Advertisement

நிலவு – 7 

              முரளி வந்துவிட்டு கிளம்பி சென்றதிலிருந்து ஒருவித மோனநிலையிலேயே சுற்றி வந்தாள் வெண்மதி. 

தனக்கு வாழ்த்து சொல்லி சென்ற யாரிடமும் பேசகூட முனையவில்லை. அந்தளவிற்கு உறைந்த நிலையில் அதனை கடந்து வெளிவரமுடியாமல் தத்தளித்து நின்றாள். 

அனைவருக்கும் ஓட்ட வைத்ததை போன்ற புன்னகையை திருப்பி தந்து தலையாட்டலோடு நிற்க மற்றவர்களும் அவளை அதிகமாய் தொந்தரவு செய்யாமல் நகர்ந்தனர்.

அவர்களின் கேள்விகள் அனைத்திற்கும் ஈஸ்வரியே பதில் தர வெண்மதியின் அமைதியை நாணம் என்னும் மொழிபெயர்த்துக்கொண்டனர் அனைவரும்.

இன்னும் கொஞ்சம் நேரம் யாராவது பேசியிருந்தால் அங்கேயே வெடித்து கேட்பவர்களை துவம்சம் செய்திருப்பாள் என்னும் அளவிற்கு கோபம் மண்டியது. 

“எந்த நம்பிக்கையில் இவன் திருமண பத்திரிக்கையுடன் அலுவலகம் வந்து அனைவரையும் அழைத்திருப்பான்? திருமணத்தன்று எங்கேனும் கண்காணாத இடத்திற்கு சென்றுவிட்டால்?” அவளின் எண்ணப்போக்கு தாறுமாறாக சென்றது.

அதே நேரம் கலைவாணியிடம் இருந்து அழைப்பு வர சற்றே சலிப்புடன் அதனை அட்டன் செய்தாள்.

“சொல்லுங்கம்மா…” என,

“மதி இங்க…” என்று கலைவாணி ஆரம்பிக்க அதற்குள் வேறு குரல் கேட்டது.

“வெண்மதி நான் தான்…” என்ற குரலில் சுகன்யாவை கண்டுகொண்டவள் பேச்சற்று போக,

“உன் அம்மாவை கூட்டிட்டு வெளில போறேன். இன்விடேஷன் வைக்க. உன்கிட்ட கேட்னும்னு சொன்னாங்க. அதான் போன் பண்ணினோம்…”

“அத்தை நான் சொல்றதை…”

“கிளம்பறோம் வெண்மதி. டைம் ஆச்சு…” என சொல்லி அழைப்பை அவர் துண்டித்துவிட மீண்டும் அழைத்தாள்.

“மொபைல் என்கிட்டே தான் இருக்கும் வெண்மதி. என்னோட மொபைல் சார்ஜ் டவுன்…” என சொல்லி மீண்டும் சுகன்யா வைத்துவிட்டார். 

திக்ப்ரம்மையுடன் அமர்ந்திருந்தவளுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்றே புரியாமல் தலையை பிடித்துகொண்டாள். 

ஏதோ மந்திரக்கோல் கொண்டு சுழற்றப்பட்டு தன் வாழ்க்கை பாதை திடீரென வண்ணம் பெருவதை போல தெரிய அதை ஏற்கவும் முடியாமல் தவிர்க்கவும் முடியாமல் திண்டாடிப்போனாள்.

அதே மனநிலையில் க்ரூப் டிஸ்கஷனில் கலந்துகொள்ள வந்தவளை பார்த்த ஈஸ்வரி,

“ஏண்டி மந்திரிச்சு விட்டமாதிரியே சுத்துற? எனக்கே பயமா இருக்கு உன் முகத்தை பாக்க…” கிண்டலாய் சொல்ல அவளை முறைத்துவிட்டு சென்று அமர்ந்துகொண்டாள்.

“நீ முறைக்கிறது எனக்கென்ன புதுசா? இன்னிக்காச்சும் உருப்படியா திட்டு வாங்காம வெளில வந்தா சரி…” என வாய்விட்டு அதற்கும் வெண்மதியின் அக்மார்க் முறைப்பை வாங்கிக்கொண்டாள்.

