Advertisement

“கண்டிப்பா வரட்டும். இந்த கல்யாணம் நடக்காதுன்னு நான் அவங்கட்டையே சொல்லிடறேன்…” முகபாவனையை கொஞ்சமும் மாற்றாது சொன்னவளை கூர்ந்து பார்த்தவன்,
“என்னன்னு சொல்லுவீங்க?…” என,
“என்ன வேணும்னாலும் சொல்லுவேன்…”
“அதைத்தான் இப்ப என்னிடம் சொல்லுங்களேன். நானும் தெரிஞ்சுப்பேன்…”
“என்னவேணும்னாலும் சொல்லுவேன். உங்களை பிடிக்காததால வேற ஒருத்தனை லவ் பன்றேன்னு சொல்ல தெரிஞ்ச என்னால, அந்த ஹரியை அவாய்ட் பண்ண உங்களை லவ் பன்றதா சொன்ன என்னால இதுக்கும் பதில் சொல்ல முடியாதா என்ன?…” 
இறுமாப்பாய் சொல்லியவள் குரலில் எப்படியாகினும் இதை நிறுத்தியே தீருவேன் என்னும் வேகம் அவளின் புத்தியை மழுங்கடித்தது.
“ஈஸிட்?  சொல்லுங்க, நானும் தான் தெரிஞ்சுக்கறேனே. தெரிஞ்சுக்கனும்…” 
கொஞ்சமும் அசராது கேட்டவனை காயப்படுத்தி தன் மொத்த வாழ்விலிருந்தும் அப்புறப்படுத்திவிடும் தவிப்பு வார்த்தைகளாய் வெளியே வந்து முரளி என்னும் ஆண்மகனை நொடியில் சிதறடித்து  குருதி கொப்பளிக்க சாய்த்தது.
“சொல்லுவேன், காதலிக்கிறேன்னு சொல்ல தெரிஞ்ச எனக்கு கன்சீவா இருக்கேன்னு சொல்ல தெரியாதா? அதை சொல்லுவேன். நான் சொல்லுவேன்…”
கோபத்தில் கொந்தளிப்பான், நீயெல்லாம் ஒரு பெண்ணா என தூற்றி தன்னை தூக்கி எறிந்து செல்வான் என அவனின் வெறுப்புக்கு ஆளாகும் அந்த நொடியை ஏற்றுக்கொள்ள தன்னை தயார் நிலையில் வைத்துக்கொண்டாள்.
அவளாக அவனை வேண்டாம் என்று ஒதுக்கிய போது கூட ஓரளவு வலி தான். ஆனால் அவன் இப்பொழுது தன்னை ஒதுக்கி செல்லும் இந்த நொடியில் தன் உடலை விட்டு உயிர்பறவை வெளியேறிவிட்டாலும் ஆச்சர்யமில்லை தான்.
அந்தளவிற்கு அவன் மீதான அவளின் நேசம், காதல் வெண்மதியை பலவீனப்படுத்தி இருந்தது.
என்ன சொல்ல போகிறானோ என பார்த்தபடி இருந்தவள் முகத்தில் வந்து சென்ற வேதனையை கண்டுகொண்டவன் நிதானமாக சாய்ந்து அமர்ந்தான்.
“ஓகே சொல்லிடுங்க…” என்றதும், 
“என்ன?…” அதிர்ந்து பார்த்தாள் அவனை.
“சொல்லுங்கன்னு சொன்னேன். ஆனா, சொன்னா மேரேஜ் நிக்காது. கண்டிப்பா நடக்கும்…” குழப்பமாய் அவனை பார்த்தாள்.
“கோபத்தில் குதிப்பான்னு பார்த்தா குழையிறானே?” பயந்து பார்த்தாள். 
“அம்மாவாக போறதா நீங்க சொல்லிடுங்க. அப்பா நான்னு நான் சொல்லிடுவேன்…” அசராது அவள் எறிந்த பந்தில் சிக்ஸர் அடித்தான் முரளி.
இப்படி சொல்லுவான் சற்றும் எதிர்பாராத வெண்மதி வாயடைத்து போனாள். அந்த நொடி அவள் என்ன மாதிரியாக உணர்கிறாள் என்றே அவளுக்கு புரியவில்லை. அழ வேண்டும் போல் இருந்தது. அது கூட முடியாமல் அமர்ந்திருந்தாள்.
