Advertisement

முரளியுடனான தன் நிச்சயம் முறிந்த பின்னர் தான் தெரிந்தது உண்மை தனக்கு தெரியாமல் இருக்க அது லஞ்சம் என்று. அதன் பின்னரும் அதனை நிறுத்திவிட சொல்ல கலைவாணி கொடுத்து பழக்கப்பட்டுவிட்டதால் அதனை நிறுத்தமுடியாமல் போனார்.
அதில் வெண்மதியின் கோபம் இன்னும் அதிகமாகவே செய்தது. இன்று வந்து தன்னை பேசியதுமில்லாமல் அவரின் மனதில் இருப்பதும் வெளியே வர இனியும் பொறுமை தேவையில்லை என முடிவுக்கு வந்தவள்,
“இங்க பாருங்க பெரியம்மா…” என அவரை திருப்ப,
“இருடி…” என அவளை நிறுத்தியவர்,
“கலை இந்த ஞாயிற்றுகிழமை மகளும் மருமக பிள்ளைங்களும் வராங்க. அவங்களுக்கு கறியும், மீனும் எடுத்து பிரியாணி, குழம்பு எல்லாம் செஞ்சு உன் புருஷன்ட்ட குடுத்துவிடு. நீ செய்யறதுன்னா மருமகனுக்கு ரொம்ப பிரியம். மீனை குழம்பு தனியா, பொரியல் தனியா செஞ்சுடு. சுறா புட்டு கொஞ்சம்…” என்றவர்,
“அப்படியே அவளுங்க போறப்ப குடுத்துவிட வடகம், மாங்காய் ஊறுகாய், தக்காளி ஊறுகாய், நார்த்தங்காய் ஊறுகாய்ன்னு போட்டு வை. உன் புருஷன்ட்ட சொல்லி பெரிய ஜாடியா ஊறுகாய் ஜாடி வாங்கிட்டு வர சொல்லு. அதுல குடுத்துவிடு…”
“அவங்க இங்க இருந்தா தானே செய்வாங்க?…” வெண்மதியின் குரல் உயர,
“என்ன? எங்க போகபோறா? வெளில எங்கயும் போறியா கலை? இருந்தாலும் காலையில சீக்கிரமே செஞ்சுகுடுத்தனுப்பிட்டு போ. நான் வேற உன்ன நம்பி வர சொல்லிட்டேன். செய்யாம விட்டா தப்பாகிடும்…”
“அது உங்க கவலை. அம்மாவை என் கூட அழைச்சுக்க போறேன். அம்மாவும் அப்பாவும் எஸ்டேட் போக போறாங்க. அங்க என் மாமனார், மாமியார் கூட இருப்பாங்க…”
“என்னடி இது திடுதிப்புன்னு சொல்லுற?…” என அதிர்ச்சியாக பார்க்க, கலைவாணி, நடேசனுக்குமே இது புதிய விஷயம் தான்.
முரளி தான் சொல்லியிருந்தான் இதனை பற்றி. இருப்பது நாம் இருவர். எதற்கு ஆளுக்கொரு பக்கம் என்று. அதனை மெதுவாய் சொல்லலாம் என்று தான் நினைத்திருந்தார்கள். 
ஆனால் மங்களம் இன்று வந்ததும் அதற்கு மங்களம் பாடியே தீரவேண்டிய கட்டாயத்தில் வெண்மதி சொல்ல  ஈயாடவில்லை மங்களத்திற்கு.
“அங்க குளிரா இருக்குமே? என் தங்கச்சிக்கு தாங்குமா? பொறுப்பு இருக்கா உனக்கு?…” என சொல்ல,
“எல்லாம் இருக்கு. நாங்க பேசியாச்சு. அம்மாவும் சரின்னாச்சு. இன்னைக்கு பேக்கிங் பண்ண போறோம். அதுக்கு சொல்ல தான் அவர் போய்ருக்கார்…” 
“ஏன்டி கலை சொல்லவே இல்லை நீ?. நீ பாட்டுக்கு போனா வீடு என்னாகறது?…” 
“ரெண்ட்க்கு விட்ரலாம்னு முடிவு பண்ணியாச்சு…” அதற்கும் வெண்மதி பதில் சொல்ல,
“ஏன்டி நீ வாயை திறக்க மாட்டியா?…” என கலைவாணியை பார்க்க,
“என் மக சொல்றது தான் எங்களுக்கு முக்கியம் அக்கா. மருமகன் பேச்சை மீற முடியாதுல…” என்று முடித்துக்கொள்ள நடேசன் அமைதியாக நின்றார்.
சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தவர் அப்பொழுதும் விடுவேனா என்று,
“சரி அதான் முடிவு பண்ணிட்டீங்க, இனி என் பேச்சை யாரு கேட்க போறா? கலை எனக்கு மசால் பொடியை டப்பால போடு. போன முறை குடுத்த டப்பால அடில பொடி கிடக்கு. அத வேற கிண்ணத்துல மாத்தி கழுவி கொண்டுவர நேரமில்லை. நீ தான் வச்சிருப்பியே…” என,
“அவங்க அரைக்கவே இல்லை பெரியம்மா. ஏனா ஊருக்கு போறப்ப எதுக்குன்னு நான் தான் எதுவும் வாங்கவோ அரைக்கவோ வேண்டாம்னு சொல்லிட்டேன். நீங்களே அரைச்சுக்கோங்க. அம்மாவை விட நீங்க நல்லா செய்வீங்களாமே?…” என சொல்ல சரியாய் முரளியும் உள்ளே வர வெண்மதியை திட்ட போன மங்களம் முரளியை பார்த்ததும் வாயை மூடிக்கொண்டார்.
“சரி சரி எல்லாத்தையும் தூக்கிட்டு அலையாம தேவையானதா மட்டும் கொண்டு போங்க. நான் கிளம்பறேன்…” என்று சொல்லிவிட்டு நடேசனை பார்க்க அவர் மருமகனிடம் எதுவோ முக்கியமானதை பேசுவதை போல இருக்க கார் கிடையாது என்ற முடிவுடன் அங்கிருந்து கிளம்பிவிட்டார் மங்களம்.
அவர் சென்ற பின்னர் கலைவாணிக்கு பாவமாய் போக வெண்மதியை பார்க்க,
“நீங்கலாம் திருந்தவே மாட்டீங்கம்மா. எப்படி பேசறாங்க பார்த்தீங்கள்ள…” என்று திட்ட ஆரம்பிக்க முரளி அவளை சமாதானம் செய்தவன் அதன் பின்னர் வீட்டை மாற்றிக்கொண்டு செல்வதை பற்றி பேச ஆரம்பித்து அவர்களை ஒரு வழியாய் சம்மதிக்க வைத்தனர்.
சுகன்யா வேறு தன் பங்கிற்கு சொல்ல மறுக்கமுடியாமல் கலைவாணி ஒப்புக்கொண்டார். 
அது ஒன்றும் அவர்களின் பூர்வீக வீடு இல்லை என்றாலும் சொந்த வீடு அல்லவா. அதனை விற்க விரும்பவில்லை. மாடி எடுத்து அங்கே வாடகைக்கு அமர்த்திவிட்டு கீழே வீட்டை வந்து செல்லும் நேரம் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தனர்.
எஸ்டேட்டில் சுகன்யா இருக்கும் வீட்டிற்கு சற்று தூரத்தில் வேறு வீட்டை அப்போதைக்கு வாடகைக்கு வாங்கிக்கொண்டு செல்ல வெண்மதியும், முரளியும் நேரம் கிடைக்கும் பொழுதுகளில் எல்லாம் அங்கே தான் வாசம்.
இரண்டு மாதத்தில் ஒரு நாள் வெண்மதி முரளியை சந்தித்த விபீஷ் மீண்டும் வெண்மதியின் உடல்நலனை பற்றி கேட்டதும் தான் தான் சொல்லிய பொய் ஞாபகம் வந்தது வெண்மதிக்கு. 
அவனிடம் உண்மையை சொல்ல போன வெண்மதியை தடுத்த முரளி நன்றாய் இருப்பதாக சொல்லிவிட இன்னுமே விபீஷிற்கு முரளியிடம் ஒதுக்கமே தான். அவனால் இறங்கி பழக முடியவில்லை. 