“வாயும் வயிறுமா இருக்கிற என்னை முறைச்சே இளைக்க வச்சிடுவா இவ…” என்று வெண்மதியின் காதுகளில் விழுமாறு சொல்லி அவளருகில் அமர்ந்துகொண்டாள்.

அவளின் பேச்சு எதையும் கண்டுகொள்ளாதவள் வருவிருக்கும் திருமண நாளை எவ்வாறு எதிர்க்கொள்ள என்னும் குழப்பத்தில் நடந்துகொண்டிருந்த விவாதத்தில் ஓரளவிற்கு மட்டுமே கவனத்தை செலுத்தினாள்.

கிடைத்திருக்கும் புது ப்ராஜெக்ட் சம்பந்தமாக அதுவரை ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்த அவளது டீம் லீடர் இப்பொழுது தமிழில் ஆரம்பித்தார்.

“இது நம்ம கம்பெனிக்கு கிடைச்சிருக்கிற மிக பெரிய ஆபர்சுனட்டி. நாம சக்சஸ்புஃல்லா முடிச்சா நமக்குதான் லாபம். அதனால் நாம வெற்றியை மட்டுமே இலக்கா வச்சு அதை நோக்கி செல்லனும்…” என்று தொடர்ந்து பேச,

“மதி, எனக்கு இவர் சொன்னது அவ்வளவா அண்டர்ஸ்டேன்ட் ஆகலை…” 

ஓரளவிற்கு மட்டுமே தமிழ் தெரிந்த பெண்ணான நடாஷா கேட்க ஈஸ்வரி சொல்ல வாயை திறக்கும் முன்பே,

“ஹ்ம்ம் ஏதோ விளக்காம். அதை நோக்கி யூ கோ. உன் ப்யூச்சர் பிரகாசம் ஆகிடும்…” என விட்டேற்றியாக சத்தமாகவே வெண்மதி கூறி முடித்திருந்தாள். ஈஸ்வரிக்குத்தான் தூக்கிவாரிப்போட்டது. 

நெற்றிக்கண் திறக்க நெருப்புப்பொறி பறக்க தன் தொப்பை வயிற்றை ஏற்றி இறக்கியபடி,

“வாட்?…” என டீம்லீடர் கோபமாக வெண்மதியை நோக்கி கேள்வி எழுப்ப,

“உனக்கு கேட்கனும்னா என்னை கேளேன். ஏன் அவட்ட கேட்க?…” என்று நடாஷாவிடம் பொரிந்த ஈஸ்வரி,

“ஸாரி ஸார். அவ ஏதோ ஞாபகத்தில…”

“கான்சன்ட்ரேஷன் இல்லாம எதுக்கு இவங்க டிஸ்கஷனுக்கு வராங்க? பேசாம ரிஸைன் பண்ணிட்டு போகவேண்டியது தானே? ஏன் எங்க கழுத்தை அறுக்கறாங்க? ஓவர் ஸ்மார்ட்னு நினைப்பு…” என்று அத்தனை கோபத்தை கொட்டியவர்,

“வேலையை பத்தி மட்டும் நினைச்சிருந்தா ஜாப் கண்டினியூ பண்ணனும். இல்லை ஏதோ ஞாபகம்னா வீட்லயே இருக்க வேண்டியதுதானே? திறமை இருந்தும் இந்த அலட்சியம் தான் இவங்களுக்கு ப்ளாக் மார்க்…” என்று டீம் லீடர் இரைய,

“ஸார் லாஸ்ட் டைம் ஸார். ப்ளீஸ்…” ஈஸ்வரி வெண்மதியை உலுக்கிக்கொண்டே அவரிடம் பேச அவளும் எழுந்து நின்று,

“வாட் ஹேப்பன்ட்?…” என அப்பாவியாய் கேட்க சத்தியமாய் அவரின் கோபத்தை அடக்கவே முடியவில்லை. இருந்தாலும்,

“வென்னேவர் லாஸ்ட் இஸ் லாஸ்ட். நெக்ஸ்ட் இதே பிகேவியர் ரிப்பீட் ஆச்சுனா சிவியர் ஆக்ஷன் தான்…” என்று கத்திவிட்டு வெண்மதியை முறைத்துக்கொண்டே அறையை விட்டு செல்ல அனைவரும் கலைந்து சென்றனர் ஈஸ்வரி, நடாஷா தவிர்த்து.

