Advertisement

நிலவு – 5
                சுகன்யா வந்து கேட்டு சென்ற பின் முரளிக்கு தூக்கம் பறி போனது. அவரின் கவலையும், வருத்தமும் இப்பொழுது ஏற்பட்டிருக்கும் சந்தேகமும் நூறு சதவிகிதம் நியாயமானதே. 
இதனுடன் எத்தனை முறை அவருக்கு இவன் நியாயம் செய்யாமல் போயிருக்கிறான் என்று இவன் மட்டுமே அறிந்த ஒன்று. 
அவரின் ஆசையில், கனவில், எதிர்பார்ப்பில் கொஞ்சமும் யோசியாமல் மண்ணை அள்ளி போட்டவனும் அவனே. அதுவும் எவருக்கும் தெரியாமல். அந்த குற்றவுணர்வு மூன்று வருடங்களாய் அதிலிருந்து மீள முடியவில்லை. 
அதிலும் வெண்மதி விஷயத்தில் அவர்கள் குடும்பத்தின் மீதும் எந்த தவறும் இல்லையே. தானே நடந்த ஒன்று,  ஏன் எதற்காக என தெரிந்த விஷயத்திற்காக இவன் மீண்டும் வெண்மதியை தன் வாழ்க்கைக்குள் வரவழைக்க பார்க்க சுகன்யாவிற்கு பிடித்தமில்லை என்றாலும் மகனுக்காய் மனதை மாற்றிக்கொள்ள பார்த்தார்.
நிச்சயம் ஏற்றுகொள்வார் என்று முரளிக்கும் நிச்சயம் தான். அவர் பார்த்த பெண்ணாகிற்றே. அதனால் இன்னும் தைரியமாக இதில் இறங்குகிறான். என்னவானாலும் வெண்மதியை இனி இழப்பதாய் இல்லை என்ற தீவிர முடிவில் இருந்தான்.
மறுநாள் என்ன பேசுவாளோ என யோசித்தவன் தங்களது சந்திப்பின் பாதுகாப்பை அதிகப்படுத்த தனது மொபைலை எடுத்து ஒரு எண்ணிற்கு அழைப்பு விடுத்தான்.
“சொல்லுங்க ப்ரோ…” அத்தனை இரவிலும் உறக்க கலக்கம் எதுவுமின்றி தெளிவாக பேசியது அந்த குரல்.
“பரசுராம், நாளைக்கு நானும் வெண்மதியும் காபி ஷாப்ல மீட் பண்ண போறோம்…” என டைமிங் சொல்லி இடத்தை சொல்ல,
“பார்த்துக்கலாம் ப்ரோ…” பொறுப்பு மொத்தத்தையும் அந்த குரல் ஏற்றது.
—————————————————————————-
வந்து அரைமணி நேரம் ஆகியும் முரளி இவளிடம் பேசுவதை போல தெரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாய் பொறுமை பறந்துகொண்டிருந்தது.
ஏற்கனவே ஏகப்பட்ட கோபத்தில் கிளம்பி வந்திருந்தாள். வந்ததும் அவனை காணாமல் அங்குமிங்கும் திரும்பி பார்க்க அவனோ இவளை கண்டும் காணாததை போல மொபைலில் பேசிக்கொண்டிருந்தான்.
பேச்சில் கவனமாய் இருந்தவனின் பார்வை வெண்மதியை தான் பார்வையிட்டுக்கொண்டிருந்தது அதை விட கவனமாய். 
வேண்டுமென்றே அவன் அமர்ந்திருந்த டேபிளில் அமராமல் வேறொரு டேபிளில் சென்று அமர்ந்துகொண்டாள் அவனின் பார்வை வட்டத்திற்குள்ளேயே.
“நானா எதுக்கு அவன் கூட போய் உட்காரனும்? வர சொன்னது அவன் தானே? அவனே வந்து பேசட்டும்” இப்படி எண்ணத்தில் தான் அவள் வேரிடம் அமர்ந்தது. 
ஆனால் அவள் எதிர்பார்த்ததை போல அவன் பத்து நிமிடம் ஆகியும் வரவே இல்லை. வருவான் என்ற நம்பிக்கையும் இப்பொழுது வெண்மதிக்கு இல்லை.
“ராஸ்கல், வச்சு செய்யறானே?…” என புலம்பிக்கொண்டே அவனுக்கெதிரில் இருந்த சோபாவில் சென்று அமர்ந்தாள்.