சீமாவிற்கும் அவனுக்குமான உறவு முன்பை விட முன்னேறி இருந்தது. அவனின் முகம் பார்த்து பேச ஆரம்பித்திருந்தாள். அதுவே அப்போதைக்கு போதுமானதாக இருந்தது அவனுக்கு.
வீட்டிற்கு வந்த வெண்மதி அவனை பிடிபிடியென பிடித்தாள். முரளி அனைத்தையும் காதில் வாங்கியபடி இருவருக்குமான உடமைகளை எடுத்து காரில் வைத்துக்கொண்டிருந்தான்.
“இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு பார்த்தா இன்னும் வயிறு தெரியலை. பேபிக்கு என்னவோ பிரச்சனை, என்னால தான் பிரச்சனைன்னு மூக்கால அழ ஆரம்பிச்சுடுவான் நடந்த ஆக்ஸிடென்ட்டை சொல்லி. எனக்கு தேவையா? சரியான அழுமூஞ்சியா இருக்கான்…” என சொல்ல,
“அதுக்கென்ன?…” 
“என்ன அதுக்கென்னவா? யோவ் சும்மாவே பார்க்கற இடமெல்லாம் ஹெல்தியா சாப்பிடுங்க, அதை செய்ங்க இதை செய்ங்கன்னு ஒரு வெல்விஷரா சொல்றேன்னு உயிரை வாங்கறான். இதுல இப்ப நீ பண்ணிவச்சிருக்க வேலை…” என அவனை பிடித்து மொத்த,
“நான் சொல்லிட்டே இருக்கேன், ட்ரெஸ் எடுத்துவச்சிட்டு இருக்கீங்க? நான் வரமாட்டேன். அங்க போனா மட்டும் என்னாகிடுமாம்? அங்கயும் போய் கட்டிபுடிச்சு தூங்கறதுக்கு…” என்றவளின் வாயை பொத்தியவன்,
“போதும் போதும். பேசாம வர நீ…” என்று மிரட்டலுடன் சொல்லியவன் மறுநாள் காலையே கிளம்பிவிட வழக்கம் போல பின்னால் காரில் படுத்துக்கொண்டாள் வெண்மதி.
வெண்மதிக்கு தூரப்பயணம் ஒத்துக்கொள்ளவில்லை என்பது இந்த சில மாதங்களிலேயே புரிந்துபோனது. அதனாலேயே எஸ்டேட் செல்லவேண்டும் என்றால் அவளை நன்றாய் உறங்கவிட்டுவிடுவான்.
அன்று ட்ராபிக் அதிகமாக இருந்ததால் காலை சீக்கிரமே கிளம்பியும் இரவு பதினோரு மணி ஆகிவிட்டது வீடு வந்து சேர.
கண்ணை கசக்கிக்கொண்டு கீழே இறங்கியவள் வீட்டை பார்க்க அது மாமியார் வீடில்லை. தன் பெற்றோர்களின் வீடு.
“என்ன இங்க வந்திருக்கோம் நேரா?…” என்றபடி வேகமாய் உள்ளே ஓட கதவு வெறுமனே தான் சாற்றபட்டிருந்தது. வீட்டில் ஒருவரும் இல்லாமல் இருக்க,
“என்ன அம்மாவையும், அப்பாவையும் காணும்?…” என வீட்டை சுற்றி பார்த்துக்கொண்டிருந்தாள்.
கீழ் தளம் மட்டுமே வீடு. இரண்டு படுக்கையறை, ஒரு கிட்சன், ஹால், ஓரத்தில் பூஜை மாடம் அவ்வளவே.