“ஈஸ் என்ன பண்ணின? என்னை ஏன் முறைச்சிட்டு போறாரு?…” என்றதும் ஈஸ்வரி நடந்ததை சொல்ல,

“எவ்வளவு தைரியம்? என்னை பேசினானா அந்த பஃபெல்லோ டங் மௌத்? இருக்குது அவனுக்கு…” என்று சுடிதாரின் காலரை தூக்கிவிட,

“நீ பேசினதுக்கு வேற என்ன பண்ணுவாரு? எப்ப பார்த்தாலும் உன்னோட ஏதாவது ப்ராப்ளம் தான்…”

“ஹ்ம்ம் அந்த முரளி இன்னைக்கு பண்ணினதுக்கு வேற எப்படி இருப்பாங்களாம்? மண்டை காயவிடறான் இவன்…” தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்து,

“பாரு முரளி பண்ணினதை நினைச்சுட்டே இருந்ததுல நான் இவன்ட்ட எல்லாம் பேச்சு வாங்கவேண்டியதா போச்சு. எல்லாம் என் நேரம்…” தலையில் அடித்துக்கொள்ள,

“இல்லைனாலும் நீ திட்டு வாங்கினதே இல்லை பாரு. அண்ட புளுகினி. நீ கவனமில்லாம இருந்துட்டு முரளி அண்ணா மேல பழியை போடற. உன் வாயால இதையெல்லாம் கேட்கனும்னு எனக்கு நேரம்டி. நெஞ்சு பொறுக்கமாட்டிக்கு…”

ஈஸ்வரி நெஞ்சை பிடித்துக்கொண்டு பேச வெண்மதி பக்கென சிரித்துவிட்டாள். பார்த்துக்கொண்டிருந்த நடாஷா,

“ஓஹ் பியான்சி கூட ட்ரீமா? என்ஜாய்…” என்று கண்ணடித்துவிட்டு செல்ல அவளறியாமல் வெக்கபூக்கள் வெண்மதியின் கன்னத்தை அலங்கரித்தது. 

————————————————–

ராம் இவனை எதிர்பார்த்து காத்திருக்க முரளி வந்ததும் அவன் இறங்கும் முன்பே வேகமாய் சென்று கதவை திறந்தான்.

“எத்தனைமுறை சொல்லியிருக்கேன் ராம், இதை பண்ணாதீங்கன்னு…” முரளி கண்டிப்புக்குரலில் சொல்ல,

“இட்ஸ் ஓகே ப்ரோ…” என்றான் அவனும் எப்பொழுதும் போல். என்னவொன்று இன்று முகம் இறுகிக்கிடந்தது.

“கிளம்பறப்போ சைட்டுக்கு வர சொல்லிட்டு இப்ப என்ன இங்க? இது யார் இடம்?…” அந்த பழைய கட்டிடத்தை சுற்றி பார்வையிட்டவாறே முரளி கேட்க,

“எல்லாம் நமக்கு வேண்டப்பட்டவங்க இடம் தான்…” என்றவன் முரளியை முன்னால நடக்குமாறு கை காண்பிக்க அவனும் உள்ளே சென்றான்.

“க்ரானைட்ஸ், ஸ்டீல்ஸ் எல்லாம் ஏன் இங்க அடுக்கியிருக்கு ராம்? எனித்திங் ராங்?…” பார்வை கூர்மை பெற,

“மெனித்திங் ராங் தான் ப்ரோ. இது எதுவுமே குவாலிட்டி இல்லாத மெட்டீரியல்ஸ் ப்ரோ…” என்றதும்,

“வாட்?. நோ சான்ஸ்…” என்றான் முரளி அதிர்வுடன்.

“நம்ம சப்ளையர்ஸ் நமக்கு அனுப்பின மெட்டீரியல்ஸ் இல்லை இது. இடையில் மாத்தப்பட்டிருக்கு…” ராம் சொல்லவும்,

“விபீஷ்…” 

“அவனே தான் ப்ரோ. அவன் வேலையை நம்மக்கிட்டையே காட்ட ஆரம்பிச்சுட்டான். என்ன ஒரு துணிச்சல்?…” ராம் முகத்தில் அத்தனை ஆக்ரோஷம் கொட்டிக்கிடக்க முரளியின் முகத்தில் லேசான வருத்தம்.

