட போல? இது வெறும் சாம்பிள் தான். இன்னும் செய்வேன். நான் எங்க என்ன பண்ணிவச்சிருக்கேன்னு நீ யோசிச்சுட்டே இருக்கனும்டா…” 

“நான் உங்களை எப்பவும் மறக்கமாட்டேன் விபீஷ். அந்த கவலை உங்களுக்கு வேண்டாம்…” முரளியும் அமர்த்தலாய் சொல்ல,

“உனக்கு கல்யாணமாமே? இன்விடேஷன் எனக்கில்லையா முரளி?…” விபீஷின் குரலில் அத்தனை துவேஷம். அந்த குரலில் முரளிக்கு ஒரு நிமிடம் உயிர் பதறிவிட்டது.

“விபீஷ்…” என்ன முயன்றும் முரளியின் குரலின் நடுக்கத்தை மறைக்கமுடியவில்லை.

“அது, அந்த பயம் இருக்கனும்டா. கல்யாணமா பன்ற கல்யாணம். எங்க குடும்பத்தை கண்ணீர்ல விட்டுட்டு நீ கல்யாணம் குடும்பம்னு சந்தோஷமா இருந்திருவியா?…”

“விபீஷ் நன் சொல்றதை கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க. என் நிலையில் இருந்து கொஞ்சம் யோசிச்சு பாருங்க…”

“நீ யோசிச்சியா? எங்க குடும்பத்தை பத்தி அன்னைக்கு நீ யோசிச்சியா முரளி? அட்லீஸ்ட் என்கிட்டயாவது சொல்லியிருக்கலாம்டா. சொல்லியிருந்தா அப்படியெல்லாம் நடந்திருக்குமா?…” என்றவனின் கண்ணீர் இங்க முரளிக்கு சுட்டது.

“ஆனா நடந்திருச்சு, நடத்திட்டல. நான் மட்டும் ஏன் உன்னை புரிஞ்சுக்கனும். போடா. நடக்காத கல்யாணத்துக்கு என் வாழ்த்துக்கள்…” என்று சொல்லி விபீஷ் அழைப்பை துண்டிக்க முரளி அமைதியுடன் காரில் அமர்ந்தான்.

“ப்ரோ நான் ட்ரைவ் பன்றேன்…” ராம் சொல்ல,

“ஏன் எனக்கு செல்ப் கன்ட்ரோல் இல்லைன்னு முடிவு பண்ணிட்டீங்களா ராம்?…”

“நீங்களே ட்ரைவ் பண்ணுங்க. அப்படியே என்னை என் ப்ளாட்ல ட்ராப் பண்ணிடுங்க ப்ரோ…” என சொல்லி ராம் கண்ணை மூடி சீட்டில் சாய்ந்துவிட ஒரு புன்னகையுடன் தன்னை மீட்டவன் பாதையில் பார்வையை பதித்தான்.

அவனை கொண்டுசென்று இறக்கிவிட்டவன் அலுவலகம் செல்ல தோன்றாமல் நேராம வீட்டிற்கு வந்துவிட்டான். வீட்டில் ஆனந்தன் மட்டுமே அமர்ந்திருக்க சுகன்யா அழைப்பிதழ்கள் வைக்க சென்றிருந்தார்.

“ஹாய் ப்பா…” என உற்சாகத்துடன் அவரை பார்த்து சொன்னவன் அடுப்படிக்குள் சென்று அங்கு மூலையில் வைக்கப்பட்டிருந்த பெரிய மண்பானையில் இருந்து நீர் பிடித்து அருந்தினான்.

சுகன்யா எப்பொழுதும் ப்ரிட்ஜில் தண்ணீர் வைக்கமாட்டார். முடிந்தளவிற்கு ப்ரிட்ஜ் காலியாக இருக்கும் என்றே சொல்லலாம். சில பொருட்களை தவிர்த்து மற்ற அனைத்தும் அவ்வப்போது தான்.

தண்ணீர் குடித்துவிட்டு வெளியே இவன் வர ஆனந்தன் இன்னமும் தலையை நிமிர்த்தாமல் புத்தகம் ஒன்றை கையில் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.

“அப்பா சாப்ட்டாச்சா? எனக்கு பசிக்குது. ஆனா தனியா சாப்பிட தோணலை…” என்றதும் எழுந்து டைனிங் டேபிளுக்கு சென்றவர் ஒரு தட்டை வைத்து தனக்கு வைத்துக்கொண்டு உண்ண ஆரம்பிக்க ஒரு சிரிப்புடன் அவரெதிரில் அமர்ந்து தனக்கும் போட்டுக்கொண்டு சாப்பிட்டான்.

சாப்பிட்டு முடிக்கும் வரை முரளி பேசிக்கொண்டே இருக்க ஆனந்தன் சாப்பாட்டிலேயே கவனமாக இருக்க முரளி உண்டு முடிக்கவும் தான் தானும் எழுந்தார். கையை கழுவிவிட்டு,

“அப்பா கொஞ்சம் தலைவலிக்கிற மாதிரி  இருக்கு. நான் தூங்கறேன். நானே எழுந்து வரேன்…” என சொல்லி மாடியேறிவிட அவன் செல்வதையே பார்த்திருந்தவர் மீண்டும் சோபாவில் வந்து அமர்ந்துகொண்டார். 