“எங்க போனாங்க…” என்றபடி சுற்றி வந்தவள் முரளி கதவை பூட்டிவிட்டு தங்களின் அறைக்குள் நுழைய,
“கேட்டுட்டே இருக்கேன்…” என பின்னால் வந்தவனின் வாயை பொத்தியவன்,
“பேசாம இருக்க முடியாதா வெண்ணிலா. லொட லொடன்னு. முதல்ல ப்ரெஷ் ஆகிட்டு வரலாம்…” 
“நீங்க போய் குளிங்க. நான் மாட்டேன். செம்ம குளிர்…” என சொல்லி கட்டிலில் அமர அவளை நெருங்கியவன் துள்ள துள்ள பாத்ரூமினுள் தூக்கி சென்றான். ஷவரை திறந்துவிட்டு நனையவிட்டவன், 
“ஹாட் வாட்டர்ல குளிக்க அத்தனை சோம்பேறித்தனம்…” என்று அவளின் தலையில் தட்டிவிட்டு வெளியேற அந்த குளிருக்கு இதமாய் குளித்தாள். வெளியே வரவே மனமில்லாது குளிக்க அலுப்பெல்லாம் தண்ணீரோடு கரைந்துபோனது.
“வெளில வர ஐடியா இருக்கா இல்லையா?…” என முரளி கத்த,
“அனுப்பி வச்சுட்டு வா வான்னா…” என்ற கடுப்புடன் அவள் வெளியே வர அந்த அறையே அத்தனை சுகந்தமான நறுமணத்துடன் கமழ்ந்தது.
“அடப்பாவி, ஒரு முடிவோடதான் கூட்டிட்டு வந்திருக்காங்க போல” என நினைத்தவளின் உடல் சிலிர்த்து அடங்கியது.
அவளை பின்னாலிருந்து அணைத்தவன் அவளின் கன்னம் உரச அதில் மயங்கிய மனதை அவனுக்கு அப்பட்டமாய் உணர்த்தியவள் சட்டென அவனை விட்டு விலகி வேகமாய் அறையை விட்டு வெளியேறினாள்.
ஒரு இன்பமான வலைக்குள் ஆட்பட்டிருந்தவனின் மாயவலை அறுந்துவிழுந்த உணர்வில் திக்கென்ற மனதுடன் அவளை பின்தொடர்ந்தான்.
“வாங்க வாங்க, முதல்ல சாப்ட்டுடுவோம். அந்த ஹோட்டல்ல தோசை நல்லாவே இல்லை. அம்மா பாருங்க கரெக்ட்டா நமக்கு இடியாப்பமும், சொதியும் செஞ்சு வச்சிருக்காங்க. உங்களுக்கு தேங்காய்ப்பாலும் கூட இருக்கு. ஹ்ம்ம்…” என சொல்லி அவனுக்கும் ஒரு தட்டுவைத்து பரிமாற முரளிக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.
அவளருகே சோபாவில் அமர்ந்தவன் தனக்கு வைத்த ப்ளேட்டை நகர்த்திவிட்டு அவள் சாப்பிட இருந்ததை தான் வாங்கிக்கொண்டு,
“நீயே ஊட்டிவிடு…” என்று அவளிடம் வாங்க ஆரம்பித்தன. உணவையும் கூடவே சிலபல முத்தங்களையும்.
“முதல்ல சாப்பிடலாம் முரளி. சாப்பிடவே விடமாட்டேன்றீங்க?…” என்னும் அவளின் சிணுங்கலையும், குறைபடுதலையும் பொருட்படுத்தாதவன் எழுந்து சென்று விளக்கை அணைத்துவிட்டு வந்தவன் தனது கை வளைவினுள் கொண்டுவந்தான்.
“இது ஹால்….” என்றவளின் நாணம் சுமந்த வார்த்தை அந்தரத்தில் தொங்கலில் நிற்க அதன் பின்னான வார்த்தைகளற்ற வழக்கு சிலபல வாய்தாக்களுக்கு பின் தீர்ப்புக்கு வந்து நின்றது.
காலையில் அவளுக்கு முன்பு விழித்தவன் அவளின் உறக்கம் கலையாமல் தூக்கி சென்று படுக்கவைக்க தூக்கத்தில் புரண்டு படுத்தவள்,
“ஹால்ல இருக்கற பாத்திரங்களை எடுத்து கிட்சன்ல வச்சிடுங்க…” என்ற முனங்கலுடன் நன்றாய் தூங்க ஆரம்பித்தாள்.