“ஹாய் வெண்ணிலா…” என்று அவளுக்கு புன்னகையை கொடுத்துவிட்டு மீண்டும் பேச்சில் கவனத்தை செலுத்த,
“பேசனும்னு வர சொன்னீங்க. வந்துட்டேன். எனக்கு டைம் ஆகுது. வீட்டுக்கு போகனும்…” சத்தமாய் வேண்டுமென்றே சொல்ல,
“ஜஸ்ட், ஒன் செகென்ட்…” மொபைலில் சொல்லிவிட்டு,
“நோ ப்ராப்ளம் வெண்ணிலா. நீங்க வீட்டுக்கு கிளம்புங்க. நான் ஒரு இம்பார்ட்டன் கால்ல இருக்கேன். பேசிட்டு வீட்டுக்கே வரேன்…” என சொல்லி அவளின் பதிலை எதிர்பாராமல் மீண்டும் பேச ஆரம்பித்தான்.
“கார்னர் பன்றான்” வெண்மதிக்கு அவன் கழுத்தை இறுக்கும் ஆத்திரம் இருந்தாலும் பல்லை கடித்துக்கொண்டு அமைதியாய் இருந்தாள்.
ஏற்கனவே தலைவலி. வீட்டில் கிளம்பும் பொழுதே எதோ அதிசய ஜந்துவை பார்ப்பதை போல தான் பார்த்து வைத்தனர்.
விடுமுறை நாள் அதுவும் ஈஸ்வரி இல்லாமல் மாலை நேரம் வெளியில் கிளம்பும் மகளை கண்டு வியந்துதான் இருந்தனர்.
கிளம்பும் பொழுது எங்கே என்று பளிச்சென சொல்லி செல்லும் பெண் இன்று திருதிருவென முழித்து முகத்தில் டன் டன்னாய் டென்ஷனை வைத்துக்கொண்டு செல்வதும் இல்லாமல்,
“ப்ரெண்டை பார்க்க போறேன். வந்துடுவேன்…” என்று மொட்டை தகவல் சொல்ல, யோசனை அதிகமாய் வாட்டியது பெற்றோரை.
“இந்த பொண்ணுக்கு என்னாச்சு? வழக்கமில்லாத வழக்கமா இப்படி பொத்தாம்பொதுவா சொல்லிட்டு போறா?. எதுவும் பிரச்சனையா இருக்குமோ?…”
நடேசனிடம் கலைவாணி பதட்டத்தோடு கேட்க அவருக்கும் புரியவில்லை தான். ஆனாலும் சமாதானம் சொல்லி வைத்தார் மனைவியிடம்.
“போய்ட்டு வந்துடுவா. பிரச்சனை எதும்னா சொல்லியிருப்பா தானே?…” என்று சொல்லி தேற்றியவருக்கு மீண்டும் வெண்மதி வீடு வந்து சேரும் வரை மனது நிலைகொள்ளாது தவித்தது.
கிளம்பும் பொழுதே அவர்களின் பார்வையை வைத்து அவர்கள் மனநிலையை புரிந்துகொண்டவள் கைய்யறு நிலையில் தான் இருந்தாள்.
“சொல்லிட்டே வந்திருக்கலாம் அவங்கட்ட” ஒரு மனம் உள்ளுக்குள் சுரண்ட,
“இவனை பார்க்க போறேன்னு சொன்னா இன்னும் புதுசா எதாச்சும் கிளம்பும். கோபப்பட்டாலும் ஒன்னும் பண்ண முடியாது. இல்லைனா தேவையில்லாம அவங்களே கற்பனை பண்ணிப்பாங்க. அப்பறம் முகத்தை தூக்கிவச்சுக்கிட்டு சுத்தி அது இன்னும் டென்ஷன். இன்னையோட இவனுக்கு ஒரு முடிவு கட்டுறேன்”
மனதினுள் எப்படி திட்டவேண்டும் என திட்டம் வகுத்து அவன் பேசி முடிக்கவும் அவனை வகுந்துவிடும் வேகத்தில் விரல்களை நெட்டி முறித்து காத்திருந்தாள். முரளியும் இவளின் எண்ணவோட்டங்களை கவனித்துக்கொண்டு தான் இருந்தான். 
“புயல் கரையை கடக்கபோகுது. போதும் முரளி. ஓவரா டென்ஷன் பண்ணி மொத்தமா ஊத்தி மூடிடாதே”
“ம்க்கும்..” என்று கனைத்துக்கொண்டு மொபைலை வைத்துவிட்டு,
“என்ன சாப்பிடறீங்க?…” என கேட்டு பேரரை வர சொல்ல,
“நான் இங்க சாப்பிடவா வந்தேன்?…” முகத்தில் முள்ளை கட்டிக்கொண்டு கேட்க அவளின் கோபத்தில் கொஞ்சம் பயந்துதான் போனான்.