வெண்மதியுடனான திருமணப்பேச்சு மீண்டும் என்று ஆரம்பித்ததோ அன்றிலிருந்து ஆனந்தன் எதிலும் கலந்துகொள்வதில்லை. அவரின் பிடித்தமின்மையை மௌனமாக காண்பித்து வந்தாலும் தடுக்காமல் பார்த்தார்.

இந்த திருமணம் நடந்தாலும் சந்தோஷம், நடக்கவில்லை என்றாலும் மிக மிக சந்தோஷம் என்னும் எண்ணம். வெண்மதி மீது அந்தளவிற்கு வெறுப்பில் இருந்தார்.

அறைக்குள் வந்தவன் ஷர்ட்டை மட்டும் கழட்டிவிட்டு அப்படியே படுக்கையில் சரிந்தான். மூடிய விழிகளுக்குள் இன்று வெண்மதி தன்னை பார்த்த பார்வைகள் வலம் வந்தது.

அதிர்ச்சி, எரிச்சல், கோபம், இயலாமை, தவிப்பு, கெஞ்சல் என்று இன்னுமின்னும் பிரித்தறியமுடியாத வகையில் ஒவ்வொன்றும் அவனை கவர்ந்ததென்னவோ அத்தனை உண்மை. 

ஒரு புன்னகையுடன் கண்களை மூடியவன் கொஞ்சம் கொஞ்சமாக துயில்கொள்ள அவனின் நினைவடுக்குகள் விழித்தேகிடந்தது.

“நீங்கல்லாம் ஒரு அம்மாவா? கொஞ்சமும் பொறுப்பில்லாம மகனை போனா போன்னு சொல்றீங்க? இருங்க வந்து பேசிக்கறேன்…” என்ற வெண்மதி கரையில் இருந்து நான்கடி கடலுக்குள் சென்றுகொண்டிருந்தவனை நோக்கி வேகமாக ஓட,

“ஹேய் பொண்ணே நில்லும்மா…” என்ற அந்த தாயின் குரல் அவளை எட்டினால் தானே? அவர்களும் இவளின் பின்னாலே வந்தனர்.

வெண்மதி ஓடிய வேகத்திற்கு கடலுக்குள் இறங்கவிருப்பவனின் முதுகில் பளாரென்று ஒரு அடி வைத்து டிஷர்ட்டை பற்ற அவனோ நிலைதடுமாறி குப்புற விழ அவனின் உச்சந்தலை முடியை பற்றி வேகமாய் தரதரவென இழுத்துவந்து மண்ணில் போட்டாள்.

என்ன நடக்கிறது என்று அவன் உணர முடியாமல் தலைமுடியை பற்றியதால் வலி உண்டாக கண்களில் வேறு உப்புநீர் இறங்கி எரிச்சல் தர கண்ணை மூடி மூடி விழித்து தன்னெதிரில் நின்றவளை பார்த்தான்.

“தடிமாடு, அறிவில்ல உனக்கு. அதான் மாமிச மலையாட்டம் வளர்ந்திருக்கியே உனக்கென்ன வாழவா தெரியாது?…” அவனை அவள் கத்திக்கொண்டிருக்க வேகமாய் வெண்மதியை நோக்கி ஓடிவந்தனர் மற்றவர்கள்.

“உங்கம்மா உன் விருப்பத்தை நிறைவேத்தலன்னா அந்த பொண்ணை கல்யானம பண்ணிட்டு ஒரு குழந்தையோட வந்து நில்லு. லாஜிக் பார்க்காம அங்க மேஜிக் நடக்கும். உடனே ஏத்துப்பாங்க. இது தெரியாம சாவ கிளம்பிட்ட?…”

“என்ன சாகவா? நானா? என்ன பொண்ணு?…” அவன் திருதிருவென முழிக்க,

“இந்த பேரண்ட்ஸ் எல்லாருமே இப்படித்தானோ?…” என்றவள் அவனி தாயை முறைத்துவிட்டு,

“புள்ளைய விட, உங்க கௌரவம் தான் முக்கியமாகிட்டு உங்களுக்கு. இல்ல? என்ன அம்மாவோ? இதுக்கு நீங்க இவனை பெத்து வளர்த்திருக்க வேண்டாம்…” என்று தாய்க்கு ஒரு அட்வைஸை கொடுத்தவள்,

“உன் அம்மாவுக்கு இருக்கற பிடிவாதம் கூட உனக்கு கொஞ்சமும் இல்லை. உனக்கெல்லாம் எதுக்குய்யா லவ்வு?…” என அவனையும் பார்த்து தலையில் அடிக்க,