“ஏன் வெண்மதி இப்படி ஆகிட்டீங்க? அப்படி என்ன உங்களுக்கு வெறுப்பு?…” அனைத்தும் தெரிந்திருந்தாலும் அவளாக ஏதாவது சொல்வாளா என பார்த்தான்.
“என்னை பிடிக்கலைன்னு சொல்லாதீங்க. சத்தியமா நம்பமாட்டேன். வெறுப்பு என் மேலன்னும் சொல்லாதீங்க. அதுவும் உண்மை இல்லை…” 
பதில் பேசாமல் வேறு புறம் திரும்பிக்கொண்டவளின் கண்கள் கலங்கியது. இனி இதை தவிர்க்க முடியாதோ என திக்குதெரியாத குழந்தை போல் ஆனாள்.
“ப்ச்…” முகத்தை அழுந்தி துடைத்தவன் அங்கிருந்த நீரை பருகிவிட்டு சில நிமிடம் இடைவெளி விட்டான். அவன் பேசாத நிமிடங்கள் அத்தனை அவஸ்தையாய் கழிந்தது வெண்மதிக்கு.
இன்னும் அவனின் பார்வையில், அவன் விஷயத்தில் தன்மீதான அவனுடைய மதிப்பீடு இறங்கிக்கொண்டே செல்வதில் குற்றுயிர் ஆனாள்.
“என்னை தவிர்க்க இந்தளவுக்கு நீங்க இறங்கியிருக்க வேண்டாம் வெண்மதி. ரொம்பவும் வலியா இருக்கும்மா. இப்படியெல்லாம் நான் பேசுவேன்னு நினைச்சதில்லை. ஆனாலும் உங்களுக்காக நான் பேசுவேன். இன்னொரு முறை என்னால உங்களை இழக்க…” என்றவன்,
“ஹ்ம்ம், ஓகே, ஃபைன். இனி இப்படியும் நான் இறங்கிடனும் போல. நீங்க வேணும்னா நான் இப்படி பேசித்தான் ஆகனும். பழகிக்கறேன். பட் ஒன் திங்க். நம்ம மேரேஜ் கண்டிப்பா நடக்கும்…” 
அவளிடம் முடிவாய் சொல்லியவன் பேரரை அழைத்து இரண்டு காபிக்கு சொல்லி திருமண அழைப்பிதழ்களை பார்வையிட ஆரம்பித்தான்.
அவனின் பேச்சுக்கள் ஒவ்வொன்றும் அவளை செல்லுசெல்லாய் சிதைத்துக்கொண்டு தான் இருந்தது. சாட்டையை சுழற்றி அடிப்பதை போல அவன் வேதனையில் இவள் வலியை உணர்ந்து சுருண்டுபோனாள்.
“எனக்கென்ன ஆசையாடா இப்படியெல்லாம் உன்னிடம் நான் நடந்துகொள்ள? என் வாழ்க்கையை அவரவர் கையில் இருக்கும் பொம்மை மாதிரி ஆட்டிப்படைக்கறீங்க. சில விஷயங்களுக்காக என்னையே நான் தண்டிச்சிட்டு இருக்கேன்.”
அரற்றிக்கொண்டிருந்த மனதை அமைதிப்படுத்த முடியாது தவிப்பாய் அவனை பார்ப்பதும் விழிகளை தாழ்த்துவதுமாய் வெண்மதி இருக்க அதை கண்டும் காணாதவன் போல இருந்துகொண்டான்.
இவர்களின் கண்ணாமூச்சி ஆட்டத்தை முடிக்கவென ஈஸ்வரி அங்கு வந்து சேர்ந்தாள்.
“மதி…” என்னும் அழைப்பில் மீண்டவள் திரும்பி பார்க்க ஈஸ்வரி தன் கணவனோடு வந்துகொண்டிருந்தாள். 
அங்கே முரளியை பார்த்ததும் ஒரு நிமிடம் அடையாளம் காணமுடியாது பார்த்தவள் அருகில் வரவும் கண்டுகொள்ள முடிந்தது. கண்களைத்தான் நம்பமுடியவில்லை.
“என்ன அதிசயமா இருக்கு? வெண்மதியா?…” திகைத்து பார்த்து அப்படியே நிற்க அவளின் அதிர்வை கண்டுகொண்டனர் வெண்மதியும் முரளியும்.