“ஓ… காட்.  இவ்வளவு வேகமும் கோபமும். ம்ஹூம். ரொம்ப கேர்ஃபுல்லா பேசனும்” தனக்குத்தானே புத்தி சொல்லியவன்,
“பேசத்தான் வந்தீங்க. அதுக்குன்னு சாப்பிட கூடாதுன்னு இல்லையே. கண்டிப்பா அவசர அவசரமா கிளம்பி காபி, டீ கூட எடுத்துக்காம வந்திருப்பீங்க…” 
அவன் கூறுகையில் அவசரமாக என்பதில் அழுத்தம் அதிகம் கொடுத்ததை வெண்மதியும் உணர அவனை முறைத்தாள். 
“என்ன நக்கலா? ஓவரா பண்ணுனீங்க எழுந்து போய்ட்டே இருப்பேன்…” என்றதும் சாய்ந்தமர்ந்தவனின் விழிகள் குறும்பில் முக்குளித்தன.
“ஹ்ம்ம், தென்?…” அடக்கப்பட்ட புன்னகையோடு பார்த்திருக்க வெண்மதிக்கு தான் பற்றிக்கொண்டு வந்தது.
“நீங்க ராட்சஷன்…” என,
“இதுவரை இப்படி ஒரு காம்ப்ளிமென்ட் என்னை அறிந்தவங்க குடுத்ததே இல்லை. தேங்க்ஸ்…” 
அதற்கும் சிறு முறுவலோடு பதிலளிக்க அவனை எப்படி கோபப்படுத்தி அவன் மூலமே தன்னை வேண்டாம் என்று சொல்ல வைக்கவென தெரியாமல் விழி பிதுங்கினாள்.
ஒரு நொடி, ஒரே ஒரு நொடி அவளின் முகம் பரிதாபம் கொண்டு பின் மீண்டும் கடுகடுவென ஆனது.
“அம்மாடியோ, சட்டு சட்டுன்னு எக்ஸ்ப்ரெஷன சேஞ்ச் பண்ணிடுறாங்களே?” ஒரு நிமிடம் ரசனையோடு வியந்து தெளிந்தான்.
“சொல்லுங்க…” மீண்டும் பேச துவங்க,
“என்ன சொல்லனும்?…”
“ஹலோ? என்ன விளையாடறேங்களா? எனக்கு இது சுத்தமா பிடிக்காது சொல்லிட்டேன். நானே பயங்கர டென்ஷன்ல இருக்கேன். என்னை எதுக்கு வர சொன்னீங்களோ அதை பேசுங்கன்னு சொன்னேன்…” கறாராய் சொல்ல,
“அவ்வளோ டென்ஷன் எதுக்கு? நான் உங்க வீட்டுக்கு வந்திடுவேன்னா?…” நிமிர்ந்து அவளை பார்த்துக்கொண்டே கேட்க தடுமாறிப்போனாள் வெண்மதி.
“இந்த மாதிரி அன்வான்டட் டாக்ஸ், எனக்கு பிடிக்கலை. அதுவும் என்னை மிரட்டி வரவச்சிருக்கீங்க. இது இன்னும் பிடிக்கலை…”
“நான் மிரட்டி, நீங்க உடனே பயந்துட்டீங்க? நம்பிட்டேன்…” கேலியாக கூற,
“நான் வீட்டுக்கு கிளம்பனும். இப்பவே லேட் ஆகிடுச்சு. நீங்க யார் கூடவோ பேசறதுக்கு என்னை ஏன் வெய்ட் பண்ண வைக்கறேங்க? இப்போ என்ன சொல்லனும் உங்களுக்கு?…” என படபடக்க,
“ஓடிப்போய்டலாமா?…” முரளி கண் சிமிட்டி கேட்டதும் தாளம் தப்பி துடித்தது அவளின் இதயம். 
“வாட்?…” நம்ப முடியாமல் பார்க்க,
“ஊரை கூட்டி கல்யாணம் வேண்டாம்னு சொல்றீங்க. ஓகே, இந்த டைப் வெடிங் ஓகேன்னா எனக்கு ட்ரிபிள் ஓகே…” மீண்டும் கண் சிமிட்ட அவனிடமிருந்து பார்வையை திருப்பிக்கொள்ள படாதபாடு பட்டுவிட்டாள் வெண்மதி.