“ஹேய் ஸ்டாப் ஸ்டாப்…” என அவன் அவளை நிறுத்த,

“விடு முரளி, பொண்ணு பேசனும்னு நினைக்குது. பேசட்டும்…” என சுகன்யா சொல்ல,

“மதி, இதென்ன பேச்சு. வாய் வளர்ந்துடுச்சு உனக்கு. இதுக்கு தான் கூட வரேன்னு கிளம்பினயா?. இது அவங்க விஷயம்…” என கலைவாணி அவர்கள் முன் மகளை திட்டவிரும்பாது கண்டிப்புடன் சொல்ல,

“பரவாயில்லைங்க. நல்ல பொண்ணு. ஆனா நீ நினைக்கற மாதிரி இவன் சூஸைட் பண்ணிக்க போகலை. லவ்வும் பண்ணலை…” என சிரித்தபடி சொல்ல வெண்மதியின் முகத்தில் அசடுவழிந்தது.

“பின்ன எதுக்கு கடலுக்குள்ள?…”

“ஏங்க நான் எங்க உள்ள இறங்கினேன்? லேசா கரையில நின்னு கால் நனைச்சென். அம்மாவோட விளையாண்டேன். என்னை தண்ணிக்குள்ள அடிச்சு தள்ளினதே நீங்க தான்…” முரளியும் சொல்ல கலைவாணிக்கு சங்கடமாக போனது. ஆனால் வெண்மதியோ,

“நல்லா விளையாண்டீங்க? பப்ளிக் ப்ளேஸ்ல இப்டித்தான் விளையாடுவாங்களா? இதை ஒரு விளையாட்டுன்னு சிரிப்பு வேற? ம்மா வாங்க போவோம்…” என அதற்கும் பொரிந்துவிட்டு வேகமாய் அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.

ஆனால் கலைவாணி ஆரம்பித்துவிட்டார். வெண்மதியின் காத்து தீய தீய அத்தனை பேச்சுக்கள், திட்டுக்கள். 

அவர்கள் செல்வதையே பார்த்திருந்தவன் அப்படியே மணலில் அமர முதுகு தீயாய் எரிந்தது அவனுக்கு. தடவ முடியாது தன் கையை பின்னால விட்டு நீவி விட பார்க்க சுகன்யாவிற்கு புன்னகை.

“அம்மா சிரிக்காதீங்க. அந்த பொண்ணு என்னை அடிச்சுட்டாங்க. நீங்க சிரிக்கறீங்க…” என்றவன்,

“ம்மா அந்த பொண்ணு தானே இந்த பொண்ணு?…” தாயிடம் கேட்க சுகன்யா முகத்தில் அதுவரை இருந்த இலகுத்தன்மை மறைந்தது. 

“நீ என்ன நினைக்கிற முரளி?…” என கேட்க புள்ளியாய் தோன்றியவளை பார்த்துக்கொண்டே,

“நீங்க தான் காண்பிச்சீங்க. எனக்கு ஓகேம்மா…” என்றான் ஒரே வார்த்தையில்.

“பட், நான் கொஞ்சம் அவங்களை தெரிஞ்சுக்கறேன். அதுக்கப்பறமா பேசலாம்…” என்றும் சொல்ல சுகன்யா தெளிவில்லாமல் பார்த்தார் மகனை.

“அந்த பொண்ணு சரிவருமா முரளி? உன்னோட நேச்சர் அந்த பொண்ணோட ஒத்துப்போகுமா?…”

“எதிர் துருவங்கள் தான் ஒன்றை ஓன்று ஈர்க்கும்மா…” என சொல்ல சுகன்யாவும் லேசாய் புன்னகைத்தார்.

“யோசிக்காம இப்படி பிரச்சனையை இழுத்துவிட்டுக்குதே? அதுதான் தயக்கமா  இருக்கு முரளி. என்ன ஏதுன்னு கேட்காம இப்படி பண்ணிட்டா…”

“ஏன் நெகட்டிவா யோசிக்கனும்? முன்னபின்ன தெரியாதவங்களோட உயிரை யோசிக்காம காப்பாத்த எத்தனை பேர் வருவாங்க…” அதற்கும் வெண்மதிக்கு கொடிபிடிக்க,

“உனக்கு லைப் புல்லா அடி தான் இனி. போட்டோ பார்த்தப்போ கூட நீ இத்தனை எக்சைட் ஆகலை…” 

“அப்படின்னு இப்பவே முடிவு பண்ணிட்டா எப்படி? போட்டோ பார்த்தப்போ எதுவும் தோணலை. இப்பவும் எனக்குள்ள இந்த ஸ்பார்க் எப்படின்னு நானே தெரிஞ்சுக்க தான் கொஞ்சம் டைம் கேட்கறேன்…” 

“உனக்கு கல்யாணம் நடந்தா போதும் முரளி. எனக்கும் அப்பாவுக்கும் அதைவிட வேற ஏதும் வேண்டாம்…” தாயாய் நினைவுகளாகிவிட்ட சில நிகழ்வுகளை எண்ணி கலங்கி போக,

“லெட்ஸ் மூவ்…” என்று எழுந்துகொண்டு நடக்க ஆரம்பித்தான் முரளிதரன்.

Advertisement