சங்கடமாய் பார்த்தவள், “ஓகே நீங்க பேசிட்டிருங்க. நாங்க அந்த டேபிள் போறோம்…” என்று நாசூக்காய் கிளம்ப,
“ஹலோ ஈஸ்வரி, பார்த்துட்டு உங்க ஹஸ்பண்ட்க்கு ஒரு இன்ட்ரோ கூட குடுக்காம போறீங்க? இங்கயே உட்காருங்க…” என்ற முரளி எழுந்து வெண்மதியின் அருகில் ஒரே சோபாவில் அமர்ந்துகொள்ள தூக்கிவாரி போட்டது வெண்மதிக்கு மட்டுமில்லை ஈஸ்வரிக்கும் தான்.
ஆவென பார்த்தபடி நிற்க அவளின் கணவன் சங்கர் தான் அவளை நகர்த்தி அமர்த்தும் படி ஆனது. முரளியும் சங்கரும் பரஸ்பரம் அவர்களாகவே அறிமுகம் செய்துகொள்ள அதில் இன்னும் அதிர்ந்தாள் ஈஸ்வரி.
“நான் முரளிதரன், வெண்மதி பியான்சி. இன்னும் ஒன் மந்த்ல எங்களுக்கு மேரேஜ். கார்ட் செலெக்ட் பண்ணத்தான் வந்தோம்…” இப்படித்தான் அறிமுகமாகிக்கொண்டான் முரளி.
பொதுவான பேச்சுக்கள் அவர்களுக்கிடையில் இருக்க வெண்மதி எப்பொழுதும் சங்கருடன் கொஞ்சம் அளவாகவே பேசுவாள் என்பதால் அவளின் அமைதி அவனுக்கு உறுத்தவில்லை. ஆனால் ஈஸ்வரிக்கு தெரியுமே. 
நேற்றுவரைக்கும் தனக்கு தெரியாத திருமணம் இன்று அழைப்பிதல் வரை சென்றுவிட்டதா? மீண்டும் முரளியுடனா? ஈஸ்வரியின் மனதில் ஆயிரம் கேள்விகள் புடைசூழ முரளியை பார்த்திருந்தாள்.
அதற்குள் சங்கருக்கு ஒரு போன் வர அவன் நகர்ந்ததும்,
“என்ன நடக்குது மதி?…” என முரளியை பார்த்துக்கொண்டே தோழியிடம் கேட்க கல் போல சமைந்து இருந்தாள் வெண்மதி.
“இங்க பாருங்க ஸார், மதி முகத்தை பார்த்தா இது அவ இஷ்டப்பட்டு நடக்கிறதை போல தெரியலை. என்ன பிரச்சனை உங்களுக்கு? ஏற்கனவே முடிஞ்சதை நீங்க திரும்ப ஆரம்பிக்கிறீங்களா?…” கறாராய் ஈஸ்வரி பேச,
“இல்லை ஈஸ்வரி, ஆரம்பிச்சதை நல்லவிதமா முடிக்கலாம்னு தான் இந்த கல்யாண ஏற்பாட்டை செஞ்சிட்டிருக்கேன். அதுக்குத்தான் வெண்மதியை பேச கூப்பிட்டேன்…”
“கூப்பிட்டதை போல தெரியலை. அவளை கட்டாயப்படுத்தறதை போல இருக்கு…” அவனை சந்தேகமாய் பார்த்துக்கொண்டே பேசியவளை வேதனை பொங்க பார்த்தாள் வெண்மதி.
“கட்டாயப்படுத்தறேனா? ஏன் சொல்ல மாட்டீங்க? நான் வெண்மதிட்ட பேசறதை பார்த்தா உங்களுக்கு அப்படியா தெரியுது?. விரும்பினவங்களை கட்டிக்கனும்னு நினைக்க கூடாதா?…” என,
“உங்களுக்கு விருப்பம் இருந்தா மட்டும் போதுமா? அவ விரும்ப வேண்டாமா? இது என்ன லவ் மேரேஜா? கட்டாய கல்யாணம் போல தான் தெரியுது. பிடிச்சிருந்தா ப்ரப்போஸ் பண்ணி அதுக்கப்பறம் கல்யாணம் செஞ்சுக்கனும்…”  
ஈஸ்வரியும் விடாமல் பேச பேச்சு போகும் திசையில் திகைத்துப்போனவள் முரளியை பார்க்க அவனும் அவள் முகத்தை தான் பார்த்துக்கொண்டிருந்தான்.