“பார்த்தும், பேசியும் கரைக்கிறானே? வெண்மதி உருகிடாத” அவனை முறைத்து பார்க்க,
“நான் சொல்றதை சொல்லிட்டேன். நீங்க தான் பதில் சொல்லனும்…” என்றான் அமர்த்தலாக. அத்தோடு நில்லாமல்,
“இதுல நான் செலெக்ட் பண்ணியிருக்கிற வெடிங் கார்ட்ஸ் இருக்கு. இதுல ஒன்னை நீங்க செலெக்ட் பண்ணுங்க…” அவள் முன்பு திருமண மாதிரி அழைப்பிதழ்களை எடுத்து வைக்க சுறுசுறுவென கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
“திரும்பவும் முதல்ல இருந்தா? உங்களுக்கெல்லாம் எத்தனை முறை சொன்னாலும் புரியாதா? இதுதான் உங்களுக்கு லாஸ்ட் வார்னிங். இன்னொரு முறை என்கிட்டே இப்படி பேசிட்டு நின்னா யோசிக்கவே மாட்டேன்…”  இப்பொழுது மிரட்டும் முறை அவளதானது. 
“என்ன போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணிடுவீங்களா? பண்ணிக்கோங்க…” அசால்ட்டாக சொல்ல அவனை வெறித்து பார்த்தாள்.
“பாஸ்ட் இஸ் பாஸ்ட் வெண்ணிலா. நம்ம கல்யாணம் யாராலையும் நிறுத்த முடியாது. இந்த மேரேஜ் நடக்கும். நடந்தே தீரும். நீங்க மறுத்தாலும்…” பிடிவாதமாய் அவளை பார்த்து கூற அவனின் குரலில் அத்தனை ஸ்திரம்.
“அப்படியாவது என்னை என் விருப்பமில்லாமலே உன்னோட மனைவியா ஆக்கிக்கோ. சத்தியமா நான் சம்மதிக்கவே மாட்டேன். ஆனாலும் நீ சொன்னது நடந்துட்டா இந்த உலகத்துல என்னை விட அதிர்ஷ்டசாலி யாருமில்லை”
வெண்மதியின் காதல் கொண்ட நெஞ்சம் தொண்டை வரை வார்த்தைகளாய் பிரவாகமெடுக்க மிகவும் சிரமப்பட்டு தன்னுடைய பிடிவாதத்தமெனும் அணையால் கட்டிவைத்தாள். மறந்தும் ஒரு வார்த்தை பேசவில்லை.
அவளின் எண்ணம் விழிகளில் பிரதிபலித்ததோ? அசையாது வெண்மதியின் விழிகளுக்குள் உறைந்துகொண்டிருந்தான் முரளி.
“இந்த பார்வை சொல்லுதே உன் நேசத்தினை” என்பதை போல அவளுக்கு அதை உணர்த்திவிட துடித்தான் தன் விழிகளாலே.
சில நொடிகளுக்கு மேல் அவனின் விழிகளோடு உறவாட முடியாமல் திரும்பிக்கொண்டவள் மனம் இரும்பென இறுகியது. 
சற்றுமுன் அவளின் உணர்வுகள் வெளிப்படுத்திய தாக்கத்தினால் தன் பிடிவாதம் தளர்த்தி கனிந்த முகத்தோடு,
“வெண்ணிலா…”என்னவென்று கூட கேட்காமல் அவனை பார்த்தபடி அவள் இருக்க,
“எதுக்கு இத்தனை போராட்டம்? முடிச்சுக்கலாம். ப்ளீஸ்…” என சொல்ல அதற்கும் அமைதியாய் அவனை பார்த்திருக்க,
“நெக்ஸ்ட் வீக் அம்மா வருவாங்க உங்க வீட்டுக்கு. அவங்க கூட போய் முகூர்த்த புடவை, அக்ஸசரீஸ் எல்லாம் எடுத்துட்டு வந்திடுங்க…” என்றதும்,
“வீணா வந்து திரும்பவும் அவமானப்பட போறாங்க பாவம். என்னால ஏற்கனவே அவங்களை அவமானப்படுத்திட்ட பாவத்தை எங்க போய் தொலைக்கன்னு தவிச்சுட்டு இருக்கேன். திரும்ப அனுப்பாதீங்க…”
“கண்டிப்பா வருவாங்க, முடிஞ்சா உங்க வீட்டில என்ன பேசுவீங்க? பார்த்துக்கலாம்….”
“அம்மாவுக்கு தெரிஞ்சா இன்னமும் பிரச்சனை ஆகும்…”
“அது எங்க கவலை. உங்க மாமியார் பார்த்துப்பாங்க…”
“ஹ்ம்ம், இவ்வளோ சொல்லியும் கேட்கலைன்னா வரட்டும்…” உணர்ச்சியற்ற குரலில் வெண்மதி சொல்ல ஒரு கணம் துணுக்குற்றவன்,
“வெண்மதி…” வெண்ணிலா வெண்மதியானாள்.

Advertisement