“கூல் ராம்…” 

“அட போங்க ப்ரோ. அவன் இதுவரை வெளில குடைச்சல் குடுத்தான். இப்போ உள்ளுக்குள்ள கை நீட்டிட்டான். இதனால பாதிக்கப்பட போறது பப்ளிக்ன்னு அவனுக்கு ஏன் புரியலை?…”

“இப்ப இதை பேச நமக்கு நேரமில்லை. இதை நீங்க எப்படி கண்டுபிடிச்சிங்க?…” தங்கள் கட்டட வேலை நடக்கும் சைட்டில் நடந்ததை அவனிடம் சொல்லிய ராம்,

“நமக்கு தான் எல்லா இடத்துலையும் ஆள் இருக்கே. அதான் அவன் மாத்தினத்தை எல்லாம் சரியா இங்க மாத்திட்டேன். நம்ம சைட்க்கு இப்போ நம்மளோட மெட்டீரியல் போய்ட்டிருக்கு…”

“ஹ்ம்ம், இப்ப இதை ஏன் இங்க கொண்டுவந்தீங்க?…” 

“இது விபீஷ் குடோன். அதான் கொண்டுவந்தேன். உப்பை தின்னவன் தண்ணி குடிக்கனும். குடிக்கட்டும்…” 

“ஓஹ் காட் ராம், அவன் செஞ்சா நாமளும் திருப்பி செய்யனுமா? தப்பு யார் பண்ணினாலும் அதுக்கு பதிலா முறையா பனிஷ் பண்ணனுமே தவிர திரும்ப பழிவாங்கறது எந்த விதத்திலும் தீர்வாகாது ராம்…” 

“இது வேலைக்கே ஆகாது ப்ரோ…” ராம் சலித்துக்கொள்ள,

“நோ பிராப்ளம். எனக்கு அது சரிப்படாது. முதல்ல இதை…”

“இதை எங்கன்னு கொண்டுபோக? நம்மோடது இல்லை. மாத்தினது அவன். அவனுக்கான உடமையை அவன்கிட்டயே ஒப்படைச்சாச்சு. இனி என்ன பண்ணனுமோ அவன் பண்ணிக்கட்டும்…”

“நீங்க மாத்தினது தெரியாம அவனும் இதை எடுத்து அவனோட பில்டிங்க்கு யூஸ் பண்ணிட்டாலும் பாதிக்க போறது நம்ம தான். ஐ மீன் பப்ளிக்…” முரளி அவனுக்கு புரியவைக்க பார்க்க,

“நீங்க ரொம்ப நியாயம் பார்க்கறீங்க ப்ரோ. இப்படி இருந்தா பிஸ்னஸ் பண்ண முடியாது. வெறும் டெண்டர்க்காக அவன் இத்தனை கிரிமினல் வேலை பார்க்கறானே…”

“வெறும் டெண்டருக்காக இதை பண்ணினான்னு நீங்க நினைக்கறீங்களா ராம்?…”

“முதல்ல உங்க மேல உள்ள கோவம்னு சொல்லலாம். கஷ்டம் குடுத்தான். ஆனா அதையே எத்தனை வருஷம் இழுத்துப்பிடிப்பானாம்? இப்ப உங்களை ஜெயிக்கனும்னு பன்றான்…” 

“எத்தனை சொன்னாலும் புரியாமல் பேசுகிறானே?” என்று முரளி மேல் கோபம் கோபமாக வந்தது பரசுராமிற்கு.

“சரி நீங்க கார்ல வெய்ட் பண்ணுங்க. நான் வரேன்…”

“நீங்க என்ன செய்ய போறீங்கன்னு தான் எனக்கு நல்லா தெரியுமே. அதுக்கு நான் தள்ளி போகனுமா?…” முறுக்கிக்கொண்டு அவன் நிற்க அடக்கமாட்டாமல் சிரித்த முரளி,

“அட போங்க ராம்…” என்று சொல்லியும் அவனை முறைத்துக்கொண்டு தான் நின்றான் ராம். அவன் அசையமாட்டான் என புரிந்து விபீஷிற்கு அழைத்துக்கொண்டு மெதுவாய் குடோனை விட்டு வெளியே வந்தான் முரளி.

Advertisement