“போச்சு எதுவோ சொல்ல போறான்…” அதுவரை இருந்த கனமான மனநிலை மாறி அவன் சொல்லவருவது என்னவென எதிர்பார்த்து இருந்தாள்.
“ப்ரப்போஸ் எல்லாம் பண்ண முடியாதுங்க. நான் லவ் பன்ற பொண்ணு மேல ப்ராமிஸ் பண்ணியிருக்கேன்…” 
ஈஸ்வரியிடம் சொல்லி வெண்மதியின் தோளை சுற்றி தன் கையை போட்டுக்கொண்டவன் விரல் நுனி கூட வெண்மதியை உரசவில்லை. ஆனால் அவன் சுவாசத்தை, வாசத்தை உணரவைத்து அவளை திக்குமுக்காட வைத்தான்.
“எந்த சூழ்நிலையிலையும் அவங்கக்கிட்ட நான் உங்களை எக்கச்சக்கமா காதலிக்கிறேன், அவங்க நினைப்போடே ஒவ்வொரு நொடியையும் நகர்த்திட்டு இருக்கேன், ஒவ்வொரு நாளும் கற்பனையில் அவங்க கூட பேசி பைத்தியம் மாதிரி சுத்திட்டு இருக்கேன், ஒவ்வொரு அணுவிலும் அவங்களை அவங்க மீதான காதலை சுமந்துட்டே இந்த உலகத்தில் உயிர் வாழ்ந்திட்டு இருக்கேன்…”
“இப்படியெல்லாம் சொல்லிட்டு இல்லையில்லை பிதற்றிட்டு அவங்க முன்னாடி வந்து நிக்ககூடாதுன்னு ப்ராமிஸ் வாங்கி இருக்காங்க. நான் வாக்கு மாறாதவன். என்னைக்கும் என் காதலை அவங்கட்ட சொல்லவே மாட்டேன். என் காதல் என்னோட. எனக்குள்ள. ஐ லவ் இவங்க ஈஸ்வரி…”
ஒவ்வொரு வார்த்தைகளையும் உச்சரிக்கும் பொழுது அவளின் முகத்தை பார்த்துக்கொண்டே சொல்ல வெண்மதி வாய்பிளந்து பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவளின் முகம் நொடிக்கு நொடி ஏற்படுத்திய வர்ணஜாலங்கள் அத்தனை பரவசமாய் அவனுக்குள் இறங்கியது.
“நான் சொன்னது சரிதானே வெண்ணிலா? உங்களுக்கு நான் கொடுத்த வாக்கை காப்பாத்திட்டேன் தானே? இனியும் காப்பாத்துவேன்…” கண் சிமிட்டி சொல்ல இன்னும் உறைந்த நிலையில் இருந்து வெண்மதி வெளிவரவே இல்லை.
“நானா? நான் எப்போ?. இல்லை, இல்லை…” என திணறினாள். ஆனால் இதயமோ முரளி முரளி என பிதற்ற ஆரம்பித்தது.
“அடப்பாவி சொல்லமாட்டேன் சொல்லமாட்டேன்னு அம்புட்டையும் சொல்லி அவள வாய் திறக்கமுடியாம பண்ணிட்டியே?” ஈஸ்வரி திகைத்துப்போய் பார்க்க,
“என்ன பேசியாச்சா?…” என்றபடி சங்கர் வர,
“ம்க்கும், நாங்க எங்க பேசினோம்? இவர் பேசினார் நாங்க கேட்டிட்டிருந்தோம்…” என்ற ஈஸ்வரி வெண்மதியை பார்க்க அவள் இன்னும் அத்திகைப்பில் இருந்து வெளிவரவே இல்லை என்பது புரிந்தது.
“இனி என்ன நடக்குமோ?” என்று பார்த்து இருந்தாள் ஈஸ்வரி.
அனைத்தும் தன் கையை மீறி செல்வது பிரம்மை இல்லை உண்மை என்பதை உணர்ந்து அடுத்து என்ன செய்யலாம் என யோசித்துக்கொண்டிருந்தாள் வெண்மதி.
கலைவாணி இதை எப்படி எடுத்துக்கொள்வார்? அவருக்கு தெரிந்தால்? அதுவும் மரகதம். அவரை நினைத்தாலே மனதினுள் தீப்பந்தம் சுழன்றது. 
யோசனைகளை புடைசூழ அவள் அவனை பார்க்க அவளின் யோசனைகளுக்கேனும் வழி விடுவானா முரளி? 

Advertisement