“இப்படி ஒரு பர்ஸ்ட் நைட் யாருக்கும் நடந்திருக்காது…” என்ற புன்னகையுடன் முரளி செல்ல வெண்மதி எழுந்து குளித்துவிட்டு வரும் பொழுது காபியுடன் பேப்பர் படித்துக்கொண்டிருந்தான் முரளி.
அவனின் காபியை பிடுங்கிக்கொண்டு அமர்ந்து குடிக்க ஆரம்பித்தவளை காதல் பொங்க அவன் பார்க்க,
“இந்த பார்வைக்கொன்னும் குறைச்சல் இல்லை. எனக்கும் ஒரு கப் போட்டிருக்கலாம் தானே?…” என கேட்டுக்கொண்டே அவனின் காபியை காலி செய்தவளிடம்,
“அது என் காபி, நான் பாதி குடிச்சது. ஐ மீன்…” 
“எல்லா மீனும் கருவாடும் எனக்கு தெரியும். இது குடிச்ச காப்பின்னு தெரியாமலா குடிச்சேன். நேத்து மட்டும்…” என்றவளின் வாயை பொத்தியவன்,
“போதும் வெண்ணிலா, சத்தியமா வெட்கமா இருக்கு…” என்றவனின் கையை பிடித்து விலக்கியவள் அவனின் முகம் பார்த்து வாய்விட்டு சிரித்தவள் மீண்டும் பேச திரும்பவும் அவளின் வாயடைத்தவன்,
“ரகசியம் வெண்ணிலா. இதெல்லாம் வெளில பேச கூடாது…”
“அதான் நீங்களும் நானும் மட்டும் தான இருக்கோம்…” என்றாள் கிசுகிசுப்பாய்.
“ம்ஹூம். இதெல்லாம் பேசற விஷயமில்லை வெண்ணிலா…” என்றவனை இன்னும் சீண்டும் எண்ணம் வர,
“உங்க காபி…” என்றவளின் வாயை அடைக்காமல் கைகளில் அள்ளிக்கொண்டவன்,
“இப்படியே பேசவிட்டா சரிவராது…” என்றபடி தங்கள் அறைக்குள் செல்ல போக வாசலில் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது.
“போச்சு. சரியே வராது போங்க…” என சொல்லி வெண்மதி கண்ணடிக்க அவளை இறக்கிவிட்டுவிட்டு யாரென பார்க்க சென்றான்.
சுகன்யா வீட்டிலிருந்து இவர்களுக்கு உணவை அனுப்பியிருந்தார். அதை வாங்கிக்கொண்டு உள்ளே வந்தவனை பார்த்தபடி புன்னகையுடன் இருந்தது அவனின் நெஞ்சோரமாய் கொலுவீற்றியிருக்கும் நிலவு.
“என்னாச்சு சைலன்ட் ஆகிட்ட வெண்ணிலா மேடம்?…” அவளுக்கும் தனக்குமாய் உணவை எடுத்துவைத்தான் முரளி.
“பேசத்தானே செய்யனும்.  நல்லா கேட்டுக்கோங்க, நீங்கள் சரியான மங்குனி அமைச்சர்…” என்று சொல்ல,
“காதுல கேட்கலை. சத்தமா சொல்லுங்க மேடம்…” என முகம்கொள்ளா புன்னகையோடு சொல்ல,
“நீங்க காதும் கேட்காத மங்குனி அமைச்சர்…” அவளும் மீண்டும் கத்த இப்படியாக சிரிப்பும் சந்தோஷமுமாக இருவரின் காலை உணவு நேரம் ரம்யமாய் இருந்தது.
அவளருகே அமர இருவருமாய் பேசிக்கொண்டே ஒருவருக்கொருவர் உணவோடு சேர்ந்து உணர்வுகளையும், காதலையும் பரிமாறிக்கொண்டனர்.
காதலால் உயிர் தீண்டியவனின் தோள்சாய்ந்து கனவென நினைத்த வாழ்வினை கையகத்துள் தந்தவனுள் தன்னை முழுமையாய் பிணைத்துக்கொண்டாள் அவன் நெஞ்சோரத்தில் வாசம் செய்த நிலவு பெண். 
நிறைவுற்றது

Advertisement